"17 வயசு தான் ஆவுது. இந்த வயசுலே படிக்காம ஏன் வேலைக்கு வர்றே?"
"இல்லே சார். +2 பெயில் ஆயிட்டேன். டைப்ரைட்டிங் க்ளாஸ், கம்ப்யூட்டர் க்ளாஸ், ஸ்பீக்கிங் இங்கிலிஷ், எல்லாம் போறேன். அக்டோபர்லே எக்ஸாமும் எழுதறேன். இருந்தாலும் வீட்டிலேயே எப்பவும் தண்டச்சோறு மாதிரி இருக்குறமாதிரி பீல் பண்ணுறேன். ஏதாவது சம்பாதிக்கணும்னு தோணுது சார். அப்பாவோட சம்பாதியத்துலே சாப்புடுறதுக்கு செல்ப்-ரெஸ்பெக்ட் எடம் கொடுக்கலை. வேலை செஞ்சுக்கிட்டே படிக்கலாம்ணு முடிவெடுத்துருக்கேன்"
"வெரிகுட். ஆனாலும் பத்திரிகை வேலைங்கிறது அவ்வளவு சுலபம் இல்லே. எக்ஸ்பீரியன்ஸ், எலிஜிபிலிட்டி எதுவும் இல்லேன்னாலும் உன்னோட செல்ப் கான்பிடன்ஸ்காக வேலைகொடுக்கறேன். ஹார்ட் ஒர்க் பண்ணனும். ஒழுங்கா கொடுத்த வேலையை செஞ்சீன்னா சீக்கிரமா லைப்லே முன்னுக்கு வந்துடுவே!"
பத்து ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த சம்பவம் இது. வேலை கொடுத்தவர் தினமலர் ரமேஷ் சார். +2 பெயில் ஆகிவிட்டு வேலை கேட்டவன் நான். இச்சம்பவம் ரமேஷ் சாருக்கு நினைவில்லாமல் இருக்கலாம். ஏனென்றால் என்னைப் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றியவர் அவர். ஒவ்வொருவரையும் நினைவில் வைத்திருப்பாரா என்ன? என்னுடைய இன்றைய வாழ்க்கைக்கு "அன்னா, ஆவன்னா" எழுதியவர் அவர்.
* - * - * - * -
"என்னடா கண்ணா?"
"சார். தினமும் நைட் ஷிப்ட் வேலை செஞ்சிட்டு வீட்டுக்கு போறேன். சரியா சாப்பிடமுடியலை. வெயிட் ரொம்பவும் லாஸ் ஆயிடிச்சி. வேலைக்கு போகவேணாம்னு வீட்டுலே சொல்றாங்க"
"நைட்ஷிப்ட் தானே உனக்கு பிரச்சினை? என்னோட வாரமலருக்கு வந்துடேன். நீ நல்லா ஒர்க் பண்றதா போர்மேன் சொன்னாரு. நாளைலேர்ந்து உனக்கு டே ஷிப்ட் மட்டும் தான். ஓகேவா?"
"ரொம்ப தேங்க்ஸ் சார்!"
* - * - * - * -
சனிக்கிழமை காலை 10 மணி.
"சார்! இன்னைக்கு விஸ்வநாதன் இல்லே. லீவ் போட்டுட்டாரு. அவரு கொழந்தைக்கு உடம்பு சரியில்லையாம்"
"சரி பரவாயில்லை. மேட்டர் இந்த வாரம் வேணாம். வேற ஏதாவது போட்டு லே-அவுட்டை முடிச்சிடுங்க"
"இல்லே சார். கிச்சான்னு பையன் ஒருத்தன் இருக்கான். நல்லா சுறுசுறுப்பா வேலை பார்ப்பான்"
"யாரு அந்த பொடியனா? வரச்சொல்லு"
சிறிது நேரம் கழித்து,
"வெரிகுட். ஒரு மிஸ்டேக் கூட இல்லை. கமா, புல்ஸ்டாப், கொட்டேஷன் எல்லாம் பக்காவா இருக்கு. கல்விமலருக்கு ஒரு ஆள் வேணும்னு கேட்டுக்கிட்டிருந்தாங்க. இவனைப் போட்டுருங்க"
* - * - * - * -
ரமேஷ் சார் கேள்வி பதிலும், பா.கே.ப. எழுதும் அழகே தனி. சனிக்கிழமை காலை தான் எழுத ஆரம்பிப்பார். தனித்தனி தாளாக எழுதுவார். ஒவ்வொரு தாள் எழுதிமுடித்ததும் கம்போஸிங்குக்கு வந்துவிடும். கையெழுத்து மணிமணியாக இருக்கும். இரண்டு மணிக்கு முன்பாக முடித்துவிடுவார். அவர் எழுதும் பகுதிகளுக்கான ப்ரூப், லே-அவுட் ஆகியவற்றை ரொம்பவும் கவனமாக பார்ப்பார். பயணக்கட்டுரைகளுக்கு புதுவடிவம் கொடுத்தது அவரது சாதனை. ஒவ்வொரு வாரமும் ஒரு தொடர்கதைக்கான சஸ்பென்ஸை அவரது தொடர்கட்டுரைகளின் இறுதியில் பார்க்கலாம்.
தொடர்களை அவர் எப்படித்தான் தேர்ந்தெடுப்பாரோ தெரியாது? வாரமலரில் வந்த தொடர்கள் எல்லாமே ஒரு நேரத்தில் சூப்பர் ஹிட். "கலையுலகில் கருணாநிதி" என்ற தொடர் நான் விரும்பிப் படித்த ஒன்று. அதே நேரத்தில் ராஜேஷ்குமார், ஆர்னிகாநாசர் போன்ற எழுத்தாளர்களின் தொடர்கதைகளும் கலக்கலாக இருக்கும்.
அவரால் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் அனேகம் பேர். ஆர்னிகாநாசர் போன்ற எழுத்தாளர்களை லைம்லைட்டுக்கு வரவழைத்த பெருமை ரமேஷ் சாருக்கே உண்டு. அவரது அலுவலகத்தில் தான் பல எழுத்தாளர்களை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இவர் தான் ஜே.டி.ஆரா? இவர்தான் ஜி.ஏ.வா? என்று அவருடைய நண்பர்களை கண்டு வாய்பிளந்து நிற்பேன்.
முதன்முதலாக நாளிதழ்களுக்கு இணைப்பு என்ற கான்செப்ட்டை தமிழுக்கு கொண்டு வந்தவர் ரமேஷ் சார். சிறுவயதில் அவரது கைவண்ணத்தில் உருவான சிறுவர்மலரை விரும்பிப் படித்தவன் அவருடனேயே பணியாற்றுவேன் என்று நினைத்துகூட பார்த்ததில்லை.
ரமேஷ் சார் கோக்கோ, பெப்ஸியோ அருந்தி நான் பார்த்ததில்லை. இளநீர் தான் அருந்துவார். அவருக்கு "பிளட் ரெட்" கலர் ரொம்பவும் பிடிக்கும். நான் பணியாற்றிய காலத்தில் அவர் வைத்திருந்த கார்கள் எல்லாம் பிளட் ரெட் நிறத்திலேயே இருக்கும். எப்பவும் ரமேஷ் சார் செல்ப் டிரைவிங் தான். டிரைவர் ஓட்டி அவர் அமர்ந்து நான் பார்த்ததேயில்லை.
மிகக்கடுமையான உழைப்பாளி அவர். இரவு நேரங்களில் அண்ணாசாலை அலுவகத்துக்கு திக்விஜயம் செய்து வேலை ஒழுங்காக ஓடுகிறதா என்று பார்ப்பார்.
* - * - * - * -
சமீபத்தில் அவர் குறித்து வந்திருக்கும் சர்ச்சை என்னை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது. தமிழ் வலையுலகைப் போன்றே பத்திரிகையுலகமும் கேடுகெட்டு போய்க்கொண்டிருக்கிறது. மதுரை வன்முறை சம்பவங்களின் போது தினமலரின் பேனர் நியூசாக "பெருச்சாளிகள் தொல்லை" வந்திருந்தது.
தற்போது பெண் பத்திரிகையாளர் உமாவின் குற்றச்சாட்டுக்குப் பிறகு தினகரனில் "பெருச்சாளிகள் ஊழல் அம்பலம்" என்று செய்தி வருகிறது. பத்திரிகையாளர்கள் தங்கள் சகப்போட்டியாளர்களை இதுபோல சந்தி சிரிக்க வைப்பதென்பது "சொந்தச் செலவில் சூனியம்" வைத்துக் கொள்வதைப் போன்றதே. பத்திரிகையாளர்களுக்கு என்று மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரை அவர்களாகவே கெடுத்துக் கொள்ளும் மோசமான சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது.
ஒரு முன்னாள் பெண் நிருபர் தினமலர் நிர்வாகி மீது புகார் கொடுத்திருக்கிறார். அவ்வளவு தான். அந்த குற்றச்சாட்டு உண்மையா? பொய்யா என்று நிரூபணமாகாத சூழ்நிலையில் புனைபெயரில் இயங்கிவரும் ஒரு பத்திரிகையாளர் மீது மோசமான வண்ணத்தில் வெளிச்சம் போட்டு அவரது படத்தையும் பிரசுரித்திருப்பது கேவலமான முன்னுதாரணம். இந்த முன்னுதாரணத்துக்கு தினகரன் நிறுவனம் பிள்ளையார் சுழி போட்டிருப்பது வருந்தத்தக்க விஷயம்.