9 ஜூன், 2016

சுந்தர ராமசாமியை அறிய...


மறைந்த மகத்தான எழுத்தாளர்களை புதிய வாசகர்களுக்கு எப்படி அறிமுகப்படுத்தக் கூடாதோ அப்படிதான் அறிமுகப்படுத்துவது இலக்கியவாதிகளின் மரபு.

இந்த மரபை உடைத்திருக்கிறார் அரவிந்தன்.

என் மனதுக்கு எப்போதும் மிக நெருக்கமான எழுத்தாளராக சுந்தர ராமசாமி இருந்து வருகிறார். ஒரு படைப்பை, ஆளுமையை எப்படி புரிந்துக் கொள்வது என்பதற்கு ‘கோனார் நோட்ஸ்’ போட்டவர் அவர். குறிப்பாக அவரோடு பழகிய ஆளுமைகள் குறித்து அவர் எழுதிய ‘நினைவோடை’ நூல்வரிசை, தமிழிலக்கியம் குறித்த புரிதலுக்கான மனத்திறப்பாக அமைந்தன. தமிழில் புக்கர் பரிசு வாங்கக்கூடிய தகுதி கொண்ட இருநாவல்களை எழுதியிருப்பவர் (’ஆண்கள், பெண்கள், குழந்தைகள் நாவலை மட்டும் படிக்க ஏதோ மனத்தடை)

சுந்தர ராமசாமி குறித்து பலரும் எழுதியிருக்கிறார்கள். பவுத்த அய்யனார், தேவிபாரதி, ஜெயமோகன் ஆகியோர் அவர் குறித்து எழுதியவை என்னை மிகவும் கவர்ந்தவை.

சாகித்ய அகாதெமிக்காக ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசைநூலுக்கு அரவிந்தன் எழுதியிருப்பது, இதுவரை எழுதப்பட்டவற்றிலிருந்து முற்றிலும் கறாரானதாகவும், துல்லியமானதாகவும் சுராவை மதிப்பிட்டிருப்பதாக வாசிக்கும்போது தோன்றுகிறது. சுராவின் வாசகன் என்பதைவிட மாணவன்/தொண்டன்/ரசிகன் என்றெல்லாம் சொல்லக்கூடிய அளவுக்கு அவரை ஆராதிக்கக்கூடியவராகதான் அரவிந்தனை நினைக்கிறேன். ஆனால், தன்னையும், சு.ரா.வையும் தள்ளி வைத்துவிட்டு மூன்றாம் மனிதராக அவர் எழுதியிருக்கும் இந்நூல் ஆளுமைகள் குறித்த மதிப்பீட்டு எழுத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைகிறது.

ஏற்கனவே சுராவை அறிந்தவர்களுக்கும் சரி. புதியதாக அவரை வாசிக்க திட்டமிடும் வாசகர்களுக்கும் சரி. வாசிப்புக்கு ஏற்ற வகையில் மிக நுணுக்கமாக திட்டமிட்டு பெருங்கடலை சிறு பாட்டிலுக்குள் அடைக்கும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார் அரவிந்தன். 1950களின் முற்பகுதிகளில் தொடங்கி, இரண்டாயிரங்களின் மத்தி வரை வாழ்ந்த ஒரு மனிதரின் நீண்ட வாழ்க்கையையும், அவரது நெடிய இலக்கிய அனுபவங்களையும் குழப்பமில்லாத அழகிய கோலமாக வரைந்துக் கொடுத்திருக்கிறார்.

மிகச்சுருக்கமாக சுவாரஸ்யமாக கொடுக்கப்பட்டிருக்கும் சுராவின் வாழ்க்கை குறித்த அறிமுகக் கட்டுரையில் தொடங்கி அவரது இலக்கியப் பணிகள் குறித்த மேலும் ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றிருக்கிறது.

கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், பத்திரிகை என்று பன்முகமாக விரிந்த சுராவின் இலக்கியப் பணிகளை துறைவாரியாக எளிமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். சொந்த வாழ்க்கையின் நிகழ்வுகள், சுராவின் இலக்கியத்தை எவ்வாறு தாக்கப்படுத்தியது என்பதை எடுத்துக் காட்டும் பகுதிகள் சுவாரஸ்யம்.

நீண்டகால இலக்கிய வாழ்வில் புதிது புதிதாக உருவாகும் போக்குகளை சுரா உன்னிப்பாக அவதானித்ததையும், அவற்றை அவர் எப்படி உணர்ந்து தன்னை அதற்கேற்றவாறு தகவமைத்துக் கொண்டு நீடித்தார் என்பதையும் அவரது எழுத்துகளில் இருந்தே உதாரணப்படுத்திக் காட்டியிருப்பதில் இருந்து சுராவை எவ்வளவு ஆழமாக அரவிந்தன் வாசித்திருக்கிறார் என்று உணரமுடிகிறது. சுராவின் எழுத்தில் வடிவம், மொழி, உள்ளடக்கம் ஆகியவற்றில் அவ்வப்போது ஏற்பட்ட மாற்றங்களுக்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதை காலவாரியாக தகுந்த எடுத்துக் காட்டுகளோடு வரிசைப்படுத்தி அடுக்கியிருப்பது அழகு.

‘அவசியம் வாசித்தே ஆகவேண்டிய நூல்’ என்று ஒரு புத்தக அறிமுகத்தை முடிப்பது தேய்வழக்கான சம்பிரதாயம்தான். ஆனால், இந்நூலைப் பொறுத்தவரை அதைதான் சொல்லியாக வேண்டும்.
நூல் : இந்திய இலக்கியச் சிற்பிகள் : சுந்தர ராமசாமி
எழுதியவர் : அரவிந்தன்
பக்கங்கள் : 128
விலை : ரூ.50
வெளியீடு : சாகித்திய அகாடமி,
குணா பில்டிங்ஸ் (இரண்டாவது தளம்),
எண்.443 (304), அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 600 018. போன் : 044-24311741

2 கருத்துகள்:

  1. புத்தக கண்காட்சியில் கிடைக்குமா? வாங்கி வாசிக்க உத்தேசம்! நன்றி!

    பதிலளிநீக்கு
  2. அறிமுகம் குறித்த நூலினை
    அறிமுகப் படுத்தியவிதம் அருமை
    நிச்சயம் வாங்கிப் படித்துவிடுவோம்
    வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு