30 ஜூன், 2016

விஜயமகேந்திரன் படைப்புகள்

விஜயமகேந்திரனை எனக்கு எப்போதிலிருந்து தெரியும் என்பது சரியாக நினைவில்லை. ஆனால் டிசம்பர் 26, 2009 அன்று அவரது முதல் நூலான ‘நகரத்திற்கு வெளியே’ சென்னை தேவநேயப் பாவணர் நூலக அரங்கில் வெளியிடப்பட்ட தினத்திலிருந்து தெரியும். அந்த நூல் மிகச்சிறப்பாக அச்சிடப் பட்டிருக்கிறது என்று அவரிடம் பாராட்டுதல்களை தெரிவித்தேன். அதற்கு பிறகு அவர் எந்த நூலையும் இதுவரை ஏன் அச்சிடவில்லை என்பது தெரியவில்லை. பிற்பாடுதான் தெரிந்தது அந்நூலை அச்சிட்டவர்கள் உயிர்மை பதிப்பகத்தார் என்று. உயிர்மை பதிப்பகம் மனுஷ்யபுத்திரன் எனக்கு நண்பர்தான். அவரை தேடிச்சென்று இதற்காக பாராட்டினேன். இந்த பாராட்டுதல்கள் எனக்குரியவை அல்ல. அந்நூலை அச்சிட்ட மணி ஆப்செட்டாருக்கு போய் சேரவேண்டும் என்று பெருந்தன்மையாக அவர் ஒதுங்கிக் கொண்டார். இந்த பெருந்தன்மை ஏற்படுத்தும் முரண்தான் இலக்கியப் புனைவின் சுவாரஸ்யமே. அதனால்தான் நாமெல்லாம் இலக்கியத்தில் இருந்தாக வேண்டிய தேவையும் இருக்கிறது. மணி ஆப்செட்டாரின் முகவரி என்னிடம் இல்லாததால் அவர்களுக்கான என் பாராட்டுதல்களை ஏழு வருடமாக அப்படியே காத்து வருகிறேன்.

ஒருமுறை சென்னை அசோக்பில்லர் வழியாக நான் சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஒரு டீக்கடை இருந்தது. டீக்கடை வாசலில் விஜயமகேந்திரனும் இருந்தார். “டீ சாப்பிடலாமா?” என்று அவர் கேட்டார். “சாப்பிடலாமே” என்று நான் சொன்னேன். இருவரும் சாப்பிட்டோம். எனக்கு சர்க்கரை கொஞ்சம் கூடுதலாக வேண்டும். அவரோ கொஞ்சம் சர்க்கரை குறைவாக போட்டு குடித்தார். அப்போது ஒரு டீயின் விலை நான்கு ரூபாய்தான். விஜயமகேந்திரன் டீக்கடைக்காரருக்கு பத்து ரூபாய் தந்தார். நான் மீதம் இரண்டு ரூபாயை கொடுத்தேன். டீக்கடைக்காரரோ அதை மறுத்து, நான்தான் உங்களுக்கு மீதம் இரண்டு ரூபாய் தரவேண்டும் என்று நேர்மையாக ஒப்புக்கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படியாக எங்கள் இலக்கிய நட்பு ஆழமாக வளர்ந்தது.

2006ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக சிற்றேடுகளில் சிறுகதை, கவிதை, விமர்சனம் என்று எழுதிவரும் விஜயமகேந்திரனுக்கு இலக்கியத்தில் இது பத்தாம் ஆண்டு. ஆனால் அவரை 1978லிருந்தே சிற்றேடு வட்டாரம் அறியும். ஏனெனில் அவர் அப்போதுதான் பிறந்தார். அவர் பிறப்பதற்கு வெகுகாலம் முன்பே புதுமைப்பித்தன் மறைந்துவிட்டார்.

எனினும் புதுமைப்பித்தனின் வரிசையில்தான் விஜயமகேந்திரனையும் சேர்க்க வேண்டியிருக்கிறது. இருவரும் சிறுகதை மரபின் வேர்கள் என்கிற அடிப்படையில் இந்த ஒப்பீட்டை நான் செய்ய வேண்டியிருக்கிறது. சிலர் இதை ஒப்புக் கொள்ளலாம். பலர் இதை மறுக்கலாம். ஆனால், உண்மை என்பது உண்மைதான்.

விஜயமகேந்திரனின் படைப்புகள் பெரும்பாலும் பெண் புனைவை அடிப்படையாக கொண்டவை. புதுமைப்பித்தனின் கதைகளில் பெண் புனைவும் உண்டு. பேய் புனைவும் உண்டு. அவ்வகையில் பார்க்கப் போனால் நகுலனின் சுசிலாவே விஜயமகேந்திரனின் பாத்திரவார்ப்புகளுக்கு முன்னோடி என்பது பூடகமாக அவரது ‘நகரத்திற்கு வெளியே’ தொகுப்பில் தொக்கி நிற்கிறது.

நகுலனுக்கும், விஜயமகேந்திரனுக்கும் முக்கியமான வேறுபாடு உண்டு. அவர் திருவனந்தபுரத்தில் வசித்தார். இவர் சென்னையில் வசிக்கிறார். இருவரையும் ஒப்பிட வேண்டுமானால், இருவரும் தமிழில்தான் எழுதுகிறார்கள் என்கிற அம்சத்தைதான் குறிப்பிட வேண்டும்.

அசோகமித்திரனின் தாக்கம் விஜயமகேந்திரனுக்கு உண்டு என்று நினைக்கிறேன். அசோகமித்திரனை நான் பிறந்தபோதே அறிவேன். ஏனெனில் நான் பிறந்தபோதே அசோகமித்திரனுக்கு என்னுடைய தாத்தா வயது ஆகியிருந்தது. அவர் அப்போது கணையாழியில் நிறைய எழுதிக் கொண்டு இருந்தார்.

அசோகமித்திரனின் மிகப்பெரிய பிரச்சினையே அவர் அறுபது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதுதான். சுமார் முன்னூறு சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அந்த கதைகளின் தலைப்பை மட்டுமாவது மனப்பாடம் செய்துக் கொண்டு கூட்டங்களில் பேசுவதற்குள்ளாகவே விஜயமகேந்திரன் யாரென்பதே மறந்துவிடும்.

மாறாக மெளனியும், மாமல்லனும் நம்முடைய ஆட்கள். இவர்களை குறிப்பிட்டு கூட்டங்களில் பேசுவதோ, சிற்றேடுகளில் இலக்கியக் கட்டுரைகளை எழுதுவதோ சுலபம். இருவருமே தலா முப்பது கதைகள்தான் எழுதியிருக்கிறார்கள். ஒரு துண்டுச் சீட்டில் எல்லாக் கதைகளின் தலைப்பையும் எழுதி கையில் மறைத்து வைத்துக் கொண்டோமானால், கூட்டங்களில் பேசும்போது அப்படியே பார்த்து கதைகளின் தலைப்பை ஒப்பித்து கைத்தட்டல்களை அள்ளிவிடலாம்.

மெளனியின் கதை புரியாது என்பதே மெளனியின் பிரச்சினை. மெளனியே அதை வாசித்துப் பார்த்தாலும் அவருக்கே புரியாது என்றுதான் கருதுகிறேன். மாறாக மாமல்லனின் கதைகள் எளிதில் புரிந்துவிடுகிறது என்பதே மாமல்லனின் பிரச்சினை. மெளனியோ மாமல்லனோ என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதைவிட, அவர்கள் ஏதாவது எழுதியிருக்கிறார்கள் என்பதே இலக்கிய உலகத்துக்கு அவர்கள் செய்திருக்கும் தொண்டாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

விஜயமகேந்திரனையும் நாம் இதே மரபில் கொண்டு நிறுத்தலாம். ஆனால், அவர் கவிதையும் எழுதியிருக்கிறார். மெளனியோ மாமல்லனோ கவிதை புனைந்ததாக எனக்கு நினைவில்லை. அப்படி எழுதியிருப்பார்களேயானால் அதை நான் வாசிக்கவில்லை. வாசித்த வாசகர்கள் என்ன ஆனார்களோ என்றும் தெரியவில்லை.

நடந்து முடிந்த சென்னை புத்தகக் காட்சியில் மனுஷ்யபுத்திரனை பார்த்தேன். அவர் சிரித்தார். நான் சிரித்தேன். அவர் முறைத்தார். நான் பதிலுக்கு முறைக்கவில்லை. ஏனெனில் இதுதான் இலக்கிய பண்பாடு. இப்படிதான் ந.பிச்சமூர்த்தியும், க.நா.சு.வும், சிலம்பொலி செல்லப்பாவோ எழுத்து செல்லப்பாவோ யாரோ ஒருவரும் இருந்தார்கள். நாம் மட்டும் ஏன் வேறுமாதிரி இருக்க வேண்டும்.

மணிக்கொடி எழுத்தாளர்களின் மரபில் வந்தவர் விஜயமகேந்திரன் என்பதை நிறுவுவதற்காக நான் இந்தப் பெயர்களை இங்கே உச்சரிக்க வேண்டியிருக்கிறது. மணிக்கொடியும், வானம்பாடியும் இருவேறு துருவங்கள். உயிர்மையும், காலச்சுவடும் கூட அதே மாதிரிதான். விஜயமகேந்திரன் உயிர்மையில் எழுதினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது.

பிரமிளை எனக்கு நேரடியாக தெரியாது. அவரை எனக்கு தெரியாது என்கிற செய்தி அவருக்கு தெரிவதற்கு முன்பாகவே காலமாகி விட்டார். ஒருவேளை தெரிந்திருந்தால் ஆத்மாநாம் அகாலமரணம் அடைந்திருக்க மாட்டார். ஆத்மாநாம் அம்பத்தூரில் வசித்த கவிஞர். ‘ழ’ இதழில் அவர் எழுதிய கவிதைகள் எனக்கு பசுமையாக நினைவிருக்கிறது. ஆனால், இங்கே எதையாவது குறிப்பிட நினைத்தால் எதுவும் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. இதுவும் இலக்கியம் ஏற்படுத்தும் சுவாரஸ்யமான புதிர்தான். என் நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தருக்கு ஆத்மாநாமை பிடிக்கும். சுந்தரும் அம்பத்தூரில்தான் வசிக்கிறார் என்பதால் இருக்கும்.

வைத்தீஸ்வரனின் கவிதைகளில் கதைத்தன்மை இருக்கும். விஜயமகேந்திரனின் கதைகளில் கவிதைத்தன்மை இருக்கும். இந்த பொதுவான புள்ளியே இருவரும் இணைக்கும் நேர்க்கோடாக அமைகிறது.

ஞானக்கூத்தனின் கவிதைகளை ‘யாத்ரா’வில் வாசித்திருக்கிறேன். ஆனால் அவர் யாத்ராவில் எழுதியிருக்கிராறா என்று தெரியவில்லை. அவரது கவிதைகள் higher standard என்பார்கள். அவர் ஐயரா, ஐயங்காரா என்று தெரியாமல் எப்படி ஐயர் ஸ்டேண்டர்டில் அவர் கவிதைகளை reposition செய்ய முடியும் என்கிற கேள்வி எனக்கு தொக்கி நிற்கிறது. எனினும் அவரது கவிதைகளில் நுணுக்கமும், நுட்பமும் பூடகமாக செயல்படும் என்பதே வாசகர்களுக்கு முக்கியமானது. நுணுக்கத்துக்கும், நுட்பத்துக்கும் என்ன வேறுபாடு என்று தெரியாது. இரண்டுமே சிற்றேடுகளில் அதிகம் பிரயோகிக்கப்படும் சொற்கள் என்பதால் நூதன சிருஷ்டியாக இதை உபயோகப்படுத்த வேண்டி வருகிறது.

இந்த நுட்பமும், நுணுக்கமும் நகுலனுக்கு அலாதி. அவர் இறந்துவிட்டார். இருந்திருந்தால் இப்படியொரு கவிதை எழுதியிருப்பார்.

விஜயமகேந்திரன்

--

வி




கே

ந்

தி


ன்

--

ன்


தி

ந்

கே




வி

--

இது நானாக நகுலன் எப்படி எழுதியிருப்பார் என்று கருதி புனைந்த கவிதை. பிரமிள் உயிரோடு இருந்திருந்தால் இது கவிதையா என்று கேட்டு என் சட்டையைப் பிடித்து உலுக்கியிருப்பார். இது ஏன் கவிதையில்லை என்று பதிலுக்கு நான் கேட்டிருப்பேன். வெங்கட்சாமிநாதன் என்னை ஆதரித்து கடிதம் எழுதியிருப்பார். அவரை டெல்லியிலேயே நான் அறிவேன். பிற்பாடு மடிப்பாக்கத்தில் வசித்தார். கடைசிக்காலத்தில் பெங்களூரில் இருந்தார். நல்ல மனிதர். சிறந்த விமர்சகர். இறந்துவிட்டார்.

விஜயமகேந்திரன் இப்போது ‘ஊடுருவல்’ என்றொரு நாவலை ஏழு ஆண்டுகளாக எழுதிவருகிறார். அது வாசகர்களை எப்போது ஊடுருவும் என்பதை விஜயமகேந்திரனும் அறிய மாட்டார். நானும் அறியமாட்டேன். பிரமிளோ, நகுலனோ, ஆத்மாநாமோ, ந.பிச்சமூர்த்தியோ, புதுமைப்பித்தனோ, சுந்தரராமசாமியோ, ஜெயமோகனோ, எஸ்.ராமகிருஷ்ணனோ யாரும் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை. இந்த அறியாத்தன்மை இலக்கிய உணர்வின் இன்னொரு வெளிப்பாடு.

ஒட்டுமொத்தமாக விஜயமகேந்திரனின் இலக்கிய வாழ்வையும், படைப்புகளையும் ஒருவரியில் எப்படி சொல்லுவதென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒருவரியில் அவரை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமானால், ‘விஜயமகேந்திரன்’ என்று சொல்லி அறிமுகப்படுத்தலாம்.

25 கருத்துகள்:

  1. வெறித்தனம்! :-)))))))))))))))))))))))))))))))))))))))))

    பதிலளிநீக்கு
  2. மிகச் சிறந்த சடையர். யாரை சடையர் செய்திருக்கிறீர்கள், யாரைக் கேலி செய்கிறீர்கள் என்பது பலருக்கும் புரியாது. அப்படிப் புரியாவிட்டாலும் ரசிக்கத்தக்க கட்டுரை.

    பதிலளிநீக்கு
  3. :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    பதிலளிநீக்கு
  4. "அங்கதம் இலக்கியத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. அதிகார அமைப்பை, புனிதங்கள் என்று கருதப்படுவனவற்றை, எல்லாராலும் ஏற்கப்பட்டுவிட்ட ஒன்றைத்தான் எப்போதும் அங்கத இலக்கியம் தன் குறியாகக் கொள்கிறது. அதை தன் நகைச்சுவை மூலம் தலைகீழாக்கிப் பார்க்கிறது."

    சரளமாக விளையாடி இருக்கிறீர்கள் ..... புன்னகைத்தேன்

    பதிலளிநீக்கு
  5. சடச்சடன்னு...
    ஒரு இலக்கிய மழை
    பேய்ந்து ஓய்ந்து நிற்கிறது...

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா8:21 PM, ஜூலை 01, 2016

    நீங்க ஒரு எழுத்துலக "சோ"! (அவர் எழுதினாரா என தெரியாது)

    பதிலளிநீக்கு
  7. ஜெயமோகனை வாருவது போல இருந்தாலும் அவரே பரிந்துரைத்திருக்கிறார் . பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா4:23 AM, ஜூலை 02, 2016

    வைச்சு செச்சிருக்கீங்க.... :-))))))))

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா6:03 PM, ஜூலை 10, 2016

    simplyamazing.core satire. please write more.stress buster.

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா11:10 PM, ஜூலை 12, 2016

    பல்பு நிற பக்கங்கள் :) சும்மா [சா]வாரு வாருன்னு வாரியிருக்கீங்க :) அருமை !!!

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா12:37 PM, ஜூலை 13, 2016

    If you publish this artcile in a book, I recommend title 'பல்பு நிற பக்கங்கள்' :)

    பதிலளிநீக்கு
  12. Appadi, enakku kooda neenga yarai patri ezutuninganu purichanchu. Naanum ilakkiya vasaganthan.

    பதிலளிநீக்கு