‘சம்பவாமி யுகே யுகே’ நாடகம் நடக்கிறது.
நாடகத்தின் இடைவேளையில் திடீரென முதல்வர் காமராஜர்
அரங்குக்கு வருகிறார். அவரை சோ அழைக்கவில்லை. நாடகம் நடத்திய சபா, சிறப்பு
விருந்தினராக அழைத்திருந்தது.
நாடகத்தைப் பாராட்டி ஜெமினி கணேசன் மேடையில் பேசுகிறார்.
“அருமையான இந்த நாடகத்தை மேடையேற்ற அரசு அதிகாரிகள் லைசென்ஸ் மறுத்ததாக சோ
சொல்கிறார்” என்று ஜெமினி பேச, காமராஜருக்கு ‘கெதக்’கென்று ஆனது. (அப்போதெல்லாம்
ரேடியோ வைத்திருக்கவே லைசென்சு வேண்டும்).
சோவிடம் விவரம் கேட்கிறார். மத்திய மாநில அரசுகளை
விமர்சித்து சில வசனங்கள் நாடகத்தில் இடம் பெற்றிருந்ததாகவும், ஸ்க்ரிப்டை வாசித்த
அரசு அதிகாரிகள் லைசென்ஸ் வழங்க மறுத்ததாகவும் சொன்னார். இதையடுத்து
காமராஜருக்கும், சோவுக்கும் விவாதம் வலுக்கிறது.
“பொறுப்பில்லாமே கண்டதையும் எழுதினா எவன் லைசென்சு
கொடுப்பாண்ணேன்?”
“இப்போ கொடுத்திருக்கீங்களே? மேடை ஏத்திட்டேனே? அப்படின்னா
யார் பொறுப்பில்லாதவா?”
“வண்டி ஓட்ட லைசென்சு கொடுக்கிறதுங்கிறது, உங்களுக்கு ஓட்டத்
தெரியும்னுதான். அந்த வண்டியை எடுத்துட்டுப் போய் எவன் மேலேயோ மோதி விபரீதம் ஆயிடிச்சின்னா
அதுக்கு லைசென்ஸ் கொடுத்தவனா பொறுப்பு?”
“எனக்கு ஓட்டத் தெரியுமா தெரியாதான்னு நீங்களே இருந்து
பார்த்திருந்தாதானே தெரியும். பாதியிலே வந்துட்டு இப்படி பேசுறது சரியா?”
இதைத் தொடர்ந்து காமராஜர் கோபமாக கிளம்புகிறார். நாடகத்தை நடத்தும்
சபாவினருக்கு தர்மசங்கடம். நாடகம் பார்க்க வந்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி. நாட்டின்
முதல்வரையே ஒரு சின்னப்பையன் எதிர்த்து, மரியாதை இல்லாமல் பேசுவதா என்று. அதே
நேரம், இந்த சம்பவம்தான் சோவை துணிச்சல் மிக்கவராகவும், கறாரான அரசியல்
விமர்சகராகவும் பிரபலப்படுத்தியது.
சோவின் தந்தையார் காமராஜர் மீது பெரும் மதிப்பு
வைத்திருந்தவர். எனவே, காமராஜரிடம் மன்னிப்பு கேட்காமல் வீட்டுக்கு வந்தால்
சேர்க்க மாட்டேன் என்று கூறிவிட்டார். சோ, பணிபுரிந்த அலுவலகமான டி.டி.கே.வும்
இதேரீதியான நிபந்தனையை விதித்திருந்தது.
பிற்பாடு காமராஜரை பார்த்து தன்னிலை விளக்கம் சொல்ல சோ
முயற்சிக்கிறார்.
“அதெல்லாம் எதுக்குங்குறேன்? அப்படி இல்லைன்னா நீங்க சோவே
இல்லைங்கறேன்” என்று தன் பெருந்தன்மையை காமராஜர் காண்பித்தார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு ‘சோ பேசுகிறார்’ என்று
தமிழகத்தில் பல பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, பரபரப்பான பேச்சாளராகிறார்.
அவ்வகையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒருமுறை பேசவேண்டியிருக்கிறது.
பார்ப்பனீயச் சிந்தனைகளின் மொத்த உருவம் சோ. அண்ணாமலைப்
பல்கலைக்கழக மாணவர்களிடமோ அப்போது திராவிட சுயமரியாதை இயக்கக் கருத்துகள் நாடி,
நரம்பெல்லாம் ஓடிக்கொண்டிருந்தன.
சோ பேசப்பேச மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பு. எழுந்து
ஒருமையில் கோஷமிடத் தொடங்கினார்கள்.
“இப்படியெல்லாம் மேடையிலே பேச உனக்கு வெட்கமா இல்லையாடா?”
என்று ஒரு மாணவர் சூடாக கேட்டார்.
“பேசுறது என்னடா... தைரியமா எழுதக்கூட செய்வேன்” என்று
பதிலடி கொடுத்தார் சோ.
“நீ எழுதுனா எந்த பத்திரிகை பிரசுரிப்பான்? எவன் படிப்பான்?”
மாணவர்களின் பதிலடி.
“எவனும் பிரசுரிக்கலேன்னா நானே பத்திரிகை ஆரம்பிச்சி
எழுதறேன். எவனும் படிக்கலேன்னா நானே அதை படிச்சிக்கறேன்”
அடுத்த சில நாட்களில் ‘தி ஹிந்து’ பத்திரிகையில், “நான்
பத்திரிகை தொடங்கலாமா?” என்றொரு விளம்பரத்தை தமிழிலேயே கொடுத்தார். அதுதான் அந்த ஆங்கில
நாளிதழில் வெளிவந்த முதல் தமிழ் விளம்பரம் என்கிறார்கள். அந்த விளம்பரத்தை கண்டு
பத்தாயிரம் பேர் ‘தொடங்குங்கள்’ என்று சோவுக்கு கடிதம் எழுதினார்களாம் (அதென்ன
‘பத்தாயிரம்’ கணக்கு என்று தெரியாது. ‘முகம்மது பின் துக்ளக்’ படத்துக்கு சென்சார்
பிரச்சினை வந்தபோதும் ‘பத்தாயிரம்’ பேர் தந்தி அனுப்பியதாக சொல்வார்).
ஆனால்-
ஆனால்-
பத்திரிகை நடத்துமளவுக்கு தனக்கு பொருளாதார பலமில்லை என்று
சோ தயங்கிக் கொண்டிருந்தபோது, விகடன் நிறுவனம் அவரை தொடர்பு கொண்டு தங்கள் brandக்கு
தொடர்பில்லாத வகையில், ஆனால் பின்னணியில் இருந்து ‘துக்ளக்’ தொடங்க
உதவியிருக்கிறார்கள்.
‘ஆறு மாதத்தில் தொடங்கிவிடலாம்’ என்று விகடன் சொன்னபோது, “முடியாது.
பதினைந்தே நாளில் ‘துக்ளக்’ வந்தாக வேண்டும். இல்லையேல் பத்திரிகையே வேண்டாம்”
என்றாராம் சோ.
1970, ஜனவரி 14 அன்று ‘துக்ளக்’ முதல் இதழ் வெளிவந்தது.
எண்பதுகளின் இறுதியில் ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழுக்காக சோவை
எஸ்.எஸ்.சந்திரன் எடுத்த பேட்டியில் இந்த விவரங்கள் விரிவாக உள்ளன.
ஆனால்-
சோ இதே கதையை வேறு வேறு வடிவங்களில் வேறு வேறு இடங்களில்
சொல்லியிருக்கிறார். அல்லது எழுதியிருக்கிறார். ‘அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்’
தொடரில் நண்பர்களிடம் கட்டிய ஐந்து ரூபாய் பெட்டுக்காக தொடங்கப்பட்ட பத்திரிகை ‘துக்ளக்’
என்று சொல்லியிருப்பார். தொடர்ச்சியாக வாசிக்காததால் ‘குமுதம்’ தொடரில் என்னவென்று
எழுதியிருக்கிறார் என்று தெரியவில்லை. நூலாக வெளிவந்த பின்தான் வாசிக்க வேண்டும்.