நாடு சுதந்திரமடைந்த காலக்கட்டத்தில் பிறந்தவர்கள் வித்தியாசமான பிறவிகள். இதுவரையிலான உலகின் செயல்பாடுகள் எல்லாவற்றையுமே தங்களால் மாற்றிவிட முடியும் என்று உறுதியாக நம்பியவர்கள்.
இந்தியாவை வளர்ந்த நாடுகளின் வரிசையில் நிலைநிறுத்தியே ஆகவேண்டும் என்கிற நேருவின் ஆவேசமான முயற்சிகள் இந்த தலைமுறையினருக்குள் ஆழமான தாக்கத்தை உருவாக்கி இருந்தது. தங்கள் வாழ்நாளிலேயே பொன்னுலகை கண்டுவிட முடியும் என்று நம்பினார்கள். அந்த பொன்னுலகை நிறுவப் போகிறவர்களே தாங்கள்தான் என்கிற எண்ணமும் அவர்களுக்குள் இருந்தது.
நேரு காலமானதற்கு பிறகான நாட்டின் அரசியல் சூழல் அவர்களுக்குள் ஆரம்பத்தில் ஏமாற்றத்தைத் தந்தது. இந்திராகாந்தியின் அரசியல் செயல்பாடுகள் ஒருக்கட்டத்தில் அவர்களை கோபக்கார இளைஞர்களாக உருமாற்றியது. எதற்கெடுத்தாலும் ஆவேசமான எதிர்வினை என்பது அவர்களது இயல்பானது. ஏழ்மையை வெறுத்தார்கள். நாட்டில் ஏழ்மையே இருக்கக்கூடாது, ஒரே ஒரு பிச்சைக்காரனைகூட கண்ணில் காணக்கூடாது என்பது அவர்களது இலட்சியமாக இருந்தது. அவர்கள் கண்ணால் காணாத தேசங்களில் பிச்சைக்காரர்களே இல்லை, அயல்நாடுகள் எல்லாம் சொர்க்கங்கள் என்கிற மூடநம்பிக்கையும் அவர்களுக்கு ஊடகங்களால் விதைக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக, எமர்ஜென்ஸி.
எழுபதுகளில் இளைஞர்களாக இருந்தவர்கள் லட்சியவேட்கையோடு இருந்தார்கள் என்றால், அவர்கள் எமர்ஜென்ஸியை நேருக்கு நேராக சந்தித்தவர்கள் என்பதே முக்கியமான காரணம். இந்திய ஜனநாயகத்தின் மோசமான இன்னொரு பக்கத்தை தரிசித்தவர்கள். ஜெயப்பிரகாஷ் நாராயனின் ஊழல் எதிர்ப்பு இயக்கமும் அவர்களுக்குள் கனன்றுக் கொண்டிருந்த நெருப்பை ஊதிப்பெருக்கியது.
இந்த மனோபாவம் கலை இலக்கியத் துறைகளிலும் வெளிப்பட்டது. சந்தத்தோடு மரபுக் கவிதைகள் பாடிக் கொண்டிருந்த கவிஞர்களை நிற்கவைத்து, இந்த கவிதைகளால் மக்களுக்கு என்ன பிரயோசனம் என்று கேள்வி கேட்டார்கள். நெஞ்சை நக்கும் சிறுகதைகளாலும், அழகியல் உணர்வோடு வரிக்கு வரி செதுக்கப்பட்ட நாவல்களாலும் புரட்சி எப்படி சாத்தியப்படும் என்று விமர்சனம் வைத்தார்கள்.
குறிப்பாக எழுபதுகளின் இறுதி இந்த இளைஞர்களின் அனல் கக்கும் விமர்சனங்களால் வெப்பமயமாய் இருந்தது. தமிழில் குறும்படம் எடுக்கக்கூடிய முயற்சி இந்த ஆவேச மனோபாவத்தின் வெளிப்பாடு என்று சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகதான் இருக்கும்.
தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், மனோபாலா, ராபர்ட் - ராஜசேகரன், பி.வாசு, பி.சி.ஸ்ரீராம், ருத்ரைய்யா, ஸ்ரீப்ரியா, ஜெயபாரதி என்று கலகக்காரர்கள் சினிமாவை மாற்றியே ஆகவேண்டும் என்று வெறியோடு திரிந்தார்கள். மாற்ற முடிந்ததா என்பதற்கு சமீபத்தில் வெளியான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ போன்ற படங்களே பதில். இலக்கியம் பற்றி சொல்லவே வேண்டாம். இன்று ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டாலே, அதைத் தொகுத்து இலக்கியமாக்கி புத்தகமாகக் கொண்டுவந்துவிடலாம்.
அப்போது, எழுத்துலகில் பாலகுமாரன், மாலன், சுப்பிரமணியராஜூ என்று மூவேந்தர்கள். இளைஞர்களான இவர்களுக்கு பதில் சொல்லியே பழம்பெருசுகளுக்கு தாவூ தீர்ந்தது. இலக்கியக் கூட்டங்களில் இந்த மூவரணியைப் பார்த்தாலே ‘ஏதோ கலாட்டா நடக்கப்போவுது’ என்று பயந்தார்கள். ‘நாங்கள்தான் உங்கள் மெசைய்யாக்கள். வாசகர்களே எங்களிடம் வாருங்கள்’ என்று இயேசுமாதிரி அழைப்பார்களாம். அசோகமித்திரனின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த ‘கணையாழி’ இவர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்தது. ஜோல்னாப்பையை துறந்து ஸ்டைலான லுக்கில் வெளிப்பட்ட முதல் தலைமுறை இலக்கியவாதிகள் இவர்கள்தான் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர்கள்.
குமுதத்தில் ஒரு பக்கக் கதை எழுதினால் கூட அதில் சமூகத்துக்கு ஏதோ ஒரு மெசேஜ் இருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் இவர்கள். சிற்றிதழ் மரபுக்கும், வெகுஜன இலக்கிய கலாச்சாரத்துக்குமான இடைவெளியை சரிசெய்ய நினைத்தவர்கள். அர்த்தமற்ற அலங்கார போதனைகளை கடுமையாக வெறுத்தார்கள். ஒருவகையில் பார்க்கப் போனால் முந்தைய தலைமுறையின் அர்த்தமற்ற மதிப்பீடுகளை, நாசூக்கு பார்க்காமல் கேள்வி கேட்கும் சுதந்திரத்தை நமக்கு பெற்றுக் கொடுத்த தலைமுறையினர் இவர்கள்தான்.
‘எப்படி கதை எழுத வேண்டும்?’ என்று பழசுகளுக்கு கிளாஸ் எடுக்கும் விதமாக ‘ஒரு தலைமுறையின் பதினோரு சிறுகதைகள்’ என்கிற நூலை ‘மாலன்’ நடத்திய ‘வாசகன்’ சிற்றிதழ் கொண்டுவந்தது. இதில் அன்றைய இளைஞர்களான ஆதவன், பாலகுமாரன், வண்ணதாசன், சுப்பிரமணியராஜூ, ஜெயபாரதி, மாலன், இந்துமதி, சிந்துஜா, எம்.சுப்பிரமணியன், கலாஸ்ரீ, அக்ரிஷ் ஆகியோரின் கதைகள் இடம்பெற்றன. இந்தத் தொகுதியின் அட்டைப்படத்தை வரைந்தவர் பாலகுமாரன். யெஸ், அப்போது கலைஞன் என்றால் எழுத்து, ஓவியம், லொட்டு, லொசுக்கு எல்லாவற்றிலும் மாஸ்டராக இருந்தாக வேண்டும்.
இந்த நூலுக்கான வெளியீடு வித்தியாசமான முறையில் (ஏனெனில் இவர்கள் மற்றவர்களிலிருந்து வித்தியாசமானவர்கள் ஆயிற்றே?) ஏற்பாடு செய்யப்பட்டது. மனோபாலா (இப்போது சினிமாக்களில் காமெடியனாக நடிக்கும் இயக்குநரேதான்) வரைந்த ஓவியங்களின் கண்காட்சி நடத்தப்பட்டு, அதில் புத்தகம் வெளியிடப்பட்டது. சுஜாதா, கமல் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு வித்தியாசமான இந்த விழா முயற்சியை பாராட்டினார்கள்.
மனோபாலா நடத்திய ‘வித்தியாசமான’ ஓவியங்கள் கணக்காக, வித்தியாசமான படங்கள் எடுக்கப்பட வேண்டும் என்பது மாலனின் கான்செப்ட். மூன்றிலிருந்து ஐந்து அல்லது ஆறு நிமிடங்களுக்கு ஒரு சிறுகதையை (ofcourse, with an strong social message) படமாக எடுப்பது என்று பேசினார்கள். இவரது முயற்சிக்கு நான்கைந்து பேர் ‘ஜே’ போட ஆளுக்கு ஒரு படம் எடுப்பதாக சபதம் செய்தார்கள்.
அப்போதெல்லாம் ஆவணப்படங்கள் எடுப்பதுண்டு. இதுபோல குறும்படங்களை யாரும் எடுத்ததில்லை. அந்த நாட்களில் வீடியோ கேமிராவே புழக்கத்துக்கு வரவில்லை. திரைப்படங்கள் 35 MM ஃபிலிமில் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. அந்த ஃபிலிம் கொஞ்சம் காஸ்ட்லிதான். பணக்காரர்கள் வீட்டு திருமணங்கள் மட்டும் 8 MM ஃபிலிமில் ரெக்கார்ட் செய்யப்படுவது வழக்கம்.
கல்யாணப் படத்துக்கும், சினிமாப் படத்துக்கும் இடையிலான 16 MMல் படம் எடுக்க மாலன் திட்டமிட்டார்.
‘நகரவாழ்க்கையின் இயந்திரத்தனம், அதிலிருந்து விடுபட்டு ஓர் இளைஞன் இயற்கைத்தாயின் மடியில் இளைப்பாறுவது’ என்று ஒன்லைனர் பிடித்தார். இந்த இளைப்பாறுதலும் தற்காலிகமானதுதான், அவன் மீண்டும் இயந்திரமாவான் என்கிற மேசேஜை சொல்லும் திரைக்கதை. பரங்கிமலை ரயில் நிலையத்தில் தொடங்கி, கடற்கரை வரை படப்பிடிப்புக்கு லொக்கேஷன். ஹீரோ லுக்கில் இருந்த ஜெயபாரதிதான் இந்த குறும்படத்தின் நாயகன் (பின்னாளில் இவர்தான் ருத்ரைய்யாவின் ‘கிராமத்து அத்தியாயம்’ படத்தின் ஹீரோவாக படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு, பாதியில் கழட்டிவிடப்பட்டார். பாலச்சந்தர் ‘மூன்று முடிச்சு’ படத்தில் இவரைதான் ரஜினி நடித்த கேரக்டரில் நடிக்கவைக்க ஆசைப்பட்டார். ஞாநியின் ‘பரிக்ஷா’ குழு நடிகர்).
மாலன் எடுத்த அந்த குறும்படம் எங்கெங்கு திரையிடப்பட்டது, யார் யார் பார்த்தார்கள், என்னமாதிரியான விமர்சனங்கள் வந்தது என்பதை போன்ற தகவல்கள் எனக்கு கிடைக்கவில்லை. அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் குறும்படங்கள் எடுத்தார்களா என்று தெரியவில்லை. தூர்தர்ஷன் மட்டுமே டிவியாக இருந்த காலக்கட்டத்தில் இந்த முயற்சிக்கு என்னமாதிரி வரவேற்பு கிடைத்திருக்கக் கூடும் என்று யூகிக்கவே முடியவில்லை. எனினும், விடாமுயற்சி வேந்தரான ஞாநி மட்டும் ஏதாவது ட்ரை செய்திருப்பார் என்று யூகிக்கிறேன்.
எனினும், எண்பதுகளின் மத்தியில் இயக்குநர் வாய்ப்பு தேடியவர்கள், தங்களுக்கு தொழில் தெரியும் என்று காட்டுவதற்காக showreel மாதிரி குறும்படங்கள் எடுத்திருக்கிறார்கள். கமல்ஹாசனேகூட தன்னிடம் வாய்ப்பு கேட்டுவரும் புதுமுக இயக்குநர்களிடம் இதுமாதிரி ஏதேனும் சிறுகதையை showreel எடுத்துக் காட்டுமாறு கேட்டுக் கொண்டது உண்டாம்.
கலைஞர் தொலைக்காட்சியில் ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி நடந்து, அதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் திரைத்துறைக்கு அறிமுகமான காலக்கட்டத்தில் நான், மாலனின் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தேன். இந்த இளைஞர்களை குறித்து மிக ஆர்வமாகப் பேசுவார். அவர்களை ஊக்குவிக்க வேண்டும், அவர்கள் மூலம் சினிமாவுக்கு புதுரத்தம் பாய்ச்சப்படலாம் என்கிற கோணத்தில் பேசியிருக்கிறார். எனினும், அவர் எடுத்த ஆரம்பகால குறும்பட முயற்சி பற்றி எங்களிடம்கூட ஏனோ சொன்னதே இல்லை.