“பெங்களூரில் தொப்பையுடன் நடமாடும் போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கர்நாடகாவின் கூடுதல் டிஜிபி எச்சரித்திருக்கிறார். காவலர்கள் மற்றும் உயரதிகாரிகள் அணுவகுப்பை பார்வையிட்டபோது, ஏகப்பட்ட தொப்பைகளை கண்ட அதிர்ச்சியில் இத்தகைய கண்டிப்பினை அவர் காட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
சட்டென்று வாசித்தால் சிரிக்கக்கூடத் தோன்றும். என்னவோ போலீஸ்காரர்களுக்கு மட்டுமே தொப்பை இருப்பதாக நமக்கெல்லாம் எண்ணம். சாலையில் நடக்கும்போது தொப்பையோடு (பெண்களையும் சேர்த்துதான்) நடக்கமுடியாமல் நடந்துக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் என்று சும்மா கணக்கெடுத்துப் பாருங்களேன். அதற்காக ரொம்ப உற்றுப் பார்த்து பட்டவர்த்தனமாக மாட்டிக் கொள்ளாதீர்கள். நீங்கள் கணக்கெடுப்புக்காகதான் பார்க்கிறீர்கள் என்பது அவர்களுக்கு எப்படி தெரியும்?
இந்த கணக்கெடுப்பில் அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்கள் உங்களுக்குக் கிடைக்கலாம். குறிப்பாக திருமணத்துக்குப் பிறகும் தொப்பை வாய்க்காதவர்கள் பாக்கியவான்கள். தொப்பைக்கு சாதி, மதம், வர்க்கம், ஆண் பெண் வேறுபாடு என்றெல்லாம் எதுவுமில்லை. அப்படியிருக்க போலிஸ்காரர்களை மட்டும் தனித்து, தொப்பைக்காக குற்றம் சாட்ட வேண்டிய அவசியம் ஏதுமில்லைதானே?
போலீஸ்காரர்களுக்கு தொப்பையிருந்தால் குற்றவாளிகளை ஓடிப்பிடிக்க முடியாது என்றுதான் அதிகபட்சமாக காரணம் சொல்ல முடியும். ஒரு போலீஸ்காரர், ‘சிங்கம்’ சூர்யா மாதிரி ரன்னிங் ரேஸ் ஓடி குற்றவாளியை பிடித்த காட்சியை நீங்கள் வாழ்வில் என்றாவது கண்டதுண்டா? அப்படி கண்டிருப்பவர் லட்சத்தில் ஒருவராகதான் இருக்க முடியும்
எனவே, ‘தொப்பை’ என்பதை மட்டுமே ஒரு காவலரின் பணிக்கு தகுதியிழப்பாக கருத முடியாது.
ஆனால் –
‘தொப்பை’யோடு இருப்பது என்பது ஆரோக்கியத்துக்கு கேடு. அது போலீஸ்காரர்களுக்கு மட்டுமல்ல. போலியோவுக்கு சொட்டுமருந்து கொடுப்பவருக்கும்கூட பொருந்தும்.
என்னவோ, உலகிலேயே இந்தியப் போலீஸுக்குதான் தொப்பை இருப்பதை போல நாமெல்லாம் கிண்டல் செய்துக் கொண்டிருக்கிறோம். இது சர்வதேசப் பிரச்சினை சாமி.
உலகின் பழைய மற்றும் மிகப்பெரிய காவல்துறைகளில் ஒன்றாக கூறப்படும் நியூயார்க் காவல்துறையேகூட தொப்பைப் பிரச்சினையால் நொந்து நூடுல்ஸ் ஆகிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் நியூயார்க் காவல்துறையில் பணிபுரியும் ஜோஸ் வேகாஸ் என்கிற அதிகாரி, தன் துறையின் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்து, அதற்காக மாதாந்திர நிவாரணம் கோரியது அமெரிக்கா முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்தியது.
அதாவது இருபது ஆண்டுகளுக்கு முன்பாக 80 கிலோ எடையுடன் சிக்கென்று பணிக்கு சேர்ந்த ஜோஸ், இருபது ஆண்டுகால காவல்துறை சேவையால் தற்போது 180 கிலோ எடையுடன் பூதாகரமாக மாறியிருக்கிறார். மெகா தொப்பையுடன் காட்சியளிக்கும் அவர், இந்த தொப்பைக்கு காரணம், இந்தப் பணியில் கிடைக்கக்கூடிய அழுத்தமே (stress) தவிர, தன்னுடைய உணவுப்பழக்கமல்ல என்று ஆதாரங்களோடு வாதிடுகிறார்.
காவல்துறையில் இருக்கும்போது உடல்ரீதியான சேதாரம் ஏற்பட்டால் (disability) அதற்காக மாதாந்திர நிவாரணமாக ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படுவது நியூயார்க் காவல்துறையில் வழக்கம். பணியால்தான் தனக்கு தொப்பை விழுந்தது, எனவே தொப்பையின் சைஸுக்கு தகுந்த நிவாரணம் வழங்கவேண்டும் என்பதே ஜோஸின் வாதம்.
உடல் தகுதியை வைத்தே ஒருவரை வேலைக்கு சேர்க்கும் போலீஸ் அகாடமிகள், வேலைக்கு சேர்ந்த பின்னர் அவர்களது உடல்ரீதியான தகுதிகளை வருடாந்திர அடிப்படையில் சோதனை செய்யாத போக்கு, இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் இருக்கிறது. மாறாக ஃபயர் சர்வீஸ் போன்ற ஆபத்துக்கால உதவிச் சேவை துறைகளில் பணிபுரிபவர்களின் உடல் தகுதி மட்டும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்படுகிறது. ஏதேனும் உடல்ரீதியான குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தால், அதை மருத்துவரீதியாகவும் மனரீதியாகவும் எதிர்கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
லண்டன் காவல்துறையில் வேலைக்கு சேர்ந்து பல ஆண்டுகள் ஆன பின்னரும் அடிக்கடி உடல் தகுதி சோதனைகள் நடத்தப்படுகின்றன. அந்த சோதனையில் தகுதி பெறாதவர்கள், மீண்டும் உடல் தகுதி பெறுவதற்கான அவகாசமும் வழங்கப்படுகிறது. அந்த அவகாசத்தில் உடல் தகுதி பெறாதவர்கள் காவல்துறையின் அலுவல்ரீதியான (clerical jobs) மற்றப் பணிகளுக்கு மாற்றம் செய்யப்படுகிறார்கள்.
சரி, மற்ற நாட்டுக் கதைகளையெல்லாம் விடுங்கள்.
இந்தியர்கள் ஏன் தொப்பை வளர்ப்பதில் உலகசாதனைக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள்?
* நம்முடைய முன்னோர் நமக்கு சொத்து, பத்துகளை மட்டும் சேர்த்து வைக்கவில்லை. தொப்பை வளத்தையும் சேர்த்துவிட்டே வைகுண்டத்துக்கோ, சிவபாதத்துக்கோ சென்றிருக்கிறார்கள். எனவே, மரபியல் அடிப்படையிலேயே நமக்கு தொப்பை வளரவேண்டும் என்பது நம்முடைய ஜீன்களில், நாம் கருவானபோதே எழுதப்பட்டு விடுகிற விதி.
* நம்முடைய உணவுமுறை பெரும்பாலும் கார்போஹைட்ரேட் சார்ந்ததாக இருக்கிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் உணவு என்பது 70 முதல் 75 சதவிகிதம் கார்போஹைட்ரேட் அடங்கியவை. வாலிப வயதில் செரித்து விடுகிறது. நடுத்தர வயதை எட்டும்போது கூடுதலாக உடலுக்குள் செலுத்தப்படும் கார்போஹைட்ரேட் செரிமானம் ஆனது போக மீதி கொழுப்பாக மாறி, தொப்பையை பம்மென்று பலூன் ஆக்குகிறது.
* மேற்கண்ட காரணங்கள் தவிர்த்து மது, புகை மாதிரி லாகிரி வஸ்துகளும் கூட தொப்பைக்குக் காரணம்.
* முறையான உடற்பயிற்சியோ, போதுமான உடலுழைப்போ இல்லாத வாழ்க்கை முறைதான் பெரும்பான்மையான மக்களுக்கு வாய்க்கிறது.
உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு மாதிரியான பிரச்சினைகள் பெரும்பாலும் தொப்பையர்களுக்கே அதிகம் வருகிறது. போலீஸ்காரர்கள் மட்டுமல்ல. நாம் அனைவருமே ‘தொப்பையை ஒழிப்போம்’ என்கிற இயக்கத்தை தொடங்கவேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம் என்பதே உண்மை.
(நன்றி : குங்குமம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக