6 செப்டம்பர், 2011

நான் கூட சிகரெட் பிடிப்பேன்!

"டியர் கிருஷ்ணா,
நான் சாகவேண்டும். உங்கள் உதவி தேவை.
அன்புடன்,
மலர்."

இப்படியொரு மெயில் அவளிடமிருந்து வரும் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை. அவளுக்கு என்னதான் பிரச்சினை? என்னால் உதவமுடியுமா?

"அவசரப்படாதே. பொறு. உனக்கு என்ன பிரச்சினை?" என்று மெயிலிலேயே கேட்டேன். உடனே பதில் வந்தது.

"டியர் கிருஷ்ணா!

என் அப்பா இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவர். சிறுவயதிலேயே தாயை இழந்தவள் நான். அலுவலக உதவியாளினியாக சேர்ந்தவள் என் சித்தி. அப்பாவை மயக்கி வாழ்க்கையிலும் வஞ்சகமாக நுழைந்தாள்.

சென்ற மாதம் அப்பா மர்மமான முறையில் இறந்துவிட்டார். இது நிச்சயமாக சித்தியும், அவளது தம்பியும் செய்த வேலையாக இருக்கும். இப்போது சித்தியின் தம்பியை நான் மணந்துகொள்ள கட்டாயப்படுத்துகிறார்கள். அவனுக்கு வயது 40. கடைந்தெடுத்த பொறுக்கி. சொத்துகளுக்கு நான் மட்டுமே ஒரே வாரிசு. என் சொத்து முழுவதையும் அபகரித்து என்னையும் அப்பாவை போல கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சுகிறேன்.

எனக்கே எனக்கென்று வாய்ப்பவன் குறித்த கனவுகள் வைத்திருக்கிறேன். என் வயது 22. அவனுக்கு வயது 28 ஆக இருக்கும். பார்க்காமலேயே அவனைக் காதலித்து கைபிடிப்பேன். அவனுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கும். கல்யாணத்துக்குப் பிறகு அவனை திருத்துவேன்.

இந்த கனவோடு வாழும் நான் (இந்த வரிகளை எழுதும்போது அழுகிறேன்) 40 வயது முரடனுக்கு வாழ்க்கை படுவதை காட்டிலும் இறந்துவிடுவதே மேல் அல்லவா?

அன்புடன்
மலர்"


மலருடைய மின்னஞ்சலை கண்டதும் வேகவேகமாக திட்டங்களை தீட்ட ஆரம்பித்தேன். இதுவரை மலரிடம் ஓராண்டுக்கு மேலாக இண்டர்நெட்டில் நட்பு பாராட்டினாலும் அவளிடம் என்னைப் பற்றி பெரிதாக சொன்னதில்லை. அவளோ வெகுளியாக ஒரு முறை அவளுடைய போட்டோவை அனுப்பியிருக்கிறாள் (பார்க்க ஷ்ரேயா மாதிரி அரபிக்குதிரை வாகாக இருந்தாள்) இப்போது அவள் வாழ்க்கைப் பின்னணியையும் சொல்லியிருக்கிறாள்.

கிளிபோல மனைவி, குரங்குபோல வைப்பாட்டி வைப்பது ஆண்குணம். எனக்கு 34 வயது. கிளிபோல பொண்டாட்டி இருக்கிறாள். பஞ்சவர்ணக்கிளி போல ஒரு வைப்பாட்டி இருந்தால் என்ன தவறு? போனஸாக கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத பல்லாயிரம் கோடி சொத்துக்களோடு.. சரியாக தப்பாக சிந்திக்க ஆரம்பித்தேன்.

அட்டகாசமான ஆங்கிலத்தில் அவளுக்கு ஒரு மடல் தயார் செய்தேன்.

"அன்பு மலர்,

நீண்ட நாட்களாக சொல்லவேண்டுமென்பதை நீ துயரத்தில் இருக்கும்போது சொல்லவேண்டியிருக்கிறதே என்று வருந்துகிறேன்.

எனக்கு 28 வயதாகிறது. உன்னைவிட ஆறுவயதுதான் மூத்தவன். நான் கூட சிகரெட் பிடிப்பேன். புரிகிறதா மலர்?

காதலுடன்
கிருஷ்ணா"


அனுப்பிய பிறகு, மலரிடமிருந்து மெயில் வருமா என்று கம்ப்யூட்டர் முன்பாக தவமிருக்க ஆரம்பித்தேன். பத்து மணி நேரம் கழித்து பதில் மெயில் வந்தது. "அன்புள்ள அண்ணா கிருஷ்ணாவுக்கு" என்று மடலை ஆரம்பித்திருந்தாள் மலர்.

(நன்றி : தினகரன் வசந்தம்)

7 கருத்துகள்:

  1. நல்லாயிருக்கு. இப்படி தானே எல்லாரும் யோசிப்போம் .

    பதிலளிநீக்கு
  2. சீரியஸா கொண்டு போய், காமெடி ஆக்கிட்டீங்களே...
    Enjoyed it...

    பதிலளிநீக்கு
  3. சிரித்துக்கொண்டே கருத்துரையிடுகிறேன், கலக்கல்.

    நா.நிரோஷ்.

    பதிலளிநீக்கு
  4. ஏன்.. ஏன் இப்படி.. அடுத்து சிறுவர்-மலர், தும்பி-மலர், தம்பி-மலர், இங்க எழுதுன கதையெல்லாம் போடுவீங்க போல.. - இப்படிக்கு உங்கள்-மலர்.

    பதிலளிநீக்கு
  5. ஹைகூ என்று கவிதைகளில் வரும் இந்த ஜப்பானிய உத்தி, இந்த கதையில் வருவது, உண்மையில் சுவாரசியமாகத் தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு