19 ஜூன், 2018

யானை டாக்டர்!

‘இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்கிற சிறப்பு யானைக்குதான் உண்டு. கற்கால காலக்கட்டங்களில் மனிதனுக்கு சினேகமான காட்டுவிலங்காக யானைதான் இருந்திருக்கிறது. தரையில் வாழும் உயிரினங்களில் primateகளுக்கு (கொரில்லா, சிம்பன்ஸி, மனிதனெல்லாம் இந்த வகைதான்) அடுத்தபடியாக யானைக்குதான் அறிவு அதிகம். கருவிகளை பயன்படுத்தக்கூடிய ஆற்றலும், அறிவும் மனிதர்களைத் தவிர்த்து யானைக்குதான் உண்டு.

மனிதர்களைப் போலவே சமூகமாக வாழக்கூடிய நாகரிகம், ஆதிக்காலத்திலிருந்தே யானைகளுக்கு உண்டு. ஒருவேளை தாய்வழி சமூகம் என்கிற வாழ்க்கைமுறையை மனிதர்கள், யானைகளிடமிருந்து கற்றிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆண் யானைகள், பருவம் எய்தக்கூடிய வயது வரை தாயோடுதான் காணப்படும். பெண் யானைகள் கடைசி வரை தாய், சகோதரி, மகள் என்று கூட்டுக் குடும்பமாகவே வசிக்கின்றன.

ஈடு இணையில்லாத இந்த விலங்கினத்தை மனிதர்கள் படுத்திய பாடு கொஞ்சநஞ்சமல்ல. மனிதனோடு சினேகமாக இருக்கக்கூடிய விலங்கு என்பதால், அதை அல்லக்கை மாதிரி மனிதன் பயன்படுத்துகிறான். கடினமான வேலைகளை யானையின் தும்பிக்கை மேல் பாரமாக போடுகிறான். ஆசியாவில் மட்டுமே சுமார் 15,000 யானைகள் இதுபோல மனிதர்களின் வேலைக்காரனாக பணிபுரிவதாக ஒரு கணக்கீடு சொல்கிறது.

யானைகளை கொண்டே யானைகளின் வசிப்பிடமான காடுகளை அழித்து, மனிதர்களுக்கான குடியிருப்புகளாக மாற்றியிருக்கிறோம். வரலாறு நெடுக போர்களில் பயன்படுத்தி பலியிட்டிருக்கிறோம். Zooக்களில் காட்சிப் பொருளாக காட்டுகிறோம். சர்க்கஸ்களில் வித்தை செய்ய விடுகிறோம். கோயில்களில் கட்டிப் போட்டு, அதன் சுதந்திரத்தைப் பறிக்கிறோம்.

ஆற்றலில் நம்மைவிட பெரிய விலங்கு. எனினும் சுபாவத்தில் கொஞ்சம் நட்பாக பழகுகிறது என்பதால் மனிதக்குலம் யானையிடம் எடுத்துக் கொள்ளும் அட்வாண்டேஜ் கொஞ்சநஞ்சமா?

1930ல் தொடங்கி 1940க்குள் ஒரு பத்தாண்டில் மட்டுமே ஒட்டுமொத்த யானைகளின் எண்ணிக்கையை வேட்டையாடி பாதியாக குறைத்த கொடூரமான சாதனைக்கு சொந்தக்காரர்கள் நாம். வீரத்தை வெளிப்படுத்துகிறோம் என்கிற பெயரில் அப்பாவி யானைகளை தேடித்தேடி கொன்றிருக்கிறோம். அவற்றின் தந்தங்களை வெட்டி வீடுகளில் ஃபர்னிச்சர்களுக்கு பயன்படுத்தியிருக்கிறோம்.

சமீபமாகதான் யானை குறித்த இரக்கவுணர்ச்சி நமக்கெல்லாம் ஏற்பட்டிருக்கிறது. அவை பாதுகாக்கப்பட வேண்டிய இனம் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. காலம் கடந்தாவது இந்த ஞானம் நமக்குப் பிறந்ததே என்று சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

இப்போது யானைகளுக்கு பிரச்னை என்றால், சுற்றுச்சூழலாளர்கள் கை கோர்த்து அவற்றுக்கு உதவுகிறார்கள். அரசும்கூட சரணாலயங்களில் யானைகளுக்கு புத்துணர்வு முகாமெல்லாம் நடத்துகிறது.

இந்த சூழலுக்கு வித்திட்டவர் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்ற டாக்டர் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி. 1929ல் பிறந்து 2002 வரை வாழ்ந்த இந்த கால்நடை மருத்துவர், தன்னுடைய வாழ்நாள் மொத்தத்தையுமே யானைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதிலேயே செலவழித்திருக்கிறார். முதுமலை தெப்பக்காடு யானை முகாம் இவருடைய சிந்தனையில் உதித்த திட்டம்தான்.

சர்வதேச இதழ்களில் இடம்பெற்ற இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள், யானைகளின் இருத்தலியல் குறித்த அவசியத்தை எடுத்துரைத்து உலக சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கியது. விலங்கியல் மருத்துவ உலகம் இவரை செல்லமாக டாக்டர் கே என்றழைக்க, மக்கள் தாமாக முன்வந்து ‘யானை டாக்டர்’ என்கிற பட்டத்தை வழங்கினர்.

கிணறுகளில் விழுவது, நோயுற்று காடுகளில் கிடக்கும் யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதன் பொருட்டு மயக்க ஊசி பயன்படுத்தும் முறையை கால்நடை மருத்துவத் துறையில் முதன்முதலாகப் பயன்படுத்தியவர் இவர்தான். மர்மமான முறையில் மரணிக்கும் யானைகளுக்கும் மனிதர்களுக்கு செய்வதைப் போலவே போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். யானைகளுக்கு எப்படி போஸ்ட்மார்ட்டம் செய்வது என்பதை நேரடியாக செய்தும் காட்டினார். இதன் பிறகே தந்தங்களுக்காக யானைகளை கொல்லும் கடத்தல்காரர்கள், சட்டத்தின் பிடியில் சிக்க ஆரம்பித்தார்கள். கோயில்களில் வளர்க்கப்படும் யானைகளை எப்படி பராமரிக்க வேண்டும், அதற்கான கண்காணிப்பு முறைமைகளை அரசு எப்படி ஏற்படுத்த வேண்டும் என்பதற்கெல்லாம் வழிகாட்டு முறைகளை உருவாக்கியவர் இந்த யானை டாக்டர்தான்.

“யானைகள் இவர் பேசுவதை புரிந்துக் கொள்கின்றன. இவர் பேச்சுக்கு கட்டுப்படுகின்றன” என்று இன்று சர்வதேசப் புகழ் பெற்றிருக்கும் விலங்கியல் நிபுணரான இயான் டக்ளஸ் ஹாமில்டன் நேரடியாக கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார்.

இந்தியாவில் இன்று தோராயமாக 28,000 யானைகள் வசிக்கின்றன. இவற்றில் மூவாயிரத்துக்கும் சற்று குறைவான எண்ணிக்கையில் தமிழகத்தில் இருக்கின்றன. நம்மூர் யானை டாக்டர் மட்டும் இல்லையென்றால், இந்த எண்ணிக்கை பத்தில் ஒரு பங்காக இருந்திருந்தாலே அதிசயம்தான்.

இவர் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘யானை டாக்டர்’ என்கிற சிறுகதை லட்சக்கணக்கான வாசகர்கள் வாசித்து சிலிர்ப்படைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று, யானை குறித்த எந்தவொரு செய்தியை நீங்கள் செய்தித்தாள்களில் வாசித்தாலும், உங்களோடு மானசீகமாக அமர்ந்து புன்னகைத்துக் கொண்டிருப்பார் யானை டாக்டர். உற்று நோக்குங்கள். இந்த கட்டுரையை நீங்கள் வாசிக்கும்போதுகூட உங்கள் எதிரில்தான் இருக்கிறார் டாக்டர் கே.

(நன்றி : குங்குமம்)

2 ஜூன், 2018

அலிபாபா!

அம்மாவை பளாரென்று அறைந்தார் அப்பா.

அதிர்ந்தான் அலிபாபா.

முதன்முறையாக அம்மாவை அப்பா அடிப்பதை இப்போதுதான் பார்க்கிறான்.

அவனைப் பொறுத்தவரை அப்பாதான் உலகிலேயே மிகவும் நல்லவர். வாத்யாரின் வெறிபிடித்த ரசிகர். தலைவரின் உயிரினும் மேலான உடன்பிறப்பு.

அவனுக்கு தெரிந்து அந்த ஊரிலேயே, ஏன் உலகத்திலேயே அலிபாபா என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது அவனுக்குதான்.

வைப்பதற்கு பெயரா இல்லை?

திராவிட இயக்கப் பெயர்தான் வைக்க வேண்டுமென்றால் உதயசூரியனில் தொடங்கி குணசேகரன் வரை எத்தனையோ பெயர்கள் இருக்கின்றன.

அலிபாபாவின் துரதிருஷ்டம் என்னவென்றால் -

அப்பாவுக்கு மிகவும் பிடித்த படம் வாத்யாரின் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’.

1956 ஏப்ரல் 14-ஆம் தேதி அப்பா பிறந்த அன்றுதான் அலிபாபாவாக வாத்யார் நடித்த அந்தப் படம் ரிலீஸ் ஆனதாம்.

நியாயமாகப் பார்த்தால் தாத்தா, அப்பாவுக்குதான் அலிபாபா என்று பெயர் சூட்டியிருக்க வேண்டும்.

என்ன செய்வது?

தாத்தா பழுத்த காங்கிரஸ்காரர்.

அப்பாவுக்கு ஜவகர் என்று தேசியத்தனமாக பெயரை வைத்துவிட்டார்.

அப்பாவோ திராவிட எழுச்சியில் வளர்ந்தவர்.

பத்து வயதிலேயே இந்தி அரக்கிக்கு எதிராக தார்ச்சட்டி ஏந்தியவர். அதனால் தாத்தாவிடம் தடியடியும் வாங்கியவர். தாத்தா, அப்பாவுக்கு வெறும் அப்பா மட்டுமல்ல. தமிழ் சமூகத்துக்கு போலிஸ்காரரும்கூட.

தாத்தா பணிபுரிந்த காவல்நிலையத்தின் பெயர் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்திருக்கிறது. அதை இந்தி என்று தவறுதலாக எண்ணிய ஹைஸ்கூல் மாணவர்கள் சிலர் தார் கொண்டு காவல்நிலையப் பலகையை அழித்திருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் ஆரம்பப்பள்ளி அப்பாவும் இருந்திருக்கிறார்.

அவ்வகையில் அவர் இந்தி எதிர்ப்புப் போராளியாகவும் அறியப்படுகிறார்.

‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தை அப்பா ஐம்பது தடவைக்கு மேல் பார்த்திருக்கிறாராம்.

சிறுவயதில் தன்னை அலிபாபாவாகவே நினைத்துக் கொண்டு பல்லாவரம் குன்றில் போய் ஏதாவது குகையிருக்கிறதா என்று தேடுவதே அவரது வழக்கமாம்.

அந்த எழவெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

அவனுக்கு ஏன்தான் அலிபாபா என்று பெயர் வைத்து தொலைத்தாரோ தெரியவில்லை.

இத்தனைக்கும் அலிபாபா பிறந்தபோது வாத்யார்தான் ஆட்சியில் இருந்தார்.

தலைவரை பிரிந்து வாத்யார் தனிக்கட்சி ஆரம்பித்தபோது, தீவிர ரசிகராக இருந்தும் வாத்யாரோடு போகாமல் தலைவரின் கட்சியிலேயே விசுவாசமாக இருந்தவர் அப்பா.

எதிர்க்கட்சியாக மாறிவிட்டாலும் வாத்யார் மீதான ரசிப்புத்தன்மை மட்டும் அவருக்குள் அப்படியே தங்கிவிட்டது.

பள்ளியில் சேர்க்கும்போது அலிபாபா என்று சொன்னபோது, ஒருமுறைக்கு இருமுறை கேட்டு, அதுதான் நிஜப்பெயரா என்று உறுதிப்படுத்திக் கொண்டார்களாம்.

தனக்கு தன்னுடைய அப்பா நியாயமாக சூட்டியிருக்க வேண்டிய இந்தப் பெயரை சூட்டாத காரணத்தால், தன்னுடைய மகனுக்கு சூட்டி அழகு பார்த்திருப்பதாக பெருமையாக சொல்லியிருக்கிறார்.

“முஸ்லீமா?” என்று கேட்டிருக்கிறார்கள்.

“எனக்கு சாதியுமில்லை. மதமுமில்லை. நாத்திகன். கழகத்தைச் சார்ந்தவன்” என்று அப்பா பகுத்தறிவு எக்காளமிட்டிருக்கிறார்.

“உங்களுக்கு மதமில்லை சரி. எப்படியோ போகட்டும். பள்ளி வழக்கப்படி பையனுக்கு ஏதாவது சாதி, மதம் போட்டே தீரவேண்டும்” என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார் தலைமையாசிரியர். அனேகமாக அவர் காங்கிரஸ் அனுதாபியாக இருந்திருக்க வேண்டும்.

வேறு வழியில்லாமல் வேண்டாவெறுப்பாக ‘இந்து’ என்று போட்டுக்கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறார் அப்பா.

அலிபாபா என்கிற பெயரின் காரணமாக அலிபாபா சந்தித்துவரும் துயரங்கள் எண்ணிலடங்கா.

சக பள்ளி மாணவர்கள் பெயரை சுருக்கமாக முதல் இரண்டு எழுத்துகளில் அழைத்து கேலியாக சிரிப்பதுண்டு.

பெயர் ‘அ’வில் ஆரம்பிப்பதால் வருகைப் பதிவேட்டில் முதல் பெயரே அலிபாபாதான்.

அப்போதுதான் வயசுக்கு வந்த சிறுமி தோற்றத்தில் வெடவெடவென்று ஒல்லியாக சிகப்பாக இருக்கும் ஒண்ணாங்கிளாஸ் காஞ்சனா டீச்சர், ‘அலிபாபா’ என்று கீச்சுக்குரலில் அழைக்கும்போதெல்லாம் வகுப்பறையே கொல்லென்று சிரிக்கும்.

இந்த ‘கொல்’ அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகள் பள்ளிப் பருவம் முழுவதிலும் நிழல்போல இடைவிடாமல் தொடர்ந்தது என்பதுதான் கொடுமை.

அப்படிப்பட்ட அலிபாபாதான் ஆறு வயசாக இருந்தபோது, இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் அதிர்ச்சியடைந்தான்.

ஏனெனில் –

அம்மாவை பளாரென்று அறைந்தார் அப்பா.

அப்போது அவனுக்கு வயசு ஆறுதான்.

வாத்யார் ரசிகர் என்கிற முறையில் ‘தாய்க்கு பின் தாரம்’ என்கிற கொள்கையில் உறுதியோடு இருப்பவர் அப்பா.

அம்மாவை நோக்கி அதிர்ந்து ஒரு வார்த்தைகூட பேசமாட்டார்.

எல்லா அப்பாக்களும் அவரவர் மனைவியை ‘போடீ வாடீ’ என்று அழைக்கும்போது, இவர் ‘டீ’ போட்டு பேசியதுகூட இல்லை.

வாத்யார், தன்னுடைய நாயகிகளுக்கு சினிமாவில் எத்தகைய மரியாதை கொடுத்து நடித்தாரோ, அதை அப்படியே வாழ்க்கையில் கடைப்பிடித்தவர் அப்பா.

அம்மாவை தவிர மற்ற பெண்களை சகோதரி என்றுதான் அழைப்பார்.

அத்தை மற்றும் மாமன் மகள்களைகூட சகோதரி என்று அழைக்குமளவுக்கு வாத்யார்தனமான உயர்ந்த பண்பு கொண்டவர்.

அப்படிப்பட்ட அவரா அம்மாவை அறைந்தார்?

அப்பாவுக்கு இவ்வளவு கோபம்கூட வருமா?

அன்று காலை அலிபாபா வசித்துவந்த கிராமமான மடிப்பாக்கமே விழாக்கோலம் பூண்டு இருந்தது.

தலைவர் வருகிறார்.

மடிப்பாக்கம் கிராம கிளைக்கழகச் செயலராக இருந்தவர் மோ.அமரசிகாமணி.

ஒருவகையில் தலைவரின் துணைவியாருக்கு உறவுமுறையில் தம்பி.

அரசுப்பணியில் இருந்தவரான அமரசிகாமணி, தன்னுடைய துணைவியார் வள்ளி பெயரில் அரசியலில் இயங்கிக் கொண்டிருந்தார்.

அடுத்து வரவிருந்த உள்ளாட்சித் தேர்தலில் தன்னுடைய மனைவியை பஞ்சாயத்துத் தலைவராக்கி அழகு பார்க்க உறுதி பூண்டிருந்தார்.

தமிழகத்தை ஆண்டுக் கொண்டிருந்த வாத்யாருக்கு உள்ளாட்சி என்றாலே அலர்ஜி. தேர்தலை நடத்தாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தார்.

சர்வ அதிகாரத்தோடு நாட்டை ஆள தான் இருக்க, ஊரை மட்டும் ஆள பஞ்சாயத்துத் தலைவர் வேறு தனியாக எதற்கு என்கிற எண்ணம் ஒருபுறம்.

அப்படி ஒருவேளை தேர்தல் நடந்து, அதில் எதிர்க்கட்சியான கழகம் கணிசமாக வெற்றி பெற்றுவிட்டால் தன்னுடைய பிம்பம் தகர்ந்துவிடுமே என்கிற தயக்கமும் வாத்யாருக்கு இருந்தது.

இருப்பினும் பல்வேறு தளங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை காப்பாற்றியே தீரவேண்டும் என்கிற நெருக்குதல் அரசுக்கு கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

இத்தகைய நிலையில்தான் அமரசிகாமணி, தன்னுடைய மனைவியை பஞ்சாயத்துத் தலைவர் பதவியில் நிறுத்துவதற்காக தன்னுடைய செல்வாக்கை கழகத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அதன் ஒரு பகுதியே, இல்லத் திறப்பு விழா.

மோ.அமரசிகாமணி புதியதாக கட்டியிருந்த இல்லத்தை திறந்துவைக்க தலைவர் ஒப்புதல் கொடுத்திருந்தார்.

தலைவரை வரவேற்க வழியெங்கும் வாழைமரங்கள் கட்டியிருந்தன. இருவண்ண கொடி பறக்காத மரங்களே ஊரில் இல்லை. சுவரெங்கும் தலைவரை வரவேற்று வாசகங்கள் வரையப்பட்டிருந்தன.

அவரை வரவேற்பதாக உள்ளூர் கட்சிக்காரர்கள் மட்டுமின்றி, மாவட்ட அளவிலான கழக நிர்வாகிகளும் குவிந்திருந்தனர்.

அலிபாபா, அப்பாவின் தோள்மீது அமர்ந்திருந்தான். அருகில் ஆரத்தித் தட்டை ஏந்தியவாறு அம்மா.

கூட்டத்தை கிழித்துக் கொண்டு வெள்ளைநிற அம்பாஸடர் கார், தேர் மாதிரி ஊர்ந்து வந்தது.

பத்தாயிரம் வாலா பட்டாசுக்கு திரி கொளுத்தப்பட்டது.

‘டாக்டர் கலைஞர் வாழ்க’, ‘முத்தமிழறிஞர் வாழ்க’ கோஷம் விண்ணை முட்டியது.

புது இல்லத்தின் முன்பாக கார் நின்றது.

ஓட்டுநருக்கு அருகாமையில் இருந்த இருக்கையில் இருந்து உற்சாகமாக தமிழ் இறங்கியது. கூடியிருந்த கூட்டத்தை நோக்கி கையை விரித்து உதயசூரியன் சின்னத்தை காட்டியது.

தொண்டர்களின் ஆர்வம் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்தது. ‘டாக்டர் கலைஞர்’ என்று அப்பா, அடித்தொண்டையிலிருந்து ஒலியெழுப்ப, உச்சஸ்தாயியில் ‘வாழ்க’ கோஷம் எதிரொலித்தது.

மாடியிலிருந்து தலைவர் மீது மலர்கள் வீசப்பட்டன.

மோ.அமரசிகாமணி, தலைவருக்கு ஆளுயர மாலை போட்டார்.

அம்மாவும், கட்சிக்காரர் வீட்டுப் பெண்கள் சிலரும் ஆரத்தியெடுத்து தலைவருக்கு திருஷ்டி கழித்தார்கள்.

தலைவர், ரிப்பன் வெட்டி வீட்டுக்குள் வலதுகால் எடுத்து வைத்தார்.

ஹாலில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் தலைவருக்கு மட்டும் இருக்கை. முன்பிருந்த ஒலிப்பெருக்கியில், “என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே…” என்று கரகரத்த குரலில் அவர் பேசத் தொடங்க, கரவொலியில் இல்லம் அதிர்ந்தது. “…ஆகவே, நிதி மிகுந்தோர் பொற்குவை தாரீர். நாம் புது இல்லத்துக்குள் புகுந்திருக்கிறோம். அராஜக ஆட்சியை, அதர்மத்தின் பேரில் நடக்கும் ஆட்சியை இல்லத்துக்கு அனுப்ப சூளுரை ஏற்போம்” என்று அவர் முடிக்கும்வரை அலிபாபா கைத்தட்டிக் கொண்டே இருந்தான்.

தலைவரை நேரில் கண்ட மகிழ்ச்சியோடு அவர்கள் இல்லம் திரும்பினார்கள்.

“தலைவர் எப்படி தகதகன்னு உதயசூரியன் மாதிரி இருக்காரு பார்த்தியா?” சைக்கிள் மிதிக்கும்போது அப்பா, அம்மாவிடம் சொன்னார்.

“நல்லா செவப்பாதான் இருக்காரு. ஆனா, எம்.ஜி.ஆரு இவரைவிட கலரு” அம்மா சொன்னதும், அப்பா மவுனமானார்.

அந்த மவுனம் அவருக்குள் எரிமலையாய் குமுறி, வீட்டுக்குள் நுழைந்ததுமே வெடித்தது.

“எந்தலைவன் என்ன கூத்தாடியா, எப்பவும் மேக்கப் போட்டுக்கிட்டு திரிய… காட்டுலேயும், மேட்டுலேயும் அலையுற பாட்டாளிகளோட தலைவண்டி…” என்று பெருங்குரலெடுத்து கத்தியவாறேதான் சட்டென்று எதிர்பாராத கணத்தில் அம்மாவின் கன்னத்தில் அறைந்தார்.

- எப்போதோ எழுதத் தொடங்கி, பாதியிலேயே முக்கிக் கொண்டிருக்கும் நாவலில் ஓர் அத்தியாயம்...