கேள்வி: இலங்கையில் சகோதர யுத்தம் நடக்காமல் இருந்திருந்தால், வரலாறு வேறு வடிவம் பெற்றிருக்கும் என முதல்வர் ஆதங்கப்படுவதிலும் உண்மை இருக்கிறதே..?
பதில் : சரியாகச் சொன்னால், 1986 மே மாதத்தில் மதுரையில் 'டெசோ' மாநாடு முடிந்த பிறகு, ஈழத்தில் போராளிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இந்தியஅரசின் 'ரா' உளவுத் துறைதான் அதற்குக் காரணம். 'டெலோ' இயக்கத்துக்கு ஏராளமான ஆயுதங்களைக் கொடுத்து, புலிகளுடன் மோதும்படி தூண்டிவிட்டது 'ரா'.
அதன்படி, அவர்கள் ஆங்காங்கே விடுதலைப் புலிகளை சுட்டார்கள். சிலரைப் பிடித்துக்கொண்டு போனார்கள். அப்போது விடுதலைப் புலிகளின் சார்பில் இது குறித்து 'டெலோ' தலைவர் சிறீசபாரத்தினத்துடன் பேச்சு நடத்த கேப்டன் லிங்கம் அனுப்பிவைக்கப்பட்டார். அந்த லிங்கத்தின் இரு கண்களையும் தோண்டி எடுத்து, அவரைக் கொடூரமாகக் கொலை செய்தார் சிறீசபாரத்தினம். இதற்கு பதிலடியாகத்தான் புலிகளின் தாக்குதல் நடந்தது. போராளிகளுக்கு இடையிலான மோதலுக்கு உண்மையான காரணம் 'ரா' உளவுத் துறைதான் என்பதை கருணாநிதி ஆரம்பம் முதலே மறைத்துப் பேசுகிறார்.
தமிழகத்தில் அனைத்துப் போராளி இயக்கங்களும் இயங்கியபோதுகூட அவர்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்த முயன்றது கருணாநிதிதான். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது 1983 ஜூலையில் எல்லா போராளிக் குழுக்களின் தலைவர்களையும் அழைத்து ஒற்றுமையை உண்டாக்க முனைந்தார். இந்தத் தகவலை அறிந்ததும், அது வரை போராளிக் குழுவினரை சந்திப்பதைத் தவிர்த்துவந்த கருணாநிதி, எம்.ஜி.ஆரை சந்திப்பதற்கு முந்தைய நாளில் தன்னை வந்து சந்திக்குமாறு போராளித் தலைவர்களை அழைத்தார்.
அவரது அழைப்பை ஏற்று, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் குழுவினர் சென்றனர். அந்த சந்திப்பைப்பற்றி பத்திரிகைகளுக்கு அறிவித்து விளம்பரமும் தேடிக்கொண்டார் கருணாநிதி. ஆனால், முதலில் அழைத்த எம்.ஜி.ஆரை புலிகள் மட்டுமே திட்டமிட்டபடி சந்தித்தனர்.
ஆக, தமிழ்நாட்டில் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையிலான போட்டா போட்டியில் போராளி இயக்கங்களைப் பிளவுபடுத்தியவர் கருணாநிதிதான். பல முறை தனது கட்சிக் கண்ணோட்டத்தில் ஈழத் தமிழர்களைப் பிளவுபடுத்தியவரும் இவரேதான். தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காகப் போலியான காரணங்களை இப்போது தேடிப் பிடிக்கிறார் அவர். போராளிகளின் சகோதரச் சண்டையை ஒரு குற்றமாகவும் காரணமாகவும் சொல்லும் இவர், முதலில் தன் குடும்பத்தில் நடக்கும் சகோதரச் சண்டையை நிறுத்திக் காட்டட்டுமே!
அய்யா சொல்வதின் அடிப்படையில் பார்த்தோமானால், 'டெசோ' மாநாட்டின் விளைவாகவே, போராளிக் குழுக்களுக்குள்ளாக ஈழத்தில் மோதல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஏனெனில் மாநாடு முடிந்தப்பிறகே 'டெலோ' இயக்கத்துக்கு ஆயுதங்களை கொடுத்து புலிகளுடன் மோதும்படி 'ரா' தூண்டிவிட்டதாக நெடுமாறன் சொல்கிறார். அதையடுத்தே விடுதலைப்புலிகளை சுட்டார்கள். லிங்கத்தினை கொடூரமாக சபாரத்தினம் கொலை செய்தார். புலிகளின் தாக்குதல் பதிலுக்கு நடந்தது என்று கதையையும் சொல்கிறார்.
எப்படி ஒரு மனிதரால் இப்படி அடுக்கடுக்காக பொய்களை அள்ளிக் கொட்ட முடியுமென்று தெரியவில்லை. ஒருவேளை ஈழத்தாயின் அருட்தொண்டராக மாறிப்போனதால் ஏற்பட்ட மாற்றம் இதுவாவென்று தெரியவில்லை.
இப்போது 'டெசோ'வை நெடுமாறன் இழுப்பதற்கு காரணம், கலைஞர் டெசோவின் தலைவராக இருந்தார் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
டெசோ மாநாடு மதுரையில் 4-5-1986 அன்று நடந்தது. இம்மாநாட்டின் நோக்கம். வெறுமனே தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமல்லாது, இந்தியா முழுக்க இருக்கும் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஈழத்தில் இனப்படுகொலை நடப்பதை தெரிவித்து, தமிழர்களுக்கு ஆதரவு தேடுவதே ஆகும். ஆயினும் கடைசிவரை இந்நோக்கம் நிறைவேறவேயில்லை. அதற்கு யார் காரணமென்ற உள்விவகாரங்களில் இப்போது நாம் நுழைய வேண்டியதில்லை.
அம்மாநாட்டில் கலந்துகொண்ட அகில இந்திய தலைவர்கள் : பாஜக சார்பில் அடல்பிகாரி வாஜ்பாய், லோக்தளம் சார்பில் பகுகுணா, தெலுங்குதேசம் சார்பில் என்.டி.ஆர், சுப்பிரமணியசாமி உள்ளிட்ட தலைவர்களும், கம்யூனிஸ்ட் கட்சிகள், அஸ்ஸாம் கனபரிஷத், தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ்-எஸ், ஜனதா உள்ளிட்ட ஏனைய தேசியநீரோட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கான தங்கள் ஆத்ரவினை வெளிப்படுத்தினர். விடுதலைப்புலிகள், தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எஃப், புளொட், ஈரோஸ், உள்ளிட்ட ஈழத்தமிழ் போராளி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இம்மாநாட்டுக்குப் பிறகே 'ரா' அமைப்பால் தூண்டிவிடப்பட்டு போராளிக் குழுக்களுக்குள் மோதல் ஏற்பட்டு சிறீசபாரத்தினம் கொல்லப்பட்டதாக நெடுமாறனின் பேட்டி வாயிலாக அறியமுடிகிறது. உண்மையில் மாநாடு முடிந்து மூன்று நாட்களில், 7-5-1986 அன்று சபாரத்தினம் கொல்லப்படுகிறார். நெடுமாறன் சொல்லும் 'ரா' தூண்டுதல், டெலோ இயக்கங்களுக்கு ஆயுதம், விடுதலைப்புலிகள் மீது தாக்குதல், ஆள்கடத்தல், புலிகள் சார்பாக லிங்கம் தூதுவராக அனுப்பப்பட்டு சபாரத்தினத்தால் கொல்லப்படுதல், பதிலுக்கு விடுதலைப்புலிகள் தாக்குதல், சபாரத்தினம் கொல்லப்படுதல் ஆகிய சம்பவங்கள் வெறும் மூன்று நாட்களில், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் பெரிதும் வளராத 1986ஆம் ஆண்டு நடைபெற்றதாக சொல்கிறார். இதைத்தான் ஊரில் சொல்கிறார்கள். கொஞ்சம் ஏமாந்தால் எருமை கூட ஏரோஃப்ளேன் ஓட்டுமென்று.
மாநாட்டு உரையிலேயே கலைஞர், டெலோவுக்கும் புலிகளுக்குமான சகோதர யுத்தம் தவிர்க்கப்பட வேண்டுமென்று பேசியிருக்கிறார். மாநாட்டுக்குப் பிறகாக 'ரா'வால் தூண்டப்பட்டு அவர்கள் மோதிக்கொள்வார்கள் என்று கலைஞர் ஜோசியம் பார்த்து பேசினாரா என்பதையும் நெடுமாறன் பேட்டியில் சொல்லியிருக்கலாம்.
உண்மையில் மாநாடு தொடங்குவதற்கு முன்பாகவே புலிகளுக்கும், டெலோவுக்குமான சண்டை நடந்துவந்தது. மாநாட்டு உரையில் வாஜ்பாய், என்.டி.ஆர் போன்றோர் கூட இந்த சண்டையை குறிப்பிட்டு போராளிக்குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்று ஆலோசனை சொல்லியிருந்தனர். இதெல்லாம் நன்கு தெரிந்தும், எப்படி வாய்கூசாமல் இப்படி நெடுமாறன் பேட்டி கொடுக்கிறார் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் டெசோவுக்கு செயலாளராக இருந்தவரே இந்த பழ.நெடுமாறன் தான்.
83ஆம் ஆண்டே ஈழப்போராளிகளை ஒருங்கிணைப்பதில் கலைஞர் முட்டுக்கட்டை போட்டதாக இந்த நெடுமாறன் சொல்கிறார். அது தெரிந்தும் 86ஆம் ஆண்டு டெசோவில் கலைஞர் தலைமையில் இவர் ஏன் செயல்பட்டார் என்பதை பேட்டியெடுத்த பத்திரிகையாளராவது கேட்டிருக்கலாம். அல்லது கேட்காமலேயே பழ.நெடுமாறன் அடுத்த வெடிகுண்டையும் வீசியிருக்கலாம்.
ஆரம்பத்திலிருந்தே 'ரா'வை கலைஞர் பாதுகாக்கிறார் என்று சொல்கிறார் நெடுமாறன். 86ல் ராஜீவின் காங்கிரஸ் இந்தியாவை ஆண்டது. 'ரா' ராஜீவின் கட்டுப்பாட்டில் இருந்தது. தமிழக எம்.ஜி.ஆர். அரசு, ராஜீவுக்கு முழுமையான நிபந்தனையற்ற ஆதரவை வாரி வாரி வழங்கியது (இன்றைய கலைஞர் அரசைப்போல). உச்சபட்சமாக இலங்கை - இந்திய ஒப்பந்த விவகாரத்திலும் கூட. நெடுமாறனோ எய்தவன் இருக்க, அம்பை நோகிறார். இந்த பச்சைப் பொய்களுக்குப் பின்னால் இவரது அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணமாக இருக்கமுடியும். எம்.ஜி.ஆர் மாண்டுவிட்டார், கலைஞர் உயிரோடு இருக்கிறார் என்ற காரணத்துக்காக ஒருவரை புனிதராகவும், மற்றவரை அயோக்கியராகவும் சித்தரிப்பது என்னமாதிரியான சித்துவிளையாட்டு? எம்.ஜி.ஆர்.தான் போராளிக் குழுக்களுக்கு உண்மையான, பிரதிபலன் பாராமல் ஆதரவளித்தவர் என்று நெடுமாறன் நம்பியிருந்தால் அவர் பின்னால் போயிருக்க வேண்டியதுதானே? ஏன் கலைஞரின் பின்னால் அணிவகுத்து நின்றார். ஏனெனில் எம்.ஜி.ஆரின் புலி ஆதரவு நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருந்த நோக்கம் அப்போது நெடுமாறனுக்கு தெரியும்.
கலைஞர் மே 2009ல் தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக கடந்தகால வரலாற்றினை தவறாக திரித்துப் பேசுவது எவ்வகையில் அரசியல் நேர்மையாகாது. 89ல் கூட அமைதிப்படைக்கு கலைஞர் கொடுத்த மரியாதை என்னவென்று ஊருக்கே தெரியும். ராஜீவ் கொலைப்பழி தம்மேல் விழுந்தபோது கூட விழுந்தபோது கூட திமுக எவ்வகையிலும் யாரையும் காட்டிக் கொடுத்ததில்லை.
83ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்தபோது இங்கே இந்தியாவில் அதைத் தட்டிக் கேட்க என்ன நாதி இருந்தது? எந்தவித கண்டனங்களோ, நடவடிக்கைகளோ எடுக்கப்படாத நிலையில், மூன்றுமாதம் கழித்து செப்டம்பர் 83ல் தமிழக சட்டமன்றத்தில் இப்பிரச்சினையை கொண்டுவந்தவர் கலைஞர்தான். நெடுமாறனுக்கு சந்தேகமிருந்தால் சட்டமன்றப் பதிவேட்டினைப் பார்க்கட்டும். அதன்பிறகே எம்.ஜி.ஆர் சுறுசுறுப்பாகி, இந்திராவுக்கு தகவல் தெரிவித்து ஈழப்பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு ஏற்பட்டது என்பதும் வரலாறு. இன்றைய கலைஞர் 'ரெட்சிப்' சொருகப்பட்ட ரோபோவாக ஈழப்பிரச்சினையில் செயல்படுகிறார் என்பதற்காக, பழைய கலைஞரையும், அவரது உண்மையான அக்கறையையும் மறைத்து, மாறுபட்ட விதமாக சொல்வது நெடுமாறன் போன்ற மூத்த அரசியல்வாதிகளுக்கு அழகல்ல. ஏனெனில் அந்தகாலத்து கலைஞரை நெடுமாறனும் ஏற்றுக் கொண்டார். அவர் தலைமையில் 'டெசோ' அமைப்பிலும் செயல்பட்டார்.
பழ.நெடுமாறன் மாதிரியான இரட்டைநாக்கு கொண்டவர்கள்தான் உண்மையான ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் என்று அடையாளப்பட்டிருப்பது தமிழினத்துக்கு சாபக்கேடு. வரலாற்றில் நன்கு பதிவாகியிருக்கும் சம்பவங்களை சுயநலத்துக்காக வாய்க்கு வந்ததுபோல வளைத்துக் காட்டியவர்களால்தான் ஈழப்பிரச்சினை இழுபறியானது. இங்கே பாஜக ஜெயிக்கும், அதிமுக ஜெயிக்கும் என்று தவறான தோற்றத்தையும், எதிர்ப்பார்ப்பையும் அங்கிருப்பவர்களுக்கு தந்ததால்தான் அனைத்தும் நிகழ்ந்தது. கடைசியில் முள்ளிவாய்க்கால் நடந்தேறியது. இப்போதும் இவர்கள் திருந்தாமல் எஞ்சியிருக்கும் மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் மாண்டவர்கள் மீது அரசியல் பிழைப்பு நடத்தி வருவது கேவலமானது.
இவர்களையும் நம்பும் சொற்பமான ஆட்களை நினைத்தால் பரிதாபம்தான் படவேண்டும்.