அப்சல் என்பவர் யார்?
முகம்மது அப்சல் உங்களையும், என்னையும் போல இந்தியாவில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவரே. டெல்லியில் மருத்துவம் படித்தார். 15 ஆண்டுகளுக்கு முன்னால் அரசியல் ஆர்வம் ஏற்பட்டு JKLF (ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி) இயக்கத்தில் இணைந்தார். தீவிரவாதப் பயிற்சிக்காக பாகிஸ்தானுக்கு சென்றவர் அங்கே 2 மாதம் தங்கியிருந்திருக்கிறார்.
பாகிஸ்தானுக்கு காஷ்மீர் விடுதலையில் எந்த ஆர்வமும் இல்லை. காஷ்மீர் இளைஞர்களைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு தலைவலி கொடுக்க மட்டுமே பாகிஸ்தான் விரும்புகிறது என உணர்ந்தவர் தாயகம் திரும்பி எல்லைப் பாதுகாப்புப் படையிடம் இரு சக தீவிரவாதிகளுடன் மனந்திருந்தி சரணடைந்தார்.
திருந்திய பின்பே அப்சலுக்கு சத்திய சோதனை நேர்ந்தது. காஷ்மீரில் மனம் திருந்திய தீவிரவாதிகளுக்கு அரசு வேலை கிடைக்காது. அவர்களால் போலிஸ் இன்பார்மர் தொழில் மட்டுமே செய்ய இயலும். வேண்டுமானால் அங்கிருக்கும் எல்லை பாதுகாப்புப் படை மற்றும் போலிசார் உதவியுடன் தாதாவாக மாறி சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை அதிகார வர்க்கத்துக்கு லஞ்சமாக கொடுத்து வாழலாம்.
தீவிரவாதப் பாதையில் இருந்து திருந்தி பாதை மாறியவர்களுக்கு நித்திய கண்டமாக தீவிரவாதிகளின் அச்சுறுத்தலும் உண்டு. எப்போது வேண்டுமானாலும் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாயலாம். இருதலைக் கொள்ளி எறும்பு நிலையில் இருந்தார் அப்ஸல்.
எப்படி சமாளித்தார் அப்ஸல்?
வேலையிலும் சேர முடியாது, இன்பார்மராக பணிபுரிந்து தீவிரவாதிகளின் விரோதத்தையும் சம்பாதிக்க முடியாது என்ற நிலையில் இருந்த அப்ஸல் மருத்துவ உபகரணங்களை வாங்கி வினியோகம் செய்யும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். வாழ்க்கை நல்லமுறையில் பயணிக்கத் தொடங்கியது. புதிய வாழ்க்கை அமைத்துக் கொண்டதின் சாட்சியாக அவருக்கு திருமணமும் நடந்தேறியது.
அப்ஸலை நெரித்த அராஜகம்!
இந்நிலையில் தான் முகம்மது அப்ஸலுக்கு வில்லனாக முளைத்தார் அதிரடிப்படையின் டி.எஸ்.பியான திராவிந்தர் சிங். அப்ஸல் தொழிலில் நன்றாக வளர்ந்து வருவதை கண்டு மனம் பொறுக்க முடியாத அந்த மிருகம் லாபத்தில் பங்கு கேட்கத் தொடங்கியது. இல்லாவிட்டால் தீவிரவாதி என்று கூறி என்கவுண்டரில் போட்டுத் தள்ளிவிடுவோம் என்று மிரட்டியிருக்கிறது. அப்ஸலும் பல ஆயிரத்தைக் கொட்டிக் கொடுத்துக் கூட அந்த மிருகத்தின் பணவெறியைத் தணிக்க முடியவில்லை. தன் மனைவியின் நகையை விற்று பணத்தைக் கொடுத்திருக்கிறார். அப்ஸல் புதியதாக வாங்கிய இரு சக்கர வாகனத்தைக் கூட அந்த மிருகம் இரக்கமில்லாமல் பிடுங்கியிருக்கிறது.
இந்நிலையில் அப்ஸல் சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்குச் சென்று பிழைப்பைப் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார். அவர் மருத்துவம் படித்த டெல்லிக்கே சென்று தொழிலை தொடர நினைத்தார். அவர் இடம் மாறப்போவதை அறிந்த திராவிந்தர் சிங் அவரை அழைத்து தனக்கு வேண்டிய ஒருவரையும் டெல்லிக்கு உடன் அழைத்துச் செல்லவேண்டும் என மிரட்டியிருக்கிறார். திராவிந்தர் சிங்குக்குக்கு வேண்டிய ஒருவர் தான் முகம்மது. நாடாளுமன்றத் தாக்குதலின் மூளை.
டெல்லிக்கு முகமதுவை அழைத்துச் சென்ற அப்ஸல் திராவிந்தர் சிங்கின் பரிந்துரையின் பேரில் அவருக்கு ஒரு வீடு வாடகைக்கு அமர்த்தி ஒரு காரும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இந்த நேரத்தில் அப்ஸலும், காஷ்மீர் அதிரடிப்படை டி.எஸ்.பி. திராவிந்தர் சிங்கும் பலமுறை மொபைல் போனில் பேசியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத் தாக்குதலில் அப்ஸலின் பங்கு மொத்தமே இவ்வளவு தான். மனம் விரும்பி அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதாக எந்த சாட்சியமும் இல்லை. அவர் அழைத்து வந்த முகமது நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபடப்போகிறார் என்று அப்ஸலுக்கு தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை.
அதன் பிறகு நடந்தது என்ன?
இந்நிலையில் டெல்லியில் தானும் தன் குடும்பமும் தங்குவதற்கு வீடு பார்த்து விட்டு காஷ்மீருக்கு தன் குடும்பத்தை அழைத்துவரச் சென்ற அப்ஸல் கைது செய்யப்பட்டு நாடாளுமன்றத் தாக்குதலின் சூத்திரதாரி என்று டெல்லி போலிசால் குற்றம் சாட்டப்படுகிறார். நிருபர்கள் முன்னிலையில் அப்ஸல் பேச அனுமதிக்கப்படவில்லை. இதை ஆஜ்தக் சேனலின் நிருபர் கூட நீதிமன்றத்தில் சாட்சியாக சொல்லியிருக்கிறார்.
போலிஸ் எப்படி அப்ஸலை தீவிரவாதியாக சித்தரிக்கிறது?
அப்ஸலின் மொபைல் போனில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் நவம்பர் 6 முதல் பலமுறை பேசியிருப்பதாக போலிஸார் கூறுகிறார்கள். அதை வைத்தே அப்ஸல் தான் இந்த தீவிரவாதச் செயலின் மூளை என்பதாக வர்ணிக்கிறது டெல்லி காவல்துறை. அந்த மொபைல் போனின் சிம்கார்டே (மொபைல் எண் 9811489429) டிசம்பர் 4ல் தான் வாங்கப்பட்டிருக்கிறது. அதற்கான பில்லும் அப்ஸலின் வசம் இருக்கிறது. அதாவது ஒரு மாத காலமாக Activate செய்யப்படாத ஒரு எண்ணில் தீவிரவாதிகள் அப்ஸலிடம் பேசியிருக்கிறார்கள் என்று போலிஸார் நீதிமன்றத்தின் காதுகளில் பூச்சுற்றுகிறார்கள். அந்த பூச்சுற்றலையும் சந்தோஷமாக நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
நீதிமன்றத்தில் அப்ஸலின் சார்பாக வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. இதுமாதிரி நேரத்தில் நீதிமன்றமே குற்றவாளிக்கு ஒரு வக்கீலை நியமிப்பது வழக்கம். அந்த நடைமுறை அப்ஸலின் வழக்கில் மட்டும் மீறப்பட்டது ஏனோ?
தன்னுடைய மொபைல் எண்ணுக்கு காஷ்மீர் மாநில போலிஸ் அதிகாரிகள் பேசியிருக்கிறார்கள் என்று நீதிமன்றத்திலும், போலிஸ் விசாரணையிலும் அப்ஸல் கூறியிருக்கிறார். அதுகுறித்து போலிசார் எந்த விசாரணையும் நடத்தாது ஏன்? விரும்பத்தகாத உண்மைகள் ஏதாகினும் வெளிவந்துவிடப் போகிறது என்பதாலா?
நீதிமன்றத்தின் அடாவடி
அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே குற்றத்தின் கொடூரத்தன்மையைக் கணக்கில் கொண்டு மரணதண்டனை விதிக்கவேண்டும் என்பது இந்திய நீதித்துறையின் அரிச்சுவடி. ஆனால் அப்சலுக்கு மரணதண்டனை வழங்கிய நீதிமன்றம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மரணதண்டனை விதிக்கிறோம் என்று தீர்ப்பு எழுதியிருக்கிறது. நூறுகோடி மக்கள் ஒன்று சேர்ந்து அப்ஸலுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினார்களா என்ன? நீதிபதி குறிப்பிட்ட "மக்கள்" என்பவர் யார்? யார்?
அப்படி மக்களின் உணர்வுகள் இருந்திருந்தால் இன்று காஷ்மீரிலும், இந்தியாவின் எஞ்சிய பகுதிகளிலும் அப்ஸலின் மரண தண்டனைக்கு எதிரான கடுமையான குரல் ஏன் எழுகிறது. இந்த எதிர்ப்புக் குரல் ஒருவேளை மக்களின் உணர்வுகள் இல்லையா?
அப்சல் ஏன் இதுவரை ஜனாதிபதிக்கு கருணைமனு அனுப்பவில்லை?
"அதுமாதிரி ஒரு கருணைமனு கோரினால் என் மீது சொல்லப்பட்டுள்ள குற்றத்தை நானே ஒப்புக்கொண்டதாக ஆகிவிடும். ஒருவேளை நான் மரணமடையவேண்டும் என்று இறைவன் விரும்பினால், இறைவனின் தீர்ப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்" என்கிறார் அப்ஸல்.
அப்ஸலை தூக்கில் போடவேண்டும் என்று கோருபவர்கள் யார்? யார்?
அப்ஸல் இஸ்லாமியர் என்பதால் அவரை தூக்கில் போடவேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. தீவிரவாதத்தை அடக்க இதுதான் சிறந்தவழி என்பது அவர்கள் எண்ணம். தாங்கள் "தேசபக்தி கொண்டவர்கள்" என்று நெற்றியில் எழுதி ஒட்டிக்கொள்வதை மட்டும் செய்யாத சில தேசியவியாதிகளும் இவர்களோடு சேர்ந்து ஜால்ரா அடித்து வருகின்றனர்.
இன்னொரு தரப்பினர் இஸ்லாமியத் தீவிரவாதிகள். அப்பாவியான அப்ஸல் தூக்கிலிடப்பட்டால் அதன் மூலம் இஸ்லாமிய இளைஞர்களிடையே மத வெறியையும், தீவிரவாத மனப்பான்மையையும் ஏற்படுத்தி தீவிரவாதத்தை வளர்க்கலாம் என்பது அவர்கள் எண்ணம்.
ம்ம்ம்.... மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி.
இடையில் அப்ஸலின் மரணதண்டனைத் தீர்ப்பால் மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் அவரது ஏழு வயது மகனும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறான் என்பது ஒரு சோகமான பெட்டிச் செய்தி.