21 மார்ச், 2016

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்

மூத்தப் பத்திரிகையாளர்கள் பலரும் திமுகவைவிட அதிமுகதான் பெரிய கட்சி என்று டிவி விவாதங்களிலும், அச்சில் கட்டுரை எழுதுகிறபோதும் சொல்லுகிறார்கள். அவ்வாறு சொல்வதற்கான ஆதாரமாக திமுகவைவிட அதிமுகவே அதிக வாக்குகள் வாங்குவதாக தேர்தலில் வாங்கும் வாக்குகளின் புள்ளிவிவரங்களை சொல்கிறார்கள். மூத்தப் பத்திரிகையாளர்கள் என்பதால் அவர்கள் அப்படிதான் சொல்லியாக வேண்டும். முன்பு எம்.ஜி.ஆர் தொடர்ச்சியாக வென்றுக் கொண்டிருந்தபோது, உடன்பிறப்புகளுக்கு கலைஞர் இதுமாதிரி புள்ளிவிவரக் கணக்குகளை சொல்லிக் கொண்டிருந்தபோது கிண்டலடித்தவர்கள்தான் இவர்கள்.

மூத்தப் பத்திரிகையாளர்களுக்கு ‘தொழில்’ சொல்லிக் கொடுக்குமளவுக்கு நமக்கு அனுபவம் இல்லையென்றாலும், ஒண்ணும் ரெண்டும் கூட்டினா மூணு என்று கணக்கு போடுமளவுக்கு கணிதவியல் அறிவு இருப்பதால் ஒரு சின்ன திருத்தத்தை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

வாக்கு சதவிகிதம் என்பது ஒரு கட்சி ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் எவ்வளவு வாக்குகள் வாங்கியிருக்கிறது என்பதை வைத்து சொல்லப்படும் புள்ளிவிவரம். பத்தே பத்து தொகுதியில் போட்டியிட்டு பத்திலும் ஒரு கட்சி வென்றிருந்தாலும்கூட 234 தொகுதிகளுக்கும் சேர்த்துதான் அக்கட்சியின் வாக்குசதவிகிதம் கணக்கிடப்படும். கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலும் அக்கட்சிக்கு வாக்குகள் இருக்கும் என்பதை தயைகூர்ந்து மூத்தப் பத்திரிகையாளர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகளுக்கு விழுந்த வாக்குகளில் திமுக வாக்குகளும் உண்டு. மாறாக அங்கே திமுகவே இல்லை என்று பொருளல்ல. எனினும் ‘உதயசூரியன்’ நிற்காத தொகுதிகளில் விழுந்த திமுக வாக்குகள், அக்கட்சியின் வாக்குவங்கிக் கணக்கில் வராது.

கடந்த 2011 தேர்தலில் திமுக வாங்கியது 22.4 சதவிகிதம். இது அக்கட்சி போட்டியிட்ட 119 தொகுதிகளின் வாக்குகளில் கிடைத்த சதவிகிதம் மட்டுமே. மீதியிருக்கும் 115 தொகுதிகளிலும் அக்கட்சி நின்றிருந்தால், இந்த சதவிகிதத்தில் மேலும் ஒரு 8 சதவிகித அளவுக்காவது கூடுதலாக கிடைத்திருக்கலாம் என்பதை குமாரசாமியை தவிர வேறு யார் வேண்டுமானாலும் ஒப்புக் கொள்வார்கள். திமுகவைவிட கூடுதலாக கிட்டத்தட்ட 50 தொகுதிகளில் நின்ற அதிமுகவுக்கு 38 சதவிகிதம் கிடைத்தது. ஒருவேளை அதிமுக 234ல் நின்றிருந்தாலும் கூடுதலாக 3 அல்லது 4 சதவிகிதம் கிடைத்திருக்கலாம்.

2006ஆம் ஆண்டு தேர்தலை எடுத்துக் கொண்டால்கூட வாக்கு சதவிகிதத்தில் அதிமுகவே திமுகவைவிட 6% கூடுதலாக இருந்தது. ஆனாலும், திமுகதான் ஆட்சி அமைத்தது என்பது இங்கே கவனிக்கத்தக்கது. ஏனெனில் திமுக வெறும் 132 இடங்களிலும், அதிமுக 188 இடங்களிலும் போட்டியிட்டிருந்தன.

கடந்த சில தேர்தல்களாக திமுக 150க்கும் குறைவான இடங்களில்தான் போட்டியிடுகிறது. அதிமுக, 150க்கு குறைவதில்லை (2001 விதிவிலக்கு). அதிமுக அதிக இடங்களில் போட்டியிடுவதால் கூடுதல் சதவிகிதத்தை காட்ட முடிகிறது. திமுக குறைவான இடங்களில் போட்டியிடுவதால் அதிமுகவைவிட குறைவாக வாக்குகள் வாங்குவதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது. அவ்வளவே.

எனவே, மூத்தப் பத்திரிகையாளர்கள் முன்வைக்கும் வாக்குவங்கி கணக்கு என்பது அதிமுகவுக்கு ஆதரவாக ஏதேனும் பாயிண்டை முன்வைக்க வேண்டுமே என்கிற ஆர்வத்தில் சொல்லப்படுவதுதானே தவிர, கள நிலவரமோ உண்மையோ அல்ல.

குறைவான வாக்குகள் வாங்கிய கட்சி ஆட்சியே அமைக்க முடிகிறது (2006), அதிக வாக்குகள் பெற்ற கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்துகூட பெற முடியாத நிலைமை (2011) ஏற்படுகிறது என்றால், ஒருவகையில் அது நம்முடைய ஜனநாயக முறையின் பலகீனம். அதாவது ஒரே ஒரு வாக்கில் தோல்வியடைந்த வேட்பாளருக்கு விழுந்த வாக்குகள் கூட நம் ஜனநாயக அமைப்பில் கிட்டத்தட்ட செல்லாத வாக்குகளுக்கு ஒப்பாகும். லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் விழும் அந்த வாக்குகளுக்கு எப்படி மதிப்பு சேர்ப்பது?
அரசியல் வல்லுநர்கள் முன்வைக்கும் தீர்வு விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் (proportional representation). இம்முறை ஒருவேளை நம் தேர்தல் ஜனநாயக அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்படுமேயானால் இந்த கூட்டணிக் குழப்பங்களோ, லெட்டர்பேடு கட்சிகளுக்கான தேவைகளோ களையப்படும் வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் முறைகேடுகள் குறையும். நிஜமான மக்கள் செல்வாக்கு கொண்டவர்கள் சட்டசபை, நாடாளுமன்றத்துக்குள் கட்சிகளின் ஆதரவின்றியே நுழையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். கொள்கை சார்ந்த அரசியலுக்கான தேவை கூடுதலாகும்.

திமுக, தேர்தல் அரசியலில் ஈடுபட்ட காலத்திலிருந்தே அரை நூற்றாண்டுக்கும் மேலாக இம்முறையை வலியுறுத்தி வருகிறது. இந்த சிந்தனையை இந்திய அரசியலில் தோற்றுவித்து, பெரும் விவாதமாக மாற்றியவர் பேரறிஞர் அண்ணா.

இங்கிலாந்து காலனியிலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் தவிர்த்து, ஜனநாயகம் நடைமுறையில் இருக்கும் மற்ற பெரும்பாலான நாடுகளில் இந்த முறைதான் அமலில் இருக்கிறது. ஒரு கட்சி தேர்தலில் பெறும் வாக்குகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கோ / சட்டமன்றத்துக்கோ அக்கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது தீர்மானிக்கப்படுவதே இம்முறை.

ஏன் இந்த முறை இந்திய ஜனநாயகத்துக்கு தேவை?

உதாரணத்துக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலை எடுத்துக் கொள்ளலாம். தேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒட்டுமொத்தமாக 3.3 சதவிகிதம் வாக்குகளை பெற்றது. அதே அளவிலான வாக்குகளைதான் அதிமுகவும் பெற்றிருக்கிறது. ஆனால், அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 37. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 9. இந்த இரு கட்சிகளையும் விட அதிகமாக 4.1 சதவிகிதம் வாக்குகளை பெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் பிரதிநிதி யாருமே பாராளுமன்றத்தில் இல்லை.

அதுபோலவே பிஜூ ஜனதாதளம் பெற்றிருக்கும் வாக்கு சதவிகிதம் 1.70. திமுகவும் அதே வாக்கு சதவிகிதத்தைதான் பெற்றது. ஆனால் பிஜூ ஜனதாதளத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 20. திமுகவுக்கு பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் கூட இல்லை.

ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகள் பெறக்கூடிய வாக்குகளையும் இடங்களையும் இதுபோல புள்ளிவிவர அடிப்படையில் ஆராய்ந்தோமானால் நம் ஜனநாயகம் எத்தகைய விசித்திரமான வடிவத்தில் இருக்கிறது என்பது புரியும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, தன்னுடைய ஜனநாயகத்தை மேலும் செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் நிறைய சீர்த்திருத்தங்களை மேற்கொண்டாக வேண்டும். விகிதாச்சார பிரதிநிதித்துவம் குறித்த விவாதங்களை பொதுத்தளங்களிலும், ஊடகங்களிலும் விவாதித்து அதன் சாதக பாதகங்களை வல்லுநர்கள் ஆலோசிக்க வேண்டும்.

6 கருத்துகள்:

  1. தமிழகத்தை பொறுத்துதோ அல்லது அந்தந்த மாநிலத்திலோ வேண்டுமானால் ஏற்றுக்கொள்வார்கள். மத்தியில் கூட்டாச்சி தத்துவம் பேசும் திமுக அனுதாபி இப்படி ஒட்டு மொத்தமாக இந்தியாவிற்கு விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் பற்றி எழுதியதில் தமிழக உரிமை பறிபோகும் வாய்ப்பினையும் சேர்த்து எழுதியிருக்கலாம். குறிப்பாக விகிதாச்சாரப்படி நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தால் திராவிட கருத்தியில் பேசும் எம்பிக்கள் தமிழகத்திலிருந்து மிகக் குறைவாக தான் செல்வார்கள். 2014 கணக்குப்படி 53.7/814.5=6.5% @ 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே செல்வார்கள். இதில் காங் கம்யூ உறுப்பினர்களும் சேர்த்தே செல்வார்கள். எந்த ஒரு சட்டமும் அதிகம் மக்கள் தொகை கொண்ட பெரும்பான்மையானவர்களால் முன்னெடுக்கப்பட கூடிய அபாயம் உள்ளது. இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு. தமிழகம் கூட வட தென் மேற்காக பதவிக்காக பிரியக்கூடிய அபாயமும் உண்டே

    பதிலளிநீக்கு
  2. வெகு உண்மை .. நம் நாட்டுக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவம் அவசியம்!

    பதிலளிநீக்கு
  3. தி.மு.க அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு அதிக சதவிகத வாக்குகளை அள்ள வேண்டும். அதை கூட்டணி கட்சிகளுக்கு விட்டு கொடுப்பது முட்டாள்தனம். அப்படி செய்து மூத்த பத்திரிகையாளர்களின் வாயை மூட வேண்டும். (நல்ல மாட்டிகிட்டிங்களா?)

    பதிலளிநீக்கு
  4. "இங்கிலாந்து காலனியிலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் தவிர்த்து, ஜனநாயகம் நடைமுறையில் இருக்கும் மற்ற பெரும்பாலான நாடுகளில் இந்த முறைதான் அமலில் இருக்கிறது. ஒரு கட்சி தேர்தலில் பெறும் வாக்குகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கோ / சட்டமன்றத்துக்கோ அக்கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது தீர்மானிக்கப்படுவதே இம்முறை"

    - எந்த நாடுகள்? சும்மா எதையாச்சும் சொல்ல கூடாது.

    பதிலளிநீக்கு
  5. மக்களவை மாநிலங்களவை இரண்டுக்கும் ஒரே அளவு இடங்கள் (543 ,தமிழ்நாட்டில் 234)இருக்க வேண்டும்.மக்களவை இப்போதுள்ள தேர்தல் முறைப்படி தேர்ந்தெடுக்க பட வேண்டும்.

    மாநிலங்களவை விகிதாசார முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.மாநிலங்களவைக்கு ஒவ்வொரு கட்சியும் தங்கள் வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் கமிசனிடம் கொடுத்து விட வேண்டும்.விகிதாசார முறைப்படி மேல்சபை உறுப்பினர்களை தேர்தல் கமிசன் நியமிக்கும்.இங்கு இட ஒதுக்கேடு முழுமையாக பின்பற்ற படவேண்டும்.

    மக்களவையில் வெற்றி பெற்ற உறுப்பினர்களில் பெண்கள்,இஸ்லாமியர்கள்,குறிப்பிட்ட சாதி குழுவினர் குறைவு என்றால் அந்த கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களில் இவர்கள் அதிகமான சதவீதம் இருப்பர். எடுத்துகாட்டாக பா ஜ க விற்கு 283 எம் பி க்களில் ஒரு இஸ்லாமிய எம் பி,30 பெண்கள் தான் என்பதால் மேல்சபையில் அதற்க்கு விகிதாசார முறைப்படி கிடைக்கும் 180 இடங்களில் 55 இடங்கள் இஸ்லாமியர்களுக்கும் 180 இடங்களும் பெண்களுக்கே தரப்படும்.இதன் மூலம் ஒரு சாதி,ஒரு மதகட்சிகளை எளிதில் ஒழித்து விடலாம்.

    http://puthu.thinnai.com/?p=25956

    உத்தர்ப்ரதேசதில் 19 சதவீத வோட்டுகளை பெற்ற பஹுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடையாது.19 சதவீத மக்களை கொண்ட இஸ்லாமியருக்கு தேர்தலில் போட்டியிட ஒரு இடம் கூட தராத பா ஜ க 80ஈள் 73 இடங்களை வென்று உள்ளது.குஜராத்தில் ஐந்து சட்டமன்ற,நாடாளுமன்ற தேர்தல்களில் ஒரு இஸ்லாமியருக்கு கூட போட்டியிட வாய்ப்பு தராத பெருமை பா ஜ க விற்கு உண்டு.பல மாநிலங்களிலும் பா ஜ க வின் நிலை அது தான்.இதை மாற்ற வேண்டியது நம் கடமை.இதே போல sc /st /obc மக்களை முழுமையாக எந்த கட்சியாலாவது ஒதுக்க முடியுமா

    பதிலளிநீக்கு