2 ஆகஸ்ட், 2010

மொழி!

விமான அறிவியலின் பிரபலமான கோட்பாடு ஒன்று உண்டு. ‘கனமான உடம்பும், மிக லேசான இறக்கைகளும் கொண்ட கருவண்டால் இயந்திரவியல் தர்க்கத்தின்படி பறக்கவே இயலாது’. இந்த கோட்பாடு அறிவியலாளர்களுக்கு தெரியும். ஆனால் கருவண்டுகளுக்கு தெரியாது. எனவே அவை எப்படியோ பறந்துகொண்டுதான் இருக்கிறது.

பாலவித்யாலயா குழந்தைகளும் அப்படித்தான். அறிவியல் கருத்துபடி பிறவியிலேயே செவிக்குறைபாடு கொண்ட குழந்தைகள் வாய்பேச இயலாது. இந்தக் கருத்து அக்குழந்தைகளுக்கு தெரிவதற்கு முன்னரே பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இக்கருத்தை பாடத்தில் பயிலும்போது “நிஜமாவா?” என்ற கேள்வியோடு சிரித்துக்கொண்டே ஆச்சரியப்படுகிறார்கள்.

குழந்தை இயற்கை தரும் வரம். என்ன கோபமோ தெரியவில்லை. சிலருக்கு மட்டும் முழுமையான வரத்தை இயற்கை நமக்கு வழங்கிவிடுவதில்லை. செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பது இவ்வகையில்தான். ‘மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்துவான்’ என்று நாம் வாளாவிருந்துவிட்டால், குழந்தைகளின் எதிர்காலம் அதோகதிதான்.

’மொழி’ திரைப்படம் பார்த்திருப்பீர்கள். கதாநாயகி ஜோதிகா வாய்பேச இயலாதவராக மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அக்கதாபாத்திரத்தின்படி பார்த்தோமானால் அவர் வாய்பேச இயலாதவர் அல்ல. பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு கொண்டவர் என்பதால், ‘மொழி’யை பேசிப்பழக வாய்ப்பில்லாமல் ‘சாடை’ மொழி பேசுபவராக மாறிவிடுகிறார். இதுதான் எல்லோருக்குமே நடக்கிறது. வாய்பேச இயலக்கூடிய ஒருவர், செவித்திறன் குறைபாட்டால் வாழ்க்கை முழுக்க பேசாமலேயே வாழ்வது எவ்வளவு பெரிய அவலம்? பேச்சுமொழியற்றவர்கள் கல்வி கற்க இயலாமல் வாழ்வை தொலைப்பது சகிக்க இயலாத துயரம் இல்லையா?

2002ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் படி செவித்திறன் குறைபாடுள்ளோர்களில் 68 சதவிகிதம் பேர், மொழித்திறன் இல்லாததால் பள்ளிக்கே சென்றதில்லை. இவர்களில் 19.5 சதவிகிதம் பேர் மட்டுமே ஆரம்பப்பள்ளிக்கு செல்கிறார்கள். 7.6 சதவிகிதம் பேர் மட்டுமே நடுநிலைக்கும், 2.5 சதவிகிதம் பேர் மட்டுமே உயர்நிலைக்கும், 1.1 சதவிகிதம் பேர் மட்டுமே மேல்நிலைக்கும் போகிறார்கள். பட்டம் பெறுபவர்கள் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே.

பாலவித்யாலயா இந்த துயரத்தையும், அவலத்தையும் போக்குகிறது. அ, ஆ, இ, ஈ-யும், ஏ, பி, சி, டி-யும் கற்றுத்தரும் வழக்கமான பள்ளியல்ல இது. செவித்திறன் குறைந்த குழந்தைகளுக்கு மொழியை சொல்லித்தரும் பள்ளி. குழந்தை தமிழ் படிக்க வேண்டுமா அல்லது ஆங்கிலம் படிக்க வேண்டுமா என்று பெற்றோர் தேர்வு செய்துக் கொள்ளலாம். செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் ஒரே ஒரு மொழியில் கல்வியை பட்டம் வரை பெறலாம் என்று அரசு சலுகை தந்திருக்கிறது. மொழி மற்றும் பேச்சுத்திறனை கற்றுக்கொண்டால் மற்ற குழந்தைகளைப் போல கல்வியில் இவர்கள் எத்தகைய உயரத்தையும் எட்டலாம்.

பாலவித்யாலயாவின் நாற்பதாண்டு சேவையின் மூலமாக இன்று டாக்டரேட் முடித்தவர்கள், பொறியியல் படித்தவர்கள், நிர்வாகத்தில் உயர்கல்வி பெற்றவர்கள், ஆர்க்கிடெக்டுகள் மற்றும் ஏராளமான பட்டதாரிகள் உருவாகியிருக்கிறார்கள்.

பிறந்த குழந்தையிலிருந்து, இரண்டரை வயதுக்குள் இருக்கும் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் மொழிகற்க பாலவித்யாலயாவில் சேரலாம். பிறந்து 52 நாட்களே ஆன குழந்தை கூட இங்கே சேர்த்துக்கொள்ளப் பட்டிருக்கிறது. இங்கே கற்றுக்கொள்ள வேண்டியது குழந்தைகள் மட்டுமல்ல, பெற்றோர்களும்தான். இதுபோன்ற சிறப்புக் குழந்தைகளுக்கு எப்படி பால் கொடுப்பது, அவர்களோடு எவ்வகையில் தகவல்களை பரிமாறிக் கொள்வது போன்ற விஷயங்களை அம்மா, அப்பாவுக்கு ‘கவுன்சிலிங்’ கொடுக்கிறார்கள். அதிகபட்சமாக ஐந்து வயது வரை ஒரு குழந்தை இங்கே மொழியை கற்கும். பின்னர் மற்ற குழந்தைகள் படிக்கும் பள்ளியிலேயே சேர்ந்து கல்வி கற்கலாம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலவித்யாலயாவுக்கு வந்த மூன்று வயது ஹரிணி இப்போது நன்றாக வாயாடுகிறாள். ’ஹாய்’ சொல்கிறாள். காலையில் இரண்டு இட்லி சாப்பிட்டதையும், அம்மா சட்னியில் கொஞ்சம் உப்பு குறைவாக போட்டுவிட்டதையும் பற்றி சளசளவென சலம்புகிறாள். அவளோடு பேசிவிட்டு விட்டு விடைபெறும்போது தெரியாத்தனமாக ‘சாடை’ மொழியில் டாட்டா காட்டுகிறோம். “இங்கிருக்கும் குழந்தைகளோடு தயவுசெய்து சைகை மொழி பேசாதீர்கள். ஹியரிங் எய்டு போன்ற கருவிகளின் துணையோடு இப்போது அவர்களுக்கு ஓரளவு ஒலியை உணர்ந்துக் கொள்ள முடியும். உங்கள் உதட்டசைவை அவதானித்து, லிப் ரீடிங் முறையில் நீங்கள் பேசுவதையும் அவர்கள் புரிந்துக் கொள்வார்கள்” என்கிறார் பள்ளியின் முதல்வர் வள்ளி அண்ணாமலை.

முதலில், இங்கே சேர்க்கப்படும் குழந்தைகளின் செவித்திறன் பரிசோதனைக் கூடத்தில் சோதிக்கப்பட்டு, தகுந்த ‘ஹியரிங் எய்ட்’ பரிந்துரைக்கப்படுகிறது. அவ்வப்போது பரிசோதிக்கப்பட்டு ஹியரிங் எய்டின் முழுப்பலனையும் குழந்தை பெற வல்லுனர்கள் வழி செய்கிறார்கள்.

பின்னர் முன்பே சொன்ன பெற்றோருக்கான பயிற்சி. குழந்தை பள்ளிப் பருவத்தை முடிக்கும்வரை பெற்றோர்தான் குழந்தைக்கேற்ற உதவிப் பணியாளராக மாறியாக வேண்டும்.

இதற்குப் பின்னரே குழந்தைக்கு கேட்கும் திறன், மொழி, பேச்சு மற்றும் அறிவுத்திறன் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இவற்றை கற்றுத்தேறும் குழந்தைகள் ப்ரீ-கேஜி (பள்ளி முன்பருவக் கல்வி) நிலைக்கு உயர்கிறார்கள். இங்கே மற்ற திறன்களோடு மொழியை படிப்பது, எழுதுவது மற்றும் கணக்கு போடுவது ஆகியவற்றை சொல்லிக் கொடுக்கிறார்கள்.

மொத்தமே அவ்வளவுதான். பாலவித்யாலயாவில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள், அதிகபட்சம் 5 ஆண்டுகள் பயிற்சி பெறும் குழந்தைகள் நேரடியாக சாதாரணப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்துவிடலாம். மற்ற குழந்தைகளோடு சாதாரணமாகப் பேசவும், பழகவும், விளையாடவும் ஏற்றமுறையில் ஏற்கனவே அவர்கள் தயாராகி விட்டிருப்பார்கள். அவர்களது எதிர்காலத்தைப் பற்றி பெற்றோர் இனி கவலைப்பட வேண்டியதில்லை.

இதற்கெல்லாம் எவ்வளவு செலவு ஆகும் என்பதை சொல்ல மறந்துவிட்டோமே? “முழுக்க இலவசம். ஐந்து பைசா செலவழிக்க வேண்டாம். ஹியரிங் எய்ட் வாங்குவது மற்றும் பராமரிப்பதை மட்டும் பெற்றோர் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு பேச்சுத்திறனையும், மொழித்திறனையும் வளரச்செய்து அவர்களை சாதாரணக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் சேர்த்து ஒருங்கிணைய தகுதியுள்ளவர்களாக ஆக்கும் நோக்கத்தில் பாலவித்யாலயா டிரஸ்ட் இப்பள்ளியை நடத்துகிறது” என்கிறார் டாக்டர் மீரா சுரேஷ். இவர் இப்பள்ளியின் கவுரவ துணை முதல்வர்.

இப்போது எல்லா மாவட்டங்களிலும் இதுபோன்ற சிறப்புப் பள்ளிகளை அரசு ஏற்படுத்தி வருகிறது. ஆயினும் நாற்பதாண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்ட பாலவித்யாலயாதான் அனைத்துக்கும் முன்னோடி. அரசு தொடங்கும் பள்ளிகள் சரியான முறையில் இயங்குகின்றனவா என்பதை கண்காணிக்கும் அந்தஸ்தில் பாலவித்யாலயா இருக்கிறது.

சென்னையில் இருப்பவர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் எந்தப் பகுதியில் இருப்பவர்களும் இங்கே தங்கள் குழந்தைகளைச் சேர்க்கலாம். ஆலோசனை பெறலாம். வெளியூரில் இருந்து வந்து சென்னையிலேயே தங்கி, தங்கள் குழந்தைகளுக்கு இங்கே மொழியைக் கற்றுத் தரும் பெற்றோர்களும் உண்டு. அதிகபட்சமாக 200 குழந்தைகள் வரை இங்கே படிக்கலாம். குழந்தைகளை சேர்க்க குறிப்பிட்ட காலமெல்லாம் கிடையாது. வருடம் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். இத்துறையில் ஆசிரியப் பணியில் ஈடுபட விரும்புபவர்களுக்கு ஒரு டிப்ளமோ பயிற்சியையும் பாலவித்யாலயா நடத்துகிறது. 12ஆம் வகுப்பு தேறியவர்கள் இந்த டிப்ளமோவை படிக்கலாம். ஒரு வருட படிப்புக்கு தோராயமாக ஏழாயிரம் ரூபாய் வரை செலவாகும். ஆங்காங்கே அரசு ஆதரவோடு இதுபோன்ற பள்ளிகள் ஏற்படுத்தப் பட்டிருப்பதால் வேலைவாய்ப்புக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

பாலவித்யாலயா அலுவலகத்தில் பேசிவிட்டு வெளியே வரும்போது சில குழந்தைகள் வாசலில் இருக்கும் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நான்கு வயது ரித்திகா நமது புகைப்பட கலைஞரைப் பார்த்து, “Uncle want me to take photograph?” என்று ஆங்கிலத்தில் கேட்டவாறே அட்டகாசமாக போஸ் கொடுக்கிறாள். ரோஜா என்றால் ரோஜாதான் என்பதைப் போல குழந்தைகள் என்றால் குழந்தைகள்தான்!


தொடர்புக்கு :
செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளை மவுனச்சிறைகளில் அடைக்காதீர்கள். உங்களுக்கு தெரிந்த குழந்தைகள் யாருக்காவது செவித்திறன் குறைபாடு இருப்பதாக தெரிந்தால் உடனே பாலவித்யாலயாவை தொடர்பு கொள்ளுங்கள்.

பாலவித்யாலயா
18, 1வது குறுக்கு தெரு, சாஸ்திரி நகர், சென்னை-20.
தொலைபேசி : 044-24917199 ஃபேக்ஸ் : 044-24982598
மின்னஞ்சல் : hear@balavidyalaschool.org
இணையத்தளம் : www.balavidyalaschool.org

(நன்றி : புதிய தலைமுறை)

11 கருத்துகள்:

  1. இதைப்போன்ற செய்திகள்தான் நம்பிக்கையைத் தருவதாக இருக்கின்றன. நல்ல பகிர்வு யுவா. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நெகிழச் செய்த கட்டுரைங்க. நன்றிங்க. எனக்குத் தெரிஞ்ச எல்லாருக்கும் உங்களோட இந்தப் பக்கத்தோட சுட்டியை அனுப்பி இருக்கேன்.. பாலவித்யாலயா தலைமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகளும், அங்கிருக்கும் குழந்தைகளுக்கு வாழ்த்துக்களும்.

    குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா !

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா6:47 PM, ஆகஸ்ட் 02, 2010

    Lucky with a cause, thats why we love you. hats off keep writing more

    பதிலளிநீக்கு
  4. நண்பரே,

    நல்ல பதிவு. உண்மைதான். பாலவித்யாவின் சேவை நாட்டுக்குத் தேவை.

    ஆனால் கட்டுரைக்கு வலுச்சேர்ப்பதற்காக குறிப்பிடப்பட்டிருக்கும் கருவண்டுத் தத்துவம் சரியானதல்ல. விமானங்கள் பறப்பது இறக்கையின் மேற்புற வளைவாலும் பெர்நௌலி தத்துவத்தாலும்தான். விமானத்தின் என்ஜின் இறக்கையின் மேல் பெர்நௌலி தத்துவம் செயற்பட உதவியாக காற்றை வேகமாக வீசச் செய்கிறது.

    ஆனால் கருவண்டும் இதர பூச்சிகளும் பறவைகளும் பறப்பது நியூட்டனின் மூன்றாம் விதியால்தான். பறவைளின் மிக வலுவான தசைகள் மிக வேகமாகவும் பலமாகவும் காற்றை கீழ்நோக்கி உந்தித் தள்ளுகின்றன. கருவண்டு, தேனீ போன்ற பூச்சிகள் சொற்ப நேரத்தில் பல தள்ளுதல்களை மேற்கொள்கின்றன. இதனால் மேல்நோக்கிய உந்துதல் ஏற்பட்டு அவை பறக்கின்றன.

    எனவே பூச்சிகளின் பறக்கும் தத்துவம் இயந்திரவியலுக்குப் பொருந்தாது. அத்தோடு அறிவியல் விதிகளுக்கு அமையாதவை ஏதும் இல்லை. அப்படி இருந்தால், எதிர்காலத்தில் அவற்றுக்கேற்ற அறிவியல் விதிகள் உருவாக்கப்படும்.

    கட்டுரையைப் பற்றி விமர்சிக்காமல் உதாரணத்தைப் பற்றி விமர்சித்ததற்கு மன்னிக்கவும். எனக்குத் தெரிந்ததைக் கூறினேன். அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  5. நாலு பேர்9:38 PM, ஆகஸ்ட் 02, 2010

    நல்ல கட்டுரை.மனதைத் தொட்டது. ஆனால் கருவண்டு அறிவியல் நியமங்களின்படி பறக்க முடியாது என்பது தவறான ஒரு myth;எழுச்சியூட்டும் சிறுதகவல் என்பதால் நம்ப விரும்பப்படும் ஒரு விஷயம். அன்புணர்சியோடு அறிவியலையும் பேணி வளர்ப்போம்.

    பதிலளிநீக்கு
  6. //பாலவித்யாலயாவின் நாற்பதாண்டு சேவையின் மூலமாக இன்று டாக்டரேட் முடித்தவர்கள், பொறியியல் படித்தவர்கள், நிர்வாகத்தில் உயர்கல்வி பெற்றவர்கள், ஆர்க்கிடெக்டுகள் மற்றும் ஏராளமான பட்டதாரிகள் உருவாகியிருக்கிறார்கள்.//

    அவர்களின் சேவை பாராட்டுகிறேன். பகிர்வுக்கு நன்றீ. கடந்த என் பதிவு மாற்றுதிறன் உள்ள மாணவர்கள் பள்ளியில் சேரும் போது ஒரு சில ஆசிரியர்கலே ஆரிவம் காட்டுகின்றனர் என்பதை குறித்தது , அருமையாக அவர்களின் சேவையை எடுத்து சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா3:42 PM, ஆகஸ்ட் 04, 2010

    ok ,the first paragraph lucky used is from the movie -- Bee Movie.
    The quote is "According to all known laws of aviation, there is no way a bee should be able to fly. It's wings are too small to get its fat little body off the ground. The bee, of course, flies anyway, because bees don't care what humans think is impossible.
    "

    பதிலளிநீக்கு
  8. விமான அறிவியலின் பிரபலமான கோட்பாடு ஒன்று உண்டு. ‘கனமான உடம்பும், மிக லேசான இறக்கைகளும் கொண்ட கருவண்டால் இயந்திரவியல் தர்க்கத்தின்படி பறக்கவே இயலாது’. இந்த கோட்பாடு அறிவியலாளர்களுக்கு தெரியும். ஆனால் கருவண்டுகளுக்கு தெரியாது. எனவே அவை எப்படியோ பறந்துகொண்டுதான் இருக்கின்றன என்பது அருமையான உவமை! காது கேளாத குழந்தைகள் பேசுவது இனிமையான செய்தி!

    பதிலளிநீக்கு
  9. @ Anonymous,

    As I've said in my comment, Birds, bats, beetles and other insects fly in a different way from Aircraft technology. So, the aviation rules are not applicable for the flight of beetles.

    It's not the fact from where lucky has taken the quote from, but he should have checked whether it's true or not.

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா12:16 AM, ஆகஸ்ட் 09, 2010

    Like many others, I too find the example as pseudo-scientific; Unfortunately, even Abdul Kalam's page has this example.As an aeronautical engineer Abdul Kalam could have chosen a better example.I find Rajinikanth's ( I don't know who the original author was, it was popularised by Rajini), deaf frog story as more inspiring. Perhaps, in this context it might have been construed as offensive.

    பதிலளிநீக்கு