28 மார்ச், 2016

ஷேவிங்!

கோடை உக்கிரம் சற்று முன்னதாகவே ஆரம்பித்து விட்டது. இப்போதே அக்னி வந்துவிட்டதோ என்று அஞ்சக்கூடிய அளவுக்கு கதிரவன் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறான். சந்தேகமே இல்லை. இது சூரியனின் வருடம்.

ஃபுல் மேக்கப் போட்டு அலுவலகத்துக்கு கிளம்பும் பெண்களின் சாயம் பாதியிலேயே கலைகிறது. எதிர் பிளேடு போட்டு ஷேவ் செய்த ஆண்களுக்கு தாடை தீயாய் எரிகிறது. ஆக, கோடையால் இருபாலருமே பாதிக்கப்படுவதால் ஆண்-பெண் சமத்துவம் இயற்கையின் இயல்பு என்பதும் புரிகிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை ஷேவிங்கில் அவ்வளவு ஆர்வம் இருந்தது கிடையாது. தாடியும், மீசையும் சொல்லிக் கொள்ளும்படி வளரவில்லை என்பதும் ஒரு காரணம். வாரத்துக்கு ஒருமுறை ஞாயிற்றுக்கிழமையில் நேரம் கிடைத்தால் பிளேடால் ஒரு இழுப்பு இழுத்துவிட்டுக் கொள்வதுண்டு. அதுவும்கூட “ஷேவிங் பண்ணுடா. சீக்கு புடிச்ச மாதிரி இருக்கே!” என்று அப்பாவோ, அம்மாவோ கவனித்து சொன்னால்தான்.

என்னுடையது பிரபுதேவா தலைமுறை. எனவே, சைட் அடிப்பதற்கு க்ளீன்ஷேவெல்லாம் அவசியமானதாக இல்லை. பிற்பாடு அப்பாஸ், மாதவன் ஆகியோர் எழுச்சி அடைந்தபிறகே இது அத்தியாவசியமான தகுதியாக மாறியது.

முன்பு விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்துக் கொண்டிருந்தபோது அதுபாட்டுக்கும் தான்தோன்றித்தனமாக வளரும் தாடி, added valueவாக இருந்தது. வேலை செய்ய சோம்பேறித்தனமாக இருந்தால் தாடியை வருடிக்கொண்டு வானத்தைப் பார்த்து தம் அடித்துக் கொண்டிருக்கலாம். மேலதிகாரிகள், ‘அவன் திங்க் பண்ணுறான்’ என்று நினைத்துக் கொள்வார்கள். அம்மாதிரி ஒருமுறை தாடி வளர்த்தபோது எதிர்ப்பட்ட நிறைய பேர் “சலாம் அலைக்கும் பாய்” என்று சொல்ல, மதமாற்றத்துக்கு தயார் இல்லாத நான் தாடியை வழித்தேன்.

‘புதிய தலைமுறை’யில் சேர்ந்த பிறகுதான் தோற்றம் குறித்து ரொம்ப கவலைப்பட வேண்டியதாயிற்று. ஷேவ் செய்யாத முகம், ‘இன்’ செய்யப்படாத சட்டை, செருப்புக் காலோடு ஓர் ஆர்.ஜே.வை பேட்டி எடுக்கப் போயிருந்தோம். எங்களுடைய தோற்றமே அவருக்கு அலர்ஜி ஆகிவிட்டது. பேச்சிலேயே தீண்டாமையை கடைப்பிடித்தார் (obviously அவர் அந்த சாதிதான்). கசப்பான அந்த அனுபவத்துக்கு பிறகே, இனிமேல் கொஞ்சம் டீசண்டாக தோன்ற வேண்டும் என்கிற அக்கறை பிறந்தது.

எங்கள் ஆசிரியர் மாலன், எப்போதும் பளிச்சென்று இருப்பார். அவருடைய முகத்தில் 0.5 மிமீ அளவுக்கு தாடி வளர்ந்தால் கூட அதிசயம்தான். திங்கள் டூ வெள்ளி ஃபார்மல்ஸ் உடையில்தான் இருப்பார். வீக்கெண்டில் ஆபிஸுக்கு வந்தால் மட்டும் டீஷர்ட் அணிவார். ஏதாவது விழாவில் கலந்துக் கொள்கிறார் என்றாலும், அந்த விழாவின் தன்மைக்கேற்ப கோட்சூட்டோ அல்லது ஜிப்பா (இலக்கிய நிகழ்வுகள்) மாதிரியோ அணிவார்.

‘பளிச்’ தோற்றத்துக்காக அவரை ஃபாலோ செய்ய ஆரம்பித்தேன். இப்போதெல்லாம் கம்பல்ஸரி ஃபார்மல்ஸ்தான். பேண்டில் டக்-இன் செய்த சட்டை, தினமும் இல்லாவிட்டாலும் ஒருநாள் விட்டு ஒருநாள் ஷேவிங், பாலிஷ் செய்த ஷூ என்று ஒருமாதிரி ஆபிஸ் கோயிங் ரோபோ மாதிரியான தோற்றத்தில் இருக்கிறேன். எப்போதாவது மின்தடை காரணமாக அயர்ன் செய்ய முடியாவிட்டால் மட்டும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து ஒருமாதிரி செமி ஃபார்மலில் சமாளித்துக் கொள்கிறேன். இப்போது சந்தித்து பேசுபவர்கள் (அந்த ஆர்ஜே மாதிரியில்லாமல்) கொஞ்சம் மரியாதையோடுதான் நடத்துகிறார்கள்.

ஒரே தொந்தரவு ஷேவிங்தான். விருப்பமே இல்லாமல் செய்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. நமக்கு கடை ஷேவிங் செட் ஆகாது. செல்ஃப் ஷேவிங்தான் திருப்தி. முன்பெல்லாம் ஒரு பிளேடில் சைடுக்கு ஒரு முறை என்று நாலு முறை ஷேவ் செய்துக் கொண்டிருந்தேன். இப்போது தோல் கொஞ்சம் தடித்து விட்டது. முகத்தில் வளரும் மயிறும் தடியாக ஸ்டாப்ளர் பின் கனத்துக்கு வளருகிறது. ஒரு பிளேடில் இரண்டு ஷேவுக்கு மேல் இழுக்க ஆரம்பித்தால் ரத்தம் துளிர்க்கிறது. அதுவும் ஷேவ் செய்து முடித்தபிறகு கொஞ்சூண்டு சொரசொரப்பு தட்டுப்பட்டாலும் சோப்பு போடாமல் குளித்தது மாதிரி அன்ஈஸியாக இருக்கும். எனவே எதிர்ஷேவ் பார்ட்டி நான். எரிச்சலைத் தணிக்க ஆஃப்டர் ஷேவ் லோஷனுக்கு வேறு பெரிய பட்ஜெட் அழுதுத் தொலைக்க வேண்டியிருக்கிறது (ஓல்டு ஸ்பைஸ் ஆச்சே?).

ஏசி காரில் அலுவலகம் செல்பவர்களுக்கும்தான் டெய்லி ஷேவிங் செட்டாகும் போல. ஒவ்வொரு நாளும் தரமணி சிக்னலில் என் பைக் பத்து நிமிடம் நிற்கும்போது, முகம் முழுக்க அனலில் வேகுகிறது. இந்த எரிச்சலில் அட்ரினல் எக்ஸ்ட்ராவாக சுரந்து, டென்ஷன் கூடி பி.பி. வேறு இஷ்டத்துக்கும் எகிறுகிறது. இதனால் அப்படியே சுகர், ஹார்ட் அட்டாட், கிட்னி ஃபெய்லியர் என்று இந்த சாதாரண ஷேவிங் எழவால், பரம்பரை குடிவெறியனுக்கு வரவேண்டிய ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா எழவு நோய்கள், டீடோடலரான எனக்கு வந்து சேருமோ என்றும் அச்சம் ஏற்படுகிறது.

சரி. நாலு நாளைக்கு ஷேவிங்கே வேண்டாமென்றால் 80% வெள்ளையாக தாடி முளைத்து இளமைக்கு வேட்டு வைக்கிறது. இந்த பாழாய்ப்போன மயிறு தலையில் வளர்ந்துத் தொலைந்தாலாவது, ஓரளவுக்கு வழுக்கைப் பிரச்சினையை அட்ஜஸ்ட் செய்யலாம். மாறாக தலையில் எவ்வளவுக்கு எவ்வளவு முடி கொட்டிக் கொண்டிருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அடர்த்தியாக முகத்தில் வளர்ந்துத் தொலைக்கிறது.

பெண்களுக்குதான் நிறைய உடல்ரீதியான இஷ்யூக்கள் உண்டு என்பதைபோல பொதுப்புத்தியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஆண்களுக்கு தினமும் இந்த ஷேவிங் பிரச்சினையே பெரும் பிரச்சினைதான். உள்ளாடைரீதியான பிரச்சினைகளை எல்லாம் பேச ஆரம்பித்தால் இராமாயணமே எழுதலாம். இதையெல்லாம் புலம்பிக்கொண்டா இருக்கிறோம்?

அந்த காலத்தில் முற்றும் துறந்து முனிவனாக போனவனெல்லாம் ஷேவிங் செய்ய சோம்பேறித்தனப் பட்டுதான் இமயமலைக்கு போயிருப்பான் என்று நினைக்கிறேன்.

10 கருத்துகள்:

  1. சகோ.கில்லர்ட் ஹார்ட் வாங்கி தினமும் லேசா வழித்தாலே போதும்.கொஞ்சம் சமாளிக்கலாம்.இதற்கே இப்படியா. தினமும் தாடையை மட்டுமில்லாமல் தலையை வழிக்கும் "சோ"நிலை[?]யை எண்ணிப்பார்த்து சமாதானம் ஆகுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. சேவ் செய்வதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. குளிக்கும்போது சோப் போட்டிருக்கும் முகத்தில் இப்படி நாலு இழுப்பு, அப்படி நாலு இழுப்பு. அவ்ளளுவுதான் மேட்டர். பழைய மாடல் ரேசர் கூடாது. புதிய 2,3 பிளேடுகளுள்ள ரேசர்கள் 100 ரூபாய்க்குள் கிடைப்பதை வாங்கி தினமும் பயன்படுத்தினால் ஒருமாசம், 2மாசம் தாராளமாய் வரும்.

    பதிலளிநீக்கு
  3. முற்றிலும் உண்மை லக்கி!

    பதிலளிநீக்கு
  4. After sometime, Yuva has come back in his own style.. nakkal, nayyandi and at the same time analyzing an issue deeply :)

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா9:59 PM, மார்ச் 31, 2016

    Last 2 lines, sema. Shaving panna kannadi parkum pothu yellam siripu varukirathu!!

    பதிலளிநீக்கு
  6. இதனை வெளியிடலாம்,விரும்பினால். தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டு மழித்தால் எரியாது.நிறைய நடிகர்கள் செய்வது.பெரியார் அவர்கள் நேரமும் பணமும் வீணாகின்றன என்று விட்டுவிட்டார்.( அவர் தமிழில் தவறே இராது என்பது கூடுதல் குறிப்பு)

    பதிலளிநீக்கு