ஆண்டு அனுபவித்தவர் அறுபது வயதில் சுயசரிதை எழுதுகிறார் என்றால் புரிகிறது. இன்னும் நாற்பதை கூட எட்டாத ஷகிலா ஏன் எழுதியிருக்கிறார்?
சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ள சென்னையில் அவர் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்டுக்கு சென்றோம். ஒரு பிரபலமான நடிகை வசிக்குமிடம் என்பதற்கு எந்தவித அடையாளமும் அற்ற எளிமையான வீடு. சாதாரண பெண்களை போலவே ‘சிம்பிளாக’, ‘ஹோம்லி’யாக இருக்கிறார் ஷகிலா. கழுத்தில் காதில் மூக்கில் பொட்டு தங்கம் இல்லை.
இனி அவரே பேசுவார்.
ஒரு முறை பி.சி.ஸ்ரீராம் சார் சொன்னார். ‘உங்களை மாதிரி ஆளுங்களோட வாழ்க்கையில் இருந்துதான் மக்கள் கத்துக்க வேண்டிய பாடங்கள் இருக்கு. உங்களுக்கு நடந்த நல்லது கெட்டதுகளை எழுதணும்...’
அவர் சொன்னது மனதை அரித்துக் கொண்டே இருந்தது. நீண்டகாலமாகவே உங்களைப் போன்ற பத்திரிகை நண்பர்கள் எழுதச் சொல்லி கேட்டுக் கொண்டே இருந்தார்கள். எல்லாரிடமும் ‘எனக்கு விருப்பமில்லை. என்னைப் பற்றி எழுத நான் அன்னை தெரசாவும் இல்லை’ என்றே சொல்லிக் கொண்டிருந்தேன். என் வாழ்க்கையும் சரி. நான் நடித்த படங்களும் சரி. போலியானவை. அதற்காகவே எழுதத் தயங்கினேன். எழுதினால் உண்மையை மட்டுமே எழுதவேண்டும்.
இந்நிலையில் திடீரென்று ஒருநாள் ஏதோ ஒரு வேகம் வந்தது. மளமளவென்று எழுதிவிட்டேன்.
‘மை டியர் குட்டிச்சாத்தான்’
நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இப்போது பேசிக்கொண்டிருக்கிறோமே இதே வீட்டில்தான். அப்பா, ரெக்ரியேஷன் தொடர்பான வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா, ஹவுஸ் ஒயிஃப். அப்பாவுக்கும் சரி. அம்மாவுக்கும் சரி. இவர்கள் செய்துக் கொண்டது பரஸ்பரம் மறுமணம். அப்பாவின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகளை என் சொந்த சகோதர சகோதரிகள் என்றுதான் என்னுடைய 12வது வயது வரை நினைத்துக் கொண்டிருந்தேன். என் அம்மாவுக்கு மூன்று பிள்ளைகள்.
அருகிலிருந்த பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது என் ஸ்கூல் சீனியர்களாக இருந்த சோனியாவும் (இப்போது நடிகர் போஸ் வெங்கட்டின் மனைவி), டிங்குவும் பயங்கர ஃபேமஸ். காரணம் அவர்கள் இருவரும் அப்போது சக்கைப்போடு போட்ட ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ படத்தில் நடித்திருந்தார்கள். ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் அவர்களுக்கு இருந்த பிரபலமே என்னை சினிமாவை நோக்கி ஈர்த்தது.
டீன் ஏஜில் என் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த சினிமாக்காரர்கள் ஒரு சின்ன ரோலில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள். சரத்குமார் நடித்த ‘நட்சத்திர நாயகன்’ படம் அது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் முத்தாய்ப்பான காட்சி. அதைத் தொடர்ந்தே நிறைய படங்களில் நடித்தேன். இரண்டாயிரம் ஆண்டின் காலக்கட்டத்தில்தான் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.
படிப்புக்கு பதில் நடிப்பு
படிப்பில் அவ்வளவு ஆர்வம் கிடையாது. பாப் கட்டிங் வெட்டிக் கொண்டு டிவிஎஸ் சேம்பில் கோடம்பாக்கம் முழுக்க சுற்றுவேன். ஷூட்டிங்கில் கலந்துக் கொண்டால் ஸ்கூலுக்கு லீவு போடலாம் என்பதே எனக்கு ஆகப்பெரிய ஆறுதலாக இருந்தது. ‘படிப்புதான் வரலை. நடிப்பாவது வரட்டும்...’ என்று அப்பாவும் தடை போடவில்லை. அதுவுமின்றி அப்போது குடும்பமும் ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. சினிமாவில் நான் நடித்ததால் காசு நிறைய கிடைத்தது. எனவே குடும்பத்தில் என்னை என்கரேஜ் செய்தார்கள்.
சிலுக்கு அறைந்தார்
‘ப்ளே கேர்ள்ஸ்’ படத்தில் சில்க் ஸ்மிதாவுக்கு தங்கச்சியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் நாள் ஷூட்டிங்கில் எனக்கு கொடுக்கப்பட்ட உடை மிகச் சிறியதாக இருந்தது. அதிர்ச்சியில் உறைந்துப் போனேன். ஷாட் ரெடி ஆனதுமே சில்க் மாடியில் இருந்து இறங்கி வந்தார். அவரைப் பார்த்ததுமே கூடுதல் அதிர்ச்சி. என்னைவிட மிகச்சிறிய ஆடை அணிந்திருந்தார். அவரிடம் சங்கடத்துடன், ‘அக்கா, உங்க உள்ளாடையெல்லாம் வெளியே தெரியுது...’ என்றேன். சில்க் என்னை கண்டுக்கொள்ளவே இல்லை. இயக்குநர் உடனே, ‘பெரிய ஸ்டார்கிட்டே இப்படியெல்லாம் பேசக்கூடாது...’ என்றார்.
சீன் படி நான் சில்க்குக்கு காஃபி கொடுக்க வேண்டும். அவர் என்னை அறைய வேண்டும். கேமிரா ரோல் ஆகத் தொடங்கியது. ‘அக்கா காஃபி...’ என்று நான் கோப்பையை நீட்ட, பதிலுக்கு சில்க் பளாரென்று நிஜமாகவே அறைந்தார். எனக்கு அவமானமாகி விட்டது. நான் அவரிடம் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு வன்மத்தில் அறைந்துவிட்டார் என்று கோபப்பட்டு படப்பிடிப்பை விட்டு வெளியேறினேன்.
தயாரிப்பாளரும், இயக்குநரும் பின்னர் என்னை சமாதானப்படுத்தி ‘டைமிங்’ பற்றியெல்லாம் பாடமெடுத்தார்கள். சில்க் வேண்டுமென்றே அடிக்கவில்லை என்று புரியவைத்தார்கள். அதன்பிறகு சில்க் என்னிடம் அன்பாக நடந்துக் கொண்டார். என்னை பிரத்யேகமாக அவர் வீட்டுக்கு அழைத்து லஞ்ச் கொடுத்தார். ஷூட்டிங்கில் எனக்காக நிறைய சாக்லேட் வாங்கி வைத்திருப்பார்.
லட்சங்களை சம்பாதித்தேன்
நான் நடித்த படங்கள் கமர்ஷியலும் அல்ல. ஆர்ட் ஃபிலிமும் அல்ல. ஏதோ ஒரு வகையில் மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக அமைந்தவை. பதினைந்து லட்சத்தில் படம் எடுப்பார்கள். முப்பது லட்சத்துக்கு பிசினஸ் ஆகும். பிசினஸ் ஆன தொகையைவிட பன்மடங்கு வசூல் ஆகும். அந்த படம் தொடர்பான அத்தனை பேருக்குமே நிச்சய லாபம். இன்றுவரை அம்மாதிரி படங்களில் நடித்தது தொடர்பாக எனக்கு எந்தவிதமான குற்றவுணர்ச்சியோ, வருத்தமோ சிறிதுமில்லை.
ஒருமுறை படப்பிடிப்பு முடிந்து கேரளாவில் இருந்து சென்னைக்கு திரும்ப தயாராகிக் கொண்டிருந்தேன். ஒரு புதுத் தயாரிப்பாளர் வந்து கால்ஷீட் கேட்டார். ஐந்து நாள் நடித்தால் போதும் என்றார். அவரை நிராகரிக்க எனக்கு ஒரு லட்சம் சம்பளம், மூன்று நாள்தான் நடிக்க முடியும் என்றேன். அவரோ உடனே ஒரு லட்ச ரூபாயை என் கையில் அட்வான்ஸாகவே கொடுத்து விட்டார்.
மூன்று நாள் ஷூட்டிங் முடிந்து கிளம்பும்போது கூடுதலாக இரண்டு லட்சம் கொடுத்தார். ஒருநாளைக்கு ஒரு லட்சம் என்னுடைய சம்பளம் என்று அவர் நிர்ணயித்து வைத்திருக்கிறார். என்னுடைய வேல்யூ அந்தான் என்று எனக்கு அப்போதுதான் தெரிய வந்தது.
முதுகில் குத்திய துரோகம்
நான் சம்பாதித்த அத்தனை பணத்தையும் என்னுடைய அம்மாவும், அக்காவும் எடுத்துக் கொண்டார்கள். குடும்பத்துக்காகதான் சம்பாதித்தேன். உறவுகளையும், நட்புகளையும் பேணி வளர்க்க கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்தேன். ஆனால், அவர்கள் என்னை ‘பி’ கிரேடு நடிகையாகதான் பார்த்திருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை நான் வெறும் ‘ஏடிஎம் மெஷின்’. என் குடும்ப நிகழ்வுகளில் நான் கலந்துக் கொள்வதைகூட அவர்கள் அவமானமாக கருதினார்கள்.
எனக்கு ஆதரவாக இருந்த அப்பாவும் காலமான பிறகு மிகவும் தனிமையை உணர்ந்தேன். நண்பர்கள், உறவுகள்... என அத்தனை பேரும் தொடர்ச்சியாக சொல்லி வைத்தது போல முதுகில் குத்திக்கொண்டே இருந்தார்கள். துரோகங்கள் பழகிவிட்டது. எப்படியிருந்தாலும் நான் வாழ்ந்துதானே ஆகவேண்டும். என்னுடைய உலகத்தை நானே உருவாக்க தீர்மானித்தேன்.
இப்போது நான் வசித்து வருவது ஒரு காடு. இந்த காட்டின் ஒவ்வொரு மரத்தையும் நானே நட்டிருக்கிறேன். எல்லாமே என்னுடைய தேர்வுதான் என்பதால் காசு பணம் இருக்கிறதோ இல்லையோ மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். என்னை ஒரு திருநங்கை அவரது மகளாக தத்தெடுத்திருக்கிறார். அவர் பெயர் கிருபாம்மாள். நான் ஒரு திருநங்கையை என்னுடைய மகளாக தத்தெடுத்திருக்கிறேன். அவரது பெயர் தங்கம். ரத்த உறவில்லாத இந்த உறவுகளின் பாசத்திலும், அன்பிலும் முன்பு எப்போதுமே உணர்ந்தறியாத பாதுகாப்பினையும், மகிழ்ச்சியையும் பெறுகிறேன்.
காமிக்ஸ் பிடிக்கும்
இளையராஜாவின் இசை என் மனதை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது. இசையைத் தவிர்த்து என்னுடைய பொழுதுபோக்கு ப்ளே ஸ்டேஷனில் கேம்ஸ் விளையாடுவது. சினிமா பார்ப்பது அரிது. தமிழில் கமல் சார் படங்களை தியேட்டருக்கு போய் பார்ப்பேன். அது தவிர்த்து ‘நார்னியா’, ‘ஹாபிட்’ மாதிரி ஹாலிவுட் ஃபேண்டஸி படங்களை விரும்பி ரசிப்பேன். மாற்று சினிமாவாக மதிக்கப்படும் உலகப்படங்கள், கொரியப்படங்கள் எனக்கு விருப்பமானவை. பெரிய கலெக்ஷனே என்னிடம் இருக்கிறது.
காமிக்ஸ் பிடிக்கும். ஃப்ளைட்டில் பயணிப்பது அறுவை என்பதால் எப்போதுமே ரயிலில் செல்வதையே விரும்புவேன். அம்மாதிரி பயணங்களுக்காக கையில் எடுத்துச் செல்வது டிங்கிள், ஆர்ச்சீஸ் மாதிரி காமிக்ஸ் புத்தகங்களைதான். ஒவ்வொரு முறை புத்தகக் கடைக்கு போகும்போதும் குறைந்தது மூவாயிரம், நாலாயிரம் ரூபாய்க்கு காமிக்ஸ்களை மொத்தமாக அள்ளி விடுவேன். காமிக்ஸ் படித்துதான் என்னுடைய ஆங்கில அறிவே வளர்ந்தது.
பயணங்களின் காதலி
பயணங்கள்தான் என்னை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்கின்றன. மாதக் கணக்கில் காடுகளில் தங்கி வனவிலங்குகளை வேடிக்கை பார்ப்பது மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. மசினகுடி போய் விசாரித்துப் பாருங்கள். ஷகிலா அங்கே ரொம்ப ஃபேமஸ். பழங்குடியினரின் வீடுகளில் தங்கி, நாட்கணக்கில் காட்டு வாழ்வை வாழ்வேன். இந்தியா முழுக்க இருக்கும் எல்லா காடுகளுக்கும் சென்று வாரக் கணக்கில் வாழ்ந்துவிட்டு வரவேண்டும் என்பது என் லட்சியம்.
ஆண்கள்
என்னைப் போன்ற பெண்கள், ஆண் இனத்தையே வெறுப்பார்கள் என்றொரு பொதுப்புத்தி இருக்கிறது. அது தவறு. ஆண்களை நான் பாசிட்டிவ்வாகதான் பார்க்கிறேன். துரோகம், நயவஞ்சகம் மாதிரி குணங்கள் ஆண் - பெண் இருவருக்கும் பொதுவானதுதான். என்னை சந்திக்கும் ஒவ்வொரு ஆணிடமும் என் அப்பாவை தேடுகிறேன். நான் ஒரு depended child. ஆண்களிடம் எதிர்ப்பார்ப்பது ஆதரவை மட்டுமே. வயதில் மூத்தவர்களாக இருந்தால் அண்ணன் என்றும், இளையவர்களாக இருந்தால் தம்பி என்றும் அழைக்கிறேன். பெண்கள் இல்லாமல் உலகமே இல்லை என்பார்கள். ஆண்கள் இல்லாமல் இருந்தால் மட்டும் உலகம் இருந்து விடுமா?
கடவுளுக்கு கடிதம்
கடவுள் நம்பிக்கை உண்டு. அந்த கடவுள் அல்லாவோ, இயேசுவோ, கிருஷ்ணரோ அல்ல. கடவுள். அவ்வளவுதான். அவருக்கு அடிக்கடி கடிதம் எழுதுவேன். அவருடைய முகவரி தெரியாது என்பதால் போஸ்ட் செய்வதில்லை. கடவுள் என்பதால், நான் கடிதத்தில் என்ன எழுதுகிறேன் என்று அவருக்கு தெரியாமலேயா போகும்? சமீபத்தில் கூட பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வாடும் மக்களை காக்க கோரி கடிதம் எழுதினேன். இம்மாதிரி ஆயிரக்கணக்கான கடிதங்கள் எழுதியிருக்கிறேன். கடவுளிடம் பேசுவதற்கு கடிதங்கள் உதவுகின்றன. எனக்கும் கடவுளுக்கும் மத்தியில் இடைத்தரகர்கள் யாரும் இருப்பதை நான் விரும்புவதில்லை.
டைரக்ஷன் ஆசை
நடிக்க வாய்ப்பு குறைந்தவுடனேயே டைரக்டர் ஆகிவிட வேண்டும் என்கிற ஆசை நிறைய பேருக்கு வரும். எனக்கு அப்படியெல்லாம் இல்லை. ஏற்கனவே ‘ரொமாண்டிக் டார்கெட்’ என்றொரு படம் இயக்கியிருக்கிறேன். டைரக்ஷன் ரொம்பவும் டென்ஷன் பிடித்த வேலை. எனவே இனி டைரக்ட் செய்யும் ஐடியா இல்லை.
நிரூபிப்பேன்
நானாக எப்போதுமே யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை. என்னை தேடி வரும் வாய்ப்புகளை மட்டுமே ஆரம்பக் காலத்திலிருந்து ஒப்புக்கொண்டு வருகிறேன். இப்போதும் யாராவது வந்து கேட்டால் நடித்துக் கொடுக்கிறேன்.
எனக்கு காமெடி பிடிக்கும். என்றாலும் எல்லா வேடங்களிலும் நடிக்க ஆசை. ஷகிலா என்பவள் வெறும் கவர்ச்சி நடிகை அல்ல. எனக்குள் இருக்கும் கலையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்குமா என்று காத்திருக்கிறேன். கிடைத்தால், நான் யார் என்பதை மக்களுக்கு நிரூபிப்பேன்.
(நன்றி : தினகரன் வெள்ளி மலர்)
good and very open in heart and in words also
பதிலளிநீக்குஉள்ளதை உள்ளபடி சொன்ன ஒரு நல்ல உள்ளம்!
பதிலளிநீக்குvery shocking to see her another(real) face. she will get what she really deserved.
பதிலளிநீக்குMy Wishes to her...
Thanks yuva for bringing this.
தன்னோட வெள்ளித்திரை தவிர்த்த முகத்தை அப்பழுக்கில்லாமல் பகிர்ந்திருக்கும் ஷகிலா அவர்கள் பாராட்டுக்கு உரியவர்.
பதிலளிநீக்குவெறும் கிளர்ச்சியூட்டும் பொம்மையாக பார்த்தவர்கள்
பதிலளிநீக்குஇதை படித்தால் கண்டிப்பாக மனதை மாற்றி கொள்வார்கள்.
"சகிலாவுக்கு பெரிய மனது" என்று நக்கல் அடிப்பவர்களுக்கு
நிஜமாகவே உண்மையாகவே அவருக்கு பெரிய மனதுதான்
என்பதை இந்த கட்டுரை நிரூபிக்கிறது.
ஹாட்ஸ் ஆப் ஷகீலா!
அருமையாக உள்ளது சுய வெளிப்பாடு
பதிலளிநீக்குExcellent Article... Kudos & respects to Shakila and thanks to you for bringing such nice Q & A.
பதிலளிநீக்குவெளிப்படயான வரலாறு. கவர்ச்சி மட்டுமே இவர்களது வாழ்க்கை என்று நினைப்போர் படிக்க வேண்டியது.
பதிலளிநீக்கு