25 ஆகஸ்ட், 2008

பாலாவின் நாட்டு நடப்பு!

சிறுவயதில் கையில் கிடைக்கும் சாக்பீஸையோ, கரித்துண்டையோ வைத்து வீடெல்லாம் கிறுக்கிக் கொண்டிருந்தால் உங்களுக்கெல்லாம் உதை கிடைத்திருக்கும் தானே? குட்டிப்பையன் பாலாவையோ அவரது தாத்தா மேலும் கிறுக்க ஊக்குவித்திருக்கிறார். விளைவு? நாடறிந்த பத்திரிகையான குமுதத்தின் பிரதான கார்ட்டூன் ஓவியராக இன்று வளர்ந்திருக்கும் கார்ட்டூன் பாலா.

தினமணி, விகடன் இதழ்கள் தங்கள் பத்திரிகைகளில் வெளிவந்த கார்ட்டூன்களை புத்தகமாக போடுவது வழக்கம். முதன்முறையாக குமுதத்தில் அப்படிப்பட்ட ஒரு முயற்சி நடந்திருக்கிறது. கடந்த மூன்றாண்டுகளாக தன் தூரிகையால் அரசியல்வாதிகளின் தூக்கத்தை கெடுத்த பாலாவின் கார்ட்டூன்கள் “நாட்டு நடப்பு” என்ற பெயரில் கவர்ச்சிகரமான வடிவத்தோடு, தரமான பேப்பரில் 160 பக்க புத்தகமாக வெளியிட்டிருக்கிறது குமுதம். விலை ரூ.100/-

புத்தகத்தின் பின் அட்டையில் 2006 தேர்தல் நேரத்தில் பாலா கிறுக்கிய “பாசக்கிளிகள்” கார்ட்டூனுக்கு கலைஞர் முரசொலியில் அடைந்த எரிச்சலையே பாலாவுக்கான அறிமுகமாக தந்திருப்பது நல்ல பாராட்டுப் பத்திரம். வைகோ திமுக கூட்டணியை விட்டு வெளியே போகப்போகிறார் என்ற யூகங்கள் வருவதற்கு முன்பாகவே தீர்க்கதரிசனமாக அதை கார்ட்டூனாக வரைந்தவர் பாலா என்பது குறிப்பிடத்தக்கது. நடந்த நிகழ்வுகளை மட்டுமே கிண்டலடித்து கார்ட்டூன் போடுவதை விட, அரசியலை கூர்ந்து கவனித்து என்ன நடக்கப் போகிறது என்பதையும் கார்ட்டூனாக போடும் கலை பாலாவுக்கு நன்கு கைவந்திருக்கிறது.


பாலாவின் கோபம் முழுக்க முழுக்க கலைஞர் மீதும், அம்மா மீதும் தான் போலிருக்கிறது. கருப்பு எம்.ஜி.ஆர் குறித்த கார்ட்டூன்கள் குறைவு. ஒருவேளை எதிர்காலத்தில் நிறைய போடுவாரோ என்று தெரியவில்லை. 'கூட்டணி மாறுதல்' குறித்த நையாண்டிகள் ரொம்பவும் அதிகம், பாவம் இதனால் பாலாவிடம் அதிகமாக மாட்டிக்கொண்டு அவதிப்படுபவர் டாக்டர் அய்யா தான். பத்திரிகைகளில் இடம்பெறும் கவர்ஸ்டோரிகளுக்கு, பாலோ-அப் கொடுப்பது வாடிக்கையான ஒன்று. “பாசக்கிளிகள்” கார்ட்டூனுக்கு “வேஷக்கிளி” கார்ட்டூன் மூலமாக பாலோ-அப் கொடுத்தது அருமையான கிரியேட்டிவிட்டி. சமூகம், நாடு, உலகம் மீதான தனது கோபத்தினை கார்ட்டூன் மூலமாக நையாண்டியாக வெளிப்படுத்துவது பாலாவின் ஸ்பெஷாலிட்டி.

முன்னுரையில் தனது தாத்தாவுக்கும், அம்மாவுக்கும் புத்தகத்தை சமர்ப்பிப்பதாக பாலா குறிப்பிட்டிருக்கிறார். பின்னட்டையில் குழந்தை போல இருக்கும் அவரது போட்டோவை போட்டதை தவிர்த்திருக்கலாம். நிறைய பேர் ஆட்டோ அனுப்பி அடையாளம் காண அந்த போட்டோ வசதியாக இருக்கும். வேறு ஒரு துறையில் பணிபுரிந்துகொண்டு ஆர்வத்துக்காக ஓவியம் வரைந்துகொண்டிருந்த பாலாவை கார்ட்டூன் வரையத்தூண்டி, அவருக்குள் இருந்த திறமையை ஊக்குவித்து இன்றைய நிலையில் நிறுத்தியிருக்கும் பாலபாரதிக்கும் முன்னுரையில் செய்நன்றி காட்டியிருக்கிறார் பாலா.

பாலாவின் கார்ட்டூன் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே இருக்கலாம். கேட்பதை விட புத்தகத்தை புரட்டிப் பார்ப்பதே உங்களுக்கு அதிக சுவாரஸ்யத்தை தரும். சுவாரஸ்யமான பார்வைக்கு இந்த புத்தகம் நிச்சயமான உத்தரவாதத்தை தருகிறது. ஒவ்வொரு வீட்டு நூலகத்திலும் இடம்பெற வேண்டிய அவசியமான புத்தகம். குமுதம் வெளியிட்டிருக்கும் பாலாவின் “நாட்டு நடப்பை” வாங்க விரும்புபவர்கள் 9940619748 (குருராஜன்) என்ற தொலைபேசி எண்ணுக்கு பேசி உங்கள் வீட்டுக்கே புத்தகத்தை வரவழைக்கலாம். அல்லது பிரபல புத்தகக் கடைகளிலும் “நாட்டு நடப்பை” வாங்கலாம்.

வீடியோ பைரசி போல புக் பைரசியும் தார்மீகக் குற்றம். எனவே நீங்கள் காசு கொடுத்து வாங்கும் புத்தகத்தை யாருக்கும் இரவல் கொடுக்காதீர்கள். புத்தக விற்பனை மூலமாக எழுத்தாளர்களுக்கும், ஓவியர்களுக்கும் கிடைக்கும் ராயல்டி தொகை மிகவும் குறைவு. புத்தகங்களை இரவல் கொடுப்பதின் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் கொஞ்சம் நஞ்சம் ராயல்டி தொகைக்கும் வேட்டு வைத்துவிடாதீர்கள்.