19 நவம்பர், 2013

3D விகடன்

அந்த காலத்தில் விகடகவி புதூர் வைத்தியநாத அய்யர் என்றொருவர் இருந்தார். ஒரே நேரத்தில் பத்து விஷயங்களை கவனித்து எதிர்வினை ஆற்றும் ஆற்றல் பெற்ற தசாவதானியாம் அவர். காமெடி வெண்பாக்கள் நிறைய இயற்றுவாராம். அவருடைய கவிதைகளை பத்திரிகைகள் சீண்டவில்லை என்றோ அல்லது வேறு ஏதாவது காரணமோ தெரியவில்லை. திடீரென்று ஒரு பத்திரிகை ஆரம்பித்து நடத்த ஆரம்பித்தார். ஆனந்த விகடன்.

உலகமும், தேசமும் சீரியஸாக சிடுமூஞ்சித்தனமாக இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் ‘சிரி’யஸாக இயங்கியது விகடன். அரசு வேலையை உதறி சுயத்தொழில்தான் என்று தன்னம்பிக்கையோடு களமிறங்கியிருந்தார் இளைஞரான திருத்துறைப்பூண்டி சுப்ரமணியன் ஸ்ரீனிவாசன். மெயில் ஆர்டர் பிசினஸ் தொடங்கினார். அதாவது ‘துட்டு’ அனுப்பினால், வினோதமான பொருள் உங்கள் வீடு தேடி வரும். ஒரு ரூபாய்க்கு நூறு பொருள் மாதிரி கவர்ச்சிகரமான பேக்கேஜிங்கில் ஸ்ரீனிவாசனின் மெயில் ஆர்டர் பிசினஸ் சக்கைப்போடு போட்டது. இந்த தொழிலை அபிவிருத்தி செய்ய பத்திரிகைகளில் விளம்பரம் தரவேண்டும். அன்றிருந்த விளம்பர ஏஜென்ஸிகள் அடித்த கொள்ளை கமிஷனைப் பார்த்து, ஏற்கனவே இருந்த பிசினஸோடு அட்வர்டைஸிங் ஏஜென்ஸியையும் சேர்த்து செய்ய ஆரம்பித்தார் ஸ்ரீனிவாசன்.

இப்படித்தான் விளம்பரத் தேவைக்காக விகடனும், புதூர் வைத்தியநாத அய்யரும் ஸ்ரீனிவாசன் என்கிற எஸ்.எஸ்.வாசனுக்கு அறிமுகமானார்கள். ஒரு நாள் விளம்பரம் தருவதற்காக அய்யரை பார்க்க வந்திருந்தார் வாசன். சிரிக்க சிரிக்க பத்திரிகை நடத்தும் அய்யர் அன்று சீரியஸாக இருந்தார். “இனிமேல் விளம்பரம் கொடுக்க வேற பத்திரிகை பார்த்துக்கோப்பா. செலவு கட்டுப்படி ஆவலை. தனியாளா ஓடியாடி நடத்துறதுக்கும் கஷ்டமாயிருக்கு. ஆனந்த விகடனை இழுத்து மூடறதா இருக்கேன்”

வாசன் யோசித்தார். நாமே நடத்தினால் என்ன. இதுதான் வாசனின் ஸ்டைல். விளம்பரம் கொடுக்க விளம்பர ஏஜென்ஸிகள் எதற்கு. நாமே நடத்திவிட்டு போகலாமே. விளம்பரங்களை வெளியிட பத்திரிகைகளை ஏன் தொங்கவேண்டும். நாமே பத்திரிகை நடத்தலாமே. அய்யரிடம் பேரம் பேசினார். ஒரு எழுத்துக்கு இருபத்தைந்து ரூபாய் என்று கணக்கு போட்டு, ‘ஆனந்தவிகடன்’ என்கிற எட்டு எழுத்துகளுக்கு இருநூறு ரூபாய் கொடுத்து வாங்கினார். இது எண்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. இன்று ஆனந்தவிகடன் ஒரே ஒரு பிரதியின் விலையே இருபது ரூபாய்.

வாசன் கைக்கு மாறியதுமே பத்திரிகையும் மாறத்தொடங்கியது. சித்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால், பத்திரிகைக்கு அஸ்திவாரமாக அய்யர் கருதிய ‘ஆனந்தம்’ மட்டும் அப்படியே இருந்தது. சிரிக்க வைக்கும் பத்திரிகை, சித்திரங்களும் அபாரம் என்று ஊர் பேசியது. வாசனுக்கு முழுமையான திருப்தி கிடைக்கவே கிடைக்காது. தன்னுடைய பத்திரிகையில் இடம்பெறும் எழுத்துகளும் சூப்பர் என்று எல்லோரும் பேசவேண்டும் என்று முயற்சித்தார். கல்கியை பிடித்தார். சிறந்த எழுத்தாளர்களுடன், சிறந்த ஓவியர்கள் என்கிற கூட்டணிதான் விகடனின் வெற்றி ஃபார்முலா. நல்ல எழுத்துகளை மிக நல்ல வடிவத்தில் வாசகர்களுக்கு வழங்கவேண்டும் என்கிற அமரர் வாசனின் தரக்கொள்கையை இன்றுவரை நூற்றாண்டை நெருங்கும் விகடன் அப்படியே கடைப்பிடித்து வருகிறது.

அதே நேரம் மாற்றங்களுக்கும் விகடன் அஞ்சியதே இல்லை.
ஐம்பதுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட திராவிட எழுச்சியின் போது விகடன் அடைந்த மாற்றம் முக்கியமானது. வெகுஜன வாசகர்களை கவரும் எளிய தமிழில் திராவிட எழுத்தாளர்கள் எழுதத் தொடங்கியிருந்தார்கள். இந்த மாற்றத்தை உணர்ந்துக்கொள்ளாத அல்லது ஏற்றுக்கொள்ள விரும்பாத பத்திரிகைகள் பலவும் பொலிவிழந்தன. எண்ணற்ற பத்திரிகைகள் மக்கள் செல்வாக்கினை இழந்து கடையை இழுத்து பூட்டிக்கொண்டது. அரசியல்ரீதியாக காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தாலும் திராவிட தாக்கத்தை ஏற்றுக்கொண்டு, கவுரவம் பார்க்காமல் விகடனில் இந்த புதுத்தமிழ் நடையை புத்திசாலித்தனமாக புகுத்தினார் வாசன்.

எழுபதுகளிலும், எண்பதுகளிலும் ரேடியோ-டிவி போட்டிகளை விகடன் தன்னுடைய புகைப்படக் கலைஞர்களின் திறமையைக் கொண்டு சமாளித்தது. ரேடியோவாலும், அந்தகால டிவியாலும் செய்யமுடியாத நேரடிகள அனுபவ சாகஸங்களை ஜூ.வி. மாதிரியான இன்வெஸ்டிகேட்டிங் ஜர்னலிஸ பத்திரிகையை அறிமுகப்படுத்தி செய்தது. திரைப்படங்களும் ‘கலர்’ ஆகி பத்திரிகைகளுக்கு கடுமையான அச்சுறுத்தல் நீடித்த இந்த காலத்தில் வாசனின் புதல்வர் எஸ்.பாலசுப்பிரமணியன், ஒரு பத்திரிகையில் செய்யக்கூடிய எல்லா சாத்தியங்களையும் கையாண்டு வெற்றிகண்டார்.

இப்போது மூன்றாவது தலைமுறை. வாசனின் பேரன் பா.சீனிவாசன் பொறுப்பிலிருக்கிறார். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பத்திரிகைகளுக்கு பல்முனை போட்டி. மில்லெனியமின் ஆகச்சிறந்த புரட்சியான இணையத்தை மரபான அச்சுப் பத்திரிகைகள் எப்படி எதிர்கொண்டு, தங்கள் இருத்தலியத்தை தக்கவைத்துக்கொள்ளப் போகின்றன என்கிற கேள்விக்கு விடைகாணவேண்டிய காலம். தன் பங்காக ஆனந்த விகடன் 3D அனுபவத்தை வாசகர்களுக்கு முன்வைத்திருக்கிறது.
தொண்ணுறுகளில் ஸ்டீரியோகிராம் தொழில்நுட்ப முறையில் பின்னட்டையில் 3Dயை அறிமுகப்படுத்தியது விகடன். இப்போது ரெட், சியான் அனாக்லிப் கண்ணாடிகளை அணிந்து நேரடியாகவே விகடனில் அச்சிடப்படும் படங்களையும், ஓவியங்களையும் முப்பரிமாணத்தில் பார்க்கக்கூடிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். விகடனுக்கு மட்டுமின்றி, தமிழ் இதழியலுக்கே நாலுகால் பாய்ச்சலை உருவாக்கித்தரும் முக்கியமான மாற்றம் இது. நீளம், அகலம் என்று இருபரிமாணத்தில் அடங்கியிருந்த வாசிப்புக்கு, ஆழத்தை உணரக்கூடிய கூடுதலான இன்னொரு பரிமாணத்தை சேர்த்திருக்கிறார்கள். விகடன் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் இத்தொழில்நுட்பத்தை எப்படி தமிழ் பதிப்புலகம் பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்பதையெல்லாம் எதிர்காலம் முடிவு செய்துக்கொள்ளட்டும். ஆனால், அனைவராலும் தமிழ் பத்திரிகைத்துறையில் இது எழுந்து நின்று இருகைதட்டி பாராட்டப்பட வேண்டிய முக்கியமான புரட்சி.

இந்த கனவை சாத்தியமாக்க விகடன் குழுவினர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்திருக்க வேண்டும். குறிப்பாக ரெஜிஸ்ட்ரேஷன் பார்க்கவேண்டிய அச்சு ஊழியர்கள், இமைக்க மறந்து வேலை பார்த்திருப்பார்கள். லே-அவுட் பணியாளர்களும் ஒன்றுக்கு பத்துமடங்கு உழைப்பை செலுத்தியிருப்பார்கள். 3டி பக்கங்களுக்காக எடிட்டோரியல் குழுவினர் கற்பனையை தாறுமாறாக பறக்க செய்திருப்பார்கள். ஒட்டுமொத்தமாக விகடன் தாத்தாவுக்கு அட்டென்ஷனில் ஒரு சல்யூட்.
ஓராண்டுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து திரும்பிய நண்பர் ஒருவர் 3டியில் அச்சிடப்படும் பத்திரிகை ஒன்றை காட்டினார். என் கையில் கூட கொடுக்காமல் மிகக்கவனமாக அவரே பக்கங்களை புரட்டிக் காண்பித்தார். Word’s most beautiful என்கிற அப்பத்திரிகையை கண்ணாடி போட்டு பார்த்தபோது, முதன்முதலாக ஒரு பெண்ணிடம் ‘ஐ லவ் யூ’ சொன்னபோது ஏற்பட்ட பரவசத்தை மீண்டும் அடைந்தேன். “இதெல்லாம் உங்க ஊருக்கு வர்றதுக்கு இன்னும் நாற்பது, ஐம்பது வருஷம் ஆவும்” என்றார். ஏக்கத்தோடு “ம்” கொட்டினேன். வெறும் இருபது ரூபாய் செலவில் அந்த ஏக்கத்தை இவ்வளவு சீக்கிரமாக விகடன் தாத்தா போக்குவார் என்று கனவிலும் நினைக்கவில்லை. 3டி விகடன் இதழ் கடைக்கு வந்த அன்று மாலை, அதே ‘ஐ லவ் யூ’ பரவசத்தை இரு மடங்காக உணர்ந்தேன். என்ன இருந்தாலும் என் தாய்மொழியில் 3டியை பார்க்கிறேன் இல்லையா. கல்வெட்டு, பட்டயம், ஓலைச்சுவடி, பேப்பர் என்று மரபான எல்லா அச்சு ஊடகவடிவங்களையும் தாக்குப்பிடித்து வாழும் என் தமிழ், முப்பரிமாண தொழில்நுட்பத்துக்கும் தயாராகிவிட்டதை காணும்போது எழும் உணர்ச்சியலைகளுக்கு அளவேயில்லை. ஒரே ஒரு குறைதான். எண்பது ஆண்டுகளாக விகடன் தாத்தா எல்லா மாற்றங்களையும் உள்வாங்கி, விதம்விதமாக தன் கெட்டப்பை மாற்றிக்கொண்டிருக்கிறார். 3டியில் அவரை ஒரு முழுப்பக்கத்துக்கு காட்டியிருக்க வேண்டாமா விகடன் ஓவியர்கள்? அப்புறம், ஆனந்தவிகடன் ஆசிரியருக்கு இன்னொரு கோரிக்கை. தயவுசெய்து ‘டைம்பாஸ்’ இதழையும் 3டி வடிவில் வெளியிட ஆவன செய்யவும். எவ்வளவு செலவு ஆனாலும் சரி. ஆவலோடு காத்திருக்கிறோம்.
அ-னா, ஆவன்னா வாசிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே உற்ற தோழனாக இருந்த ஆனந்த விகடன் மீது, சில ஆண்டுகளாக கடுமையான மனக்கசப்பு இருந்தது. ‘ஆனந்தம்’ போய், ‘அழுமூஞ்சி’ விகடனாக அதுமாறிவிட்டதால் ஏற்பட்ட கடுப்பு. ஜூ.வி.தான் அரசியலுக்கு என்று தண்ணீர் தெளித்துவிட்டபிறகு, ஆ.வி.யிலும் ஏன் பக்கம் பக்கமாக, குறிப்பாக கலைஞரை மட்டும் குறிவைத்து வன்மமான அரசியல் என்று ஓர் ஆதங்கம். கலைஞர் தாத்தாவும், விகடன் தாத்தாவும் சமகாலத்தவர்கள்தானே? ஒரு தாத்தாவை இன்னொரு தாத்தா இப்படி ஏதோ சொத்துத்தகராறு மாதிரி தனிப்பட்ட முறையில் அளவுதாண்டி தாக்கலாமா என்று கோபம். அதனாலேயே நான்கு ஆண்டுகளாக விகடனை காசு கொடுத்து வாங்குவதில்லை. அலுவலகத்துக்கு வந்து புரட்டுவதோடு சரி (அரசியல் கட்டுரைகளை ஏறெடுத்தும் பார்க்கவே மாட்டேன்).

தாத்தாவுக்கும் பேரனுக்குமான இயல்பான ஊடல்தான் அது. விகடன் தாத்தா மீதிருந்த அந்த கோபம் இந்த 3டியால் மொத்தமாக ஓடியே போய்விட்டது. என்ன இருந்தாலும் நம்ம தாத்தா இல்லையா?

8 கருத்துகள்:

  1. நல்ல பதிவு! 'டைம்பாஸ் விகடனும் 3டியில் வரவேண்டும்' - செம குரும்பு பாஸ் நிங்க!

    முன்பு விகடன் பின் அட்டையில் வந்த Hologram 3D படங்கள் சில & அவற்றை எப்படி பார்ப்பது, அதில் மறைந்துள்ள அந்த முப்பரிமாண உருவத்தை எப்படி கண்டுகொள்வது என்பது பற்றிய சிறு பதிவு

    http://www.twitlonger.com/show/n_1rrm3qe

    பதிலளிநீக்கு
  2. நிறைய செய்திகளை உள்ளடக்கிய கட்டுரை .ஏப்படித்தான் இவ்வளவு செய்திகளை சேகரித்தீர்களோ !
    விகடகவி புதூர் வைத்தியநாத அய்யர் அவர்களை அறிய வைத்தமைக்கு நன்றி .
    'ஒரு எழுத்துக்கு இருபத்தைந்து ரூபாய் ' திறமையாளர் வாசன் அவர்கள் .
    கல்கியைப் பற்றி குறைவான செய்தி. கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எங்கள் ஊர் பக்கம் .அவரைப் பற்றியும் ஒரு கட்டுரை கொடுங்கள் . சிறப்பாக தந்தமைக்கு வாழ்த்துகள் . 'ஓர் ஆதங்கம். கலைஞர் தாத்தாவும், விகடன் தாத்தாவும்' கடைசியில் உங்கள் ஆதங்கம். அதுவும் உண்மைதான் ..

    பதிலளிநீக்கு
  3. நல்ல தகவல்கள். அதுவும் அறியாத தகவல்கள்.

    பதிலளிநீக்கு
  4. //இதெல்லாம் உங்க ஊருக்கு வர்றதுக்கு இன்னும் நாற்பது, ஐம்பது வருஷம் ஆவும்” என்றார். ஏக்கத்தோடு “ம்” கொட்டினேன். வெறும் இருபது ரூபாய் செலவில் அந்த ஏக்கத்தை இவ்வளவு சீக்கிரமாக விகடன் தாத்தா போக்குவார் என்று கனவிலும் நினைக்கவில்லை. //

    3D தொழில் நுட்பம் வேணும்னா நம்ம தாய்மொழில வந்திருக்கலாம்.அவர் காட்டிய படத்தோடு 3D வர்றதுக்கு இன்னும் பல வருஷம் ஆகுங்க. அவர் சொன்னது கரெக்டுதான்! ஹிஹிஹி..

    பதிலளிநீக்கு
  5. Polarize-3D, stereogram, மற்றும் anaglyph , அணைத்துமே பார்க்க திகட்டாதவை. லக்கி. நம்ம ஊரில் 80களிலேயே தமிழ் காமிக்மலர்களில் சிவப்பு மற்றும் நீல வண்ண கண்ணாடி மூலம் பார்க்கும்படி வந்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  6. Very interesting & informative article...well done yuva sir

    பதிலளிநீக்கு
  7. கண்ணாடி அணிந்து 3D glass அணிந்து படித்து பாருங்கள் அதன் அருமை புரியும் கண் வலிதான் மிச்சம். 20 வருடங்களாக தொடர்ந்து படித்து வருகிறேன். பக்கங்களை குறைத்து விலையை கூட்டி உப்பு சப்பில்லாத விசயங்களை எழுதி வருகிறது!.. இதற்கு time பாஸ் எவ்வளவோ மேல்

    பதிலளிநீக்கு
  8. விகடனின் தனித்துவமே தரமான சிறுகதைகளும் தொடர்கதைகளும் தான். அவற்றை 80 மற்றும் 90களில் தொடர்ந்து வசித்த ஆனந்தம் இப்போது இல்லை. தொழில்நுட்பம் மட்டுமே ஒரு பத்திரிகையை தாங்காது, செறிவான விஷயங்களும் அடங்கியிருக்கவேண்டும். அது தற்போது விகடனில் மிஸ்ஸிங். சிரியர் குழு பெரிதாகியுள்ளதே தவிர அவர்களது கற்பனை திறன் விரிவாகவில்லை என்பதே 35 வருட வாசகனாகிய எனது கணிப்பு

    பதிலளிநீக்கு