18 மார்ச், 2016

க்ளீனா பேசிடுவோம்!

நகரமயமாதல்தான் நாகரிகம் என்று நவீன உலகம் கருதுகிறது. வானுயர்ந்த கட்டிடங்கள், இருளை பகலாக்கும் ஒளிவிளக்குகள், குப்பை கூளம் கண்ணில் தென்படாத சீரான வீதிகள், வீடுகள், விடுதிகள், அரங்கங்கள் என்று நம்முடைய சுற்றுப்புறம் குறித்த கனவு நனவாகும் நூற்றாண்டு இது. இதெல்லாம் வெளிப்பார்வைக்குதான். உண்மையில் நாகரிகத்தின் பெயரால் நாட்டையே பிரும்மாண்டமான குப்பைத் தொட்டியாக நாம் மாற்றிக் கொண்டிருப்பதின் பின்னணியை இந்த நூல் அலசுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி ‘ஸ்வச் பாரத்’ என்கிற கோஷத்தை திட்டமாக முன்வைத்த பிரதமர் மோடி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா மொத்தத்தையும் சுத்தப்படுத்தி காந்தியின் கனவினை நினைவாக்குவோம் என்று சபதம் மேற்கொண்டார். ‘சுத்தம் செய்வோம், வாருங்கள்’ என்று பிரதமர் மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பது, வெறும் கவர்ச்சி அரசியல் கோஷமல்ல, தீவிரமான சமகால பிரச்சினை. பல்வேறு துறையினை சேர்ந்த ஏராளமான பிரபலங்களும் இந்தப் பணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அந்த காலக்கட்டத்தில்தான் தினகரன் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர், ‘தினகரன் வசந்தம்’ இதழில் வாரந்தோறும் இந்த கட்டுரைகளை தொடராக கொண்டுவர திட்டமிட்டார். சுத்தம் செய்வது என்பதே வெறுமனே தெருவை பெருக்கித் தள்ளுவது என்று புரிந்துகொள்ளப்படக் கூடாது என்கிற அக்கறை அவருக்கு இருந்தது. எனவேதான் இத்தொடரில் என்னவெல்லாம் இடம்பெற வேண்டும் என்று யோசித்தார். அவ்வகையில் இந்த நூலின் ஆசிரியராக அவரையே குறிப்பிடலாம். எழுதியது மட்டுமே நான்.

‘Yes, we can’ என்கிற தலைப்பில் ‘தினகரன் வசந்தம்’ இதழில் இத்தொடர் வந்தபோது வாசகர்களிடையே இருந்து வந்த பாராட்டுக் கடிதங்களுக்கும், தொலைபேசி அழைப்புகளுக்கும் அளவேயில்லை. வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை ஆனதுமே காலையில் கைப்பேசியை எடுத்து குறுஞ்செய்திகளை பார்ப்பேன். ‘நக்கீரன்’ வாரமிருமுறை இதழின் இணையாசிரியர் கோவி.லெனின் இத்தொடர் குறித்த தன்னுடைய கருத்தினை முப்பத்தைந்து வாரங்களும் அனுப்பிக்கொண்டே இருந்தார். சக பத்திரிகையாளர்களும் காணும்போதெல்லாம் இத்தொடர் குறித்து பாசிட்டிவ்வாகவே பேசுவார்கள். இம்மாதிரியான ஊக்குவிப்புகள் இல்லாமல் இருந்திருந்தால் உற்சாகமாக என்னால் எழுத முடிந்திருக்கும் என தோணவில்லை.

ஆறுகள் மாசடைவது, மின்குப்பை பிரச்சினை, குட்கா ஆபத்து, பொது இடங்களை அசுத்தப்படுத்துவது, பிளாஸ்டிக் தொல்லை, காற்று மாசு, ஒலி மாசு, ஒளி மாசு, வாகனப்புகை, வாசனைத் திரவியங்களால் விளையும் விபரீதம், ப்ளெக்ஸ் பேனர்கள் ஏற்படுத்தும் சூழலியல் சீர்கேடு, இண்டோர் பொல்யூஷன் என்று சுத்தத்தை சாக்காக வைத்து இந்நூல் எத்தனையோ அவசியமான விஷயங்களை விவாதிக்கிறது.

புற சுத்தத்தை மட்டுமின்றி அக சுத்தத்தையும் வலியுறுத்துகிறது என்பதே மற்ற சுற்றுச்சூழல் தொடர்பான நூல்களிலிருந்து இந்நூலை வேறுபடுத்திக் காட்டக்கூடிய அம்சம். மொழிப்பிரச்சினை, சாதி, நுகர்வுக் கலாச்சாரம், அடிமைப்படுத்தும் இணையம் என்று பல்வேறு சமகால பிரச்சினைகளும் பேசப்பட்டிருக்கின்றன.

இன்னும் பேச வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருந்தாலும், இவ்வளவு விஷயங்களையும் முப்பத்தைந்தே அத்தியாயங்களில் அடக்க முடிந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் ஆச்சரியமாகதான் இருக்கிறது.

நூலை சிறப்பான முறையில் வெளிகொண்டு வரும் சூரியன் பதிப்பகத்தாருக்கு நன்றியை தவிர வேறென்ன சொல்ல முடியும்?

- ’கங்கையில் இருந்து கூவம் வரை’ நூலின் முன்னுரை

‘தினகரன் வசந்தம்’ சீஃப் எடிட்டர் கே.என்.சிவராமனுக்கு நூல் சமர்ப்பிக்கப்படுகிறது. முகப்பு அட்டை : ஓவியர் ராஜா


பக்கங்கள் : 152 விலை : ரூ.120/-
வெளியீடு : சூரியன் பதிப்பகம்
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர்,
சென்னை - 600 004. போன் : 42209191 Extn : 21125
Email : kalbooks@dinakaran.com

1 கருத்து: