“டேப்ரிக்கார்டரில் கேசட்டை ரீவைண்ட் பண்ணுற மாதிரி, லைஃபையும் ரீவைண்ட் பண்ண முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்?” ‘முதல்வன்’ படத்தில் சுஜாதா எழுதிய டயலாக். இதேதான் ‘இன்று நேற்று நாளை’ படத்தின் ஒன்லைனர். டைம் மெஷினில் கடந்த காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் பயணிக்க முடியும். கதாநாயகனின் வாழ்க்கையில் இந்த டைம் மெஷின் எப்படி விளையாடியது என்பதுதான் கதை.
தமிழில் எல்லா வகையிலும் படங்கள் எடுக்கப்படுகின்றன. சயன்ஸ் ஃபிக்ஷன் மட்டும் கொஞ்சம் அரிதுதான். ஏனெனில் ‘எந்திரன்’ மாதிரி படங்கள் எடுப்பதற்கு மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்படும். சிக்கனமான பட்ஜெட்டில், பளிச்சென்று அனைத்துத் தரப்பையும் கவரும் வண்ணம் இந்த அறிவியல்புனை படத்தை இயக்கியிருக்கிறார் ஆர்.ரவிக்குமார்.
இவரையே டைம் மெஷினில் உட்காரவைத்து கடந்த காலத்துக்கு வண்டியை ஓட்டச் சொன்னோம். இருபத்து மூன்று வருடங்களுக்கு பின்பாக போய் பிரேக் போட்டார். காலம் அங்கிருந்து நிகழ்காலம் நோக்கி மெதுவாக நகரத் தொடங்கியது.
இந்த தியேட்டரை சுற்றிதான் என்னோட வாழ்க்கையே. இங்கேதான் அப்பா நூல் வியாபாரம் பார்க்குறாரு. வீடும் பக்கத்துலேதான். நைட்ஷோ இங்கே படம் ஓடுறப்போ, வீட்டுலே சத்தம் கேட்கும். சினிமா ஓடுற சத்தம்தான் எனக்கு தாலாட்டு.
50 பைசாவுக்கு கடையில் ஃபிலிம் கிடைக்கும். ரஜினி, கமல், எம்.ஜி.ஆர், சிவாஜின்னு அவங்க நடிச்ச ஃபிலிமெல்லாம் வாங்கி வெச்சுப்பேன். 80 வாட்ஸ் பல்பை புரொஜெக்டர் மாதிரி யூஸ் பண்ணி சுவத்துலே படம் காட்டுவேன். நான் காட்டுற படத்தை ரசிக்கிற ரசிகை என் தங்கச்சி காயத்ரிதான். பானைக்குள்ளே பழைய ஸ்பீக்கரை வெச்சி, சிவன் தியேட்டர்லே வர்றமாதிரி சவுண்ட் எஃபெக்ட் ரெடி பண்ணுவேன். ‘ஹோம் தியேட்டர்’னா என்ன அர்த்தம்னு தெரியாத வயசுலேயே, என் வீட்டை தியேட்டரா மாத்தினேன்.
கொஞ்சம் வளர்ந்ததுமே, பிரெண்ட்ஸ் கிட்டே மூவி கேமிரா ஓசி வாங்கி மனசுக்கு பட்ட காட்சியை எல்லாம் படம் பிடிச்சேன். இதுலேயும் சோதனை எலி என் தங்கச்சிதான். எனக்கு படம் பிடிக்கத் தெரியும்னு எல்லாரும் நம்ப ஆரம்பிச்சதுக்கப்புறமாதான் எனக்கு நம்பிக்கை வந்தது.
வாசிச்ச நல்ல கதைகளை எல்லாம் குறும்படங்களா எடுக்க ஆரம்பிச்சேன். உள்ளூர்லே நடக்கிற விழாக்களில் அதை திரையிடுவேன். சினிமா எடுக்கணும்னுலாம் அந்த கட்டத்துலே ஐடியாவெல்லாம் இல்லை. பிடிச்சிருந்தது, செஞ்சேன். அப்பாவோட பிசினஸை வளர்க்குறதுதான் அப்போ எதிர்கால லட்சியமா இருந்தது.
ஒரு தனியார் தொலைக்காட்சியில் குறும்படங்களுக்கான போட்டி நடந்தப்போ விளையாட்டா கலந்துக்கிட்டேன். தொழில்நுட்பம்னா என்னன்னு அப்போதான் தெரிஞ்சுது. இயக்குனர் நலன்குமாரசாமியோட அறிமுகமும் அப்போதான் கிடைச்சுது.
நலன், அப்போ டிவி சீரியல் டைரக்ட் பண்ணிக்கிட்டிருந்தாரு. அவரோட அசோசியேட்டா என்னை சேர்த்துக்கிட்டாரு. அவருக்கு ‘சூது கவ்வும்’ வாய்ப்பு வந்ததுமே, ஸ்க்ரிப்ட் எழுத கிளம்பிட்டாரு. அந்த சீரியலை நான் டைரக்ட் பண்ண ஆரம்பிச்சேன். மாசாமாசம் நல்ல சம்பளங்கிறதாலே வீட்டுலே இதுக்கு எதிர்ப்பு எதுவுமில்லே.
‘சூது கவ்வும்’ படப்பிடிப்பு ஆரம்பிக்கறப்போ கூப்பிட்டார். எதையும் யோசிக்காம போய் சேர்ந்துட்டேன். இன்ச் பை இன்ச்சா அங்கே எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்.
அந்த படத்தோட தயாரிப்பாளர் சி.வி.குமார் ஜாலியா பேசிக்கிட்டிருந்தப்போ, ஒருநாள் யதேச்சையா இந்த படத்தோட ஒன்லைனரை சொன்னேன். “நல்லா இருக்குப்பா. ஸ்க்ரிப்ட் பண்ணி எடுத்துட்டு வா”ன்னு சொன்னாரு.
கதை எழுதி, திருத்தி, நண்பர்களோட பேசி திரும்பத் திரும்ப எழுதி... இந்த பிராசஸே 500 நாள் ஆயிடிச்சி. தயாரிப்பாளருக்கு திருப்தின்னதும் வேலையை ஆரம்பிச்சோம். அதாவது... ஒன்றரை வருஷம் எழுதின கதையை வெறும் ஒன்றரை மாசத்துலே எடுத்தோம்.
லாபகரமா படம் எடுக்கணும்னா இதுதான் வழி. வேலையை தொடங்குறதுக்கு முன்னாடி பக்காவா எல்லாத்தையும் எழுதி வெச்சிக்கணும். படப்பிடிப்புக்கு போய் திணறக்கூடாது. எனக்கு தெரிஞ்ச ஃபார்முலா இதுதான்.
படம் இப்போ ஹிட் ஆயிடிச்சி. ஆனால், கதை எழுதறப்பவும் சரி. படம் எடுக்கறப்பவும் சரி. ரொம்ப பேருக்கு இதோட வெற்றியில் சந்தேகம் இருந்துக்கிட்டே இருந்தது. ரசிகர்கள் அரவணைச்சுக்கிட்டாங்க.
டைரக்டர் ஆயாச்சு. இப்பவும் நடுத்தர வாழ்க்கைதான். எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்னு அப்பா உழைச்சிக்கிட்டு இருக்காரு. வாழ்க்கை முழுக்க உழைச்ச ஆளு. அவருக்கு சீக்கிரமா ஓய்வு கொடுத்து, ராஜா மாதிரி பார்த்துக்கணும்.
அடுத்த படம் பற்றி நான் அவசரப்படலை. இதே படத்துக்கு இரண்டாம் பாகம்னு எல்லாரும் பேசுறாங்க. எடுக்கறதுக்கு ஸ்கோப் இருக்கு. ஆனா, நல்ல கதை தோணி, அதை பக்காவா ரெடி பண்ணிக்கிட்டுதான் அடுத்து பண்ணலாம்னு இருக்கேன். நம்ம பக்கம் காத்தடிக்குதுன்னு, வர்ற வாய்ப்பை எல்லாம் வாரி போட்டுக்கிட்டு, எடுத்தேன் கவிழ்த்தேன்னு சரியா வேலை பார்க்கலைன்னா பேரு கெட்டுடும் இல்லையா?”
டைம் மெஷின் நிகழ்காலத்துக்கு வந்து நிற்பதற்கும், ரவிக்குமார் பேசி முடிப்பதற்கும் சரியாக இருந்தது.
அதே திருப்பூர் சிவன் தியேட்டர். அன்று ரவி, ‘தேவர் மகன்’ பார்த்த அதே தியேட்டரில்தான் ‘இன்று நேற்று நாளை’ ஓடுகிறது.
‘ஹவுஸ்ஃபுல் போர்டு’ வெளியே தொங்குகிறது!
(நன்றி : தினகரன் வெள்ளி மலர்)