‘இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்கிற சிறப்பு யானைக்குதான் உண்டு. கற்கால காலக்கட்டங்களில் மனிதனுக்கு சினேகமான காட்டுவிலங்காக யானைதான் இருந்திருக்கிறது. தரையில் வாழும் உயிரினங்களில் primateகளுக்கு (கொரில்லா, சிம்பன்ஸி, மனிதனெல்லாம் இந்த வகைதான்) அடுத்தபடியாக யானைக்குதான் அறிவு அதிகம். கருவிகளை பயன்படுத்தக்கூடிய ஆற்றலும், அறிவும் மனிதர்களைத் தவிர்த்து யானைக்குதான் உண்டு.
மனிதர்களைப் போலவே சமூகமாக வாழக்கூடிய நாகரிகம், ஆதிக்காலத்திலிருந்தே யானைகளுக்கு உண்டு. ஒருவேளை தாய்வழி சமூகம் என்கிற வாழ்க்கைமுறையை மனிதர்கள், யானைகளிடமிருந்து கற்றிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆண் யானைகள், பருவம் எய்தக்கூடிய வயது வரை தாயோடுதான் காணப்படும். பெண் யானைகள் கடைசி வரை தாய், சகோதரி, மகள் என்று கூட்டுக் குடும்பமாகவே வசிக்கின்றன.
ஈடு இணையில்லாத இந்த விலங்கினத்தை மனிதர்கள் படுத்திய பாடு கொஞ்சநஞ்சமல்ல. மனிதனோடு சினேகமாக இருக்கக்கூடிய விலங்கு என்பதால், அதை அல்லக்கை மாதிரி மனிதன் பயன்படுத்துகிறான். கடினமான வேலைகளை யானையின் தும்பிக்கை மேல் பாரமாக போடுகிறான். ஆசியாவில் மட்டுமே சுமார் 15,000 யானைகள் இதுபோல மனிதர்களின் வேலைக்காரனாக பணிபுரிவதாக ஒரு கணக்கீடு சொல்கிறது.
யானைகளை கொண்டே யானைகளின் வசிப்பிடமான காடுகளை அழித்து, மனிதர்களுக்கான குடியிருப்புகளாக மாற்றியிருக்கிறோம். வரலாறு நெடுக போர்களில் பயன்படுத்தி பலியிட்டிருக்கிறோம். Zooக்களில் காட்சிப் பொருளாக காட்டுகிறோம். சர்க்கஸ்களில் வித்தை செய்ய விடுகிறோம். கோயில்களில் கட்டிப் போட்டு, அதன் சுதந்திரத்தைப் பறிக்கிறோம்.
ஆற்றலில் நம்மைவிட பெரிய விலங்கு. எனினும் சுபாவத்தில் கொஞ்சம் நட்பாக பழகுகிறது என்பதால் மனிதக்குலம் யானையிடம் எடுத்துக் கொள்ளும் அட்வாண்டேஜ் கொஞ்சநஞ்சமா?
1930ல் தொடங்கி 1940க்குள் ஒரு பத்தாண்டில் மட்டுமே ஒட்டுமொத்த யானைகளின் எண்ணிக்கையை வேட்டையாடி பாதியாக குறைத்த கொடூரமான சாதனைக்கு சொந்தக்காரர்கள் நாம். வீரத்தை வெளிப்படுத்துகிறோம் என்கிற பெயரில் அப்பாவி யானைகளை தேடித்தேடி கொன்றிருக்கிறோம். அவற்றின் தந்தங்களை வெட்டி வீடுகளில் ஃபர்னிச்சர்களுக்கு பயன்படுத்தியிருக்கிறோம்.
சமீபமாகதான் யானை குறித்த இரக்கவுணர்ச்சி நமக்கெல்லாம் ஏற்பட்டிருக்கிறது. அவை பாதுகாக்கப்பட வேண்டிய இனம் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. காலம் கடந்தாவது இந்த ஞானம் நமக்குப் பிறந்ததே என்று சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.
இப்போது யானைகளுக்கு பிரச்னை என்றால், சுற்றுச்சூழலாளர்கள் கை கோர்த்து அவற்றுக்கு உதவுகிறார்கள். அரசும்கூட சரணாலயங்களில் யானைகளுக்கு புத்துணர்வு முகாமெல்லாம் நடத்துகிறது.
இந்த சூழலுக்கு வித்திட்டவர் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்ற டாக்டர் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி. 1929ல் பிறந்து 2002 வரை வாழ்ந்த இந்த கால்நடை மருத்துவர், தன்னுடைய வாழ்நாள் மொத்தத்தையுமே யானைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதிலேயே செலவழித்திருக்கிறார். முதுமலை தெப்பக்காடு யானை முகாம் இவருடைய சிந்தனையில் உதித்த திட்டம்தான்.
சர்வதேச இதழ்களில் இடம்பெற்ற இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள், யானைகளின் இருத்தலியல் குறித்த அவசியத்தை எடுத்துரைத்து உலக சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கியது. விலங்கியல் மருத்துவ உலகம் இவரை செல்லமாக டாக்டர் கே என்றழைக்க, மக்கள் தாமாக முன்வந்து ‘யானை டாக்டர்’ என்கிற பட்டத்தை வழங்கினர்.
கிணறுகளில் விழுவது, நோயுற்று காடுகளில் கிடக்கும் யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதன் பொருட்டு மயக்க ஊசி பயன்படுத்தும் முறையை கால்நடை மருத்துவத் துறையில் முதன்முதலாகப் பயன்படுத்தியவர் இவர்தான். மர்மமான முறையில் மரணிக்கும் யானைகளுக்கும் மனிதர்களுக்கு செய்வதைப் போலவே போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். யானைகளுக்கு எப்படி போஸ்ட்மார்ட்டம் செய்வது என்பதை நேரடியாக செய்தும் காட்டினார். இதன் பிறகே தந்தங்களுக்காக யானைகளை கொல்லும் கடத்தல்காரர்கள், சட்டத்தின் பிடியில் சிக்க ஆரம்பித்தார்கள். கோயில்களில் வளர்க்கப்படும் யானைகளை எப்படி பராமரிக்க வேண்டும், அதற்கான கண்காணிப்பு முறைமைகளை அரசு எப்படி ஏற்படுத்த வேண்டும் என்பதற்கெல்லாம் வழிகாட்டு முறைகளை உருவாக்கியவர் இந்த யானை டாக்டர்தான்.
“யானைகள் இவர் பேசுவதை புரிந்துக் கொள்கின்றன. இவர் பேச்சுக்கு கட்டுப்படுகின்றன” என்று இன்று சர்வதேசப் புகழ் பெற்றிருக்கும் விலங்கியல் நிபுணரான இயான் டக்ளஸ் ஹாமில்டன் நேரடியாக கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார்.
இந்தியாவில் இன்று தோராயமாக 28,000 யானைகள் வசிக்கின்றன. இவற்றில் மூவாயிரத்துக்கும் சற்று குறைவான எண்ணிக்கையில் தமிழகத்தில் இருக்கின்றன. நம்மூர் யானை டாக்டர் மட்டும் இல்லையென்றால், இந்த எண்ணிக்கை பத்தில் ஒரு பங்காக இருந்திருந்தாலே அதிசயம்தான்.
இவர் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘யானை டாக்டர்’ என்கிற சிறுகதை லட்சக்கணக்கான வாசகர்கள் வாசித்து சிலிர்ப்படைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று, யானை குறித்த எந்தவொரு செய்தியை நீங்கள் செய்தித்தாள்களில் வாசித்தாலும், உங்களோடு மானசீகமாக அமர்ந்து புன்னகைத்துக் கொண்டிருப்பார் யானை டாக்டர். உற்று நோக்குங்கள். இந்த கட்டுரையை நீங்கள் வாசிக்கும்போதுகூட உங்கள் எதிரில்தான் இருக்கிறார் டாக்டர் கே.
(நன்றி : குங்குமம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக