பொதுவாக ஜெயமோகனை முற்றிலுமாக புறக்கணிக்க முடியாது.
ஏனெனில் அவர் பத்து பொய்களை எழுதும்போது இடையிடையே ஓரிரண்டு உண்மைகளை லாவகமாக செருகிவிடுவார். சாருநிவேதிதா அப்படியல்ல. சொன்னால் முழுக்க உண்மையை சொல்வார். அல்லது நூறு சதவிகிதம் பொய்யை மட்டுமே சொல்வார். எனவேதான் சாருவை சுலபமாக மறுத்துவிட முடியும். ஜெயமோகனை அவ்வாறு மறுக்க அச்சப்படும் குழப்பம் தோன்றும்.
உதாரணத்துக்கு, ‘அண்ணாதுரை போன்றவர்கள் வீட்டில் கூட தெலுங்கு பேசினார்கள்’ என்று பாரதிதாசன் கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் என்று ஒரு போடு போட்டுவிடுவார். எந்த கட்டுரையில் என்று அவருக்கு எதிர்கருத்து சொல்பவர்கள் தேடித்தேடி தாவூ தீர்ந்துவிடுவார்கள். அந்த கட்டுரை எதுவென்று அவர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே வாழ்க்கையே முடிந்துவிடும். இதுபோன்ற அப்பட்டமான அவதூறுகளை முன்வைக்கும்போது தரவுகளை சரியாக வைக்கவேண்டும் என்பது ஒரு விமர்சகனுக்கான குறைந்தபட்ச அளவுகோல். ஜெயமோகனை ஒரு சமூகவிமர்சன அறிவுஜீவியாக, ‘நிஜமான’ அறிவுஜீவிகள் தமிழ்ச்சூழலில் ஏற்றுக் கொள்வதில்லை என்பதால், அவரிடம் இந்த அளவுகோல்களை எல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது.
யாரேனும் மிகச்சரியாக ஜெயமோகனை துணிச்சலோடு சரியான தரவுகளோடு மறுக்கும்போதும் விஷ்ணுபுரமே அலறும். “பார்த்தீங்களா அநியாயத்தை. ஆசான் ஓபனா பேசுன உண்மையை, மனசாட்சியே இல்லாம மறுக்கிறாங்க” என்கிற ஒரே ஒரு உண்மையைத் தூக்கிவைத்துக் கொண்டு கூத்தாடும்.
அப்படி ஆசானை ‘சுருக்’கென்று குத்தக்கூடிய எதிர்வினைகளை, ஆசானும் அசால்டாக, ‘பொருட்படுத்தத்தக்கதல்ல’ என்கிற ஒற்றை வார்த்தையில் கடந்துவிட்டுச் சென்றுவிடுவார். ஆசானின் லேட்டஸ்ட் பார்ப்பனச் சார்பு கட்டுரைக்கு ராஜன்குறையின் எதிர்வினையை அவர் கடந்துச் செல்லும் அழகே அழகு. ராஜன்குறை பொருட்படுத்தத்தக்க வாசகர் அல்ல என்றால் வேறு யார் ஆசானுக்கு பொருட்படுத்தத் தக்கவர்கள். அவருக்கு நித்தமும் ‘ஜால்ரா’ தட்டும் ரசிகக்குஞ்சு கூட்டமா?
பத்ரி சேஷாத்ரியின் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ கட்டுரையிலிருந்து நான்கு முக்கியமான கருத்தாங்களை ஆசான் தொகுத்து மதிப்பீடு செய்கிறார். பத்ரி, இந்த அடிப்படையில்தான் கட்டுரை எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால், ஆசான் இப்படிதான் அதை பார்க்க விரும்புகிறார்.
ஒன்று : தமிழ் பிராமணர்கள் அதிகாரத்தில் இருந்து மெல்ல மெல்ல விரட்டி அடிக்கப்படுகிறார்கள்.
தமிழ் பார்ப்பனர்கள் நேரடி அரசியல் அதிகாரத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டியதில்லை. சுதந்திரப் போராட்ட காலத்தில் படித்தவர்களாக பார்ப்பனர்கள்தான் பெரும்பான்மையாக இருந்தார்கள் என்பதால், அப்போராட்டங்களை அவர்கள்தான் இங்கே தலைமை தாங்கி நடத்த வேண்டிய நிலை இருந்தது. அவ்வகையில் உருவான தலைவர்கள் அதிகாரத்துக்கு வந்திருக்கிறார்கள்.
ஆனால், அரசர்கள் காலத்திலிருந்தே அதிகாரத்தில் இருக்கும் பொம்மையை ஆட்டுவிக்கும் வேலையை பின்னிருந்து செய்வதுதான் அவர்களது விருப்பமாக இருந்திருக்கிறது. எனவே, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அதிகாரத்தை எது உறுதிசெய்கிறதோ, அந்த தளத்தை பார்ப்பனர்கள் கைப்பற்றுகிறார்கள். மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
இன்றைய சூழலில் நிதி தொடர்பான விஷயங்களே அதிகாரத்தை ஆட்சி செய்கிறது. எனவேதான் பார்ப்பனர்கள் எம்.பி.பி.எஸ்., படிப்பதைக் காட்டிலும், சி.ஏ., படிப்பதில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள். தகவல் தொழில்நுட்பத்துறை உலகளவில் நிதியின் விதியை தீர்மானிக்கும் துறையாக இருப்பதால் அந்த துறையை குறிவைத்து காய் நகர்த்துகிறார்கள்.
தேசியளவிலான இடஒதுக்கீட்டை ஒப்பிடுகையில் கூடுதலான இடப்பங்கீட்டினை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தரும் வழக்கம் தமிழகத்தில் அரை நூற்றாண்டு காலமாக இருக்கிறது. எனவே முன்னெப்போதும் பார்ப்பனர்கள் சந்தித்திராத சவாலான சூழலை கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தளங்களில் இப்போது சந்திக்கிறார்கள். தமிழகம் நூற்றாண்டாக பேசிவரும் சமூகநீதி ஓரளவுக்கு வெற்றிகளை குவித்திருப்பதையே பத்ரியின் கட்டுரை எடுத்துக் காட்டுகிறது. ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்கிற குணாவின் பார்வைக்கு மிகச்சரியான நேர் எதிர்வினையை பத்ரி எழுதியிருக்கிறார்.
இரண்டு : தமிழ் பிராமணர்கள் சமூகத் தளத்தில் அவமதிக்கப்படுகிறார்கள்
பார்ப்பனர்கள் மட்டுமல்ல. சாதியை சுமப்பவர்கள், அதை பெருமையாக பேசுபவர்கள் அனைவருமே அவமதிக்கதான் படுவார்கள். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகள் சமூகத்தளத்தில் சந்தித்திராத அவமானங்களையும், அடக்குமுறைகளையுமா பார்ப்பனர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்?
தங்கள் சாதி அடையாளம், தங்களது ஆளுமையை தாண்டி துருத்திக்கொண்டு தெரியுமளவில் நடந்துக் கொள்பவர்கள் – பார்ப்பனர் பார்ப்பனரல்லாதோர் பாரபட்சமின்றி – இத்தகையை அவமானத்தை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.
இன்றைய சூழலில் சாதி என்பது சமூக அடையாளமாக ஒரு மனிதனுக்கு தெருவில் நடக்கும்போது எவ்விதமான பங்களிப்பையும் செய்ய இயலாத சூழலில் (ஆனால் அது அரசியல் அடையாளமாக மட்டும் பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் உதவுகிறது. இது இயல்பானதுதான்… எஸ்.வி.சேகர் போன்றோர் பொருளாதார நிலையில் தாழ்ந்திருக்கும் பார்ப்பனர்களுக்கு இப்படியான அரசியல் அடையாளம் வேண்டும் என்கிற எண்ணம் கொண்டிருக்கிறார்கள், அவ்வகையில் வேண்டுமானால் நியாயமாக இருக்கலாம்) அதை முதுகில் சுமக்க நினைப்பது அறிவுடைமையான செயலே அல்ல.
அலுவலகச் சூழலிலோ அல்லது பல்வேறு தரப்பினர் பங்குகொள்ளும் தளங்களிலோ ‘நூல்’ மட்டுமே ஒரு குறிப்பிட்ட க்ரூப்பை இணைக்கிறது எனும்போது தனித்து விடப்படுபவர்கள் இத்தகைய எதிர்வினைகளை மேற்கொள்வது தவிர்க்க இயலாதது.
இதே சமூகத்தளத்தில் குழுவாக இணையும் பார்ப்பனர்கள் சமதர்மமா பேசிக்கொண்டிருக்கிறார்கள்? மற்ற சாதியினரை இழிவுபடுத்தும் நாசுக்கான மேனரிஸத்தை பார்ப்பனர்களிடம் உணரமுடியாதவர்களுக்கு நுண்ணுனர்வே இல்லையென்றுதான் பொருள்.
மூன்று : தமிழ் பிராமணர்கள் தங்கள் தனிப்பட்ட பண்பாட்டை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை.
வடிகட்டிய பொய். வருடாவருடம் நவராத்திரிக்கு கொலு வைப்பதை யார் தடுத்தார்கள்? ஹோமம், கீமம் என்று கோயிலுக்கு கோயில் இவர்கள் செய்யும் அட்டகாசத்தை எந்த போலிஸ் ஸ்டேஷனிலாவது தடை செய்திருக்கிறார்களா?
பார்ப்பனர்கள் அவர்களாகதான் பஞ்சகச்சத்தையும், மடிசாரையும் தங்கள் வசதி சார்ந்து துறந்தார்களே தவிர, டிராஃபிக் ராமசாமி மாதிரி யாரோ போய் இந்த எழவு பண்பாட்டையெல்லாம் தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்துக்கு போய் தடையாணை பெறவில்லை.
‘குடுமி அறுக்கறான்’ ‘குடுமி அறுக்கறான்’ என்று இவர்களாக சும்மா கூப்பாடுதான் போட்டார்களே தவிர, அப்படியொரு சம்பவம் நடந்ததாக எங்கேயும் எஃப்.ஐ.ஆர். கூட போட்டதில்லை. இவர்களே குடுமியை சிரைத்து ரஜினி ஹேர்ஸ்டைலுக்கு மாறிவிட்டு, “அய்யய்யோ… எங்களை குடுமி வெக்க விடலை” என்று வேஷம் போடுவது யாரை ஏமாற்ற?
மூன்று : இந்நிலை காரணமாகதான் தமிழ்பிராமணர்கள் மெல்ல மெல்ல தமிழகத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
வெளியேறி போய் துபாயில் ஒட்டகம் கழுவுகிறார்களா. கக்கூஸ் கழுவும் ஹவுஸ்கீப்பிங் வேலை செய்கிறார்களா. தொழிற்நிலையங்களில் இரும்படிக்கிறார்களா.
வற்றிய குளத்திலிருந்து வளமான குளத்துக்கு இடம்பெயரும் பறவைகளின் வேலையைதான் பார்ப்பனர்கள் பார்க்கிறார்கள். விவசாயத்தில் வருமானமில்லை என்றபோது, அந்தகாலத்தில் மன்னர்களிடம் தானமாக பெற்ற நிலங்களை நல்ல விலைக்கு விற்றார்கள். மயிலாப்பூருக்கும், நங்கநல்லூருக்கும் வந்து செட்டில் ஆனார்கள். ஆடிட்டராக, மருத்துவராக, என்ஜினியராக தங்கள் வாரிசுகளை தரமுயர்த்தினார்கள்.
வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களில் ஏக்கர் கணக்கில் நிலத்தை விலைக்கு விற்ற வன்னியனெல்லாம் இன்று சென்னைக்கு வந்து கல் உடைத்துக் கொண்டிருக்கிறான், கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
பார்ப்பனர்களின் இடப்பெயர்வு என்பது அவர்களது வாழ்க்கையினை மேலும் செழிப்பு ஆக்கிக்கொள்ளதானே தவிர. மற்றவர்கள் அவர்களை விரட்டியடிக்கிறார்கள் என்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். அக்ரஹாரங்கள் இன்று காலியாகிவிட்டது என்றால், வசதியான அப்பார்ட்மெண்டுகளுக்கு அவர்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
ஓக்கே. ஆசானுக்கு வருவோம்.
‘முற்போக்கு பிராமணர்கள்’ படையாக கிளம்பி பார்ப்பனீயத்தை எதிர்க்கும் போக்கு ஆசானை நடுநடுங்க வைக்கிறது. ஏனெனில் இதற்கு ஓர் அண்மைக்கால வரலாறு இருக்கிறது. 1957ல் முதன்முதலாக சென்னை ரிப்பன் கோட்டையில் திமுக கொடியை ஏற்றியதற்கு காரணமாக இருந்தவர்கள் மயிலை, திருவல்லிக்கேணிவாழ் பார்ப்பனர்கள். தமிழகம் முழுக்கவே ஒரு தரப்பு பார்ப்பனர்களிடம் திராவிட இயக்கக் கருத்துகள் பெரும் அதிர்வை உண்டாக்கியது.
தங்களது சனாதன அடையாளங்களை அழித்துவிட்டு ‘தமிழன்’ என்கிற அடையாளத்தில் தங்களை இணைத்துக் கொண்ட முதல் தலைமுறையினர் இவர்கள். பெரியாரின் முற்போக்கு கருத்துகளை ஏற்றுக்கொண்டு தங்கள் வீட்டுப் பெண்களை வேலைக்குச் செல்ல அனுமதித்தவர்கள் இவர்கள். கலப்பு மணம் என்றால் தலை வாங்கும் குற்றமல்ல என்று தமிழகத்துக்கு பாடம் போதித்தவர்கள் இவர்கள்.
தேசிய அளவில் அம்பேத்கர், பிராந்திய அளவில் பெரியார் என்று பார்ப்பனீயத்தை அம்பலப்படுத்தி வந்த சூழலில் மனச்சாட்சி உள்ள பார்ப்பனர்கள் அவர்களை ஏற்றுக் கொண்டனர். திராவிட இயக்க ஆதரவாளர்களாகவும், மார்க்சிய சிந்தனை கொண்டவர்களாகவும் பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர் தங்களை சமூகநோக்கில் இணைத்துக் கொண்டனர்.
ஆசானுக்கு ‘நைட் மேர்’ ஆன திராவிடத்தையும், மார்க்சியத்தையும் அவர்கள் ஏற்றுக் கொண்டதாலேயே அவர்கள் ஆசானுக்கு பொருட்படுத்தத்தக்க இயலாதவர்களாக மாறிவிட்டார்கள். என்றைக்காக இருந்தாலும் ‘நீ பார்ப்பான் தானே?’ன்னு சொல்லி அவர்களை துரத்தியடிப்பார்கள். அப்போது வட்டத்தில் இணைத்துக் கொள்ளலாம் என்று ஆசைப்படுகிறார்.
ஆசான் இந்த விவகாரத்தில் ரொம்பவும் எதிர்ப்பார்ப்பது தலித்துகளின் குரலை. ஆசானின் பார்வையில் தலித்துகள் என்றால் காலச்சுவடின் செல்லப் பிள்ளைகள். ஸ்டாலின் ராஜாங்கம், ராஜ்கவுதமன், 2005க்கு முந்தைய ரவிக்குமார் போன்றவர்கள். இல்லையேல் ஆசானின் விஷ்ணுபுரத்தை ஏற்றுக்கொள்ளும் அவரது நண்பர்களான அலெக்ஸ் போன்றவர்கள்.
ஆசான், அப்படியே தன்னுடைய குரலுக்கு எத்தனை தலித்துகள் லைக் போட்டிருக்கிறார்கள், ஷேர் செய்திருக்கிறார்கள் என்பதையும் கணக்கெடுக்கலாம். ஹரன்பிரசன்னா, அராத்து போன்ற தலித்துகளின் ஆதரவுக்குரல் விண்ணையெட்டும் தலித் ஆதரவுக் கோஷத்தோடு ஒலித்திருப்பது அவருக்கு புரியும்.
‘திராவிடத்தை எப்பவுமே நாம மட்டும் திட்டிக்கிட்டிருந்தா மக்கள் நம்பமாட்டாங்க’ என்று பார்ப்பனீயம் ஸ்பெஷலாக சில தலித்களை அப்பாயிண்ட்மெண்ட் செய்திருக்கிறது. அம்மாதிரி ஆட்கள் பத்ரிக்கு ஏதேனும் எதிர்வினை செய்திருக்கிறார்களா என்று ஆசான், இணையத்தில் தேடியிருக்கிறார். பி.ஏ.கிருஷ்ணன், கல்யாணராமன் போன்ற இணைய தலித் போராளிகளிடமே கேட்டிருந்தால், ஸ்டாலின் ராஜாங்கம் போல எத்தனை தலித் அறிவுஜீவிகள் இருக்கிறார்கள் என்று பெரிய லிஸ்ட்டும், அவர்களுடைய திராவிடர்களை சந்தோஷமாக திட்டும், பெரியாரை அம்பலப்படுத்தும் எதிர்வினைகளுக்குமான லிங்கும் ஆசானுக்கு கிடைத்திருக்கும்.
தமிழக அரசியல் மைய நீரோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் என்று அரசியல் கட்சிகளின் வாயிலாக இணைந்திருக்கும் தலித்கள் இதைப் பற்றியெல்லாம் என்ன நினைக்கிறார்கள் என்பது நமக்கு தெரிந்து என்ன ஆகப்போகிறது? அவர்களெல்லாம் காலச்சுவடிலா கட்டுரை எழுதப்போகிறார்கள் அல்லது ஃபேஸ்புக்கில் எதிர்வினை ஆற்றப் போகிறார்களா. இல்லையேல் ஆசானே என்று விளித்து ஆசானுக்கு மெயில்தான் அனுப்பப் போகிறார்களா?
பார்ப்பனீயம் கருத்தியல்ரீதியாக அவமதித்ததும், அடக்குமுறைக்கு உள்ளாக்கியதும் பார்ப்பனரல்லாத பிற சாதிகளையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் மட்டுமல்ல. தாழ்த்தப்பட்டவர்களையும், பழங்குடியினரையும் சேர்த்துதான். குறிப்பாக தம் மீது சுமத்தப்பட்ட சாதிய இழிவு நீங்குவதற்காக மதமாற்ற முயற்சிகளில் ஈடுபடும் தாழ்த்தப்பட்டவர்களையும், பழங்குடியினரையும் பார்ப்பனீய ஒடுக்குமுறை இயந்திரம் எப்படி நடத்துகிறது என்பதை சேரிகளிலும், குப்பங்களிலும் வாழ்பவர்கள் அறிவார்கள். மதமாற்றம்தான் நாட்டின் பெரிய பிரச்சினை என்று கருதும் ஜெயமோகன்களுக்கு இந்த கோணமெல்லாம் எந்த காலத்திலும் கண்ணுக்கு படவே போவதில்லை.
ஆசான், சமூகப்பிரச்சினையை அணுகுவதெல்லாம் ‘நான்’ கண்ணாடியில்தான்.
‘நான் கேட்டதே இல்லை’ என்பார். சைதாப்பேட்டை மார்க்கெட்டில் மீன் விற்பவர், ஆசானுக்கு போன் செய்தா பேசுவார்?
‘தனிப்பேச்சுகளில் கூட’ என்பார். ஆசானுடைய விஷ்ணுபுர வாசகர் வட்டத்தில் எத்தனை தலித்கள் இருக்கிறார்கள். இவரிடம் வந்து தனிப்பட்ட முறையில் பேசி, பார்ப்பனீயத்தால் தாங்கள் எப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டிருக்கிறோம் என்று முறையிட.
கிறிஸ்டோபர் நோலன் எப்படி உலக சினிமா இயக்குனர் இல்லை என்பதை அஜிதன் வாயிலாக ஆசான் கண்டுபிடித்தாரோ, அதைப் போலவே சைதன்யா மூலமாகவே பெரியாரிய ஞானமரபு எப்படி பார்ப்பனர்களை பலியாடு ஆக்குகிறது என்பதையும் பார்வதிபுரத்தில் அமர்ந்தவாறே கண்டுபிடித்துவிட்டார்.
அப்புறம், திராவிட இயக்கத்தின் தோற்றமே வடுகர்களின் கசப்புதான் என்கிற ஆசானின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு முக்கியமானது. ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் கொள்கை விளக்கப் பாடத்தை எழுத ஆசானே இதன் வாயிலாக ஆகப்பெரும் தகுதி உடையவர் ஆகிறார்.
தமிழர் vs வடுகர் என்று நாம் பாட்டுக்கு மடை மாற்றிவிட்டு போனோமானால், பார்ப்பனரை இரு தரப்பும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்கிற இந்த பழைய டெக்னிக் இப்போதெல்லாம் ஒர்க்கவுட் ஆவதில்லை ஆசானே. தமிழ்நாட்டை வெறும் முன்னூறு ஆண்டுகள்தான் தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள் என்பதற்கு ஆசானிடம் என்ன தரவு இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற வடுகமன்னர்களை கூட தமிழர்கள் தமிழராக்கிக் கொண்டார்கள் என்பதற்கான தரவுகள் சினிமாவில் கூட வந்துவிட்டது. நாயக்கர்கள் உருவாக்கிய கோட்டை கொத்தளங்களை, கோயில்களை தமிழ் மன்னர்களுடைய சாதனைகளாகதான் தமிழர்கள் பார்க்கிறார்கள். ஆசான் ப்ளீஸ், ஜியோ பாலிடிக்ஸிலும் நீங்க ஸ்ட்ராங்க் ஆகணும். பிராந்திய மொழிரீதியான பிரிவினை 1956ல் உருவானது. அதற்கு முன்னாடி தென்னிந்தியாவே ‘திராவிடஸ்தான்’தான்.
பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் தமிழர் அல்ல என்று போகிறபோக்கில் சொல்லிக் கொண்டு போவது என்பது பார்ப்பனர்கள் திராவிடத்தை தோற்கடித்துவிடலாம் என்கிற நம்பிக்கையில் தூக்கிப்பிடித்த எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் தமிழர் அல்ல என்கிற வாதத்துக்கு சப்பைக்கட்டுதான். கலைஞரை தமிழர் அல்ல என்றெல்லாம் டைப் செய்வதை, டைப் செய்யப்பட்ட கீபோர்டு கூட நம்பாது எனும்போது, அந்த அரதப்பழசான டெக்னிக்கு பதிலாக புதியதாக ஏதேனும் கண்டுபிடிக்கலாம்.
ஒரே ஒரு கட்டுரையில் ஜெயமோகனுக்குதான் எத்தனை வேஷம்?
தலித்குரலை அவர்தான் ஓங்கி ஒலிக்கிறார். அதே நேரம் பார்ப்பனர்கள் பாவம் என்கிற கரிசனமும் அவருக்குதான் இருக்கிறது. வடுகர் ஆதிக்கத்தை எதிர்க்கும் தனித்தமிழ் தேசியவாதியாக திராவிடத்தின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்குகிறார். இப்படியாக திரிசூலம் சிவாஜி மாதிரி த்ரிபிள் ஆக்டிங்கில் ஆசான் அசத்த, அரங்கசாமி மட்டும்தான் விசில் அடிக்கிறார்.
ஜெயமோகனின் வாதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய அம்சம் இடைநிலை சாதிகள், தலித்கள் மீது செலுத்தக்கூடிய அடக்குமுறை குறித்தது. ஆனால் அதை பேசி சண்டை போட்டுக் கொள்ள வேண்டியது தலித்களும், அவர்கள் மீது அடக்குமுறை செய்யக்கூடிய இடைநிலை சாதிகளை சேர்ந்தவர்களும். இரு தரப்பையும் ஏகபோகமாக கருத்தியல்ரீதியாக அடக்குமுறை செய்யக்கூடிய பார்ப்பனீயமோ அல்லது அந்த பார்ப்பனீயத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம் சப்பைக்கட்டு கட்டக்கூடிய ஜெயமோகனோ அல்ல.
பார்ப்பனர்கள் இடையிடையே தலித் ஆதரவு கொடி தூக்கிக் காட்டுவது என்பது, தங்களை சமூக அந்தஸ்துரீதியாக நெருங்கிக் கொண்டிருக்கும் பிற சாதியினரை மட்டுப்படுத்ததானே தவிர, தலித்கள் மீதான அக்கறையால் அல்ல. இம்மாதிரி ஆதரவுக்குரல் எழுப்பும் பார்ப்பனர்களை உற்றுநோக்கினால், அவர்களேதான் பத்ரி ஒலித்திருக்கும் ‘பார்ப்பனர்களை ஒடுக்குகிறார்கள்’ என்கிற புலம்பல்குரலுக்கும் சொந்தக்காரர்களாக இருப்பார்கள்.
‘பார்ப்பனர்களும் ஒடுக்கப்படுகிறார்கள், சாதிய இழிவுக்கு உள்ளாகிறார்கள்’ என்று பத்ரி சொல்வதையோ, அதை ஜெயமோகன் endorse செய்வதையோ ஒப்புக்கொள்ள முடியாது. சேரியில் வசிக்கும் ஒரு தலித் சொல்லட்டும். அப்போது திராவிட இயக்கம் தேவையா இல்லையா என்று பேச ஆரம்பிப்போம்.
பிற்படுத்தப்பட்டவர்களை மட்டுமல்ல. தாழ்த்தப்பட்டவர்களையும் பழங்குடியினரையும் கூட இங்கே திராவிடக் கவசம்தான் காக்கிறது என்றுதான் நம்புகிறோம். ஏனெனில் திராவிடக் கருத்தாக்கம் என்பது பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் இருவருக்கும் இணைந்தேதான் உருவானது. இந்தியாவின் எந்த மாநிலத்தையும் காட்டி தமிழகத்தில் SC/ST மக்களின் வளர்ச்சி என்பது விரைவாக இருப்பதற்கு அதுவே காரணம்.
எனவேதான் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக பார்ப்பனர் vs பார்ப்பனரல்லாதோர் என்பதை பார்ப்பனர் vs பார்ப்பனரல்லாதோர் vs தலித் என்று முக்கோணமாக மாற்றம் செய்யும் முயற்சிகள் நடக்கிறது. பார்ப்பனரல்லாதோரில் தலித்களும், சிறுபான்மையினரும்கூட அடக்கம் என்பதுதான் திராவிடம். அந்த ‘திராவிடம்’ என்கிற சொல்லை அகற்றிவிட்டால், அவாளுக்கு எல்லாமே ஈஸி. ஏற்கனவே பார்ப்பன + தலித் கூட்டணியை சும்மாவாச்சுக்கும் உருவாக்கி, உ.பி.யில் தலித்களை முற்றிலுமாக முடக்கியாயிற்று. அங்கே இனி தலித்கள், பிற்படுத்தப்பட்டோருடன் இணைந்து பணியாற்ற முடியாமல் செய்தாயிற்று. அதே நிலையை தமிழகத்தில் ஏற்படுத்தலாம் என்பதுதான் அவர்களது திட்டம். பழ.நெடுமாறன், சீமான் போன்றவர்களை இந்த திட்டத்தில் இணைத்துக் கொண்டால் இன்னும் கொஞ்சம் சப்தமாக ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ கோஷத்தை ஒலிக்கலாம்.
ஜெயமோகனின் கட்டுரையில் இருப்பது அவரது ‘திராவிட அலர்ஜி’ மட்டுமேதானே தவிர, அது தலித் ஆதரவுக்குரலோ அல்லது தமிழக சமூக பண்பாட்டு ஆராய்ச்சியோ அல்ல.