நடந்தது என்ன? டி.எஸ்.கார்னர் பகுதியில் ஒரு கல்யாணம் நடந்திருக்கிறது. அதற்கு வருமாறு கல்யாண வீட்டுக்காரர் தன்னுடைய உற்றாரையும், உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்திருக்கிறார். நேரில் சென்றும் அழைத்திருக்கிறார். தபால் அனுப்பியும் அழைத்திருக்கிறார். பொதுவாக ஒரு தமிழன் கல்யாணத்துக்கு எப்படியெல்லாம் மற்றவர்களை அழைக்க வேண்டுமோ அப்படியெல்லாம் அழைத்திருக்கிறார்.
ஆனால், கல்யாணம் முடிந்ததும் 'மொய்' கூட எழுதாமல் உறவினர் உற்றார் பாகுபாடில்லாமல் ஒட்டுமொத்தமாக பந்திக்கு முந்தியிருக்கிறார்கள். இதனால் சாப்பாட்டுக் கூடத்தில் வாயிலில் தள்ளு முள்ளு ஏற்பட்டிருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. ஒட்டுமொத்தமாக 100 பேர் மட்டுமே சாப்பிடக்கூடிய அளவிலான சாப்பாட்டுக் கூடங்கள்தான் தமிழகத்தில் பெரும்பான்மையான (அதாவது 89.99%) திருமண மண்டபங்களில் இருக்கிறது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான அறிவாலயத்தில் இருக்கும் கலைஞர் திருமண மண்டபத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் சாப்பிடும் வசதி இருக்கிறது. தமிழக சராசரியை விட இது பத்து மடங்கு அதிகம். இது தமிழகத்தை ஆளும் கலைஞர் கருணாநிதிக்கு நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டும்.
டி.எஸ்.கார்னர் பகுதி திருமண மண்டபத்தின் இடநெருக்கடி தந்த எரிச்சல் சாப்பிட வந்தவர்களை வன்முறையாளர்களாக்கி இருக்கிறது. அதே பகுதி காமராஜபுரத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். தள்ளுமுள்ளு நெருக்கடியால் கடுப்பாகிப் போய் இலைக்கு முன்பாக மனைவிக்கு அருகாக அமர்ந்திருக்கிறார். இலையில் இட்லி வைத்திருக்கிறார்கள். ஜெகநாதனுக்கு உலகிலேயே பிடிக்காத வார்த்தை சட்னி. எனவே இட்லிக்கு சட்னி வேண்டாம் என்று பரிமாறுபவரிடம் ஜனநாயக அடிப்படையில் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
ஆனால், இதை காதில் வாங்காத பரிமாறுபவர் அவருக்கு வேண்டுமென்றே சட்னியை ஊற்றியிருக்கிறார். கலைஞர் கருணாநிதியின் ஆட்சி இலட்சணம் இதுதான். வேண்டாமென்பவர்களுக்கு போதும் போதும் என்ற வகையில் சலுகைகளை வழங்குவதும், வேண்டும் என்பவர்களுக்கு அல்வா தருவதுமே கலைஞர் கருணாநிதியின் கடந்த ஐந்தாண்டுகால சாதனை. சாம்பார் பரிமாறியவரின் பெயர் கன்னிமுத்து. அதாவது க.மு. திருப்பிப் போட்டால் மு.க. கன்னிமுத்து ஏன் வேண்டுமென்றே ஜெகநாதனுக்கு அவருக்கு பிடிக்காத சாம்பாரை ஊற்றியிருக்கிறார் என்பது இப்போதாவது புரிகிறதா?
இந்த சட்னி-சாம்பார் பிரச்சினையில் கன்னிமுத்துவுக்கும், ஜெகநாதனுக்கும் வாய்த்தகராறு முற்றி வன்முறை ஏற்பட்டிருக்கிறது. கன்னிமுத்து தன் கையில் இருந்த சட்னி வாளியை, ஜெகநாதனின் தலையில் கவிழ்த்து உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியிருக்கிறார். மேலும் சில கன்னிமுத்து ஆதரவாளர்கள் சேர்ந்து படுகாயமடைந்த ஜெகநாதனை உதைத்து கொடுமைப் படுத்தியிருக்கிறார்கள். பின்னர் ஜெகநாதன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேற்கண்ட நிகழ்வுகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட சில கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிய கடமை முதலமைச்சருக்கு இருக்கிறது.
1. இவ்வாறான ஒரு சம்பவம் அதிமுக ஆட்சியில் நடந்திருந்தால் திமுக தலைவர் என்ன அறிக்கை விட்டிருப்பார்?
2. 1995ல் தூத்துக்குடியில் மிளகாய் பஜ்ஜியில் மிளகாய் இல்லை என்று இதேமாதிரியான ஒரு பிரச்சினை வந்தபோது, தூத்துக்குடி நகர திமுக யாருக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தியது? பின்னர் 1996ல், 2006ல் என்று இருமுறை திமுக ஆட்சி வந்தும் இன்னமும் அந்த மிளகாய் பஜ்ஜி தகராறுக்கு காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை கூட பதியப்படவில்லையே?
3. சட்னி வாளியை தலையில் கவிழ்த்த கன்னிமுத்துவின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது ஒரு உண்மையை மனித உரிமை ஆர்வலர்கள் கண்டிருக்கிறார்கள். கன்னி முத்துவின் வீட்டில் இருப்பது தமிழக அரசு கொடுத்திருக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சி. அரசு கேபிள் கார்ப்பரேஷனின் கனெக்ஷன் அவரது வீட்டில் இல்லை. முதல்வரின் பேரர்களான நிதி சகோதரர்களின் சுமங்கலி கேபிள் விஷன் கனெக்ஷனை கன்னிமுத்து வைத்திருக்கிறார். அதுவுமின்றி அடிக்கடி கலைஞர் தொலைக்காட்சி பார்க்கிறார். கலைஞரின் இன்னொரு பேரன் வினியோகித்திருக்கும் 'நான் மகான் அல்ல' திரைப்படத்தின் விளம்பரத் துண்டு காட்சிகளை தொடர்ச்சியாக பார்த்தபின்பே அவருக்கு சட்னி வாளியை சகமனிதரின் தலையின் கவிழ்க்கும் வன்முறை எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. இந்த விரும்பத்தகாத சம்பவங்களுக்கு கலைஞர் கருணாநிதியின் குடும்பம் பொறுப்பேற்க வேண்டுமா? இல்லையா?
4. சட்னி வேண்டாம், சாம்பார் வேண்டும் என்று கேட்டவர் தலையில் சட்னி வாளியை கவிழ்க்கும் ஆணவம் ஒரு குடிமகனுக்கு வருகிறது என்றால், அதற்கு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதுதானே பொருள்? சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வர்தானே பொறுப்பேற்க வேண்டும்?
முதல்வர் அவர்களே, இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்ல விருப்பமில்லாவிட்டால் மவுனமாக இருங்கள். குறுக்கே நூல், நெடுக்கே கயிறு என்று பழங்கதைகளை எங்கள் மீது திணிக்காதீர்கள். உங்களுக்கு உங்கள் குடும்பம் தரும் நிர்ப்பந்தத்தையும், அதனால் விளையும் விபரீதங்களையும் நாங்களே புரிந்துக் கொள்கிறோம்.
* - * - * - * - * * -
ஒன்றுமில்லை தோழர்களே. ஒரு சப்பை மேட்டரை எப்படி சாகஸப் பத்தியாக எழுதுவது என்று எழுதிப் பழகிக் கொண்டிருக்கிறேன். செய்திக்கு உதவி : சன்பிக்சர்ஸ் கலாநிதிமாறன் வழங்கும் 'தினகரன்'
இந்த எழுத்து உத்தி யாராவது பிரபல சிந்தனையாளரை உங்களுக்கு நினைவுபடுத்துமேயானால் அதற்கு கொம்பெனி பொறுப்பல்ல.