21 ஜூலை, 2020

கலையுலகச் சோழன்!



அப்பா, எம்.ஜி.ஆர் ரசிகர். எனவே, வாரிசு ரசனையாக எனக்கும் மக்கள் திலகத்தைதான் பிடிக்கும்.

அம்மாவோ நேரெதிர். சிவாஜி படங்கள்தான் பார்ப்பார். எம்.ஜி.ஆர் படத்தையெல்லாம் ‘வெறும் சண்டை’ என்று ஒதுக்கிவிடுவார்.

ஆனால் -

கடைசிக் காலத்தில் அப்பாவும் சிவாஜியை ரசிக்க ஆரம்பித்தார். ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’ மற்றும் ‘பா’ வரிசை படங்களை திரும்பத் திரும்ப விசிடியில் பார்த்துக் கொண்டிருந்தார். “சிவாஜியும் கூட நல்லாதான்யா ஸ்டைல்லா நடிச்சிருக்காரு” என்று கமெண்ட் செய்வார். எனக்குள் ஊறிப்போயிருந்த எம்.ஜி.ஆர் ரசனை ரத்தம் அதை ஒப்புக்கொள்ளவில்லை.

2001, ஜூலை 21-க்கு முன்பாக ஒட்டுமொத்தமாக பத்து, பதினைந்து சிவாஜி படங்களைப் பார்த்திருந்தாலே அதிகம். அவையும் கூட பராசக்தி, மனோகரா, நான் வாழ வைப்பேன், விடுதலை, தேவர் மகன், படையப்பா, ஒன்ஸ்மோர் மாதிரி படங்கள்தான். டிவியில் சிவாஜி படமென்றாலே ஜூட்.

2000-ங்களின் தொடக்கத்தில் தி.நகர் பாகீரதி அம்மாள் தெருவிலிருந்த ஒரு விளம்பர ஏஜென்ஸியில் பணி. தினமும் போக் ரோடு சிவாஜி வீட்டைக் கடந்துதான் என் டிவிஎஸ் சேம்ப் செல்லும். அந்த வீட்டு வாசலில் சில முறை சிவாஜி, ராம்குமார், பிரபுவையெல்லாம் கண்டிருக்கிறேன். அங்கிருக்கும் ஆட்டோ ஸ்டேண்ட் டிரைவர்களோடு அவ்வப்போது பிரபு பேசிக்கொண்டிருப்பார்.

மகத்தான நடிகர் வீடு வழியாக தினமும் சென்றுக் கொண்டிருந்தாலும், அந்த வீட்டுக்கு சற்றே எதிர்ப்புறம் அமைந்திருக்கும் ஆற்காடு தெருதான் நமக்கு திருத்தலம். மக்கள் திலகம் வாழ்ந்த வீடாயிற்றே?

எம்.ஜி.ஆர் ரசனையின் ஒரு விபரீத அம்சம் என்பது சிவாஜி வெறுப்பு. கண்ணை மூடிக்கொண்டு சிவாஜியை மட்டம் தட்டுவது. அப்படிதான் தட்டிக் கொண்டிருந்தேன் அந்த 2001 ஜூலை 21 வரை.

‘கலைஞர் நீண்டகாலம் வாழ, என் வாழ்நாளின் மீத வருடங்களை தருவேன்’ என்று கூறியிருந்தார் சிவாஜி. பாசிஸ்ட் ஜெயலலிதாவால் படுமோசமான முறையில் மிருகத்தனமாக போலீஸாரால் கலைஞர் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள்ளாகவே, தன் வாழ்நாளின் மீதி வருடங்களை தன் ஆருயிர் நண்பருக்குக் கொடுத்துவிட்டு மேலுலகம் சென்றார்.

சிவாஜியின் மறைவுச் செய்தியைக் கேட்டபோது அளவில்லா துக்கம் நெஞ்சைக் கவ்வியது. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அவரது பூவுடலுக்கு பல்லாயிரக் கணக்கானோர் திரண்டு மரியாதை செலுத்திய காட்சிகளை டிவியில் பார்த்துவிட்டு, உடனே போக் ரோடுக்கு கிளம்பினேன். நந்தனம் சிக்னலில் வண்டியை நிறுத்திவிட்டு போக் ரோடுக்குச் செல்லும்போது காணுமிடமெல்லாம் மக்கள் வெள்ளம். கதறியழுதவாறே அன்னை இல்லத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நடுத்தர வயது மனிதர் ‘பராசக்தி’ வசனத்தை அழுதவாறே உரத்தக் குரலில் முழங்கிக் கொண்டிருந்தார். சிவாஜி யார் என்பதை உணர்ந்த தருணம் அது.

அன்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு, மறுநாள் அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லிவிட்டு, இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்றேன்.

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் என்று எத்தனையோ பிரபலங்களின் இறுதி ஊர்வலங்கள் இன்றும் சென்னை மாநகரில் நினைவுகூறப்படுகின்றன. சிவாஜி இறுதி ஊர்வலத்தை மட்டும் ஏனோ அதில் சேர்க்க மறந்துவிடுகிறார்கள்.

தி.நகரில் தொடங்கி பெசண்ட் நகர் வரை நடந்த சிவாஜியின் இறுதி ஊர்வலத்திலும் பல லட்சம் பேர் பங்கேற்றனர். ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் சாதாரணர்களாக தங்களை மாற்றிக்கொண்டு பங்கேற்ற பிரும்மாண்டமான ஊர்வலம் அது. மக்கள் கடலில் மிதந்தவாறேதான் அவரை சுமந்த வாகனம் நகர் மத்தியில் சென்றது. செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களும், போட்டோகிராஃபர்களும் கூட அழுதது எந்த இறுதி ஊர்வலத்திலும் நான் கண்டிராத காட்சி.

அன்றிலிருந்துதான் சிவாஜி படங்களையே பார்க்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான படங்களை டிவி, இணையம் மூலம் பார்த்தாகிவிட்டது. என்னுடன் சினிமா கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய சம்பத் என்பவர் தீவிர சிவாஜி ரசிகர். அவருடனான உரையாடல்கள் சிவாஜியின் நடிப்பை எப்படி அணுக வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தது. உலகிலேயே இவ்வளவு வேடங்கள் ஏற்று, ஒவ்வொரு வேடத்துக்கும் வேறுபாடு காட்டி நடித்த நடிகர் வேறு எவராவது இருப்பாரா என்பது சந்தேகம்தான். சிவாஜியை ரசிக்க ‘செல்லுலாய்ட் சோழன்’ என்கிற பிரமாதமான ‘ரீடர்’ ஒன்றை பத்திரிகையாளர் சுதாங்கன் எழுதியிருக்கிறார். சர்வதேச அளவில் வேறெந்த நடிகருக்காவது இப்படியொரு நுணுக்கமான ரசனை சார்ந்த விரிவான நூல் இருப்பதாகத் தெரியவில்லை.

இருபது வயதுவரை நான் வெறுத்துக் கொண்டிருந்த சிவாஜி, கடந்த இருபதாண்டுகளில் மனதுக்கு மிகவும் நெருக்கமான மனிதராக ஆகிவிட்டார். இன்று, உலகின் தலைசிறந்த நடிகர் சிவாஜிதான் என்பது என் மனப்பதிவு.