12 பிப்ரவரி, 2007

ஓரம் போ


தமிழுக்கு புதிய, வித்தியாசமான கதைக்களத்துடன் களமிறங்கிய புதுமுக இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரிக்கு முதலில் கைகொடுத்து விட்டு விமர்சனத்தை ஆரம்பிக்கிறேன். இதற்கு முன்பாக வந்த 'ஆட்டோ ஓட்டுனர்களை' ஹீரோக்களாகவும், பாத்திரங்களாகவும் வந்தப் படங்களை காட்டிலும் நிஜவாழ்வுக்கு மிக நெருங்கி வந்த படம் இது. இதுபோன்ற கதைக்களத்தை சரண் போன்ற கிரியேட்டிவ் டைரக்டர்கள் மட்டுமே சிந்தித்து, தைரியமாக படமாக்க இயலும். கையில் வெயிட்டான பட்ஜெட் இருந்தால் நிச்சயம் இந்த இரட்டை இயக்குனர்கள் கலக்குவார்கள் என்ற நம்பிக்கை வருகிறது.

சன் ஆப் கன், பிகிலு இருவரும் சிட்டியில் பெரிய மெக்கானிக்குகள், தொழில்முறை போட்டியாளர்கள். இருவருக்குமிடையே அடிக்கடி தங்கள் பலத்தை காட்டிக்கொள்ள ஆட்டோ ரேஸ் நடக்கும். பிகிலிடம் ஷார்ப்பான ஆட்டோ ட்ரைவரான ஹீரோ இருப்பதால் இடைவேளை வரை ஜெயிக்கிறார். இடைவேளைக்குப் பின்பு தொடர்ந்து பல காரணங்களால் தோற்கிறார். க்ளைமேக்ஸ் ரேஸிலும் தோற்பது குறிப்பிடத்தக்கது. ரேஸில் தோற்கும் ஹீரோவும், பிகிலும் வாழ்க்கையில் வெற்றியடைகிறார்கள். இடையில் சுவாரஸ்யத்தைக் கூட்ட கருப்பு முத்து கடத்தல், பிரியாணி கடை ஹீரோயின், மும்பை அண்ணாச்சி என்று தோரணம் கட்டுகிறார்கள். எந்த கேரக்டருமே ரொம்ப சீரியஸாக இல்லாமல் எல்லோரும் கோமாளிகளே என்பதால் புன்னகைத்துக் கொண்டே படம் பார்க்க முடிகிறது.

ஹீரோ என்றால் ரொம்பவும் நல்லவன், வில்லன் என்றால் ரொம்பவும் கெட்டவன் என்ற வழமையான பொதுப்புத்தியை காட்டாமல் எல்லோரும் நார்மலான மனிதர்களே என்று காட்டியிருப்பது சிறப்பு. ஆர்யா ஆட்டோ ட்ரைவர்களின் பாடி லேங்குவேஜை அனாயசமாக காட்டியிருக்கிறார். கொஞ்சம் சிவப்பாக இருப்பது தான் மைனஸ் பாயிண்ட். பிகிலு கேரக்டரில் மலையாள லால் கண்களாலேயே நடித்து மனதை அள்ளுகிறார்.

ஜி.எஸ்.டி. ரோட்டில் பெரிய பெட்டிங்குடன் நடக்கும் ஆட்டோ ரேஸ், நைட்டு ரேஸ் என்று இதுவரை தமிழ் சினிமாவும் காட்டாத பக்கங்களை காட்டியிருப்பது சுவாரஸ்யம். ஆர்யாவுக்கு எதிராக ஆட்டோ ஓட்டும் ரேஸ் ஓட்டுனரான 'கோழி'யின் பேஸ்கட் சூப்பர்.

பிரியாணி கடையில் வேலை பார்க்கும் ஹீரோயின் பூஜா, தொடைக்கறி மாதிரி 'கிண்ணென்று' இருக்கிறார். டல் மேக்-அப், கண்ணை உறுத்தாத காஸ்ட்யூம்களில் மிளிர்கிறார். அவருக்கும், ஆர்யாவுக்கும் சமோசாவுக்குள் சொருகப்பட்ட மசாலா மாதிரி கெமிஸ்ட்ரி கலக்கலாக ஒர்க்-அவுட் ஆகிறது.

படத்தின் டைட்டில் காட்சி அருமை. Hulk படபாணியில் எடிட் செய்யப்பட்டிருக்கிறது. டைட்டில் இசையும் சூப்பர். ஆட்டோ ட்ரைவர்களின் வாழ்க்கை தான் கதை என்பதால் படம் முழுக்க சென்னையின் எதிர் அழகியல் சொல்லாடல்கள் சென்சார் கண்ணுக்கு மண்ணைத் தூவி, அள்ளி தெளிக்கப்பட்டிருக்கிறது. ஆடியன்ஸ் இவர்கள் தான் என்று இயக்குனர்கள் முன்முடிவோடு களமிறங்கி இருப்பதால் கிளுகிளு காட்சிகள் ஏராளம். கிட்டத்தட்ட மேட்டர் படம் லெவலுக்கு சில காட்சிகள் உண்டு.

ஜி.வி.ப்ரகாஷின் இசையமைப்பில் 'இதென்ன மாயம்?' பாடல் இதம், விஜய டி.ஆர். வாய்ஸில் கன் கன் கணபதி கலக்கல் காக்டெயில். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக க்ளைமேக்ஸ் பாடலான 'முயலுக்கும், ஆமைக்கும் ரேஸு.. ஜிஞ்சிக்காம்.. ஜிஞ்சிக்காம்.. ஜிக்காம்' அமர்க்களம். சிறுவயதில் பள்ளியில் பாடிய 'ரஜினிக்கும், கமலுக்கும் சண்டை... அதில் கிழிஞ்சது...' பாட்டு நினைவுக்கு வருகிறது.

எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்ட படங்கள் ஏமாற்றங்களை தரும் நிலையில், 'ஓரம் போ' மாதிரியான சோட்டா படங்கள் அசத்துகின்றன.

கதையெல்லாம் லூசுல விடு மச்சி... ரெண்டு மணிநேர டைம்பாஸ் கேரண்டி..

1 கருத்து:

  1. ' பிரியாணி கடையில் வேலை பார்க்கும் ஹீரோயின் பூஜா, தொடைக்கறி மாதிரி 'கிண்ணென்று' இருக்கிறார். டல் மேக்-அப், கண்ணை உறுத்தாத காஸ்ட்யூம்களில் மிளிர்கிறார். அவருக்கும், ஆர்யாவுக்கும் சமோசாவுக்குள் சொருகப்பட்ட மசாலா மாதிரி கெமிஸ்ட்ரி கலக்கலாக ஒர்க்-அவுட் ஆகிறது. "


    அட்டகாசமான வர்ணனை . .

    நன்றி

    பதிலளிநீக்கு