30 ஜூலை, 2015

கனவை நனவாக்குதல்!

அறிவியலாளர்களை கவுரவிக்க இந்திய தேசம் எப்போதுமே தவறியதில்லை. அறிவியல் அறிஞர் ஒருவர் இந்தியாவின் ஜனாதிபதி என்றபோது உலகமே ஆச்சரியத்தில் மூழ்கியது. அப்துல்கலாமின் வாழ்க்கை நாட்டின் கடைக்கோடி குடிமகனுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் பாதை. தமிழ்நாட்டின் சிறிய ஊரில், ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் ராஷ்டிரபதி பவனில் அமர்ந்து நாட்டையே வழிநடத்த முடியும் என்கிற இந்த வாய்ப்பு வேறு நாடுகளில் அமைவது கடினம்.

இந்த வாய்ப்புக்குப் பின்னால் இருந்த டாக்டர் கலாமின் கடின உழைப்பும், கனவும் அவரை எப்படி சரியான வழியில் நடத்தியது என்பதை ‘எனது பயணம்’ நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். எண்பது வயதைக் கடந்தவர் தன்னுடைய தனித்துவ அனுபவங்களை பகிர்ந்துக் கொள்வது என்பது இன்றைய இளைய தலைமுறைக்கு அரிதாகக் கிடைக்கக்கூடிய பொக்கிஷம். ஏராளமான சம்பவங்கள் நிறைந்த நீண்டகால வாழ்வின் அனுபவங்களை நம் மனதுக்கு அப்படியே கடத்தும் நெருக்கமான மொழியமைப்பில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. கூடு விட்டு கூடு பாய்ந்ததைபோல புத்தகத்தை படித்து முடிக்கும்போது, வாசித்த ஒவ்வொருவருமே நம்மை கலாமாக உணர்கிறோம்.

தன் வாழ்வில் கண்டடைந்த மிகப்பெரிய பாடமாக கனவினை சொல்கிறார் கலாம். “ஒருவர் தன் வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் தொடர்ந்து கனவு கண்டு கொண்டே இருக்க வேண்டும். பிறகு அந்த கனவுகளை நனவாக்குவதற்கு கடினமாக உழைக்க வேண்டும்” என்று தன் வாழ்வின் வெற்றி ரகசியத்தை சொல்லிக் கொடுக்கிறார்.

இந்தியர் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ளும் மகத்தான சாதனைகளை படைத்து பெருவாழ்வு வாழ்ந்துக் கொண்டிருக்கும் கலாம், கடைசியாக நூலை முடிக்கும்போது என்ன சொல்கிறார் தெரியுமா?

“கடக்க வேண்டிய தூரம் இன்னும் கணிசமாக இருக்கிறது”

நூல் : எனது பயணம்
எழுதியவர் : ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
தமிழில் : நாகலட்சுமி சண்முகம்
விலை : ரூ. 150/-
பக்கங்கள் : 172
வெளியீடு : மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்,
7/32, தரைத்தளம், அன்சாரி சாலை, தார்யாகஞ்ச்,
புதுடெல்லி-110002.
E-mail : sales@manjulindia.com
 Website : www.manjulindia.com



நூலிலிருந்து...

“1998ஆம் ஆண்டில் பொக்ரானில் இந்தியா தனது இரண்டாவது அணுவெடிப் பரிசோதனையை நடத்தியபிறகு, அதன் உருவாக்கத்தில் பங்காற்றியிருந்த எனக்குப் பல்வேறு பட்டப் பெயர்கள் வழங்கப்பட்டன. அதற்குப் பல வருடங்களுக்குப் பிறகும், ஜனாதிபதியாக எனது பதவிக்காலம் முடிந்து பல வருடங்களுக்குப் பிறகும் என்னோடு எப்போதும் தங்கி வந்துள்ள ஓர் அடைமொழி ‘ஏவுகணை மனிதன்’ என்பதுதான். நான் அவ்வாறு அழைக்கப்படும்போது அது எனக்குப் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், ஓர் அறிவியல் மனிதனாக என்னை நான் கருதிக் கொண்டிருக்கையில், அப்பெயர் ஒரு குழந்தையின் சாகசக் கதாநாயகனின் பெயரைப் போல ஒலிக்கிறது”

21 ஜூலை, 2015

பாகுபலி மீது பாலியல் வழக்கு?

பாகுபலி என்னவெல்லாம் அநியாயத்தை அவந்திகாவுக்கு செய்திருக்கிறான் பாருங்கள். அவந்திகா அறியாமலேயே அவளுடைய கைகளில் ஓவியம் வரைகிறான். Intruded her privacy.

பாம்பை ஏவிவிட்டு அவளை சில விநாடிகள் உறையச் செய்கிறான். கத்தி காட்டி மிரட்டுவதை போல பாம்பை காட்டி மிரட்டியிருக்கிறான்.

இச்சையை வெளிப்படுத்தும் நடனம் ஆடுகிறான். அவள் கூந்தலை கலைக்கிறான். உடுத்தியிருந்த ‘போராளிக்கான’ உடையை அவிழ்க்கிறான். ‘பெண்மை’ புலப்படுமளவுக்கு அவளது உடையை செதுக்குகிறான் (அவந்திகா என்ன சிற்பமா?). சாயங்களை சேகரித்து கண்ணுக்கு மை தீட்டுகிறான். உதட்டுக்கு சாயம் பூசுகிறான். அவளை பெண்மை (?) செய்கிறான். அவளை நாணப்படுத்துகிறான். அவனது இறுக்கத்தில் அயர்ந்துப் போகிறாள். உச்சக்கட்டமாக விலங்கை போல ஒரு பெண் பழக்கப்படுத்தப்படுகிறாள்.

நம் அறிவுஜீவிகள் கொஞ்சம் அட்வான்ஸாகதான் சிந்திக்கிறார்கள்.

ஆனானப்பட்ட பல்லாலதேவனையே சமாளித்துவிட்ட பாகுபலியால் நம்மூர் இண்டெலெக்ச்சுவல்களை சமாளிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்றாலும் நாயகன், நாயகியின் இடுப்பைப் பிடித்து வலுக்கட்டாயமாகதான் இழுக்க வேண்டுமா என்று எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி, என்னுடைய ஒருநாள் இரவு தூக்கத்தை முற்றிலுமாக பறித்துக் கொண்டிருக்கிறது.

‘அவந்திகா, துணிச்சல்மிகு போராளி’ என்று போடப்பட்ட பன்ச்சிலேயே ‘பணால்’. ‘போராளி’ என்கிற வார்த்தையை கேட்டதுமே/வாசித்ததுமே இணையப் போராளிகள் போர்ப்பரணி பாடத் தொடங்கிவிட மாட்டார்களா?

நிச்சயமாக பாலியல் குற்றம்தான். பாகுபலி மீது இ.பி.கோ 375 பாய்வதுதான் நியாயம். முடிந்தால் இந்த ஆபாசமான காம வெளிப்பாட்டை படம் பிடித்த ராஜமவுலி மற்றும் அவரது குழுவினர் மீதும் இந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம்.

இதோடு நிறுத்திவிடக்கூடாது. ‘சண்டிராணியே எனக்கு கப்பம் கட்டு நீ’ என்று பாடிக்கொண்டே வாளை நீட்டி அச்சுறுத்தி, விஜயசாந்தியை பணியவைத்த சூப்பர் ஸ்டாரில் தொடங்கி ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ ஹரிதாஸ் வரைக்கும் நம் சினிமாவில் நடந்த அத்தனை பாலியல் பலாத்காரங்களையும் விசாரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். குறிப்பாக பெண்ணியவாதிகளுக்கு இந்த கடமை இருக்கிறது. ஓர் அவந்திகாவுக்கு நடந்த அவலம் இனிமேல் இன்னொரு அவந்திகாவுக்கு நடக்கக்கூடாது என்றால், அவந்திகாவை மாதிரியே நாமெல்லாம் போராளிகளாக, ஆயுதம் ஏந்திய புரட்சியாளர்களாக (குறைந்தபட்சம் ஃபேஸ்புக்கிலாவது) மாறவேண்டியது காலத்தின் கட்டாயம்.

அட்லீஸ்ட் இதுபோல இந்திய சினிமாவில் இதுவரை வெளிவந்த ஆயிரக்கணக்கான சினிமாக்களில் நடந்த பாலியல் பலாத்காரங்களை, மோட்டுவளையை பார்த்து சிந்தித்து கண்டுபிடித்து நாம் வெளிப்படுத்த வேண்டும். உதாரணத்துக்கு தற்கொலை மூடில் இருந்த ரேகாவை வலுக்கட்டாயமாக இழுத்து உதட்டோடு உதடு கிஸ் அடித்த கமல்ஹாசனை பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று ஒரு ஸ்டேட்டஸாவது போடவேண்டும். அதற்கு குறைந்தபட்சம் முன்னூறு கமெண்டு, மூவாயிரம் ‘லைக்’காவது விழுந்தால்தான் ஆண்மய்யப்பட்ட இந்திய சமூக விழுமியங்களின் மீது நாம் சிறுநீராவது கழித்த அறிவுலகச் செயல்பாட்டினை நிகழ்த்த முடியும்.

எருதினை அடக்கும் காட்சிக்கு கூட கணிப்பொறியில் சித்தரிக்கப்பட்ட காட்சியைதான் காட்டியாக வேண்டும் என்கிற அறம், ஏற்கனவே இந்தியாவில் இருக்கிறது. விலங்குகள் காட்சிகளில் இடம்பெறுமாயின், ‘இந்தப் படத்தில் விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை’ என்று ஸ்லைடு போட்டு காட்டவேண்டியது அவசியம் என்று இந்திய தணிக்கைத்துறை வலியுறுத்துகிறது.

நிலைமை அப்படியிருக்கையில் விலங்கினைவிட பெண்கள் மட்டமா என்கிற அடிப்படைக்கேள்வி நமக்கு இங்கே எழுகிறது. முதற்கட்டமாக இனிமேல் சினிமாக்களில் இதுபோன்ற பாலியல் பலாத்கார காதல் காட்சிகள் இடம்பெறுமாயின், அவை கணிப்பொறியில் சித்தரிக்கப்பட்ட இமேஜ்களாகதான் இருக்கவேண்டும் என்கிற கோரிக்கையை நோக்கி நம் போராட்டம் துவங்கப்பட வேண்டும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் இடம்பெறக்கூடிய அவ்வாறான காதல் காட்சிகளில் ‘புகை பிடிப்பது புற்றுநோயை வரவழைக்கும்’ என்பதுபோல, ‘பெண்ணை வலியுறுத்தி காதல் செய்வது, இந்திய தண்டனை சட்டப்படி குற்றமாகும்’ என்கிற எச்சரிக்கை திரையின் கீழே பொறிக்கப்பட வேண்டும் என்பதே நம் நிலைப்பாடு.

இந்த சீரிய சிந்தனையை தூண்டிய கட்டுரை : 'பலாத்கார பாகுபலி'யும் அவிழ்க்கப்பட்ட அவந்திகாவும்!


16 ஜூலை, 2015

இன்று இயக்குனர். நேற்று ரசிகர். நாளை?

“டேப்ரிக்கார்டரில் கேசட்டை ரீவைண்ட் பண்ணுற மாதிரி, லைஃபையும் ரீவைண்ட் பண்ண முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்?” ‘முதல்வன்’ படத்தில் சுஜாதா எழுதிய டயலாக். இதேதான் ‘இன்று நேற்று நாளை’ படத்தின் ஒன்லைனர். டைம் மெஷினில் கடந்த காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் பயணிக்க முடியும். கதாநாயகனின் வாழ்க்கையில் இந்த டைம் மெஷின் எப்படி விளையாடியது என்பதுதான் கதை.

தமிழில் எல்லா வகையிலும் படங்கள் எடுக்கப்படுகின்றன. சயன்ஸ் ஃபிக்‌ஷன் மட்டும் கொஞ்சம் அரிதுதான். ஏனெனில் ‘எந்திரன்’ மாதிரி படங்கள் எடுப்பதற்கு மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்படும். சிக்கனமான பட்ஜெட்டில், பளிச்சென்று அனைத்துத் தரப்பையும் கவரும் வண்ணம் இந்த அறிவியல்புனை படத்தை இயக்கியிருக்கிறார் ஆர்.ரவிக்குமார்.

இவரையே டைம் மெஷினில் உட்காரவைத்து கடந்த காலத்துக்கு வண்டியை ஓட்டச் சொன்னோம். இருபத்து மூன்று வருடங்களுக்கு பின்பாக போய் பிரேக் போட்டார். காலம் அங்கிருந்து நிகழ்காலம் நோக்கி மெதுவாக நகரத் தொடங்கியது.
“திருப்பூர் சிவன் தியேட்டர். எட்டு, ஒன்பது வயசு இருக்கும். ‘தேவர் மகன்’ படம் ஓடுது. முதன்முதலா தனியா படம் பார்க்குறேன். பயமாயிருக்கு. ஆயாதான் வாராவாரம் இங்கே என்னை படம் பார்க்க கூப்பிட்டுக்கிட்டு வருவாங்க. இப்போ நான் கொஞ்சம் பெரிய பையன் ஆயிட்டேன்னு ஆம்பளைங்க க்யூவில்தான் டிக்கெட் கொடுக்கறாங்க.

இந்த தியேட்டரை சுற்றிதான் என்னோட வாழ்க்கையே. இங்கேதான் அப்பா நூல் வியாபாரம் பார்க்குறாரு. வீடும் பக்கத்துலேதான். நைட்ஷோ இங்கே படம் ஓடுறப்போ, வீட்டுலே சத்தம் கேட்கும். சினிமா ஓடுற சத்தம்தான் எனக்கு தாலாட்டு.

50 பைசாவுக்கு கடையில் ஃபிலிம் கிடைக்கும். ரஜினி, கமல், எம்.ஜி.ஆர், சிவாஜின்னு அவங்க நடிச்ச ஃபிலிமெல்லாம் வாங்கி வெச்சுப்பேன். 80 வாட்ஸ் பல்பை புரொஜெக்டர் மாதிரி யூஸ் பண்ணி சுவத்துலே படம் காட்டுவேன். நான் காட்டுற படத்தை ரசிக்கிற ரசிகை என் தங்கச்சி காயத்ரிதான். பானைக்குள்ளே பழைய ஸ்பீக்கரை வெச்சி, சிவன் தியேட்டர்லே வர்றமாதிரி சவுண்ட் எஃபெக்ட் ரெடி பண்ணுவேன். ‘ஹோம் தியேட்டர்’னா என்ன அர்த்தம்னு தெரியாத வயசுலேயே, என் வீட்டை தியேட்டரா மாத்தினேன்.

கொஞ்சம் வளர்ந்ததுமே, பிரெண்ட்ஸ் கிட்டே மூவி கேமிரா ஓசி வாங்கி மனசுக்கு பட்ட காட்சியை எல்லாம் படம் பிடிச்சேன். இதுலேயும் சோதனை எலி என் தங்கச்சிதான். எனக்கு படம் பிடிக்கத் தெரியும்னு எல்லாரும் நம்ப ஆரம்பிச்சதுக்கப்புறமாதான் எனக்கு நம்பிக்கை வந்தது.

வாசிச்ச நல்ல கதைகளை எல்லாம் குறும்படங்களா எடுக்க ஆரம்பிச்சேன். உள்ளூர்லே நடக்கிற விழாக்களில் அதை திரையிடுவேன். சினிமா எடுக்கணும்னுலாம் அந்த கட்டத்துலே ஐடியாவெல்லாம் இல்லை. பிடிச்சிருந்தது, செஞ்சேன். அப்பாவோட பிசினஸை வளர்க்குறதுதான் அப்போ எதிர்கால லட்சியமா இருந்தது.

ஒரு தனியார் தொலைக்காட்சியில் குறும்படங்களுக்கான போட்டி நடந்தப்போ விளையாட்டா கலந்துக்கிட்டேன். தொழில்நுட்பம்னா என்னன்னு அப்போதான் தெரிஞ்சுது. இயக்குனர் நலன்குமாரசாமியோட அறிமுகமும் அப்போதான் கிடைச்சுது.

நலன், அப்போ டிவி சீரியல் டைரக்ட் பண்ணிக்கிட்டிருந்தாரு. அவரோட அசோசியேட்டா என்னை சேர்த்துக்கிட்டாரு. அவருக்கு ‘சூது கவ்வும்’ வாய்ப்பு வந்ததுமே, ஸ்க்ரிப்ட் எழுத கிளம்பிட்டாரு. அந்த சீரியலை நான் டைரக்ட் பண்ண ஆரம்பிச்சேன். மாசாமாசம் நல்ல சம்பளங்கிறதாலே வீட்டுலே இதுக்கு எதிர்ப்பு எதுவுமில்லே.

‘சூது கவ்வும்’ படப்பிடிப்பு ஆரம்பிக்கறப்போ கூப்பிட்டார். எதையும் யோசிக்காம போய் சேர்ந்துட்டேன். இன்ச் பை இன்ச்சா அங்கே எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்.

அந்த படத்தோட தயாரிப்பாளர் சி.வி.குமார் ஜாலியா பேசிக்கிட்டிருந்தப்போ, ஒருநாள் யதேச்சையா இந்த படத்தோட ஒன்லைனரை சொன்னேன். “நல்லா இருக்குப்பா. ஸ்க்ரிப்ட் பண்ணி எடுத்துட்டு வா”ன்னு சொன்னாரு.

கதை எழுதி, திருத்தி, நண்பர்களோட பேசி திரும்பத் திரும்ப எழுதி... இந்த பிராசஸே 500 நாள் ஆயிடிச்சி. தயாரிப்பாளருக்கு திருப்தின்னதும் வேலையை ஆரம்பிச்சோம். அதாவது... ஒன்றரை வருஷம் எழுதின கதையை வெறும் ஒன்றரை மாசத்துலே எடுத்தோம்.

லாபகரமா படம் எடுக்கணும்னா இதுதான் வழி. வேலையை தொடங்குறதுக்கு முன்னாடி பக்காவா எல்லாத்தையும் எழுதி வெச்சிக்கணும். படப்பிடிப்புக்கு போய் திணறக்கூடாது. எனக்கு தெரிஞ்ச ஃபார்முலா இதுதான்.

படம் இப்போ ஹிட் ஆயிடிச்சி. ஆனால், கதை எழுதறப்பவும் சரி. படம் எடுக்கறப்பவும் சரி. ரொம்ப பேருக்கு இதோட வெற்றியில் சந்தேகம் இருந்துக்கிட்டே இருந்தது. ரசிகர்கள் அரவணைச்சுக்கிட்டாங்க.
எனக்கு பெரிய சந்தோஷம் என்னன்னா, இப்போ எனக்கு கிடைக்குற பாராட்டுகளை பார்த்து அப்பா ராஜேந்திரனுக்கு ரொம்ப சந்தோஷம். என் வயசு பசங்க எல்லாம் கல்யாணம், தொழிலுன்னு செட்டில் ஆயிட்டாங்க. தன்னோட பையன் மட்டும் இப்படி கேமிராவை தூக்கிட்டு சுத்தறானேன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருந்தாரு. என்னோட வெற்றி, என்னைவிட என் குடும்பத்துக்குதான் ரொம்ப முக்கியம்.

டைரக்டர் ஆயாச்சு. இப்பவும் நடுத்தர வாழ்க்கைதான். எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்னு அப்பா உழைச்சிக்கிட்டு இருக்காரு. வாழ்க்கை முழுக்க உழைச்ச ஆளு. அவருக்கு சீக்கிரமா ஓய்வு கொடுத்து, ராஜா மாதிரி பார்த்துக்கணும்.

அடுத்த படம் பற்றி நான் அவசரப்படலை. இதே படத்துக்கு இரண்டாம் பாகம்னு எல்லாரும் பேசுறாங்க. எடுக்கறதுக்கு ஸ்கோப் இருக்கு. ஆனா, நல்ல கதை தோணி, அதை பக்காவா ரெடி பண்ணிக்கிட்டுதான் அடுத்து பண்ணலாம்னு இருக்கேன். நம்ம பக்கம் காத்தடிக்குதுன்னு, வர்ற வாய்ப்பை எல்லாம் வாரி போட்டுக்கிட்டு, எடுத்தேன் கவிழ்த்தேன்னு சரியா வேலை பார்க்கலைன்னா பேரு கெட்டுடும் இல்லையா?”

டைம் மெஷின் நிகழ்காலத்துக்கு வந்து நிற்பதற்கும், ரவிக்குமார் பேசி முடிப்பதற்கும் சரியாக இருந்தது.

அதே திருப்பூர் சிவன் தியேட்டர். அன்று ரவி, ‘தேவர் மகன்’ பார்த்த அதே தியேட்டரில்தான் ‘இன்று நேற்று நாளை’ ஓடுகிறது.

‘ஹவுஸ்ஃபுல் போர்டு’ வெளியே தொங்குகிறது!

(நன்றி : தினகரன் வெள்ளி மலர்)

8 ஜூலை, 2015

ரேஷ்மாவின் கதை

கிறங்கடிக்கும் கண்கள். ரோஸ் நிறம். சுண்டினால் சிவப்பார். ஒல்லியான உடல்வாகு அந்த சின்னப் பெண்ணை நெடுநெடுவென காட்டியது. பதினேழு வயது. “ஹேய், பார்க்குறதுக்கு மாலாஸ்ரீ மாதிரி இருக்கேடி” என்று தோழிகள் ஏற்றிவிட்டதால் எந்நேரமும் சினிமா கனவு.

பெங்களூர் கல்யாண் நகரைச் சேர்ந்த அந்த பெண்ணின் உண்மைப் பெயரே அதுதானா என்று இன்றுவரை யாருக்கும் தெரியாது. ஆனால், ‘ரேஷ்மா’ பிரபலமானவர்தான். ஒருவேளை அவரை உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.

-ஏனெனில்

அவர் ‘நடித்த’ நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் ஒன்றுகூட ‘யூ’ சான்றிதழ் பெற்றதில்லை. அதனால் அவரை நீங்கள் டிவியிலும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் சென்னைக்கு வந்திருந்தால், நகரெங்கும் ஒட்டப்படும் போஸ்டர்களில் ஒருவேளை இவரைப் பார்த்திருக்கலாம். மாநகரத்தின் நுழைவாயிலிலேயே பரங்கிமலையில் ஒரு தியேட்டர் உண்டு. அப்போதெல்லாம் அந்த தியேட்டரில் வாராவாரம் ரேஷ்மா ரசிகர்கள் அலைமோதுவார்கள். அரங்கம் ஹவுஸ்ஃபுல் ஆகி, நின்றுக்கொண்டே படம் பார்ப்பார்கள். பெரும்பாலும் மலையாளம்தான். சில நேரங்களில் தமிழில் டப்பிங் செய்து போடுவார்கள். இந்தப் படத்துக்கு எல்லாம் மொழியா முக்கியம்? பார்த்தாலே புரியும்.

சினிமா நடிகை ஆகவேண்டும் என்கிற லட்சியம் மட்டும்தான் ரேஷ்மாவுக்கு இருந்தது. ஆவதற்கு என்ன தகுதி வேண்டும், யாரை அணுக வேண்டும் எதுவுமே தெரியாது.

பெங்களூரில் இருந்த பிரபல நடிகர்களின் வீட்டுக்கு முன்பாக போய் நிற்பார். காரில் போகும்போதும், வரும்போதும் யதேச்சையாக பார்த்து, “இந்தப் பெண் அழகாக இருக்கிறாளே, நம்ம படத்தில் ஹீரோயின் ஆக்கிடலாமே?” என்று முடிவெடுப்பார்கள் என நினைப்பு. செக்யூரிட்டிகள், இவரை விரட்டி விரட்டி அடிப்பார்கள்.

அடுத்து சில சினிமா கம்பெனிகளின் முகவரியை எப்படியோ பெற்று, ஒவ்வொரு அலுவலகமாக படியேறி இறங்கினார். சினிமாவின் இன்னொரு முகம் தெரிந்தது.

யாரோ பரிதாபப்பட்டு சொன்னார்கள்.

“இங்கெல்லாம் உனக்கு சான்ஸே கிடைக்காது. நடிக்க வைக்கிறேன்னு சொல்லி, அதைத் தவிர்த்து எல்லாத்துக்கும் யூஸ் பண்ணிப்பானுங்க. மைசூர்லே நிறைய சூட்டிங் நடக்கும். அங்கே போய் ட்ரை பண்ணு. துணை நடிகையாவாவது நடிக்கலாம்”

மைசூரில்தான் அப்போதெல்லாம் நிறைய தமிழ்ப்படங்களின் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்தது. படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குப் போய் வேடிக்கை பார்ப்பார். படப்பிடிப்புக் குழுவில் இருக்கும் யாரைப் பார்த்தாலும், “அண்ணா, நான் நல்லா நடிப்பேண்ணா. உங்க படத்துலே நடிக்கை வைங்கண்ணா” என்று கெஞ்சுவார்.

குறைந்தது ஐநூறு பேரிடமாவது கெஞ்சி இருப்பார். சில பேர் திட்டி அனுப்பி விடுவார்கள். சில பேர் ஜொள்ளு விடுவார்கள். சிலர் வேறு நோக்கத்துக்காக அழைப்பார்கள்.

ஆனால்-

ஒரே ஒரு படத்தில் கூட கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் வாய்ப்பு கூட ரேஷ்மாவுக்கு கிடைத்ததே இல்லை.

ஒருநாள். ஏதோ மலையாள சினிமா படப்பிடிப்பு. மலையாளத்தின் பெரிய நடிகர் நடித்துக் கொண்டிருந்தார். கக்கத்தில் பையை அமுக்கிக் கொண்டு துணை நடிகர்களை அதிகாரமாக ஆணையிட்டுக் கொண்டிருந்த ஒருவனைப் பார்த்தார் ரேஷ்மா. வழக்கமாக எல்லாரிடமும் கேட்பதைப் போல அவனிடமும் வாய்ப்பை கேட்டார். ஏற இறங்கப் பார்த்தான். கண்களில் திருட்டுத்தனம் டாலடித்தது.

“இந்தப் படத்துலே சான்ஸ் இல்லை. ஆனா வேற ஒரு படத்துக்கு ஹீரோயின் தேவைப்படுது. கேரளாவிலே ஷூட்டிங். அஞ்சே அஞ்சு நாள் நடிச்சிக் கொடுத்தா போதும்”

விவரம் புரியாத ரேஷ்மா, “ரொம்ப தேங்க்ஸ் அண்ணா” என்று நன்றியுணர்ச்சியில் நா தழுதழுத்தார்.

“இனிமே அண்ணான்னு கூப்பிடாத. மாமான்னு கூப்பிடணும். நைட்டு வந்து பாரு” சொன்னவன், தான் தங்கியிருந்த லாட்ஜ் முகவரியை எழுதிக் கொடுத்தான்.

ரேஷ்மா, மீள முடியாத புதைகுழியில் விழுந்த நாள் அதுதான்.

அவன் சொன்ன படத்துக்காக கேரளா போனார். ஐந்து நாட்கள் கால்ஷீட். ஆனால், மூன்றே நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்துவிட்டார்கள். கேமிராமேன், டைரக்டர் என்றெல்லாம் ஒரு படத்துக்கு தேவையான அத்தனை பேரும் இருந்தார்கள். ஆனால் காஸ்ட்யூமருக்கு மட்டும் வேலையே இல்லை.

முதல் நாள் நடிக்கும்போது ரேஷ்மாவுக்கு அழுகையாக வந்தது. மறுநாளில் இருந்து சகஜமானார். முழுக்க நனைந்தபிறகு முக்காடு போடுவது முட்டாள்தனம் அல்லவா?

தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் பரமதிருப்தி. சம்பளத்தை கவரில் கொடுத்தார்கள். பிரித்துப் பார்த்தார். ஒரு லட்ச ரூபாய். இதுவரை ரேஷ்மா, கனவில் கூட நினைத்துப் பார்த்திராத தொகை. “சினிமாவில் நடிச்சா நிறைய காசு கிடைக்கும்னு தெரியும். இவ்வளவு காசா?” என்று வாய் பிளந்தார்.

“ஷகீலா மாதிரி பெரிய நடிகையா வருவேம்மா. மாசத்துக்கு ரெண்டு படமாவது எடுப்பேன். ஷூட்டிங் இருந்தா போன் பண்ணுறேன். வந்துடு” என்று ஆசிர்வதித்தார் தயாரிப்பாளர்.

அன்றிலிருந்து அடுத்த சில வருடங்களுக்கு ரேஷ்மா, படப்பிடிப்பிலேயே பிஸியாக இருந்தார். ஷகிலாவோடு இணைந்து இவர் நடித்த பல படங்கள் வசூலில் சக்கைப்போடு போட்டன. ஷகிலா, சிந்து, ஜோதிஸ்ரீ என்று இத்துறையில் முன்னணியில் இருந்த நடிகைகளோடு இணைந்து ரேஷ்மா நடித்த ‘சிலகம்மா’ ப்ளாக்பஸ்டர் ஹிட். ஆனால், தான் நடித்த ஒரு படத்தை கூட ரேஷ்மா தியேட்டருக்கு போய் பார்த்ததே இல்லை.

திடீரென்று ஒரு நாள் ரேஷ்மாவுக்கு படப்பிடிப்பே இல்லை. மறுநாள் போன் வரும் என்று காத்திருந்தவருக்கு ஏமாற்றம். அதன்பிறகு அவரை நடிக்க யாருமே கூப்பிடவில்லை. மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள், ‘இந்த’ மாதிரி படங்களால், தாங்கள் நடிக்கும் படங்கள் ஓடுவதில்லை என்று பிரச்சினை செய்ததால், ‘அந்த’ மாதிரி படங்கள் எடுப்பது முற்றிலுமாக நின்றுவிட்டது.

ஆறேழு ஆண்டுகள் கழிந்தன. 2007ஆம் ஆண்டு. கொச்சின் புறநகர்ப் பகுதியான காக்கநாட்டில் இருந்த ஓர் அப்பார்ட்மெண்டில் ரேஷ்மாவும், கூட சிலரும் கைது செய்யப்பட்டார்கள். பொது இடத்தில் பாலுறவுக்கு வற்புறுத்தி மற்றவர்களை அழைத்தது உள்ளிட்ட பிரிவுகளில் ரேஷ்மா மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. அப்போது அவர் மீது நடந்த காவல்துறை விசாரணையே மிக அசிங்கமாக இருந்ததாக, ஒரு வீடியோ இணையத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. கோர்ட்டில் பெயில் வாங்கிக் கொண்டு பெங்களூருக்கு போனவர்தான்.

இன்றுவரை ரேஷ்மா எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. உயிரோடு இருக்கிறாரா என்றும் தெரியாது. அவர் தலைமறைவான போது அவருக்கு வயது இருபத்தைந்துக்குள்தான் இருக்கும்.

கலைத்துறையில் ஈடுபடவேண்டும் என்கிற ஆசை யாருக்கு வேண்டுமானால் வரலாம். ஆனால்- முறையான பயிற்சியோ, சரியான வழிகாட்டுதலோ, போதுமான பாதுகாப்புப் பின்னணியோ இல்லாதவர்கள் என்ன ஆவார்கள் என்பதற்கு ரேஷ்மாவின் வாழ்க்கையே பாடம்.

(நன்றி : தினகரன் வசந்தம்)

1 ஜூலை, 2015

டிஜிட்டல் நார்சிஸம்

புராதன கிரேக்க கதைகளில் வரும் ஒரு கதாபாத்திரம் நார்சிசஸ். தண்ணீரில் தெரியும் தனது பிரதிபலிப்பையே காதலிப்பான் என்பது மாதிரி கேரக்டர் ஸ்கெட்ச். இவனை முன்வைத்துதான் சிக்மண்ட் ப்ராய்ட் ‘நார்சிஸம்’ என்கிற உளவியல் கோட்பாட்டினை முன்வைக்கிறார்.

வெட்கமே இல்லாமல் எதிலும் தன்னையே முன்னிலைப்படுத்தி பேசுவதும், சிந்திப்பதுமான நிலையை ‘நார்சிஸம்’ என்கிற மனரீதியான பிரச்சினையாக சொல்கிறார்கள் மனநிலை ஆய்வாளர்கள்.

சுற்றி வளைத்துச் சொல்வானேன். எப்போது பார்த்தாலும் உங்கள் ஸ்மார்ட்போனில் செல்ஃபீ எடுத்து ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்து, எத்தனை லைக்கு, என்னென்ன கமெண்டு என்று வெட்டியாக பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறீர்களா?

நீங்கள் ஒரு நார்சிஸ்டாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

கூகிளில் இமேஜஸ் தேடினால் சமீபமாக செல்ஃபீ படங்கள்தான் அதிகம் தட்டுப்படுகின்றன. செல்ஃபீ என்றால் தன்னைத்தானே படமெடுத்துக் கொள்வது என்றெல்லாம் ஏ, பி, சி, டி-யில் இருந்து உங்களுக்கு சொல்லித்தர வேண்டிய அவசியமில்லைதானே?

சாமானியர்கள் பிரபலங்கள் வித்தியாசமில்லாமல் எல்லோரும் தங்களை தாங்களே படம் எடுத்துக் கொண்டு, பெருமையாக அதை மற்றவர்களிடம் பகிரும் போக்கினை ‘டிஜிட்டல் நார்சிஸம்’ என்று புதுப்பெயர் சூட்டி அழைக்கிறார்கள். ‘ஸ்ட்’-டில் முடித்தால் ஏதோ கம்யூனிஸ்ட், பெரியாரிஸ்ட் மாதிரி கவுரவமாக இருந்துத் தொலைக்கிறது. இந்த டிஜிட்டல் நார்சிஸ்ட்டுகளை டிஜிட்டல் பைத்தியங்கள் என்று அழைப்பதே முறை.

தொண்ணூறுகள் வரை ஊடகங்கள் ஏதோ தேவலோகத்தில் இருந்து இயங்கிக் கொண்டிருப்பதான தோற்றம் மக்களுக்கு இருந்தது. ஊடகங்களில் இடம்பெறும் பிரபலங்கள், சாமானியர்களால் அணுக முடியாத தேவதூதர்களாக இருந்தார்கள்.

தொலைக்காட்சித் துறையின் வளர்ச்சி காரணமாக புதிய சிந்தனைகளுக்கான, வடிவங்களுக்கான தேவை பெருகியது. தொலைக்காட்சி பெட்டிக்கு முன்பாக ஆணியடித்து செட்டில் ஆகிவிட்டவர்களுக்கு இருபத்து நான்கு மணி நேரமும் நுகர்வுப் பசியெடுத்துக் கொண்டே இருந்தது. அவர்களை திருப்திபடுத்த ரியாலிட்டி ஷோக்கள் அறிமுகப்படுத்தப் பட்டன.

தேவதூதர்கள் பூமிக்கு வந்து தரையில் கால்பதித்து சாமானியர்களோடு பேசினார்கள். சாமானியர்களுக்கும், பிரபலங்களுக்குமான இடைவெளி குறைந்தது. ஒரு பிரபலத்தை பற்றி, அந்த பிரபலத்துக்கே தெரியாத செய்திகளை எல்லாம் சாமானியன் தெரிந்து வைத்துக் கொண்டான். அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களின் நீட்சியாக இணையம், இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டு, மில்லெனியம் ஆண்டுகளில் மகத்தான ஊடகமாக உருவெடுக்கிறது.
மரபு ஊடகங்களை முறையான பயிற்சி பெற்ற ஊடகவியலாளர்கள்தான் நடத்த முடியும். மாறாக நவீன ஊடகமான இணையம் பெரும்பாலும் சாமானியர்களை சார்ந்திருக்கிறது. ஈமெயிலில் தொடங்கி சமூகவலைத்தளங்கள் வரை அவர்களது ஆதிக்கம்தான். இணைய ஊடகத்தில் இயங்க விரும்பும் பிரபலங்கள், சாமானியர்களை தாஜா செய்துதான் தங்களை புரமோட் செய்துக்கொள்ள முடிகிறது. லைக்குகள் மற்றும் ரீட்விட்டுகளின் எண்ணிக்கைதான் அந்த பிரபலத்தின் பிரபல அளவை அளவிட உதவுகிறது.

இதற்கிடையே செல்போன் என்கிற தகவல் தொடர்பு சாதனம் வருகிறது. ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள என்கிற நிலை மாறி இது கேமிராவாகவும் செயல்படுகிறது. போட்டோ எடுப்பது மட்டுமின்றி இதில் வீடியோவும் எடுக்கலாம். செல்போனும், இணையமும் இணைந்த புள்ளிதான் முக்கியமானது.

தான் எடுத்த போட்டோவையோ, வீடியோவையே ஃபேஸ்புக்கில் பதிந்து அதை உலகின் அடுத்த மூலையில் இருப்பவனுக்கும் காட்ட முடிகிறது என்கிற ‘அதிகாரம்’ சாமானியனுக்கு கிடைக்கிறது. தானும் பிரபலம்தான் என்கிற எண்ணம் அவனுக்குள் இப்போது வேரூன்றுகிறது.

குஷ்பூவே ட்விட்டரில் தனக்கு நன்றி சொல்லிவிட்டார் என்று பக்கத்து வீட்டுக்காரனை கேவலமாக பார்க்க ஆரம்பிக்கிறான். “கலைஞரும், நானும் ஃபேஸ்புக்குலே ப்ரெண்ட்ஸ், தெரியுமா?” என்று பெருமை பேச ஆரம்பிக்கிறான்.

கருத்துக் களங்களும், வலைப்பூக்களும், சமூக வலைத்தளங்களுமாக இணையமெங்கும் திறந்து வைக்கப்பட்டிருக்கும் ஓராயிரம் வாசல்களில் கன்னாபின்னாவென்று நுழைந்து விளையாடுகிறான். நூறு லைக்கும், முப்பது கமெண்டும் பெற்றுவிட்ட பிறகு அவனாகவே ‘கெத்து’ என்று நினைத்துக் கொள்கிறான்.

‘நான்’, ‘என்’, ‘எனக்கு’, ‘என்னுடைய’, ‘என் வீடு’, ‘என் அறை’, ‘என் பைக்’ ‘என் கார்’ என்று பர்ஸ்ட் பர்சனிலேயே பேச ஆரம்பிக்கிறான். எந்நேரமும் தன்னை தானே படமெடுத்து ஃபேஸ்புக்கில் போடுகிறான். ‘நைஸ்’, ‘பியூட்டிஃபுல்’ ‘ஹேண்ட்ஸம்’ ‘அழகு’ கமெண்டுகளுக்காக ஒற்றைக்காலில் தவம் கிடக்கிறான்.

போதுமான வாசிப்போ, புரிதலோ இன்றி தத்துவங்கள் பேச ஆரம்பிக்கிறான். உலகின் சர்வ பிரச்சினைகளுக்கும் தன் சிந்தனைகளில் தீர்வு(!) காண்கிறான். ‘நான் என்ன சொல்கிறேன் என்றால்...’ ‘இந்தப் பிரச்சினையை நான் எப்படி பார்க்கிறேன் என்றால்...’ ‘குப்பையாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை நான் எடுத்திருந்தேன் என்றால்...’ ‘ என்று அவனது ஈகோ, நார்சிஸத்தின் உச்சத்தை எட்டுகிறது.
வேண்டுதல் மாதிரி இவனை ஏற்றிவிடவே நூறு பைத்தியங்களாவது இணையத்தில் திரிகின்றன. ‘சாட்டையடி சகோதரி’ ‘பின்னி பெடல் எடுத்து விட்டீர்கள் நண்பா’, ‘அருமையான சிந்தனை, ஆழ்ந்த கருத்து’ மாதிரி ஓராயிரம் ஒன்லைனர் புகழாரங்களை ஒரு வேர்ட் ஃபைலில் சேமித்து வைத்துக் கொண்டு, ஆங்காங்கே ஆணி மாதிரி காபி & பேஸ்ட் அடித்துவிட்டுச் செல்வார்கள்.

இவர்களுக்கு என்ன லாபம்?

மொய் மாதிரிதான். பதிலுக்கு இவனுடைய நார்சிஸ ஸ்டேட்டஸ்களுக்கு அவர்கள் வந்து லைக் போட்டு, ‘பிரித்து மேய்ந்துவிட்டீர்கள்’ கமெண்டு போட வேண்டாமா?

இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் லாகின் செய்து சந்தோஷமாக மேய முடிந்தால், சந்தேகமே இல்லை. சத்தியமாக நாம் மெண்டல்தான்.

நாம் வாழும் உலகமே மாபெரும் மூடர்கூடமோ என்கிற சந்தேகத்தை இணையம் ஏற்படுத்துகிறது.

(நன்றி : தினகரன் வசந்தம்)