29 டிசம்பர், 2015

நடிகைகளின் கதை (U)

‘நடிகைகளின் கதை’ என்கிற தலைப்பில் தொடர் எழுத வேண்டும் என்று ‘தினகரன் வசந்தம்’ இதழுக்காக கேட்டதுமே சந்தோஷத்தில் விசிலடிக்க ஆரம்பித்தேன். ஏனெனில் அந்த டைட்டிலுக்கு வெகுஜன இதழ்களிலும், வாசகர்கள் மத்தியிலும் இருக்கும் மவுசு அத்தகையது.

புகுந்து விளையாடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் குயிலைப் பிடித்து கூண்டில் அடைத்து கூவச்சொன்ன கதையாக சில நிபந்தனைகளை விதித்தார்கள். அவற்றில் முக்கியமானது நடிகைகள் என்பதால் எங்குமே கொஞ்சம் ‘அப்படி இப்படி’ என்று எல்லை மீறி எழுதிவிடக்கூடாது என்பதுதான். ஒவ்வொரு நடிகையின் வாழ்க்கையிலும் நாம் உணரவேண்டிய படிப்பினை ஒன்றாவது இருக்கும். அதை ஹைலைட் செய்துக் காட்ட வேண்டியதே தொடரின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்கள்.

அசைவத் தலைப்பில் சைவத்தொடரை அசுவாரஸ்யமாகதான் ஆரம்பித்தேன். தொடரின் நான்காவது வாரம் வந்த ஒரு போன்கால் நினைவுகூறத்தக்கது. அரசியல் கட்சியொன்றின் மாநிலப் பொறுப்பில் இருந்தவர் பேசினார். ‘மம்தா மோகன்தாஸ் பற்றி எழுதியிருக்கீங்க. அவங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் எங்க இயக்கம் செய்யும்’. அட, நாம எதிர்ப்பார்க்காத ஏரியாவிலிருந்தெல்லாம் ரெஸ்பான்ஸ் வருதே என்று குஷியானேன். பற்றிக்கொண்டது உற்சாக நெருப்பு. அந்த உற்சாகத்தின் அளவு, நாற்பது வாரங்களுக்கு நீண்டது.

இத்தொடரில் மறக்க முடியாத அத்தியாயம் ஸ்ரீவித்யாவைப் பற்றி எழுதியது. ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தின் டிரெய்லரை பார்த்ததுமே லேசாக மூளைக்குள் பல்பு அடித்தது. எனவே அப்படம் வெளிவருவதற்கு முன்பே ஸ்ரீவித்யாவின் கதையை வாசகர்களுக்கு அறிமுகம் செய்துவிட வேண்டும் என்கிற அக்கறையில் எழுதி வெளியிட்டோம். பரவலான பாராட்டுகளை பெற்ற அத்தியாயம் அது.

இந்திய நடிகைகள், தமிழ் நடிகைகள் என்கிற குறுகிய எல்லை அமைத்துக் கொள்ளாமல் உலகளவில் ஏதோ ஒரு காரணத்துக்காக பேசப்படுகிற நடிகைகள் என்று பலரையும் அறிமுகம் செய்தோம். இப்போது நூலாக்குவதற்காக மொத்தமாக வாசிக்கும்போதுதான் தெரிகிறது, கிட்டத்தட்ட எல்லா நடிகைகளின் கதையையுமே ஏதோ ஒரு சரடு இணைக்கிறது என்று.

தொடராக எழுதத் தொடங்கியதிலிருந்தே வாசகர்களிடமிருந்து கடிதங்கள் வந்துக் கொண்டே இருக்கும். ‘சில்க்கின் கதையை எப்போது எழுதுவீர்கள்?’. எங்களுக்கும் எழுத ஆசைதான். ஆனால் எழுதக்கூடாது என்று விடாப்பிடியாக ஒரு லட்சுமணரேகையை எங்களுக்கு முன்பாக வரைந்துக் கொண்டோம். ஏனெனில் சில்க்கின் கதையை அறியாத தமிழரே இருக்க முடியாது. பல்வேறு கட்டுரைகளாகவும், புத்தகங்களாகவும் வந்த கதை அவருடையது. அதுவுமில்லாமல் ‘நடிகைகளின் கதை’யில் சில்க் என்பது க்ளிஷேவான விஷயமாக இருக்கும் என்கிற தயக்கமும் இருந்தது. எனினும் சில்க்கை தவிர்க்க முடியுமா என்ன. ஃபிலிம்பேர் இதழில் (1984 டிசம்பர்) தன் திரையுலக வாழ்வின் உச்சத்தில் இருந்தபோது சில்க் கொடுத்திருந்த நேர்காணலை அப்படியே தமிழாக்கம் செய்து கடைசி அத்தியாயமாக கொடுத்தோம். அரிதான அந்த பேட்டி சில்க்கின் ஆளுமையை வாசகர்கள் யூகித்துக்கொள்ள வழிவகுக்கும்.

இந்நூல் அச்சுக்கு செல்ல தயாராகும் நேரத்தில் இன்னொரு இனிய திருப்பம். ஷகிலா, ‘தினகரன் வெள்ளிமலர்’ இதழுக்காக நேர்காணல் தர ஒப்புக்கொண்டார். ‘ஷகிலா பேசுகிறேன்’ என்கிற தலைப்பில் வெளியான அந்த நேர்காணல், திரைக்குப் பின்னான ஷகிலாவை அச்சு அசலாக வாசகர்களிடம் கொண்டு சேர்த்தது. ஷகிலா குறித்த பல கற்பிதங்களை உடைத்திருக்கும் அந்த பேட்டியையே இந்நூலின் முதல் அத்தியாயமாக சேர்த்திருக்கிறோம்.

இந்த நூலின் தலைப்பில் வேண்டுமானால் ‘கதை’ இருக்கலாம். ஆனால் இங்கே விவரிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் நூறு சதம் நிஜம்.

- ‘நடிகைகளின் கதை’ நூலின் முன்னுரை

வண்ணத்திரையில் நான் கண்ட முதல் நாயகியான ஸ்ரீதேவிக்கு இந்நூல் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

பக்கங்கள் : 192  விலை : ரூ.150/-
வெளியீடு : சூரியன் பதிப்பகம்
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர்,
சென்னை - 600 004. போன் : 42209191 Extn : 21125
Email : kalbooks@dinakaran.com

19 டிசம்பர், 2015

மீட்பர்

இன்று காலை காபியோடு தினத்தந்தியை பருகிக் கொண்டிருந்தபோது ‘சன் லைஃப்’ மியூசிக் சானலில் ‘பூங்காற்று’ நிகழ்ச்சி வரவேற்பரையை நிறைத்துக் கொண்டிருந்தது.

‘பாண்டி நாட்டுத் தங்கம்’ படத்திலிருந்து ‘சிறு கூட்டுலே’ பாட்டு. வாசித்துக் கொண்டிருந்த செய்திகள் மறந்து மனசு வேறெங்கோ பறக்க ஆரம்பித்தது. அடுத்து ‘அதிசயப் பிறவி’யில் இருந்து ‘உன்னைப் பார்த்த நேரம்’. சமையலறையிலிருந்து அம்மா குரல் கொடுத்தார். “இப்போவெல்லாம் யாரு இது மாதிரி பாட்டு போடுறாங்க.... இந்தப் படமெல்லாம் உங்க அப்பாவோட ரங்கா தியேட்டருலே பார்த்தேன்”. ‘அம்மன் கோயில் கிழக்காலே’விலிருந்து ‘பூவை எடுத்து ஒரு மாலை’. விஜய்காந்த் ரசிகையான அம்மா உருகிப் போனார். சமையலை மறந்துவிட்டு பாடல்களை கேட்க அமர்ந்துவிட்டார்.

இதெல்லாம் வெறும் பாடல்கள் அல்ல. நினைவுகள்!

டீனேஜில் இருந்தபோது ஒரு மழைக்கால நள்ளிரவு. மறுநாள் காலையில் நான் என்னவாக இருக்கப் போகிறேன் என்று தெரியாத நிச்சயமற்ற சூழல். எல்லா வகையிலும் தோற்றுப்போன எனக்கு எதிர்காலமே இல்லை என்பது மட்டும் தெரிந்திருந்தது. சூடாக தேநீர் அருந்திக் கொண்டே மண்ணாங்கட்டி மூளையின் துணைகொண்டு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். டேப்ரிக்கார்டரை ஆன் செய்தார் டீ மாஸ்டர். ‘தாலாட்டுதே வானம்... தள்ளாடுதே மேகம்’. ஜெயச்சந்திரனின் குரலில் இளையராஜாவின் மேஜிக். பாடல் தொடங்கிய நொடியிலிருந்து அடுத்த நான்கு நிமிடங்களுக்கு என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று எதுவுமே தெரியவில்லை. பாடல் முடிந்ததுமே, புதியதாக பிறந்தவனாய் உணர்ந்தேன். கடந்துப்போன பதினேழு வருடங்கள் அத்தனையையும் மறந்தேன். மழை நனைத்த வயலாய் மனசு பளிச்சென்று ஆனது. இன்று நான் நானாக இருப்பதற்கு அந்த நாலு நிமிடங்களே காரணம்.

புத்தனுக்கு போதிமரத்தின் அடியில் கிடைத்த ஞானம் இப்படியானதாகதான் இருந்திருக்க வேண்டும். பிற்பாடு பல நண்பர்களோடு பேசிப் பழகும்போது நிறைய பேர் இதே போன்ற அனுபவத்தை ஏதோ ஒரு பாடல் மூலம் பெற்றிருக்கிறார்கள் என்பதை அறியமுடிந்தது. அத்தனை பாடல்களுமே இளையராஜா இசையமைத்தவை என்பதுதான் ஆச்சரியமான ஒற்றுமை.

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் என் வாழ்நாளின் படுமோசமான நாட்களை கடந்தேன். ஆகஸ்ட் 24 அன்று என்னுடைய பிறந்தநாள் என்பதையே ஃபேஸ்புக்கில் வந்து குவிந்த வாழ்த்துகள் மூலம்தான் உணர்ந்தேன். என் குடும்ப விளக்கு அணைந்துவிடுமோ, குழந்தைகளின் எதிர்காலம் என்னாகுமோ என்கிற பதட்டத்தில் மனநலம் பிறழ்ந்து சுற்றிக் கொண்டிருந்த நாட்கள் அவை. தேக்கி வைத்த கண்ணீர், எந்நிமிடமும் அணையாய் உடைய தயாராக இருக்க நடைப்பிணமாய் ஆனேன். அந்த மனநிலையில் வண்டி ஓட்டும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் எந்நேரமும் கூடவே இருந்தார் அண்ணன் சிவராமன்.

அவர் உடன் இல்லாத பொழுதுகளில் எந்நேரமும் மொபைலிலும், கணினியிலும் சேகரிக்கப்பட்டிருந்த இளையராஜாதான் ஹெட்செட் மூலமாக என்னை மீட்டார். என்னைப் பொறுத்தவரை இயேசுவை மாதிரி இளையராஜாவும் ஒரு மீட்பர். மிகைப்படுத்தி சொல்வதாக தோன்றலாம்.

ராகம், தாளம் என்று இசை பற்றிய எந்த அறிவும் இல்லாத பாமரனான எனக்கு தாயின் அன்பையும், தந்தையின் அக்கறையையும் இளையராஜாவின் இசை அளித்தது. குஞ்சுக்கு தாய்ப்பறவை தரும் கதகதப்பையும், பாதுகாப்பையும் வழங்கியது என்று சொன்னால் யார்தான் நம்புவார்கள்? ஆனால், இதுதான் உண்மை. எழுதியோ, பேசியோ இந்த உணர்வுகளை யாருக்கும் கடத்தவே முடியாது. ஒவ்வொருவருமே இம்மாதிரி சூழலை எதிர்கொள்ளும் அனுபவம் மட்டுமே நான் சொல்லவருவதின் பேருண்மையை எடுத்துக் காட்டும்.

பல முறை இணையத்தளங்களிலும், நண்பர்களுடனான விவாதங்களிலும் எது எதற்கோ இளையராஜாவை லூசுத்தனமாக கிண்டலடித்திருக்கிறேன். கேணைத்தனமாக திட்டியிருக்கிறேன். அதற்காகவெல்லாம் இப்போது வருந்த வேண்டியதில்லை. என் தகப்பன் மீது நான் என்ன உரிமை எடுத்துக் கொள்வேனோ, அப்போதெல்லாம் அதே போன்ற உரிமையைதான் அவர் மீதும் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று புரிகிறது. என்னுடைய இரத்தத்திலும், உடலின் ஒவ்வொரு செல்லிலும் இளையராஜா இருக்கிறார் என்கிற புரிதலுக்கு இப்போது வந்திருக்கிறேன். அறுவைச்சிகிச்சை செய்துகூட அவரை என்னிடமிருந்து அகற்ற முடியாது.

இளையராஜாவுக்கு நாம் வெறும் ரசிகர்கள் அல்ல. அவரது இசை, ரசிப்பு என்கிற அற்ப எல்லையை எல்லாம் என்றோ தாண்டிவிட்டது. உயிரிலும் உணர்விலும் ஒன்றாக கலந்துவிட்ட மேதைமை அவரது இசை. ஒவ்வொரு தமிழனுமே மகிழ்ச்சியாக இருக்கும்போது அவனுடைய மகிழ்ச்சியின் அளவை பன்மடங்கு கூட்டுவதும், துயரத்திலிருக்கும்போது அதிலிருந்து அவனை மீட்டெடுக்கும் வல்லமையும் இளையராஜாவுக்கு மட்டுமே உண்டு. இதை மறுப்பவர்களுக்கு கேட்கும் சக்தி இல்லையென்று அர்த்தம்.

கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகன் நான். நமக்கு கற்பிக்கப்பட்ட எந்த கடவுளுமே இதுவரை எந்த அதிசயத்தையும் நிகழ்த்திக் காட்டியதில்லை. நம் கண் முன்னால் ஒரு புல்லை கூட பிடுங்கிப் போட்டதில்லை. ஆனால், கடவுளைவிட மேன்மையான சொல் எந்த மொழியிலும் இல்லாததால் இளையராஜாவை இப்போதைக்கு கடவுள் ஸ்தானத்தில்தான் வைக்க விரும்புகிறேன். அவரை நாம் இழக்கும் நாள்தான் நிஜமாகவே தமிழ் சமூகம் ஈடு இணை செய்ய முடியாத இழப்பினை சந்திக்கும் நாளாக இருக்கும்.

சமீபத்தில் வெளிவந்த ‘CREED’ படத்தில் சில்வஸ்டர் ஸ்டாலோன் ஓர் அபாரமான வசனத்தை பேசியிருப்பார். “காது கொடுத்து கேள். எப்போதும் நீ பேசிக்கொண்டே இருந்தால் எதையுமே கற்க முடியாது”. நம்முடைய இடியட் பாக்ஸ்கள் எப்போதும் பேசிக்கொண்டேதான் இருக்கின்றன. அவையும் கற்பதாக தெரியவில்லை. அவற்றை உபயோகிப்பவனும் எதையும் கற்கமுடியுமென்று தோன்றவில்லை.

நம்மிடையே வாழும் கடவுளை அவமதிக்கும் எவனுக்கும் பரலோகத்திலும் கூட பாவமன்னிப்பு இல்லை!

16 டிசம்பர், 2015

ஷகிலா பேசுகிறேன்!

ஆண்டு அனுபவித்தவர் அறுபது வயதில் சுயசரிதை எழுதுகிறார் என்றால் புரிகிறது. இன்னும் நாற்பதை கூட எட்டாத ஷகிலா ஏன் எழுதியிருக்கிறார்? 

சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ள சென்னையில் அவர் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்டுக்கு சென்றோம். ஒரு பிரபலமான நடிகை வசிக்குமிடம் என்பதற்கு எந்தவித அடையாளமும் அற்ற எளிமையான வீடு. சாதாரண பெண்களை போலவே ‘சிம்பிளாக’, ‘ஹோம்லி’யாக இருக்கிறார் ஷகிலா. கழுத்தில் காதில் மூக்கில் பொட்டு தங்கம் இல்லை.

இனி அவரே பேசுவார்.
ஏன் எழுதினேன்?

ஒரு முறை பி.சி.ஸ்ரீராம் சார் சொன்னார். ‘உங்களை மாதிரி ஆளுங்களோட வாழ்க்கையில் இருந்துதான் மக்கள் கத்துக்க வேண்டிய பாடங்கள் இருக்கு. உங்களுக்கு நடந்த நல்லது கெட்டதுகளை எழுதணும்...’

அவர் சொன்னது மனதை அரித்துக் கொண்டே இருந்தது. நீண்டகாலமாகவே உங்களைப் போன்ற பத்திரிகை நண்பர்கள் எழுதச் சொல்லி கேட்டுக் கொண்டே இருந்தார்கள். எல்லாரிடமும் ‘எனக்கு விருப்பமில்லை. என்னைப் பற்றி எழுத நான் அன்னை தெரசாவும் இல்லை’ என்றே சொல்லிக் கொண்டிருந்தேன். என் வாழ்க்கையும் சரி. நான் நடித்த படங்களும் சரி. போலியானவை. அதற்காகவே எழுதத் தயங்கினேன். எழுதினால் உண்மையை மட்டுமே எழுதவேண்டும்.

இந்நிலையில் திடீரென்று ஒருநாள் ஏதோ ஒரு வேகம் வந்தது. மளமளவென்று எழுதிவிட்டேன்.

‘மை டியர் குட்டிச்சாத்தான்’

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இப்போது பேசிக்கொண்டிருக்கிறோமே இதே வீட்டில்தான். அப்பா, ரெக்ரியேஷன் தொடர்பான வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா, ஹவுஸ் ஒயிஃப். அப்பாவுக்கும் சரி. அம்மாவுக்கும் சரி. இவர்கள் செய்துக் கொண்டது பரஸ்பரம் மறுமணம். அப்பாவின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகளை என் சொந்த சகோதர சகோதரிகள் என்றுதான் என்னுடைய 12வது வயது வரை நினைத்துக் கொண்டிருந்தேன். என் அம்மாவுக்கு மூன்று பிள்ளைகள்.

அருகிலிருந்த பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது என் ஸ்கூல் சீனியர்களாக இருந்த சோனியாவும் (இப்போது நடிகர் போஸ் வெங்கட்டின் மனைவி), டிங்குவும் பயங்கர ஃபேமஸ். காரணம் அவர்கள் இருவரும் அப்போது சக்கைப்போடு போட்ட ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ படத்தில் நடித்திருந்தார்கள். ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் அவர்களுக்கு இருந்த பிரபலமே என்னை சினிமாவை நோக்கி ஈர்த்தது.

டீன் ஏஜில் என் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த சினிமாக்காரர்கள் ஒரு சின்ன ரோலில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள். சரத்குமார் நடித்த ‘நட்சத்திர நாயகன்’ படம் அது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் முத்தாய்ப்பான காட்சி. அதைத் தொடர்ந்தே நிறைய படங்களில் நடித்தேன். இரண்டாயிரம் ஆண்டின் காலக்கட்டத்தில்தான் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.

படிப்புக்கு பதில் நடிப்பு

படிப்பில் அவ்வளவு ஆர்வம் கிடையாது. பாப் கட்டிங் வெட்டிக் கொண்டு டிவிஎஸ் சேம்பில் கோடம்பாக்கம் முழுக்க சுற்றுவேன். ஷூட்டிங்கில் கலந்துக் கொண்டால் ஸ்கூலுக்கு லீவு போடலாம் என்பதே எனக்கு ஆகப்பெரிய ஆறுதலாக இருந்தது. ‘படிப்புதான் வரலை. நடிப்பாவது வரட்டும்...’ என்று அப்பாவும் தடை போடவில்லை. அதுவுமின்றி அப்போது குடும்பமும் ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. சினிமாவில் நான் நடித்ததால் காசு நிறைய கிடைத்தது. எனவே குடும்பத்தில் என்னை என்கரேஜ் செய்தார்கள்.

சிலுக்கு அறைந்தார்

‘ப்ளே கேர்ள்ஸ்’ படத்தில் சில்க் ஸ்மிதாவுக்கு தங்கச்சியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் நாள் ஷூட்டிங்கில் எனக்கு கொடுக்கப்பட்ட உடை மிகச் சிறியதாக இருந்தது. அதிர்ச்சியில் உறைந்துப் போனேன். ஷாட் ரெடி ஆனதுமே சில்க் மாடியில் இருந்து இறங்கி வந்தார். அவரைப் பார்த்ததுமே கூடுதல் அதிர்ச்சி. என்னைவிட மிகச்சிறிய ஆடை அணிந்திருந்தார். அவரிடம் சங்கடத்துடன், ‘அக்கா, உங்க உள்ளாடையெல்லாம் வெளியே தெரியுது...’ என்றேன். சில்க் என்னை கண்டுக்கொள்ளவே இல்லை. இயக்குநர் உடனே, ‘பெரிய ஸ்டார்கிட்டே இப்படியெல்லாம் பேசக்கூடாது...’ என்றார்.

சீன் படி நான் சில்க்குக்கு காஃபி கொடுக்க வேண்டும். அவர் என்னை அறைய வேண்டும். கேமிரா ரோல் ஆகத் தொடங்கியது. ‘அக்கா காஃபி...’ என்று நான் கோப்பையை நீட்ட, பதிலுக்கு சில்க் பளாரென்று நிஜமாகவே அறைந்தார். எனக்கு அவமானமாகி விட்டது. நான் அவரிடம் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு வன்மத்தில் அறைந்துவிட்டார் என்று கோபப்பட்டு படப்பிடிப்பை விட்டு வெளியேறினேன்.

தயாரிப்பாளரும், இயக்குநரும் பின்னர் என்னை சமாதானப்படுத்தி ‘டைமிங்’ பற்றியெல்லாம் பாடமெடுத்தார்கள். சில்க் வேண்டுமென்றே அடிக்கவில்லை என்று புரியவைத்தார்கள். அதன்பிறகு சில்க் என்னிடம் அன்பாக நடந்துக் கொண்டார். என்னை பிரத்யேகமாக அவர் வீட்டுக்கு அழைத்து லஞ்ச் கொடுத்தார். ஷூட்டிங்கில் எனக்காக நிறைய சாக்லேட் வாங்கி வைத்திருப்பார்.

லட்சங்களை சம்பாதித்தேன்

நான் நடித்த படங்கள் கமர்ஷியலும் அல்ல. ஆர்ட் ஃபிலிமும் அல்ல. ஏதோ ஒரு வகையில் மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக அமைந்தவை. பதினைந்து லட்சத்தில் படம் எடுப்பார்கள். முப்பது லட்சத்துக்கு பிசினஸ் ஆகும். பிசினஸ் ஆன தொகையைவிட பன்மடங்கு வசூல் ஆகும். அந்த படம் தொடர்பான அத்தனை பேருக்குமே நிச்சய லாபம். இன்றுவரை அம்மாதிரி படங்களில் நடித்தது தொடர்பாக எனக்கு எந்தவிதமான குற்றவுணர்ச்சியோ, வருத்தமோ சிறிதுமில்லை.

ஒருமுறை படப்பிடிப்பு முடிந்து கேரளாவில் இருந்து சென்னைக்கு திரும்ப தயாராகிக் கொண்டிருந்தேன். ஒரு புதுத் தயாரிப்பாளர் வந்து கால்ஷீட் கேட்டார். ஐந்து நாள் நடித்தால் போதும் என்றார். அவரை நிராகரிக்க எனக்கு ஒரு லட்சம் சம்பளம், மூன்று நாள்தான் நடிக்க முடியும் என்றேன். அவரோ உடனே ஒரு லட்ச ரூபாயை என் கையில் அட்வான்ஸாகவே கொடுத்து விட்டார்.

மூன்று நாள் ஷூட்டிங் முடிந்து கிளம்பும்போது கூடுதலாக இரண்டு லட்சம் கொடுத்தார். ஒருநாளைக்கு ஒரு லட்சம் என்னுடைய சம்பளம் என்று அவர் நிர்ணயித்து வைத்திருக்கிறார். என்னுடைய வேல்யூ அந்தான் என்று எனக்கு அப்போதுதான் தெரிய வந்தது.

முதுகில் குத்திய துரோகம்

நான் சம்பாதித்த அத்தனை பணத்தையும் என்னுடைய அம்மாவும், அக்காவும் எடுத்துக் கொண்டார்கள். குடும்பத்துக்காகதான் சம்பாதித்தேன். உறவுகளையும், நட்புகளையும் பேணி வளர்க்க கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்தேன். ஆனால், அவர்கள் என்னை ‘பி’ கிரேடு நடிகையாகதான் பார்த்திருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை நான் வெறும் ‘ஏடிஎம் மெஷின்’. என் குடும்ப நிகழ்வுகளில் நான் கலந்துக் கொள்வதைகூட அவர்கள் அவமானமாக கருதினார்கள்.

எனக்கு ஆதரவாக இருந்த அப்பாவும் காலமான பிறகு மிகவும் தனிமையை உணர்ந்தேன். நண்பர்கள், உறவுகள்... என அத்தனை பேரும் தொடர்ச்சியாக சொல்லி வைத்தது போல முதுகில் குத்திக்கொண்டே இருந்தார்கள். துரோகங்கள் பழகிவிட்டது. எப்படியிருந்தாலும் நான் வாழ்ந்துதானே ஆகவேண்டும். என்னுடைய உலகத்தை நானே உருவாக்க தீர்மானித்தேன்.

இப்போது நான் வசித்து வருவது ஒரு காடு. இந்த காட்டின் ஒவ்வொரு மரத்தையும் நானே நட்டிருக்கிறேன். எல்லாமே என்னுடைய தேர்வுதான் என்பதால் காசு பணம் இருக்கிறதோ இல்லையோ மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். என்னை ஒரு திருநங்கை அவரது மகளாக தத்தெடுத்திருக்கிறார். அவர் பெயர் கிருபாம்மாள். நான் ஒரு திருநங்கையை என்னுடைய மகளாக தத்தெடுத்திருக்கிறேன். அவரது பெயர் தங்கம். ரத்த உறவில்லாத இந்த உறவுகளின் பாசத்திலும், அன்பிலும் முன்பு எப்போதுமே உணர்ந்தறியாத பாதுகாப்பினையும், மகிழ்ச்சியையும் பெறுகிறேன்.

காமிக்ஸ் பிடிக்கும்

இளையராஜாவின் இசை என் மனதை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது. இசையைத் தவிர்த்து என்னுடைய பொழுதுபோக்கு ப்ளே ஸ்டேஷனில் கேம்ஸ் விளையாடுவது. சினிமா பார்ப்பது அரிது. தமிழில் கமல் சார் படங்களை தியேட்டருக்கு போய் பார்ப்பேன். அது தவிர்த்து ‘நார்னியா’, ‘ஹாபிட்’ மாதிரி ஹாலிவுட் ஃபேண்டஸி படங்களை விரும்பி ரசிப்பேன். மாற்று சினிமாவாக மதிக்கப்படும் உலகப்படங்கள், கொரியப்படங்கள் எனக்கு விருப்பமானவை. பெரிய கலெக்‌ஷனே என்னிடம் இருக்கிறது.

காமிக்ஸ் பிடிக்கும். ஃப்ளைட்டில் பயணிப்பது அறுவை என்பதால் எப்போதுமே ரயிலில் செல்வதையே விரும்புவேன். அம்மாதிரி பயணங்களுக்காக கையில் எடுத்துச் செல்வது டிங்கிள், ஆர்ச்சீஸ் மாதிரி காமிக்ஸ் புத்தகங்களைதான். ஒவ்வொரு முறை புத்தகக் கடைக்கு போகும்போதும் குறைந்தது மூவாயிரம், நாலாயிரம் ரூபாய்க்கு காமிக்ஸ்களை மொத்தமாக அள்ளி விடுவேன். காமிக்ஸ் படித்துதான் என்னுடைய ஆங்கில அறிவே வளர்ந்தது.

பயணங்களின் காதலி

பயணங்கள்தான் என்னை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்கின்றன. மாதக் கணக்கில் காடுகளில் தங்கி வனவிலங்குகளை வேடிக்கை பார்ப்பது மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. மசினகுடி போய் விசாரித்துப் பாருங்கள். ஷகிலா அங்கே ரொம்ப ஃபேமஸ். பழங்குடியினரின் வீடுகளில் தங்கி, நாட்கணக்கில் காட்டு வாழ்வை வாழ்வேன். இந்தியா முழுக்க இருக்கும் எல்லா காடுகளுக்கும் சென்று வாரக் கணக்கில் வாழ்ந்துவிட்டு வரவேண்டும் என்பது என் லட்சியம்.

ஆண்கள்

என்னைப் போன்ற பெண்கள், ஆண் இனத்தையே வெறுப்பார்கள் என்றொரு பொதுப்புத்தி இருக்கிறது. அது தவறு. ஆண்களை நான் பாசிட்டிவ்வாகதான் பார்க்கிறேன். துரோகம், நயவஞ்சகம் மாதிரி குணங்கள் ஆண் - பெண் இருவருக்கும் பொதுவானதுதான். என்னை சந்திக்கும் ஒவ்வொரு ஆணிடமும் என் அப்பாவை தேடுகிறேன். நான் ஒரு depended child. ஆண்களிடம் எதிர்ப்பார்ப்பது ஆதரவை மட்டுமே. வயதில் மூத்தவர்களாக இருந்தால் அண்ணன் என்றும், இளையவர்களாக இருந்தால் தம்பி என்றும் அழைக்கிறேன். பெண்கள் இல்லாமல் உலகமே இல்லை என்பார்கள். ஆண்கள் இல்லாமல் இருந்தால் மட்டும் உலகம் இருந்து விடுமா?

கடவுளுக்கு கடிதம்


கடவுள் நம்பிக்கை உண்டு. அந்த கடவுள் அல்லாவோ, இயேசுவோ, கிருஷ்ணரோ அல்ல. கடவுள். அவ்வளவுதான். அவருக்கு அடிக்கடி கடிதம் எழுதுவேன். அவருடைய முகவரி தெரியாது என்பதால் போஸ்ட் செய்வதில்லை. கடவுள் என்பதால், நான் கடிதத்தில் என்ன எழுதுகிறேன் என்று அவருக்கு தெரியாமலேயா போகும்? சமீபத்தில் கூட பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வாடும் மக்களை காக்க கோரி கடிதம் எழுதினேன். இம்மாதிரி ஆயிரக்கணக்கான கடிதங்கள் எழுதியிருக்கிறேன். கடவுளிடம் பேசுவதற்கு கடிதங்கள் உதவுகின்றன. எனக்கும் கடவுளுக்கும் மத்தியில் இடைத்தரகர்கள் யாரும் இருப்பதை நான் விரும்புவதில்லை.

டைரக்‌ஷன் ஆசை

நடிக்க வாய்ப்பு குறைந்தவுடனேயே டைரக்டர் ஆகிவிட வேண்டும் என்கிற ஆசை நிறைய பேருக்கு வரும். எனக்கு அப்படியெல்லாம் இல்லை. ஏற்கனவே ‘ரொமாண்டிக் டார்கெட்’ என்றொரு படம் இயக்கியிருக்கிறேன். டைரக்‌ஷன் ரொம்பவும் டென்ஷன் பிடித்த வேலை. எனவே இனி டைரக்ட் செய்யும் ஐடியா இல்லை.

நிரூபிப்பேன்

நானாக எப்போதுமே யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை. என்னை தேடி வரும் வாய்ப்புகளை மட்டுமே ஆரம்பக் காலத்திலிருந்து ஒப்புக்கொண்டு வருகிறேன். இப்போதும் யாராவது வந்து கேட்டால் நடித்துக் கொடுக்கிறேன்.

எனக்கு காமெடி பிடிக்கும். என்றாலும் எல்லா வேடங்களிலும் நடிக்க ஆசை. ஷகிலா என்பவள் வெறும் கவர்ச்சி நடிகை அல்ல. எனக்குள் இருக்கும் கலையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்குமா என்று காத்திருக்கிறேன். கிடைத்தால், நான் யார் என்பதை மக்களுக்கு நிரூபிப்பேன்.

(நன்றி : தினகரன் வெள்ளி மலர்)



9 டிசம்பர், 2015

சென்னையில் நிகழ்ந்திருப்பது செயற்கைப் பேரழிவு!

கடந்த வாரத்தில் சென்னையை சின்னாபின்னமாக்கிய வெள்ளம், இயற்கைப் பேரழிவு அல்ல. செம்பரம்பாக்கம் ஏரி நீரை வெளியேற்றுவதில் அரசு நிர்வாகம் செய்த குளறுபடியே சென்னை நகரை மூழ்கடித்தது.

நவம்பர் இறுதியில் சர்வதேச வானிலை ஆய்வு அமைப்புகள் தமிழக அரசு தலைமையை எச்சரித்திருந்தன. டிசம்பர் 1 மற்றும் இரண்டு தேதிகளில் 500 மி.மீ அளவுக்கு சென்னையில் மழை பொழியலாம் என்று அவ்வமைப்புகள் கணித்திருந்தன. இதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை செயலருக்கு செம்பரம்பாக்கம் நீரின் அளவை 22 அடியிலிருந்து 18 அடியாக குறைக்கச் சொல்லி பரிந்துரைத்தார்கள். இதன் மூலம் மேலும் பொழியும் கனமழையை எதிர்கொண்டு அடையாறு ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய ஆபத்தினை தவிர்க்கலாம் என்றார்கள். ஆனாலும், நவம்பர் 26 முதல் 29ந் தேதி வரை அடையாறு ஆற்றில் மிகக்குறைவான நீரேதான் பாய்ந்துக் கொண்டிருந்தது.

ஏனெனில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பரிந்துரை கோப்பு, கோட்டையில் தூங்கிக் கொண்டிருந்தது. நமக்குக் கிடைத்த தகவல்களின் படி பொதுப்பணித்துறை செயலர், தலைமைச் செயலரின் உத்தரவுக்காக காத்திருந்தார். தலைமைச் செயலர் யாருடைய அனுமதிக்காக காத்திருந்தார் என்பது இன்றளவும் மர்மமாகவே இருக்கிறது. இதனால்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சரியான திட்டமிடுதல் இல்லாமல் பக்ராநங்கல் அணையை திறந்துவிட்டபோது பஞ்சாப் எத்தகைய பேரழிவைச் சந்தித்ததோ அதற்கு இணையான பேரழிவினை இன்று சென்னை சந்தித்திருக்கிறது.

செம்பரம்பாக்கம் நீர்த்தேக்க அணை மொத்தமாக நிரம்பி, தண்ணீர் தளும்பும்வரை அதன் கதவு திறக்கப்படவில்லை. சென்னையிலும் ஏற்கனவே கணித்தபடி கனமழை பொழியத் தொடங்கியது. “டிசம்பர் ஒன்று அன்று இரவு நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 33,500 கன அடி நீரைதான் திறந்துவிட்டோம் என்று மாநில அரசு கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்கிறது. ஆனால், உண்மை நிலவரம் திறந்துவிடப்பட்ட நீர் இதைவிட இருமடங்கு என்பதுதான். கூடவே அத்தனூர் ஏரியின் நீரும் விநாடிக்கு 5,000 கன அடி அளவுக்கு திறந்துவிடப்பட்டதால் அடையாறு அழிவாறாக ஆனது” என்பது பொதுப்பணித்துறை வட்டாரத்திலிருந்து நமக்கு கிடைத்திருக்கும் தகவல்.
“இந்த மோசமான நீர் நிர்வாகக் குளறுபடிகளின் காரணமாகவே டிசம்பர் 2 மற்றும் 3 இரு தேதிகளிலும் அடையாறில் ஒரு லட்சம் கன அடிக்கும் மேலாக நீர் வெள்ளமென பயணித்தது” என்று வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் மூத்த ஐஏஸ் அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் அவர், “தாங்களாகவே முடிவெடுக்க தைரியமில்லாத முதுகெலும்பில்லாத அதிகாரிகளை பெற்றிருப்பதற்கான பலனைதான் சென்னை நகரம் அனுபவித்திருக்கிறது. இந்த துரதிருஷ்ட வேளையிலும் நல்ல வேளையாக முழுக்கொள்ளளவை எட்டிய நீர்த்தேக்கம் உடைந்து பாய்ந்து மொத்த ஊர்களையும் நாசமாக்கவில்லை. அதுவரை நிம்மதி” என்றார்.

“சென்னையிலும் புறநகரிலும் ஏற்பட்டிருக்கும் இந்த கொடுமையான பாதிப்பை, செம்பரம்பாக்கம் தண்ணீரை வெளியேற்றுவதில் ஒழுங்கான நிர்வாகத்தை கையாண்டிருந்தால் தவிர்த்திருக்கலாம்” என்று மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மெண்ட் ஸ்டடீஸைச் சேர்ந்த புரொபஸர் எஸ்.ஜனகராஜன் சொல்கிறார். “செம்பரம்பாக்கம் ஏரியை அரசு தனியான ஒரு நீர்த்தேக்கமாக மட்டும் கருதக்கூடாது. அந்த ஏரி அடையாறு ஆற்றோடு மட்டுமின்றி மேலும் தோராயமாக 200 நீர்நிலைகளோடு தொடர்புடையது. அதனால்தான் விநாடிக்கு 33,500 கன அடி நீரை அங்கிருந்து திறந்துவிட்டாலும் கூட, அந்நீர் சைதாப்பேட்டையை அடையாறு வழியாக அடையும்போது 60,000 கன அடியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. நிர்வாகத்துக்கு இந்த இயல்பான நிகழ்வு தெரிந்துத் தொலைக்காததால் மக்கள் அதற்கான விலையை தந்திருக்கிறார்கள்” என்றும் அவர் விளக்கினார்.

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் மாவட்டங்களில் மட்டும் ஏரி, குளம், ஆறு என்று உத்தேசமாக 3,600 நீர்நிலைகள் உண்டு. இவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக (நதிநீர் இணைப்பு மாதிரி) செய்துவிட்டால் தோராயமாக 30 ஆயிரம் மில்லியன் கன அடி நீரை இவற்றில் தேக்க முடியும். மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம் வராமலும் எதிர்காலத்தில் காக்க முடியும் என்கிற யோசனையையும் ஜனகராஜன் முன்வைக்கிறார்.
இந்த பேரழிவின் விளைவு இவ்வளவு மோசமாக இருப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மக்களுக்கு -– குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு - எவ்வித வழிகாட்டுதலோ எச்சரிக்கையோ விடுக்கப்படவில்லை. மேலும், சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகள் அத்தனை பேருடைய செல்போனும் அணைத்துவைக்கச் சொல்லி ‘யாராலோ’ அறிவுறுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. வயர்லெஸ் மூலம் மட்டுமே அவர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் அவதிக்குள்ளான மக்கள் உடனடியாக உள்ளூர் காவல்துறையினரின் உதவியை கோர முடியாத நிலை ஏற்பட்டது.

இதைப்பற்றியெல்லாம் விளக்கங்களை கேட்க தலைமைச் செயலரையும், பொதுப்பணித்துறைச் செயலரையும் தொடர்புகொள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா எடுத்த அத்தனை முயற்சிகளும் பலனை எட்ட முடியவில்லை. விடையறிய முடியாமல் நம் முன் நிற்கும் கேள்விகள் இவைதான்.

1) அபாய அளவை எட்டிய பிறகும் செம்பரம்பாக்கம் நீரை திறந்துவிடாமல் யாருடைய உத்தரவுக்காக அதிகாரிகள் காத்திருந்தார்கள்?

2) இப்போது நடந்திருக்கும் பேரழிவுக்கு யாராவது பொறுப்பேற்பார்களா?

3) இனியாவது நீர்த்தேக்கங்களை பாதுகாப்பான முறையில் நிர்வகிக்க அரசு முறையான வழிகாட்டுதல்களை உருவாக்குமா?

4) மழைவெள்ளக் காலத்தில் இதுபோல பெரியளவில் தேக்கங்களிலிருந்து நீரை வெளியேற்றும்போது மக்களுக்கு தகுந்த காலத்தில் எச்சரிக்க ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா?


- 09-12-15 அன்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் வெளிவந்திருக்கும் செய்திக் கட்டுரையின் தமிழாக்கம்!