27 பிப்ரவரி, 2017

ஹானர்ஸ் செல்வகுமார்

 “நீங்க இந்த கல்லூரியில் படிக்க முடியாது” கல்லூரி முதல்வர் சொன்னதுமே கண்கள் இருண்டது செல்வகுமாருக்கு.

“ஏன்?”

“காரணத்தை தனியா சொல்லணுமா? உங்களுக்கே தெரியாதா?”

“பரவாயில்லை. சொல்லுங்க”

“இந்தப் படிப்பு மின்னியல்/மின்னணுவியல் சம்பந்தமானது. நிறைய லேப் ஒர்க் இருக்கும். நடக்க முடியாத உங்களால் ஏதாவது விபத்து நடந்தா பெரிய பாதிப்பு ஏற்படும்”

சிறுவயதில் இருந்தே கனவில் கட்டிய மண்கோட்டை கண் முன்பாக சிதறுவதை கண்டு மனசு உடைந்தார் செல்வா.

லால்குடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் முதலாவதாக வந்த மாணவன். அன்றைய திமுக அரசு அறிமுகப்படுத்தி இருந்த ஒற்றைச்சாளர முறையில் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்திருந்தது. கல்லூரியில் சேருவதற்காக போனபோதுதான் இந்த இடி.

இராமச்சந்திரன் - ஜோதி தம்பதியினரின் மூத்த மகன். செல்ல மகனுக்கு செல்வகுமார் என்று பெயரிட்டு மகிழ்ந்தார்கள். அவர்களது மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. போலியோ பாதிப்பு காரணமாக செல்வாவின் இரு கால்களும் பாதிப்படைந்தது. திருச்சி ஆர்.சி. மேனிலைப் பள்ளியில் சேர்ந்தபோது அவரின் படிப்பு சுமார்தான். அப்பள்ளி தாளாளராக இருந்த தாமஸ் அடிகளார், செல்வாவை பார்த்து கனிவுடன் சொல்கிறார்.

“மை சன்! நீ மத்தவங்களை மாதிரி கிடையாதுன்னு உனக்கே தெரியும். நீ கடவுளோட ஸ்பெஷல் சைல்ட். நடக்க முடியலைன்னு நீ என்னிக்குமே வருத்தப்படக் கூடாது. உன் சொந்தக் காலில் உன்னால் நிற்க முடியும். கல்வி மட்டுமே உன்னை கரைசேர்க்கும். அது மட்டுமே உன்னை உயர்த்தும். இதை நீ எந்தக் காலத்திலும் மறந்துடக் கூடாது”

விளையாட்டுப் புத்தியை அன்றோடு ஏறக்கட்டினார் செல்வா. எப்போதும் புத்தகமும் கையுமாகவே இருந்தார். தந்தைக்கு இடமாற்றல் ஏற்பட்டதால் பன்னிரெண்டாம் வகுப்பை லால்குடி அரசினர் மேனிலைப் பள்ளியில் படித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துகிருஷ்ணனின் ஊக்குவிப்பால், +2 தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவராக தேர்வானார்.

அவருக்குதான் என்ஜினியரிங் அட்மிஷன் கொடுக்க மறுத்தார் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி முதல்வர். தகுதி இழப்பாக, செல்வாவின் கால்கள் காட்டப்பட்டது. சோகத்தில் ஆழ்ந்த பெற்றோரை செல்வாதான் தேற்றினார். ‘அண்ணா பல்கலைக் கழகம் கொடுத்த அட்மிஷனை கல்லூரி முதல்வர் எப்படி மறுக்க முடியும்?’ மீண்டும் தந்தையோடு சென்னைக்கு படையெடுத்தார். போராடி தன்னுடைய உரிமை பெற்றார். எந்த கல்லூரி அவரை சேர்த்துக் கொள்ள முடியாது என்று மறுத்ததோ, அதே கல்லூரியில் அதே துறையில் கம்பீரமாக நுழைந்தார்.

“எல்லா கல்லூரி முதல்வர்களுமே அப்படிதான் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. மாற்றுத் திறனாளிகளை கல்விதான் கரை சேர்க்கும். அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்களும் உண்டு. அடுத்து கல்லூரி முதல்வராக வந்த அபய்குமார், என்னை அணைத்து ஆறுதல் படுத்தினார். கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவரான ராம்கோபால் அவர்களின் வழிகாட்டுதலையும் மறக்க முடியாது. கல்வி தவிர்த்து மற்ற செயல்பாடுகளிலும் என்னை அவர் ஈடுபடுத்தினார். கல்லூரி இறுதியாண்டில் நான் என்.எஸ்.எஸ். தலைவராகி, ஆண்டு விழாவில் சிறந்த மாணவர்களில் ஒருவனாக டிவிஎஸ் நிறுவனம் வழங்கிய பதக்கத்தை பெற்றேன்” என்று கல்லூரி நினைவுகளில் மூழ்குகிறார் செல்வகுமார்.

‘படிப்பு முடியப் போகிறது, அடுத்தது என்ன?’ என்கிற கேள்வி, செல்வாவின் முன்பாக பூதாகரமாக நின்றது. என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு இன்றும் பீதியை ஏற்படுத்தும் வார்த்தை, ‘Next?' என்பதே. உடன் படிக்கும் மாணவர்களில் தொடங்கி, பெற்றோர், உறவினர், சுற்றம், நட்பு அனைவருமே கேட்கும் கேள்வி இதுதானே?

இறுதியாண்டு மாணவராக இருந்த செல்வா, சென்னையில் இருந்த லேசர் சாஃப்ட் நிறுவனர் சுரேஷ்காமத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறார். “ஐயா, என்னால் நடக்க முடியாது. என்னுடைய கால்களுக்குதான் அந்த வலிமை கிடையாதே தவிர, மனசுக்கு மற்றவர்களைவிட கூடுதல் வலிமை உண்டு. நீங்கள் எதிர்ப்பார்ப்பதையும் விட சிறப்பாக பணியாற்ற முடியும். உங்கள் நிறுவனம் எனக்கு வேலை கொடுக்குமா?”

என்ஜினியரிங் இறுதியாண்டு படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவனின் இந்த மின்னஞ்சல் சுரேஷ்காமத்தை உலுக்கியது. “உடனே சென்னைக்கு வா” என்று பதில் கொடுத்தார். நேர்முகத் தேர்வில் பங்கேற்று செல்வா தேர்வானார். படிப்பை முடித்ததுமே வந்து வேலையில் சேர்ந்துக் கொள்ளலாம் என்று நிறுவனம் அவருக்கு சலுகை வழங்கியது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி. நல்ல சம்பளம். லைஃபில் செட் ஆகிவிட்டோம் என்கிற திருப்தி மட்டும் செல்வாவுக்கு கிடைக்கவே இல்லை.

கோபால் புரோகிராமிங்கில் தன்னுடைய திறனை நன்கு வளர்த்துக் கொண்டார். ஐரோப்பிய ஒன்றியம், இந்திய அரசோடு இணைந்து நடத்திய தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கம் ஒன்றில் கலந்துக் கொள்வதற்கான வாய்ப்பு அவருக்கு அமைந்தது. அந்த கருத்தரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் எத்தகைய பணிவாய்ப்புகள் உண்டு என்பதை பற்றி அவர் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப மேற்கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அவர் எடுத்துரைத்தது கருத்தரங்கில் பங்கு பெற்றவர்களை கவர்ந்தது.

அந்த கருத்தரங்கம் செல்வாவின் வாழ்வில் மிகப்பெரிய திறப்பு. அதன் பிறகு தனக்கு வேலை கொடுத்த லேசர் சாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் சுரேஷ்காமத்தை பொறுப்பாளராக்கி மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மையத்தை தொடங்கினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் நாற்பது மாற்றுத் திறனாளிகள் இந்த மையத்தால் உந்துதல் பெற்றார்கள். அவர்கள் அனைவருக்கும் லேசர் சாஃப்ட் நிறுவனமே வேலையும் வழங்கியது.

“எங்கள் சிறப்பு மையத்தில் பயிற்சி பெற்ற ஓர் இளைஞன், ‘மஸ்குலர் அட்ரோபி’ என்கிற அரியநோயால் பாதிக்கப்பட்டவன். அவனால் பணி செய்ய முடியாது என்று நிறுவனத்தின் இரண்டாம் கட்ட அதிகாரிகள் பணி நியமனம் கொடுக்க மறுத்தார்கள். என் இயல்பான போராட்டக் குணத்தின் காரணமாக போராடத் தொடங்கினேன். கடைசியாக சுரேஷ்காமத்திடம் எனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி, அந்த இளைஞனை பணியில் சேர்த்தேன். என்னுடைய வாழ்விலேயே எனக்கு பெரிய நிறைவு கொடுத்த சம்பவம் அது” என்கிறார் செல்வா.

அப்போது தமிழில் blogs எனப்படும் வலைப்பூக்கள் பிரபலமாகத் தொடங்கிய நேரம். செல்வாவுக்கு இயல்பாகவே சமூகநீதிக் கொள்கைகளின் மீதும், தமிழ் மொழியின் மீதும் இருந்த பிடிப்பின் காரணமாக அவரும் வலைப்பூக்களில் எழுத ஆரம்பித்தார். அப்போது அவருக்கு அறிமுகமான ‘விக்கிப்பீடியா’ ரவிசங்கர் மூலமாக, சுவீடனில் இலவச மேற்படிப்பு வாய்ப்புகள் குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. நிறுவனர் சுரேஷ்காமத்திடம் தான் சுவீடனில் படிக்க ஆசைப்படுவதை சொன்னார். அவர் பச்சைக்கொடி காட்ட, தேசிய வங்கி ஒன்றில் கல்விக்கடன் பெற்று சுவீடனுக்கு செல்கிறார். தன்னை போலவே பல தமிழக மாணவர்களும், இந்த இலவச மேற்படிப்பு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் இணையத் தளங்களிலும், வாரப் பத்திரிகைகளிலும் ‘எப்படி சுவீடனில் மேற்படிப்புகளை படிக்க இயலும்?’ என்று கட்டுரைகள் எழுதுகிறார். இவற்றை வாசித்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் செல்வாவை தொடர்பு கொண்டு சுவீடனுக்கு சென்றார்கள். அங்கு கல்வி கற்று நல்ல நிலையில் இருக்கும் பலர் இன்றும் செல்வாவோடு நல்ல நட்பில் இருக்கிறார்கள்.

சாஃப்ட்வேர் என்ஜினியரிங்கில் முதுகலை பட்டத்தை அங்கே பெற்றார். அவருக்கு இப்போது இரண்டு வாய்ப்புகள், வாசல் கதவை தட்டுகிறது. ஒன்று, இத்தாலியில் தகவல் பாதுகாப்பு மற்றும் அகவுரிமைத் துறையில் ஆராய்ச்சி படிப்பிற்கான இடம். அடுத்தது, அவர் வாழ்வில் கற்பனை கூட செய்துப் பார்த்திரான சம்பளத்தோடு மலேசியப் பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளர் பணி. என்ன செய்வது என்று மூளையை கசக்கிக் கொண்டவருக்கு தாமஸ் அடிகளார் சொன்ன அறிவுரை நினைவுக்கு வந்தது. “கல்வி மட்டுமே உன்னை கரைசேர்க்கும். அது மட்டுமே உன்னை உயர்த்தும்”

இத்தாலியில் படிப்புக்கு உதவித்தொகை கிடையாது. இருந்தாலும் பல லட்ச ரூபாய் சம்பளப் பணி வாய்ப்பை உதறிவிட்டு ஆராய்ச்சிப் படிப்புக்காக இத்தாலிக்குச் சென்றார். அங்கே ஆய்வகப் பேராசிரியர்களின் உதவியால், ஆய்வகத்தில் பகுதிநேரப் பணி செய்து சொற்ப வருமானம் கிடைத்தது. அதைவைத்து சமாளித்துக் கொண்டார்.

ஆய்வில் சிறப்பாக கவனம் செலுத்திய அவருக்கு உடனுக்குடன் பலன் கிடைத்தது. முதல் ஆண்டிலேயே முதலீடு செய்யும் திட்டம் ஒன்றில் இடமும், ஆய்வகத்தின் ஆராய்ச்சித்தாளில் செல்வாவின் பெயரும் இடம்பெற்றது. ஐரோப்பாவில் கணினித்துறையில் சாதிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான கூகுள் ஸ்காலர் விருதும் அவருக்கு கிடைக்கிறது. கூகிளின் ஐரோப்பிய தலைமையகம் அமைந்திருக்கும் ஜூரிச் நகரில் நடந்த ஒருவார பயிற்சியரங்கில் கலந்துக் கொண்டார். ஏழாயிரம் ஈரோக்கள் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் ரூபாய்) அவருக்கு சன்மானமாகவும் கொடுத்தார்கள்.
கல்வியில் ஒரு புறம் உயர்ந்துக்கொண்டே சென்றுக் கொண்டிருந்த நிலையில், வாழ்க்கையிலும் ஏற்றம் கண்டார் செல்வா. இவரது கட்டுரைகளை இணையத்தில் வாசித்து வாசகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி சுப்பிரமணியன். செல்வாவுக்கு எப்போதும் விஜயலட்சுமியின் வார்த்தைகள் ஊக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கும். இருவருக்கும் மனம் ஒத்துப்போக இங்கிலாந்தில் திருமணம் நடந்தது. இவர்களது காதலுக்கு பரிசாக இப்போது ஒன்றரை வயதில் கார்த்திக் என்கிற மகன், மழலை பேசிக்கொண்டிருக்கிறான்.

இந்த ஆண்டு தொடக்கம் செல்வாவுக்கு அமோகமாக அமைந்திருக்கிறது. பல்கலைக்கழகத் தேர்வுக் குழுவால், அவரது ஆராய்ச்சி ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. Kerckhoffs Ltd என்கிற தகவல் பாதுகாப்பு மற்றும் அகவுரிமை நிறுவனத்தை இங்கிலாந்தில் தொடங்கியிருக்கிறார். தொழில்நுட்ப சிறுநிறுவனங்களை ஊக்குவிக்கும் பிரிட்டிஷ் அரசக் குடும்பத்தினர் முதலீடு செய்யும் அறக்கட்டளையில் இவரது தொழில்நுட்ப முன்மாதிரியை சமர்ப்பிக்கக்கூடிய அரிய வாய்ப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

ஐந்தாண்டு ஆராய்ச்சிகளுக்கு முனைவர் பட்டத்தை டென்ஷனோடு எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவருக்கு இன்ப அதிர்ச்சியை பல்கலைக்கழக தேர்வுக்குழு வழங்கியிருக்கிறது. யெஸ். டாக்டரேட் பட்டத்தோடு சேர்த்து ‘ஹானர்ஸ்’ பட்டமும் வழங்கி கவுரவித்திருக்கிறார்கள். தன்னுடைய ஆராய்ச்சி நூலில் இந்தியாவில் சமூகநீதி காத்த தலைவர்களான பெரியார், அண்ணா, கலைஞர், வி.பி.சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

“தமிழகத்தில் என்ஜினியரிங் கல்வியையே போராடி பெற முடிந்த நிலையில் இருந்த நான், இன்று ஐரோப்பாவில் ஹானர்ஸ் பட்டம் பெறுமளவுக்கு வளர்ந்திருப்பதற்கு அங்கே சமூகநீதி சிந்தனைகள் தோற்றுவித்து, செயல்பாட்டுக்கு கொண்டுவர பெரும் முயற்சி செய்த தலைவர்களே காரணம். எனவேதான் என்னுடைய நூலில் அவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தேன்” என்று சொல்கிறார் செல்வா.

பொதுவாக மாற்றுத் திறனாளிகள் தங்கள் மீது யாரேனும் அனுதாபம் செலுத்தினால் அதை விரும்ப மாட்டார்கள். ஆனால், அதைப்பற்றி செல்வா அலட்டிக் கொள்வதில்லை.

“அனுதாபம் என்பதும் ஒருவகை அன்புதான். அதை மறுக்கக்கூடாது. நாம் மற்றவர்களிடமிருந்து கொஞ்சம் மாறுபட்டிருக்கிறோம் என்று அவர்கள் நம் மீது அன்பு செலுத்துகிறார்கள். திருப்பரங்குன்றம் கோயில் படிகளில் நான் தவழ்ந்து ஏறும்போது சில வடநாட்டு யாத்ரீகர்கள் காசு கொடுப்பார்கள். கவுரவம் பார்க்காமல் அதை வாங்கிக் கொள்வேன். மகிழ்ச்சியோடு போவார்கள். அந்த காசை கொண்டுபோய் கோயில் உண்டியில் போடுவேன். ‘பிச்சைக்காரன்னு நெனைச்சியா?’ என்று அவர்களிடம் நான் கோபத்தை காட்டியிருந்தால், அவர்களது அன்பை மறுக்கக்கூடியவனாக ஆகியிருப்பேன். ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கர் விருது வாங்கும் மேடையில் சொன்னாரே, ‘அன்பு வழி என் வழி’ என்று. என்னுடைய வழியும் அதுதான். அன்பு வழியை தேர்ந்தெடுப்பவர்களுக்கு தோல்வியே இல்லை” என்று உணர்ச்சிப் பூர்வமாக பேசுகிறார்.

“ஓக்கே செல்வா. நெக்ஸ்ட்?”

“இப்போதெல்லாம் ‘நெக்ஸ்ட்?’ என்கிற கேள்வி என்னை பயமுறுத்துவதில்லை. மாறாக, அடுத்தடுத்து இந்த கேள்வி கேட்கப்பட்டால்தான் அடுத்தடுத்து ஏதாவது செய்துக்கொண்டே இருக்க முடியுமென்று நினைக்கிறேன். என்னுடைய நிறுவனம் சம்பாதிக்கக்கூடிய லாபத்தில் ஒரு பகுதியை, என்னை வளர்த்த சமூகத்துக்கு செலவழிக்க வேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறேன். தமிழகத்தில் பொறியியல் கல்லூரி ஒன்றில் தகவல் பாதுகாப்பு மற்றும் அகவுரிமை ஆய்வகத்தை அமைத்து, நம் மாணவர்களுக்கு மேம்பட்ட சிறப்பு வாய்ப்புகளை வழங்கும் திட்டமிருக்கிறது” என்கிறார் ஹானர்ஸ் செல்வகுமார்.

(நன்றி : தினகரன் வசந்தம்)

21 பிப்ரவரி, 2017

மசால்வடைக்கு ஆசைப்பட்டு பொறியில் சிக்கிய பாகிஸ்தான்!


 டிசம்பர் 3, 1971.

விசாகப்பட்டினம் நகரமே பரபரப்பில் ஆழ்ந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக ரேடியோ செய்திகளை கேட்காத காதுகளே நகரத்தில் இல்லை.

“பாகிஸ்தான் நமது நகரத்தை தாக்கப் போகிறதாமே?” என்று ஒருவருக்கு ஒருவர் கவலையோடு பேசிக் கொண்டார்கள். எப்படி தாக்கப் போகிறது, எங்கிருந்து தாக்கப் போகிறது என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. எப்படியோ கசிந்த இந்த தகவலால், நகரை விட்டு பலர் வெளியேறியும் விட்டார்கள்.

இரவு ஒன்பது மணி இருக்கலாம்.

‘பூம்’

வானமே இடிந்து விசாகப்பட்டினம் நகரத்தின் மீது விழுந்து விட்டதோ என்று ஐயப்படுமளவுக்கு விபரீதமான சப்தம். பூமி அதிர்ந்ததை போல உணர்வு. அச்சத்தில் மக்கள் சிதறி ஆங்காங்கே ஓடுகிறார்கள். நடுங்கியவாறே தெருக்களில் திரளுகிறார்கள்.

அந்த சப்தத்துக்கு பிறகு நெடிய அமைதி. மயான அமைதி.

என்ன நடந்தது, ஏது நடந்தது என்று யாருக்குமே தெரியவில்லை.

அடுத்த நாள் இந்திய கடற்படை அறிவித்தது. பாகிஸ்தானின் நீர்மூழ்கிக் கப்பலான PNS Ghazi, விசாகப்பட்டினம் கடல் எல்லையில், இந்திய நேவியால் வீழ்த்தப்பட்டது.

கடந்த சில நாட்களாகவே இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் கடலுக்கு அடியில் நடந்துக் கொண்டிருந்த போர் அப்போதுதான் எல்லோருக்கும் வெட்டவெளிச்சமானது. S21 என்கிற இந்திய நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த வீரர்கள் பதினெட்டு நாட்கள் போராடி, விசாகப்பட்டினம் நகரை பாகிஸ்தான் தாக்குதலில் இருந்து காப்பாற்றினார்கள். இந்த தாக்குதல்தான் 1971 இந்திய - பாகிஸ்தான் போரில் இந்தியாவுக்கான வெற்றிக்கு அச்சாரமாக அமைந்தது.

ஆயினும்-

இன்றுவரை என்னதான் நடந்தது என்பது பற்றிய விலாவரியான தகவல்கள் இல்லை. வங்கக் கடலின் ஆழத்தில் புதைந்துப் போன அந்த கதையைதான் ‘The Ghazi Attack’ திரைப்படம் காட்சிகளாக நமக்கு காட்டுகிறது.
இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில், ‘இந்தியாவின் முதல் கடற்போர் திரைப்படம்’ என்று அறிவிக்கப்பட்டு வெளியாகி இருக்கிறது. முறையே இந்திக்கு அமிதாப் பச்சனும், தெலுங்குக்கு சிரஞ்சீவியும், தமிழ் வெர்ஷனுக்கு சூர்யாவும் குரல் கொடுத்திருக்கிறார்கள். ராணா, டாப்ஸி, கேகே மேனன், அதுல் குல்கர்னி, ஓம்பூரி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த போர் வெற்றியின் பெருமையை இந்திக்காரர்களும், தெலுங்குக்காரர்களும் மட்டுமே பங்கிட்டுக் கொள்கிறார்களே என்று தமிழனாக உங்கள் ரத்தம் கொதிப்பது புரிகிறது.

ப்ளீஸ், வெயிட். முழுசாக சொல்ல விடுங்கள்.

தமிழனும் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

படத்துக்கு இசையமைத்திருப்பது நம்ம கே. அவரேதான். ‘யுத்தம் செய்’, ‘முகமூடி’ உள்ளிட்ட படங்களுக்கு மியூசிக் போட்டாரே, அதே கே-தான். கேமிராமேனும் ‘வெயில்’, ‘பையா’, ‘ஜீவா’வுக்கெல்லாம் வேலை பார்த்த அதே மதிதான். எடிட்டர், நம்ம ஆளு ஸ்ரீகர்பிரசாத். இந்தியாவின் முதல் கடற்போர் திரைப்படத்தில் தமிழ் டெக்னீஷியன்களின் ஆதிக்கம்தான் கொடிகட்டிப் பறக்கிறது.

சரி, படத்தை விடுங்கள். கொஞ்சம் வரலாற்றைப் புரட்டுவோம்.

நவம்பர் 14, 1971. நேருவின் பிறந்தநாளில்தான் PNS Ghazi நீர்மூழ்கி ஒரு ரகசிய ஆபரேஷனுக்காக கராச்சி துறைமுகத்தில் இருந்து கிளம்புகிறது. இந்திய கப்பற்படையின் பெருமையான INS Vikrant, விமானம் தாங்கி போர்க்கப்பலை மூழ்கச்செய்து, இந்தியாவின் கடற்படை வலிமையையும், போர்விமானங்களின் எண்ணிக்கையையும் குறைப்பதுதான் அந்த ஆபரேஷனின் நோக்கம். அப்போது விக்ராந்த், விசாகப்பட்டினம் அருகே நிலைக்கொண்டிருந்தது என்று ரகசியத் தகவல் பாகிஸ்தானுக்கு கிடைத்தது.

எனவேதான் Ghazi, வங்கக்கடலுக்குள் நுழைந்து விசாகப்பட்டினம் நோக்கி விரைந்து வந்தது. பாகிஸ்தானுக்கு கிடைத்த தகவல், பொறிக்காக வைக்கப்பட்ட மசால்வடை என்பதை அவர்கள் அறியவில்லை. அப்போது இந்திய கிழக்கு கடற்பரப்புக்கு பொறுப்பேற்றிருந்த வைஸ் அட்மிரல் கிருஷ்ணன்தான் ரேடியோ சிக்னல்களை குழப்பி பாகிஸ்தானுக்கு தவறான தகவல் கிடைக்குமாறு செய்தார். உண்மையில் விக்ராந்த் போர்க்கப்பல், அந்தமான் தீவுகளுக்கு இடையே எங்கோ பாதுகாப்பான இடத்தில் ஒளிந்துக் கொண்டிருந்தது.

விக்ராந்த் இருப்பதாக பாகிஸ்தான் நீர்மூழ்கி Ghazi நம்பி வந்து சேர்ந்தபோது, விசாகப்பட்டினத்தில் அதை எதிர்கொண்டது INS Raput. இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்திலிருந்து கடற்போரின் தாதாவாக, பெரும் அழிவுசக்தியாக செயல்பட்ட கப்பல் இது.

பாகிஸ்தான் எப்படி இந்த வலையில் மாட்டியது?

அங்கேதான் இந்திய போர்த் தந்திரம் எவ்வளவு சிறப்பானது என்பதை நாம் உணரமுடிகிறது. சில நாட்களுக்கு முன்பாக வேண்டுமென்றே விக்ராந்த், விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிலைநிறுத்தப் படுவதாக தகவல்கள் பரப்பப்பட்டது. அந்தக் கப்பலில் இருந்த சுமார் ஆயிரம் நேவி வீரர்கள் நகரத்துக்கு வந்திருப்பதாகவும், அவர்களுக்கு நகரில் இருந்த மார்க்கெட்டுகளில் இருந்து உணவுப் பொருட்கள் வாங்கப்பட்டதாகவும் ஒரு பொய்யான தோற்றத்தை இந்தியா உருவாக்கியது. மேலும் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு ரேடியோ வாயிலாக பேசிய கடற்படை அதிகாரிகள் இந்தப் பொய்யான தகவல்களை உண்மை போன்ற தொனியில் ரொம்ப சீரியஸாகவே பேசினார்கள்.

விசாகப்பட்டினத்தில் இருந்த உளவாளிகள் மூலமாகவும், பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் ரேடியோ அலைகளை மறித்து ஒட்டுக் கேட்டதின் காரணமாகவும் விக்ராந்த், விசாகப்பட்டினத்தில்தான் இருக்கிறது என்று பாகிஸ்தான் உறுதியாக நம்பியது. அதற்கேற்ப Ghazi attack நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே இரவுகளில் விசாகப்பட்டினம் தெருவிளக்குகள் அணைக்கப்பட்டன. மக்கள் தெருக்களில் நடமாட தடை செய்யப்பட்டார்கள். எனவே, மக்களும் கூட தங்கள் நகரில் போர் நடக்கப் போகிறது என்றே பதட்டமடையத் தொடங்கி இருந்தார்கள்.

Ghazi நீர்மூழ்கிக் கப்பல் விசாகப்பட்டினத்தில் நிலைகொண்ட நிலையில் சிறுபடகுகள் மூலமாக பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் நகருக்குள் மாறுவேடத்தில் நுழைந்திருக்கிறார்கள். பதட்டமாக இருந்த மக்களையும், நகரில் அசாதாரணமாக நிலவிய நிலைமையையும் நேரிடை சாட்சியாக கண்டவர்கள், கண்டிப்பாக விக்ராந்த் போர்க்கப்பல் இங்கிருக்கும் துறைமுகத்தில்தான் இருக்கிறது என்று உறுதியாகவே நம்பினார்கள்.

இந்த நிலையில்தான் டிசம்பர் 3 அன்று, கட்டுரையின் தொடக்கத்தில் நாம் கேட்ட ‘பூம்’ சப்தம் கேட்டது.

இந்த ‘பூம்’ சப்தம், எதிரிகளை அழிக்கும் போர்க்கப்பலான ராஜ்புத்தின் சாதனையென்று இந்தியத் தரப்பு அறிவித்தது. ஆழ்கடல் தாக்குதலை நாங்கள் நடத்தி Ghaziயை மூழ்கடித்தோம் என்று கப்பற்படை அதிகாரிகள் சொன்னார்கள்.
ஆனால்-

பாகிஸ்தானோ இதை மறுத்தது. கடலுக்கு அடியில் இருந்த பாறைகளில் தெரியாத்தனமாக (?) தங்கள் நீர்மூழ்கி மோதி விபத்து ஏற்பட்டே Ghazi வீழ்ந்தது என்று சப்பைக்கட்டு கட்டியது.

விக்ராந்த் போர்க்கப்பல் அப்போது எப்படி Ghaziயின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு வங்கக்கடலில் மறைந்தது என்பதை பற்றி வைஸ் அட்மிரல் கிருஷ்ணன் எழுதிய புத்தகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நீர்மூழ்கி மூலமாக விக்ராந்த் தாக்கப்படலாம் என்கிற தகவல் கிடைத்ததுமே, அந்த கப்பலை சுற்றி நான்கு பாதுகாப்பு கப்பல்கள் நிறுத்தப்பட்டு அந்தமானுக்கு அருகில் ஓர் மறைவிடத்தில் நிறுத்தினோம். பாதுகாப்பு கப்பல்களில் மூன்று கப்பல்கள் நீருக்கு அடியில் ஏதேனும் கப்பல் வருவதாக இருந்தால் sonar அலைகள் மூலமாக காட்டிக் கொடுத்துவிடும். அவ்வாறு எப்படியோ எல்லோர் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு ghazi, விக்ராந்தை நெருங்கியிருந்தாலும் போட்டுத்தள்ள அத்தனை ஏற்பாடுகளும் தயாராகவே இருந்தன. எனினும், நம் நாட்டின் பெருமையாக விளங்கிய விக்ராந்தின் விஷயத்தில் எந்தவொரு சின்ன ரிஸ்க்குமே எடுக்கக்கூடாது என்றுதான் விசாகப்பட்டினம் நாடகம் ஆடி, அவர்களை அலைக்கழித்து வீழ்த்தினோம் என்று அந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.

Ghaziயின் உடைந்து சிதறிய சில பாகங்கள் கண்டெடுக்கப்பட்டு, விசாகப்பட்டினம் மியூசியத்தில் இப்போதும் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. விசாகப்பட்டினம் கடலுக்கு அடியில்தான் இன்னமும் Ghazi மூழ்கிக் கிடக்கிறதாம்.

நிஜத்தில் நடந்த இந்த கதையைதான் கற்பனை கலந்து நமக்கு படமாக கொடுத்திருக்கிறார்கள். சரி, விக்ராந்த்?

Ghazi மூழ்கடிக்கப்பட்ட மூன்றாவது நாள், விக்ராந்த் கம்பீரமாக வெளிவந்தது. கிழக்கு பாகிஸ்தானை நோக்கிச் சென்றது. தன்னுடைய விமானங்களை விண்ணில் ஏவி, பாகிஸ்தான் ராணுவத்தை மண்டியிட வைத்தது.

(நன்றி : தினகரன் வெள்ளிமலர்)

7 பிப்ரவரி, 2017

எனக்கு வாய்த்த அடிமைகள்!

முதல்வர் பதவியின் மீது காதலாக இருக்கும் வைகோவுக்கு அந்த கனவு 1996லேயே புட்டுக் கொள்கிறது. எனவே 2016ல் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிக்கிறார்.

தான் தற்கொலை செய்துக் கொள்ளப் போவது குறித்து ஜி.ரா., முத்தரசன் மற்றும் திருமாவளவன் ஆகிய நண்பர்களுக்கு தகவல் அனுப்புகிறார். ஆரம்பத்தில் இந்த விஷயத்தை விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் நண்பர்கள், வைகோவை தற்கொலை முயற்சியில் இருந்து தடுக்க முயற்சிக்கிறார்கள்.

இந்த தடுப்பு முயற்சியில் ஈடுபடும் ஈடுபடும் மூன்று நண்பர்களுமே ஒருக்கட்டத்தில் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோமில் சிக்கி அவர்களும் வைகோவாகவே ஆகிவிடுகிறார்கள். மநகூ என்கிற பெயரிலான கொடிய விஷத்தை அருந்தி தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்று அதிரடி முடிவெடுக்கும்போது, வைகோவுக்கு திடீரென இன்னொரு நண்பரான விஜயகாந்தின் நினைவு வருகிறது. அவரையும் இந்த செத்து செத்து விளையாடும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாமே என்று அவர் சொல்லும் ஆலோசனையை, நண்பர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

‘குகனோடு சேர்ந்து ஐவரானோம்’ கணக்காக தங்கள் மநகூ திட்டத்தை கேநகூவாக மாற்றி ஒட்டுமொத்தமாக கூட்டுத் தற்கொலை செய்துக் கொள்வதே பரபரப்பான இறுதிக்காட்சி. இந்த தற்கொலையை வேடிக்கை பார்க்கவரும் வாசனும் ஒரு வேகத்தில்  விஷப்புட்டியை கல்ப்பாக வாயில் கவிழ்த்துக் கொள்வது எதிர்பாராத திருப்பம்.

கிளைமேக்ஸ் ட்விஸ்ட்டாக மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தோன்றி, “எனக்கு வாய்த்த அடிமைகள் திறமைசாலிகள்” என்று பஞ்ச் டயலாக் அடிக்கும்போது, தற்கொலை செய்துக் கொண்ட அடிமைகள் புளங்காங்கிதப்பட்டு சொர்க்கத்தில் இருந்து தண்டனிடும் காட்சியில் விசில் சப்தம் விண்ணைப் பிளக்கிறது.

ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்டாக அந்த கூட்டுத் தற்கொலையில் வைகோ அருந்தியது விஷமே அல்ல என்பது தெரிய வருவதற்குள்ளாகவே மற்ற அடிமைகளுக்கு உயிர் போய் விடுகிறது. வைகோ பாட்டுக்கும் அருவாளை தூக்கிக் கொண்டு கருவேலமரங்களை வெட்டப்போய் விடுகிறார் என்கிற ஃபீல்குட் எஃபெக்டோடு படம் முடிகிறது.

அம்மாவுக்கு மட்டுமே அடிமைத்தனம் காட்டிவந்த இந்த கலிங்கப்பட்டி கருவேலம், இனி சின்னம்மாவின் அடிமையாகவும் சீறுகொண்டு எழும் என்கிற டைட்டிலுக்கு கீழே Written & Directed by : M.Natarajan, Co-Director : Pazha.Nedumaran என்கிற பெயர்கள் வரும்போதும் ரசிகர்களின் ஆரவாரம் கட்டுக்கடங்காமல் போகிறது.

அடிமைகளின் காமெடி அமர்க்களமாக எடுபட்டிருப்பதால், படம் குறைந்தபட்சம் ஆயிரத்து ஐநூறு கோடியாவது வசூலிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

2 பிப்ரவரி, 2017

கமால் ஹாசன்

"என்ன ரங்கராஜன் சொல்றீங்க? கமல் ஒரு முஸ்லீம். எனக்கு நல்லாவே தெரியும்”

“சார். எனக்கு அவங்க ஃபேமிலியை நல்லாவே தெரியும். கமல் ஒரு அய்யங்காரு. அவங்க அப்பா லாயரு”

“பாருங்க ரங்கராஜன். நான் சொல்றதை கேளுங்க. அவரோட பேரு கமால் ஹாசன். சினிமாவுக்காக பாலச்சந்தர் கமல்ஹாசன்னு மாத்தியிருக்காரு. அவங்க அண்ணனுங்க பேரெல்லாம் கூட பாருங்க ஹாசன்னுதான் முடியும்”

ரா.கி.ரங்கராஜனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. எல்லாம் தெரிந்த எடிட்டருக்கு ஏன் இந்த சின்ன விஷயம் போய் தெரியவில்லை. அதுவும் அவர் சொல்வதுதான் சரி என்று சின்னக் குழந்தை மாதிரி அடம் பிடிக்கிறாரே? இத்தனைக்கும் கமல் பற்றியும், அவரது குடும்பம் பற்றியும் தமிழ்நாட்டுக்கே ரொம்ப வருஷமாக தெரியுமே?

ரா.கி.ரங்கராஜன் எடிட்டரிடம் சமரசத்துக்கு வருகிறார்.

“ஒண்ணு செய்யலாம் சார். நம்ம செல்லப்பாவை அனுப்பி கமலோட அப்பா கிட்டேயே பேசவைக்கிறேன்”

எடிட்டர் இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக் கொள்கிறார். செல்லப்பா, குமுதம் இதழின் நிருபர்.

கமல்ஹாசனின் தந்தை சீனிவாசன் அப்போது சென்னையில்தான் இருந்தார். செல்லப்பா அவரை சந்தித்து பேசினார். ஹாசன் என்கிற பெயரில் தனக்கு ஒரு நண்பர் ஜெயிலில் (சீனிவாசன், சுதந்திரப் போராட்டத்தில் சிறைசென்ற காங்கிரஸ்காரர்) இருந்ததாகவும், அவரது நினைவாகவே தன் குழந்தைகளுக்கு ஹாசன் என்கிற பெயரை சூட்டியதாகவும் சொல்கிறார்.

“எம்புள்ளையை தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோன்னு சொல்லுறாங்க. ஆனா, ஒருநாள் கூட அவன் என்னை ஷூட்டிங்குக்கு கூட்டிக்கிட்டு போனதே இல்லை”

“சார், நான் வேணும்னா உங்களை ஷூட்டிங்குக்கு கூப்பிட்டுக்கிட்டு போகட்டா?”

“ஓக்கேப்பா. ஆனா, எனக்கு கமல் ஷூட்டிங் பார்க்க ஆசையில்லை”

“ரஜினி ஷூட்டிங்?”

“அதுவும் வேணாம். சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே. எனக்கு சிலுக்கு சுமிதாவை ரொம்பப் பிடிக்கும். அந்தப் பொண்ணு நடிக்கிற ஷூட்டிங்கைதான் பார்க்கணும்”

ஆபிசுக்கு திரும்பிய செல்லப்பா, கமலின் தந்தையை சந்தித்துப் பேசியதையும், அவர் அய்யங்கார்தான் என்பதையும் எடிட்டரிடம் உறுதிப்படுத்துகிறார். கூடவே, சிலுக்குவை அவர் பார்க்க ஆசைப்பட்டதையும்.

“அப்போன்னா நான்தான் இவ்ளோ நாளா தப்பா நினைச்சுக்கிட்டு இருந்தேனா? சரி செல்லப்பா. அவங்க அப்பா ஆசைப்பட்ட மாதிரியே சிலுக்கு ஷூட்டிங்குக்கு கூட்டிக்கிட்டு போங்க. அதை அப்படியே ஒரு ஸ்டோரியா எழுதிக் கொடுத்துடுங்க”

குமுதம் செல்லப்பா ஏற்பாட்டில் ஒரு ஷூட்டிங்கில் சிலுக்கை சந்திக்கிறார் சீனிவாசன். சில நாட்கள் கழித்து பரமக்குடிக்கு திரும்பியதும் சிலுக்கை தான் சந்தித்த நிகழ்வை ‘ஜில்’லென்று எழுதி குமுதத்துக்கு கடிதமாக அனுப்புகிறார். அதற்குள் செல்லப்பா எழுதிய கட்டுரை குமுதத்தில் அச்சாகி விட்டதால், சீனிவாசனின் சிலுக்கு கட்டுரையை பிரசுரிக்கவில்லை.

ரா.கி.ரங்கராஜன் மூலமாக பின்னர் சிலுக்கு குறித்து தன் தந்தை இப்படியொரு கடிதம் எழுதியதை அறிந்தார் கமல். அந்த கடிதத்தை குமுதம் அலுவலகத்தில் கேட்டு வாங்கிக் கொண்டவர், பத்திரமாக இன்னும் பாதுகாத்து வைத்துக் கொண்டிருக்கிறார்.