நம் தெருவில் நம்மை மாதிரியே சாமானியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பம் ஒன்றிருக்கும். அந்த வீட்டு பசங்களும் நம்மை மாதிரியே கேரம்போர்டுக்கும், உட்டன் செஸ்போர்டுக்கும் ஏங்கும் பயல்களாக இருந்திருக்கலாம். திடீரென்று அந்த குடும்பத்தில் யாருக்கோ நல்லவேலை கிடைத்து நிறைய பணம் மரத்தில் காய்க்க ஆரம்பித்து விட்டால் என்ன நடக்கும்?
தெருவில் கோலியும், பம்பரமும் விளையாடிக் கொண்டிருந்த பயல்கள் விதம் விதமான விளையாட்டுப் பொருட்களோடு தெருப்பயல்களுக்கு போங்கு காட்டுவார்கள் இல்லையா? மற்ற பயல்கள் அவர்களை அதற்குப் பிறகு எப்படிப் பார்ப்பார்கள்? என்னமாதிரியாக மதிப்பிடுவார்கள்? இதே உதாரணம் உளவியல்ரீதியாக மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்களையும், மற்ற தொழில்களில் அற்பசம்பளம் வாங்குபவர்களையும் ஒப்பிடும்போதும் பொருந்தும். பரம்பரை பணக்காரர்களை (வேறு வழியின்றி) சகித்துக் கொள்ளுபவர்கள், புதுப்பணக்காரர்களை உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை.
மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்கள் மீது மற்றவர்களுக்கு என்ன பொறாமை? பெரியளவிலான உடலுழைப்பின்றி தகுதிக்கு அதிகமாக சம்பளம் வாங்குகிறார்கள். சைக்கிளுக்கே லாட்டரி அடித்தவர்கள் காரில் பறக்கிறார்கள். ஃபிளாட் வாங்குகிறார்கள். விலைவாசியை ஏற்றுகிறார்கள். வாடகை இவர்களால் உயர்ந்துவிட்டது. ஆட்டோக்காரன் கூட இப்போதெல்லாம் நூறு ரூபாய்க்கு சில்லறை தரமாட்டேன் என்கிறான். பூமியில் கால்படாவண்ணம் ஒரு அடி அந்தரத்திலேயே நிற்கிறார்கள். அர்த்தராத்திரியிலும் வெய்யிலுக்கு குடைபிடிக்கிறார்கள். கிட்டத்தட்ட என் நினைப்பும் இதேதான், இரா.முருகனின் ‘மூன்று விரல்’ வாசிக்கும் வரை.
பிரச்சினை பொறாமைக்கார சமுதாயத்தின் மீது மட்டுமல்ல. மென்பொருள் அலுவலர்களிடமும் உண்டு. சமூகத்தை விட்டு அவர்கள் பொதுவாக விலகிச்செல்வது மாதிரியான தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஐ.டி.யில் வேலை பார்ப்பவன் பிராமணன் மாதிரி நாலுபேர் மத்தியில் தனித்து தெரிகிறான். இங்கிலாந்திலோ, அமெரிக்காவிலோ பிறந்த பரம்பரை மாதிரி ஃபிலிம் காட்டுகிறான். தன்னுடைய நியாயங்களை நிதானமாக புரியவைப்பதை தவிர்த்து தங்கள் மீதான சமூகத்தாக்குதலை மூர்க்கத்தனமாக எதிர்கொள்ளுகிறான். மென்பொருள் அலுவலர்களை குஷிப்படுத்துவதாக நினைத்து கடந்தவாரம் ஆனந்தவிகடனில் செல்வேந்திரன் எழுதிய கவிதை போன்ற தோற்றத்தில் இருந்த ஒரு விஷயம் கூட நிறையப்பேரை எரிச்சல் தான் படுத்தியிருக்கிறது. ”இவனுங்களுக்கு மட்டும் என்ன கொம்பா முளைச்சிருக்கு?” என்பதே மற்றவர்களின் மனோபாவம்.
இவர்களைப் போல இல்லாமல் இரா.முருகன் நயமாக மென்பொருள்துறைக்கு வக்காலத்து வாங்குகிறார். ’மென்பொருள் துறை சார்ந்து தமிழில் வெளிவரும் முதல்நாவல்’ என்ற அடைமொழியோடு, ஐடியில் வேலை பார்ப்பவனும் சாதாரண மனிதன் தான். எல்லோரையும் மாதிரி பிறந்தவன் தான். அவனுக்கும் காதல் உண்டு, காமம் உண்டு, பசியுண்டு, ஆசை ஆசாபாசங்கள் உண்டு, பிளேடால் கிழித்தால் அவனுக்கும் சிகப்பு கலரில் தான் இரத்தம் வழியும், அழுதால் உப்புச்சுவையோடு தான் கண்ணீர் வரும் என்றெல்லாம் பொறுமையாக பாடமெடுக்கிறார். புரியவைக்கிறார். மென்பொருள் பணியாளர்கள் தங்கள் மீது பொறாமைப்படும் சமூகத்தை எதிர்கொள்ளும் சரியான வழிமுறை இந்நாவல். நாவலாசிரியரும் ஒரு மூத்த தலைமுறை மென்பொருளாளர் என்றே தெரிகிறது.
சுதர்ஸன் மாயூரத்தில் பிறந்த அய்யங்கார் பையன். பணிநிமித்தமாக இங்கிலாந்துக்குப் போனாலும், தாய்லாந்துக்குப் போனாலும் வத்தக்குழம்பும், சுட்ட அப்பளமும் கிடைக்காதா என்று ஏங்குபவன். பணிச்சூழல் அவனை அவன் பிறந்த சமூகத்திடமிருந்து தள்ளிவைக்கிறது. காலம் காலமாக அவனது பரம்பரை அனுபவித்த இனிய விஷயங்களை அவனிடமிருந்து தட்டிப் பறிக்கிறது. அவனோடு படித்த மிளகாய் மண்டி ராஜேந்திரன் இரண்டு குழந்தை பெற்றுவிட்டான். இவனுக்கோ கல்யாணம் கூட பகல்கனவு. அம்மா மருத்துவமனையில் உயிருக்குப் போராடும்போதும், பொய்க்கேஸில் அப்பா லாக்கப்பில் தவிக்கும்போதும் எங்கோ தூரதேசத்தில் இருந்து அல்லல்படுகிறான்.
பணிக்கு வந்த தேசத்தில் விசா காலவதியாக கூட பணிபுரியும் நண்பன் ஜெயிலுக்குப் போகும் நிலை வரும்போது மூன்றாம்பிறை கமல்ஹாசன் மாதிரி மனம் பேதலித்துப் போகிறான். கழுத்தை இறுக்கும் டெட்லைன். கிட்டத்தட்ட ‘டெட்’ ஆகி, மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறான். பிறந்த கலாச்சாரத்தை மறக்க முடியாமல், பணிச்சூழலால் வாழும் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாய் வாழுகிறான்.
சுவாரஸ்யமான சம்பவங்களோடு கதை இவ்வாறே விரிவடைகிறது. 90களில் ஏற்பட்ட ஐ.டி மறுமலர்ச்சி, செப்.11 சம்பவத்துக்குப் பிறகான ஐ.டி. வீழ்ச்சி என்று கதையின் களமும், தளமும் அபாரம். குடிபோதையில் எவளோ ஒருவளை சம்போகித்துவிட்டு சுதர்சன் பிதற்றும் அத்தியாயங்களில் வாசகனுக்கும் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்கிறது. மிளகாய் மண்டி ராஜேந்திரன், இங்கிலாந்து ஜெஃப்ரி, மென்பொருள் காதலி சந்தியா, தாய்லாந்து அழகி னாய், சுபர்ணா, பாஸ்போர்ட் தொலைத்த ராவ் என்று கதாபாத்திரங்கள் கூர்மையான உளியால் செதுக்கப்பட்டவை.
ஒவ்வொரு விஷயத்தையும் விலாவரியாக எளிமையான மொழியில் கதை சொல்லிக்கொண்டே போகும் இரா.முருகன் சுஜாதாவின் இரண்டாவது வெர்ஷன். விகடன், குமுதம் மாதிரி வெகுஜன இதழ்கள் இவரொரு தீவிர இலக்கிய கும்மி என்று நினைத்து ஒதுங்கிப் போய்விட்டார்களோ என்னவோ தெரியவில்லை. முருகனின் எழுத்து நடுத்தர வர்க்கத்தை கச்சிதமாக டார்கெட் செய்து அடிக்கிறது.
சுவாரஸ்யமாக, விலாவரியான சம்பவங்கள் மற்றும் வசனங்களோடு ஜோராய் கிண்டி குதிரை மாதிரி ஓடிக்கொண்டிருந்த நாவல் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது போல தோன்றுகிறது. 2001 செப்.11க்குப் பிறகு வெகுவேகமாக எடிட்டப்பட்டு நாவல் நாடகத்தனமாய் ஓடுகிறது. க்ளைமேக்ஸ் வலிந்து திணிக்கப்பட்ட அநியாய சோகம். சுதர்ஸனை சாம்பார் வாளியெல்லாம் தூக்க வைத்திருக்க வேண்டியதில்லை.
மூன்று விரல் - மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்கள் வாசித்து, மற்றவர்களுக்கு கட்டாயம் பரிந்துரைக்க வேண்டிய புத்தகம். இந்நாவலுக்கு ஏன் இந்த தலைப்பு என்று இந்த நிமிடம் வரை புரியாமல் குழம்பிப் போயிருக்கிறேன்.

நூலின் பெயர் : மூன்று விரல்
ஆசிரியர் : இரா.முருகன்
பக்கங்கள் : 368
விலை : ரூ. 150/-
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்,
எண் 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701
மின்னஞ்சல் : support@nhm.in
இணையம் : www.nhm.in
ஆன்லைனில் வாங்க : http://nhm.in/shop/978-81-8368-073-8.html