29 அக்டோபர், 2010

வலையுலக ப்ரைவஸி!

நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் ஒரு பதிவர் சந்திப்பு நடந்தது. பதிவுலகுக்கு புதியவனாக, ஆர்வக்கோளாறோடு அந்த சந்திப்பில் கலந்து கொண்டேன். சந்திப்பில் கலந்துகொண்ட பெரியவர் ஒருவர் என்னைப் பற்றி கொஞ்சம் 'பர்சனலாக' விசாரித்தார்.

"கல்யாணம் ஆயிடிச்சா?"

அப்போது நான் புதுமாப்பிள்ளை. அந்த ஜோரில் "ஆயிடிச்சி சார்!"

"லவ் மேராஜா? அரேஞ்ச்ட் மேரேஜா?"

"அரேஞ்ச்ட் மேரேஜ்தான் சார்!"

"பொண்ணு சொந்தமா? அசலா?"

"கொஞ்சம் தூரத்து சொந்தம் சார். என்னோட ஒண்ணு விட்டு அண்ணனோட ஒண்ணு விட்ட மச்சினிச்சி!"

அவ்வளவுதான் நடந்தது விவாதம். அடுத்த ஓரிரு நாட்களிலேயே "சாதி மதத்தை எதிர்க்கும் பகுத்தறிவாளர்கள் சொந்த சாதியில்தான் திருமணம் செய்துக் கொள்கிறார்கள்" என்று பெரியவரால் என்னைச் சுட்டி ஒரு பதிவில் எழுதப்பட்டது.

"அய்யிரு யாரும் பொண்ணு தரலை. என் சாதிக்காரன் தான் எனக்கு பொண்ணு தந்தான். எந்த அய்யிராவது பொண்ணுதர ரெடியா இருந்தா இன்னொரு கல்யாணம் பண்ணிக்க ரெடி" என்று சூடாகப் பதில் அளித்தேன்.

இப்போது நண்பர் ராஜனின் முறை.

பதிவர் சந்திப்புகளிலும், சுக-துக்க விழாக்களிலும் பகிர்ந்துகொள்ளும் 'பர்சனல்' தகவல்கள் பொதுவாக பதிவர் வட்டத்தில் பரிமாறக் கொள்ளப் படுவதில்லை. செந்தழல் ரவி, பாலபாரதி, அதிஷா, சுகுணாதிவாகர், வரவரையான், முத்து (தமிழினி), குழலி, கோவி.கண்ணன் உள்ளிட்ட பல நண்பர்களுக்கு என்னைப் பற்றிய 'பர்சனல்' தகவல்கள் தெரியும். அவர்களைப் பற்றி எனக்கும் தெரியும். இவர்களில் சிலர் என் இல்ல விழாக்களுக்கும் வந்ததுண்டு. சுகுணாதிவாகரின் திருமணம், செந்தழல் ரவி இல்ல நிகழ்ச்சி, கோவி.கண்ணன் இல்ல புதுமனைபுகுவிழா போன்ற தனிப்பட்ட பல நிகழ்ச்சிகளுக்கு நானும் சென்றிருக்கிறேன். ஆயினும் தனிப்பட்ட விஷயங்களை நட்புக்கு மரியாதை தந்து யாரும் பொதுவில் வைத்ததில்லை. இது ஒரு வலையுலகப் பண்பாடாகவே அனுசரிக்கப் படுகிறது.

இப்போது ராஜனின் திருமணம் எப்படி நடந்தது, மண்டபத்துக்கு பணம் கட்டியது யார், அய்யிரு மந்திரம் ஓதினாரா என்றெல்லாம் பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் விஸ்தாரமாக அலசப்படுகிறது. அடுத்தவர் வீட்டு விவகாரங்களை - அதுவும் நண்பர்கள் வீட்டு விவகாரங்களை பொதுவில் வைத்து பேசுவது கேவலமாக இல்லையா?

சமரசங்களுக்கு இடையே கொஞ்சமேணும் கொள்கையைப் பாவிக்கும் சூழலில்தான் பலரும் இருக்கிறோம். ஏனெனில் இதே கொள்கையோடு எங்கள் அப்பன், ஆத்தா இருக்கவில்லை. எங்கள் கொள்கை எங்கள் குடும்பங்களுக்கு புதியது. அவர்கள் ஏற்றுக்கொள்ள நாளாகும். ஏற்றுக் கொள்ளாவிட்டால் குடும்பத்தை விட்டு வெளியே வருமளவுக்கு யாரும் நிர்மூடர்களாகவும் இல்லை. வலிமையான இந்தியக் குடும்ப கட்டுமான முறையில் எது சாத்தியமோ, அதைதான் செய்யக்கூடிய நிலையில் இருக்கிறோம்.

ராஜன் விஷயத்தில் பெரியவர் செய்திருக்கும் பெருந்தொண்டால், இனி பதிவர்கள் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கு மற்ற பதிவர்களை அழைக்க கொஞ்சம் அச்சப்படுவார்கள். அதிலும் 'பெரியவர்' கலந்துகொள்கிறார் என்றால், அழைத்தவர் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டுதான் அடுத்த சில நாட்களுக்கு இருக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. 'ப்ரைவஸியான' மேட்டர்களை ரொம்ப நெருக்கமில்லாத பதிவர்களோடு யாரும் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதே பாதுகாப்பான அம்சம். ராஜன் திருமணம் நமக்கெல்லாம் ஒரு பாடம்.

27 அக்டோபர், 2010

பொய் சொல்லலாமா நெடுமாறன் அய்யா?


அய்யா பழ. நெடுமாறன் அவர்களின் பேட்டி ஒன்றினை சமீபத்தில் படிக்க நேர்ந்தது :

கேள்வி: இலங்கையில் சகோதர யுத்தம் நடக்காமல் இருந்திருந்தால், வரலாறு வேறு வடிவம் பெற்றிருக்கும் என முதல்வர் ஆதங்கப்படுவதிலும் உண்மை இருக்கிறதே..?

பதில் : சரியாகச் சொன்னால், 1986 மே மாதத்தில் மதுரையில் 'டெசோ' மாநாடு முடிந்த பிறகு, ஈழத்தில் போராளிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இந்தியஅரசின் 'ரா' உளவுத் துறைதான் அதற்குக் காரணம். 'டெலோ' இயக்கத்துக்கு ஏராளமான ஆயுதங்களைக் கொடுத்து, புலிகளுடன் மோதும்படி தூண்டிவிட்டது 'ரா'. 

அதன்படி, அவர்கள் ஆங்காங்கே விடுதலைப் புலிகளை சுட்டார்கள். சிலரைப் பிடித்துக்கொண்டு போனார்கள். அப்போது விடுதலைப் புலிகளின் சார்பில் இது குறித்து 'டெலோ' தலைவர் சிறீசபாரத்தினத்துடன் பேச்சு நடத்த கேப்டன் லிங்கம் அனுப்பிவைக்கப்பட்டார். அந்த லிங்கத்தின் இரு கண்களையும் தோண்டி எடுத்து, அவரைக் கொடூரமாகக் கொலை செய்தார் சிறீசபாரத்தினம். இதற்கு பதிலடியாகத்தான் புலிகளின் தாக்குதல் நடந்தது. போராளிகளுக்கு இடையிலான மோதலுக்கு உண்மையான காரணம் 'ரா' உளவுத் துறைதான் என்பதை கருணாநிதி ஆரம்பம் முதலே மறைத்துப் பேசுகிறார்.

தமிழகத்தில் அனைத்துப் போராளி இயக்கங்களும் இயங்கியபோதுகூட அவர்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்த முயன்றது கருணாநிதிதான். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது 1983 ஜூலையில் எல்லா போராளிக் குழுக்களின் தலைவர்களையும் அழைத்து ஒற்றுமையை உண்டாக்க முனைந்தார். இந்தத் தகவலை அறிந்ததும், அது வரை போராளிக் குழுவினரை சந்திப்பதைத் தவிர்த்துவந்த கருணாநிதி, எம்.ஜி.ஆரை சந்திப்பதற்கு முந்தைய நாளில் தன்னை வந்து சந்திக்குமாறு போராளித் தலைவர்களை அழைத்தார். 

அவரது அழைப்பை ஏற்று, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் குழுவினர் சென்றனர். அந்த சந்திப்பைப்பற்றி பத்திரிகைகளுக்கு அறிவித்து விளம்பரமும் தேடிக்கொண்டார் கருணாநிதி. ஆனால், முதலில் அழைத்த எம்.ஜி.ஆரை புலிகள் மட்டுமே திட்டமிட்டபடி சந்தித்தனர்.

ஆக, தமிழ்நாட்டில் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையிலான போட்டா போட்டியில் போராளி இயக்கங்களைப் பிளவுபடுத்தியவர் கருணாநிதிதான். பல முறை தனது கட்சிக் கண்ணோட்டத்தில் ஈழத் தமிழர்களைப் பிளவுபடுத்தியவரும் இவரேதான். தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காகப் போலியான காரணங்களை இப்போது தேடிப் பிடிக்கிறார் அவர். போராளிகளின் சகோதரச் சண்டையை ஒரு குற்றமாகவும் காரணமாகவும் சொல்லும் இவர், முதலில் தன் குடும்பத்தில் நடக்கும் சகோதரச் சண்டையை நிறுத்திக் காட்டட்டுமே! 

அய்யா சொல்வதின் அடிப்படையில் பார்த்தோமானால், 'டெசோ' மாநாட்டின் விளைவாகவே, போராளிக் குழுக்களுக்குள்ளாக ஈழத்தில் மோதல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஏனெனில் மாநாடு முடிந்தப்பிறகே 'டெலோ' இயக்கத்துக்கு ஆயுதங்களை கொடுத்து புலிகளுடன் மோதும்படி 'ரா' தூண்டிவிட்டதாக நெடுமாறன் சொல்கிறார். அதையடுத்தே விடுதலைப்புலிகளை சுட்டார்கள். லிங்கத்தினை கொடூரமாக சபாரத்தினம் கொலை செய்தார். புலிகளின் தாக்குதல் பதிலுக்கு நடந்தது என்று கதையையும் சொல்கிறார்.

எப்படி ஒரு மனிதரால் இப்படி அடுக்கடுக்காக பொய்களை அள்ளிக் கொட்ட முடியுமென்று தெரியவில்லை. ஒருவேளை ஈழத்தாயின் அருட்தொண்டராக மாறிப்போனதால் ஏற்பட்ட மாற்றம் இதுவாவென்று தெரியவில்லை.

இப்போது 'டெசோ'வை நெடுமாறன் இழுப்பதற்கு காரணம், கலைஞர் டெசோவின் தலைவராக இருந்தார் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

டெசோ மாநாடு மதுரையில் 4-5-1986 அன்று நடந்தது. இம்மாநாட்டின் நோக்கம். வெறுமனே தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமல்லாது, இந்தியா முழுக்க இருக்கும் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஈழத்தில் இனப்படுகொலை நடப்பதை தெரிவித்து, தமிழர்களுக்கு ஆதரவு தேடுவதே ஆகும். ஆயினும் கடைசிவரை இந்நோக்கம் நிறைவேறவேயில்லை. அதற்கு யார் காரணமென்ற உள்விவகாரங்களில் இப்போது நாம் நுழைய வேண்டியதில்லை.

அம்மாநாட்டில் கலந்துகொண்ட அகில இந்திய தலைவர்கள் : பாஜக சார்பில் அடல்பிகாரி வாஜ்பாய், லோக்தளம் சார்பில் பகுகுணா, தெலுங்குதேசம் சார்பில் என்.டி.ஆர், சுப்பிரமணியசாமி உள்ளிட்ட தலைவர்களும், கம்யூனிஸ்ட் கட்சிகள், அஸ்ஸாம் கனபரிஷத், தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ்-எஸ், ஜனதா உள்ளிட்ட ஏனைய தேசியநீரோட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கான தங்கள் ஆத்ரவினை வெளிப்படுத்தினர். விடுதலைப்புலிகள், தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எஃப், புளொட், ஈரோஸ், உள்ளிட்ட ஈழத்தமிழ் போராளி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டுக்குப் பிறகே 'ரா' அமைப்பால் தூண்டிவிடப்பட்டு போராளிக் குழுக்களுக்குள் மோதல் ஏற்பட்டு சிறீசபாரத்தினம் கொல்லப்பட்டதாக நெடுமாறனின் பேட்டி வாயிலாக அறியமுடிகிறது. உண்மையில் மாநாடு முடிந்து மூன்று நாட்களில், 7-5-1986 அன்று சபாரத்தினம் கொல்லப்படுகிறார். நெடுமாறன் சொல்லும் 'ரா' தூண்டுதல், டெலோ இயக்கங்களுக்கு ஆயுதம், விடுதலைப்புலிகள் மீது தாக்குதல், ஆள்கடத்தல், புலிகள் சார்பாக லிங்கம் தூதுவராக அனுப்பப்பட்டு சபாரத்தினத்தால் கொல்லப்படுதல், பதிலுக்கு விடுதலைப்புலிகள் தாக்குதல், சபாரத்தினம் கொல்லப்படுதல் ஆகிய சம்பவங்கள் வெறும் மூன்று நாட்களில், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் பெரிதும் வளராத 1986ஆம் ஆண்டு நடைபெற்றதாக சொல்கிறார். இதைத்தான் ஊரில் சொல்கிறார்கள். கொஞ்சம் ஏமாந்தால் எருமை கூட ஏரோஃப்ளேன் ஓட்டுமென்று.

மாநாட்டு உரையிலேயே கலைஞர், டெலோவுக்கும் புலிகளுக்குமான சகோதர யுத்தம் தவிர்க்கப்பட வேண்டுமென்று பேசியிருக்கிறார். மாநாட்டுக்குப் பிறகாக 'ரா'வால் தூண்டப்பட்டு அவர்கள் மோதிக்கொள்வார்கள் என்று கலைஞர் ஜோசியம் பார்த்து பேசினாரா என்பதையும் நெடுமாறன் பேட்டியில் சொல்லியிருக்கலாம்.

உண்மையில் மாநாடு தொடங்குவதற்கு முன்பாகவே புலிகளுக்கும், டெலோவுக்குமான சண்டை நடந்துவந்தது. மாநாட்டு உரையில் வாஜ்பாய், என்.டி.ஆர் போன்றோர் கூட இந்த சண்டையை குறிப்பிட்டு போராளிக்குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்று ஆலோசனை சொல்லியிருந்தனர். இதெல்லாம் நன்கு தெரிந்தும், எப்படி வாய்கூசாமல் இப்படி நெடுமாறன் பேட்டி கொடுக்கிறார் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் டெசோவுக்கு செயலாளராக இருந்தவரே இந்த பழ.நெடுமாறன் தான்.

83ஆம் ஆண்டே ஈழப்போராளிகளை ஒருங்கிணைப்பதில் கலைஞர் முட்டுக்கட்டை போட்டதாக இந்த நெடுமாறன் சொல்கிறார். அது தெரிந்தும் 86ஆம் ஆண்டு டெசோவில் கலைஞர் தலைமையில் இவர் ஏன் செயல்பட்டார் என்பதை பேட்டியெடுத்த பத்திரிகையாளராவது கேட்டிருக்கலாம். அல்லது கேட்காமலேயே பழ.நெடுமாறன் அடுத்த வெடிகுண்டையும் வீசியிருக்கலாம்.

ஆரம்பத்திலிருந்தே 'ரா'வை கலைஞர் பாதுகாக்கிறார் என்று சொல்கிறார் நெடுமாறன். 86ல் ராஜீவின் காங்கிரஸ் இந்தியாவை ஆண்டது. 'ரா' ராஜீவின் கட்டுப்பாட்டில் இருந்தது. தமிழக எம்.ஜி.ஆர். அரசு, ராஜீவுக்கு முழுமையான நிபந்தனையற்ற ஆதரவை வாரி வாரி வழங்கியது (இன்றைய கலைஞர் அரசைப்போல). உச்சபட்சமாக இலங்கை - இந்திய ஒப்பந்த விவகாரத்திலும் கூட. நெடுமாறனோ எய்தவன் இருக்க, அம்பை நோகிறார். இந்த பச்சைப் பொய்களுக்குப் பின்னால் இவரது அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணமாக இருக்கமுடியும். எம்.ஜி.ஆர் மாண்டுவிட்டார், கலைஞர் உயிரோடு இருக்கிறார் என்ற காரணத்துக்காக ஒருவரை புனிதராகவும், மற்றவரை அயோக்கியராகவும் சித்தரிப்பது என்னமாதிரியான சித்துவிளையாட்டு? எம்.ஜி.ஆர்.தான் போராளிக் குழுக்களுக்கு உண்மையான, பிரதிபலன் பாராமல் ஆதரவளித்தவர் என்று நெடுமாறன் நம்பியிருந்தால் அவர் பின்னால் போயிருக்க வேண்டியதுதானே? ஏன் கலைஞரின் பின்னால் அணிவகுத்து நின்றார். ஏனெனில் எம்.ஜி.ஆரின் புலி ஆதரவு நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருந்த நோக்கம் அப்போது நெடுமாறனுக்கு தெரியும்.

கலைஞர் மே 2009ல் தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக கடந்தகால வரலாற்றினை தவறாக திரித்துப் பேசுவது எவ்வகையில் அரசியல் நேர்மையாகாது. 89ல் கூட அமைதிப்படைக்கு கலைஞர் கொடுத்த மரியாதை என்னவென்று ஊருக்கே தெரியும். ராஜீவ் கொலைப்பழி தம்மேல் விழுந்தபோது கூட விழுந்தபோது கூட திமுக எவ்வகையிலும் யாரையும் காட்டிக் கொடுத்ததில்லை.

83ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்தபோது இங்கே இந்தியாவில் அதைத் தட்டிக் கேட்க என்ன நாதி இருந்தது? எந்தவித கண்டனங்களோ, நடவடிக்கைகளோ எடுக்கப்படாத நிலையில், மூன்றுமாதம் கழித்து செப்டம்பர் 83ல் தமிழக சட்டமன்றத்தில் இப்பிரச்சினையை கொண்டுவந்தவர் கலைஞர்தான். நெடுமாறனுக்கு சந்தேகமிருந்தால் சட்டமன்றப் பதிவேட்டினைப் பார்க்கட்டும். அதன்பிறகே எம்.ஜி.ஆர் சுறுசுறுப்பாகி, இந்திராவுக்கு தகவல் தெரிவித்து ஈழப்பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு ஏற்பட்டது என்பதும் வரலாறு. இன்றைய கலைஞர் 'ரெட்சிப்' சொருகப்பட்ட ரோபோவாக ஈழப்பிரச்சினையில் செயல்படுகிறார் என்பதற்காக, பழைய கலைஞரையும், அவரது உண்மையான அக்கறையையும் மறைத்து, மாறுபட்ட விதமாக சொல்வது நெடுமாறன் போன்ற மூத்த அரசியல்வாதிகளுக்கு அழகல்ல. ஏனெனில் அந்தகாலத்து கலைஞரை நெடுமாறனும் ஏற்றுக் கொண்டார். அவர் தலைமையில் 'டெசோ' அமைப்பிலும் செயல்பட்டார்.

பழ.நெடுமாறன் மாதிரியான இரட்டைநாக்கு கொண்டவர்கள்தான் உண்மையான ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் என்று அடையாளப்பட்டிருப்பது தமிழினத்துக்கு சாபக்கேடு. வரலாற்றில் நன்கு பதிவாகியிருக்கும் சம்பவங்களை சுயநலத்துக்காக வாய்க்கு வந்ததுபோல வளைத்துக் காட்டியவர்களால்தான் ஈழப்பிரச்சினை இழுபறியானது. இங்கே பாஜக ஜெயிக்கும், அதிமுக ஜெயிக்கும் என்று தவறான தோற்றத்தையும், எதிர்ப்பார்ப்பையும் அங்கிருப்பவர்களுக்கு தந்ததால்தான் அனைத்தும் நிகழ்ந்தது. கடைசியில் முள்ளிவாய்க்கால் நடந்தேறியது. இப்போதும் இவர்கள் திருந்தாமல் எஞ்சியிருக்கும் மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் மாண்டவர்கள் மீது அரசியல் பிழைப்பு நடத்தி வருவது கேவலமானது.

இவர்களையும் நம்பும் சொற்பமான ஆட்களை நினைத்தால் பரிதாபம்தான் படவேண்டும்.

26 அக்டோபர், 2010

வலைப்பதிவர்களிடம் ஒரு அவசர உதவி!

1. ஏன் வலைப்பதிவு எழுதுகிறீர்கள்?

2. வலைப்பதிவுலகில் உங்களுக்கு தெரிந்த பிரபலங்கள் யார்? யார்? (ஜெயமோகன், சாருநிவேதிதா, விஜய்மில்டன் மாதிரி) - முடிந்தால் அவர்களது வலைப்பூ முகவரியையும் தரவும்.

3. வலைப்பூவில் உங்களுக்கு பிடித்த அம்சம்? பிடிக்காத விஷயம்?

4. வலையுலகில் ஏதேனும் மறக்கமுடியாத சுவையான சம்பவம்

5. ஏனெல்லாம் உங்களுக்கு உங்கள் வலைப்பூ பயன்படுகிறது?


- ஒரு சிறப்புக் கட்டுரைக்காக இந்த விஷயங்கள் தேவைப்படுகிறது. தயவுசெய்து உடனடியாக இந்த விவரங்களை yuvakrishna@gmail.com முகவரிக்கு அனுப்பவும். 'வித்தியாசமான' விஷயங்களையும், அனுபவங்களையும் நிச்சயம் உலகறியச் செய்யலாம். போட்டோ வெளியாவது குறித்த தயக்கம் இல்லாதவர்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவையும் அனுப்பி வைக்கலாம்.

அன்புடன்
லக்கிலுக்

25 அக்டோபர், 2010

ஏனிந்த விலை உயர்வு?



ரமேஷ் நாமக்கல்லைச் சேர்ந்த இளைஞர். இருபதுகளின் மத்தியில் வயது. தற்போது சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். சொல்லிக் கொள்ளும்படியான வருமானம். ரமேஷுக்கு ஒரு கனவு உண்டு. திருமணத்துக்கு முன்பாக, ஊரில் சொந்தமாக ஒரு வீடு கட்டிவிட வேண்டும்.

கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பலரிடமும் ஆலோசனை கேட்டு, தனது கனவு வீட்டுக்கான 'பட்ஜெட்'டை நிர்ணயித்தார். குருவி மாதிரி சிறுக சிறுக பணத்தை சேமித்தார். இப்போது பணம் ரெடி. தனது கனவு வீட்டை ஊரில் கட்டவும் ஆரம்பித்தார். ஆசையோடு திட்டமிட்டு கட்ட ஆரம்பித்த வீடு, இன்று பாதியில் நிற்கிறது. பட்ஜெட் பற்றாக்குறை!

ஏன், ரமேஷ் 'நறுக்'கென்று திட்டமிட்டு போட்ட பட்ஜெட்டில் துண்டு விழுகிறது?

ஏனெனில், மூன்று மாதங்களுக்கு முன்பு தோராயமாக, சிமெண்ட் விலை ஒரு மூட்டைக்கு ரூ.160, கட்டுமானக் கம்பி விலை (ஒரு டன்னுக்கு) ரூ.32000, ஜல்லி (ஒரு யூனிட்) ரூ.2000, செங்கல் (கல் ஒன்று) ரூ.3.50-க்கு விற்கப்பட்டுக் கொண்டிருந்தது. இன்றைய தேதியில் இப்பொருட்களின் விலை முறையே ரூ.290, ரூ.39000, ரூ.2500, ரூ.5 என்று அதிரடியாக விலை ஏறியிருக்கிறது. (ஊருக்கு ஊர், பொருளுக்கு பொருள் விலை வேறுபடலாம்)

"வங்கிக் கடனுக்காக பேயா அலைஞ்சுக்கிட்டிருக்கேன் சார். பின்னே பத்து லட்சரூபாய்க்கு எஸ்டிமேட் போட்டு வேலையை ஆரம்பிச்சா, முடிக்கும்போது பண்ணிரெண்டு லட்சம் ஆகுமுன்னா, என்னை மாதிரி நடுத்தரவர்க்கம் என்னதான் சார் செய்யும்?" என்கிறார் ரமேஷ் வருத்தமாக.

நடுத்தர வர்க்கத்துக்கு வீடு என்பது கனவு. வீடு கட்டும் பலரும் சந்திக்கிற நெருக்கடி என்னவென்றால் கட்டுமானப் பணியாளர்களின் ஊதியம். தமிழகத்தில் சராசரியாக, ஒரு நாளைக்கு கொத்தனாருக்கு/மேஸ்திரிக்கு ரூ.350 முதல் 400, சித்தாள் கூலி பெண்களுக்கு ரூ.100 முதல் 120 – ஆண்களுக்கு ரூ.150 வரை வழங்க வேண்டியிருக்கிறது. இதனால் ஒரு வீடு உருவாவதில் கட்டுமானப் பொருட்களின் விலைக்கு நிகராக தொழிலாளர் ஊதியமும் செலவாகிறது. உள்கட்டமைப்பு வேகமாக வளர்ந்து வரும் காரணத்தால், கட்டுமானத் தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் பல இடங்களில் பணிபுரிய ஒப்புக் கொள்கிறார்கள். தேவைப்படும் நேரத்தில் வேலைக்கும் அவர்களால் வரமுடிவதில்லை. இப்படிப்பட்ட சிக்கலான சூழலில் கட்டுமானப் பொருட்களின் 'திடீர்' விலை உயர்வு நடுத்தர வர்க்கத்துக்கு சொந்த வீடு என்பது கனவில் மட்டுமே தோன்றக்கூடிய ஒரு காட்சிப் பொருளாகி விடும்.

அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் நாட்டில், கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டும் 47 இலட்சம் கோடி ரூபாய் மத்திய அரசால் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் ஐம்பது சதவிகிதப் பணிகள் சிமெண்டைச் சார்ந்தது. கட்டுமானப் பொருட்களின் விலை இதுபோல விண்ணுக்கு உயர்ந்து கொண்டிருந்தால், அரசு திட்டமிட்ட அளவில் பாதிகூட நாட்டின் உள்கட்டமைப்பில் வளர்ச்சி பெறாது.

அண்டைமாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில்தான் இந்த விலையேற்றம் அதிகமாக இருக்கிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் சராசரியாக 20 சதவிகிதம் கூடுதல் விலை கொடுத்து கட்டுமானப் பொருட்களை வாங்க வேண்டியிருக்கிறது.

செந்தில்குமார், சென்னைப் புறநகரில் 'பில்டிங் காண்ட்ராக்ட்' தொழில் செய்து வருகிறார். இவரது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் நடுத்தரவர்க்கத்தினரே. சிறியளவிலான அப்பார்ட்மெண்டுகளையும், தனிவீடுகளையும் கட்டித்தரும் ஒப்பந்தக்காரர் இவர்.

"வீடு கட்ட ஆரம்பிக்கும்போது வாடிக்கையாளரோடு ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம். குறிப்பிட்ட காலக்கெடுவில், குறிப்பிட்ட பணத்துக்கு வீட்டை முடித்துக் கொடுத்தாக வேண்டும். கட்டுமானப் பொருள் வாங்குவது, தொழிலாளர் கூலியெல்லாம் கணக்கு போட்டு ஓரளவு நியாயமான லாபம் வரும் வகையில் அந்த ஒப்பந்தம் இருக்கும்.

திடீரென்று இதுபோல விலை ஏறினால், எங்களைப் போன்ற சிறிய ஒப்பந்ததாரர்கள் நஷ்டத்துக்குதான் வேலை பார்க்க வேண்டும். திடீரென்று விலை ஏறிவிட்டது என்று சொல்லி, ஒப்பந்தத்தில் இருக்கும் பணத்தைவிட அதிகமாகவா வீட்டுச் சொந்தக்காரரிடம் கேட்கமுடியும்? கேட்டாலும் கொடுத்துவிடுவார்களா?

பெரிய வேலை எடுத்துச் செய்யும் காண்ட்ராக்டர்களுக்கு வேண்டுமானால் விலையேற்றத்தால் லாபத்தில் கொஞ்சம் சதவிகிதம் குறையும். எங்களைப் போன்றவர்களுக்கு கைகாசை போட்டு வீட்டை முடித்துத் தருவதைத் தவிர வேறுவழியில்லை. ஏன் தான் இதுபோல தாறுமாறாக ஏறித் தொலைக்கிறதோ தெரியவில்லை" என்கிறார் செந்தில்குமார்.

ஏனிந்த 'திடீர்' விலை உயர்வு?

செந்தில் குமாரை போலவே யாருக்கும் சரியான விடை தெரியவில்லை. பொதுமக்களில் பெரும்பாலானோர் தமிழகத்தில் வெற்றிகரமாக நடந்து வரும் 'கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தை' நோக்கி கைகாட்டுகிறார்கள். நடைபெறும் நிதியாண்டில் 1800 கோடி ரூபாய் செலவில் மூன்று லட்சம் குடிசை வீடுகள் கான்க்ரீட் இல்லங்களாக, அரசு மானியத்தில் உருவாகி வருகிறது. ஒரு இல்லத்துக்கு ரூ.60,000 கட்டுமானப் பொருட்கள் செலவுக்காக அரசால் வழங்கப்படும். அதைக்கொண்டு குடிசைவீட்டுக்காரர் தன் இல்லத்தை 'எப்படியோ' கட்டிமுடித்துக் கொள்ள வேண்டியதுதான். பெரும்பாலானோர் இத்திட்டத்தில் கூலிக்கு ஆள் வைக்காமல், தாங்களாகவே வீட்டை கட்டிமுடித்துக் கொள்கிறார்கள்.

பெரிய எண்ணிக்கையில் ஒரே நேரத்தில் சுமார் 1800 கோடி ரூபாய்க்கு கட்டுமானப் பொருட்கள் வாங்கப்படும்போது தட்டுப்பாடு ஏற்படுவது சகஜம்தான். தட்டுப்பாட்டின் எதிர்வினை என்பது விலையேற்றம் என்பது பொருளாதாரத்தின் அடிப்படை விதிகளில் ஒன்று. ஆனால், 'கலைஞர் வீட்டு வசதித் திட்டம்' விலையேற்றத்துக்கான ஒரு சிறு காரணிதானே தவிர, அதுமட்டுமே காரணமல்ல.

பெட்ரோல்-டீசல் விலை மழைக்கால பருவநிலை மாதிரி அடிக்கடி மாறிக்கொண்டே (99 சதவிகித நேரங்களில் விலையேறிக்கொண்டே) இருப்பதும் ஒரு காரணம். எந்த ஒரு தொழிலுமே போக்குவரத்தை நம்பியே இருக்க வேண்டியிருக்கிறது. சிமெண்ட், கல், செங்கல், ஜல்லி என்று எல்லாப் பொருட்களுமே உற்பத்தியாகும் இடத்திலிருந்து, மொத்த விற்பனையாளருக்கு செல்லும். அங்கிருந்து சில்லறை விற்பனையாளர்களுக்கு, பின்னர் அவர்களிடமிருந்து கட்டுமானம் நடக்கும் இடத்துக்கு என்று மாறிக்கொண்டேயிருக்கும். எனவே இத்தொழிலில் போக்குவரத்துக்கு தவிர்க்கவியலா இடம் இருக்கிறது. போக்குவரத்துக்கு பெரும்பாலும் லாரி பயன்படுத்தப் படுகிறது. எனவே நிலையில்லா பெட்ரோல்-டீசல் விலை நிலவரமும் விலையேற்றத்துக்கு இன்னுமொரு காரணம். இதுபோல சிறு சிறு காரணங்கள் ஏராளம். அவற்றில் பலவும் நியாயமானவையும் கூட.

முக்கியமான இன்னொரு காரணம் உண்டு.

இந்த 'பகீர்' விலையேற்றத்துக்கு சிமெண்ட் நிறுவனங்களே முழுக்க முழுக்க காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்கள் இந்திய கட்டிட வல்லுனர் சங்கத்தினர்.

இந்த சங்கத்தின் தென்னக மையத்தின் தலைவர் மு.மோகன் சொல்கிறார்.

"சிமெண்ட் விலை வரலாறு காணாத விதத்தில் 10 நாட்களில் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. இதையடுத்தே மற்ற கட்டுமானப் பொருட்களும் கூடவே கொஞ்சமாக விலையை கூட்டிக் கொண்டன. இதற்கு காரணம் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் கூட்டாக லாபக்கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்று நாங்கள் கருதுகிறோம்.

கட்டமைப்பு வசதிகள் பெருகிவரும் சூழலில், வேண்டுமென்றே தட்டுப்பாட்டை உருவாக்கி லாபத்தை அதிகப்படுத்துகிறார்கள். சிமெண்டுக்கான மூலப்பொருளை அரசுதான் அவர்களுக்கு குறைந்த விலைக்கு தருகிறது. அரசின் தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை கொண்டு உற்பத்தி செய்பவர்கள், விலையேற்றத்துக்கு அரசிடம் அனுமதி பெறுவதேயில்லை.

எனவே சிமெண்டை அத்தியாவசியப் பொருளாக அரசு அறிவித்து, விலை என்னவென்று அரசே நிர்ணயிக்க வேண்டுமென்று கோரியிருக்கிறோம்" என்று முடித்துக் கொண்டார்

வடமாநிலங்களில் கடுமையான மழை. தென்மாநிலங்களிலும் ஓரளவிற்கு மழை. எனவே நாட்டில் சிமெண்டின் பயன்பாடு தற்போது குறைவாகவே இருக்கிறது. சிமெண்ட் உற்பத்திக்கான மூலப் பொருட்களின் விலையும் உயரவில்லை. ஆயினும் சிமெண்டின் விலை இருமடங்காக உயர்கிறது என்பதை காணும்போது மோகனின் பேச்சில் இருக்கும் நியாயம் புரிகிறது. (சிமெண்ட் விலை நியாயமாக என்ன இருக்க வேண்டுமென்பதை பெட்டிச் செய்தியில் காண்க)

ஏற்கனவே மழைக்காலம். இந்த லட்சணத்தில் கட்டுமானப் பொருட்கள் விலையேற்றத்தால் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலையிழப்பது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் என்பது செயற்கையானது – சில நிறுவனங்களின் லாபக்கணக்குக்காக ஏற்படுத்தப்படுகிறது - என்றால் அது கடுமையாக மக்களை பாதிக்கும் ஒரு செயல். Lime Stone என்பது நாட்டின் கனிமவளம். இதை மிகக்குறைந்த மதிப்புக்கு அரசிடமிருந்து பெற்று சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் உற்பத்திப் பொருளை மட்டும் பன்மடங்கு விலைக்கு மக்களுக்கு விற்பது நியாயமல்ல.

தொழிற்சாலை அமைக்கக் கோரும்போது சிமெண்ட் நிறுவனங்கள் ஒப்புக்கொண்ட உற்பத்திறன் என்ன? அந்த உற்பத்தித் திறன் எல்லா நேரத்திலும் செயல்படுத்தப்படுகிறதா போன்ற விஷயங்களை அரசு கண்காணிக்க வேண்டும். போலியான தட்டுப்பாட்டை உருவாக்கி, கொள்ளை லாபம் சம்பாதிப்பதை தடுக்க வேண்டும்.

தேவைப்பட்டால் கட்டிட வல்லுனர் சங்கம் கோருவதைப் போல சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை அத்தியாவசியப் பொருளாக அறிவித்து, அரசே விலை நிர்ணயம் செய்ய முன்வரவேண்டும்.

இல்லையேல், எத்தனை 'கலைஞர் வீட்டு வசதித் திட்டம்' கொண்டுவந்தாலும் வீடு என்பது பலருக்கும் கனவில் மட்டுமே சாத்தியமாகும் திட்டமாக போய்விடும்.


எக்ஸ்ட்ரா மேட்டர் :

சிமெண்ட் (டன் ஒன்றுக்கு) உற்பத்திச் செலவு (இலாபம் உட்பட) - 1275.00

VAT 12.5%- 159.00

சிமெண்ட் மீதான சுங்கவரி (தீர்வை உட்பட) - 408.00

லைம் ஸ்டோன் மீதான ராயல்டி மற்றும் தீர்வை - 69.00

பவர் டாரிஃப் - 22.00

மற்ற பொருட்களுக்கான விற்பனை வரி (Stores Spare, rawmaterials etc.)- 27.00

சுங்கவரி – Stores & Spares - 23.00

சேவைவரி, Sundries etc. - 5.00

பேக்கிங் செலவு - 106.00

போக்குவரத்து - 700.00

மொத்தம் (ஒரு டன்னுக்கு) - 2794.00

ஒரு டன் = 20 மூட்டை

எனவே ஒரு மூட்டை சிமெண்ட் விற்கப்பட வேண்டிய விலை ரூ.140 மட்டுமே. ரூ.290க்கு விற்கப்படுகிறது என்றால் மீதி 150 ரூபாய்க்கு சிமெண்ட் நிறுவனங்கள் என்ன கணக்கு வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

(நன்றி : புதிய தலைமுறை)

23 அக்டோபர், 2010

சிங்கத்தின் தீபாவளி ஸ்டார்ட்ஸ்...

இந்த தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்?

3டி மேக்ஸ் புடவை..

மல்டி மசகலி சல்வார்..

குந்தன் ஒர்க் சுரிதார் மெட்டீரியல்..

காட்டன் மஸ்லின் சட்டை..

பொந்தூர் வேட்டி..

பிளாக்பெர்ரி பெர்ல்3ஜி9100..

ஸ்டேண்டர்ட் மார்க் பட்டாசுகள்..

பாசிப்பருப்பு அல்வா, முள்ளு முறுக்கு..

உங்கள் சாய்ஸ் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால் காமிக்ஸ் ரசிகர்களின் பல்லாண்டுகால வனவாசம் இந்த தீபாவளியோடு முடிவுக்கு வருகிறது.

என்னது காமிக்ஸா? குழந்தைகள்லாம் படிக்குமே.. அதுவா? என்று முகம் சுளிக்கிறீர்களா?

வெயிட் பண்ணுங்க ஜெண்டில்மேன். உங்களுக்காக ஒரு தகவல்..

இன்றைய தேதியில் தமிழில் காமிக்ஸ் படிப்பவர்கள் அனைவரும் இருபது வயதுக்கு மேற்பட்டவர்களாகவே 80 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள் என்று ஏதோ ஒரு அமைப்பின் ஏதோ ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.

இது நிச்சயமாக குழந்தைகள் சமாச்சாரம் அல்ல.

ஏனெனில்..

1960களின் இறுதியில் 'மாலைமதி காமிக்ஸ்' வெளிவந்து கொண்டிருந்தது. ஒரு இதழின் விலை 75 காசு. உங்கள் தாத்தாவோ, அப்பாவோ அந்த காலத்தில் வாங்கி பரண் மேல் போட்டு வைத்திருந்தார்களேயானால் தூசு தட்டி எடுத்து வையுங்கள். ஒரு இதழ் இன்று பிரிமீயம் ரேட்டில் 4000 ரூபாய் வரை விலை போக வாய்ப்புண்டு.

1987ல் வெளிவந்த லயன் காமிக்ஸ் தீபாவளி மலரின் விலை ரூ.10. இன்று அதனுடைய மதிப்பு ஆயிரம் மடங்கு மார்க்கெட்டில் உயர்ந்திருக்கிறது. ஏனெனில் சமீபத்தில் அந்தப் புத்தகத்தை ஒரு நண்பர் ரூ.10,000 கொடுத்து வாங்கியிருக்கிறார்.

நான் கூட சில ஆயிரங்களை கொட்டி, மிஸ்ஸாகிவிட்ட பழைய சில காமிக்ஸ்களை வாங்கி சேகரித்து வைத்திருக்கிறேன். உடனே சேல்ஸுக்கு கிடைக்குமா? படிக்க கிடைக்குமா? என்று பின்னூட்டம் போட்டு டார்ச்சர் செய்து தொலைக்காதீர்கள். காமிக்ஸ் விஷயத்தில் நான் ஒரு தீவிர சைக்கோ.

காமிக்ஸ் என்பது Passion சார்.. Passion.. ஸ்டேம்ப் கலெக்சன், காயின் கலெக்சன் மாதிரி..

70களிலும், 80களிலும் குழந்தைகளாக இருந்து ஒண்ணரை ரூபாய் இல்லாமல் காமிக்ஸ் வாங்க முடியாதவர்கள் இன்று லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறார்கள். தாங்கள் இழந்துவிட்ட பால்யகால ஒண்ணரை ரூபாய் பரவசத்தை இன்று ஆயிரங்களில், லட்சங்களில் வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நேற்றைய குழந்தைகள்.

கஷ்டப்பட்டு ஏதோ ஸ்டேட்டிஸ்டிக்ஸ் எல்லாம் அள்ளிவிட்டிருக்கோம். இப்போதாவது இது சீரியஸ் மேட்டர் என்று நம்புங்க ப்ளீஸ். ஏதோ பார்த்து போட்டு கொடுங்க சாமி.

ஓக்கே, கமிங் டூ த பாயிண்ட்..

மேலே நாம் குறிப்பிட்ட காமிக்ஸ் வெறியர்கள் சாதாரணமாகவே இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர் என்று வெறியாட்டம் ஆடக்கூடியவர்கள். நான்கைந்து தீபாவளிகளாக பெரியதாக 'ஸ்பெஷல்' எதுவும் இல்லாமல் முடங்கிக் கிடந்தவர்கள். இந்த தீபாவளிக்கு 854 பக்கங்களில், 200 ரூபாய் விலையில் இந்திய காமிக்ஸ் வரலாற்றிலேயே முதன் முறையாக 'லயன் ஜம்போ ஸ்பெஷல்' வெளிவருகிறது. கிட்டத்தட்ட 'எந்திரன்' ரிலீஸுக்கு இருந்த எதிர்ப்பார்ப்பு இந்த புக்குக்கும் இருக்கிறது என்றால் நம்புங்கள். 'தலைவா வா. தலைமையேற்க வா'வென்று காமிக்ஸ் ரசிகர்கள், லயன் காமிக்ஸ் ஆசிரியர் விஜயனுக்கு போஸ்டர் ஒட்டாததும், ஜம்போ ஸ்பெஷலுக்கு கட்டவுட் வைக்காததும்தான் பாக்கி.

854 பக்கமும் ஒரே கதைதான் என்பது இந்த ஸ்பெஷலின் ஸ்பெஷல். விஷ்ணுபுரத்தை மிஞ்சும் இந்த ஸ்பெஷலை கண்டால் ஜெயமோகன் நொந்துப் போவார். தீவிர காமிக்ஸ் ரசிகரான எஸ்.ராமகிருஷ்ணன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார். எஸ்.ரா மட்டுமல்ல.. இயக்குனர் மிஸ்கின், நடிகர் பொன்வண்ணன் மாதிரி நிறைய வி.ஐ.பி. காமிக்ஸ் ரசிகர்கள் உண்டு.

ஆங்கிலத்தில் 'எக்ஸ்19' சீரியஸ் காமிக்ஸ் மிகப்பிரபலம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக தனித்தனி புத்தகங்களாக வந்து பெரும் வரவேற்பை பெற்றது. இந்த கதையிலிருந்துதான் 'வெற்றி விழா' திரைப்படத்தை பிரதாப் போத்தன் சுட்டார் என்று கூட கிசுகிசு உண்டு. கதையைப் படித்துப் பார்த்தால் அந்த கிசுகிசு உண்மைதான் என்றுகூட தோன்றும்.

கடற்கரையில் மயங்கிய நிலையில் விழுந்து கிடக்கிறான் ஹீரோ. முழித்ததும் தன் பெயர்கூட அவனுக்கு நினைவில்லை. தன் அடையாளத்தை தேடிப் புறப்பட்டவனுக்கு அடுத்தடுத்து பல அதிர்ச்சிகள். அவன் நல்லவனா கெட்டவனா கொலைகாரனா தேசத்துரோகியா கல்யாணமானவனா பொண்டாட்டி இருக்கிறாளா என்று குழம்பித் திரிய வேண்டிய சூழல். சில பேர் அவனை வரவேற்கிறார்கள். பலர் அவனை கொல்லத் துடிக்கிறார்கள். நினைவிழப்பதற்கு முன்பான வாழ்க்கையை தேடிச் செல்லும் நாயகனின் கதையில் சோகம், மகிழ்ச்சி, ஆக்‌ஷன் என்று எல்லா மசாலா செண்டிமெண்டுகளும் உண்டு. கட்டத்துக்கு கட்டம் ஒருவகையான இலக்கிய சோகம் இந்த கதை முழுக்க ஊடே வந்துகொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் 'சேது' படம் பார்க்கும் மனநிலை கூட தோன்றக்கூடும்.

ஓவியங்கள் ஒவ்வொன்றும் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய முத்துகள். இவ்வளவு சிறப்பான ஓவியங்களோடு உலகளவில் எந்த காமிக்ஸும் வந்ததில்லை என்று தாராளமாக பெட் கட்ட முடியும். ஒவ்வொரு கட்டத்திலும் ஓவியரின் துல்லியம், டீடெய்லிங் அபாரமாக அமைந்திருக்கும்.

ஆங்கிலத்தில் மொத்தம் 19 புத்தகங்களாக வெளிவந்தது.

தமிழில் 'இரத்தப் படலம்' என்று பெயரிட்டு மொழிமாற்றி லயன் காமிக்ஸ் வெளியிட்டு வந்தது. இப்போது ஒட்டுமொத்த 19 புத்தகங்களையும் ஒரே புத்தகமாக லயன் கொண்டு வருகிறது. இதுதான் லயன் ஜம்போ ஸ்பெஷல். 854 பக்கங்களில் காமிக்ஸ் என்று உலகளவில் இப்படியான ஒரு முயற்சி அனேகமாக இதுதான் முதல் தடவையாக இருக்கக்கூடும். ஆங்கிலத்திலேயே கூட ஒரே புத்தகமாக வந்ததில்லை. 19 புத்தகங்களையும் வாங்க ரூ.4000 வரை செலவு செய்ய வேண்டியிருக்கும்.

ஒரு சேல்ஸ்மேனின் லாவகத்தோடு இந்தப் பதிவினை எழுதி வருகிறேன். அனேகமாக இன்னேரம் இப்புத்தகத்தை வாங்கும் எண்ணம் உங்களுக்கு தோன்றியிருக்கலாம். சாரி ஜெண்டில்மேன். காமிக்ஸ் கலெக்டர்ஸ் ஸ்பெஷலான இந்தப் புத்தகம் கடைகளில் கிடைக்கவே கிடைக்காது.

வேறெப்படி வாங்குவது?

உடனடியாக ரூபாய் 230க்கு (புத்தகத்தின் விலை ரூ.200 + கூரியர் செலவு ரூ.30) மணி ஆர்டர் அல்லது "Prakash Publishers" என்ற பெயரில் காசோலை எடுத்து, Prakash Publishers, No 8/D-5, Chairman P.K.S.S.A Road, Amman Kovil Patti, Sivakasi, 626189 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.  04562 272649, 04562 320993 ஆகிய எண்களுக்கு (காலை 10.30 டூ மாலை 5.30) தொலைபேசியும் மேலதிக விவரங்களைப் பெறலாம்.

ஏற்கனவே 800 பிரதிகள் அட்வான்ஸ் புக்கிங் ஆகிவிட்டது. நிறைய பக்கங்கள் என்பதால் 'பைண்டிங்' செய்வது கொஞ்சம் சிரமம். எனவே 50, 50 புத்தகங்களாக தயார் செய்து முன்பதிவு செய்தவர்களுக்கு அனுப்பி வருகிறார்கள். முந்துவோருக்கு பிரதிகள் நிச்சயம் கிடைக்கும்.

ஜம்போ ஸ்பெஷலோடு லயன் காமிக்ஸாரின் தீபாவளி கொண்டாட்டம் முடிந்துவிடவில்லை. அடுத்தடுத்து அதிரடியாக சரக்குகளை இறக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அடுத்த மூன்று மாதங்களில் வெளிவர இருக்கும் புத்தகங்கள் : வெள்ளையாய் ஒரு வேதாளம் (சிக் பில்), சாத்தானின் தூதன் டாக்டர் செவன் (காரிகன்), காவல் கழுகு (டெக்ஸ் வில்லர்) ஆகியவை லயன் காமிக்ஸிலும், களிமண் மனிதர்கள் (இரும்புக் கை மாயாவி), கொலைகார கோமாளி (ஜானி நீரோ) ஆகியவை காமிக்ஸ் கிளாசிக்ஸ் பிராண்டிலும், விண்ணில் ஒரு குள்ளநரி (விங் கமாண்டர் ஜார்ஜ்), மரணத்தின் நிசப்தம் (ரிபோர்டர் ஜானி)  ஆகியவை முத்து காமிக்ஸ் பிராண்டிலும் வெளிவர இருக்கிறது. 75 ரூபாய் செலுத்தி மொத்தமாக இந்த 7 புத்தகங்களையும் கூட வாங்கிக் கொள்ளலாம்.

இந்த ஏழு புத்தகங்களுக்கு பிறகு தமிழ் காமிக்ஸுக்கு புத்துயிர் பாய்ச்சும் மிகப்பெரிய முயற்சி ஒன்று நடைபெறவிருக்கிறது. அது என்னவென்று ஜம்போ ஸ்பெஷலின் ஹாட்லைனில் ஆசிரியர் எஸ்.விஜயன் சொல்லியிருக்கிறார்.

ஹேப்பி தீபாவளி ஃபோக்ஸ்!

 காமிக்ஸ் குறித்த விரிவான, தொடர்ச்சியான தகவல்களுக்கு நண்பர் கிங்விஸ்வாவின் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பூவை வாசிக்கலாம்!