ஒரு காலத்தில் நான் கருத்துக்களம் ஒன்றில் களமாடிக் கொண்டிருந்தபோது அருண் என்ற நண்பர் ஒரு திரி இட்டிருந்தார். இரட்டைத் தம்ளர் முறை பற்றி சாடி வந்திருந்த பதிவு அது. அதை எழுதியவர் டோண்டு ராகவன் என்று அருண் சொல்லியிருந்தார். அத்திரியில் இருந்த கருத்துக்கள் குறித்த எனது மாறுபாடுகளை மிகக்காரமான மொழியில் எழுதியிருந்தேன். டோண்டு ராகவன் என்ற பெயரை கண்டதுமே ஒரு முப்பது வயது அம்பி என்ற எண்ணம் தான் அப்போது இருந்தது.
அருண் ரொம்ப நாட்களாக என்னை வலைப்பூ ஒன்று தொடங்கச் சொல்லி அப்போது வற்புறுத்தி வந்தார். எனக்கு தொழில்நுட்ப அறிவு இல்லையென்று சொல்லி தள்ளிப் பொட்டு வந்தேன். ஒரு கட்டத்தில் அருணின் டார்ச்சர் தாங்காமல் ஒரு பிளாக்கர் அக்கவுண்ட் தொடங்கிவிட்டேன். தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைப்பதற்கு டெம்ப்ளேட்டில் செய்யவேண்டிய வேலைகளை எல்லாம் அருண் தான் சொல்லிக் கொடுத்தார். ஆனால் பிளாக்கர் அக்கவுண்டை வைத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. நிறைய பதிவுகளில் பின்னூட்டங்கள் இருந்ததை கண்டேன். அதுபோல எங்காவது பின்னூட்டம் போடவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அருண் டோண்டு சாரின் தீவிர ரசிகர் என்பதால் டோண்டுவின் பதிவை எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.
எனவே நான் பதிவு எழுதத்தொடங்கி பிள்ளையார் சுழியாக டோண்டு சார் அவர்களின் பதிவில் துரதிருஷ்டவசமாக என் முதல் பின்னூட்டம் ஒன்றினை ஆர்வக்கோளாறில் பதிந்தேன். அது என்ன கருமம் என்று எனக்கு இப்போது நினைவில்லை. பின்னூட்டம் ரிலீஸ் ஆனதுமே Luckyluke என்ற பெயரையும், அவதாரையும் கண்ட எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. உடனே என் வலையில் ஒரு அறிமுகப்பதிவு ஒன்றினையும் சும்மா பதிந்து வைத்தேன். கமெண்டு மாடரேஷன் மாதிரியான சங்கதிகள் அப்போது எனக்கு தெரியாது. வலையை சும்மா தொடங்கி விட்டோம், எதுவும் எழுதவெல்லாம் வேண்டாம். தேவைப்பட்டால் ஆங்காங்கே (குறிப்பாக டோண்டு பதிவில்) பின்னூட்டம் மட்டும் போடலாம் என்பதே என்னுடைய அப்போதைய தீர்மானமாக இருந்தது.
மறுநாள் காலை சும்மா டைம் பாஸுக்கு என் வலைப்பூவை திறந்தவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. என்னை அன்பாக ‘டோண்டுவுக்கு பின்னூட்டம் போடவேண்டாம்' என்று கூறி ஒரு பின்னூட்டமும், அதற்கு கீழே பைந்தமிழில் நான்கைந்து பின்னூட்டங்களும் போடப்பட்டிருந்தது. “எவண்டா அது?” என்று பொங்கியெழுந்து என்னை திட்டி பின்னூட்டம் போட்டவர்களை வகுந்தெடுத்து சில பதிவுகள் போட்டேன். அப்படி போடத்தொடங்கிய பதிவுகள் இன்று போயும், போயும் பெயரிலியிடம் எல்லாம் போய் சண்டை போடும் லெவலுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. எனவே நான் பதிவுலகுக்கு வந்ததற்கு டோண்டுவும், போலி டோண்டுவும் சமபங்கு புண்ணியம் கட்டிக் கொள்கிறார்கள்.
ஆரம்பத்தில் டோண்டு சாரை நக்கல் அடித்து ஏதாவது பதிவு போட எண்ணினால் அவருக்கு தொலைபேசி அனுமதி கேட்பேன். “அதனால என்ன கண்ணா? பதிவு தானே போட்டுக்கோ!” என்பார். தொடர்ந்து இரண்டு மூன்று முறை அதுபோல கேட்டபின்னர், “இதுக்கெல்லாம் எதுக்கு அனுமதி? என்னை பத்தி உன் மனசுலே என்ன நினைச்சுருக்கியோ அதை எழுதப்போறே? வேணாம்னு சொன்னாலும் பதிவிலே இல்லாட்டியும், மனசுலே இருக்கும் இல்லியா?” என்று ஒருமுறை கேட்டார். அதன் பின்னர் அவரை பற்றி நல்லவிதமாக எழுதவும் சரி, நக்கலடிக்கவும் சரி அனுமதி கேட்பதில்லை.
அதர் ஆப்ஷன் கமெண்டு பற்றியெல்லாம் எனக்கு அவ்வளவாக அறிவில்லாத காலத்தில் யாராவது குறும்பு டீம் நண்பர் யார் பெயரிலாவது ஏதாவது ஏடாகூட கமெண்டு போட்டுவிடுவார். அந்த கமெண்டு டோண்டு சாருக்கு சம்பந்தமில்லாததாக இருந்தாலும் கூட போன் செய்து அது ஒரு போலி கமெண்டு, நீக்கிவிடு என்பார். அப்போதெல்லாம் டோண்டு சாருக்கு அதர்-ஆப்ஷன் கமெண்டுகள் மீது அப்படி ஒரு கொலைவெறி!
அவருக்கு பிடித்தமாதிரி அல்லது அவர் ரசிக்கும்வகையில் யார் பதிவெழுதி இருந்தாலும் உடனடியாக ஆஜராகி ஒரு பின்னூட்டம் போட்டுவிடுவது அவர் வாடிக்கை. அதுபோலவே அவருக்கு பிடிக்காத பதிவெழுதுபவர்களுக்கு அவரது பின்னூட்டம் கேரண்டி. அவர் தொடர்பிலிருக்கும் பதிவராக இருந்தால் உடனடியாக தொலைபேசி பாராட்டு தெரிவிப்பார்.
ரவி, நான், கிழுமாத்தூர், வரவனை, பொட்டீக்கடை உள்ளிட்ட கொலைவெறிக்குழு ஒன்று வெயிட்டாக அப்போது ஃபார்ம் ஆகி இருந்தது. எந்த பதிவாக இருந்தாலும் மொத்தமாக கும்மி நூறு, நூற்றி ஐம்பது பின்னூட்டங்களாவது போட்டுவிடுவது எங்கள் வாடிக்கை. துரதிருஷ்டவசமாக டோண்டு சாரின் பதிவில் அதர்-அனானி ஆப்ஷன்களை டிஸேபிள் செய்திருந்ததால் அவரது பதிவுகளில் எங்களால் கும்மி அடிக்க முடியவில்லை. ஒரு வலைப்பதிவர் சந்திப்பில் நேரில் சந்தித்து அதர்-அனானிகளுக்கு அவரது பதிவில் இடமளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். காமராஜர் பாணியில் ”ஆகட்டும், பார்க்கலாம்!” என்றவர் மறுநாளே அதர்-அனானி ஆப்ஷனை திறந்துவைத்து இன்ப அதிர்ச்சி அளித்தார்.
தனிமனித ஆளுமை மேம்பாடு (பர்சனாலிட்டி டெவலப்மெண்ட்) குறித்து அவரது அனுபவங்கள் வாயிலாக மிக அற்புதமாக எழுதக்கூடிய எழுத்தாளர் அவர். துக்ளக், அரசியல், கேள்வி-பதில் என்று மொக்கை போடாமல் அவரது அனுபவங்களை பிரதானமாக அவரது வலையில் பதிந்தால் எதிர்காலத்தில் வலையுலக வரலாற்றில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பெயர் அவருக்கு இருக்கும். அவரது முரட்டு வைத்தியம் தொடர்களின் தீவிர ரசிகன் நான். குறிப்பாக IDPLல் பணிபுரியும்போது அவர் சைக்கிளில் அலுவலகத்துக்கு சென்றது குறித்த பதிவு நான் அடிக்கடி வாசிக்கும் பதிவுகளில் ஒன்று.
முரளிமனோகராக அவரை எல்லோரோடும் சேர்ந்து கும்மியப்பிறகு ஏனோ அவரிடம் தொலைபேசவும், நேரில் பார்க்கவும் எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ஆனால் அவரோ அதுகுறித்த எந்த கோபமுமின்றி “ஹல்லோ.. லக்கிலூக்!” என்று பேச ஆரம்பித்தார். அது தான் டோண்டு சார். காண்டு கஜேந்திரன் தொடர்பதிவுகளை நான் எழுதித்தள்ளுவதை யார் வாசிக்கிறார்களோ இல்லையோ, டோண்டு சார் வாசித்து முதலில் பாராட்டி விடுகிறார். அவரது தலையை டெண்டுல்கர் உடலோடு ஒட்டிப் போட்ட “டோண்டுல்கர்” கிராபிக்ஸ் படத்தை நிரம்பவும் ரசித்தார். பதிவுலக மோதல்களையெல்லாம் ஒருபுறம் தள்ளிவைத்து தன்னை எதிர்த்து எழுதுபவர்களிடமும் நல்ல முறையில் நட்பு பாராட்டுவார். பதிவுலகை தவிர்த்து தனிப்பட்ட முறையிலும் என்னோடு நட்பாக இருப்பவர்களில் டோண்டு சாரும் ஒருவர்.
அவரது மத-சாத வெறியை தவிர்த்துப் பார்த்தோமானால் (அது கூட நேரில் பழகும்போது தெரியாது) தனிப்பட்ட முறையில் எல்லோரும் நேசிக்கக்கூடிய, நட்பு பாராட்டக்கூடிய ஒரு நல்ல மனிதர் டோண்டு ராகவன்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக