12 செப்டம்பர், 2011

சாதி வன்முறை

சாதி தொடர்பான வன்முறைகளும், கலவரங்களும் நடைபெறும் போதெல்லாம் பூணூல் அணிந்தவர்களும் கூட சாதிவெறியை ஒழிக்க உறுதி பூணுகிறார்கள். நன்கு கவனிக்கவும். சாதியை ஒழிக்க வேண்டும் என்பதில்லை. சாதிவெறியை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். அன்னா ஹசாரே எப்படி ஊழலை ஒழித்துவிடுவாரோ, அதுபோல இவர்களும் சாதிவெறியை ஒழித்துவிடுவார்கள் என்று நம்பித்தொலைப்போம். எனக்குத் தெரிந்த நன்கு படித்த, பல பட்டங்களை பெற்ற ஒரு அறிவுஜீவி ஒருமுறை சொன்னார். “சாதி கூடாது என்பதல்ல. சாதிவெறி கூடாது என்பதே நம் லட்சியமாக இருக்க வேண்டும்”. அடங்கொன்னியா, இவ்வளவு நாட்களாக கல்வியறிவு சாதியுணர்வை தகர்க்கும் அல்லது குறைக்கும் என்று எவ்வளவு முட்டாள்த்தனமாக நம்பிக் கொண்டிருந்தேன் என்று அப்போது நொந்துக் கொண்டேன்.

தென்மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வருவதைப் போன்ற சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம் சாதியை மறுப்பவனின் குரல் சற்று குறைத்தும், சாதியை ஏற்றுக் கொண்டவன் குரல் சற்று ஓங்கியும் ஒலிப்பதை உற்றுக் கவனித்தால் உணரமுடியும். ஏன் இந்த உரத்தக் குரல் என்று பார்த்தோமானால், தன் சாதி நல்ல சாதி. இது மாதிரி அரிவாள் தூக்காது. பெட்ரோல் குண்டு வீசாது என்பதை மறைமுகமாக நிறுவுவது மட்டுமே அக்குரலுக்கான நோக்கமாக இருக்கிறது. மாற்றுச்சாதி கலவரங்களின்போது மட்டுமே கண்டிக்கும் இம்மாதிரியான குரல்கள், ஒரு மசுருக்கும் பிரயோசனப்படப் போவதில்லை. இவனிடம் இருக்கும் அதே சாதியுணர்வுதான், கலவரத்தை நடத்திக் கொண்டிருக்கும் சாதிக்காரனிடமும் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்பதை இவன் உணரவும் போவதில்லை.

வன்முறையில் ஈடுபடும் சாதிக்காரன் செய்வது பிஸிக்கல் வயலன்ஸ். மனதுக்குள் சாதியுணர்வினை, பற்றினை சுமந்துக்கொண்டு காந்தியவாதியாக சமூகத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பவன் செய்துக் கொண்டிருப்பது மெண்டல் வயலன்ஸ். ஒப்பீட்டளவில் பார்க்கப் போனால் பிஸிக்கல் வயலன்ஸை விட, மெண்டல் வயலன்ஸ் பன்மடங்கு ஆபத்தானது. உயிர்ச்சேதங்களும், பொருட்சேதங்களும் இருந்தாலும், பிஸிக்கல் வயலன்ஸின் தாக்கம் தற்காலிகமானது. அதிகபட்சம் நாற்பது, ஐம்பது வருடங்களில் நீர்த்துப் போகக்கூடியது. மாறாக மெண்டல் வயலன்ஸ் என்பது ரிலே ரேஸ் மாதிரி தலைமுறை, தலைமுறையாக பல நூற்றாண்டுகளுக்கு கடத்தப்படக் கூடியது. பிஸிக்கல் வயலன்ஸுக்கான ஆணிவேராக, இந்த மெண்டல் வயலன்ஸே விளங்குகிறது.

பிஸிக்கல் வயலன்ஸ் கண்ணுக்குத் தெரியக்கூடியது. சட்டம் மூலம் தடுக்க முடியும். விளைவுகளுக்காக தண்டிக்கவும் முடியும். மெண்டல் வயலன்ஸ் கடவுள் மாதிரி. கண்ணுக்கும் தெரிந்து தொலைக்காது. அதன் நீட்சிதான் பிஸிக்கல் வயலன்ஸ் என்பதை சட்டம் முன் நிரூபிக்கவும் முடியாது. இது யார் யாரிடம் இருக்கிறது என்பதையும் சி.டி.ஸ்கேன் எடுத்தும் கூட கண்டுபிடிக்கவும் முடியாது.

மதத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்கவே இயலாது. மதம் வேண்டும். சாதி மட்டும் வேண்டாம் என்பது பிராக்டிக்கலாக நடைமுறைப்படுத்த இயலாதது. குருபூசையால் பிஸிக்கல் வயலன்ஸ் உருவாகிறது என்றால், விநாயகர் சதுர்த்திகளும், தீபாவளிகளும் மெண்டல் வயலன்ஸை ஏற்படுத்துகின்றன. சாதிய மெண்டல்களை உருவாக்குகின்றன. மதம் மாறுவதும் இதற்கு தீர்வல்ல என்பது பலமுறை அழுத்தமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. தலித் மதம் மாறினாலும் தலித்தாகவே இழிவுப்படுத்தப் படுகிறான். நாடாரோ, தேவரோ மதம் மாறினாலும், செல்லும் மதத்திலும் தன் சாதியப்பெருமையை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறான்.

மதத்தை ஒழிக்க, கடவுளை மறுத்தாக வேண்டும். இதைத்தான் பெரியாரியம் செய்கிறது. மத அடிப்படையிலோ, சாதி அடிப்படையிலோ எவனும் உயர்ந்தும் விடமுடியாது, தாழ்ந்தும் விட முடியாது என்பதைதான் பெரியார் கரடியாக கத்திக் கொண்டிருந்தார்.

சாதிய வன்முறைகள் கூடாது, மதக்கலவரங்கள் ஒழியவேண்டும் என்று நிஜமாகவே நினைப்பவர்கள் இவற்றைப் பற்றி பேசுவதற்கும், எழுதுவதற்கும் முன்பாக தன்னளவில் மட்டுமாவது கடவுளை மறுத்தாக வேண்டும். கடவுள் பெயரில் பரப்பப்படும் மூடநம்பிக்கைகளை வெறுத்தாக வேண்டும். இல்லையேல் இவர்களது ‘சாதிவெறி கூடாது’ அறிவிப்பு, நிஜமான அக்கறையின் பேரில் விளைந்ததாக இல்லாமல், குடியரசுத்தின குடியரசுத் தலைவரின் உரையை மாதிரி உப்புக்கும், சப்புக்கும் ஒப்பாத சம்பிரதாய விருப்பமாக மட்டுமே இருக்கும்.

32 கருத்துகள்:

  1. \\ குருபூசையால் பிஸிக்கல் வயலன்ஸ் உருவாகிறது என்றால், விநாயகர் சதுர்த்திகளும், தீபாவளிகளும் மெண்டல் வயலன்ஸை ஏற்படுத்துகின்றன//

    உண்மை தான், இதில் கூட கிறிஸ்துமஸ், ரமதான் எல்லாம் வரும் தானே !!!
    அதை எழுத விருப்பம் இல்லையா, இல்லை அரசியல் வாதி போல் நீங்களும் நுண் அரசியல்தத்துவம் தானா?
    அது சரி, நமக்கு இராமனே காச்சிவிட்டு, கஞ்சி குடிப்பது வழக்கம் தானே !!!

    பதிலளிநீக்கு
  2. பெரியாரியம் பற்றி எழுதும்
    நீங்கள் முதலில் கடவுள் மறுப்பாளார், மத மறுப்பாளர் என பகிரங்கமாக அறிவியுங்கள்.
    பின் பெயரில் உள்ள கிருஷ்ணாவை துறந்து யுவ பெரியார் அல்லது யுவ பகத்சிங் என்று வைத்துக் கொள்ளுங்கள். பெரியார் தி.கவில் சேர்ந்து பெரியார் கொள்கைகளை பரப்புங்கள்.களப்பணியில் இறங்குங்கள்.
    உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றம் உங்களிடமிருந்தே துவங்கலாமே. செயல்- அதைவிட் சிறந்த சொல் எதுவும் இல்லை.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் தலைவர் என்ன மூடில் இருப்பாரோ, அந்த மூடை எப்போதும் உங்கள் பதிவில் பிரதிபலிப்பீர்கள்.
    வாழ்த்துக்கள்! சிறந்த இணைய உடன்பிறப்பு நீர்!

    பதிலளிநீக்கு
  4. //* பெரியார் கொள்கைகளை பரப்புங்கள்.களப்பணியில் இறங்குங்கள்.
    உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றம் உங்களிடமிருந்தே துவங்கலாமே. செயல்- அதைவிட் சிறந்த சொல் எதுவும் இல்லை. *//

    லக்கிலுக் இப்போதும் பெரியார் களத்தில்தான் இருக்கிறார்... இந்த பதிவு கூட பெரியாரிலை சார்ந்தது...

    நீங்கள் கேட்பது பெயரை மாற்றி கொண்டுதான் செய்ய வேண்டும் என ஏதாவது அவசியல் இருக்கிறது... எந்த பார்ப்பனராவது... தான் ஒரு பார்ப்பன ஆதிக்க வர்க்க வெறியன் என அறிவிக்கும் போது லக்கிலுக்கும் நீங்கள் சொல்வது போல் அறிவிப்பார்...

    பதிலளிநீக்கு
  5. இல்ல தெரியாமத்தான் கேக்குறேன். அதென்ன அட்வைஸ் பண்ற எல்லோருக்கும் இந்து மதம் மட்டும் தான் கண்ணுக்கு தெரியுமா?

    விநாயகர் சதுர்த்தி, தீபாவளி மட்டும் தான் மெண்டல் வயலன்ஸ்-ஆ? அப்போ மொகரம் ஊர்வலம், சந்தன கூடு ஊர்வலம், குருத்தோலை ஊர்வலம், எழுப்புதல் கூட்டம் எல்லாம் காந்திய வழியா?

    உங்கள் மனத்தில் இருப்பது தான் அப்பட்டமான வன்முறை. எல்லா பெரியரிஸ்டுகளும் முதலில் அதை குறைத்து கொள்ளுங்கள். பிறகு மற்றவர்க்கு அறிவுரை வழங்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. very good answer. Every one who is supposed to be secular in India target only Hindus. They are afraid of Muslims and Christians. So they are cowards.

      நீக்கு
  6. Why cant you give a similar view when ... Jathivaari kanakkeduppu is happening.

    All these praises of Periyar can happen thinking at they can remove Differences in the society ... Which they cannot. If this goes ... Money will come as a difference factor to devide people, Or something else. This applies to so called improved contries and so called improved political parties (They cannot give samathuvam by giving a round robin fashion of power in their home itself :) - No offence)

    Point is , Dont DISCRIMINATE (atleast for basic human rights/needs) even though Differences will ever exist with changing parameters according to time.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் கருத்துக்களில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. ஆனால் அதை வெளிப்படுத்தும் பொழுது, பொதுவாக வெளிப்படுத்தாமல், கூட்டத்தில் ஒருத்தனை மட்டும் கும்முவது போல் இருந்தால், அதில் உள்ள நியாயம் பின்னால் தள்ளப்பட்டுவிடும். அது தான் இங்கு நடந்தது. எனது முந்தைய பின்னூட்டம் அந்த கோபத்தில் வந்தது. அது வெளிப்பட்ட முறையில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  8. //*ஒரு அறிவுஜீவி ஒருமுறை சொன்னார். “சாதி கூடாது என்பதல்ல. சாதிவெறி கூடாது என்பதே நம் லட்சியமாக இருக்க வேண்டும்”*//

    இதை முகநூலில் பின்னூட்டமாக இட்டது அடியேன் தான். மறைமுகமாக சாதிகள் தான் நம் (தமிழகம், ஏன் இந்தியா என்று கூட சொல்லலாம்.) பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றி நமக்கென்று ஒரு தனித்துவத்தைத் தந்திருக்கின்றன. இவற்றை ஒழித்துவிட்டு (100 பெரியார் வந்தாலும் ஒழிக்க முடியாது என்பது வேறு விஷயம்) பின்னாளில் சீரழிவதை விட இப்போதே மாற்றாக கொஞ்சம் சிந்தியுங்கள். இங்கு சாதியை ஒழிக்கிறேன் பேர்வழி என்று சிலர் சாதிவெறியைக் கிளரிக் கொண்டிருக்கிரார்கள். சாதியை ஒழிக்க நினைத்தால் எதிர்வினையாக அது இன்னும் வளரத்தான் செய்யும். (இதற்காக பரமக்குடி சம்பவத்தை நான் ஆதரிப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.)

    பதிலளிநீக்கு
  9. "மதம் மாறுவதும் இதற்கு தீர்வல்ல என்பது பலமுறை அழுத்தமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. தலித் மதம் மாறினாலும் தலித்தாகவே இழிவுப்படுத்தப் படுகிறான். நாடாரோ, தேவரோ மதம் மாறினாலும், செல்லும் மதத்திலும் தன் சாதியப்பெருமையை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறான்."

    This is 100% correct.

    Good thought Lucky.

    பதிலளிநீக்கு
  10. மதம் மாறுவதும் இதற்கு தீர்வல்ல என்பது பலமுறை அழுத்தமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. தலித் மதம் மாறினாலும் தலித்தாகவே இழிவுப்படுத்தப் படுகிறான். நாடாரோ, தேவரோ மதம் மாறினாலும், செல்லும் மதத்திலும் தன் சாதியப்பெருமையை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறான்.

    ...100% correct...

    Good blog lucky!!!

    பதிலளிநீக்கு
  11. “சாதி கூடாது என்பதல்ல. சாதிவெறி கூடாது என்பதே நம் லட்சியமாக இருக்க வேண்டும்”

    Mr Lucky Look,
    பார்ப்பான் = சாதி
    பார்ப்பனீயம் = சாதி வெறி

    இப்ப திரும்ப படிச்சு பாருங்க.. இது மட்டும் ஓகேவா?

    ஒங்க தலைவரும் இதையேதான சொன்னார்? அப்ப நீங்க தலையில அடிச்சுக்கலையா?

    பதிலளிநீக்கு
  12. tamil said...

    /பின் பெயரில் உள்ள கிருஷ்ணாவை துறந்து.../

    'கிருஷ்ணன்' என்றால் கருப்பன்; 'கிருஷ்ணை' என்றால் கருப்பி. 'யுவகிருஷ்ணா' என்றால் இளங்கருப்பன்.

    பெயரை ஏன் மாற்றச் சொல்கிறார்?

    பதிலளிநீக்கு
  13. Here, I wish to comment that on all these issues, if you have a side to support as an agenda when you speak on an issue.... definitely there are all the possibilities that you end up performing a biased speaking / writing. lucky you are biased,

    பதிலளிநீக்கு
  14. 3 பேருக்கு மரண தண்டனை கூடாது என்று எல்லோரும்
    போராடிக்கொண்டிருக்கையில், ஜெ. அரசு 7 தலித்களுக்கு மரண தண்டனையை
    எந்த விசாரணையுமின்றி, நீதி மன்றம் ஏதுமின்றி நிறைவேற்றி இருக்கின்றது. ஹிட்லர் ரிட்டர்ன்ஸ் :(:(

    பதிலளிநீக்கு
  15. காத்து கருப்பு1:49 AM, செப்டம்பர் 13, 2011

    இமானுவேல் சேகரனை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்த "தெய்வத்திருமகன்(ள்)" பற்றி யாருமே வாய்திறப்பதில்லை.

    அந்த கொலை குற்றவாளிக்கு மவுண்ட் ரோட்டில் சிலை என்ன, மாலை என்ன, மரியாதை என்ன......

    திருந்துங்கடா போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்கடா............

    ஒத்த கேள்வி:
    மாண்புமிகு யுவகிருஷ்ணா நீங்கள் சாதி விட்டு கலப்பு திருமணம் செய்தவரா? ஆம் என்றால் உனக்கு இந்த கட்டுரையை எழுத முழு யோக்கியதை உண்டு.
    இல்லை என்றால்.........(Fill up the blanks)

    பதிலளிநீக்கு
  16. //இவ்வளவு நாட்களாக கல்வியறிவு சாதியுணர்வை தகர்க்கும் அல்லது குறைக்கும் என்று எவ்வளவு முட்டாள்த்தனமாக நம்பிக் கொண்டிருந்தேன் என்று அப்போது நொந்துக் கொண்டேன்.//

    I too was in the same boat like you. When I interacted with our fellow tamilians(i mean from India) here in Canada, after a few minutes of introduction, the next question they ask is whats your caste? For your reference, these people are well educated and well exposed to different cultures.

    பதிலளிநீக்கு
  17. பெரியாரின் அத்தனை கொள்கையையும் கண்மூடி ஏற்பவனல்ல நான். ஆனால், கடவுள் இல்லை என்பதை மனிதனையும், சாதிகளையும் எவ்வளவு ஆராய்ந்து, நொந்து போய் அவர் சொல்லியிருக்க வேண்டும் என்பதை அறிகிறேன்.

    பதிலளிநீக்கு
  18. எழுதுவதற்கு கூச்சமாக இருந்தாலும் சாதி ரீதியான விளக்கம் இந்த நிலையை விளக்குவதற்கு தேவை.அதிமுக வில் வெற்றி பெற்ற எம் எல் ஏ க்களில் 28 (மொத்தம் 46 ) பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்.அடுத்ததாக வன்னியர்கள் 25 (மொத்தம் 39 ) ,அடுத்து முக்குலத்தோர் 24 (மொத்தம் 36 ),கொங்கு வெள்ளாளர் 20 (மொத்தம் 29 ).மந்திரிகளில் எட்டு பேர் கொங்கு வெள்ளாளர்,ஆறு பேர் முக்குலத்தோர் (கொங்குவை விட நாம் கம்மியா என்று சசிகலாவிடம் அவர்கள் சண்டையிட்டதாகவும் ஆனால் தொடர்ந்து கொங்கு பகுதிகளில் அதிமுக வெற்றி பெறுவதால் தரபடுகிறது என்று சமாதான படுத்த பட்டதாகவும் கேள்வி.வன்னியர் ஐந்து பேர் மந்திரிகள்.அதிக எம் எல் ஏ க்களை தந்த தாழ்த்தப்பட்ட சமூகம் பெற்றது இரண்டு.
    கட்சியிலும்,மந்திரிகளிலும் ,மாவட்ட செயலாளர்களிலும் சரியான பிரதிநிதித்துவம் தரப்படாத நிலை உள்ளதே சாதி வெறிக்கு காரணம்.இது தான் சமூக நீதியா.கட்சிகளில் எத்தனை மாவட்ட செயலாளர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் ,அவர்கள் ஏன் அந்த பதவிக்கு வருவதில்லை,இல்லை அம்மா தருவதில்லை என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பி உள்ளதா
    சசிகலாவால் அதிமுக நம் கட்சி என்ற எண்ணம் முக்குலத்தோர் இடம் உள்ளது.அந்த எண்ணம் மாறும் வகையில் செயலலிதா செயல்படாத வரையில் இந்த கலவரங்களில் காவல் துறை ஒரு சமூகத்தின் பக்கம் தான் சார்ந்து நிற்கும்
    தவறு ஜெயலலிதாவிடம் உள்ளது என்று எத்தனை ஊடகங்கள் எழுதின.எதற்காக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த ஒன்றிரண்டு மந்திரிகளும் ஆதி திராவிடர் நல துறை ,கால்நடை துறை தவிர வேறு எதற்கும் மந்திரிகளாக ஆக்கபடாம இருக்கிறார்கள்.முக்கியமான மந்திரி பதவிகள்,காவல் துறை பதவிகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் அதிக அளவில் செல்வதை ஊடகங்கள் ஏன் கேட்பதில்லை.பிராமணர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று தானே இயக்கங்கள் தோன்றின.எங்கள் தலைவர் சாதி பார்ப்பவர் அல்ல எனபது நல்ல விஷயம் தானே.அதை வைத்து ஏன் தி மு க பிரச்சாரம் செய்வதில்லை.தேவர்களின் ஒட்டு போய் விடும் என்று பயமா.சசிகலாவால் அதிமுக நம் கட்சி என்ற எண்ணம் முக்குலத்தோர் இடம் உள்ளது.அந்த எண்ணம் மாறும் வகையில் செயலலிதா செயல்படாத வரையில் இந்த கலவரங்களில் காவல் துறை ஒரு சமூகத்தின் பக்கம் தான் சார்ந்து நிற்கும்.
    தைரிய லட்சுமியாக இடங்களை அறிவித்து கொள்வார்,எந்த கட்சி,மத்திய மந்திரியாக இருந்தாலும் பயப்படாமல் முறைப்பார் என்று பல பிம்பங்கள் உள்ள தலைவி ஏன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு அளவு கடந்து பரிவு காட்டுகிறார் என்று ஏன் ஊடகங்கள் எழுதுவதில்லை.அவர்களில் பலர் ஊடகத்துறையில் இருப்பதால் மறைக்கபடுகிறதா.
    ஏன் எல்லா (அனைத்து சாதி மதங்களை உள்ளடக்கிய,மறுக்கும்) இயக்கங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களில் பொறுப்புகள் வகிக்கும் நிலையில் உள்ளவர்கள் விரல் விட்டு எண்ணும் நிலையில் உள்ளன.இரண்டு திராவிட கட்சிகளும் உதவி சபாநாயகர் பதவி தாழ்த்தப்பட்டவர்களுக்கு தருவதை வழக்கமாக வைத்துள்ளன.அது வேண்டாம் கல்வி,உள்ளாட்சி துறை,பொதுப்பணி,போக்குவரத்து,சுகாதாரம் போன்றவற்றை அவர்களுக்கு தருவதை வழக்கமாக வைத்து கொள்ளுங்கள் என்று ஏன் யாரும் குரல் எழுப்பவில்லை.இதை விட அதிகமான துறைகள் ஒரே சாதியிடம்,குடும்பத்திடம் இருக்கும் போது இது சாத்தியமில்லாத ஒன்றா

    பதிலளிநீக்கு
  19. லக்கி, கீழ்க்கண்ட சொற்களில் ஒற்றுமிகக் கூடாது - ஒற்றுகளை (ஒற்றுக்களை அல்ல!!) எடுத்துவிடுங்கள்-

    நொந்து(க்) கொண்டேன்

    உரத்த(க்) குரல்

    வாழ்ந்து(க்) கொண்டிருப்பவன்

    குடியரசு(த்)தின

    பதிலளிநீக்கு
  20. // தலித் மதம் மாறினாலும் தலித்தாகவே இழிவுப்படுத்தப் படுகிறான். நாடாரோ, தேவரோ மதம் மாறினாலும், செல்லும் மதத்திலும் தன் சாதியப்பெருமையை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறான்//

    அப்படின்னா மதத்துக்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம். மதத்தை ஒழிக்காமல் ஏன் சாதியை ஒழிக்க முடியாது. நீங்க சொல்ல வர்றது புரியலியே. உங்களால் மதம் மாற முடியும். ஆனா சாதி மாற முடியுமா. மதத்தை ஒழிச்சாலும் சாதி இருக்கத்தான் செய்யும். இது வேற அது வேற.

    உங்களுக்கு இந்த விசயத்துல பார்ப்பனன்களை நேரடியா குத்தம் சொல்ல முடியல. ஏன்னா இது மத்த உயர் சாதி(??) மக்கள் பண்ற வேலை. அப்ப என்ன பண்ணலாம். மதத்த சொல்ல வேண்டியதுதான். இளிச்ச வாய இந்து-தான் என்ன சொன்னாலும் கேட்டுக்குவான்.

    இதைத்தானய்யா உங்க தலிவரு ரொம்ப நாளா ட்ரை பண்ணாரு. நீங்களும் பண்ணுங்க. நீங்கல்லாம் secularism பேசுவீங்க, பேசுங்க.

    பதிலளிநீக்கு
  21. பொத்தான்பொதுவா எழுதிறத விடுங்க சார். பூவண்ணன் சொல்றது எவ்ளோ தெளிவா இருக்கு. முதல்ல உங்க திமுக அனுதாபி போர்வைல இருந்து வெளிய வாங்க. அப்புறந்தான் உங்களுக்கு மித்த விஷயம் புரிய ஆரம்பிக்கும். இல்லைன்னா நீங்களும் ஒரு pseudo communist or a pseudo secularist மாதிரிதான் சிந்திக்க முடியும்.

    பதிலளிநீக்கு
  22. தென் மாவட்டங்களில் தலித் மக்கள் கலவரம் செய்தார்களாம்!!ஏன் செய்தார்கள்?பிற்பட்ட மக்களின் தொடர் தீண்டாமை தொல்லைகளால் ஏற்பட்ட குமுறல் வன்முறையாக வெடித்துள்ளது !!தலித் மக்களை ஓரம்கட்டி பிற்பட்ட மக்களை மட்டும் எழுச்சி பெற செய்த திராவிட அரசியலால் வந்த விளைவு இது!இதை துவக்கி வைத்த பெருமை பெரியாரையே சாரும்!!இதை சொன்னா நம்ம மேல பாயுறாங்க!!யோவ உண்மையாதான் சொல்றேன்!
    **********************************************************************************
    ஒரு சின்ன சாம்பிள்.பெரியார் பேசியது:
    தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்தினால் தாழ்த்தப்பட்டவர்கள் என்ன செய்ய
    வேண்டும் என்று ஈவேரா கூறுகிறார் :-
    ‘‘உங்களை யாராவது கிராமவாசிகள் துன்புறுத்தினால், இழிவாய் நடத்தினால் எதிர்த்து நிற்க வேண்டும். முடியாவிட்டால் வேறு பட்டணங்களுக்குக் குடியேறிவிட வேண்டும். அங்கும் ஜீவனத்திற்கு மார்க்கமில்லாவிட்டால் இம்மாதிரியான கொடுமையான மதத்தை உதறித் தள்ளிவிட்டு சமத்துவமுள்ள மதத்திற்குப் போய்விட வேண்டும். அதுவும் முடியாவிட்டால் வெளிநாடுகளுக்காவது கூலிகளாய்ப் போய் உயிரையாவது விட வேண்டும். இம்மாதிரியான உறுதியான முறைகளைக் கையாளத் துணியவில்லையானால், உங்கள் மீது சுமத்தப்பட்ட இழிவு சுலபத்தில் ஒழியாது என்றே சொல்லுவேன்.’’ (குடியரசு 16-6-1929)
    இதுதான் அவருடைய தீர்வு. இதில் கிராமவாசிகள் யார்? பிராமணர்களா? பிற்படுத்தப்பட்டவர்களா? கிராமவாசிகள் தொண்ணூற்றைந்து சதவீதம்பேர் பிற்படுத்தப்பட்டவர்கள்தானே? அவர்கள் தானே தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துகிறார்கள்? அதை நேரடியாக சொல்லாமல் கிராமவாசிகள் என்ற அடைமொழி கொடுப்பது ஏன்? அவர்களை காப்பாற்றுவதற் காகத்தானே? இதே அந்த கிராமவாசியின் இடம் அக்ரஹாரமாக இருந்தால் பிராமணர்கள் என்றுதானே சொல்லியிருப்பார்? பின் ஏன் பிற்படுத்தப்பட்டவர்களை நேரடியாக சொல்லாமல் கிராமவாசிகள் என்று சொல்ல வேண்டும்?

    ஏனென்றால் அவர்கள் தன் சமுதாயம் அல்லவா?

    பதிலளிநீக்கு
  23. ananku
    சரியா சொன்னீங்க சார்!!இந்த பெரியார் வியாதிங்க பார்ப்பனர்களை மட்டுமே தாக்கி பேசினார்!!ஏன்னா மத்த பிற்பட்ட சாதிகள் மற்றும் பிற உயர் சாதிகளை கண்டித்தால் உடனே அரிவாள் எதுத்துகொண்டு வந்திடுவாங்க!!பெரியார் அம்புட்டு தைரியசாலி இல்லை!!அதனால் அடக்கி வாசிச்சார்!!

    பதிலளிநீக்கு
  24. /தென்மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வருவதைப் போன்ற சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம் சாதியை மறுப்பவனின் குரல் சற்று குறைத்தும், சாதியை ஏற்றுக் கொண்டவன் குரல் சற்று ஓங்கியும் ஒலிப்பதை உற்றுக் கவனித்தால் உணரமுடியும்/

    லக்கி தன்னை மட்டும் ஏதோ சாதியை மறுப்பதை போல பவனை செய்தால் குரல் சற்று குறைந்துதான் ஒலிக்கும்; அதற்கு யாரும் பரிகாரம் தேட முடியாது; அதன் பிரச்சனை வேறு.

    மற்றபடி சாதியை மறுப்பவர்கள் எதிர்ப்பவர்கள் எல்லோரும் மிக தீவிரமான குரலில் தென் மாவட்ட கலவரங்கள்/தாக்குதல்களின் போது தங்கள் குரலை பதிவு செய்துவருகிறார்கள். 90களின் மத்தியில் இருந்து இதை பற்றிய விவாதமும், எதிர்ப்பு கருத்தும் உருவாகியுள்ளது. இப்போதும் சாதியை உண்மையாக எதிர்க்கும் அனைவரும் எதிர்த்துதான் கருத்து சொல்லியுள்ளன்அர். சரியாக சொல்ல வேண்டுமானால் இப்பொது உரத்து ஒலிப்பது என்பது சாதிய எதிர்ப்பில் எந்த சால்ஜாப்பும், சமரசமும் கிடியாது என்று காட்டுவதன் லிட்மஸ் டெஸ்ட். லக்கி அதில் சரியான முறையில் பாஸாகவில்லை அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  25. பிற்படுத்தப்பட்டவர்கள்/தலித் மோதலின் போது பார்பனர்கள் தங்கள் அரசியலுக்கு ஆதரவாக தர்க்கத்தை சமைத்தால், அது ஒன்றும் இயற்கைக்கு முரணானது அல்ல. சுயநலம், சுய அரசியல் சார்ந்து அனைவரும் செய்யும் ஒரு அரசியல். இதை கூட செய்யாத அளவிற்கு இருக்க வேண்டும் என்றால் மிக பரந்த மனம் வரவேண்டும். அது பொதுவாக இல்லாததுதானே நம் சூழலின் பிரச்சனை.

    பார்பனர்களின் அரசியலை மறுப்பதும், எதிர்ப்பதும் வேறு. ஆனால் அதற்கு முழு காரணமும் பிற்படுத்தப் பட்டவர்களின் ஜாதிவெறியும், அதற்கு சப்பைக்கட்டு எதையாவது கட்டுபவர்களும்தான் என்பதில் முதலில் தெளிய வேண்டும். ஆகையால் எந்த சமரசமும் இன்றி பிற்படுத்தப்பட்டவர்களின் ஜாதி வெறியை கண்டித்துவிட்டு, அதில் சால்ஜாப்புகள் இன்றி, சமரசம் இன்றி நிலைபாடு எடுத்துவிட்டு, பிறகு நிச்சயமாக பார்ப்பனர்கள் செய்யும் அரசியல் பற்றி பேசலாம். இல்லையெனில் அவர்களின் சாதி எதிர்ப்பில் ஓர்மையும், நேர்மையும் ரொம்ப சந்தேகத்திற்கிடமானது.

    பதிலளிநீக்கு
  26. ரொம்ப நாள் கழிச்சி லக்கி போட்ட கப்பித்தனமான பதிவு. திட்டனும்னா நக்கல் பண்ணனும்னா இருக்கவே இருக்கு அவாள் சாதி, இவங்க மனசுல நெனச்சிட்டாங்களாமாம் அதனால் தான் சாதி வெறி நிலவுதாம்!

    முன்பு சட்டக்கல்லூரி வன்முறை நடந்தப்பவும் இப்படித்தான் ஒரு உளறல் கருத்தை சொன்னார் லக்கி. அது என்னன்னா, கல்லூரிகளில் படிக்க வரும் தலித் மாணவர்களை பார்த்து அருவாள் சாதி மாணவர்கள் அப்படி இப்படி என திட்டுவார்களாம் ஆனால் அதுபோல தலித் மாணவர்கள் திட்டமுடியாதாம் அதனால் தான் அவர்களின் வன்முறை சரியானது என்பதுப்ல் சொன்னார். இல்ல நான் தெரியாம தான் கேட்கிறேன், அருவாள் சாதியை சேர்ந்தவர்களை திட்ட வும் வகைதொகையாக புதுப்புது வார்த்தைகளை கண்டுபிடித்து திட்டவேண்டியது தானே!

    அரசியல்வாதிகளும் சும்மா இருப்பதில்லை. ஒரு கட்சி தலித்களை தூண்டி விடுகிறது இன்னொரு கட்சி அருவாள் கூட்ட சாதியை. திருந்தவேண்டியது அரசியல் தலைவர்கள் தான்!

    பதிலளிநீக்கு
  27. அன்பின் ரோஸாவஸந்த்!

    //எந்த சமரசமும் இன்றி பிற்படுத்தப்பட்டவர்களின் ஜாதி வெறியை கண்டித்துவிட்டு, அதில் சால்ஜாப்புகள் இன்றி, சமரசம் இன்றி நிலைபாடு எடுத்துவிட்டு, பிறகு நிச்சயமாக பார்ப்பனர்கள் செய்யும் அரசியல் பற்றி பேசலாம். //

    அதாவது பிரம்மனின் இடுப்புக்குக் கீழே பிறந்தவர்களின் சாதிவெறியை முதலில் ஒழித்துவிட்டு, பிற்பாடு நேரமிருந்தால் தலையில் இருந்து பிறந்தவர்களின் சாதியரசியலை பார்த்துக் கொள்ளலாம் என்று ரோஸாவஸந்த் சொல்வதாக புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது :-)

    குலம், கோத்ரம், சடங்கு, சம்பிரதாயம், லொட்டு, லொசுக்கு இதையெல்லாம் ஒழிக்காமல் சாதிவெறியை குறைச்சிட, ஒழிச்சிட முடியுமான்னு நம்பறீங்களா சார்? இதையெல்லாம் சமூகத்தின் கட்டமைப்பாக ஏற்படுத்தி, அதை தாங்கிக் கொண்டிருப்பது யார்?

    நீங்க என்ன சொல்றீங்கன்னா, முதல்லே கிளைகளை வெட்டிட்டு, அப்புறமா நேரம் கிடைச்சா ஆணிவேருக்கு அமிலம் ஊத்தலாம்னு சொல்றீங்க.

    கிளைகளை வெட்ட வெட்ட, அது முளைச்சிக்கிட்டே இருக்கும் சார். வேரை அழிக்காம வேற எது எதையோ வெட்டச் சொல்றதுதான் சால்ஜாப்பு :-)

    //லக்கி தன்னை மட்டும் ஏதோ சாதியை மறுப்பதை போல பவனை செய்தால்//

    கவலையே படாதீங்க. இந்த மேட்டருலே நான் உங்களுக்கு போட்டியா வந்துறவே மாட்டேன் :-)

    பதிலளிநீக்கு
  28. சுமாரான பதிவு தான்.
    பதிவுக்கு நன்றி.

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    பதிலளிநீக்கு
  29. Unmaiyil sathi vanmurai Brahminala thaan varuthu u r correct Yuva..how come u r a reporter and a blogger?

    பதிலளிநீக்கு
  30. யுவா, கடவுளை மறுப்பதற்கு உங்களுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அது போல கடவுளை ஏற்றுக்கொள்வதற்கும் மற்றவர்களுக்கு உரிமையுள்ளது. தனி நபர் ஒருவருக்கு தன்னை இந்த சமுதாயத்தில் எப்படி அடையாளம் காட்டிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை அவரது பிறப்புரிமை. இதி நீங்களோ,நானோ சட்டமோ தலையிட முடியாது,கூடாது.

    இப்போது நீங்கள் மற்றவர்களின் தனிப்பட்ட சொந்த விருப்பு, வெறுப்புகளில் தலையிடுகிறீர்கள். உங்கள் கொள்கைக்கு ஒத்துவராவிட்டால் அவர்களை ஏதோ இந்த சமூகத்தின் எதிரிகளை போல அடையாள காட்டுகிறீர்கள். தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் செய்வதும் இதை தான்.

    காடவுளும், மதமும் ஒவ்வொரு நாட்டின் பண்பாட்டின் வரலாற்றின் கலாச்சாரத்தின் அடையாளம். ஜாதியும் குலமும் ஒவ்வொரு தனி மனித முன்னோர்களின்,குடும்ப பாரம்பர்யத்தின் அடையாளம்.

    ஒருவனுக்கு சுய அடையாளம் எப்படியிருக்கவேண்டும் எனபது அவனது சொந்த விருப்பம். அதை அவன் முடிவி செய்துகொள்ளட்டும். நீங்களோ நானோ அதில் தலையிடுவதற்கு உரிமையில்லை.

    இது ஒருவருடைய தனிப்பட்ட முகம்.அடையாளம். இதை ஏன் நாம் துறக்க வேண்டும்??? வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டால் வீட்டையேவா கொளுத்துகிறோம். பாம்பை அடையாள கண்டுகொண்டு அடித்து கொல்லுவதில்லையா??

    தனது அடையாளத்துக்கு ஒத்தவர்களை கூட்டம் சேர்த்துக்கொண்டு சமுதாயத்தில் மற்றவர்களை தாழ்த்துவதற்கு இங்கே யாருக்கும் உரிமையில்லை. இது தான் சாதிவெறி. இப்போது நீங்கள் செய்ய முயற்சிப்பதற்கு இதற்கும் பெரிய வித்யாசம் இல்லை.

    நமது இந்திய சமூகத்தின் இப்போதைய கட்டமைப்பை அப்படியே பாதுக்காத்து இதனுள் சீர்படுதப்படவேண்டிய விஷ்யங்களை அடையாளம் கண்டு , நமது இந்திய சமுதாயம் தனது தனித்தன்மையான அடையாளத்தை இழக்காமல் வருங்காலத்தில் உலக சமுதாயத்தோடு போட்டிபோட்டு அவர்களிடையே தனது இருப்பை நட்புணர்வுடனும் சுய அதிகாரதினுடனும் திறம்பட வெளிப்படுத்த செய்ய, அதற்கான வழிமுறைகளை கண்டறிய நாம் நமது சிந்தனைகளை குவிக்க வேண்டும்.

    பெரியார் வாழ்ந்த காலத்தில், அவரது தலைமுறைக்கு பெரியாரை போன்ற ஒரு மாறுபட்ட சிந்தனையாளர் தேவைப்பட்டார் எனபது உண்மை. ஆனால் இன்றைய புதிய தலைமுறைக்கு பெரியாரின் கருத்துக்கள் நேரடியாக பொருந்தாது. அவை தற்காலத்துக்கு பொருந்தும் வகையில் REFINE செய்யப்பட வேண்டும்.

    இந்த பதிவு ஒரு ECCENTRIC பதிவாகவே எனக்கு படுகிறது. நீங்கள் உங்கள் பதிவுகள் மூலம் ஒரு விசயத்தை SENSATIONALIZE செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தாலும், அல்லது உங்கள் உண்மையான கருத்து இதுவாக இருந்தாலும் நான் சொல்ல வரும் ஒரே வாக்கியம் I'M SORRY, YOU FAILED!

    பதிலளிநீக்கு