‘எழுபது ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நோயை ஏழே நாட்களில் விரட்ட முடியாது’ என்று வீராவேசமாக பாஜகவினர் பேசிவருகிறார்களே? நாட்டை அரித்துக் கொண்டிருக்கும் நோய் உண்மையிலேயே கருப்புப் பணம்தானா?
சிக்கலான எந்தப் பிரச்சினைகளுக்கும் எளிமையான தீர்வு இருக்கவே முடியாது என்பதுதான் உலக வரலாறு நமக்கு எடுத்துரைக்கும் உண்மை. அப்படியிருக்க ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெற்று விட்டால் கருப்புப் பணம் ஒழிந்துவிடுமென்றால், ஊழலில் புரையோடி திவால் ஆகும் நிலையில் இருக்கும் உலகின் மற்ற நாடுகளும் இந்த எளிமையான தீர்வை எட்டியிருக்க வேண்டுமா, இல்லையா?
‘ஜெய்ஹிந்த்’, ‘பாரத் மாதா கீ ஜே’ போன்ற உசுப்பேற்றும் தேசபக்தி கோஷங்களை புறம் தள்ளிவிட்டு யதார்த்தமாக கொஞ்சம் யோசிப்போம்.
உயர்மதிப்பு கரன்ஸிகளான 500, 1000 அரசால், வங்கிகள் வாயிலாக திரும்பப் பெறப்பட்டு மாற்றாக புதிய 2000, 500 ரூபாய் தாள்கள் வினியோகிக்கப்படுகின்றன. ஏற்கனவே புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் தாள்களின் மதிப்பு சுமார் 14 லட்சம் கோடி. இந்த இருபது நாட்களில் வங்கிகளில் அடாவடியாக மக்களிடம் இருந்து பிடுங்கிய பணம் சுமார் 8 லட்சம் கோடி. இன்னும் ஒரு மாத காலத்தில் மேலும் பல்லாயிரம் கோடிகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும்.
பழைய கரன்ஸிகளுக்கு மாற்றாக இவர்கள் வழங்கிய புது கரன்ஸி, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாற்றித் தந்த பணத்தின் மதிப்பு குறித்த தொகைரீதியான தகவல்கள் எதுவும் துல்லியமாக இல்லை. வங்கிகள் தவிர்த்து மக்களிடம் புழக்கத்தில் மூன்று அல்லது நான்கு லட்சம் கோடிகளாவது அன்றாடச் செலவுகளுக்கு இருக்கலாம் என்று கருதலாம். இந்தப் பணம் கூட மக்களிடையே இல்லாமல் இருக்கும் பட்சத்தில், இந்தியாவில் எதுவுமே நகர வாய்ப்பில்லை.
இன்னமும் பழைய மதிப்பை ஈடுகட்டும் அளவுக்கு ரிசர்வ் வங்கியும் 2000 மற்றும் 500 ரூபாய் தாள்களை முழுமையாக அச்சிட்டிருப்பதாகவும் தெரியவில்லை. இவை ஒன்று அல்லது இரண்டு லட்சம் கோடியாக இருக்கலாம். ஒருவேளை அதற்கும் கூடுதலாக இருக்கலாம்.
சரியா? ஒரு வழியாக இந்த பதினான்கு லட்சம் கோடி என்பது ஏறக்குறைய ஒருவழியாக கணக்குக்கு வந்துவிடுகிறது.
அப்படியெனில், கணக்குக்கு வராத பணம் - அதாவது கருப்புப்பணம் - எங்கே போனது? கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் எல்லாம் அப்படியே எரித்துவிடுவார்கள், ஆற்றில் எறிந்துவிடுவார்கள் என்கிற எதிர்ப்பார்ப்பு பொய்யாகதானே போயிருக்கிறது? மோடி அரசின் இந்த செயல் திட்டம் மன்மோகன்சிங் சொல்வதை போல வரலாற்று மோசடி அல்லவா? மோடியின் இந்த அறுவைச் சிகிச்சைக்கு பின்னால் என்னதான் நோக்கம் இருக்க முடியும்?
இங்குதான் ரிச்சர்ட் பேக்கர் எழுதிய ‘அமெரிக்கா : ஜனநாயக மோசடியும், வங்கிகளின் கொள்ளை ஆட்சியும்’ கட்டுரை நமக்கு, இந்த மோசடியின் பின்னால் இருக்கும் நிஜமான அரசியலை அம்பலப்படுத்துகிறது.
இக்கட்டுரை அமெரிக்காவின் சோசலிஸம் மற்றும் விடுதலைக்கான கட்சியால் வெளியிடப்பட்டது. தமிழில் 48 பக்க சிறுநூலாக விடியல் பதிப்பகத்தால் நிழல்வண்ணன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 2013ல் வெளியிடப்பட்டிருக்கிறது.
அந்நூலின் பதிப்புரையில், ‘கடந்த 25 ஆண்டுகளாக உலகமயமாக்கலின் விளைவாக உற்பத்தித்துறை முதலாளிகள் (பெரும்பாலும் சிறு/நடுத்தர/குறு முதலாளிகள்) முதல் அனைத்துத் துறை உழைப்பவர்கள் வரை தங்கள் உபரி சேமிப்பை/உழைப்பை வங்கிகள் என்கிற கொள்ளையர்களிடம் இழந்துவருகிறார்கள். நிதி மூலதனத்தின் ஆட்சியே உலகின் ஆட்சி’ என்று குறிப்பிடப்படுகிறது.
மேலும், ‘அத்தகைய கொள்ளையின் அடுத்தக்கட்டம் இந்தியாவில் இனி கூடுதலாக நடக்க உள்ளது’ என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே மிகச்சரியாக தற்போது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை குறித்து ஆரூடம் சொல்கிறது.
வங்கிகளின் லாபவெறிச் செயல்பாடுகள் அமெரிக்கப் பொருளாதாரத்தையே பெரும் நெருக்கடிக்கு எப்படி உள்ளாக்கியது, அந்த நெருக்கடியை அரசின் மீது திணித்து தம்மை மீட்டுக் கொள்ளும் முயற்சியில் மக்களை எப்படி தெருத்தெருவாக விரட்டித் தள்ளினார்கள், மக்களின் வரிப்பணத்தின் பெரும்பகுதியை அபகரித்துக் கொண்டு மக்களை எப்படி ஓட்டாண்டி ஆக்கி வருகிறார்கள் என்பதை விளக்குவதே அந்நூலின் சாரம்.
வீட்டுக்கடன், கல்விக்கடன், பர்சனல் லோன், கடன் அட்டைகள் எனும் பெயரில் மக்களை சுரண்டிக் கொழிக்கும் வங்கிகள், பெருமுதலாளிகளுக்கு மக்களின் பணத்தை கூட்டிக் கொடுத்துவிட்டு, மக்கள் தங்கள் கடனை கட்டாததால்தான் நாங்கள் திவாலாகப் போகிறோம் என்று அரசை மிரட்டி, அரசிடமிருந்து மக்களின் வரிப்பணத்தையும் அபகரிக்கின்றன என்று அந்நூல் விலாவரியாக தகுந்த உதாரணங்களோடு சொல்கிறது.
2008ஆம் ஆண்டு அக்டோபரில் அமெரிக்க அரசாங்கம் மக்களின் பணத்திலிருந்து 700 பில்லியன் டாலரை (42,00,000 கோடி ரூபாய்) வங்கிகள், நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக செலவிட்டது. இந்திய அரசுக்கு அவ்வளவு துப்பில்லை. மக்களை வலுக்கட்டாயமாக தங்களிடமிருக்கும் ஐநூறு, ஆயிரம் பணத்தை வங்கிகளுக்கு தாரைவார்க்க வைத்திருக்கிறது. இவ்வகையில் முதலாளித்துவத்தின் உச்சம் என்று சொல்லப்படும் அமெரிக்காவைவிட மிக கீழ்த்தரமாக செயல்பட்ட நாடு என்கிற அவலமான பெருமை நமக்கு கிடைத்திருக்கிறது.
அமெரிக்காவில் அவ்வாறு வங்கிகளுக்கு கொடுக்கப்பட்ட மக்கள் பணம், எவ்வகையில் செலவிடப்பட்டது, எப்படி வங்கிகளின் நிதிநிலைமையை சரிசெய்தது என்கிற கேள்விகளுக்கு எந்த அமெரிக்க வங்கியுமே பதில் அளிக்கவில்லை. ஜே.பி.மார்கன் சேஸ், நியூயார்க் மெல்லன், மார்கன் ஸ்டான்லி உள்ளிட்ட வங்கிகள் நேரடியாகவே அது ரகசியம், வெளியிடுவதற்கில்லை என்று மறுத்தன.
2008 பொருளாதார வீழ்ச்சியின் போது இந்தியா பெருமளவில் பாதிக்கப்படவில்லை. அயல்நாட்டு முதலீடுகள் குறைந்தனவே தவிர, நேரடியாக இந்திய சந்தை பாதிக்கப்படாத அளவுக்கு ஓரளவுக்கு பாதுகாப்பானதாகவே இருந்தது. இங்கிருக்கும் வங்கிச் சந்தை பெரும்பாலும் பப்ளிக் செக்டார் நிறுவனங்களாக அரசின் கட்டுப்பாட்டில் (தேசியமயமாக்கிய இந்திராவுக்கு நன்றி) இருந்ததால், அமெரிக்க வங்கிகள் அளவுக்கு ஆணவத்தில் ஆடாமல் இருந்தன.
ஆனால்-
அமெரிக்காவில் வங்கிகளுக்கு புஷ்/ஒபாமா காலக்கட்டங்களில் காட்டப்பட்ட ‘செல்லம்’, இங்கிருந்த வங்கி முதலைகளின் நாக்கில் நீர் சுரக்க வைத்திருக்க வேண்டும். அடுத்த ஐந்தாண்டுகளில் கமிஷன் காரணமாகவோ, அரசியல் அழுத்தத்தாலோ அல்லது வேறு என்ன எழவுக்காகவோ பெருமுதலாளிகளுக்கு கடனாக வாரி வழங்கத் தொடங்கினார்கள். அந்நிய முதலீடு குறைந்ததால், உள்ளூர் வங்கிகளின் கடனில்தான் தொழில் விரிவாக்கம் சாத்தியம் என்று இந்நடவடிக்கைகளுக்கு சப்பைக்கட்டு கட்டப்பட்டது.
கடனை வாங்கிய விஜய் மல்லையாக்கள் உல்லாசமாக அவற்றை செலவழித்துவிட்டு, கடனை திருப்பிக் கட்ட முடியாது என்று அழிச்சாட்டியம் செய்ய ஆரம்பித்தார்கள். வங்கிகளில் நிதிநிலைமை டாஸ்மாக் குடிகாரனை காட்டிலும் மோசமாக தள்ளாட ஆரம்பித்தது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டுத் தொடக்கத்தில் 15 பொதுத்துறை வங்கிகள் ஒட்டுமொத்தமாக தங்களுக்கு 23,493 கோடி ரூபாய் நஷ்டம் என்று கணக்கு காட்டியிருக்கின்றன. பஞ்சாப் நேஷனல் பேங்க் (5,367 கோடி), கனரா பேங்க் (3,905 கோடி), பேங்க் ஆஃப் இண்டியா (3,587 கோடி), பேங்க் ஆஃப் பரோடா (3,230 கோடி) என்று நஷ்டத்தில் சாதனை புரிந்திருக்கின்றன நமது வங்கிகள். கடந்த ஆண்டு தொடக்கத்தில் இதே காலாண்டில் இந்த வங்கிகள் 8,500 கோடி ரூபாய் லாபம் காட்டியவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஓராண்டுக்குள் அப்படி என்ன பெரிய எழவு இந்தியாவுக்கு விழுந்துவிட்டது என்றுதான் தெரியவில்லை.
இதற்கு காரணமானவர்கள் யார் என்று விசாரணை நடத்த வேண்டிய அரசோ, கள்ளப் பண முதலைகளை வேட்டையாடுகிறோம் என்று மக்களை தெருவில் நிற்கவைத்திருக்கிறது. இந்த மோசடிகளை மூடி மறைக்கதான் இந்த நடவடிக்கையோ என்றும் கருத வேண்டியிருக்கிறது.
பொதுத்துறை வங்கிகள் ததிங்கிணத்தோம் போடும் இதே காலாண்டில்தான் தனியார் வங்கிகள் 14% வளர்ச்சியை காட்டியிருக்கின்றன. அதாவது தொழில் வளர்ச்சிக்காக அங்கே கடன் வாங்கிய பெருமுதலைகள், அந்தப் பணத்தில் பெரும்பான்மையை தங்கள் சொந்தக் கணக்கில் இங்கே பாதுகாத்துக் கொண்டு, அரசு வங்கிகளிடம் நஷ்டம், கடனை திருப்பிச் செலுத்த முடியாது என்று பெப்பே காட்டுகிறார்கள் என்று நாம் புரிந்துக்கொள்ள முடிகிறது.
காசில்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த வங்கிகளில்தான் இப்போது 500, 1000 செல்லாது என்று நம்முடைய பணத்தை கொண்டுப்போய் கொட்டிக் கொண்டிருக்கிறோம். நாம் பணத்தைக் கொட்டியதுமே பெருமூச்சு விட்ட ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியா, வாங்கியதற்கு வாலாட்டும் விதமாக உடனடியாக ஏழாயிரத்து சொச்சம் கோடியை வெட்கமே இல்லாமல் பெருமுதலாளிகளுக்கு writeoff செய்திருக்கிறது.
ஊழலில் ஊறித்திளைத்து மக்களுக்கு உபதேசம் செய்யும் இந்த உத்தமன்களின் பொருளாதார நிலைமையை சீர்செய்யதான் நாம் தெருத்தெருவாக அலைந்துக் கொண்டிருக்கிறோம். போட்ட பணத்தை ஏடிஎம்மில் எடுக்க முடியாமல் / வங்கிகளிலும் வாரத்துக்கு இவ்வளவு என்கிற கட்டுப்பாட்டில் முழி பிதுங்கிக் கொண்டிருக்கிறோம். நம் பணத்தை கொடுக்க நமக்கே மை வைத்து அசிங்கப்படுத்துகிறார்கள். நிஜமான கருப்புப் பணமெல்லாம் பாதுகாப்பாக தங்கமாகவும் / வெளிநாட்டு வங்கிகளிலும் ‘அரசு மரியாதையோடு’ அடக்கமாக இருக்கிறது.
‘ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கைய்யே’ என்பதுதான் மோடி அரசின் திட்டம். மக்களின் பணத்தை வலுக்கட்டாயமாக பிடுங்கி, பெருமுதலாளிகளுக்கு கடனாக கொடுக்கப்பட்டதால் வங்கிகளுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சமாளிப்பதே இந்த கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையின் நிஜமான நோக்கம். உலக வரலாற்றிலேயே மக்களை பொய் சொல்லி வதைக்கும் இப்படியானதொடு மோசடி நாடகத்தை பாசிஸ்ட்டு ஆட்சியாளர்கள் கூட அரங்கேற்றியதில்லை.