இன்றையச் சூழலில் ஒரு குழந்தையை வளர்க்க உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வேண்டியிருக்கலாம்
ஒரு முழுமையான மனிதனை சமூகத்துக்கு உருவாக்கிக் கொடுக்க இன்றைய சூழ்நிலையில் எவ்வளவு செலவு ஆகிறது?”
அதாவது பிறந்தது முதல் 21 வயதுவரை இன்றைய விலைவாசியில் பெற்றோருக்கு என்ன செல்வாகும்? இந்தக் கேள்விக்கு விடை காண முயன்ற போது எங்களுக்கு அதிர்ச்சிகளும் ஆறுதல்களும் காத்திருந்தன. அதிர்ச்சி: அதற்கான தொகையைப் பார்த்தபோது . ஆறுதல் இன்றைய நவீன பெற்றோர்கள் மனநிலையில் ஏற்பட்டிருக்கிற மாற்றம்.
குழந்தைப் பருவம் தொடங்கி குமரப் பருவம் வரை, ஆணோ, பெண்ணோ ஒருவருக்கு அவசியம் செலவிடப்பட வேண்டிய விஷயங்கள் குறைந்தபட்சம் ஐந்து.
1) உடல்நலம்
2) கல்வி
3) உணவு
4) உடை , வாகனங்கள் முதலியன
5) பொழுதுபோக்கு
குழந்தை பிறந்த நொடியில் இருந்து நம் செலவுக்கணக்கை எடுத்துக் கொள்வோமா? அதற்கு முந்தைய பத்துமாத மருத்துவ சோதனைச் செலவுகளை விட்டுவிடலாம்.
பிரசவத்தின் போது சுகப்பிரசவம் என்றால் சராசரியாக 20,000 ரூபாய்வரை செலவாகிறது. சிசேரியன் அறுவை சிகிச்சை என்றால் 30,000 ஆகும்.
அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் அந்தக் குழந்தைக்குப் போடப்பட வேண்டிய தடுப்பூசிகளின் மதிப்பு மட்டுமே 20,000 ரூபாய்.
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை குழந்தைகளின் முதல் ஐந்தாண்டுகள் மிக முக்கியமானவை. சாதாரணமாகத் தோன்றும் காய்ச்சலைக் கூட அலட்சியப்படுத்தக் கூடாது. அலட்சியப்படுத்த முடியாது. குழந்தை சரியாக விளையாடாமல் முடங்கிக் கிடப்பதை காண எந்தத் தாய்க்கும், தகப்பனுக்கும் மனம் வருவதில்லை. எதிர்பாராத மருத்துவச் செலவுகளுக்கு ஒரு முறைக்கு குறைந்தது (டாக்டர் ஃபீஸ், மருந்துச்செலவு) இவற்றுக்கு ரூ.300/-ஆவது செலவழித்தாக வேண்டும். பெரிய நோய்கள் ஏதுமில்லாமல் வளரும் ஒரு குழந்தைக்கு வருடத்துக்கு சராசரியாக ரூபாய் 5,000/- மருத்துவத்துக்கு மட்டுமே செலவாகிறது.
உடல்நலத்தை விட கல்வி முக்கியம் என்று இன்றைய பெரும்பாலான பெற்றோர் கருதி வருகிறார்கள். இது சரியா தவறா என்பது தனி வாதம். ஆனால் குழந்தைகளின் கல்விக்கே பெற்றோர் முதன்மை முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதுதான் யதார்த்தம். தங்களது குழந்தைக்கு கல்வியை கொடுத்துவிட்டால், அவர்கள் எதை வேண்டுமானாலும் பெற்று விடுவார்கள் என்கிற நம்பிக்கை அதிகரித்து வருகிறது.
“எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. எம்புள்ளை உயிரைக் காப்பாத்திடுங்க டாக்டர்” என்று இனிமேல் சினிமாவில் வசனம் வைத்தால், அது பொருந்தாது. “எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை. எம்புள்ளையை இன்ஜினியர் ஆக்கிப்புடணும். இல்லேன்னா டாக்டரு ஆக்கிப்புடணும்” என்கிற டயலாக்தான் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தும்
கல்விக்கு எவ்வளவு செலவு ஆகும்?
வெவ்வேறு கல்வி நிறுவனங்கள், வெவ்வேறு இடங்களில் பெற்ற தகவல்களின் அடிப்படையில் சராசரியான ஒரு தொகையை தருகிறோம். இது இடத்துக்கு இடம், நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடலாம். ஆனால் இது ஒரு சராசரித் தொகை. இந்தத் தொகை உங்கள் குழந்தையின் எதிர்கால கல்விச்செலவுக்கு செய்யப்பட வேண்டிய செலவு குறித்த ஒரு ‘ஐடியா’வினை உங்களுக்கு தரும்.
வகுப்பு | செலவு ரூ. (வருடத்துக்கு) |
பள்ளிக்கு முந்தைய வகுப்பு (Pre KG) | 5 ஆயிரம் முதல் 30ஆயிரம் |
மழலையர் வகுப்பு | 10 ஆயிரம் முதல் 40ஆயிரம் |
ஆரம்ப/ உயர்/மேல்நிலைப் பள்ளி (1 முதல் 12 வகுப்புகளுக்கு) | 15 ஆயிரம் முதல் 50 ஆயிரம் |
கல்லூரி (கலை அறிவியல் கல்லூரிகள்) கல்லூரி (பொறியியல், மருத்துவக் கல்லூரிகள்) | 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் 50ஆயிரம் முதல் 1 லட்சம் |
மேற்படிப்பு | ஒரு லட்சம் முதல் 5 லட்சம் |
கல்விக் கட்டணம், தங்குமிடம், சீருடை, பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், வாகனச்செலவு மற்றும் பாடம் பயில தேவையான இதர உபகரணங்கள் வாங்கும் செலவு என்று பல செலவுகளையும் இச்செலவுக் கணக்குக்குள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ட்யூஷன் போன்ற நம்முடைய தனி விருப்பத் தெரிவுகளுக்கு தனிச்செலவு.
இன்று நகர்ப்புறத்தில் வளரும் நடுத்தர வர்க்கக் குழந்தைகளுக்குப் பெற்றோர் பள்ளிக் கல்வியோடு வேறு ஏதேனும் ஒரு துறையில் பயிற்சி அளிக்கவும் விரும்புகிறார்கள். அது இசை, நடனம், ஓவியம் போன்ற நுண்கலைகளாக இருக்கலாம். அல்லது கிரிக்கெட், டென்னிஸ், செஸ் போன்ற விளையாட்டு சார்ந்தவையாக இருக்கலாம். அல்லது கணினி, நீச்சல், குறும்படம் போன்ற திறன் சார்ந்தவையாக இருக்கலாம். அல்லது மேற்படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளவோ, வேலைகளுக்கான போட்டித் தேர்வை எதிர்கொள்ளவோ, அல்லது அயல்நாடுகளில் சென்று படிக்க டோஃபல், ஜிஆர்இ போன்ற பயிற்சிக்களுக்காகவோ நடக்கும் சிறப்பு வகுப்புகளாக இருக்கலாம். இவை முழுக்க முழுக்கத் தனி விருப்பத்தின் பேரில் செய்யப்படும் செலவு என்றாலும் அவையும் தவிர்க்க முடியாத செலவாகி விட்டது.
இவை தவிர பல நகர்ப்புற வீடுகளில் மேஜை, நாற்காலி, டிவியைப் போல கணினி தவிர்க்கமுடியாத அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 40 ஆயிரம் வரை கணினிகள் கிடைக்கின்றன. இது ஒரே ஒரு தரம் செய்யும் செலவு. இதைப் போல, ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ, பள்ளி நாட்களில் சைகிளும் பள்ளி இறுதி ஆண்டு அல்லது கல்லூரிப் பருவத்தில் பெட்ரோலால் இயங்கும் இரண்டு சக்கர வாகனமும் வாங்க வேண்டியதாகிறது. சைக்கிளுக்கு 3000 ரூபாயும், இரு சக்கர வாகனத்திற்கு 40 ஆயிரம் ரூபாயும் செலவிட வேண்டியிருக்கும். வாகனத்திற்கான பெட்ரோல் (ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் என்ற அடிப்படையில் ) வாகனப் பராமரிப்பு இவற்றுக்கு மாதம் 5000 ரூபாய் செலவிட வேண்டியிருக்கும்.
இன்று செல்போன் இல்லாத குழந்தை ஏது? அதற்கு ஒரு நேரச் செல்வாக ஒரு 2000 ரூபாயும், மாதச் செலவாக 500 ரூபாயும் எடுத்து வைத்து விடுங்கள்.
சாப்பாடு விஷயத்தில் கணக்கு வழக்கு பார்க்கக்கூடாது என்று சொல்வார்கள். செண்டிமெண்ட்படி பார்த்தால் அது சரிதான். ஆனால் பட்ஜெட் போடுவதற்கு ஏதாவது ஒரு கணக்குப் பார்த்துதானே ஆக வேண்டும்?. ஏனெனில் இதற்கும் பணம் செலவழிக்கத்தானே வேண்டியிருக்கிறது?
இன்றைய விலைவாசி நிலவரத்தில் மூன்றுவேளை உணவுக்கு ஒரு நாளைக்கு ஒருவருக்கு குறைந்தது ரூ. 25/- செலவாகிறது. அதிகபட்சத்துக்கு கணக்கே இல்லை. சத்தான உணவுகள், பழவகைகள், மாமிசம் என்று வெட்டு வெட்டென வெட்டும் குடும்பங்களில் நபருக்கு/நாளைக்கு ரூ.100/- கூட செலவு ஆவதுண்டு.
சராசரியாக வருடத்துக்கு பத்தாயிரம் முதல் நாற்பதாயிரம் வரை, ஒரு நபரின் உணவுக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும்.
உடைக்கான செலவை கணக்கிடுவது மிகச் சிரமம். ஐம்பது ரூபாய்க்கும் உடை கிடைக்கிறது, ஐயாயிரம் ரூபாய்க்கும் கிடைக்கிறது. இடைபட்ட நமக்கு சராசரியாக ஒரு தொகையைக் கணக்குக்கு எடுத்துக் கொள்வோம்.
பெரியவர்கள் ஆனாலும் சரி, குழந்தைகள் ஆனாலும் சரி ஆண்களுக்கு எப்போதுமே உடை விஷயத்தில் அதிக சாய்ஸ் இல்லை. ஆனால் பெண் குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள். வண்ணமயமாகப் பல ஆடைகள் பலதரப்பட்ட வகைகளில் கிடைக்கின்றன. சுடிதார், கவுன், மிடி, குர்தா, ஸ்கர்ட் என்று ஏகப்பட்ட வகையறாக்கள். விலையும் கொஞ்சம் கூடுதல். எனவே பெண்ணைப் பெற்றவர்கள் உடைக்காக கொஞ்சம் கூடுதல் தொகையை தங்களது பட்ஜெட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் .
தீபாவளி, பொங்கல், பிறந்தநாள், இன்னும் ஏதோ ஒரு நாள் என்று வருடத்துக்கு குறைந்தபட்சம் நான்கு முறையாவது உடை எடுக்க வேண்டி வருகிறது (சீருடையை கல்விச் செலவில் சேர்த்து விட்டோம்). ஒரு செட் உடை தோராயமாக 500 ரூபாய் என்று எடுத்துக் கொண்டால், வருடத்துக்கு ரூ.2000/-மாவது ஒரு குழந்தைக்கு செலவழிக்கப்பட வேண்டும். எனவே இருபது ஆண்டுகளில் நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் ரூபாய் உடைகளுக்கு மட்டுமே குறைந்தபட்சம் செலவழியும்.
பொழுதுபோக்கு விஷயத்தில் முந்தைய தலைமுறை குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள். விளையாடுவதற்கு மைதானம் இருந்தது. விளையாடத் தோழர்கள் நிறைய பேர் கிடைத்தார்கள்.
இந்தக்கால குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் பொழுதுபோக்குக்கு (அதுவும் பெற்றோர் அனுமதித்தால்) பெரும்பாலும் தொலைக்காட்சியையும், கணினியையும் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது.
பரந்த மைதானத்தில் விளையாட வேண்டிய கிரிக்கெட்டையும், ஃபுட்பாலையும் பேட், பால் இன்றி கணினியில் மவுசையும், கீபோர்டையும் வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிப்பாடம் தவிர்த்த குழந்தை இலக்கியப் புத்தகங்கள், காமிக்ஸ் வாசிக்கும் பழக்கமும் குறைந்துக் கொண்டே போகிறது. வீடியோ கேம்ஸ், புத்தகங்களின் இடத்தை வேகமாக பிடித்து வருகிறது.
‘இந்த விஷயத்தில் பெருசா செலவே இருக்காது போலிருக்கே’ என்று அவசரப்பட்டு மகிழ்ச்சியடைந்து விடாதீர்கள். உங்கள் பர்ஸின் கனத்தை குறைக்க இருக்கவே இருக்கிறது மெகா மால்களும், தீம் பார்க்குகளும். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் மெகாமாலுக்கு சென்று ஒரு சினிமா பார்த்துவிட்டு வர, சினிமா, நொறுக்குத் தீனி, போக்குவரத்து என்று குறைந்தபட்சம் ஒரு ஆயிரம் ரூபாய் வேண்டியிருக்கிறது. (இது சென்னை நிலவரம். மற்ற ஊர்களில் ஒரு இருநூறு முன்னூறு வித்தியாசம் இருக்கலாம்) தீம் பார்க்குகள் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு குழந்தை பிறந்தது முதல் 21 வயதை எட்டிப் பிடிக்கிற வரைக்கும் பெற்றோர் அவர்களுக்குச் செலவிட நேரும் தொகை சுமார் 40 லட்சம். இது இன்றைய விலைவாசியில். ஆனால் விலைவாசி அதிகரிக்கும் வேகத்தைப் பார்த்தால் இருபது வருடங்களில் இது இரண்டரை முதல் மூன்று மடங்காக அதிகரிக்கும். அதாவது ஒரு குழந்தைக்கு ஒரு பெற்றோர் செலவிடும் தொகை சுமார் ஒரு கோடியைத் தாண்டும்!
அம்மாடி என மிரண்டு விட வேண்டாம். இதை சமாளிக்க சில டிப்ஸ்:
- குடும்பம் மொத்தத்திற்கும் மருத்துவக் காப்பீடு எடுத்து வைத்துக் கொண்டால் பெரிய மருத்துவச் செலவுகளை சமாளிக்கலாம்.சின்னச் சின்ன மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க ஆரோக்கியமான பழக்க வழக்கங்களைச் சிறிய வயதிலேயே ஆரம்பித்து விடுவது நல்லது. உதாரணம்: யோகா.
- அதே போல உணவு விஷயங்களில் கவனம் செலுத்துவது.ஃபாஸ்ட் புட் எனச் சொல்லப்படும் ஜங்க் ஃபுட் பெரும்பாலும் கொழுப்புச் சத்துக் கொண்டவை. அவற்றைத் தவிர்த்து ஆண்டி ஆக்சிடெண்ட் கொண்ட பழங்கள், நார்ச் சத்து கொண்ட பச்சைக் காய்கறிகள் இவற்றைக் கொடுத்துப் பழக்குங்கள். மலிவான கீரையிலும் முட்டையிலும் உள்ள சத்துக்கள் விலை உயர்ந்த சாக்லேட்களிலும் ஐஸ்கீரீம்களிலும் கிடையாது.
- உடையைப் பொறுத்தவரை ஆடித் தள்ளுபடி, தீபாவளி போன்ற டிஸ்கவுண்ட் கிடைக்கும் நேரத்தில் ஆண்டுக்கான தேவைகளை வாங்கிவிடுங்கள். பிராண்டட் துணிகள் வாங்குகிறவர் என்றால் பாக்டரி அவுட்லெட்களில் வாங்குங்கள் அங்கே கொஞ்சம் விலை குறைவாக இருக்கும். சாலையோர நடைபாதைக் கடைகளில் விலை குறைவு. ஆனால் நீடித்து உழைக்குமா என்பது சந்தேகம்தான்.
- கல்வியைப் பொறுத்தவரை தரம்தான் முக்கியம். தரத்திற்கும் பணத்திற்கும் சம்பந்தம் கிடையாது. கற்பித்தலில் தரம் என்பது ஆசிரியர்களைப் பொறுத்தது. நல்ல ஆசிரியர்கள் அமைந்தால் அது உங்கள் குழந்தையின் அதிர்ஷ்டம்.
- மனித மனத்திற்கு, குறிப்பாக இளம் பருவத்தில், தானாகக் கற்றுக் கொள்கிற ஆற்றல் அதிகம். அந்தக் காலகட்டத்தில் அடிப்படையான அறிவைப் புகட்டுங்கள். பின்னர் அதன் மீது அவர்களே மாளிகை கட்டிக் கொள்வார்கள். அதற்கு ஆரம்ப நாள்களில் நீங்கள்தான் அவர்களோடு கொஞ்சம் நேரம் செலவழிக்க வேண்டும். ஏனெனில் உங்கள் குழந்தைகளைப் பற்றி மூன்றாவது மனிதரான ஆசிரியரைவிட உங்களுக்குத்தான் அதிகம் தெரியும். பல நேரங்களில் உங்கள் குழந்தை உங்களைப் போலவே (பல நேரங்களில் உங்களை விடவும் கெட்டிக்காரராக) இருக்க மரபணு ரீதியாக வாய்ப்புண்டு. அதனாலும், வீட்டுச் சூழல், கலாசாரம், உறவு ரீதியான நெருக்கம் ஆகியவற்றாலும் நீங்கள் அவருக்கு ஒன்றைப் புரிய வைப்பது எளிது.
- குழந்தைகளை ‘இம்ப்ரெஸ்’ செய்வதற்காக, அல்லது உங்களது ’பிரஸ்டீஜ்’க்காக ஆடம்பாத்தை ஊக்குவிக்காதீர்கள் . குடும்பத்தின் யதார்த்த சூழலை அவர்கள் புரிந்து கொள்ளும்படி சொல்லி வளர்த்தால் பின்னால் அவர்கள் பொதுவாக பதின்ம வயதில் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.
- அரசுப் பள்ளிகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் பொதுவாக செலவு குறைவு. அங்கு பல விஷயங்கள் இலவசம். ஆனால் அங்கு தரம் பேணப்படுவதில்லை. குடிமக்களாகிய நாம்தான் அங்கு தரத்தை மேம்படுத்தவும் அதைப் பேணவுமான நடவடிக்கைகளை எடுக்க அரசையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும் நிர்பந்திக்க வேண்டும். அது என் வேலையல்ல எனச் சமூகப் பொறுபின்றி ஒதுங்கிப் போனால் நீங்கள்தான் அதற்குரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்
செலவுகள் எவ்வளவு என்பது ஒருபுறம் இருக்கட்டும். . தான் வளர்த்த குழந்தையை சான்றோன் என கேட்கும் நொடி, ஒவ்வொரு தாய்க்கு மட்டுமல்ல, தந்தைக்கும் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் நொடிதான். எதிர்காலச் செலவுகளை முன்னமே திட்டமிட்டு, அதற்கேற்ப தங்கள் வாழ்க்கை முறையை சுருக்கி வாழ ஆரம்பித்துவிட்டால் ஒவ்வொரு பெற்றோருக்கும் அது ஆனந்த அனுபவம்தான்.
1 முதல் 21 வயது வரை
ஒரு குழந்தைக்கு உத்தேசமாக என்ன செலவு ஆகலாம்?
சராசரியாக (ரூபாயில்) | |
உடல்நலம் | 5,00,000 |
கல்வி | 20 00,000 |
உணவு | 700 000 |
உடை, வாகனம் | 6,00,000 |
பொழுதுபோக்கு | 2,00,000 |
மொத்தம் | 40,00,000 |
இன்றைய விலைவாசி அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது.
அடுத்த 21 வருடங்களில் செலவிடப்படும் தொகை, வருடாவருடம் உயரும் விலைவாசியேற்றத்தின் அடிப்படையில் குறைந்தபட்சம் மூன்று மடங்காவது அதிகமாகும்.
அடுத்த 21 வருடங்களில் செலவிடப்படும் தொகை, வருடாவருடம் உயரும் விலைவாசியேற்றத்தின் அடிப்படையில் குறைந்தபட்சம் மூன்று மடங்காவது அதிகமாகும்.
அதாவது இன்று பிறந்த உங்கள் குழந்தைக்கு 2032ஆம் ஆண்டில் நீங்கள் சுமார் ஒரு கோடிக்கு மேல் செலவழித்திருப்பீர்கள் .
(நன்றி : புதிய தலைமுறை)
(நன்றி : புதிய தலைமுறை)