9 பிப்ரவரி, 2015

கறுப்பர் நகரம்

‘மெட்ராஸ்’ படம் வந்தபோதுதான் இந்த நாவலின் பெயரையே கேள்விப்பட்டேன். இந்த நாவலை அப்படியே இயக்குனர் சுட்டுவிட்டதாக யாரோ எழுதியிருந்தார்கள். படம் பார்த்த ஆர்வத்தில் உடனே வாசிக்க எண்ணி கடை கடையாக ஏறி இறங்கியதுதான் மிச்சம். கடந்த சென்னை புத்தகக்காட்சியில் கிடைத்தது.

இந்த நாவலில் ‘மெட்ராஸ்’ என்கிற ஊர் வருகிறதே தவிர, ‘மெட்ராஸ்’ திரைப்படத்துக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. சில காட்சிகளுக்கு லேசான கருத்தியல் இன்ஸ்பிரேஷனாக வேண்டுமானால் இந்நாவல் இருந்திருக்கலாம்.

கறுப்பர் நகரம் : சென்னை என்கிற நகரைப் பற்றிய நிஜமான novelised history. நாவலை எழுதியிருக்கும் கரன் கார்க்கியின் எழுத்து மட்டுமல்ல, வாழ்க்கையும் சுவாரஸ்யமானதுதான். வீடுகளில் எலெக்ட்ரீஷியனாக டெஸ்டர் வைத்துக்கொண்டு வேலை பார்க்கும் கரன், ஓய்வு நேரங்களில்தான் பேனா பிடிக்கிறார். சென்னையிலேயே பிறந்து வளர்ந்த இவர், நகரின் மாற்றங்களை நாவல் வழியாக மிக திறமையாக பதிவு செய்கிறார்.

இரட்டை ஆயுள் தண்டனை முடிந்து சிறையிலிருந்து வெளிவருகிறான் கிழவன் செங்கேணி. முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக அவன் பார்த்த சென்னையை, அடையாளம்கூட கண்டுகொள்ள முடியவில்லை. அவன் சிறைக்கு போவதற்கு முன்பாக சென்ட்ரலுக்கு அருகில் இருந்த அல்லிக்குளத்தில் பூத்த தாமரையை பறிப்பது பிடித்தமான விஷயம். இப்போது அல்லிக்குளத்துக்கு பதிலாக ஏதோ ஒரு கட்டிடம். மூர் மார்க்கெட் என்கிறார்கள். அப்படியெனில் நிஜமான மூர்மார்க்கெட் எங்கே என்று பார்க்கிறேன். அங்கே பெரிய கட்டிடம் எழுந்து நிற்கிறது. மக்கள் சகட்டுமேனிக்கு ஒருவருக்கொருவர் ஆங்கிலம் பேசியபடியே போவதைப் பார்த்து, மீண்டும் வெள்ளைக்காரன் ஆட்சிக்கு வந்துவிட்டானா என்று குழம்புகிறான். உடையில் தொடங்கி உணவு, உறைவிடம் வரை ஒரு நகரம் இவ்வளவு குறைவான கால அவகாசத்தில் எப்படி ஒட்டுமொத்தமாக மாற்றிக்கொள்ள முடியும் என்கிற ஆச்சரியத்தில் அவன் இருக்கும்போதே, அவனுடைய கடந்தகால ப்ளாஷ்பேக் ஓப்பன் ஆகிறது.

எழுபதுகளின் சென்னையை முடிந்தமட்டிலும் விரிவாக, நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறார் கரன் கார்க்கி. புதுப்பேட்டை சித்ரா டாக்கீஸ் எதிரில் கூவத்தின் கரையில் இருந்த குடிசைப்பகுதி. அந்த காலத்தில் நரியங்காடு என்பார்கள். இப்போது குடிசைகள் எதுவுமில்லை. சாலையோரப் பூங்காவை நிறுவியிருக்கிறது மாநகராட்சி. இங்கேதான் ஆராயியைப் பார்க்கிறான் செங்கேணி. கண்டதும் காதல். ஆராயியை இரண்டாவது பொண்டாட்டியாக மாற்றிக்கொள்ள நினைக்கும் அவளது மாமாவிடம் இருந்து செங்கேணி காப்பாற்றி, ஓடிப்போய் கல்யாணம் கட்டிக் கொள்கிறார்கள்.

பெரியமேடுக்கும், சூளைக்கும் இடைபட்ட பகுதியில் அமைந்திருந்த ஜெகனாதபுரத்தில் குடிசை வாடகைக்கு எடுத்து தங்குகிறார்கள். அங்கு சுற்றி வாழும் மனிதர்களிடமிருந்து வாழ்வின் நல்லது, கெட்டதை பயிலும் வாய்ப்பு செங்கேணிக்கு கிடைக்கிறது. கட்டைவண்டி இழுத்து பிழைப்பு நடத்தும் செங்கேணிக்கு ஒரு ப்ளாஷ்பேக் உண்டு. மிகுந்த சோகமான ஒரு சூழலில் ஆராயியிடம் தன் சிறுவயது நினைவுகளை பகிர்ந்துக் கொள்கிறான். அறுபதுகளின் ஆண்டான் அடிமை முறையை மனம்பதைக்கும் வகையில் இன்றைய தலைமுறைக்கு புரியவைக்கும் எபிஸோட் அது. ஊர் ஊராக பறந்த செங்கொடி உழைக்கும் மக்களுக்கு ஊட்டிய தன்மானத்தையும், அரசியல் கல்வியையும், வரலாற்றுத் தேவையையும் செங்கேணியின் இளம் வயது கதை சொல்கிறது.

அக்கம் பக்கம் வீடுகளில் வசிக்கும் சில படித்தவர்கள் மூலமாக காரல்மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களைப் பற்றிய புரிதல் செங்கேணிக்கு கிடைக்கிறது. ஆதிதிராவிட சமூகம் அடைந்திருக்கும் இன்னல்களுக்கு எல்லாம் என்ன காரணமென்ற தெளிவினை அவன் பெறுகிறான். அ, ஆ, இ, ஈ கூட எழுதத்தெரியாத செங்கேணி இரவுப்பள்ளிக்குச் சென்று படிக்கத் தொடங்குகிறான்.

கனவுகள் நனவாகும் என்கிற நம்பிக்கையை விதைப்பதோடு நாவலின் முதல் பாகம் முடிகிறது.

இரண்டாம் பாகம் ரியலிஸத் தன்மையோடு தொடங்குகிறது. தொழிலாளி – முதலாளி உறவின் முரணையும், பாட்டாளிகளின் மீதான முதலாளித்துவ எகத்தாளத்தையும் விவரிக்கிறது. எழுபதுகளின் சமகால அரசியல் குறித்த விமர்சனமும் இடம்பெறும் பகுதி இது. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்குகிறார். பெரியார் மறைகிறார் போன்ற வரலாற்று நிகழ்வுகள் கதையின் ஓட்டத்தில் வந்துபோகின்றன.

தான் பணிபுரியும் முதலாளி ஒருமுறை செங்கேணியை வழக்கம்போல நக்கல் அடிக்கிறார். அவன் பேசும் சென்னை மொழியின் தன்மை குறித்தது அந்த கிண்டல். சுயமரியாதை வரப்பெற்றுவிட்ட செங்கேணியோ பதிலுக்கு எகிறுகிறான். “நீங்க பேசுறது மட்டும் நல்ல தமிழா. அவா, இவா, ஆத்துலே எல்லாம் எந்த தமிழில் சாமி சேத்திக்க?” என்று கேட்கிறான். பொழைப்பில் மண் விழுகிறது.

மனைவி வேறு கர்ப்பமாகிறாள். முன்னிலும் அதிகம் சம்பாதிக்க உழைக்கும் செங்கேணிக்கு எதிர்பாராத விபத்து நேர்கிறது. அதனால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் அவன் வாழ்க்கையை அலைக்கழிக்கிறது.

கதையின் தொடக்கத்திலேயே ‘இரட்டை ஆயுள்’ தண்டனை வாங்கியவன் என்று தெரிந்துவிடுவதால், நாவலின் க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க யாரை போட்டுத் தள்ளப் போகிறானோ என்கிற பதட்டம் வாசிப்பவருக்கு கூடிக்கொண்டே போகிறது. கதையின் போக்கில் வரும் சில வில்லன்களை கவனித்ததுமே இவர்களைதான் கொல்லப் போகிறான் என்று யூகித்துக்கொண்டே வருகிறோம். நாம் யாருமே எதிர்பாராத ஒருவரை செங்கேணி கொல்ல நேர்கிறது.

வரலாற்றின் பசிக்கு மனிதர்கள்தான் இரை. சென்னைப் பட்டிணம், நாற்பது ஆண்டுகளில் சிங்கார சென்னையாக, மெட்ரோபாலிட்டன் நகராக தன்னை மாற்றிக் கொள்வதற்கு கொன்று தீர்த்த பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் பிரதிநிதிகளில் ஒருவன் செங்கேணி. இம்மண்ணில் பரம்பரை பரம்பரையாக பிறந்து வளர்ந்தவர்கள், இன்று சென்னைக்கு தொடர்பற்ற இடத்தில் எங்கோ தூரத்தில் அகதிவாழ்க்கை வாழ அலைக்கழிக்கப்படுகிறார்கள். யார் யாரோ இந்நகரை சொந்தம் கொண்டாடுகிறார்கள். மண்ணின் மைந்தன் என்கிற அடிப்படையில் தன் முன்னோரின் வாழ்க்கை எப்படி இருந்து இருக்கும் என்று கரன்கார்க்கி செய்துப் பார்த்திருக்கும் ஆய்வுதான் கறுப்பர் நகரம்.

வெறும் ஆவணமாகி இருக்கவேண்டிய வரலாற்றை ரத்தமும், சதையுமாக மாற்றியிருக்கிறது கரன்கார்க்கியின் பேனா. புனைவும், நிஜமுமாக… எது புனைவு, எது நிஜமென்று அறியமுடியாவகையில் உருவாகியிருக்கும் மந்திரவாத யதார்த்தம்.

இன்று எல்லாருக்கும் சென்னையைத் தெரியும். மெட்ராஸ் எப்படி இருந்தது என்பதை அறியவிரும்புபவர்கள் கறுப்பர் நகரத்தை வாசிக்கலாம். ஒடுக்கப்பட்டோரின் நியாயத்தை உணர நினைப்பவர்களும் வாசிக்கலாம். பொழுதுபோக்குக்கு ஒரு காதல் கதையையோ அல்லது குடும்பக்கதை, க்ரைம்கதை என்று ஏதோ ஒரு கதையை வாசிக்க விரும்புபவர்களும் இதை வாசிக்கலாம். வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சேதியை கறுப்பர் நகரம் கட்டாயம் வைத்திருக்கிறது.

நூல் : கறுப்பர் நகரம்

எழுதியவர் : கரன் கார்க்கி

பக்கங்கள் : 352

விலை : ரூ.195

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18
போன் : 24332424, 24332924, 24339024

2 கருத்துகள்:

  1. புத்தகத்தை இணையத்தில் வாங்க
    http://www.wecanshopping.com/products/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.html

    பதிலளிநீக்கு
  2. உங்களுடய ஒரு சிறப்பான பதிப்பு!

    நன்றி
    வெ. ராகவ்

    பதிலளிநீக்கு