பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் ‘பெண்ணியம்’ (feminism) என்கிற சொல்லே உருவாகிறது. ஆரம்பக் கட்டத்தில் பெண்ணியம் பேசியவர்கள் 99 சதவிகிதம் ஆண்களே. Feminism என்கிற வார்த்தையை முதன்முதலாக உருவாக்கியவருமே கூட பிரெஞ்சு சிந்தனையாளரான ஓர் ஆண்தான்.
நாடுகள் குடியரசாக ஆகிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் தங்களுக்கு வாக்குரிமை கேட்டு பெண்கள் போராடியதே பரந்துப்பட்ட சமூக அளவில் முதல் பெண்ணிய உரிமைக்குரல் எனலாம். இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கநிலை.
உலகப்போர்கள் நடந்துக் கொண்டிருந்தபோது போரில் ஈடுபட்டிருந்தவர்கள் பெரும்பாலும் ஆண்கள். அப்போது போரில் ஈடுபட்ட நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியை தீர்மானிக்கக்கூடிய சக்தியாக பெண்களே இருந்தார்கள். அதையடுத்து போர்களுக்குப் பின்னரான காலக்கட்டமான இருபதாம் நூற்றாண்டின் மத்தியில்தான் குடும்பத்தில் தொடங்கி சமூகம், நாடு, உலகம் என்று எல்லைகளை வரையறுக்காமல் ‘ஆணுக்குப் பெண் சமம்’ என்கிற குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது.
பெண்ணியம் என்பது குடும்பம், சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் ஆணுக்கு இணையான இடத்தை பெண்ணுக்கும் கோருவது என்பதாக புரிந்துக் கொள்ளலாம்.
தொண்ணூறுகளில் உலகமயமாக்கலுக்குப் பின்னான பெண்ணியச் சிந்தனைகள் வேறு புதிய பரிமாணங்களை எட்டியது. இதை வார்த்தைகளில் வரையறை செய்ய இயலாது. தங்கள் உடையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தில் தொடங்கிய, இந்த பெண்ணிய அலை இப்போது தங்கள் உடல் குறித்த அரசியலை விவாதிப்பதைக் கடந்து வேறு வேறு அதீத எல்லைகளை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
வரலாற்று அடிப்படையில் ‘இது நல்லது’, ‘இது கெட்டது’ என்றெல்லாம் நிகழ்வுகள் நடக்கக்கூட சமகாலத்தில் யாராலும் துல்லியமாக கூறிவிட முடியாது. எது நல்லது, எது கெட்டது என்பதையெல்லாம் எதிர்காலம் முடிவு செய்துக் கொள்ளட்டும்.
சரி, விஷயத்துக்கு வருவோம்.
கடந்த வாரம் ‘90 ml’ என்கிற பெண்ணியம் பேசும் திரைப்படம், தமிழகமெங்கும் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.
’90 ml’ என்பது ‘குடி’மகன்களுக்கு கவர்ச்சிகரமான அளவு. மதுவிடுதிகளில் “ஒரு லார்ஜ், ஒரு ஸ்மால்” என்று ஆர்டர் கொடுப்பார்களே, அந்த அளவுதான் 90 ml. நம் டாஸ்மாக் கடைகளின் அளவீடுகளின் அடிப்படையில் சொல்ல வேண்டுமானால் ‘ஒரு கட்டிங்’.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ‘சரக்கு’க்காக ராத்திரி முழுக்க தெருத்தெருவாக அலையும் ஓர் ஆணின் கதை ‘வ - குவார்ட்டர் கட்டிங்’ என்கிற தலைப்பில் வெளியானது. அதே போல ஐந்து பெண்கள் கூடி சரக்கு போடும் படத்துக்கு ’90 ml’ என்று தலைப்பு வைத்திருப்பது பொருத்தமானதுதான்.
தொண்ணூறுகளுக்குப் பிறகான உலகமயமாக்கல் சூழலில் பெண்ணியம் என்ன பாடுபடுகிறது என்பதற்கு சரியான உதாரணம் காட்ட வேண்டுமானால் ’90 ml’ஐ காட்டலாம்.
‘ஆண் சரக்கு அடிக்கும்போது, நாங்கள் அடிக்கக் கூடாதா?’ என்று பெண்கள் கேட்டால் அது சம உரிமை கோருவது மாதிரியான நியாயமான கேள்வியாகதான் இருக்கக்கூடும்.
ஆனால் –
போதைப்பழக்கம் என்பது ஆண், பெண் இருபாலருக்குமே உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தீங்கு விளைவிக்கும் என்பதே மருத்துவ உண்மை.
’90 ml’ படத்தில் ஐந்து பெண்கள் அவ்வப்போது சரக்கு அடிக்கிறார்கள். அந்த ஐந்துப் பெண்களில் தலைவி மாதிரி இருக்கும் ஓவியாவின் ஆண் நண்பர், சைட் டிஷ்ஷாக ஹாஃப்பாயில் போட்டுக் கொடுக்கிறார்.
இம்மாதிரி குடியும் குடித்தனமுமான கூட்டங்களில் ஓவியாவும், அவரது குழுவினரும் முழுக்க பேசிக்கொள்வது ‘டபுள் மீனிங்’ அல்ல ‘டைரக்ட் மீனிங்’ வசனங்கள். குறிப்பாக பெண்களின் உடல் அங்கங்கள் குறித்த கேலியான வருணனை, பேச்சுலர் ரூம்களில் நடபெறும் டிரிங்ஸ் பார்ட்டிகளின் எல்லையையே கூட மீறுகிறது.
பெண்கள் தனியாக பேசும்போது இப்படித்தான் பேசுவார்களா என்று இந்தக் கட்டுரையை எழுதும் ஆணுக்குத் தெரியாது. எனினும், அவ்வாறுதான் பேசுவார்கள் என்றால் பெண்களுக்குள்ளேயே ‘ஆணாதிக்கம்’ இருப்பதாகதான் எண்ண வேண்டியிருக்கிறது.
படத்தில் ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் கொண்ட லெஸ்பியன் தம்பதியினர் காட்டப்படுகிறார்கள். ‘ஓரினச்சேர்க்கை சட்டத்துக்கு விரோதமானது அல்ல’ என்கிற உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்த பாத்திரங்கள் சித்தரிக்கப்படுகின்றன.
ஆனால் –
படம் முழுக்கவே அத்தம்பதியினர் குறித்த கேலியான பார்வையையே மற்ற பாத்திரங்கள் கொண்டிருக்கிறார்கள், பாலியல்ரீதியான நகைச்சுவை அவர்களை வைத்து உருவாக்கப்படுகிறது எனும்போது அம்மாதிரியான ‘முற்போக்கு’ சித்தரிப்பின் நோக்கமே பழுதுபடுகிறது.
படத்தின் மையப்பாத்திரமாக ஓவியா வருகிறார். ‘திருமணம்’ உள்ளிட்ட சமூகத்தின் எவ்விதமான கட்டுமானங்களிலும் தன்னை பொருத்திக்கொள்ள முடியாது என்கிற சுதந்திர மனப்பான்மை கொண்டவர். அவர் அவராக இருப்பது பிரச்சினையில்லை. அவருடன் பழகும் மற்றப் பெண்களையும் அவராகவே மாற்றும் முயற்சியில் அவரது பாத்திரம் படைக்கப்பட்டிருப்பது நெருடல். குடிக்கத் தூண்டுகிறார், கஞ்சா புகைக்க அழைத்துச் செல்கிறார், குடும்பத்தாரோடு அவரவருக்கு இருக்கும் முரண்களை தீர்க்க உறவுகளையே வெட்டிவிடும் தீர்வினைதான் முன்வைக்கிறார்.
‘அவரவர் அவரவருக்கு விருப்பப்பட்டவர்களோடு இருந்துக் கொள்ளலாம்’ என்கிற ஓவியா கொடுக்கும் பாதைதான் நம்முடைய குடும்பப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வாக முடியுமா?
இக்கட்டுரையை எழுதுபவர் ஓர் ஆண் என்கிற அடிப்படையில் ஓவியா முன்வைக்கும் பெண்ணிய நியாயத்தை அவரால் முழுவதுமாக உணரமுடியாமல் கூட இருக்கலாம். எனினும், இப்படம் இளைய தலைமுறையினரின் சிந்தனைகளில் ஏற்படுத்தக்கூடிய விபரீதங்களை சுட்டிக் காட்டுவதற்கு அவர் ஆணாக இருப்பது நிச்சயமாக தகுதிக்குறைவு அல்ல.
பெண்ணியத்தை நாம் ‘90 ml’ ஓவியாவிடம் இருந்துதான் கற்க வேண்டுமா அல்லது அன்றாடம் நாம் காணும் பூக்கட்டி விற்பது, இட்லி சுட்டு விற்பது என்று குடும்பச்சுமைகளை சுகமாக கருதி தாங்கி, தங்களையும் தங்கள் குடும்பத்தையும் முன்னேற்றும் அமைப்புச்சாராத் தொழில் செய்யும் விளிம்புநிலை பெண்களிடமிருந்து கற்கவேண்டுமா?
(நன்றி : குங்குமம்)