7 டிசம்பர், 2016

புரட்சித்தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா!

அது 1988ஆம் ஆண்டு. சென்னைக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமம். இரவு எட்டு மணி இருக்கலாம். ஏராளமான பொதுமக்கள் திரண்டிருக்கிறார்கள். கொடியேற்ற ஜெயலலிதா வருகிறார். அந்தக் கூட்டத்திலே ஒரு சிறுவனும் இருந்தான். ஜெயலலிதா வந்தவுடன் உதயசூரியன் சின்னத்தை காட்டுவேன் என்று நண்பர்களிடம் சபதம் செய்திருந்தான். இரவு 11.30 மணியளவில் ஜெ. புயலென வருகிறார். மின்னல் வேகத்தில் கொடி ஏற்றுகிறார். "புரட்சித்தலைவி வாழ்க" கோஷம் விண்ணை முட்டுகிறது. உதயசூரியன் சின்னம் காட்டுவேன் என்று சபதம் எடுத்தச் சிறுவனோ அம்மாவின் வசீகரத்தால் கவரப்பட்டு இரட்டை இலை காட்டுகிறான். அந்த வசீகரம் தான் புரட்சித்தலைவி ஜெயலலிதா. மக்களை கவர்ந்திழுக்கக் கூடிய அவரது வசீகரமான முகம் தான் அவரது வெற்றிகளுக்கெல்லாம் அச்சாணி.

உலகிலேயே ஓர் அரசியல் தலைவருக்கு மிக அதிகமான நெகடிவ் பாயிண்ட்ஸ் இருக்கிறது என்றால் அது செல்வி ஜெயலலிதாவுக்கு தான். அவரது சர்ச்சைக்குரிய நட்பு, பிடிவாதம், கோபம், முன்னுக்குப் பின் முரணாக நடக்கும் செயல், அவசரப்படும் தன்மை, ஆட்சியியல் நிர்வாகத் திறமையின்மை என்று ஏகப்பட்ட பின்னடைவுத் தரக்கூடிய விஷயங்கள் அவரிடம் உண்டு. இருப்பினும் தொடர்ந்து அரசியல் ஓட்டத்தில் ஓடி வெற்றி பெற்று வருவதற்கு காரணம் மாற்றாரையும் வசீகரிக்கக்கூடிய அவரது "மாஸ்".

அதுபோலவே பொதுவாழ்வில் ஈடுபடக்கூடிய ஒவ்வொரு பெண்ணுக்கும் ICON அவர். எத்தகைய கடுமையான சூழலையும் முறியடித்து வெற்றி பெறுவது எப்படி என்பதற்கு ஜெயலலிதா தான் சரியான முன்னுதாரணம். எப்படியெல்லாம் ஒரு பெண் நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கும் அவரே முன்னுதாரணம். எந்த ஒரு சூழ்நிலையிலும் இவர் இதைத்தான் செய்வார் என்று கொஞ்சமும் கணிக்க முடியாத இரும்புத்திரை அவரது மனம். அம்மா ஒரு முடிவெடுத்து விட்டால் அதை ஆண்டவனால் கூட மாற்ற முடியாது என்பது அதிமுகவின் கடைக்கோடித் தொண்டனுக்கும் தெரியும்.

82ஆம் ஆண்டு ஜூன் மாதம் திரையுலகில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார் ஜெயலலிதா. அரசியலில் ஈடுபட முடிவு செய்து எம்.ஜி.ஆர். முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். இவரெல்லாம் முதல்வர் ஆவார் என்று யாருமே எண்ணிப் பார்த்திருக்க முடியாது. சுமார் ஆறு மாதம் கழித்து 83 ஜனவரியில் கட்சியின் கொ.ப.செ.வாக அறிவிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் அரசின் ஸ்டார் திட்டமான சத்துணவுத் திட்டத்தின் உயர்குழுவிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். கொஞ்சம் கொஞ்சமாக கட்சியைப் பிடியில் கொண்டு வரும் முயற்சியை மேற்கொண்டார். அவருக்கென தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஆதரவாளர்கள் பெருகினார்கள். சேலம் கண்ணன் என்பவர் ஜெயலலிதாவின் காட்பாதராகச் அந்நேரத்தில் செயல்பட்டார் (இப்போது அட்ரஸே இல்லை. இருக்கிறாரோ இல்லையோ?)

மேலும் மூன்று மாதம் கழிந்த நிலையில் ஜெ.வின் வற்புறுத்தலால் எம்.ஜி.ஆர் அவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியும் வழங்கினார். பாராளுமன்றத்துக்கு சென்றவர் அறிஞர் அண்ணா அமர்ந்த இருக்கை எதுவென்று கேட்டு, அவ்விருக்கையை தனக்கு வாங்கிக் கொண்டார். இதற்குப் பின் அவரது வளர்ச்சி ஜெட் வேகம் தான். எம்.ஜி.ஆராலேயே அவரது வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை. எம்.பியாக தேர்ந்தெடுக்கப் பட்டதுமே யாரும் எதிர்பார்க்காத வகையில் நேரடியாக பிரதமராக இருந்த இந்திராவைப் போய் சந்தித்தார்.

பன்மொழி ஆற்றல் ஜெ.வின் பெரிய பலம். குறிப்பாக ஆங்கிலத்தில் சரளமாக, சுவையாகப் பேசும் ஆற்றல் பெற்றவர். பாராளுமன்றத்தின் பல விவாதங்களில் அனல்பறக்க அருமையான ஆங்கிலத்தில் உரையாற்றினார். இந்தியைத் தவிர வேறு மொழி தெரியாத பல வடநாட்டு எம்.பி.க்கள் மிரண்டு போயினர். குஷ்வந்த் சிங் அப்போது மேல்சபை எம்.பியாக இருந்தார். அம்மாவின் ஆங்கிலப் பேச்சாற்றலால் கவரப்பட்ட அவர் கூட ‘அம்மாவின் ரசிகர்’ ஆனார். வட இந்தியத் தலைவர்களோடு ஜெ.வுக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது.

இதனால் அரசியலின் சித்து விளையாட்டு அம்மாவுக்கு அத்துபடி ஆனது. பாராளுமன்ற நூலகத்தில் பெரும் நேரத்தை செலவழித்ததாக அவரோடு எம்.பி.யாகப் பணியாற்றியவர்கள் சொல்கிறார்கள். இந்நிலையிலே எம்.ஜி.ஆர் உடல்நலமில்லாமல் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்திரா மரணமடைந்த நிலையில் பிரதமராக பொறுப்பேற்ற ராஜீவ் பாராளுமன்றத் தேர்தலை நடத்துகிறார். பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலும் அனுதாப அலைக்காக இணைந்தே நடக்கிறது. தமிழ்நாட்டிலே நெடுஞ்செழியன் முதல்வருக்கான பொறுப்புகளை ஏற்று பணியாற்றுகிறார்.

அரசியல் அனல் பறந்தது. கலைஞரே கூட எம்.ஜி.ஆர் திரும்பி வந்தால் அவர் தான் முதல்வர் என்று அறிக்கை விட, அம்மா மட்டும் உஷாராக இருந்தார். ராஜீவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திலே தமிழ்நாட்டின் நிர்வாகம் எம்.ஜி.ஆர் இல்லாமல் சீர்குலைந்து இருப்பதால் தன்னை முதல்வராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. அரண்டு போனார் ராஜீவ். ஜெ.வின் அந்த அசட்டுத் துணிச்சல் தான் இன்றுவரை அவரைக் காக்கிறது.

87ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். மரணமடைகிறார். எம்.ஜி.ஆரின் உடல் ராஜாஜி மண்டபத்தில் கிடத்தப்பட்டிருக்கிறது. கட்சி யார் பக்கம்?  அண்ணா மறைந்தபோது நடந்தது போல திரைமறைவில் காய்கள் நகர்த்தப்படுகிறது. ஜெயலலிதா மட்டும் வரக்கூடாது என்று அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் சிலரால் முடிவு எடுக்கப்படுகிறது. ஜானகி அம்மாளை முன் நிறுத்தும் யோசனையை ஆர்.எம்.வீ செயல்படுத்தத் தொடங்குகிறார். எம்.ஜி.ஆரின் உடல் ஏற்றப்படும் பீரங்கி வண்டியிலே ஜெயலலிதாவும் ஏற முயற்சிக்க ஆரம்பத்திலேயே அறுத்து விடும் நோக்கில் ஜானகி அம்மாளின் உறவினரான நடிகர் தீபன் எட்டி உதைக்கிறார். எம்.எல்.ஏ.வாக இருந்த கே.பி.ராமலிங்கம் (இப்போது திமுக) ஓடிவந்து இழுத்து கீழே தள்ளுகிறார்.

இவ்வாறெல்லாம் சொந்தக் கட்சிக்காரர்களாலேயே அவமானப்படுத்தப்பட்ட, அடிக்கப்பட்ட ஜெயலலிதா அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரானது தான் காலத்தின் கோலம். அதிமுக இரண்டாகப் பிரிந்தது. ஜானகி அம்மாளை முன்னிறுத்தி ஆர்.எம்.வீயும், நெடுஞ்செழியனை முன்னிறுத்தி ஜெ.வும் கட்சியைப் பிரித்தார்கள். தக்க சமயத்தில் நெடுஞ்செழியனைத் தட்டி விட்டு தானே முன்னுக்கு வந்தார் ஜெ. நெடுஞ்செழியனோ நால்வர் அணி அமைத்து நாசமாய்ப் போனார்.

இந்தச் சமயத்தில் ஒரு விஷயம் பார்க்க வேண்டும். ஜெ. மட்டும் இந்தக் காரியத்தைச் செய்ததில்லை. இதுபோல தங்களுக்கு மேலே இருந்த தலைவர்களை தட்டி விட்டுத் தான் (அமைதிப்படை அமாவாசை போல) பல தலைவர்கள் புகழ் பெற்றிருக்கிறார்கள். உதாரணத்திற்கு ராஜாஜியை அமுக்கி மேலே வந்த காமராஜர், நெடுஞ்செழியன் - சம்பத் - மதியழகன் - அன்பழகன் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டு மேலே வந்த கலைஞர், அந்தக் கலைஞருக்கே ஆப்பு வைத்த எம்.ஜி.ஆர், காமராஜரை திணறடித்த இந்திரா அம்மையார் என பல உதாரணங்கள் உண்டு. ஒரு வெற்றிகரமான அரசியல்வாதிக்கு தேவையான வல்லமை இது. இன்றைய தேதியிலும் அதிமுகவை இரும்புக் கோட்டையாக ஜெயலலிதா வைத்திருக்க இந்த வல்லமை தான் காரணம்.

89 சட்டமன்றத் தேர்தல் வருகிறது. நான் தான் எம்.ஜி.ஆரின் வாரிசு என்று ஜானகியும், ஜெ.வும் ஆளுக்கொரு பக்கமாக அறிக்கை விட்டு மோதிக் கொள்கிறார்கள். காங்கிரஸ் எப்படியாவது இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கோட்டை கட்டுகிறது. தேர்தல் முடிவுகள் பலருக்கும் (ஏன் கலைஞருக்கும் கூட) அதிர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் அமைந்தது. பிரதான எதிர்க்கட்சித் தலைவி ஆனார் ஜெயலலிதா. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அரசியல் தலைவர்களில் முதலாவதாக தன் சூறாவளி சுற்றுப் பயணத்தை அறிவித்தவரும் அவர் தான். முதலில் வந்த வேட்பாளர் பட்டியலும் அவருடையது தான். இந்த ‘முதல்’ குணம் இன்றுவரை அவரிடம் மாறவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் கூட எல்லா "முதல்’-லும் அவருடையது தான்.

எதிர்க்கட்சித் தலைவி ஆன பிறகு புத்திசாலித்தனமாக கட்சியை இணைத்தார். வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்வார் ஜெயலலிதா. அதுவரை அரசியலில் அவருக்கு பெரும் நெருக்கடிகள் கொடுத்த ஆர்.எம்.வீ-யுடனேயே கட்சியை இணைக்க கை கோர்த்தார். காங்கிரசிடம் இணக்கமாக போக காய்களை நகர்த்தினார். தான் முன்னேற யாருடன் வேண்டுமானாலும் கூட்டு சேருவார், யாரை வேண்டுமானாலும் வீழ்த்துவார்.

இந்த வேளையிலே மத்தியிலே வி.பி. சிங்கிடம் ஆட்சியை இழந்த காங்கிரசுக்கு ஜெ. தேவதையாகத் தெரிந்தார். வி.பி. சிங் பா.ஜ.க.வை முறைத்துக் கொள்ள சந்திரசேகருக்கு அதிர்ஷ்ட தேவதையின் சகாயம் காங்கிரஸ் உருவில் கிடைத்தது. காங்கிரஸ் மூலமாக சந்திரசேகரை உசுப்பேத்தி திமுக ஆட்சியைக் கலைத்தார் ஜெ. இந்த அயோக்கியத்தனத்தில் குடியரசுத் தலைவராக இருந்த வெங்கட்ராமனுக்கும் கூட்டு உண்டு.

91ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் ராஜீவ் எதிர்பாராதவிதமாக மரணமடைந்து விட அம்மாவுக்கு அடித்தது அதிர்ஷ்டம். தமிழக சட்டமன்றத்திலேயே யாரும் பெறாத அளவுக்கு பெருவாரியான வெற்றியை காங்கிரஸ் தயவில் பெற்றார் அம்மா. தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல்வர். இந்தியாவிலேயே இன்றுவரை (43 வயது) இளம்வயதில் முதல்வர் பொறுப்பை ஏற்ற ஒரே பெண். தமிழகத்திலும் மிகக்குறைந்த வயதில் முதல்வர் ஆனவர் இவர் தான். வெற்றி பெறும் வரை தான் அவருக்கு ஏணி வேண்டும். வெற்றி பெற்றப் பின்னால் அதை எட்டி உதைப்பது அவர் வழக்கம். 92ஆம் ஆண்டு ஏணி எட்டி உதைக்கப்பட்டது. காங்கிரஸ் அவமானப்படுத்தப் பட்டது. எட்டி உதைக்கப்பட்ட ஏணியே மீண்டும் மீண்டும் அவர் ஏறிச்செல்ல உதவுவது தான் அரசியலின் விசித்திரம். அம்மாவின் விவேகம் என்றும் சொல்லலாம்.

92ஆம் ஆண்டு ராஜிவின் முதல் நினைவுநாள் வருகிறது. இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் ஸ்ரீபெரும்புதூருக்கு அஞ்சலி செலுத்த வருகிறார்கள். அம்மா போகவில்லை. இதுகுறித்து சட்டமன்றத்திலே ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்புகிறார். "முதல்வர் ஏன் ராஜீவ் நினைவிடத்துக்குச் செல்லவில்லை?" உடனே முதல்வர், "இதுவரை டெல்லியிருந்து தமிழகம் வந்த எந்த காங்கிரஸ் தலைவனாவது எம்.ஜி.ஆர், அண்ணா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்திதுண்டா? நான் மட்டும் ஏன் செலுத்த வேண்டும்?" - இந்தத் துணிச்சல் தான் இன்று வரை எந்த சூழ்நிலையிலும் அவரை தளர விடாமல் காப்பாற்றி வருகிறது.

91 - 96 ஆட்சிக்காலத்தில் அவர் சார்ந்த சாதிக்கு அவர் முன்னுரிமை தருகிறார் என்று எதிர்க்கட்சிகளால் பிரச்சாரம் செய்யப்படும் வேளையில் தன் இமேஜைப் பற்றிக் கொஞ்சமும் கவலை கொள்ளாமல் சட்டமன்றத்திலேயே "நான் பாப்பாத்தி தான்" என்று அறிவித்தார்.... அவர் அதுபோல சொன்னது சரியா? தவறா? என்பது வேறு விஷயம். இமேஜைப் பற்றி பயமில்லாது சொன்ன அவரது தைரியம் வேறு எந்த அரசியல்வாதிக்கும் இன்றைய நிலையில் இல்லை.

96ல் நடந்த தேர்தலில் வரலாறு காணாத தோல்வி. அம்மாவுக்கு வெற்றி எப்படி என்ற வித்தை அத்துப்படியானாலும், அந்த வித்தையை தோற்றுப் போன பின்பு தான் பயன்படுத்துகிறார். 98 பாராளுமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராவிதமாக ஒரு வித்தியாசமான கூட்டணியை உருவாக்கினார். இந்தியாவிலேயே அதுவரை அப்படி ஒரு கூட்டணி அமைந்திருக்குமா என்பது சந்தேகமே. அது எப்படி வெற்றி பெறும் என்று கணித்தாரோ தெரியவில்லை. பா.ஜ.க, பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் சேர்த்து பெரும் வெற்றி பெற்றார்.

அம்மா ஒரு புதிர். எந்த வேளையில் என்ன செய்வார் என்று யாருக்கும் தெரியாது. கட்சியில் யாருக்கு பதவி தருவார். யாருக்கு கல்தா கொடுப்பார் என்று யாரும் ஜோசியம் சொல்ல முடியாது. திடீரென்று அடிமட்டத் தொண்டனை தூக்கி மேலே வைப்பார். மேலே இருந்தவரைத் தூக்கி கீழே எறிவார். இதற்கெல்லாம் அவர் ஏதாவது லாஜிக் வைத்திருக்கிறாரா என்று கொஞ்சமும் புரியவில்லை. இவரது அடுத்த மூவ் என்ன என்பது தெரியாமலேயே கலைஞரின் தலையில் இருந்த கொஞ்ச நஞ்ச முடியும் காணாமல் போனது. ஆனால் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் எப்போதும் நம்பிக்கையோடு இருக்கிறான். ‘அம்மா ஏதாவது செய்வார்’. அந்த நம்பிக்கை திமுக உட்பட வேறு எந்தக் கட்சித் தொண்டனுக்கும் கட்சித் தலைமையால் தரமுடியாமல் இருப்பது அதிமுகவின் பெரிய பலம்.

பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவும் அமைச்சரவையில் இடம் பெறுகிறது. 91 ஸ்டைலில் திமுக ஆட்சியைக் கலைக்க பா.ஜ.க.வை நெருக்குகிறார் அம்மா. பா.ஜ.க. மறுக்க அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சு.சாமியுடன், சோனியாவுடனும் டீப்பார்ட்டியில் கைகோர்க்கிறார். எனக்குத் தெரிந்து பாஸ்டன் தேநீர் விருந்துக்குப் பிறகு மிகவும் உலகப் புகழ்பெற்ற தேநீர் விருந்து அம்மா கலந்து கொண்டதுதான்.

பா.ஜ.க. ஆட்சி கவிழ்கிறது. காட்சிகள் வேகவேகமாக மாறுகிறது. 99 தேர்தல். இந்த முறை விசித்திரமான அரசியல் விளையாட்டில் வெற்றி எதிரிகளுக்குப் போய் சேர்கிறது. துவண்டு விட்டாரா அம்மா? அதுதான் இல்லை. ஏராளமான வழக்குகள். தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமை, அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கிடையே 2001 தேர்தலைச் சந்தித்தார். சூறாவளி சுற்றுப் பயணம். கூட்டணிக் கட்சிகளிடையே தாராளம் என்று தன் பலத்தை அசுரபலம் ஆக்கி தேர்தலிலே வென்றார். 134 தொகுதிகளில் மட்டுமே நின்று மெஜாரிட்டியை அதிமுக பிடித்தது அகில இந்திய அளவிலான சாதனையாக எடுத்துக் கொள்ளலாம்.

இவருடைய 2001 ஆட்சிக்காலத்தில் பலரின் புருவத்தை உயர்த்தும் அளவுக்கு சில முடிவுகளை எடுத்தார். அறிவிக்கப்படாத ராஜகுருவாக இவருக்கு விளங்கிய சங்கராச்சாரியாரை கைது செய்தது இவர் புகழை உலகெங்கும் பரப்பியது. எந்தச் சூழ்நிலையில் அந்த முடிவை எடுத்தார் என்பது இதுவரைக்கும் புரியாத புதிர் தான்.

2006ல் தோல்வி. இதோ முடங்கிவிடாமல் 2009 பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். ஆனால் இம்முறை இதுவரை அவரிடம் பார்க்காத நிதானத்தைப் பார்க்க முடிகிறது. இந்த நிதானம் அவருக்கு வெற்றியை தருமா என்பதை தமிழக வாக்காளர்கள் அளிக்கும் தீர்ப்பில் தான் தெரிந்துகொள்ள முடியும்.

தோல்வியின் விளிம்புக்கும் சென்றிருக்கிறார். வெற்றியின் அதிகபட்ச உயரத்துக்கும் சென்றிருக்கிறார். யாராலும் புரிந்துகொள்ள முடியாத கவர்ச்சி அதிரடி அரசியல்வாதி இவர். இன்னமும் குறைந்தது 15 ஆண்டுக்காலத்துக்கு இவரது பங்கேற்பினை தமிழக அரசியலில் மறுக்க முடியாது. முகலாய மன்னர் அவுரங்கசீப்பை போல மகிழ்ச்சி, கோபம், நயவஞ்சகம், பிடிவாதம், விட்டுக் கொடுக்காத தன்மை, கனிவு, தலைமைப் பண்பு எல்லாம் கலந்த கலவை தான் புரட்சித்தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா!

(2009ஆம் ஆண்டு ஜெ. பிறந்தநாளை முன்னிட்டு ஓர் இணைய இதழுக்கு எழுதிய கட்டுரை)

5 கருத்துகள்:

  1. http://aiadmk.com/en/death-news-salem-kannan-ex-mp-on-17-9-2016/

    பதிலளிநீக்கு
  2. எப்படியெல்லாம் ஒரு பெண் நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கும் அவரே முன்னுதாரணம். - Sad to read this from u at this point of time.. The rest all data of ur article is invalid by this one stmt.

    And u have no rights to talk about அரசியல் நாகரிகம் by simply doing this

    பதிலளிநீக்கு
  3. You mean to say Aurangzeb was the last mugal emperor who had great power, after him the mugal empire vanished.

    பதிலளிநீக்கு