16 டிசம்பர், 2011

அழிக்கப் பிறந்தவன் - 2

அழிக்கப் பிறந்தவன் - 1


ருப்புச் சந்தைக்கு தூக்கம் கண்ணை சுழற்றத் தொடங்கியது. மாலையில் ஆறு, ஏழு மணிக்கெல்லாம் இந்த இடத்தை பார்க்க வேண்டுமே? ஜெகஜ்ஜோதியாக ஒளி வெள்ளத்தில் களைகட்டியிருக்கும். ஒன்பது, ஒன்பதரை வரைக்கும் ஒளி திருவிழாதான். பத்து மணிக்கு சடாரென்று கலையத் தொடங்கும் கூட்டம். ஆச்சரியமாய் அரை மணி நேரத்திலேயே வெறிச்சோடிப் போய்விடுகிறது இந்த பர்மா பஜார். பிளாக் மார்க்கெட் என்று பரவலாக அறியப்பட்டாலும், டெக்னிக்கலான மொழியில் சொல்ல வேண்டுமானால், சென்னையின் க்ரே மார்க்கெட். அம்மாவைத் தவிர இங்கு எல்லாமே வாங்கலாம் என்று பேசிக்கொள்ளுவார்கள் சென்னைவாசிகள்.
வாப்பா குடையை எடுத்துக் கொண்டு கிளம்பினார். மார்கழியிலும் மழை பொழியுமென்று அவருக்கு அப்படியொரு மூடநம்பிக்கை. கொஞ்சம் முன்னெச்செரிக்கையான ஆளும் கூட. மழை பெய்தால் குடையை அப்படியே விரித்துக் கொள்வது, இல்லையேல் மற்ற நேரங்களில் வாக்கிங் ஸ்டிக் மாதிரி பயன்படுத்திக் கொள்வது. ஒரே குடையில் இரண்டு பயன்கள்.
 கவனமாய் இருக்கைக்கு அடியில் இருந்த பென் ட்ரைவை எடுத்து ஜிப்பா பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். நெடு நெடுவென உயரம். வெடவெடவென ஒல்லியான தோற்றம். என்றாலும் கம்பீரமான தோள்கள். நீலக்கலரில் கட்டம் போட்ட கைலி கட்டியிருந்தார். முழுக்கவும் நரைக்காத தாடி. கருப்பும், வெளுப்புமாக முடி இருந்ததால் முகமே ஒரு மாதிரி பழுப்புக் கலராக தெரிந்தது. தலையில் வெள்ளைநிற குல்லா அணிந்திருந்தார்.
கடையை பூட்டிட்டு, சாவியை வூட்லே கொடுத்துடு. மவுண்ட் ரோட்டுலே வேலை கிடக்குது. போயாறேன்
அந்த காலத்து வடிவேலு மாதிரி, தட்டினால் விழுந்துவிடும் பாடி கண்டிஷனில் இருந்த கடைப்பையன் நமட்டுச் சிரிப்பு சிரித்தான். வெள்ளிக்கிழமை ஆனாலே வாப்பாவுக்குமவுண்ட்ரோடு வேலைவந்துவிடும். அந்த வேலை என்னவென்று பையனுக்கும் தெரியும் என்பது வாப்பாவுக்கும் தெரியும். அதே பொய்யை எத்தனை வாரமானாலும், தொடர்ந்து இதே பையனிடம் சொல்லிவருகிறார். அவனைப் பார்த்து மனதுக்குள் நினைத்துக் கொண்டார். “இந்தப் பயலும் நல்லா தொழிலு கத்துக்கிட்டான். சீக்கிரமா ஒரு தனி பட்டறையை போட்டு துரத்திடணும்”
உண்மையில் மவுண்ட் ரோடு வேலை அவருக்கு எப்போதாவது வருவதுண்டுதான். ரேடியோ மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் சேட்டுகளால், டெல்லியில் இருந்து வாங்க முடியாத ஏதாவது முக்கியமான சரக்கு கேட்பார்கள். வாப்பா சிங்கப்பூரிலோ, மலேசியாவிலோ இருக்கும் தனது டீலர்களை வைத்து வாங்கி, உள்ளூர் குருவிகள் மூலமாக கொண்டு வந்து கொடுப்பார். இதற்காக அவர் எப்போதுமே மவுண்ட்ரோட்டுக்கு போனதேயில்லை. டீலிங் முழுக்க போனில்தான். சேட்டுகள் பேமண்டில் கன் பார்ட்டிகள். குஷியாகி விட்டால் சில நேரங்களில் கேட்டதுக்கு மேலேயே கூட கொடுப்பார்கள். இந்த பிசினஸுக்கெல்லாம் பில், கில் என்று எந்த கந்தாயமும் கிடையாது. வருமான வரித்துறை, கஸ்டம்ஸ், லொட்டு லொசுக்குவென்று யாருமே இவர்களுக்கு பொருட்டும் கிடையாது. நாமே ராஜா, நாமே மந்திரி.
கடற்கரை ரயில் நிலையத்துக்கு வெகு அருகில் வாப்பா கடை. கடை என்றால் ஆறுக்கு ஆறு சைஸ் பொட்டி. இந்த கடையில் உட்கார்ந்தே மாசம் அறுபது லட்சம் கூட சம்பாதித்திருக்கிறார் வாப்பா. கடையின் சைஸுக்கும், பிசினஸ் வால்யூமுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. கடையின் முதலாளி வெயிட்டென்றால், பிசினஸும் வெயிட்டாக இங்கே நடக்கும்.
நடைபாதையெங்கும் மர அடுக்குகளில் டி.வி.டி.கள் குப்பையாய் குவிக்கப்பட்டிருந்தன. பாஞ்சு_ ரூவா சார், பாஞ்சு ரூவா சார்என்று கடைப்பையன்கள் பார்க்கும் கஸ்டமர்களிடமெல்லாம் கூவிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் தயங்கி, நாணி கோணி நிற்கும் கஸ்டமர்களாக இருந்தால், தைரிய்மாகமேட்டர் சிடியா சார். தமிழா, இங்கிலீஷா, மலையாளமா? ட்வெண்ட்டி ஃபைவ் சார். லேட்டஸ்ட்டு சார். இதுவரைக்கும் நீங்க பார்த்தே இருக்க முடியாதுஎன்று ஏதாவது ஒரு நடிகை பேரைச் சொல்லி, லந்து விட்டுக் கொண்டிருந்தார்கள்கடையையொட்டி, ஸ்டூல் போட்டு முதலாளிகள் ரிலாக்ஸாக உட்கார்ந்திருந்தார்கள். நடைபாதை முழுக்க ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்டிருந்தது. எல்லா கடை முன்பும் ஒரு சீலிங் ஃபேன் நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்தது. நடந்து செல்பவர்கள் யாராவது கையை தூக்கி சோம்பல் முறித்தால்.. கையே இருக்காது. இருபுறமும் கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பில் குறுகிப்போய் இருந்த பாதையில் மெதுவாக, ஆனால் கம்பீரமாக நடக்கத் தொடங்கினார்.
இந்த பஜாரில் கிடைக்காத விஷயம்தான் என்ன?
காய்கறியைத் தவிர மத்த எல்லாமே கிடைக்கும். கண்ணை மூடிக்கொண்டு ஏதாவது ஒரு பொருளை நினைத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாய் பர்மாபஜாரில் கிடைக்கும். ஏனோ இப்போதெல்லாம் பர்மபாஜாரை திருட்டு டிவிடி விற்கும் மார்க்கெட் என்று மட்டுமே மக்கள் நம்பத் தொடங்கிவிட்டார்கள். சோனி லேட்டஸ்ட் டிவியை ஷோரூமில் வாங்கும் காசுக்கு, இங்கே நாலு டிவி வாங்கிவிடலாம். ஷோரூமில் கிடைக்காத லேட்டஸ்ட் மாடலை கூட இங்கே ஸ்பெஷலாக இறக்குமதி செய்து வரவழைத்து கொடுத்துவிட முடியும். ஐபேட் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட அன்றே இங்கே நாற்பது பீஸ் விற்றது. அஃபிஷியலாக ஐபேட் இந்தியாவில் விற்கப்பட அதற்கப்புறம் ஒரு வருஷம் ஆனது என்பது தனிக்கதை. யாருக்கு எது வேண்டுமோ, அது நிச்சயமாக இங்கே கிடைக்கும்.
பில், கேரண்டி, வாரண்டி மாதிரி விஷயங்கள்தான் பிரச்சினை. அதுக்கென்ன? இப்போதெல்லாம் ஒரிஜினலை விட பக்காவானபில்ரெடி பண்ணிக் கொடுக்கக்கூட பர்மாபஜாரில் ஆட்கள் இருக்கிறார்கள். ரேட்டு? அடித்து பேசி வாங்கிக் கொள்வது அவரவர் சாமர்த்தியம். ஒண்ணே முக்கா லட்ச ரூபாய் சரக்கை எழுபத்தைந்தாயிரத்துக்கு கூட வாங்கிவிடக் கூடிய பேரவீரர்கள் சிலர் பர்மாபஜாரின் ரெகுலர் கஸ்டமர்கள். அவசரப்பட்டு கொள்முதல் செய்துவிட்ட சரக்கினை சில வேளை நஷ்டத்துக்காவது தள்ளிவிடத்தான் வேண்டியிருக்கிறது.
இப்படித்தான் ஒருமுறை கொரியன் போன் என்று சொல்லப்படும் சீனத்தயாரிப்பு செல்போன்களை வாங்கி எல்லா கடைகளிலும் நல்ல ஸ்டாக் வைத்திருந்தார்கள். திடீரென்று அரசாங்கம் அந்த போன்களுக்கு ஏதேதோ விதிமுறைகளை விதித்துவிட, விற்பனை மொத்தமாக ஊத்திக் கொண்டது. கிடைத்த ரேட்டுக்கு சரக்குகளை விற்றுத் தொலைக்க வேண்டியது ஆயிற்று.
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
அலைக்கும் சலாம்
வாப்பா அந்தக் காலத்து ஆளு என்கிற மரியாதை எல்லாருக்குமே உண்டு. இவரது உண்மையான பெயர் என்னவென்று பஜாரின் பழைய ஆட்கள் ஒரு சிலருக்குதான் தெரியும். பஜாருக்கே இவர்தான் வாப்பா. என்றாவது ஜாலி மூடில் இருந்தால் அந்தக் காலத்து கதைகளை சொல்ல ஆரம்பிப்பார். ஆரம்பத்திலேயே கடை போட்டு விட்டவர் என்பதால் பஜாரின் உண்மையான, முழுமையான வரலாறை இவரிடம் தெரிந்துகொள்ள முடியும். என்ன, அவ்வப்போது தன்னையே ஹீரோவாக உருவகப்படுத்தி, கொஞ்சம் புனைவு சரக்குகளை உள்ளே மெல்லிசாக நுழைத்து விடுவார்.
அப்போல்லாம் நான் ரொம்ப எளந்தாரி. உங்களை மாதிரியெல்லாம் இல்லே. பத்தொன்பது வயசுலேயே கடை மொதலாளி ஆயிட்டேன். இப்போ மாதிரி மலேசியா, சிங்கப்பூர்லேருந்து சரக்கு வராது. ஹாங்காங்கு, தைவான்லேருந்து கப்பல்லே வரும். பொதுவா எலெக்ட்ரானிசுதான். ரேடியோ, டேப்ரெகார்டர் மாதிரி. சிலநேரம் ஃபாரின் துணில்லாம் கூட வாங்குறதுண்டு. நாங்கள்லாம் காசிமேட்டுலே பேசி, ஒரு பெரிய போட் மொத்தமா வாடகைக்கு எடுத்து வாடகைக்காசை கடை மொதலாளிங்க சேர்ந்து பங்கிட்டுக்குவோம்.
ராவுலே தான் மீன் புடிக்க போறது (மீன் புடிப்பது என்பதை சரக்கு கொள்முதல் செய்வது என்று புரிந்துகொள்ளவும்). துறைமுவத்துக்கு கப்பல் வந்து சேர்றதுக்கு முன்னாடி வெளீல சிக்னலுக்கு நிக்கும். அது சில நேரம் ஒரு மணி நேரம், ரெண்டு மணி நேரம். சில நேரம் ஒரு நா, ரெண்டு நா கூட ஆவும். இந்த டைமுலே மீன் புடிச்சாதான் உண்டு. கப்பல் கேப்டனை கரெக்ட் பண்ணி வெச்சிருப்போம். கப்பலுக்கு உள்ளாற வேலை பார்க்குற ஆட்கள்லே நம்மாளு ஒருத்தன் நிச்சியிமா இருப்பான். அங்கேயே நாம மீனைப் புடிக்காம உட்டுட்டோமுன்னு வெச்சிக்கோ. துறைமுவ எல்லைக்குள்ளே கப்பல் வந்துரும். செலவு டபுள் ஆயிடும். கஸ்டம்ஸ்லே தொடங்கி, கேட்டு செக்யூரிட்டி வரைக்கும் மாலு வெட்டிக்கினே இருக்கோணும். சரக்கு கைக்கு கிடைக்க நாளும் அதிகமாயிடும்.
கடலுக்குள்ளாற இருந்து சரக்கை டைரக்டா படவுலே ஏத்த முடியாது. நேவிகாரன் கண்ணுலே வெளக்கெண்ணை உட்டுட்டு ரவுண்ட்ஸ்லேயே இருப்பான். டிவி, ரேடியோ, டூ இன் ஒண்ணு, மியூசிக் கீபோர்டு, ஃபெர்ப்யூமுன்னு சரக்கு எதுவா இருந்தாலும் அதை மொத்தமா பாலித்தீன் பையிலே பேக் பண்ணி ஒரு கயிறு கட்டி கடலுக்குள்ளாற போட்டுருவோம். கயிறு முனையை மட்டும் போட்டுலே கட்டிட்டு அப்படியே கரைக்கு இழுத்தாறுவோம். சில நேரத்துலே எலெக்ட்ரானிக்ஸ்சரக்குடேமேஜும் ஆறதுண்டு. நஷ்டம் நமக்குதான். இந்த தொழிலுக்கு ஏது இன்சூரன்ஸூ கின்சூரன்ஸூ எல்லாம். லாவம் வர்றப்போ எப்படி ஏத்துக்கறமோ, அதே மாதிரி நஷ்டத்தையும் ஏத்துக்க நம்ம மனசு பழகணும்.
உள்ளே என்ன சரக்கு இருக்குன்னு தெரியாமலேயே முதலீடு பண்ணுற ஆளுங்களும் அப்போ இருந்தாங்க. எதை வித்தாலும் காசுங்கிறப்ப, இதை இதைதான் விக்கணும்னு யாரும் கட்டுப்பாடு எதுவும் வெச்சுக்கறதில்லே. ஒருமுறை பார்த்தா எலெக்ட்ரானிக்சு விக்குற கடையிலே, அடுத்த முறை கொழந்தைங்க பொம்மை விக்கும். அதுக்கும் அடுத்தமுறை சாக்லேட் விக்கும். பனியன் விக்கும். டெக்ஸ்டைல்சு, எலெக்ட்ரானிக்சு, டாய்சு-ன்னு எந்த கடைக்கும் தனித்தனியா இதுதான் அடையாளம்னு எதுவும் கிடையாது. யார் வேணும்னாலும் எதை வேணும்னாலும் விக்கலாங்கிறதுதான் பர்மா பசாரோட ஸ்பெசலான விசயம்
இவ்வாறாக வாப்பா பேசிக்கொண்டிருக்கும்போது கடைக்காரர்கள் பலரும்வென்று வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள். கீழக்கரையிலிருந்து துபாய்க்கு போக சென்னைக்கு சிறுவயதில் வந்தாராம் வாப்பா. யாரோ ஒரு வெளிநாட்டு ஏஜெண்டு இவரை ஏமாற்றிவிட சென்னையில் நட்ட நடுத்தெருவில் நின்றிருக்கிறார். இந்த பஜார்தான் அவரை அரவணைத்துக் கொண்டது. ஏதேதோ வேலைகள் செய்து, எப்படி எப்படியோ சம்பாதித்து இங்கே ஒரு கடை போட்டுவிட்டார். முதலாளி என்றாலும் நாற்பது வருடத்துக்கும் மேலாக தொழிலாளியைப் போல உழைத்துதான் சாப்பிடுகிறார்.
இப்போதெல்லாம் வாப்பா மாதிரி யாரும் அவ்வளவு கஷ்டப்படுவதில்லை. பிளைட் பிடித்தால் ரெண்டு மணி நேரத்தில் சிங்கப்பூர், மலேசியா. வேண்டியவர்களுக்கு வேண்டியதை வெட்டிவிட்டால் போதும். ஈஸியாக சரக்கு சேரவேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துவிடுகிறது. முன்பைப்போல உடலுழைப்பெல்லாம் பெரியதாக இப்போது தேவைப்படுவதில்லை. ஆனால் மூளையை கசக்கிப் பிழிந்து சிந்திக்க வேண்டியதாகிறது. உலகம் நவீனமாகிக் கொண்டு வருகிறது இல்லையா, அதோடு சேர்ந்து பர்மா பஜாரும்.
பர்மாவிலிருந்து இங்கே வந்து குடியேறியவர்களுக்காக 1960களில் இப்பகுதி ஒதுக்கப்பட்டது. பர்மா தமிழர் மறுமலர்ச்சி சங்கம் இந்த பஜாரை அவர்களுக்காக உருவாக்கியது. அதற்கும் முன்பாகவே இங்கே கடைகள் இருந்திருக்கிறது. குஜிலி_ பஜார்என்று அப்போது இந்தக் கடைகளை சொல்வார்களாம். வெள்ளைக்காரர்கள் காலத்தில் பர்மா பஜாருக்கு தீவ்ஸ் பஜார்என்று பெயராம். திருட்டுப் பொருட்கள் விற்கும் கடைகள் என்கிற பெயர் தங்களை அவமானப்படுத்துகிறது என்று அந்தகாலத்து கடை முதலாளிகள் ஒன்று சேர்ந்துகுஜிலி பஜார்என்று பெயர் வைத்திருக்கிறார்கள். குஜிலி‘’ என்ற சொல் இப்போது குஜாலான பொருளைத் தருகிறது. அந்தக் காலத்தில் இந்தப் பெயரை ஏன் தான் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை.
வாப்பாவோடு தொழிலில் இறங்கிய சமகாலத்தவர்கள் விரல் விட்டும் எண்ணும் எண்ணிக்கையில்தான் இப்போதும் களத்தில் இருக்கிறார்கள். ஏனோ தெரியவில்லை. இந்த தொழிலில் ஈடுபட்டவர்களின் வாரிசுகள், இதே தொழிலுக்கு வர பெரும்பாலும் விரும்புவதில்லை. சிட்டியில் கொஞ்சம் பெருசாக, விஸ்தாரமாக பிசினஸ் செய்ய விரும்புகிறார்கள். பெரிய கடை, பெரிய வாகனம், பெரிய லாபம் என்று அவர்களது கனவுகள் விரிகிறது. சிலருக்கு கிடைக்கும் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலமாக அந்தந்த நாடுகளுக்கே போய் கடை போட்டு விடுகிறார்கள். இப்போது மலேசியாவில் கடை போட்டிருக்கும் தமிழர்களில் பாதிபேர் முன்பு இங்கு இருந்தவர்கள்தான். படித்தவர்கள் இந்த ரூட்டுக்கே வருவதில்லை. என்றைக்கிருந்தாலும் க்ரே பிசினஸ், தங்களை போலிஸ், ஜெயில் என்று அச்சுறுத்திக் கொண்டேயிருக்கும் என்பது அவர்களது பயம்.
சார். வாங்க சார். வாங்க சார். 200 ரூவாய்க்கு ரெண்டு சர்ட்டு சார். ஆயிரத்தில் ஒருவன்லே கார்த்தி போட்ட சட்டையை வித்த கடை இது சார்” – ரெஜிஸ்டர் ஆபிசுக்கு எதிரில் இருந்த கடைப்பையன் கூவிக்கூவி விற்றுக் கொண்டிருந்தான். அவனைப் பார்க்கவே ஆயிரத்தில் ஒருவன் கார்த்தி மாதிரிதான் இருந்தான். டைரக்டர் செல்வராகவனே நேராக வந்து இங்கே அந்த மஞ்சக்கலர் சட்டையை கார்த்திக்கு வாங்கியதாக பஜாரில் பேசிக்கொள்கிறார்கள். சினிமாக்காரர்கள் அடிக்கடி வந்துபோகிற இடம்தான் இதுவென்பதால் இதையும் நம்பலாம். தப்பில்லை.
வாப்பா அந்தப் பையனைப் பார்த்து மனசுக்குள் சிரித்துக் கொண்டார். அவர் அந்தக் காலத்தில் இதுபோல எவ்வளவோ கூவு, கூவியிருக்கிறார். கே.ஆர்.விஜயா ஸ்னோ, .ம்.ஜி.ஆர் தங்க பஸ்பம், நாகேஷ் பேண்ட் என்று அவருடைய நினைவுகள் மலரத் தொடங்கின. ம்.. அது ஒரு கனாக்காலம்.
வியாபாரம், வியாபாரமென்று உயிரை விட்டு வாழ்க்கையை முழுக்கத் தொலைத்தாயிற்று. இடையில் வந்த ஒரு அழகான காதலையும் குடும்பத்துக்காக தியாகம் செய்தார். தம்பிகள், தங்கைகளென்று எல்லாருக்கும் வாழ்க்கை அமைத்துக் கொடுத்துவிட்டு, திரும்பிப் பார்க்கும்போது தன்னுடைய வாலிபத்தையும், வாழ்க்கையையும் தொலைத்துவிட்டதை காலம் கடந்தே உணர்ந்தார். நாற்பத்தைந்து வயதுக்கு பிறகு தனக்கேயான தனி வாழ்க்கை அமைத்துக் கொள்வது குறித்த கூச்சமும் அவருக்கு இருந்தது. யாரிடம் போய் கேட்க முடியும், எனக்கு நிக்காஹ் செய்து வையுங்கள் என்று. தனிக்கட்டையாகவே இன்று வரை வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது வாப்பாவுக்கு.

(தொடரும் - 2)