19 ஆகஸ்ட், 2020

டி20 யுகத்தின் காட்ஃபாதர்

(ஓவியம் : அரஸ்)

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இந்திய அணி என்பது பழைய ஸ்கூட்டர் மாதிரி.

லேட் பிக்கப்.

1932ல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தது இந்திய அணி.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய ஜாம்பவான் அணிகளோடு தொடர்ந்து ஆடியது.

தன்னுடைய முதல் டெஸ்ட் வெற்றியை இங்கிலாந்துக்கு எதிராக அது பெற்றது (நம்ம சென்னையில்தான்) 1952ல்.

அதாவது முதல் வெற்றியை டெஸ்ட் கிரிக்கெட்டில் பதிவு செய்துக் கொள்வதற்கே இந்திய அணிக்கு இருபது ஆண்டுகள் தேவைப்பட்டது.

போலவேதான் –

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும்.

1974ல் முதன்முறையாக இங்கிலாந்துடன் மோதியது.

தன்னுடைய முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இங்கிலாந்தை எதிர்கொண்டு, மூன்று போட்டிகளிலுமே படுமோசமான தோல்வியை பெற்றது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றி கொண்டிருந்தது.

இந்தியா தன்னுடைய நான்காவது போட்டியில்தான் கிரிக்கெட்டுக்கு அவ்வளவாக அறிமுகமாகாத மொக்கை அணியான கிழக்கு ஆப்பிரிக்காவிடம் தன் முதல் வெற்றியை பதிவு செய்தது.

கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983ல் உலகக்கோப்பை விளையாடச் செல்வதற்கு முன்பாக 9 ஆண்டுகளில் மொத்தம் 40 ஒருநாள் போட்டிகள் விளையாடி இருந்தன.

அவற்றில் மொத்தம் 11 போட்டிகள் மட்டுமே வெற்றி. 29 போட்டிகளில் தோல்வி.

வெற்றி பெற்ற பல போட்டிகளிலும் கூட மயிரிழையில்தான் போராடி வென்றது.

அப்போதைய கத்துக்குட்டி அணியான இலங்கையுடன்தான் சொல்லிக் கொள்ளும் வகையில் மூன்று போட்டிகளில் பெரும் வெற்றி பெற்றிருந்தது.

எனவேதான் –

1983ஆம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றிக்கு முன்பாக வரை, ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்களிடம் பெரிய ஆதரவு இல்லை.

லிமிட்டெட் ஓவர் ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட்டை தக்கவைப்பது முக்கியமல்ல.

களத்தில் இருக்கும் நேரத்தில் குறைந்த பந்துகளில் அதிக ரன்களை சேகரிப்பதே வெற்றிக்கான வாய்ப்பு.

அதே நேரம் –

நமது அணியால் எவ்வளவு ரன்களை அதிகபட்சம் சேகரிக்க முடியுமோ, அந்த ரன்களைவிட30, 40 ரன்கள் குறைவாக எதிரணியை வீழ்த்தக்கூடிய பவுலிங் வியூகமும் இருக்க வேண்டும்.

இந்த இரு விஷயங்களையும் மனதில் கொண்டு கபில்தேவ் தீட்டிய திட்டங்களின் பலன்தான் எவருமே எதிர்பாராத வகையில் இந்தியாவுக்கு கிடைத்த உலகக்கோப்பை.

1983 வெற்றிக்குப் பிறகு இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு மவுசு கூடியது.

மக்கள் தொகை அடிப்படையில் உலகின் இரண்டாம் பெரிய நாடான இந்தியாவில் கிரிக்கெட் காய்ச்சல், கொரோனா கணக்காக நான்குகால் பாய்ச்சலில் பரவியது.

அப்போது இந்தியாவில் டிவிக்கும் மவுசு கூடிக் கொண்டிருந்தது.

டிவியில் கிரிக்கெட் பார்க்கவும், ரேடியோவில் ஸ்கோர் கேட்கவும் பெரும் கூட்டம் காத்திருந்தது.

விளம்பரதாரர்கள் இச்சூழலைப் பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகளை கிரிக்கெட் நட்சத்திரங்களை வைத்து விளம்பரப்படுத்தி வணிகத்தை பெருக்கிக் கொண்டார்கள்.

அவ்வகையில் இந்தியாவில் கிரிக்கெட்டுடன், நாட்டின் பொருளாதாரமே இணைக்கப்பட்டு விட்டது.

கிரிக்கெட் என்பது இங்கே வெறும் விளையாட்டல்ல.

மதம்.

83ல் கபில்தேவ் ஒருநாள் கிரிக்கெட்டில் செய்த அந்த அரிய சாதனையை, 24 ஆண்டுகள் கழித்து 2007ல் 20 ஓவர் டி20 கிரிக்கெட்டில் செய்தவர், ‘தல’ தோனி என்பதுதான் அவரது முக்கியத்துவமே.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமான அணியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பல்லாண்டுகள் இந்தியாவுக்கு தேவைப்பட்டது.

ஆனால் –

டி20ஐப் பொறுத்தவரை எடுத்தவுடனேயே உலக சாம்பியன்தான்.

இத்தனைக்கும் –

அப்போதைய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் அணியில் இடம்பெறவில்லை.

பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் பெரும்பாலானவர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அவ்வளவாக அறிமுகமில்லாதவர்கள்.

அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரில் மிகக்கேவலமான வகையில் வெளியேறியிருந்தது இந்திய அணி.

எல்லாவற்றையும் விட கேப்டன் தோனிக்கும் பெரிய அனுபவமில்லை.

பேட்ஸ்மேனாக, விக்கெட்கீப்பராக அவர் சற்று பெயர் பெற்றிருந்தாலும் கேப்டனாக என்னத்தைக் கிழிப்பார் என்கிற அலட்சியமே பெரும்பாலான ரசிகர்களுக்கு இருந்தது.

பொய் சொல்லி ஆபிசுக்கு லீவு போட்டுவிட்டு, காய்ச்சல் என்று ஸ்கூலுக்கு கட் அடித்துவிட்டு டிவி பெட்டி முன்பாக தவம் கிடந்த தலைமுறைக்கு அப்போது சற்றே கிரிக்கெட் சலித்து விட்டிருந்தது.

அடுத்து வந்த தலைமுறையோ போனில் அவ்வப்போது கிரிக்கெட் ஸ்கோர் பார்த்தால் போதும் என்கிற அளவுக்கு கிரிக்கெட் மேல் பெரிய பிடிப்பு கொள்ளாமல் இருந்தது.

எனவேதான் 2007ல் தோனி தலைமையிலான அணி பெற்ற டி20 உலகக்கோப்பை வெற்றியை, இன்னுமொரு வெற்றிக் கோப்பையாக மட்டுமே நம்மால் கருத முடியவில்லை.

அதுவொரு game changer.

மீண்டும் கிரிக்கெட்டை மதமாக இங்கே ஸ்தாபித்த பெருமை தல தோனியையும் அவரது தலைமையில் ஆடிய துடிப்பான இளம் வீரர்களையுமே சாரும்.

கிரிக்கெட் என்பது மெட்ரோ நகரங்களுக்கு உரியது என்கிற மாயையை முற்றிலுமாக உடைத்தெறிந்தது டி20.

கிரிக்கெட்டுக்கு எல்லையே இல்லை எனுமளவுக்கு குக்கிராமங்களும் கூட ஆர்வத்தோடு மீண்டும் டிவி பெட்டி முன்பாக தவம் கிடக்கக் காரணமானது டி20.

2007 டி20 உலகக் கோப்பையில் முக்கியமான போட்டி ஒன்றில் ஸ்ரீசாந்த் ஷார்ட் ஃபைன் லெக் திசையில் பிடித்த கேட்ச், கவுதம் காம்பீரின் பெற்ற அபாரமான மேன் ஆஃப் த மேட்ச், யுவராஜ்சிங்கின் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர், பாகிஸ்தானுக்கு எதிரான திரில்லிங்கான பவுல் அவுட், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தினேஷ் கார்த்திக்கின் சூப்பர் கேட்ச், ஆர்.பி.சிங் மற்றும் இர்ஃபான் பதானின் துல்லியமான பவுலிங்….

என்று நாம் என்றென்றைக்கும் சிலிர்த்துக்கொள்ள கொள்ள ஏராளமான பசுமையான நினைவுகள் உண்டு.

இதையெல்லாம் தாண்டிய விஷயம் எம்.எஸ்.தோனி.

கிரிக்கெட் அணியின் தலைமைப் பண்புகளுக்கு அவர் வகுத்த புதிய இலக்கணங்கள், அவ்விளையாட்டின் எதிர்காலத்தையே தாக்கப்படுத்தி இருக்கின்றன.

சந்தேகமே இல்லை.

டி20 யுகத்தின் காட்ஃபாதர் என்று அவரை நாம் உறுதியாகவே அழைக்கலாம்.

(‘குங்குமம்’ இதழில் வெளிவந்துக் கொண்டிருக்கும் ‘தல’ தொடரின் ஓர் அத்தியாயம்)


21 ஜூலை, 2020

கலையுலகச் சோழன்!



அப்பா, எம்.ஜி.ஆர் ரசிகர். எனவே, வாரிசு ரசனையாக எனக்கும் மக்கள் திலகத்தைதான் பிடிக்கும்.

அம்மாவோ நேரெதிர். சிவாஜி படங்கள்தான் பார்ப்பார். எம்.ஜி.ஆர் படத்தையெல்லாம் ‘வெறும் சண்டை’ என்று ஒதுக்கிவிடுவார்.

ஆனால் -

கடைசிக் காலத்தில் அப்பாவும் சிவாஜியை ரசிக்க ஆரம்பித்தார். ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’ மற்றும் ‘பா’ வரிசை படங்களை திரும்பத் திரும்ப விசிடியில் பார்த்துக் கொண்டிருந்தார். “சிவாஜியும் கூட நல்லாதான்யா ஸ்டைல்லா நடிச்சிருக்காரு” என்று கமெண்ட் செய்வார். எனக்குள் ஊறிப்போயிருந்த எம்.ஜி.ஆர் ரசனை ரத்தம் அதை ஒப்புக்கொள்ளவில்லை.

2001, ஜூலை 21-க்கு முன்பாக ஒட்டுமொத்தமாக பத்து, பதினைந்து சிவாஜி படங்களைப் பார்த்திருந்தாலே அதிகம். அவையும் கூட பராசக்தி, மனோகரா, நான் வாழ வைப்பேன், விடுதலை, தேவர் மகன், படையப்பா, ஒன்ஸ்மோர் மாதிரி படங்கள்தான். டிவியில் சிவாஜி படமென்றாலே ஜூட்.

2000-ங்களின் தொடக்கத்தில் தி.நகர் பாகீரதி அம்மாள் தெருவிலிருந்த ஒரு விளம்பர ஏஜென்ஸியில் பணி. தினமும் போக் ரோடு சிவாஜி வீட்டைக் கடந்துதான் என் டிவிஎஸ் சேம்ப் செல்லும். அந்த வீட்டு வாசலில் சில முறை சிவாஜி, ராம்குமார், பிரபுவையெல்லாம் கண்டிருக்கிறேன். அங்கிருக்கும் ஆட்டோ ஸ்டேண்ட் டிரைவர்களோடு அவ்வப்போது பிரபு பேசிக்கொண்டிருப்பார்.

மகத்தான நடிகர் வீடு வழியாக தினமும் சென்றுக் கொண்டிருந்தாலும், அந்த வீட்டுக்கு சற்றே எதிர்ப்புறம் அமைந்திருக்கும் ஆற்காடு தெருதான் நமக்கு திருத்தலம். மக்கள் திலகம் வாழ்ந்த வீடாயிற்றே?

எம்.ஜி.ஆர் ரசனையின் ஒரு விபரீத அம்சம் என்பது சிவாஜி வெறுப்பு. கண்ணை மூடிக்கொண்டு சிவாஜியை மட்டம் தட்டுவது. அப்படிதான் தட்டிக் கொண்டிருந்தேன் அந்த 2001 ஜூலை 21 வரை.

‘கலைஞர் நீண்டகாலம் வாழ, என் வாழ்நாளின் மீத வருடங்களை தருவேன்’ என்று கூறியிருந்தார் சிவாஜி. பாசிஸ்ட் ஜெயலலிதாவால் படுமோசமான முறையில் மிருகத்தனமாக போலீஸாரால் கலைஞர் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள்ளாகவே, தன் வாழ்நாளின் மீதி வருடங்களை தன் ஆருயிர் நண்பருக்குக் கொடுத்துவிட்டு மேலுலகம் சென்றார்.

சிவாஜியின் மறைவுச் செய்தியைக் கேட்டபோது அளவில்லா துக்கம் நெஞ்சைக் கவ்வியது. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அவரது பூவுடலுக்கு பல்லாயிரக் கணக்கானோர் திரண்டு மரியாதை செலுத்திய காட்சிகளை டிவியில் பார்த்துவிட்டு, உடனே போக் ரோடுக்கு கிளம்பினேன். நந்தனம் சிக்னலில் வண்டியை நிறுத்திவிட்டு போக் ரோடுக்குச் செல்லும்போது காணுமிடமெல்லாம் மக்கள் வெள்ளம். கதறியழுதவாறே அன்னை இல்லத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நடுத்தர வயது மனிதர் ‘பராசக்தி’ வசனத்தை அழுதவாறே உரத்தக் குரலில் முழங்கிக் கொண்டிருந்தார். சிவாஜி யார் என்பதை உணர்ந்த தருணம் அது.

அன்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு, மறுநாள் அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லிவிட்டு, இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்றேன்.

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் என்று எத்தனையோ பிரபலங்களின் இறுதி ஊர்வலங்கள் இன்றும் சென்னை மாநகரில் நினைவுகூறப்படுகின்றன. சிவாஜி இறுதி ஊர்வலத்தை மட்டும் ஏனோ அதில் சேர்க்க மறந்துவிடுகிறார்கள்.

தி.நகரில் தொடங்கி பெசண்ட் நகர் வரை நடந்த சிவாஜியின் இறுதி ஊர்வலத்திலும் பல லட்சம் பேர் பங்கேற்றனர். ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் சாதாரணர்களாக தங்களை மாற்றிக்கொண்டு பங்கேற்ற பிரும்மாண்டமான ஊர்வலம் அது. மக்கள் கடலில் மிதந்தவாறேதான் அவரை சுமந்த வாகனம் நகர் மத்தியில் சென்றது. செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களும், போட்டோகிராஃபர்களும் கூட அழுதது எந்த இறுதி ஊர்வலத்திலும் நான் கண்டிராத காட்சி.

அன்றிலிருந்துதான் சிவாஜி படங்களையே பார்க்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான படங்களை டிவி, இணையம் மூலம் பார்த்தாகிவிட்டது. என்னுடன் சினிமா கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய சம்பத் என்பவர் தீவிர சிவாஜி ரசிகர். அவருடனான உரையாடல்கள் சிவாஜியின் நடிப்பை எப்படி அணுக வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தது. உலகிலேயே இவ்வளவு வேடங்கள் ஏற்று, ஒவ்வொரு வேடத்துக்கும் வேறுபாடு காட்டி நடித்த நடிகர் வேறு எவராவது இருப்பாரா என்பது சந்தேகம்தான். சிவாஜியை ரசிக்க ‘செல்லுலாய்ட் சோழன்’ என்கிற பிரமாதமான ‘ரீடர்’ ஒன்றை பத்திரிகையாளர் சுதாங்கன் எழுதியிருக்கிறார். சர்வதேச அளவில் வேறெந்த நடிகருக்காவது இப்படியொரு நுணுக்கமான ரசனை சார்ந்த விரிவான நூல் இருப்பதாகத் தெரியவில்லை.

இருபது வயதுவரை நான் வெறுத்துக் கொண்டிருந்த சிவாஜி, கடந்த இருபதாண்டுகளில் மனதுக்கு மிகவும் நெருக்கமான மனிதராக ஆகிவிட்டார். இன்று, உலகின் தலைசிறந்த நடிகர் சிவாஜிதான் என்பது என் மனப்பதிவு.

30 ஜனவரி, 2020

கவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்!

ஒரு கவிதைத் தொகுப்புக்கு விமர்சனம் எழுத முயற்சிப்பேன் என்று நேற்று இரவு 12 மணி வரை எனக்கேத் தெரியாது.

சம்மந்தப்பட்ட கவிஞரே, “இது கவிதைத் தொகுப்பல்ல. கவிதை எழுத முயற்சி செய்த ஒருவனின் தோல்விச் சான்றுகள் மட்டுமே” என்று சுய வாக்குமூலம் கொடுக்கும்போது, கவிதை அறியா கழுதையான நான் ஏன் எழுதக்கூடாது என்கிற தன்னம்பிக்கை ஏற்பட்டது.

‘அபாயகரம்’ என்கிற தலைப்புதான் அச்சுறுத்துகிறதே தவிர, தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஐம்பது கவிதைகளும் வாசகனை கொஞ்சம் அனுசரணையாகவேதான் நடத்துகிறது.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் சிறுகதை ஆசிரியர் என்பதைவிட கவிஞராகதான் பா.ராகவன் கூடுதலாக மிளிர்கிறார் என்பதாக எனக்குப் படுகிறது.

கவிதைகள் குறித்து மேம்போக்கான எள்ளல் எண்ணம் கொண்டவர்கள் கவிதை எழுத முடியாது என்கிற மூடநம்பிக்கையை தைரியமாகவே பாரா கைவிட்டு விடலாம். தீவிரக் கவிஞர்கள் தவறவிடுகிற சில்லறை தருணங்களை கவிதையாக்குகிற கவிஞர்களும் இலக்கியத்துக்குத் தேவையே.

ஆறேழு பக்கட்டுகளில்
தண்ணீர் பிடித்துவைக்க

ஆயிரக்கணக்கில் கவிஞர்கள் இருக்கிறார்கள்.

பிடித்த நீரைச் சிந்தாமல்
நகர்த்தி வைக்கத்தான்

பா.ராகவன்கள் தேவைப்படுகிறார்கள். நவீனக் கவிதைகள் குறித்த எள்ளல்கள் மிகுந்த பா.ராகவன் போன்றவர்களே, அக்கவிதைகள் குறித்த ‘புரியும்படியான’ விமர்சனங்களையும் எழுதமுடியும் என்று கருதுகிறேன்.

‘அபாயகரம்’ கவிதைத் தொகுப்பு, தன்னளவில் ஒரு தொகுப்பாக மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகவே கவிதையுலகில் நுழைய விரும்பும் எல்.கே.ஜி. வாசகர்களுக்கு அகலமாக தன் கதவுகளை திறந்துவைத்து ‘வெல்கம் போர்டு’ வைத்திருக்கிறது.

பா.ராகவனின் கவிதைகள் உடோப்பியாவில் நிகழ்வதில்லை. அக்மார்க் குரோம்பேட்டை சரக்கு. பெரும்பாலும் சிரிக்க வைக்கின்றன. அபூர்வமாக சிந்திக்கவும் தூண்டுகின்றன. நேற்றைய நிலவைவிட இன்றைய நிலவு அழகாக இருக்கிறது எனும்போது இன்றைய கவிதை நாளை நன்றாயிருக்கக் கூடும் மாதிரியான கூற்றுகளை உதாரணமாகச் சொல்லலாம்.

ஒரு புன்னகையைத் தருகிறாய்
ஒரு ஆர்வத்தைத் தருகிறாய்
ஒரு பதற்றத்தைத் தருகிறாய்
ஒரு பெருமூச்சைத் தருகிறாய்
ஒரு தரிசனத்தைத் தருகிறார்

மாதிரியான கவிதைகளில் மனுஷ்யபுத்திரன் வாசனை.

குள்ளமா யிருப்பதே
குரோட்டனுக் கழகு

மாதிரியான அறிவிப்புகளில்தான் அசல் பாரா வெளிப்படுகிறார்.

காதலும், கவிதையும் பாராவின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு அநியாயமாக இரையாகின்றன.

காட்டாக,

காதல் ஒரு வெட்டிவேலை என்பது
காதலிக்கும்போது தெரியவில்லை
கவிதையெழுதும்போது
கண்டிப்பாகத் தெரிகிறது

என்கிறார்.

காதைத் தேடும் கவிஞன் அமானுஷ்யத்தை ஏற்படுத்துகிறான்.

ரயிலில் ஏறிய கவிஞன், கனவுப் பெட்டியிலிருந்து இறங்கும் அதீதம் அருமை.

இந்தியாவது தொந்தியாவது என முடியும் கவிதையின் பகடி, மொழித்திணிப்பின் மீதான தமிழ் மண்ணின் நிரந்தர கிண்டல்.

பாம்பு அசைந்துக் கொண்டிருந்தது
மரம் இறங்கி ஊர்ந்துப் போனது

வாசிப்பவனின் கற்பனைக்கு ஓவர்டைம் உழைப்பு வாங்குகிறது.

கவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள் என்று இந்த விமர்சனத்துக்கு கவித்துவமாக தலைப்பிட்டுவிட்டாலும், எழுபது பக்கங்களை வாசித்து முடித்தபிறகு கவிதைத் தொகுப்பை வாசித்த தன்னிறைவுதான் ஏற்படுகிறது.

பாராவுக்கு இனியும் தன்னடக்கம் அவசியமில்லை. தாராளமாகவே கவிஞர் பட்டத்தைப் போட்டுக் கொள்ளலாம். இவையும் கவிதைகள்தான். இவற்றுக்குரிய வாசகர்களும் நிச்சயம் இருக்கிறார்கள், என்னைப் போல.


நூல் : அபாயகரம்
வகை : கவிதை
எழுதியவர் : பா.ராகவன்
பக்கங்கள் : 70
கிடைக்குமிடம் : கிண்டில்

24 அக்டோபர், 2019

பழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்!

தனலட்சுமி தியேட்டர்
(மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை)

குமரன் தியேட்டர்
(புழுதிவாக்கம்)

ரங்கா தியேட்டர்
(நங்கைநல்லூர்)

ஜெயலட்சுமி தியேட்டர்
(ஆதம்பாக்கம்)

மதி தியேட்டர்
(ஆலந்தூர்)

ஜோதி தியேட்டர்
(பரங்கிமலை)

ராஜலட்சுமி தியேட்டர்
(வேளச்சேரி)

மற்றும்

என் பால்யத்தை மகிழ்ச்சிக்குரியதாக மாற்றிய
சென்னை மாநகர் – புறநகர், சுற்றுவட்டார
அனைத்து திரை அரங்கங்களுக்கும்…

இந்நூல் சமர்ப்பணம்!

மறக்க முடியுமா?

எண்பதுகளையும், தொண்ணூறுகளையும் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றே சொல்லலாம்.

2K கிட்ஸ் என்று சொல்லப்படுகிற இளைஞர்கள்தான் ஏராளமானோர் இன்று சமூக ஊடகங்களில் புழங்குகிறார்கள்.

80களிலும், 90களிலும் வெளிவந்த திரைப்படங்களையும், அக்கால நட்சத்திரங்களையும் ‘மீம்ஸ் மெட்டீரியல்’ என்கிற வகையில்தான் மிகவும் கிண்டலாகதான் அவர்கள் அங்கீகரிக்கிறார்கள்.

நாமெல்லாம் வியந்து, வியந்து ஆராதித்த நட்சத்திரங்களை இப்படி பொசுக்கென்று ஒரே ஒரு மீமில் பாதாளத்துக்கு தூக்கிக் கடாசிவிடும் அவர்களின் அராஜகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தான் ‘அவங்கள்லாம் யாரு தெரியுமா?’ என்று பதிலளிக்க ‘பழைய பேப்பர்’ என்கிற கட்டுரைத் தொடரையே ‘தினகரன்’ நாளிதழின் வெள்ளிக்கிழமை இணைப்பான ‘வெள்ளி மலர்’ இதழில் தொடங்கினேன்.

இத்தொடரை தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கமாக அன்பும், ஆதரவும் தெரிவித்த மரியாதைக்குரிய தினகரன் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர் அவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்க மறந்துவிட்டால் காலத்துக்கும் கடன் பட்டவன் ஆவேன்.

தொடர் தொடங்கியபிறகு எதிர்பாரா பக்கங்களில் இருந்து கிடைத்த வரவேற்புகள் சற்றும் எதிர்பாராதது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையும் 6 மணியிலிருந்து தொடந்து என் கைப்பேசி ஒலிக்கத் தொடங்கிவிடும். வாசகர்கள் மட்டுமின்றி சினிமாத்துறையினரும் தொடர்ச்சியாக இத்தொடரை வாசித்து, தங்கள் கருத்துகளை சொல்லி வந்தார்கள். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் குறித்த கட்டுரை வந்தபோது, அதை அப்படியே அவரது முகநூல் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அதன் பிறகு பல்லாயிரக்கணக்கில் புதிய வாசகர்கள் இத்தொடருக்குக் கிடைத்தார்கள்.

‘பழைய பேப்பர்’, இப்போது சூரியன் பதிப்பகத்தால் நூல் வடிவமும் பெறுகிறது என்பது மகிழ்ச்சி. தொடருக்குக் கிடைத்த வரவேற்பைக் காட்டிலும் நூலுக்கு கூடுதலான வரவேற்பு கிடைக்குமென எதிர்ப்பார்க்கிறேன்.

‘பழைய பேப்பர்’ என்று பெயர் வைத்திருந்தாலும், இந்நூலில் தொகுத்துள்ள தகவல்கள் பெரும்பாலும் அவ்வளவு பழசு அல்ல என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், சிலர் பழைய பேப்பர்களில் இருந்து திரட்டிய தகவல்களா என்றும் கேட்டனர். அதுவும்தான் என்றாலும் முற்றிலும் அப்படியல்ல.

இந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்கள் பெரும்பாலும் நேரடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் சொல்லிக் கேட்டவை, அவர்களே எழுதிய தன்வரலாற்று நூல்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை, பழைய பேட்டிகளில் கிடைத்த தகவல்கள் என்று அத்தனை வழிமுறைகளையும் பயன்படுத்தி முடிந்தவரை சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறேன்.

பொதுவாக சினிமா குறித்த கட்டுரைகள் எழுதும்போது நக்கீரர்கள் சிலர் கருத்துப்பிழை, தகவல்பிழையென்று விளாசித் தள்ளிவிடுவார்கள். ‘பழைய பேப்பர்’ எழுதும்போது அத்தகைய அனுபவம் எதுவும் எனக்குக் கிட்டவில்லை.

ஓக்கே. மொக்கை போட்டது போதும்.

It is show time.

கால இயந்திரத்துக்குள் பயணிக்கத் தயாராகுங்கள்.

அன்புடன்
யுவகிருஷ்ணா

- ‘பழைய பேப்பர்’ நூலுக்கு எழுதிய முன்னுரை.


பக்கங்கள் : 208
விலை : ரூ.150/-
வெளியீடு : சூரியன் பதிப்பகம்
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர்,
சென்னை - 600 004. தொலைபேசி : 044-42209191
மொபைல் : 7299027361

14 செப்டம்பர், 2019

கலைஞரும் சிறுகதைகளும்!

அரசியல்தான் தான் விரும்பித் தேர்ந்தெடுத்து பணிபுரியும் துறை என்று கலைஞர் அடிக்கடி சொன்னாலும், “அரசியல்/ஆட்சி அழுத்தங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவே கலை இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபடுகிறேன்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இலக்கியத்தின் பல்வேறு பரிணாமங்களிலும் அவருடைய ஆர்வமான செயல்பாடு இருந்திருக்கிறது. தன்னை முதன்மையாக பத்திரிகையாளர் என்று அவர் பெருமையாக அடையாளப் படுத்திக் கொண்டாலும், இதழியல் மட்டுமின்றி சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், திரைப்படம், தன்வரலாறு, பேச்சு என்று கிளைவிரித்து தமிழ் பரப்பியிருக்கிறார்.

கலைஞரின் தமிழ்ப் பணிகளில் அதிகம் பேசப்படாதவையாக அவரது சிறுகதைகள் அமைந்திருக்கின்றன.

மிகச்சரியாக கலைஞர் பிறப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பாகதான் தமிழில் ‘சிறுகதை’ என்கிற வடிவமே உருவாகிறது. பாரதியாரின் ‘ஆறிலொரு பங்கு’ என்கிற சிறுகதையையே, தமிழ் சிறுகதை உலகின் முதல் கதையாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கலைஞர், தன்னுடைய 14வது வயதிலிருந்து வாசிப்பு, எழுத்து என்று தீவிரமாக செயல்படுகிறார். அப்படியிருக்க தமிழில் அவரால் முதல் 25 ஆண்டுகளில் எழுதப்பட்ட சிறுகதைகளைதான் தொடக்கத்தில் வாசித்திருக்க முடியும். ஒட்டுமொத்தமாக அப்போது இருநூறு, முன்னூறு சிறுகதைகள் எழுதப்பட்டிருந்தாலே கூட அது அபூர்வம்தான்.

தமிழ் சிறுகதைகள், நவீன வடிவத்தை எட்டாத சோதனைக்குழாயில் இருந்த காலக்கட்டத்தில் இயங்கியவர்களில் கலைஞரும் ஒருவர். எனவே, இன்றைய காலக்கட்டத்தில் சிறுகதைகளில் இலக்கிய வாசகர்கள் எதிர்ப்பார்க்கக்கூடிய அழகியல், கச்சிதமான வடிவம் மற்றும் சிறுகதைகளுக்கான கறாரான இலக்கணம் போன்றவற்றை கலைஞரின் அந்தக் காலக்கட்டத்துப் படைப்புகளில் தேட முற்படுவது அபத்தம்.

மேலும், ‘திராவிட இலக்கியம் என்றாலே தீட்டு’ என்கிற தமிழ் நவீன இலக்கியப் பண்பும் கலைஞரின் சிறுகதைகள் அதிகம் பேசப்படாததற்கு கூடுதல் காரணம். திராவிட இயக்கச் சிந்தனைகளின் பரப்பியல் உத்திகள் குறித்த போதுமான ஆய்வுகள், தமிழ் இலக்கியத்தில் மிகவும் அரிது என்பதில் இருந்து இதில் புரிந்துக் கொள்ளலாம். திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்களை எழுத்தாளர்களாக ஏற்றுக் கொள்பவர்களையே ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும் நாட்டாமைத்தனமான பாசிஸம் இன்றும் தொடர்கிறது. இத்தகைய சூழலில் கலைஞரின் சிறுகதைகள் குறித்த துல்லியமான விமர்சனங்களை நாம் எதிர்ப்பார்ப்பதே வீண்தான்.

பேரறிஞர் அண்ணா, கலைஞர், இரா.அரங்கண்ணல், ஏவிபி ஆசைத்தம்பி, இளமைப்பித்தன், இரா.இளஞ்சேரன், கே.ஜி.இராதாமணாளன், தில்லை மறைமுதல்வன், எஸ்.எஸ்.தென்னரசு, டி.கே.சீனிவாசன், முரசொலி மாறன், ப.புகழேந்தி, திருச்சி செல்வேந்திரன் ஆகியோரின் நூற்றுக்கும் மேலான தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, ‘திராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள்’ என்று சீதை பதிப்பகம் கடந்த 2012ல் திராவிட இயக்க நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் வெளியிட்டிருக்கிறது.

இன்றைய நவீன தமிழ் எழுத்தாளர்களோ / விமர்சகர்களோ இப்படியொரு பெருந்தொகுப்பு வந்திருப்பதையாவது அறிந்திருப்பார்களேயானால் அது அதிசயமே. ‘திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கு இலக்கியம் வராது’ என்று மட்டையடி அடிக்கும் பார்ப்பன எழுத்தாளர்களோ அல்லது அவர்களை அடிவருடும் சூத்திர எழுத்தாளர்களோ இவற்றில் சில கதைகளையேனும் வாசித்திருந்தால் குறைந்தபட்சம் தங்கள் அறியாமையாவது உணர்ந்திருப்பார்கள்.

இன்றைய நவீன இலக்கியவாதிகளில் கலைஞரை அதிகம் வாசித்த மிக சிலரில் பிரபஞ்சனும் ஒருவர். வாசித்திருப்பதால் மட்டுமே அவரால் கலைஞரின் சிறுகதைகளுக்கு அடிநாதமாக இருக்கக்கூடிய சமுதாய உணர்வை கண்டுகொண்டு பாராட்ட முடிகிறது.

“ஒரு கருத்து, சிந்தனை அல்லது அனுபவத்தை சமூகம் சார்ந்து வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பாகவே கலைஞர் தன்னுடைய சிறுகதைகளை பயன்படுத்தி இருக்கிறார். கருத்து இல்லாத, சமூக உணர்வு சற்றுமில்லாத ஒரே ஒரு கலைஞரின் சிறுகதையை கூட நான் வாசித்ததில்லை” என்று சொல்லியிருக்கிறார் பிரபஞ்சன்.

எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடா தமிழ்ப்பணி புரிந்த கலைஞர் அவர்கள், காலமாகி இருக்கும் இச்சூழலிலாவது அவரது எழுத்துகள் மீள்வாசிப்பு செய்யப்படுவதும், அவை குறித்த துல்லியமான ஆய்வுகள் நடத்தப்படுவதுமே நேர்மையான செயல்பாடாக இருக்க முடியும். காலம் கடந்தாவது இந்தச் செயலை நவீன இலக்கியவாதிகள் செய்வார்கள் என்று நம்புவோம்.

கலைஞரின் சிறுகதைகளுக்கு வருவோம்.

கலைஞரின் 21வது வயதில் ‘கிழவன் கனவு’ என்கிற சிறுகதைத் தொகுப்பை 1945ல் வெளியிட்டிருக்கிறார். இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற கதைகள், எந்தெந்த இதழ்களில் வெளிவந்தன என்பது குறித்த தகவல்கள் சரியாக தெரியவில்லை. அடுத்து எட்டு ஆண்டுகள் கழித்து 1953ல் ‘நாடும் நாகமும்’, 1956ல் ‘தாய்மை’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். பின்னர் ‘கண்ணடக்கம்’, ‘அரும்பு’, ‘வாழமுடியாதவர்கள்’, ‘சங்கிலிச்சாமி’, ‘தப்பிவிட்டார்கள்’ உள்ளிட்டத் தலைப்புகளில் பதினைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.

1971ல் பெரும் தொகுப்பாக முக்கியமான கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்’ என்று வெளியிடப்பட்டது.

1940ல் தொடங்கி 1970களின் இறுதி வரையில் கலைஞர் ஆர்வத்தோடு கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் சிறுகதைகள் எழுதுவதில் ஈடுபாடு காட்டியிருக்கிறார். அதன் பிறகு நாவல், ஆய்வுநூல்கள் என்று அவரது ஆர்வம் திசைமாறிய நிலையில் மிகவும் அரிதாகவே சிறுகதை எழுதியிருக்கிறார். இயக்கம் சார்ந்த இதழ்களிலேயே கலைஞரின் சிறுகதைகள் பெரும்பான்மையாக இடம்பெற்றிருக்கின்றன. அவை தவிர்த்து கொஞ்சம் அரிதாகவே வெகுஜன இதழ்களில் எழுதியிருக்கிறார்.

அவர் எத்தனை சிறுகதைகள் எழுதியிருக்கிறார் என்பதற்கு துல்லியமான கணக்கு வழக்கு இல்லை. தோராயமாக இருநூறு கதைகள் எழுதியிருக்கலாம் என்று தெரிகிறது.

சினிமா, நாடகம், பேச்சு என்று தன்னுடைய மற்ற ஆற்றல்களை எல்லாம் எப்படி தான் ஏற்றுக் கொண்ட கொள்கை அரசியலுக்கு பயன்படத்தக்க வகையில் மாற்றிக் கொண்டாரோ, சிறுகதைகளையும் அப்படியேதான் உபயோகித்திருக்கிறார். திராவிட இயக்கத்தின் கருத்துக் கூறுகளை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பாகதான் அவர் சிறுகதைகளையும் பார்த்திருக்கிறார்.

“இராமர் என்ன என்ஜினியரா?” என்று ராமர் பாலம் விவகாரத்தில் கலைஞர் செய்த கேலி, நாடு முழுக்கவே கடுமையான அதிர்வலைகளை எழுப்பியது. இந்துத்துவ ஆதரவாளர்கள் கலைஞரின் மறைவுக்குப் பிறகும் இதற்காக அவரை மன்னிக்கத் தயாராக இல்லை. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய ‘விஷம் இனிது’ கதையிலேயேகூட இராமர் எதிர்ப்பை வலுவாக வெளிப்படுத்தி இருக்கிறார். “இராம பிரானை விட இந்த விஷம் இனிது” என்கிற கூரிய விமர்சனத்தோடு கூடிய வசனம் அந்த சிறுகதையில் வெளிப்படுகிறது. கடவுள் மறுப்பு என்கிற கலைஞரின் பண்பு, அவரது சிறுகதைகள் பலவற்றிலும் சம்பவங்களின் ஊடாகவும், வசனங்களின் வெளிப்பாடாகவும் பளிச்சென்றே அமைந்திருக்கிறது.

‘கண்ணடக்கம்’ என்கிற கதையில் பிளேக் நோய் பரவி, ஊரெல்லாம் பிணம். காளிபக்தன் மனசுடைந்துப் போய் காளிதேவியிடம் நியாயம் கேட்பான். “கருணைக்கடலா நீ? பேய்க்கும் உனக்கும் என்ன வேறுபாடு?” இதை வாசிக்கும்போதே உணர்ந்திருப்பீர்கள். கலைஞரின் பெரும்பாலான கதைகளின் நாயகர்கள் ‘பராசக்தி’ குணசேகரன்களேதான். ‘நடுத்தெரு நாராயணி’ என்கிற சிறுகதையில் ‘பராசக்தி’ கல்யாணியைகூட நீங்கள் கண்டுக்கொள்ளலாம்.

கலைஞரின் சிறுகதைகளில் தனித்துவமானதாக அவரது வாசகர்களால் என்று நினைவுகூறப்படுவது ‘குப்பைத்தொட்டி’ என்கிற அவரது சிறுகதை. சர்ரியலிஸம், இருத்தலியல்வாதம், அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம், மாந்திரீக யதார்த்தவாதம் போன்ற மேற்கத்திய கோட்பாட்டு முறைகள் தமிழ் நிலத்தில் பேசப்படுவதற்கு வெகுகாலம் முன்பே, ஒரு குப்பைத்தொட்டி மூலமாக சமகால சமூகத்தை பிரதிபலிக்கும் சிறப்பான வடிவ உத்தியை அச்சிறுகதையில் கலைஞர் பயன்படுத்தி இருக்கிறார்.

இடதுசாரி இலக்கிய இதழான ‘செம்மலர்’, இச்சிறுகதையை ‘சிகரம் தொட்ட சிறுகதை’ என்கிற வரிசையில் மறுபிரசுரம் செய்து கொண்டாடியது. கலைஞரின் இலக்கியத்தரம் குறித்து நவீன இலக்கியவாதி ஒருவர் கேள்வி எழுப்பியபோது, கலைஞர் இந்தக் கதையைதான் தன்னுடைய இலக்கியத் திறனுக்கு சான்றாக முன்வைத்தார்.

இச்சிறுகதையைப் பற்றி கேள்விப்பட்டு குஷ்வந்த்சிங், ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ இதழில் வெளியிட்டார். அக்கதையில் வெளிப்பட்டிருந்த புராண எதிர்ப்புக் கருத்துகளுக்காக ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ அலுவலகத்தை இந்துமத வெறியர்கள் முற்றுகையிட்டு பிரச்சினை செய்தார்கள். அப்போது, அக்கதையை பாராட்டி மூட்டை மூட்டையாக வந்திருந்த கடிதங்களை அவர்களுக்கு முன்பாகக் கொட்டி, “இக்கதையை ஏற்றுக் கொண்டவர்களும் இந்துக்கள்தான்” என்று மூக்குடைத்தார் குஷ்வந்த்சிங். பின்னர் ‘குப்பைத்தொட்டி’, ஐரோப்பிய மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டது. “குப்பைத்தொட்டி இங்கே குப்பையாக ஒதுக்கப்பட்டாலும் பிற மொழிகளில் கொண்டாடப்படுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார் கலைஞர்.

சிறுகதையின் வடிவங்களில் பரிசோதனை செய்துப் பார்ப்பது கலைஞருக்கு மிகவும் பிடித்தமானது. ‘நரியூர் நந்தியப்பன்’ என்கிற சிறுகதையை கடிதவடிவில் எழுதியிருப்பார். அவருடைய சிறுகதைகளில் சாமியார்களை தோலுரிக்கும் சம்பவங்கள் ஏகத்துக்கும் அமைந்திருக்கும். ‘நளாயினி’, புராண எதிர்ப்புப் பேசும். ‘சந்தனக் கிண்ணம்’, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரின் நியாயத்தை எடுத்துச் சொல்லும்.

‘எழுத்தாளர் ஏகலைவன்’ என்கிற சிறுகதையில், “சிறுகதை என்றால் வெறும் பொழுது போக்குக்காகப் படிப்பதற்காகவா எழுதப்படுவது? அதில் ஏதாவது ஒரு கருத்து, சமுதாயத்துக்குத் தேவையானதாக அமைக்கப்பட வேண்டாமா?” என்று தான் ஏன் சிறுகதை எழுதுகிறார் என்பதற்கான நியாயத்தை கதையின் போக்கிலேயே சொல்லியிருப்பார்.

சிறுகதை என்றால் என்னவென்று இந்த பின்நவீனத்துவத்துவக் காலக்கட்டத்திலும் ஏதோ ஒரு வாசகனால் கேட்கப்படுகிறது. ஏதோ ஓர் எழுத்தாளர், தான் அறிந்ததை விளக்கிக் கொண்டிருக்கிறார்.

சிறுகதைக்கான கலைஞரின் இலக்கணம் மிகவும் எளிமையானது.

”ஒரு காட்சி அல்லது நிகழ்வைப் பற்றி, மற்றவர்களுக்கு எடுத்து விளக்கிச் சொல்லும்போது, அவரவர் நிலைக்கேற்பவும், அறிவு வளர்ச்சிக்கேற்பவும், விளக்குபவருக்கும், விளக்கத்தைக் கேட்பவருக்குமிடையே ஒரு பாலமாகப் பாவிக்கப்படுவதுதான் சிறுகதை”

ஏற்றுக் கொள்ளக்கூடிய விளக்கம்தான் இல்லையா?