7 அக்டோபர், 2015

நேரு குடும்பத்தின் நயன்தாரா

மோடி அரசின் செயல்பாடுகளை கண்டித்து தான் பெற்ற சாகித்திய அகாதெமி விருதினை திருப்பியளிப்பதன் மூலம் இப்போது ஊடகங்களின் மஞ்சள் வெளிச்சத்துக்கு வந்திருப்பவர் எழுத்தாளர் நயன்தாரா சாஹல். இவரைக் குறித்த இந்த அறிமுகக் கட்டுரை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ‘தினகரன் வசந்தம்’ இதழில் வெளியானது.
நயன்தாராவின் கதைகளில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலும் இந்திய உயர்வர்க்கத்தின் ஆண்களும், பெண்களும்தான். அவரால் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்து மனிதர்களையோ, ஏழைகளையோ, சாதிய பாகுபாடுகளால் ஒடுக்கப்பட்டவர்களையோ கதைகளாக்க முடியவில்லை. ஏனெனில் அவர்களோடு அவர் பழகியதே இல்லை. இதை அவர் மீதான விமர்சனமாக நிறைய விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள். ஆனால், இந்திய அரசியல் அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளையும், தன்மைகளையும் இவரளவுக்கு நேர்மையாக எழுத்தில் முன்வைத்தவர் வேறு யாருமில்லை.

“நான் ஒரு நாவலாசிரியர் மட்டுமல்ல. அரசியல் செய்திகளை எழுதக்கூடிய பத்திரிகையாளரும் கூட. நான் திட்டமிட்டு அரசியல் பின்னணியை எழுத்தில் கொண்டு வருவதில்லை. நான் வாழ்வில் சந்தித்த மனிதர்களும், சம்பவங்களும் அரசியல் தொடர்பானவை மட்டுமே. அவற்றை மட்டுமே எனக்கு எழுதத் தெரிந்திருக்கிறது” என்று தன் எழுத்துகளை குறித்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கிறார் நயன்தாரா சாஹல்.

இந்தியாவின் நெம்பர் ஒன் அரசியல் குடும்பத்தில் பிறந்தவர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு இவருடைய தாய்மாமன். ஐக்கிய நாடுகள் சபைக்கு சுதந்திர இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட முதல் தூதரான விஜயலஷ்மி பண்டிட்தான் அம்மா. இந்திராகாந்திக்கு அத்தை மகள். பிறந்து வளர்ந்ததெல்லாம் அலகாபாத்தில் இருக்கும் நேருவின் பாரம்பரிய பரம்பரை வீடான ஆனந்தபவனத்தில்தான். இவரது எழுத்துகளில் அரசியலும், வரலாறும் கலந்திருப்பதில் ஆச்சரியமென்ன?

அப்பா ரஞ்சித் சீத்தாராம் பண்டிட் அந்த காலத்தில் பிரபலமான வக்கீல். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வரலாற்றுக் காவியமான ராஜதரங்கிணியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் இவர்தான். நேரு குடும்பம் ஆயிற்றே. அடிக்கடி சுதந்திரப் போராட்டங்களில் கலந்துக்கொண்டு சிறை செல்ல வேண்டியிருக்கும். அம்மாதிரி சிறைப்பட்டிருந்த ஒரு நேரத்தில் திடீரென மரணமடைந்தார். அப்போது நயன்தாராவுக்கு வயது பதினேழுதான். ஒரு அக்காவும், ஒரு தங்கையும் இருந்தார்கள். நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முந்தைய பத்து, பதினைந்து ஆண்டுகள் நேரு குடும்பத்துக்கு சோதனையானவை. கிட்டத்தட்ட எல்லோருமே சிறைக்கு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக போய்விட்டு வருவார்கள். எனவே குழந்தைகளாக இருந்தவர்கள் அவர்களாகவே வளர்ந்தார்கள். பள்ளி, கல்லூரி படிப்பெல்லாம் வெளியூர்களில்தான்.

மேற்கத்திய பாணி குடும்ப வாழ்க்கையை பின்பற்றும் நேரு குடும்பத்தில் பிறந்ததால் நுனிநாக்கு ஆங்கிலமும், ஐரோப்பிய நடை உடை பாவனைகளுமாக ஸ்டைலாக வலம் வந்தார் நயன்தாரா. இந்திய சமூக மரபில் பெண்கள் பலியாடுகளாய் வளர்க்கப்படுவதை வெறுத்தார். பெண்களுக்கான தனித்த அடையாளத்தை தர ஆண்கள் மறுப்பதாய் நினைத்தார். அவருடைய இளமைக் காலத்தில் ஐரோப்பாவில் தொடங்கிய பெண்ணிய சிந்தனை போக்கு இவருக்குள் ஆழமாக ஊடுருவியது. இதனாலேயே என்னவோ திருமண வாழ்க்கை தடுமாற்றம் கண்டது. இரண்டு விவாகரத்துகளுக்கு பிறகு மூன்றாவதாக அந்தகால ஐ.சி.எஸ் (இன்றைய ஐ.ஏ.எஸ் மாதிரி) அதிகாரியான மங்கத்ராயை மணந்தபிறகுதான் வாழ்க்கை சமநிலைக்கு வந்தது.

அரசியல் மட்டத்தில் இவருக்கும், இவருடைய தாயாருக்கும் இருந்த செல்வாக்கை சொந்த மாமன் மகளான இந்திராகாந்தி பிரதமர் ஆனதும் அடித்து நொறுக்கினார். இத்தாலிக்கான இந்திய தூதராக நயன்தாரா நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பதவியேற்பதற்கு முன்பாகவே அந்த ஆணையை திரும்பப் பெற்றார் புதியதாக பதவிக்கு வந்திருந்த இந்திராகாந்தி. இவ்வாறாக நேருவின் தங்கை குடும்பம் இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு முடிவுக்கு வந்தது. இந்திராவின் அதிரடி வளர்ச்சியை உண்மையில் யாருமே யூகிக்க முடியவில்லை. நேருவின் மரணத்துக்குப் பிறகு அதிரடியாய் மிகக்குறுகிய காலத்தில் காங்கிரஸையும், இந்தியாவையும் அவர் கைப்பற்றிய கதையை பிற்பாடு ‘இந்திராகாந்தி, எமர்ஜென்ஸ் அண்ட் ஸ்டைல்’, என்று என்று நூலாய் எழுதினார். தன் மாமன் மகளை எட்ட நின்று பார்வையாளராய் ஆச்சரியமாய் அவர் பார்த்த அனுபவங்கள்தான் அந்த நூல். இதையே கொஞ்சம் பிற்பாடு புனைவு பாணியில் ‘இந்திராகாந்தி : ஹெர் ரோட் டூ பவர்’ என்று நாவலாகவும் எழுதி வெளியிட்டார். இந்திரா முதன்முதலாக ஆட்சியை இழந்த நேரத்தில் முதல் நூல் வெளிவந்தது. நாவல் வெளிவரும்போது மீண்டும் அவர் ஆட்சியை கைப்பற்றியிருந்தார். எனவே இரண்டு நூல்களும் எத்தகைய பரபரப்பை அந்த காலத்தில் ஏற்படுத்தியிருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

அரசியலும் வரலாறும்தான் ஆர்வம் என்றாலும் புனைவு மீது அலாதி ப்ரியம் கொண்டவர் நயன்தாரா. தன் குடும்பத்தின் சிறை நினைவுகளை ‘ப்ரிஸன் அண்ட் சாக்லேட் கேக்’ என்று 1954ல் அவர் எழுதிய நினைவலைகள், ஆங்கில இலக்கிய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக அவருக்கு அரசியல் அலசல் கட்டுரைகளையும், நூல்களையும் எழுததான் வாய்ப்புகள் நிறைய கிடைத்தது. ஒரு கட்டத்தில் இந்த நான்ஃபிக்‌ஷன் உலகில் இருந்து வெளிவரவேண்டும் என்கிற வேட்கையோடு தொடர்ச்சியாக நாவல்கள் எழுத ஆரம்பித்தார். இந்திய மேல்தட்டு வர்க்கம் குறித்த சித்திரம் மிக துல்லியமாக இவரது கதைகளில் இடம்பெற்றது. உலகளவில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பெண் எழுத்தாளர்களுக்கே சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அவர்களில் நயன்தாராவும் ஒருவர்.

இவரது எழுத்துகளில் சம்பவங்களும், பாத்திரங்களும் வேண்டுமானால் மேல்தட்டு வர்க்கத்தை சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் அந்த வர்க்கத்திலும் கூட பெண்கள் மீதான ஒடுக்குமுறை இருப்பதை துணிச்சலாக விமர்சித்தார். பெண்களுக்கான சுதந்திரம் குறித்த உரிமைக்குரலை தொடர்ச்சியாக பதிவு செய்து வந்திருக்கிறார். கடைசியாக அவர் எழுதிய நாவலில் கூட இந்திய பெண்கள் எப்படி உன்னதமான உயரத்தை எட்டக்கூடிய சாத்தியங்கள் இருக்கிறது என்கிற விவாதமே பிரதானமாக இருந்திருக்கிறது. எட்டு நாவல்கள், ஏராளமான சிறுகதைகள் (இவை தொகுப்பாக வந்ததாக தெரியவில்லை), அரசியல் விமர்சன கட்டுரைகள் உள்ளிட்ட அபுனைவு நூல்கள் ஒன்பது என்கிற எண்ணிக்கைகளில் இவரது எழுத்துகள் நூலாக அச்சாகியிருக்கின்றன.

அரசியலில் இருந்து திட்டமிடப்பட்டு இவர் வெளியேற்றப் பட்டிருந்தாலும் இந்தியாவின் பல உயரங்களை இவர் தொடமுடிந்திருக்கிறது. 1972ல் இருந்து 75 வரை சாகித்ய அகாதெமியின் (ஆங்கில இலக்கியப் பிரிவு) ஆலோசகராக பதவி வகித்தார். இந்திய ரேடியோ மற்றும் டிவிக்கான வர்கீஸ் கமிட்டியின் உறுப்பினராக 77-78 ஆண்டுகளில் இருந்தார். ஐக்கிய நாடுகள் பொதுசபையின் இந்திய பிரதிநிதியாக செயல்பட்டிருக்கிறார். குடிமக்கள் உரிமைகளுக்கான யூனியன் அமைப்பில் துணைத்தலைவராக பணிபுரிந்திருக்கிறார்.

1985ல் இங்கிலாந்தின் புனைவுக்கான சிங்க்லேர் விருது, 1986ல் சாகித்திய அகாதெமி, 1987ல் காமன்வெல்த் எழுத்தாளர்களுக்கான விருது என்று தேசிய, சர்வதேச விருதுகள் ஏராளம் இவரது வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கிறது. அமெரிக்காவின் லைப்ரரி ஆஃப் காங்கிரஸிலும் இவரது இருபதுக்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

எண்பத்தேழு வயதாகும் நயன்தாரா சாஹல், தற்போது டெஹ்ராடூனில் வசிக்கிறார். பெண்ணியம், அடிப்படைவாதம், இனவாதம் முதலியவற்றை காரசாரமாக விமர்சித்து எழுதும் பத்திரிகையாளரும், ஆவணப்பட இயக்குனரும், மனித உரிமைப் போராளியுமான கீதா சாஹல் இவருடைய மகள்தான்.
இந்த கட்டுரை, சூரியன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘ரைட்டர்ஸ் உலா’ நூலின் ஓர் அத்தியாயமாகவும் இடம்பெற்றிருக்கிறது.

2 கருத்துகள்: