28 செப்டம்பர், 2011

மணிவண்ணன்

நானெல்லாம் ‘அ'ன்னா ஆவன்னா படிக்க ஆரம்பித்தபோதே மணிவண்ணன் நன்றாக தமிழில் எழுத ஆரம்பித்து விட்டான். கிளாஸில் யாரோடும் பேசமாட்டான். முண்டகண்ணி கவிதாவுக்கு பக்கத்தில் தான் உட்காருவான். முண்டகண்ணியும் முசுடு, இவனும் முசுடு என்பதால் இரண்டு பேரும் டிஸ்டர்பன்ஸ் இல்லாமல் உட்கார்ந்திருப்பார்கள்.

ஸ்லேட்டில் தினமும் நூற்றியெட்டு வரிகள் எழுதுவான். மிஸ் ப்ளாக்போர்டில் எழுதிப்போடுவதை தான் எழுதுகிறானா என்று எட்டிப் பார்த்தால் ஸ்லேட்டு முழுக்க ஸ்ரீராமஜெயம் எழுதி வைத்திருப்பான். சில நாட்கள் காலையில் எழுத ஆரம்பித்து மதியமே முடித்துவிடுவான். வழியில் வந்தபோது பறித்து வைத்திருந்த கோவைக்காயை டஸ்டராக உபயோகித்து ஸ்லேட்டை க்ளீனாக்கி மதிய உணவுக்கு பிறகு மீண்டும் எழுத ஆரம்பிப்பான் ‘ஸ்ரீராமஜெயம்'

”அ.. ம்.. மா” “ஆ... டு” என்று அப்போதுதான் நாங்கள் எழுத ஆரம்பித்திருந்தோம். இவனுக்கு மட்டும் எப்படி ஸ்ரீராமஜெயம் எல்லாம் எழுதவருகிறது என்று ஆச்சரியம் தான். ஆத்தில் அவன் தோப்பனார் எழுத கற்றுக் கொடுத்தாராம். பாழாப் போன மனுஷன் 'அ. ஆ. இ'யோ, ABCDயோ கற்றுத் தந்திருந்தால் அவனுக்கு உபயோகமாக இருந்திருக்கும்.

நாங்கள் வளர, வளர மணிவண்ணனும் தென்னை மரம் மாதிரி எங்களோடேயே வளர்ந்தான். ஐந்தாவது வகுப்பு வந்தபோது ‘தாஜ்மகாலை ஷாஜகான் கட்டினான்' என்று பென்சிலால் நோட்டில் எழுதிக் கொண்டிருந்தோம். மணிவண்ணனோ மந்திரங்கள், ஸ்லோகங்களை நோட்டில் கிறுக்க ஆரம்பித்தான். தமிழில் தான் எழுதுவான், ஆனால் படித்துப் பார்த்தால் தமிழ் போல இருக்காது. அது சமஸ்கிருதம், உங்கவாவுக்கெல்லாம் புரியாது என்பான்.

எழுத்து, எழுத்து, எழுத்து - அதுதான் மணிவண்ணன். அவன் வாய்திறந்து பேசியதை விட லட்சம் முறை அதிகமாக எழுதியிருப்பான் போலிருக்கிறது. தொடர்ந்து எழுதி, எழுதி பயிற்சி பெற்றிருந்ததால் மணிவண்ணனின் எழுத்துக்கள் முத்து முத்தாக இருக்கும்.

ஸ்ரீராமஜெயமும், ஸ்லோகங்களுமாக வகுப்பறையில் கிறுக்கிக் கொண்டிருந்தாலும் பயல் படிப்பில் கெட்டி. அவன் ஆத்துலே எல்லாரும் படிச்சவாளா இருந்ததால் வீட்டிலேயே எல்லாப் பாடத்தையும் படித்துவிடுவான். நாங்கள் தான் வீட்டிலும் படிக்காமல், கிளாஸிலும் படிக்காமல் ரோட்டில் நின்றோம். எங்க செட்டு கொஞ்சம் ஏடாகூடமான செட்டு என்பதால் எங்களைப் பார்த்தாலே மணிவண்ணனுக்கு பயம். அவன் கொஞ்சம் கலராக வேறு இருப்பான், எங்கள் செட்டிலோ ரொம்பவும் மாநிறமாக இருந்த நான் தான் அதிகபட்ச கலர்.

எக்ஸாம் எழுதும்போது அடிஷனல் பேப்பர் அதிகமாக வாங்குபவன் எங்கள் பள்ளியிலேயே அவன் மட்டும் தான். வாங்கிய பேப்பரையே எழுதமுடியாமல் நாங்களெல்லாம் அவஸ்தை பட்டுக் கொண்டிருக்க அடிஷனல் ஷீட்டாக வாங்கி எழுதிக் கொண்டேயிருப்பான். ஒருவேளை பேப்பர் முழுக்க ஸ்ரீராமஜெயம் தான் எழுதுகிறானோ என்று கூட சந்தேகப்படுவோம். ஆனாலும் தமிழ்ச்செல்விக்கு அடுத்ததாக நல்ல மார்க்கு வாங்குபவன் மணிவண்ணனாகதான் இருப்பான். அவன் அனாயசமாக தேர்வுகளை எழுதித்தள்ள, நாங்களெல்லாம் ரொம்பவும் கஷ்டப்பட்டு ஒவ்வொரு க்ளாஸாக தாண்டிவந்தோம். பத்தாம் வகுப்பு வருவதற்குள் எங்களுக்கெல்லாம் தாவூ தீர்ந்துவிட்டது.

பரவாயில்லை. பத்தாங்கிளாஸ் வந்தபோது மணிவண்ணனுக்கு ரெண்டு, மூன்று நண்பர்கள் சேர்ந்துவிட்டார்கள். ஆனாலும் படிப்பு பற்றி மட்டும் தான் பேசுவார்கள். மாறாக எங்கள் செட்டோ படிப்புத் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருந்தது. தம் அடிக்க ஆரம்பித்தோம். தண்ணியடிப்பது குறித்துக்கூட திட்டங்களை தீட்டினோம்.

இந்நிலையில் தான் எங்கள் செட்டுக்கு பள்ளியில் பெயர் கெட ஆரம்பித்தது. டாய்லெட்டில் காவேரி டீச்சர் குறித்து ஆபாசமாக கரியில் யாரோ எழுதிவைக்க அது எங்கள் செட்டில் ஒருவன் தான் என்று பி.டி.மாஸ்டருக்கு சந்தேகம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் எங்களை அடித்து, உதைத்து யாருடா எழுதினது என்று போலிஸ் இன்ஸ்பெக்டர் மாதிரி மிரட்டிக் கொண்டிருந்தார். இவரது மிரட்டலும், அடி உதையும் அதிகமாக, அதிகமாக பிடி மாஸ்டரை, காவேரி டீச்சரோடு இணைத்து இன்னும் பச்சையாக ஸ்கூல் காம்பவுண்டில் கரியில் எழுதப்பட்டது.

”நான் எழுதலை, ஒருவேளை சேகர் எழுதியிருப்பானோ? செந்தில் எழுதியிருப்பானோ” என்று என் நண்பர்கள் மீதே நான் சந்தேகப்பட, அவன்களோ ‘ஒருவேளை குமார் எழுதியிருப்பானோ?” என்று என் மீது சந்தேகப்பட.. எங்களது பரஸ்பர புரிந்துணர்தல் கேள்விக்குறியானது.

”டாய்லெட்டுலே அசிங்கமா எழுதினவன் மாட்டிக்கிட்டாண்டா” சாப்பிட்டுவிட்டு க்ளாஸ் ரூமிலேயே குட்டித்தூக்கம் போட்டுக் கொண்டிருந்த எங்களை சுருளி சுரேஷின் குரல் தட்டி எழுப்பியது. பதட்டப்பட்டு எழுந்த நான் பக்கத்தில் சேகரும், செந்திலும் இருக்கிறார்களா என்று செக் செய்துக் கொண்டேன். ரெண்டு பேரும் இருந்தார்கள். அப்போ எழுதினது வேற ஒரு காவாலி!

ஹெட்மாஸ்டரின் ரூமில் முட்டி போட்டுக் கொண்டிருந்தவன் வேறு யாருமல்ல! நம்ம மணிவண்ணனேதான். அடப்பாவி ஸ்ரீராமஜெயம் எழுதற கையாலே இப்படியெல்லாம் எழுதியிருக்கானே என்று ஸ்கூலே ஆச்சரியப்பட்டது, அதிர்ச்சியடைந்தது. எந்த புத்துலே எந்த பாம்போ என்று நினைத்துக் கொண்டோம். நாங்களெல்லாம் காவேரி டீச்சர் குறித்து வெளிப்படையாக கமெண்டு அடிக்க, பேசமுடியாமல் எல்லாவற்றையும் மனதுக்குள் போட்டு வைத்திருந்த அவனோ டாய்லெட்டில் எழுதி தன் மன அரிப்பை தீர்த்துக் கொண்டிருக்கிறான்.

அதன்பின்னர் அவனை வகுப்பறை தவிர்த்து வெளியே அவ்வளவாக காணமுடியவில்லை. தலைகுனிந்தே பள்ளிக்கு வருவான், போவான். யாரிடமும் பேசமாட்டான். பத்தாவது பொதுத்தேர்வு வந்தது. ஒருவரையொருவர் காப்பி அடித்து எங்கள் செட்டு ஓரளவுக்கு தேறியது. நல்ல மார்க் வாங்கிய அவனோ, எங்கள் பள்ளியிலேயே மேல்நிலையை தொடராமல் வேறு பள்ளிக்கு டி.சி. வாங்கிப் போய்விட்டான். அவன் பட்ட அவமானம் இன்னும் ஒரு ரெண்டு வருடத்தை எங்கள் பள்ளியில் கழிக்க இயலாமல் செய்துவிட்டது.

* * * * * *

பஞ்சாயத்து போர்டில் ஒருவன், விளம்பர நிறுவனத்தில் ஒருவன், சொந்தமாக மெடிக்கல் ஷாப் வைத்திருப்பவன், லெதர் பிசினஸ் செய்பவன், கந்துவட்டி விடுபவன், பத்திரிகைக்காரன் என்று எங்கள் பள்ளி நண்பர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வேலையில் இப்போது செட்டில் ஆகிவிட்டோம். எப்போதாவது யாருக்காவது கல்யாணம், காட்சி என்றால் மட்டும் சந்திப்பதுண்டு. மணிவண்ணனை அதன்பின்னர் யாருமே கண்டதில்லை.

‘அவன் நிதி ஸ்கூல்லே படிக்கிறான்' ‘காலேஜ் சேந்துட்டான்' ‘பம்பாயிலே ஒரு பெரிய வேலையிலே இருக்குறான்' ‘மெட்ராஸிலேயே சொந்தக் கம்பெனி ஆரம்பிச்சிட்டான்’ என்று அவ்வப்போது அவன் குறித்து செய்திகள் தெரியவருமே தவிர்த்து அவனோடு யாருக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் தான் இருக்கிறோம்.

எனக்கு மட்டும் நன்றாக தெரியும். அவனால் எதையாவது எழுதாமல் இருக்க முடியாது. ஏதாவது எழுதிக்கொண்டோ, கிறுக்கிக் கொண்டோ தானிருப்பான். யாருக்கு தெரியும்? ஒருவேளை இப்போது பிளாக்கிலோ, கூகிள் பஸ்ஸிலோ, ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ யாரையாவது அவதூறாக, ஆபாசமாக திட்டிக் கொண்டிருக்கலாம்.

16 கருத்துகள்:

  1. //ஒருவேளை இப்போது பிளாக்கிலோ, கூகிள் பஸ்ஸிலோ, ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ யாரையாவது அவதூறாக, ஆபாசமாக திட்டிக் கொண்டிருக்கலாம். //

    இல்ல கொமாரு

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பதிவுக்கு நன்றி.......

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    பதிலளிநீக்கு
  3. மணிவண்ணன் நீங்க தானா அது

    பதிலளிநீக்கு
  4. ////@மணிவண்ணன் said...

    //ஒருவேளை இப்போது பிளாக்கிலோ, கூகிள் பஸ்ஸிலோ, ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ யாரையாவது அவதூறாக, ஆபாசமாக திட்டிக் கொண்டிருக்கலாம். //

    இல்ல கொமாரு
    ////

    Oh my God , இந்த மணிகண்டன் , அந்த மணிகண்டனா ?

    சொல்லுங்க யுவ . . .

    பதிலளிநீக்கு
  5. மணிவண்ணன் said...
    //ஒருவேளை இப்போது பிளாக்கிலோ, கூகிள் பஸ்ஸிலோ, ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ யாரையாவது அவதூறாக, ஆபாசமாக திட்டிக் கொண்டிருக்கலாம். //

    இல்ல கொமாரு
    உண்மையிலேயே நீங்கதானா அது?

    பதிலளிநீக்கு
  6. //எங்கள் செட்டிலோ ரொம்பவும் மாநிறமாக இருந்த நான் தான் அதிகபட்ச கலர்.//
    நான் வெள்ளை! நான் வெள்ளை!

    பதிலளிநீக்கு
  7. oru ayyar payan paakkathan nallavan maathiri iruppan aana pakka fraudunu solringa paarunga athu 100% true

    பதிலளிநீக்கு
  8. //
    //ஒருவேளை இப்போது பிளாக்கிலோ, கூகிள் பஸ்ஸிலோ, ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ யாரையாவது அவதூறாக, ஆபாசமாக திட்டிக் கொண்டிருக்கலாம். //

    இல்ல கொமாரு//
    My God! சிறுகதை தொடர்கதையாகி விட்டதா?

    பதிலளிநீக்கு
  9. // பாழாப் போன மனுஷன் 'அ. ஆ. இ'யோ, ABCDயோ கற்றுத் தந்திருந்தால் அவனுக்கு உபயோகமாக இருந்திருக்கும். //

    நச்...

    பதிலளிநீக்கு
  10. // அது சமஸ்கிருதம், உங்கவாவுக்கெல்லாம் புரியாது என்பான். //

    அடி செருப்பால...

    பதிலளிநீக்கு
  11. ஒரு வேளை அது உ த எ வாக இருக்குமோ

    பதிலளிநீக்கு
  12. உத்தரப் பிரதேசத்தில் எப்படி இந்துத்துவர்கள் (பாஜக, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி) எளிய கதைகளை உருவாக்கி, அவற்றை எளிய மக்களிடம் பரப்புவதன்மூலம் மக்களுக்கிடையே பிரிவினைகளை வளர்க்கிறார்கள் என்பது தொடர்பாக ஒரு புத்தகத்தை எடிட் செய்துகொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. பத்ரி சார்!

    ஏன் உத்தரப் பிரதேசத்துக்கு போகணும். நாமதான் தமிழிலேயே நிறைய பண்ணிக்கிட்டிருக்கோமே? :-)

    பதிலளிநீக்கு
  14. i don't think this story has an essence. guess you wrote it for the surprise end. looks half baked

    பதிலளிநீக்கு