16 ஜூன், 2009

ஓட்ரா வண்டியை!


இளையகண்ணனுக்கு வயது நாற்பது இருக்கலாம். நரைத்த தன் தலையை நன்கு மைபூசி மறைத்திருந்தாலும், சில இடங்களில் எட்டிப் பார்க்கும் நரையை ‘பித்த நரை' என்று சொல்லிக்கொள்வார். பழைய பாக்யராஜ் படங்களின் கதாநாயகிகள் அணிவது போல தடிமனான கறுப்பு ப்ரேம் கண்ணாடி. முதுமையால் மாறிப்போன தன் தோற்றத்தை இளமையாக காட்டிக்கொள்வதில் ஆர்வம் அதிகம். பாப் மியூசிக் பாடும் இளைஞர்கள் அணிவது போல ஒரு வட்டவடிவ தொப்பி. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காத மனிதர் இளைய கண்ணன்.

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக பயணிப்பது அவருக்கு பிடிக்கும். வேகமாக செல்லும்போது முகத்தில் அறையும் சில்லென்ற காற்றுக்காக மட்டுமல்ல, இருசக்கர வாகனங்களில் செல்லும் சகப்பயணிய்களான நாகரிகமங்கைகளை கலைப்பார்வையோடு காணவும் அவருக்கு இந்த விருப்பமிருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஓட்டுனர் உரிமம் வாங்கியிருந்தாலும், அரசு சட்டம் போடுவதற்கு முன்பே விலையுயர்ந்த ஹெல்மெட் வாங்கி விட்டார் என்றாலும், சைக்கிள் தவிர்த்து வேறெதுவும் ஓட்டத் தெரியாது என்பது அவரது அந்தரங்க சோகம்.

பொல்லாதவன் பட தனுஷ் போல நகரில் இருக்கும் எல்லா இருசக்கர வாகன விற்பனை நிலையங்களுக்கும் சென்று புதியதாக வந்திருக்கும் வண்டி எது, எவ்வளவு விலை, எந்த வண்டியில் எவ்வளவு எரிபொருள் சேமிக்க முடியும் என எல்லா விவரங்களையும் தெரிந்து வைத்திருப்பார். நகரின் அனைத்து இருசக்கர வாகன விற்பனை நிலைய மேலாளர்களுக்கும் இவரை தெரியும். எப்படியும் வண்டி வாங்கப் போவதில்லை, வாங்கினாலும் ஓட்டத் தெரியாது, ஆனாலும் இறைவனை கேள்வி கேட்ட தருமி மாதிரி எதையாவது மாதாமாதம் புதியதாக கேட்டு கடுப்பேத்திக் கொண்டேயிருக்கிறார் என்பதால் நகரிலும், புறநகரிலும் இருக்கும் இருசக்கர வாகன விற்பனை நிலையங்கள் அனைத்திலும் 'இளைய கண்ணனுக்கு இங்கேவர அனுமதியில்லை!' என்று டிஜிட்டலில் பலகை வைத்திருக்கிறார்கள்.

இளைய கண்ணன் அப்படியும் விடுவதாக இல்லை. தன் அடிப்பொடிகள் யாரையாவது வைத்து ‘கடைசியாக வந்த இருசக்கர வாகனம் எது? எவ்வளவு விலை? என்னென்ன புதிய வசதிகள்' என்று கேட்டுத் தெரிந்துவைத்துக் கொள்கிறார். இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கூட தங்கள் வாகனங்களை பற்றி இளையகண்ணனுக்கு தெரிந்த அளவுக்கு தெரியாது.

தன்னை இளைஞனாக காட்டிக்கொள்ள அவர் செய்யும் இன்னொரு உபாயம் சுவாரஸ்யமானது. அவரை சுற்றி எந்நேரமும் இளைஞர்களாகவே இருப்பது போல பார்த்துக் கொள்வார். ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வாசல்களிலும், டீக்கடை பெஞ்சுகளில் “ஹேய் மாம்ஸ், ஹாய் மச்சிஸ்!” என்று பேசிக்கொண்டு சமீபத்தில் கல்லூரிப் படிப்பை முடித்த வாலிபன் போல தன்னைத் தானே அடையாளப்படுத்திக் கொள்வார்.

இருசக்கர வாகனம் வைத்திருக்கும் இளைஞன் எவனாவது மாட்டினால் போதும், முன்னூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு நகர்வலம் வருவார். வண்டி ஓட்டுபவன் மனம் சோர்ந்துப் போய் அந்த வண்டியை விற்றுவிட்டு சைக்கிள் வாங்கிவிடலாமா என்று யோசிப்பான். வண்டியில் போகும்போது இருபக்கமும் பார்த்தவாறே வருவார். ஏதாவது பெண்கள் இருசக்கர வாகனங்களில் வந்துவிட்டால் போதும் தலைவர் குஷியாகி விடுவார். “மாப்புள்ளே, பேக் வியூல அசத்தலா இருக்கு. அந்த புள்ளை முகத்தை பார்க்கணும். வேகமா ஓட்ரா வண்டியை” என்று நாட்டாமை விஜயகுமார் மாதிரி ஆணையிடுவார். இவரது கதறல் முன்னால் போகும் புள்ளைக்கே கேட்டுவிடும். வயதானவர் என்பதால் இவரை திட்டாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் அப்பாவி இளைஞனை “பொறுக்கி!” என்று அந்த புள்ளை திட்டிவிட்டு, காறி உமிழ்ந்துவிட்டுப் போகும்.

“இப்பவெல்லாம் எல்லாப் பொண்ணுங்களும் ஹெல்மெட் போட்டு முகத்தை மூடிக்குது. இல்லேன்னா துணியை எடுத்து தாலிபான் மாதிரி மறைச்சிக்குதுங்க...” என்று அவ்வப்போது வருத்தப்படுவார்.

என்னுடைய போதாத நேரம், ஒருநாள் இளையகண்ணனிடம் நான் மாட்டிக் கொண்டேன்.

“மாப்புள்ளே மவுண்ட்ரோடு போடா!”

“என்னண்ணே அங்கே ஏதாவது வேலையா?”

“சும்மா ஜாலியா போலாம்டா. நெறைய புள்ளைங்க ஸ்பென்சர்ஸ் வருவாங்க ஜாலியா சைட் அடிச்சிக்கிட்டே டைம்பாஸ் பண்ணலாம். அப்படியே ஈவ்னிங் பீச்சுக்கு போயிட்டோம்னா இன்னைக்கு பொழுது நல்லபடியா போகும்”

“அண்ணே எனக்கு இதிலெல்லாம் ஆர்வமில்லைண்ணே” என்று முனகிக்கொண்டே வண்டியை கிளப்பினேன்.

மதிய நேரம் என்பதால் அனல்காற்று முகத்தில் அறைந்தது. ஹெல்மெட் போட்டிருந்ததால் தலையில் வியர்வை வழிந்து நசநசத்தது. பில்லியனில் உட்கார்ந்திருந்த அண்ணனோ சாலையை ரசிக்க ஆரம்பித்துவிட்டார். “என்னாச்சி இன்னைக்கு சன் டிவியில் ஏதாவது விஜய் படமா? பொண்ணுங்க அவ்வளவா காணோமே?”

தலையெழுத்தே என்று முணுமுணுத்துக் கொண்டு மிதமான வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தேன். எப்போதும் சிகப்பு நிற விளக்கு எரியும் நந்தனம் சிக்னலில் நிற்கவேண்டியதாயிற்று. என் வண்டிக்கு நான்கைந்து வண்டிகள் முன்பாக ஒரு கருப்புப்புடவை ஸ்கூட்டரில் ஒயிலாக அமர்ந்திருந்தது. அண்ணன் எப்படியோ எட்டிப் பார்த்துவிட்டார். “மாப்புள்ளே அந்த கருப்புப் புடவையை ஃபாலோ பண்ணுடா! செம கிளாமரா தெரியுது” என்றார்.

பச்சை சிக்னல் கிடைத்ததுமே நானும் வண்டியை விரட்ட ஆரம்பித்தேன். ம்ஹூம், புயல் வேகத்தில் சென்ற கருப்புப் புடவையை தாண்டுவது அவ்வளவு சுலபமாக இல்லை. அடுத்த சிக்னல்.. அடுத்த சிக்னல்.. என்று இரண்டு மூன்று சிக்னல்களை தாண்டிதான் தேனாம்பேட்டையில் பிடிக்கமுடிந்தது. அண்ணன் கருப்புப் புடவையை பார்க்க வசதியாக சிக்னல் எல்லைக்கோட்டை தாண்டி வண்டியை நிறுத்தினேன். இருபதடி தூரத்தில் நின்றிருந்த போக்குவரத்துக் காவலர், இந்த வண்டியை மடக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

முகத்தை பவுடர் போட்ட கர்ச்சீப்பால் துடைத்துக்கொண்டு தலையை ஸ்டைலாக, என்னவோ விருப்பமேயில்லாமல் திருப்புபவர்போல திருப்பி கருப்புப் புடவையை கண்டவர், “டேய், வண்டியை ஓட்ரா!” என்றார்.

“என்னாச்சிண்ணே! சிக்னல் இன்னும் விழலை? எப்படி போவமுடியும்?”

“எப்படியாவது போடா. ஃபைன் வேணும்னா நான் கட்டிக்கறேன். அந்த கருப்புப்புடவை வேற யாருமில்லே. உன்னோட அண்ணிதான்! வீட்டுலே பார்த்து சலிச்ச முகத்தை தான் இங்கேயும் பார்க்கணுமா? என்னை பார்த்துடப் போறா. சீக்கிரம் விடு”

பாவம். லென்சு மாமா மாதிரி வீட்டில் என்ன ரீல் விட்டுவிட்டு ஊர் சுற்ற வந்தாரோ என்று எண்ணிக்கொண்டே ஆக்ஸிலேட்டரை முறுக்கினேன்.

14 ஜூன், 2009

தேவதைகளும், கண்ணாடிகளும்!


தேவதைகள் எப்போதும் அருள் மட்டுமே பாலித்துக் கொண்டிருப்பதில்லை. அவ்வப்போது அச்சுறுத்தவும் செய்கிறார்கள். வாடிகன் தேவதைகள் ஏஞ்சல்ஸ் & டிமான்ஸில் உலகை அச்சத்தில் ஆழ்த்தியது மாதிரி.

போப்பாண்டவர் செத்துப் போகிறார். புதுப்போப்பை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் முக்கியமான நான்கு கார்டினல்கள் காணவில்லை. ஒரு ஆய்வுக்கூடத்தில் மிகமுக்கியமான ’வயல்’ (Vial) என்று சொல்லக்கூடிய விஷயம் ஒன்று கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது. அந்த வயலால் வாடிகன் அழிவதை தடுக்க அமெரிக்காவில் இருந்து புரொபசர் ஒருவர் கிளம்பிவருகிறார். அவர் நாத்திகர். அவருக்கும் வாடிகனின் புனிதர்கள் சிலருக்கும் அவ்வப்போது நாத்திக, ஆத்திக விவாதம் நடைபெறுகிறது.

வாடிகனுக்கு புதியதாக வில்லன்கள் முளைத்துவிடவில்லை. அது முன்னூறு, நானூறு ஆண்டு பகை என்று புரொபசர் விளக்குகிறார். அவர்கள் பெயர் இலுமினாய்ட்ஸாம். அறிவியல் வெறியர்கள். மதஅடிப்படைவாத தீவிரவாதத்துக்கு எதிரான விஞ்ஞான தீவிரவாதிகள். கடத்தப்பட்ட கார்டினல் ஒவ்வொருவராக இலுமினாய்டிகள் கொன்றுகொண்டே வர, கடைசி கார்டினலையும் கொன்று விட்டு, அந்த வயல் மூலமாக வாடிக்கனையே அழிப்பது இலுமினாய்டுகளின் திட்டம்.

புரொபசரால் கார்டினல்களை காப்பாற்ற முடிந்ததா? வயலால் வாடிகன் அழியாமல் காக்கமுடிந்ததா என்பதே படம். படம் முழுக்க ஹிட்ச்காக் பாணியில் திடீர் திடீரென பலர்மீது சந்தேகத்தின் நிழல் விழுகிறது. யார் குணச்சித்திரம்? எவன் துரோகி? எவன் வில்லன்? என்பது யாரும் எதிர்பாராத அடுக்கடுக்கான சஸ்பென்ஸ்.

டான்பிரவுன் இந்த நாவலை எழுதியதுமே இதை தமிழில் தசாவதாரமாக உல்டா அடித்து எடுத்துவிட்டார்கள். ஹாலிவுட்காரர்கள் கொஞ்சம் சோம்பேறிகள். தசாவதாரம் வெளிவந்து ஒருவருடம் கழித்துதான் இப்படத்தை வெளியிட முடிந்திருக்கிறது.

* - * - * - * - * - * - * - *

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அவரவர் முக அழகை கண்ணாடிதான் வெளிக்காட்டும். முகத்தை மட்டுமன்றி பேய்களையும் கண்ணாடிகள் காட்டுவது பைபிள்கால சினிமா ஸ்ட்ரேட்டஜி. மிர்ரர்ஸ் திரைப்படமும் இதற்கு விதிவிலக்கல்ல.

நியூயார்க் நகரில் டிடெக்டிவ்வாக பணியாற்றிய ஒருவர், ஒரு குற்றம் தொடர்பாக பணிநீக்கம் செய்யப்படுகிறார். வேறு பணி கிடைக்காத நிலையில் தீவிபத்தில் எப்போதோ எரிந்துப்போன மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றில் நைட் வாட்சேமனாக பணியாற்றி வயிற்றைக் கழுவுகிறார்.

இரவு வேளைகளில் ரவுண்ட்ஸ் வரும்போது கிட்டத்தட்ட அழிந்துப்போன அந்த பிரம்மாண்ட கட்டத்தின் ஒரு பகுதியில் சில கண்ணாடிகள் மட்டும் பளிச்சென இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைகிறார். அக் கண்ணாடிகளுக்குள் அடைந்துக் கிடக்கும் ஆவிகள் அடுத்த சில நாட்களில் அவரது வாழ்க்கையில் ஆடும் பேயாட்டம் தான் மிர்ரர்ஸ். படத்தின் ஒலிப்பதிவு பயங்கரமானது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பயமென்னும் உணர்வை ஏற்படுத்திய படம் இது. இப்படத்தின் முடிவும் யாரும் எதிர்ப்பார்க்க இயலாதது.

கடந்த வாரம் இந்தியாவில் வெளியாகியிருக்கும் இப்படம், கடந்த வருடமே ஹாலிவுட்டில் வெளியாகியிருக்கிறது. இது இந்தியாவில் வெளியாகுவதற்கு முன்பே இப்படத்தை அச்சு அசலாக, சில காட்சிகளோடு சேர்த்து 13பி என்று இந்தியிலும், யாவரும் நலம் என்று தமிழிலும் படமெடுத்து துட்டு பார்த்துவிட்டார்கள். இந்த அழகில் 13பி படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய யாரோ ஒரு கோயிந்து கேட்டிருப்பதாக இயக்குனர் பேட்டி வேறு தருகிறார்.

13 ஜூன், 2009

ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு?


பாலக்காட்டில் பிறந்த த்ரிஷா இன்று பாரெங்கும் வாழும் மனிதர்களை பரவசப்பட வைக்கிறார். மல்கோவாவுக்கு பெயர் போன சேலம் தான் த்ரிஷாவின் பெயரை முதன்முதலில் கவனிக்க வைத்தது. 1999ல் அம்மணி மிஸ் சேலமாம். அதே ஆண்டு சிங்காரச் சென்னையும் அவரை “மிஸ் சென்னை” என்று ஒத்துக் கொண்டது. 2001ல் மிஸ் இண்டியா அமைப்பாளர்கள் “ரொம்ப சூப்பரா சிரிக்கிறாங்க” என்று கூறி "Miss India Beautiful Smile" பட்டம் கொடுத்தார்கள்.

த்ரிஷா அருமையான பாலே டேன்ஸர். மீனைப்போல நீந்துவார். பள்ளி நாட்களில் வாலிபால் சாம்பியனாம். ”ஜூனியர் ஹார்லிக்ஸ்” விளம்பரத்தில் இளம் அம்மாவாக இவர் நடித்தபோது எல்லாக் குழந்தைகளும் ஹார்லிக்ஸை விரும்பிச் சாப்பிட்டது குறிப்பிடத்தக்கது. அக்காலக் கட்டத்தில் விஜய் டிவியின் யூகிசேதுவின் நையாண்டி தர்பார் நிகழ்ச்சியில் “எக்காலத்திலும் சினிமாவில் நுழைய மாட்டேன். மாடலிங் துறையில் தான் இருப்பேன்” என்று சபதம் செய்திருந்தார்.

”ஜோடி” படத்தில் சிம்ரனின் தோழியாக துண்டு வேடத்தில் நடித்தவர் அடுத்தடுத்து லேசா லேசா, மனசெல்லாம், அலை, மவுனம் பேசியதே, எனக்கு 20 உனக்கு 18 என்று டஜன் படங்களுக்கு மேல் ஒப்பந்தமானார். விக்ரமுடன் சாமி, விஜய்யுடன் கில்லி என்று மெகா சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்தவுடன் புகழின் உச்சிக்கே போனார். இதே உயரத்தை ஒரே நேரத்தில் தமிழிலும், தெலுங்கிலும் பெற்ற ஒரே நடிகை த்ரிஷாவாக தான் இருக்கும். தெலுங்கிலும் வர்ஷம், நூ ஒஸ்தானுண்டே நேனு ஒத்துண்டானா?, பவுர்ணமி, சைனிகுடு, ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தாலு வேறுலே என்று ஹிட் படங்கள்!

விக்ரமோடு பீமா, விஜய்யோடு குருவி என்று த்ரிஷாவின் வெற்றிநடை(?) தொடர்ந்து உயர்ந்து கொண்டே தானிருக்கிறது.

இயற்பெயர் :
த்ரிஷா கிருஷ்ணன்

செல்லப் பெயர் :
ஹனி (தேனே உன்னை தேடி தேடி நான் அலைஞ்சேனே!)

பிறந்தநாள் :
04-05-1983 (இருபத்தி ஆறு வயசாவுதா?)

உயரம் :
5 அடி 7.5 இன்ச் (அண்ணாந்து தான் பார்க்கணுமா?)

எடை :
55 கிலோ
(55 கேஜி தாஜ்மஹால்)

சைஸ் :
34 - 26.5 - 37.5
:-) (நாட் பேட்)

கண்ணின் நிறம் :
லைட் ப்ரவுன்
(கிறங்கடிக்குதே?)

பள்ளி :
சர்ச் பார்க் காண்வெண்ட் (You know?)

கல்லூரி :
எத்திராஜா
(சின்னப் பொண்ணு இவ படிச்சது)

எதிர்காலத் திட்டம் :
எம்பி எம்பியாவது எம்பிஏ முடிக்கணும் (எம்பிஏ முடிச்சிட்டு எம்.பி ஆவணும்)

தொழில் :
விளம்பர மாடல், திரைப்பட நடிகை (அதான் எங்களுக்கும் தெரியுமே?)

இணையதளம் :
http://www.trisha-krishnan.com (லேட்டஸ்ட் போட்டோவெல்லாம் அப்டேட் பண்ணுறாங்க)

மின்னஞ்சல் :
trisha_krishnan@yahoo.com (காதல் கடிதம் அனுப்பிய ஒருவருக்கு பதில் மின்னஞ்சலில் செருப்பு அட்டாச்மெண்டாக வந்ததாம்)

பலம் :
யோசித்து முடிவெடுக்கும் தன்மை! (உங்களோட ஹிட் படங்களை பார்த்தாலே தெரியுது)

பலவீனம் :
சின்ன சின்ன விஷயத்துக்கும் ரொம்ப யோசிப்பது! (அதுதானே பலம்னு சொன்னீங்க?)

யாரோடு டேட்டிங் போக ஆசை? :
பில் க்ளிண்டன் (இது மோனிகா லெவின்ஸ்கிக்கு தெரியுமா?)

இரவு வேளைகளில் செய்ய விரும்புவது :
புத்தகம் படிப்பது, இணையத்தை மேய்வது, எப்போதாவது பார்ட்டிக்கு போவது (அட்ரா.. அட்ரா.. அட்ரா)

பயம் :
நெருங்கிய மனிதர்களை இழந்துவிடும்போது வருவது

அடிக்கடி வரும் கனவு :
இரவுவேளையில் தனியாக யாருமே இல்லாத சாலையில் நடந்து போகிறேன். வேகமாக சைக்கிளில் வரும் பையன் ஒருவன் என் கையை பிடித்து இழுக்கிறான் (பையன் அழகா என்னைமாதிரி இருக்கானா?)

பிடித்த உணவு :
சிக்கன் (த்ரிஷா சிக்குன்னு இருக்குற ரகசியம்?)

பிடித்த புத்தகம் :
சிக்கன் சூப் ஃபார் த ஃசோல் (இதுலயும் சிக்கனா?)

பிடித்த எழுத்தாளர் :
சிட்னி ஷெல்டன் / டேனியல் ஸ்டீல் (இவங்கள்லாம் யாரு?)

பிடித்த பத்திரிகை :
பெமினா / காஸ்மோபாலிட்டன் (குமுதம், விகடன்லாம் கூட படிப்பீங்களா?)

பிடித்த படம் :
தி இங்கிலிஷ் பேஷண்ட் / சைலன்ஸ் ஆப் த லேம்ப்ஸ் (ரெண்டும் நீங்க நடிச்ச படம் இல்லையே?)

பிடித்த திரை நட்சத்திரம் :
ஜூலியா ராபர்ட்ஸ் / மனிஷா கொய்ராலா (அது சரி!)

ரோல் மாடல் :
க்ளாடியா ஃஷிப்பர், ஐஸ்வர்யா ராய், மது சாப்ரே

10 ஜூன், 2009

ரெட்டை வால் குருவி!


வனுடைய மேரேஜ் ரிசப்ஷனிலே அவனுக்கு பிடித்தது சனி. அவனுடைய அலுவலக பிரண்ட் ஆபிஸ் எக்ஸ்க்யூடிவ் அனிதா ஏதோ ஒரு பரிசுப்பொட்டலத்தை ‘வித் லவ் அனிதா' என்று எழுதி கொடுத்துவிட்டு, “நான் இருக்க வேண்டிய இடத்துலே நீங்க இருக்கீங்க. ஆல் த பெஸ்ட்!” என்று விளையாட்டாக மணப்பெண்ணிடம் சொல்ல அப்போதே புயல் மையம் கொண்டுவிட்டது.

அம்மாவுக்கு அறிவே கிடையாது. கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வரும் மகனையும், மருமகளையும் ஆரத்தி எடுத்து வரவேற்கும்போது, “எம் பையனுக்கு ரெண்டு பொண்டாட்டின்னு ஜாதகத்துலே இருக்கு. முதலாவதா நீ வந்திருக்கே, அடுத்தது யாரோ?” என்றாள். இது ஏதோ பெரிய ஜோக் மாதிரி சுற்றியிருந்த உறவு வட்டாரம் சிரிக்க, புதுப்பொண்டாட்டியின் முகம் ஒரு நொடி கடுகடுத்து, அடுத்த நொடியே சம்பிரதாயமாக சிரித்து வைத்ததை யார் கண்டார்களோ, இல்லையோ அவன் கண்டுகொண்டான்.

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக அவன் தங்கையோ விவஸ்தைகெட்ட தனமாக, “ஆமாம் அண்ணி. இவனுக்கு ரெண்டு பொண்டாட்டின்னு குடுகுடுப்பைகாரனுங்க கூட சொல்லியிருக்கானுங்க. பையன் கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டி. உஷாரா பார்த்துக்கங்க” என்றாள்.

மையம் கொண்ட புயல் வலுவடைந்து முதலிரவில் பலத்த காற்றோடு வீசியது!


முதன்முதலாக மனைவியோடு சினிமாவுக்கு போனான். “கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிபேசக் கூடாதா?” என்று நாயகி நாயகனை திரையில் கொஞ்ச மெய்மறந்து படம் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தலையில் ஒரு கொட்டு விழுந்தது.

“நான் பக்கத்துலே இருக்கும்போது அவளையே ஏன் முறைச்சிப் பாக்குறே? இங்கே பாரு.”

“எவளை? நான் யாரையும் பாக்கலையே?” அக்கம்பக்கத்தில் யாராவது கவனித்து விட்டார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே கேட்டான்.

“அதான் ஸ்க்ரீன்லே அவளை மட்டுமே மொறைச்சி பார்த்துக்கிட்டிருக்கியே?”

வேறு வழியில்லாமல் படம் முடியும் வரை கதாநாயகி வந்தபோது தலையை குனிந்துகொண்டோ அல்லது புதுமனைவியை பார்த்தோ சமாளித்தான்.


டம் முடிந்து வீட்டுக்கு செல்லும்போதும் பிரச்சினை.

“ஹலோ! ஒழுங்கா வண்டியை ஓட்டு!”

“ஒழுங்காத்தானே ஓட்டுறேன்!”

”பின்னாடி நான் உட்கார்ந்துக்கிட்டிருக்கப்பவே முன்னாடி போற ப்ளாக் சாரி முதுகை முறைச்சி பாத்துக்கிட்டிருக்கே?”

“முன்னாடி போற வண்டியை பார்க்காம வண்டி ஓட்ட எனக்கு இன்னும் யாரும் சொல்லி கொடுக்கலை!”

“வண்டியை மட்டும் பாரு. வண்டி ஓட்டுற பொம்பளைங்களை ஏன் பார்க்குறே?”

அவனுக்கு புரிந்துவிட்டது. இனிமேல் தினம் தினம் கும்மாங்குத்து தான்.


வெள்ளிக்கிழமைகளில் அலுவலகத்தில் பூஜை போடப்பட்டு விபூதியும், ஏதோ கொஞ்சம் கதம்பப்பூவும் பிரசாதமாக அய்யர் தருவார். அய்யருக்கு தர்மசங்கடம் வரக்கூடாது என்பதற்காக அவர் தரும் ஒன்றிரண்டு பூவை பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு விபூதியை நெற்றியில் இட்டுக் கொள்வான்.

அந்த வெள்ளிக்கிழமையும் அப்படித்தான், அய்யர் கொடுத்த பூவை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு அதை மறந்தும் விட்டான். வீட்டுக்குப் போனதும் வழக்கம்போல Check-in-ல் மாட்டிக் கொண்டான். துரதிருஷ்டவசமாக அன்று அய்யர் கொடுத்தது ரெண்டு மூன்று மல்லிப்பூ என்பது தான் பிரச்சினைக்கு காரணம். ஆபிஸில் அய்யர் கொடுத்தது என்பதற்கு சர்ட்டிபிகேட் யார் தருவார்கள் என்று குழம்பிப் போனான்.


விடுமுறை நாட்களில் தனியே வெளியே செல்வதற்கு அவனுக்கு 144 உத்தரவு போடப்பட்டிருக்கிறது. வெளியே செல்வதென்றால் அவளோடு தான் செல்லவேண்டும். சினிமாவுக்கோ, கோயிலுக்கோ போனால் கூட அக்கம்பக்கம் இருக்கும் பெண்களை (ஆயாவாக இருந்தாலும் கூட) கலைக்கண்ணோடு கூட பார்த்து தொலைக்கக் கூடாது.


காலையில் அலுவலகத்துக்கு சென்றதிலிருந்து மதியம், சாயங்காலம் என்று குறிப்பிட்ட நேரங்களில் எந்த ஸ்பாட்டில் இருக்கிறான் என்ற ஸ்பாட் ரிப்போர்ட்டை தந்தாக வேண்டும். அக்கம்பக்கம் ஏதாவது பெண்குரல் போனில் அவளுக்கு கேட்டுவிட்டால் ‘கிழிஞ்சது கிருஷ்ணகிரி'. அலுவலகம் விட்டு கிளம்புவதற்கு முன்னால் ‘கிளம்பிட்டேன்' என்றொரு மெசேஜ் தரவேண்டும். அவனைப் பொறுத்தவரை அவனுடைய செல்போன் ஒரு உளவுபார்க்கும் ஏஜெண்டாக தான் செயல்பட்டு வருகிறது.


ம்பவங்கள் ஏராளம், சொல்லிக்கொண்டே போனால் ஜெயமோகனின் மூவாயிரம் பக்க நாவல் அளவுக்கு எழுதவேண்டும். இப்போதும் கொடுமைகள் முன்பைவிட அதிகமாக தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது.

- ஷூவில் பீச்மணல் ஏதாவது ஒட்டிக்கொண்டிருக்கிறதா?

- செல்போனில் டயல்டு கால்ஸ், ரிசீவ்டு கால்ஸ் ஏதாவது பெண் பெயரில் இருக்கிறதா? காண்டாக்ட்ஸில் புதியதாக எந்தப் பெயராவது சேர்க்கப்பட்டிருக்கிறதா?

- சட்டைப் பையில் மல்லிகைப்பூ போன்ற வஸ்துகள் ஏதேனும் மிச்சமிருக்கிறதா?

போன்ற வழக்கமான சோதனைகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நடந்துகொண்டிருக்கிறது. முருகன், கிருஷ்ணன், சிவன் உள்ளிட்ட கடவுள்கள் உட்பட நாட்டில் பல பேர் குறைந்தபட்சம் ரெண்டு பொண்டாட்டிகளோடு நிம்மதியாக இருக்க, இராமனைப் போல ஒரிஜினல் ஏகபத்தினி விரதனான நமது பயலுக்கு தான் சோதனைக்கு மேல் சோதனை. அனுபவஸ்தர்கள் யாராவது அவனை இந்த ஒரு சிக்கலில் இருந்து மட்டுமாவது காப்பாற்ற ஏதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்களேன்!

9 ஜூன், 2009

சில விளம்பரங்கள்!

டிவி நிகழ்ச்சிகளின் போது இடையில் விளம்பரங்கள் வரும்போது சானல் மாற்றாதவராக நீங்கள் இருந்தால் இந்த விளம்பரங்களை கண்டிருக்கலாம்.


வோடபோன் செல்பேசி சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவுக்கான விளம்பரம் அது. ஒரு புத்திசாலி நாய் தன் தோழியான குட்டிப்பெண்ணுக்கு சிறு சிறு உதவிகளை செய்யும். அந்த குட்டிப்பெண் மீன் பிடிக்கும்போது மீன்வலை கொண்டுவரும். காலுறையை தொலைத்துவிட்டு அப்பெண் தேடும்போது அதை தேடிக்கொண்டுவரும். டை கட்ட மறந்து பள்ளி பேருந்தில் ஏறிவிடுவாள். டையை எடுத்துக்கொண்டு பேருந்தின் பின்னாலேயே நாய் ஓடிவரும். ஒவ்வொரு விளம்பரமும் ‘சேவை செய்வதில் மகிழ்ச்சி' என்ற வாசகத்தோடு நிறைவடையும்.

இந்த தொடர் விளம்பரங்களை சிந்தித்த கலைஞனின் படைப்புத்திறனை கண்டு வியந்திருக்கிறேன், பொறாமை கொண்டிருக்கிறேன். அன்றாட வாழ்வின் இயல்பான சம்பவங்களை முப்பது நொடி விளம்பரமாக மாற்றுவது மிக சவாலானது. பலரையும் கவர்ந்த விளம்பரங்கள் அவை.


ஆண்களின் உள்ளாடைகளுக்கான விளம்பரம் இது. ஒரு கட்டுடல் வாலிபன் குளித்துவிட்டு வெறும் உள்ளாடையோடு வெளியே வருகிறான். அவன் வரும் அதே நேரத்தில் அதே அறைக்குள் அவனது பெண் நண்பி நுழைகிறாள். அவன் கட்டுடலை பார்த்து மயங்கினாளோ இல்லையோ, அவனது உள்ளாடையை கண்டு மயங்கி கண்களில் காமத்தை காட்டுகிறாள். அறைக்கதவு மூடப்படுகிறது.


ஒரு நவீன தொலைக்காட்சிக்கான விளம்பரம் ஒன்று. மிகப்பெரிய அந்த தொலைக்காட்சியின் திரையை நோக்கி அரைகுறை ஆடையுடன் ஒரு அழகி வருகிறாள். தொலைக்காட்சியில் ஒரு ஆணின் உருவம் ஒளிபரப்பப்படுகிறது. தொலைக்காட்சியை நெருங்கும் அந்த அழகி ஒரு காதலனை காண்பது போல விரகதாபத்தை உதடுகளில் தேக்கி அருகில் வருகிறாள். அருகில் வந்தவள் உடலை ஒரு மாதிரியாக முறுக்கி தன் வனப்பை காட்டுகிறாள். அதாவது அந்த தொலைக்காட்சியின் வடிவம் செக்ஸியாக இருக்கிறதாம், ஒரு ஆணின் கட்டுடலுக்கு நிகரானதாக இருக்கிறதாம். அதைக்கண்டு அவள் காமவசப்படுகிறாளாம்.


ஒரு இளம் மனைவி தன் கணவனின் பெயரை உச்சரித்தவாறே வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொரு அறையாக வருகிறாள். எங்குமே அவள் கணவனை காணவில்லை. தோட்டத்துக்கு முன்பாக இருக்கும் போர்டிகோவுக்கு வருகிறாள். ஒரு நாற்காலி தெரிகிறது. நாற்காலிக்கு பக்கவாட்டில் கணவனின் கையும், காலும் அலங்கோலமாக விரிந்து கிடக்கிறது. காப்பி கோப்பை சிதறிக் கிடக்கிறது. கிட்டத்தட்ட அவன் மரணித்துவிட்டதாக நினைத்து மனைவி ஓவென்று கதறியவாறே ஓடிவருகிறாள். கணவனோ வாக்மேனில் இசை கேட்டு மெய்மறந்திருக்கிறான். மனைவியின் கதறலை கேட்டு ஓடிவந்து அணைத்துக் கொள்கிறான். லைப் இன்சூரன்ஸ் செய்து தொலையுங்கள் என்பதற்கான விளம்பரம் இது.


மேற்கண்ட விளம்பரங்களில் வோடபோன் நிறுவனத்தின் விளம்பரம் மட்டுமே சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. ஒரு நாயை துன்புறுத்தி படம் பிடித்திருக்கிறார்கள் என்று யாரோ ஒரு விலங்குகள் நல ஆர்வலர் புகார் செய்ய, வோடபோன் நிறுவனத்துக்கு நோட்டிஸ் சென்றிருக்கிறது. வோடபோன் நிறுவனமும் எதுக்கு வம்பு? என்று தன் விளம்பரங்களை வாபஸ் வாங்கிக் கொண்டிருக்கிறது.

நன்கு பயிற்சி பெற்ற ஒரு நாய் துன்புறுத்தல் ஏதும் செய்யப்படாமல், நாய்க்கு எந்த ஆபத்தும் இல்லாத வகையில் நடித்துக் கொடுத்திருக்கும் விளம்பரத்துக்கே இந்த கதியென்றால் இனிமேல் இயக்குனர் ராமநாராயணன் படமென்று எதையும் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக இம்சை அரசன் திரைப்படத்தில் குதிரைகள் பயன்படுத்தப் பட்டதால் படமே வெளிவரமுடியாத அவலநிலை ஏற்பட்டதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

விலங்குகளுக்கு இவ்வளவு பரிவு காட்டும் இந்திய அரசு நம் கதாநாயகர்களால் மிக மோசமாக பந்தாடப்படும், பல மாடிக்கட்டிடங்களின் உயரத்தில் இருந்து தூக்கிவீசப்படும் வில்லனின் அடியாட்கள் என்று சித்தரிக்கப்படும் மனிதர்களின் மீது கொஞ்சமாவது பரிவு காட்டியிருக்கிறதா என்று யோசித்துப் பார்க்கவேண்டும். திரைப்படங்களில் மட்டுமல்லாது விளம்பரங்களிலும் மிக ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளில் மனிதர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். விலங்குகள் நல ஆர்வலர்களும் நாயோ, பூனையோ பாதிக்கப்பட்டால் மட்டும் தான் புகார் அனுப்புவார்கள் போலிருக்கிறது. சமூக விலங்கான மனிதனுக்கு அவர்களது நேசிப்பில் இருந்து விதிவிலக்கு அளித்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

அடுத்து நான் குறிப்பிட்டிருக்கும் இரு விளம்பரங்களும் மிக மிக அபத்தமானது. விளம்பரப்படுத்தப்பட்ட பொருளை வாங்கும் வகையில் எந்த வகையில் இவ்விளம்பரங்கள் பார்வையாளனை ஊக்குவிக்கிறது என்று தெரியாமல் தாவூ தீர்ந்துக் கொண்டிருக்கிறேன். ஷகீலா பட போஸ்டர்களை கிழித்து, சாணம் அடிக்கும் பெண்ணுரிமைப் போராளிகள், எஃப் டிவிக்கு தடை விதிக்கக் கோரிய ஃபெமினிஸ்டுகள் கண்ணில் இந்த விளம்பரங்களெல்லாம் இதுவரை கண்ணில் படவில்லை போலிருக்கிறது. அதனால் தானோ என்னவோ இன்னமும் யாரும் இவ்விளம்பரங்களில் பெண்களும், அவர்களது உணர்வுகளும் கொச்சைப்படுத்தப்பட்டிருப்பது குறித்து எந்த கவலையும் படவில்லை.

கடைசி விளம்பரம் மிகக்கொடூரமானது. மனித உணர்வுகளோடு, மன பலகீனத்தோடு விளையாடுவது. இன்சூரன்ஸ் விளம்பரங்களுக்கு உலகளவில் ஒரு சட்டம் உண்டு. விளம்பரத்தை காணும் பார்வையாளரை இன்சூரன்ஸ் எடுக்கச் சொல்லி வற்புறுத்தாத அளவுக்கு விளம்பரம் அமைய வேண்டும். அதனால் தான் இன்சூரன்ஸ் விளம்பரங்களில் Insurance is the subject matter of solicitation என்ற வாசகம் கட்டாயமாக இடம்பெறுகிறது. மாறாக இவ்விளம்பரமோ மரணம் குறித்த அச்சத்தை மிக மோசமாக பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகிறது.

சிகரெட் மற்றும் மது விளம்பரங்களுக்கு நம் நாட்டில் தடையுண்டு. தொலைக்காட்சி விளம்பரங்களோ அல்லது ஹோர்டிங் மற்றும் பத்திரிகை விளம்பரங்களோ இவற்றுக்காக செய்யப்படக்கூடாது. ஆனாலும் நீங்கள் இவ்விளம்பரங்களை பரவலாக காணலாம். அதே பிராண்டிங்குக்கு, அதே பெயரில் விளம்பரம் செய்யப்பட்டாலும் அவை மியூசிக் சிடி என்றோ, மினரல் வாட்டர் என்றோ எனர்ஜி டிரிங்க் என்ற தயாரிப்புப் பெயரிலோ தொடர்ந்து விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

எதற்கு தடை விதிப்பது? எதை அனுமதிப்பது? எதை யார் திடீரென்று எதிர்ப்பார்கள்? போன்றவை குறித்த தெளிவான மனநிலை இந்தியர்களுக்கு இல்லை. இந்த கோக்குமாக்கு மனநிலையை வெளிநாட்டவர்கள் மிக கேலியாக பார்க்கிறார்கள் என்பதையும் நாம் அறிவதில்லை. விளம்பர உலகின் தந்தை என்று அறியப்படுபவர் டேவிட் ஓகில்வி. இவர் எழுதிய ‘ஓகில்வி ஆன் அட்வர்டைஸிங்' என்ற புத்தகம் உலகளவில் விளம்பர நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கான பைபிள் என்று போற்றப்படுகிறது. அப்புத்தகத்தை வாசிக்காதவர்கள் யாரும் விளம்பரத்துறையில் முழுமையாக பணிபுரிய இயலாது. அந்தப் புத்தகத்திலேயே இந்தியா குறித்த நையாண்டி மறைமுகமாக இடம்பெற்றிருக்கிறது.

முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக பாரிஸ் நகரின் நெரிசல் மிகுந்த போக்குவரத்து சிக்னல் ஒன்றில் அந்த ஹோர்டிங் பலரின் கவனத்தையும் கவர்ந்தது. ஒரு பெண் நிற்கிறாள், அவளை பின்புறமாக படமெடுத்திருக்கிறார்கள். அவள் மேல்கச்சையும், கீழே ஒரு உள்ளாடையும் மட்டும் அணிந்திருக்கிறாள். “அடுத்த வாரம் இதே இடத்தை பாருங்கள். நான் இந்த ஆடைகளை கூட துறந்திருப்பேன்” என்றொரு வாசகம் அச்சிடப்பட்டிருக்கிறது.

அவ்விளம்பரத்தை கண்ட பலர் ஒருவாரம் காத்திருந்து, அடுத்த வாரம் அதே விளம்பரத்தை காண்கிறார்கள். சொன்னபடியே அந்த பெண் ஆடையில்லாமல் இருக்கிறாள். ஆனால் பின்புற அழகு மட்டுமே தெரிகிறது. மீண்டும் ஒரு வாசகம் “அடுத்த வாரம் பார்த்தீர்களென்றால் நான் திரும்பி நிற்பேன்”. பின்புறத்தையே பார்த்து சூடானவர்கள் முன்புறத்தை காண கொலைவெறியோடு ஒருவாரம் காத்திருக்க நேர்ந்தது.

அவர்கள் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. விளம்பரம் மாற்றப்பட்டு அந்தப் பெண் ஆடையில்லாமல் இருப்பது போன்ற படம் அச்சிடப்பட்டு வாசகம் இவ்வாறாக அமைந்தது “நாங்கள் உங்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை என்றுமே மீறுவதில்லை”. வாசகத்துக்கு கீழே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றிருந்தது.

சமீபத்தில் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய புள்ளிராஜா ரக விளம்பரங்களுக்கெல்லாம் முன்னோடி இந்த விளம்பரம். இவ்வகை விளம்பரங்களை teaser ads என்பார்கள். நம் வசதிக்காக தமிழில் 'சீண்டல் விளம்பரங்கள்' என்று மொழிபெயர்த்துக் கொள்ளலாம். இவ்விளம்பரத்தை உருவாக்கியவர் ஓகில்வி. இவ்விளம்பரம் சம்பந்தமாக ‘ஓகில்வி ஆன் அட்வர்டைஸிங்' புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பவர் “இதுபோன்ற விளம்பரங்களை என்னால் உலகின் எந்த நாட்டில் வேண்டுமானாலும் வெளியிடமுடியும், ஒரே ஒரு நாட்டைத் தவிர, அந்நாடு இந்தியா!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இப்போது தடைகோரப்பட்ட வோடபோன் நாய் விளம்பரத்தை எடுத்த விளம்பர நிறுவனம் ஓகில்வி உருவாக்கிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.


ஓக்கே சீரியஸ் போதும், சமீபத்தில் என்னைக் கவர்ந்த விளம்பரங்களுள் ஒன்றை சொல்கிறேன். சன் டிடிஎச்-காக எடுக்கப்பட்டிருக்கும் விளம்பரம் தொழில்நுட்ப அளவிலும், உள்ளடக்க அளவிலும் மிக தரமாக எடுக்கப்பட்டிருக்கிறது. “வீட்டுக்கு வீடு சன் டைரக்ட்” என்ற வரிகளோடு தொடங்கும் கலக்கல் பீட் பாடல் சூப்பராக இருக்கிறது. பதிவு செய்த குரலை அப்படியே ஒலிபரப்பாமல் கம்ப்யூட்டரில் ஏதோ தில்லாலங்கடி வேலை செய்திருப்பதால் குரலில் கஞ்சா தடவிய போதை இருக்கிறது. தமன்னா இவ்வளவு அழகா? என்று வியக்க வைக்கிறது இவ்விளம்பரம். சினிமாவில் கூட யாரும் தமன்னாவை இவ்வளவு அழகாக காட்டியதில்லை. நடனம் இசைக்கு ஏற்றவாறு ஜாடிக்கேத்த மூடி மாதிரி செம ஃபிட் ஆக இருக்கிறது. விளம்பரத்தில் திருஷ்டி படிகாரம் மாதிரி பாலச்சந்தரின் ஆஸ்தான நடிகையான ரேணுகா வருகிறார். அவர் சம்பந்தப்பட்டவற்றை மற்றும் அகற்றி, இன்னமும் கொஞ்சம் தமன்னாவை எக்ஸ்ட்ராவாக காட்டினால் செம சூப்பராக இருக்கும்!!

இதுமாதிரி நிறைய விளம்பர டெக்னிக்குகளையும், விளம்பரங்களையும் பற்றி தமிழில் முழுமையாக அறிந்துகொள்ள “சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்” நூலை வாங்கி பயனடையுங்கள் :-)