வாசிக்கப் பிடிக்குமே தவிர்த்து, கதைகள் எழுதுவதில் சொல்லிக் கொள்ளும்படி விருப்பம் எதுவுமில்லை. தமிழில் வலைப்பதிவு, வலைப்பூ என்றெல்லாம் சொல்லப்படும் blogகள் பிரபலமடைந்த காலக்கட்டத்தில் தினமும் ஏதாவது பதிவு எழுதி தொலைக்க வேண்டிய (இப்போது ஃபேஸ்புக்கில் டெய்லி நாலு ஸ்டேட்டஸ் போட்டே ஆகவேண்டிய கட்டாயம் இருப்பதை போல) துர்பாக்கிய நிலையில் கிறுக்க ஆரம்பித்தேன்.
தனி நபர்களின் வலைப்பூக்களை திரட்டி அனைவருக்கும் காட்டுவதற்கு அப்போது நான்கைந்து வலைத்திரட்டிகள் இருந்தன. அதில் ஒரு வலைத்திரட்டி மாதாமாதம் சிறுகதைப் போட்டிகள் நடத்தும். சிறுகதை மாதிரியுமில்லாத / கட்டுரை மாதிரியுமில்லாத ஒரு கதையை ஒரு இருநூறு/இருநூற்றி ஐம்பது வார்த்தைகளில் பதிவாக போட்டு, போட்டிக்கு அனுப்பி வைத்தேன்.
நம்பவே மாட்டீர்கள். எனக்கு முதல் பரிசே கொடுத்துவிட்டார்கள்.
அதன்பிறகு ஊக்கம் பெற்று அவ்வப்போது எதையாவது கிறுக்கிக் கொண்டிருப்பேன். வெகுஜன வார இதழ்களில் எப்போதாவது நாலு / ஐந்து பக்கம் எதையாவது fillup செய்ய வேண்டுமென்றால், ‘யுவகிருஷ்ணா கிட்டே ஏதாவது கதை மாதிரி கேளு’ என்று கேட்டு வாங்கிக் கொள்வார்கள்.
‘காதல் வழியும் கோப்பை’ என்கிற இந்த முதல் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான கதைகள் அப்படி அவசரத்துக்கு டைப்பப்பட்டவைதான். இதுவரை சிறுபத்திரிகையில் ஒரே ஒரு கதைதான் எழுதியிருக்கிறேன். அதுவும்கூட என் மீது பெரும் நம்பிக்கை வைத்து அண்ணன் வாசுதேவன் ‘அகநாழிகை’யின் முதல் இதழில், ‘கிளி ஜோசியம்’ என்கிற கதையை வெளியிட்டார். ‘அகநாழிகை’ தொடர்ச்சியாக வெளிவராமல் போனதற்கு எவ்வகையிலும் அந்த கதை காரணமல்ல.
ஏதோ தன்னடக்கத்தாலோ அல்லது சுயகழிவிரக்கத்தாலோ நான் எழுதிய கதைகளை நானே தரம் குறைத்துச் சொல்வதாக நினைக்க வேண்டாம். நான் எழுதிய கதைகளின் தரம் என்பது அதன் வாசிப்பு சுவாரஸ்யத்தை நோக்கமாகக் கொண்டு அமைந்தவை. அடிப்படையில் நான் பத்திரிகையாளன் என்பதால், புனைவு எழுத முயற்சித்தாலும் ஒருமாதிரி ரிப்போர்ட்டிங் பாணி வந்துவிடும். வெகுஜன வாசகர்களை நோக்கியே எழுதப்படுபவை என்பதால், வாசிப்பவர்களின் நாக்கு சுளுக்கிக் கொள்ளும் அபாயம் நிச்சயம் நேராது. படைப்பூக்கம், வாழ்வியல் தரிசனம், கவித்துவத் தருணம், யதார்த்தத்தை எதிர்கொள்ளும் அவலம், இத்யாதி இத்யாதி இலக்கிய விபத்துகள் எதுவும் என் கதைகளை வாசிப்பவர்களுக்கு நேராது என்பதற்கு மட்டும் உறுதி தருகிறேன். மிகக்குறைந்தபட்ச உத்தரவாதமாக இந்த கதைகளை படிக்கும் யாருக்கும் பைத்தியம் பிடிக்காது, தற்கொலை எண்ணம் அறவே வராது என்பதை சவாலாகவே கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
சீரியஸாக எதையேனும் எழுத முயற்சித்தாலும் கூட என்னுடைய தனித்துவமான இயல்பான விடலைத்தனம் அதை குலைத்து விடுகிறது. என்னுடைய இந்த பண்பினைகூட, நான் எழுதிய முதல் நாவலான ‘அழிக்கப் பிறந்தவன்’ வாசித்துவிட்டு ஜெயமோகன்தான் கண்டுபிடித்துச் சொன்னார். நான் எப்படி இருக்கிறேன் என்பதை நானே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு எப்படிப்பட்ட மக்கு பிளாஸ்திரியாக இருக்கிறேன் பாருங்கள். எனக்கு புனைவு ஆற்றல் கொஞ்சம் குறைவு என்பதால் பார்த்த/கேட்ட/கேள்விப்பட்ட விஷயங்களை கதைகளாக மாற்ற முயற்சித்திருக்கிறேன். ‘முகம்மது பின் துக்ளக்’ படத்தின் டைட்டிலில் ‘டைரக்ஷன் கற்றுக் கொள்ள முயற்சி’ என்று சோ, தன்னுடைய பெயரை போட்டார். அதுபோல ‘கதை எழுத முயற்சி’ என்று இந்த தொகுப்பினை எடுத்துக் கொள்ளலாம். எனக்கு கதை எழுதத் தெரியும் என்று நானே நம்பாதபோது, என்னை எழுத்தாளன் என்று நம்பி தொடர்ச்சியாக ஊக்குவித்துக் கொண்டிருப்பவர் அண்ணன் கே.என்.சிவராமன். இவரைப் போலவே யெஸ்.பாலபாரதிக்கும் என் மீது நிறைய நம்பிக்கை உண்டு. இவர்களைப் போன்ற அண்ணன்கள் இல்லையேல் நான் இல்லை.
‘உயிர்மை’ மனுஷ்யபுத்திரன் எனக்கு நண்பர். பதிப்பு என்பதை பிசினஸாக பார்ப்பவரல்ல. அவருக்குள்ளும் ஒரு விடலை உண்டு. “ஏன் இதையெல்லாம் புக்கா போடக்கூடாதா? போட்டா படிக்க மாட்டாங்களா?” என்று வீம்புக்காகவே நிறைய புத்தகங்களை பதிப்பித்தவர். ‘சரோஜாதேவி’ என்கிற என்னுடைய கட்டுரைத் தொகுப்பை அப்படிதான் பதிப்பித்தார். தன்னுடைய நண்பர்களை கவுரவப்படுத்தவே பல புத்தகங்களை பதிப்பிக்கும் தாராளமயவாதி அவர். யுவகிருஷ்ணாவின் நூலை பதிப்பித்தால் லாபம் வரும் என்றெல்லாம் எந்த எதிர்ப்பார்ப்புமில்லாமல், நட்பு கருதி மட்டுமே “ஏதாவது புக்கு கொடுங்களேன்” என்று கேட்கக் கூடியவர். இந்த நூலையும் நட்பு அடிப்படையில்தான் கொடுத்திருக்கிறேன், அவரும் பதிப்பிக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை, “நான் உங்களோட புக்கை போட்டுட்டேனா, நீங்க எனக்கு ஜென்ம விரோதி ஆயிடுவீங்க’ என்று சவால் விட்டார். அவருடைய கடந்தகால அனுபவங்கள் அப்படி. இன்று அவரை ஃபேஸ்புக்கில் திட்டிக் கொண்டிருக்கும் பல இளம் எழுத்தாளர்களும், ஒரு காலத்தில் ‘என்னோட புக்கை போடுங்க’ என்று அவரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தவர்கள்தான். அந்த பழைய வரலாறு தொடர்பான ஆவணங்களுக்கு இன்றும் ஆதாரமாக இருக்கக்கூடிய போட்டோக்களை பார்த்தாலே தெரியும். அதிமுக அமைச்சர்கள் மாதிரி பணிவாக மனுஷ்யபுத்திரனோடு போஸ் கொடுத்திருப்பார்கள். நான் எந்த காலத்திலும் ‘எழுத்தாளர்’ என்கிற அந்தஸ்தை ‘பதிப்பாளர்’ என்கிற முறையில் அவரிடம் கோரவே மாட்டேன். மனுஷ்யபுத்திரனுக்கு நண்பன் என்பதைவிட அதெல்லாம் பெரிய கவுரவமில்லை. என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பை பிரசுரிக்கிறார் என்பதால் அவருக்கு நன்றி எதுவும் சொல்லப் போவதில்லை. வேண்டுமென்றால் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாலு பேர் கூடுதலாக அவரை திட்டுவதற்குதான் இந்த புத்தகம் பயன்படப் போகிறது.
ரைட்டு. கதைகளுக்கு வருவோம். கதை என்று நினைத்து நான் எழுதிய பல கதைகள் தேறவே தேறாது என்கிற சுயதணிக்கை செய்து, அப்படி இப்படி பீராய்ந்து தேற்றிய கதைகள்தான் இவை. ஒரு பக்கக் கதைகளை தவிர்த்திருக்கிறேன். ‘தினகரன் வசந்தம்’ இதழில் எழுதிய ‘நீலவேணி’ என்கிற தொடர்கதையை இந்தத் தொகுப்பில் ஏன் சேர்க்கவில்லை என்று எனக்கே தெரியவில்லை. அது கொஞ்சம் நீளமான கதையென்று தொகுக்கும்போது தோன்றியதா என்றும் எனக்கு நினைவில்லை.
இவற்றில் சில கதைகள், எனக்குள் சில பசுமையான நினைவுகளை மலரவைக்கின்றன.
விகடன் குழுமம், ‘டைம்பாஸ்’ இதழுக்கு முன்னோட்டமாக ‘யூத்ஃபுல் விகடன்’ என்றொரு இணையத் தளத்தை தொடங்கியபோது, அதில் ஆரம்பக் கட்டத்தில் நிறைய எழுதினேன். ‘காதலித்த கதை’, ‘நாய் காதலன்’, ‘இன்டர்நெட் ரோமியோ’ போன்றவை அதில் எழுதியவைதான்.
‘புதிய தலைமுறை’ இதழ் கதைகளை வெளியிடுவது கிடையாது. அனேகமாக அந்த வார இதழில் நான் மட்டும்தான் கதை எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். அந்த கதை ‘புரட்சியும் பூர்ஷ்வாவும்’.
நண்பர் மை.பாரதிராஜா, ‘சூர்யக்கதிர்’ இதழைப் பார்த்துக் கொண்டிருக்கும்பொது நிறைய கதைகளை வாங்கி வெளியிட்டிருக்கிறார். “தலைவா, ஒரு மூணு பேஜ் பார்சல் பண்ணுங்க” என்று கேட்டால், அடுத்த ஒரு மணி நேரத்தில் பார்சல் செய்துவிடுவேன்.
ஆனந்த விகடனில் முதன்முதலாக ‘அசோகர் கல்வெட்டு’ என்கிற சிறுகதையை எழுதினேன். ஹாசிஃப்கான் முதன்முதலாக ஒரு கதைக்கு சித்திரம் போட்டது அந்த கதைக்குதான் என்று ஞாபகம்.
ஒருமுறை மனுஷ்யபுத்திரனிடம் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸாகவே ஒரு தொடர்கதை எழுதுவதாக சவால் விட்டேன். தினம் ஒரு பத்தி என்று ஒரு மாதத்துக்கு ஸ்டேட்டஸாகவே போட்டுக் கொண்டிருந்தேன். அதற்கு மேல் முடியவில்லை. அந்த கதையை பிற்பாடு ‘பாம்பு புகுந்த காதை’யாக கொஞ்சம் நீண்ட கதையாக எழுதி முடித்தேன்.
ஒருவேளை இந்த நூலை நீங்கள் வாங்கிப் படிக்கப் போகிறீர்கள் என்றாலும் இதெல்லாம் தேவையில்லாத தகவல்கள்தான். இருந்தாலும் எனக்கு நானே சும்மா ரீவைண்ட் செய்துக்கொள்ள இதையெல்லாம் எழுதித் தொலைக்க வேண்டியதாக இருக்கிறது.
இப்போதே இணையத்தில் நண்பர்கள் கதிரேசனும், குகனும் அட்வான்ஸ் புக்கிங் செய்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் வாங்கியேதான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தப் போவதில்லை. வாங்குவதாக இருந்தால் வாங்குங்கள். மேலே குறிப்பிட்ட மாதிரி இந்த நூலை வாசிப்பதால் உங்களுக்கு விபத்து கிபத்து எதுவும் நேர்ந்துவிடாது. அதேபோல வாசிக்காமல் மிஸ் செய்துவிட்டாலும் யாரும் தலையை வாங்கிவிடப் போவதில்லை.
நண்பர் கதிரேசன் சேகர் மூலம் தொலைபேசியில் வாங்க அழைக்கவும் 8489401887. VPP அல்லது India Post மூலம் புத்தகம் உங்கள் இல்லம் தேடி வரும்.....