22 ஆகஸ்ட், 2018

ஏகலைவன்!

தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு வசனகர்த்தாவின் பெயரை டைட்டிலில் கண்டதுமே, ஒரு சூப்பர் ஸ்டாருக்கான ஆரவாரம் திரையரங்கங்களில் எழுந்ததென்றால், அது ‘மு.கருணாநிதி’ என்கிற பெயருக்குதான். இந்த சாதனை கலைஞரால், அவ்வளவு எளிதில் படைக்கப்பட்டு விடவில்லை. அவரது மொழியில் சொன்னால் தென்றலை தீண்டியதில்லை, தீயை தாண்டியிருக்கிறார்.

‘குடியரசு’ இதழில் மாதம் 40 ரூபாய் சம்பளத்துக்கு உதவி ஆசிரியராக கலைஞர் பணிபுரிந்துக் கொண்டிருந்த சமயம். ஒவ்வொரு இதழிலுமே அவரது தமிழ், நெருப்பைக் கக்கிக் கொண்டிருந்ததை கவனித்த ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம், ‘ராஜகுமாரி’ படத்துக்கு வசனம் எழுதுவதற்காக அவரை அழைத்தது. தந்தை பெரியாரிடம், சினிமாவில் பணிபுரிய கலைஞர் அனுமதி கேட்டபோது, மகிழ்வோடு வாழ்த்தி அனுப்பி வைத்தார். பெரியாருக்கு, சினிமா என்றாலே வேப்பங்காய் என்றாலும், கலைஞர் என்றாலே தித்திப்பு.

‘ராஜகுமாரி’ டைட்டிலில் ‘வசனம்’ என்கிற இடத்தில் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமியின் பெயர்தான் இடம்பெற்றது என்றாலும், ‘உதவி ஆசிரியர்’ என்று கலைஞரின் பெயர் இடம்பெற்றது. நெற்றி நிறைய விபூதி, கழுத்தில் துளசிமாலை, தூய்மையான வெள்ளை கதராடையோடு இந்தப் படத்தில் நாயகனாக நடித்தவர், வசனகர்த்தா கலைஞருக்கு நெருக்கமான நண்பரானார். பின்னர் கலைஞரால் ‘கொள்கை மாற்றம்’ அடைந்து திராவிடப் புரட்சி நடிகரான எம்.ஜி.ஆர்தான் அவர்.

‘ராஜகுமாரி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘அபிமன்யூ’ படத்துக்கும் வசனம் எழுதும் வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்தது. ‘அபிமன்யூ’ வெளியானபோது, படத்தைக் காண்பிப்பதற்காக தியேட்டருக்கு தன்னுடைய மனைவியையும், நண்பர்களையும் அழைத்துச் சென்றார் கலைஞர். டைட்டிலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. அதிர்ச்சியடைந்தார் கலைஞர்.

பட அதிபர்களிடம் சென்று நீதி கேட்டபோது, ‘நீங்கள் மிகவும் வயதில் குறைந்தவர். மேலும் உங்கள் பெயருக்கு பின்னால் பட்டமளிக்கக்கூடிய கல்வித்தகுதியும் இல்லாதவர். இன்னும் நீங்கள் சினிமாவில் புகழ் பெற்ற பிறகே உங்கள் பெயரை டைட்டிலில் போட முடியும்’ என்றார்கள். படத்தின் டைட்டிலில் வசனம் என்கிற இடத்தில் இடம்பெற்ற எஸ்.ஏ.சாமிக்கு, ‘பி.ஏ’ என்கிற பட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மறைவுக்குப் பிறகும் மெரீனாவில் இடம் பிடிக்க கலைஞர் போராடி வென்ற வரலாறுதான், அவருடைய ஆரம்பகால சினிமாவுலக வரலாறும்கூட.

டைட்டிலில் ‘இடஒதுக்கீடு’ கொடுக்க மறுத்தவுடன், கோபத்துடன் ஜூபிடர் பிக்சர்ஸை விட்டு சுயமரியாதை காக்க வெளியேறினார் கலைஞர். நல்ல சம்பளம் கொடுக்கிறார்களே என்று தன்னை அவர் சமரசப்படுத்திக் கொள்ளவில்லை. தன் பெயர் இல்லாத இடத்தில், தான் இருப்பதை அவர் விரும்பவில்லை.

கோவையிலிருந்து ஊர் திரும்பியவர், திருவாரூரில் முகாமிட்டிருந்த ‘தேவி நாடக சபா’வினருக்கு ‘குண்டல கேசி’யை ஆதாரமாக வைத்து ‘மந்திரி குமாரி’ நாடகத்தை எழுதிக் கொடுத்தார். ‘சக்தி நாடக சபா’விடமிருந்து பிரிந்து வந்து புதிய சபாவை அமைத்திருந்த அந்த நாடகக் குழுவினருக்கு ‘மந்திரி குமாரி’, மாஸ்டர்பீஸாக அமைந்தது. மக்களிடம் பெரும் வரவேற்பை அந்த நாடகம் பெற்றிருந்தது.

மயிலாடுதுறையில் இந்த நாடகத்தை கண்டு வியந்த கவிஞர் கா.மு.ஷெரீப், இந்நாடகத்தின் வசன சிறப்புகளைப் பற்றி மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்திடம் எடுத்துச் சொன்னார். சுந்தரம், ‘மந்திரி குமாரி’யை திரப்படமாக்க விரும்பினார். 40களின் இறுதியிலேயே மாதம் ரூ.500 (அப்போது ஒரு சவரன் தங்கமே 75 ரூபாய்தான்) என்கிற மிகப்பெரிய சம்பளத்துக்கு மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிய கலைஞர் ஒப்பந்தமானார். ஜூபிடரில் பணிபுரிந்தபோது எப்படி எம்.ஜி.ஆரை தன்னுடைய கொள்கைக்கு திருப்பினாரோ, அது போலவே மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிந்தபோது கண்ணதாசனையும் தி.மு.கழகத்துக்கு கலைஞர் கொண்டுவந்து சேர்த்தார்.

‘கொள்ளையடிப்பது ஒரு கலை’ போன்ற பஞ்ச் வசனங்களால் ‘மந்திரி குமாரி’ தமிழகமெங்கும் பரபரப்பை கிளப்பியது. தமிழ் சினிமாவின் முதல் பஞ்ச் வசனகர்த்தா என்றுகூட கலைஞரை சொல்லலாம்.

‘மந்திரி குமாரி’யைப் பார்த்து மகிழ்ந்த என்.எஸ்.கிருஷ்ணன் சேலத்துக்கு வந்து கலைஞரை சந்தித்தார். தான் எடுக்கவிருக்கும் ‘மணமகள்’ படத்துக்கு வசனம் எழுதித்தர வேண்டுமென்று கேட்டார். என்.எஸ்.கிருஷ்ணனும், தந்தை பெரியாரின் அபிமானி என்கிற அடிப்படையில் அவருடன் அன்புடன் பழகினார் கலைஞர். எனவேதான் சம்பளப்பேச்சு வந்தபோது, ‘நீங்க கொடுக்கிறதை வாங்கிக்கறேன்’ என்றார் கலைஞர்.“நான் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிப்பீரா?”, என்.எஸ்.கே கேட்க, கலைஞர் மகிழ்ச்சியாக தலையாட்டினார்.

ஒரு வெள்ளை பேப்பரில் ஒரு தொகையை குறிப்பிட்டு, அதை நான்காய் மடித்து கலைஞரின் பாக்கெட்டில் வைத்தார் என்.எஸ்.கே., கலைஞர் அதை பிரித்துக்கூட பார்க்கவில்லை.

“பிரித்துப் பாரும் ஓய். அப்போதானே தொகை தெரியும்...”

கலைஞர் பிரித்துப் பார்க்க.. அதில் நான்கு பூச்சியங்கள் எழுதப்பட்டிருந்தன.“அண்ணே, எதுவாக இருந்தாலும் சம்மதம்தான்” என்று கலைஞர் சொல்ல, அப்படியே அவரை கட்டிப் பிடித்துக் கொண்டார் என்.எஸ்.கே.

உடனே பேப்பரை வாங்கி நான்கு பூச்சியங்களுக்கு முன்னால் ‘ஒன்று’ என்கிற எண்ணை என்.எஸ்.கே. எழுத, கலைஞருக்கு ஆனந்த அதிர்ச்சி. பத்தாயிரம் ரூபாய். ஒரு வசனகர்த்தாவுக்கு இந்த தொகை என்பது அந்த காலத்தில் மிகவும் அதிகம். இந்தப் பணத்தில் அப்போது ஆயிரம் கிராம் தங்கம் வாங்கலாம் என்றால், இன்றைய மதிப்பில் எவ்வளவு பெரிய தொகை என்று எண்ணிப் பாருங்கள். கலைஞரின் வயது அப்போது 25 தான். ‘மணமகள்’ படத்துக்கு கிடைத்த அந்த அபாரமான சம்பளம்தான் கலைஞரை சென்னைக்கு குடிபெயர வைத்தது. எந்த சினிமாவின் டைட்டிலில் கூட தனக்கு பெயர் போட மறுத்தார்களோ, பின்னாளில் அதே சினிமாவை தன் தீந்தமிழால் கட்டியாண்டார் கலைஞர்.

சினிமாவில் கதை, வசனத்தில் கலைஞர் நிகழ்த்திய சாதனைகளை காட்டிலும், சினிமாவில் ஒரு சாதாரணர் சாதிக்க முடியும் என்று அவர் நிகழ்த்திக் காட்டிய சாதனையே தலையாயது. ஏனெனில், கலைஞருக்கு முன்பு வரை பாகவதர்களும், பண்டிதர்களும்தான் சினிமாத்துறையில் ஜொலிக்க முடியும் என்கிற நிலை இருந்தது. அந்த இரும்புக்கதவை எட்டி உதைத்துத் திறந்த முதல் சாமானியன் கலைஞர்தான். அவர் திறந்துவிட்ட கதவுதான் அன்றிலிருந்து இன்றுவரை சென்னையை நோக்கி, நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, கண்களில் சினிமா கனவோடு ரயிலேறிய பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கம்.

கலைஞர் ஒரு சுயம்பு. கலைஞர் ஒரு ஏகலைவன். அவர் இளைஞர்களுக்காக எழுதிய இந்த ஒரு கவிதை போதும். சினிமாவில் மட்டுமல்ல. எத்துறையிலும் போராடி, வெல்லுவதற்கான உந்துசக்தியாக இளைஞர்களுக்கு என்றுமே இருக்கும்.

ஏகலைவன் வித்தை கற்க
எந்த சாத்திரமும் அனுமதிக்கவில்லை
அவன் வில்லில் விஜயனையும் வெல்வான் என்று
கட்டைவிரலைக் காணிக்கையாய் பெற்றதென்ன நியாயம்?
தவம் செய்தான் சம்பூகச் சூத்திரன்
தகுதி அவனுக்கேது என்று சீறி
அவன் தலை வெட்டிச் சாய்த்தகதை
இராமபிரான் வரலாரன்றோ?
கட்டை விரலையோ, தலையையோ
காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால்
பட்டை உரியும் சுடுகாட்டில்
அவன் கட்டை வேகும். பிறகென்ன?
முதலுக்கே மோசம் வந்தபின்னர்
முயலாக ஆமையாக கிடத்தல் நன்றோ?
ஆயிரம் அடி பள்ளத்தில் வீழ்ந்தவனை
கைதூக்கிக் கரையேற்றும் நேரத்தில்
கனமான பாறையொன்றை
அவன் தலையில் உருட்டி விட
எத்தனிக்கும் உளுத்தர்களை கண்டால்
உதைக்கத் தான் வேண்டும்
ஓட ஓட விரட்டத்தான் வேண்டும்

(நன்றி : தினகரன் வெள்ளிமலர்)

14 ஆகஸ்ட், 2018

ஞாயிறு போற்றுதும்

தலைவர்கள் பிறப்பதில்லை. காலம்தான் அவர்களை உருவாக்குகிறது. ஒரு சமூகத்தின் சூழலும், தேவையுமே தங்களில் ஒருவரைத் தலைவராக  உயர்த்துகிறது. குடிமையியலின் இந்தக் கோட்பாட்டை உடைத்தெறிந்து தலைவராக உருவெடுத்தவர் டாக்டர் கலைஞர். பிறக்கும்போதே அவர்  தலைவர்தான். தலைவருக்குரிய தலைமைப் பண்புகள் அவரிடம் இளம் பிராயத்திலேயே காணப்பட்டன. திராவிட முன்னேற்றக் கழகம் உருவானபோது  கலைஞரின் வயது 25. அடுத்த இருபதாண்டுகளில் இளைஞர்கள் நிறைந்த இந்த இயக்கத்தை அவர்தான் தலைமையேற்று, அரைநூற்றாண்டுக்  காலத்துக்கு நடத்தப் போகிறார் என்று யாராவது ஜோசியம் சொல்லியிருந்தால் கலைஞரே கூட நம்பியிருக்க மாட்டார்.

ஜோசியத்தில் அவருக்கு நம்பிக்கையில்லை என்பது வேறு விஷயம். உலகிலேயே வேறெங்கும் காமுடியாத அதிசயமாக, எழுபது ஆண்டுகளாக ஒரு  பிராந்திய இயக்கம் மக்கள் செல்வாக்கில் வலிமை யானதாக, இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் ஏற்றங்களிலும், கொள்கை  முடிவுகளிலும் பங்களிக்கக்கூடியதாக இருக்கிறதென்றால், அதில் கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக் கால கலைஞரின் தலைமையின் முக்கியத்துவத்தை நாம் உணரலாம்.கடந்த நூற்றாண்டின் மத்தியில் ஏராளமான சாமானியர்கள் தலைவர்களாக உயர்ந்திருக்கிறார்கள் என்றாலும்,  கலைஞர் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்.

அவர் நிரம்பப் படித்த பட்டதாரி அல்ல. அவரை தலைவராக உயர்த்தக்கூடிய பெரும் எண்ணிக்கை மிகுந்த சமூகப் பின்னணியும் கொண்டவரல்ல.  சினிமாவில் ஜொலித்து, அதன் மூலம் மக்கள் அபிமானத்தைப் பெற்றவரும் அல்ல. அரசியல் / சமூக செயற்பாட்டாளராக அவர் பெற்றிருந்த  புகழைத்தான், தான் பொருள் ஈட்ட பயன்படுத்திய சினிமாவுக்கும் பயன்படுத்தினாரே தவிர, சினிமா புகழ் அவருடைய முன்னேற்றத்துக்கான  மூலதனமாக எப்போதும் இருந்ததில்லை. மேலும், சினிமாவை, தான் ஏற்றுக் கொண்ட இயக்கத்தை வலுப்படுத்தவும், இயக்கத்தின் கொள்கைகளைப்  பிரசாரம் செய்யவும் வலிமையான ஊடகமாகத்தான் கையாண்டார்.

செயல் மட்டுமே அவரது அத்தனை வளர்ச்சிகளுக்கும் காரணம். பலனை எதிர்பாராது, ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக அல்லும் பகலும் உழைத்துக்  கொண்டிருப்பது மட்டுமே அவர் அறிந்த ஒரே முன்னேற்ற யுக்தி. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு கலைஞரின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தோமானால்,  உழைப்பு மட்டுமே அவரை மகத்தான ஓர் இயக்கத்தின் தலைவராகவும், மாநிலத்தை ஆளும் முதல்வராகவும், நாட்டின் பிரதமர்களைத் தேர்ந்தெடுக்கக்கூடிய உயரிய பொறுப்பு களுக்கும் உயர்த்தியது என்பதை உணரலாம்.அவருடைய தீந்தமிழ் எழுத்தாற்றலும், பேச்சாற்றலும், லட்சக்கணக்கான  தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் அமைப்பாற்றலும் அவருடைய உழைப்புக்கு உதவும் ஆயுதங்களே தவிர.. அவை மட்டுமே அவருடைய  மகத்தான சாதனைகளுக்குக் காரணமல்ல. எனவேதான், ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்று தன்னுடைய கல்லறை வாசகத்தை அவரே எழுதினார்.

துள்ளித் திரிந்ததொரு காலம்

திருவாரூர் நகரிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் திருக்குவளை என்கிறகிராமத்தில்தான், எளிய பின்னணி கொண்ட குடும்பத்தில் கலைஞர்  1924, ஜூன் 3-ஆம் தேதி பிறந்தார். தந்தையார் முத்துவேலர். தாயார் அஞ்சுகம் அம்மாள்.முத்துவேலர் பழுத்த ஆத்திகர். நெற்றியில் திருநீறு  இல்லாமல் அவரைக் காணவே முடியாது. அந்த கிராம மக்களுக்கு ஏற்படும் சிறிய உடல்நலக் குறைவுகளையெல்லாம் மந்திரித்தே குணப்படுத்துவார்  என்பார்கள். தந்தையைப் போலவேதான் தனயனும் சிறுவயதில் இருந்தார். திருநீறுக்கு மத்தியில் அழகாக குங்குமப்பொட்டு வைத்து காட்சியளிப்பார்  குழந்தை கலைஞர். கோயிலிலிருந்து ரிஷப வாகனம் உலா வருவதைக் கண்ட கலைஞர், அதுபோன்ற ஒரு வாகனத்தைச் செய்து தன் நண்பர்களைக்
கூட்டிவைத்து  வீட்டிலேயே உற்சவம் நடத்துவார்.

திருக்குவளை சிவன் கோயில், திருக்குளம், முனீசுவரன் கோயில், அய்யனார் கோயில் இங்கெல்லாம் நடைபெறும் உற்சவங்கள் மற்றும் விழாக்கள்  கலைஞரை உற்சாகப்படுத்தும். கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகளிலும் சிறுவர் கலைஞருக்கு ஆர்வமிருந்தது.முத்துவேலருக்கு  தன்னுடைய ஒரே மகன், கலை மற்றும் கல்வியில் கரைசேர வேண்டுமென்ற பெரும் விருப்பம் இருந்தது.  கலைஞர், திருக்குவளையில் இருந்து ஐந்து  கி.மீ. தூரம் நடந்து பேருந்து ஏறி திருவாரூருக்குச் சென்று அங்கிருந்த உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்க வேண்டியிருந்தது. மகனுடைய  சிரமங்களைக் கருத்தில் கொண்டுதான் குடும்பத்தையே திருவாரூருக்கு இடம்பெயர வைத்தார் முத்துவேலர். கல்வியோடு இசை பயிலும்  ஏற்பாட்டையும் முத்துவேலர் செய்தார்.

சமத்துவச் சிந்தனை பிறந்தது

கலைஞருக்கு இசையில் பெரும் ஈடுபாடு உண்டு. எனினும், இசை பயில மறுத்து, தந்தையாரையே எதிர்த்து போராட்டம் நடத்தினார். அதற்குக்  காரணம், அக்காலத்தில் இசைக்கலைஞர்கள் மேடையில் மேலாடை அணியக்கூடாது, இடுப்பைச் சுற்றி துண்டு கட்டிக் கொண்டிருக்க வேண்டும்,  காலில் செருப்பு அணியக்கூடாது என்கிற சம்பிரதாயங்கள் இருந்தன. ஏனெனில், இசையை ரசிப்பவர்கள் பெரும் பண்ணையார்களாக விளங்கினார்கள்.  ‘கலைஞர் என்போர் பண்ணையார்களுக்கு அடிமைகள் அல்ல, எல்லோரும் சமம்’ என்கிற சமத்துவ எண்ணம் கலைஞருக்குப் பிறந்ததாலேயே, துண்டு  கட்டிக் கொண்டு, மேலாடையின்றி, காலில் செருப்பு அணியாமல் கச்சேரி செய்யும் வழக்கம் இந்த கருணாநிதிக்குக் கிடையாது என்றுகூறி இசை பயில  மறுத்தார். ‘தான் அடிமை அல்ல’ என்று தந்தையாரிடம் வாதிட்டார்.

திருவாரூர் பள்ளியில் அவருக்குக் கிடைத்த சமூகச் சிந்தனைகளும், கேள்வியின்றி மரபை ஏற்றுக்கொள்ளும் வழக்கத்தை எதிர்க்கக்கூடிய  மனப்பான்மையை அவருக்குத் தோற்றுவித்தது. தந்தை பெரியார் அப்போது பேசிக்கொண்டிருந்த சமூகக் கருத்துகளில் பெரிதும் ஈடுபாடு கொண்டார்.  திராவிட இயக்கக் கவிஞரான பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் பேச்சுகளும் அவருக்குள் கனலை மூட்டிக் கொண்டிருந்தன.திருவாரூரில் ஒரு முறை  ஆவேசமாக பட்டுக்கோட்டை அழகிரி பேசிக்கொண்டிருந்தார். காசநோயாளியான அவர் பேச்சுக்கு இடையே திடீரென மயங்கி விழுந்தார். கூட்டத்தின்  மத்தியில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த சிறுவனான கலைஞர், “நோயாளியான நீங்கள், இவ்வளவு சிரமப்படலாமா?” என்று கண்ணீரோடு  கேட்டார்.அதற்கு அழகிரி, “என் நோயைவிட இந்த நாட்டைப் பீடித்திருக்கும் நோய் கடுமையானது. அதைச் சரிப்படுத்தத்தான் நாம் உழைக்க  வேண்டும்...” என்று பதிலளித்தார். கலைஞர், தன்னை முழுமையாக சமூகத்துக்கு ஒப்புக்கொடுக்க, அழகிரி அன்று கொடுத்த பதில்தான் பிரதான  காரணம்.

கம்யூனிஸமும், கலைஞரும்

மாணவப் பருவத்தில் தன் சக மாணவர்களோடு இணைந்து ‘மாணவர் மன்றம்’ உருவாக்கி, சமுதாய விழிப்புணர்ச்சி விவாதங்களை அடிக்கடி நடத்திக்  கொண்டிருப்பார் கலைஞர். தங்களுடைய எண்ணங்களை வெளியிட ஏடு ஒன்று தேவை என்பதை உணர்ந்து, ‘மாணவ நேசன்’ என்கிற கையெழுத்துப்  பத்திரிகையை கலைஞர் தொடங்கினார். ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டு உலகெங்கும் கம்யூனிஸத் தாக்கம் உருவாகி வந்த காலம் அது. இந்திய  கம்யூனிஸ்டு இயக்கம், மாணவர்களை ஒருங்கிணைத்து ‘மாணவ சம்மேளனம்’ என்கிற இயக்கத்தைக் கட்டமைத்துக் கொண்டிருந்தது.திருவாரூரில்  மாணவர்களின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த கலைஞரை அந்த அமைப்புக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் வெற்றி பெற்றனர். மாணவ சம்மேளத்தினர்  ‘தமிழ் வாழ்க’ கோஷத்தோடு, ‘இந்தி வளர்க’ என்றும் கோஷம் எழுப்பியது கலைஞருக்கு கருத்து மாறுபாட்டை ஏற்படுத்தியது.

எனவே, திருவாரூர் மாணவ சம்மேளனத்தைக் கலைத்துவிட்டு, ‘தமிழ் மாணவர் மன்றம்’ என்கிற புதிய அமைப்பினை உருவாக்கினார். இந்த புதிய  அமைப்பு, பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கியது. கம்யூனிஸ்ட் இயக்கங்களின் செயல்பாடுகளிலிருந்து  தொடக்க காலத்திலேயே விலகி நின்றாலும் அவருக்குள் பொதுவுடைமைச் சிந்தனை இருந்துகொண்டேதான் இருந்தது. எனவேதான்,  பின்னாளில்  ‘நானும் ஒரு கம்யூனிஸ்ட்தான்’ என்று கலைஞர் பகிரங்கமாகவே அறிவித்தார்.

முரசொலி

‘தமிழ் மாணவர் மன்றம்’, திருவாரூரில் நிகழ்த்திய பல்வேறு நிகழ்வுகளுக்கு அன்பழகன், மதியழகன் போன்ற அந்தக்கால மாணவர் தலைவர்களை  அழைத்துப் பேசச் செய்தார் கலைஞர். இதற்கான செலவு களுக்கு வீட்டில் இருந்து சங்கிலி, வெள்ளிக் கிண்ணம் போன்றவற்றை வீட்டாருக்குத்  தெரியாமல் அடகு வைப்பார். இந்தித் திணிப்பை எதிர்க்க பெரியார், மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக் கொண்டு இந்தி எதிர்ப்பு  ஊர்வலங்களில் கலைஞர் தீவிரமாகப் பங்கு பெற்றார். ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிரில் வந்த தன்னுடைய பள்ளி ஆசிரியரிடமே இந்தி  எதிர்ப்புக் கொடியைத் திணித்து, தன் எதிர்ப்பை வலிமையாகப் பறைசாற்றினார். மறுநாள் இந்தி வகுப்பில், இந்தி படிக்க மாட்டேன் என்று சொல்லி  அதே ஆசிரியரிடம் அறையும் வாங்கினார்.

இந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார், மணவை திருமலைச்சாமி, மூவலூர் ராமாமிருதம் அம்மையார், பட்டுக்கோட்டை அழகிரி, அறிஞர் அண்ணா  உள்ளிட்டோரின் இந்தி எதிர்ப்புப் பேச்சுகள் அவரைப் பெரிதும் கவர்ந்தன. இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் ஏற்படுத்தியிருந்த சமூக  உணர்வலையில் நீந்திக் கரையேறியவர்களில் தலையானவர் கலைஞர். இந்தி எதிர்ப்பு மட்டுமின்றி, மக்களிடையே நிலவி வந்த மூடநம்பிக்கைகள்,  சமூக ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றைப் பற்றி மேடைகளில் அருமையான தமிழ்நடையில் பேசத் தொடங்கினார். தான் நடத்திய கையெழுத்துப்  பிரதியில் எழுதினார்.“ஏரோட்டும் மக்களெல்லாம் ஏங்கித் தவிக்கையிலேதேரோட்டம் ஏன் உனக்கு தியாகராசா?”என்று திருவாரூர் தேரோட்டத்தை  நோக்கிய கேள்வியோடு கூடிய புகழ் பெற்ற வாசகத்தை கலைஞர் எழுதியது அப்போதுதான்.

‘திராவிட நாடு’ இதழுக்கு அவர் எழுதிய ‘இளமைப் பலி’ என்கிற கட்டுரையின் காரணமாக அறிஞர் அண்ணா இவரது தமிழாற்றலை உணர்ந்தார்.  எனினும், பள்ளி மாணவன் முழுமையாகத் தன்னை இயக்கப் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டு, படிப்பை கோட்டைவிடுவதை அண்ணா  விரும்பவில்லை. அதனால்தான் தொடர்ந்து கலைஞர் அனுப்பிய கட்டுரைகளை அவர், ‘திராவிட நாடு’ இதழில் வெளியிடவில்லை. எனவே, தன் எழுத்துக்கென்றே பிரத்யேகமான ஊடகம் தேவை என்பதை உணர்ந்த கலைஞர், ‘முரசொலி’ என்கிற பெயரில், தான் நடத்தி வந்த ‘மாணவ  நேசன்’ கையெழுத்துப் பத்திரிகையைத் துண்டுப் பிரசுரமாக, மாத இதழாக மாற்றினார். ஒருங்கிணைந்த தஞ்சை முழுக்க கருணாநிதி என்கிற பெயர்  பிரபலமாக, ‘முரசொலி’யே முதல் காரணம்.

ஈரோட்டு குருகுலம்

பாண்டிச்சேரியில் திராவிடர் கழக மாநாடு ஒன்று நடந்தது. இதில் குழப்பம் விளைவிக்க ஏராளமானோர் காத்திருந்தார்கள். பாரதிதாசனோடு சாலையில்  நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கலைஞர் மீது தாக்குதல் நடைபெற்றது. இதில் பாரதிதாசன் தப்பிக்க, கலைஞரின் கதி என்னஆனது என்றே யாருக்கும் தெரியவில்லை. ‘கலைஞரைக் காணோம்’ என்றதுமே பெரியார் இடிந்து போனார். விடியற்காலையில் இஸ்லாமியரைப்  போன்று தலையில் குல்லா, கைலி மாறுவேடத்தில் கலைஞர் வந்து சேர்ந்தபோது கண்ணீரோடு அவரைக் கட்டித் தழுவிக் கொண்டார் பெரியார்.  தாக்குதலில் கலைஞருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு தன் கையாலேயே மருந்திட்டார் பெரியார். அப்போதே கலைஞரை, ‘குடியரசு’ இதழின் உதவி  ஆசிரியராக பணிக்கு சேர்த்துக் கொண்டு ஈரோட்டுக்கு அழைத்துச் சென்றார். ‘குடியரசு’ பத்திரிகையில் பெரியாரின் நேரடிப் பார்வையில்  பணிபுரிந்தபோதுதான் பல்வேறு தலைவர்களுடனான அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. அவருடைய எழுத்தாற்றலை தமிழகம் உணர, சினிமாவில்  வசனம் எழுதக்கூடிய வாய்ப்பும் கலைஞருக்குக் கிடைத்தது. பெரியாரும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

கலையுலகில் கலைஞர்

‘ராஜகுமாரி’, கலைஞருக்கான ராஜபாட்டையை சினிமா உலகில் ஏற்படுத்தியது. தொடர்ந்து ‘மருதநாட்டு இளவரசி’, ‘மந்திரிகுமாரி’ என்று பயணித்த  அவரது சினிமாப்பயணம் ‘பராசக்தி’யில் உச்சத்தை எட்டியது. 1947ல் ‘ராஜகுமாரி’ மூலமாக சினிமாவுக்கு வந்த கலைஞர், 2011ல் ‘பொன்னர் சங்கர்’  வரை 64 ஆண்டுகளில் எண்ணற்ற படங்களில் எழுத்தாளர், தயாரிப்பாளர் என்று தன்னுடைய அபரிமிதமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். சினிமா  மட்டுமின்றி ‘மந்திரி குமாரி’, ‘தூக்குமேடை’என்று அவரது நாடகங்களும் பிரபலம். சினிமா, நாடகம் மட்டுமின்றி கவிதை, கடிதங்கள், சிறுகதைகள்,  நாவல்கள் என்றும் அவரது பன்முக பங்களிப்புகள் தமிழ் பேசும் பேருலகுக்குக் கிடைத்தன. ‘குறளோவியம்’, ‘சங்கத்தமிழ்’, ‘தொல்காப்பியப் பூங்கா’, ‘தென்பாண்டிச் சிங்கம்’, ‘ரோமாபுரி பாண்டியன்’, ‘நெஞ்சுக்கு நீதி’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட  நூல்களை தொடர்ச்சியாக எழுதி யிருக்கிறார். அயராத அரசியல் பணிகளுக்கு இடையே கலை, இலக்கியம்தான் தன்னை ஓய்வெடுக்க வைக்கிறது  என்று அந்த கடுமையான உழைப்பையும் ‘ஓய்வு’ என்று குறிப்பிடுகிறார் கலைஞர்.

சட்டமன்றத்தில் கலைஞர்

திராவிடர் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியபோது அறிஞர் அண்ணாவின் தளகர்த்தர்களில் ஒருவராகத் தன்னை  அடையாளப் படுத்திக் கொண்டார் கலைஞர். 1953ல் திமுக அறிவித்திருந்த மும்முனைப் போராட்டம், கலைஞரின் போர்க்குணத்தை தமிழகத்துக்குப்  பறைசாற்றியது. மும்முனைப் போராட்டத்தின் ஓர் அங்கமாக நடந்த கல்லக்குடி போராட்டத்தில் ரயில் தண்ட வாளத்தில் தலைவைத்துப் படுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் கலைஞர். இளைஞர்கள் அவர் பின்னால் திரள, இந்தப் போராட்டமே முதல் காரணம்.1957ல் முதன் முறையாக  திமுக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது திருச்சி மாவட்டம் குளித்தலையில் போட்டியிட்டு வென்றார் கலைஞர். அந்தத் தேர்தலில் 112  தொகுதிகளில் போட்டியிட்ட திமுகவுக்கு சுயேச்சை வேட்பாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போல வெவ்வேறு சின்னங்கள்தான் வழங்கப்பட்டன.  கலைஞருக்கு அப்போதே கிடைத்த சுயேச்சை சின்னம்தான் ‘உதயசூரியன்’. பின்னர் திமுக அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்ற பிறகும், அதே  சின்னத்தில்தான் இன்றுவரை போட்டியிடுகிறது. 1957ல் குளித்தலை, 1962ல் தஞ்சாவூர், 1967 மற்றும் 1971ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991ல் துமுகம், 1996, 2001 மற்றும் 2006ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016ல் திருவாரூர் என்று அறுபது ஆண்டு களுக்கும் மேலாக தமிழக சட்டமன்றத்தில்  உறுப்பினராக மகத்தான ஜனநாயகப் பங்களிப்பைத் தந்திருக்கிறார் கலைஞர். இந்தியாவிலேயே வேறு எவரும் இவ்வளவு நீண்டகால மக்கள் மன்ற  சேவையைச் செய்ததில்லை.

முதல்வர் கலைஞர்

1967ல் திமுக ஆட்சிக் கட்டிலில் ஏறுவதற்கு கழகத்தின் பொருளாளராக இருந்த கலைஞரின் புயல்வேகப் பணிகள் பெரும் காரணமாக இருந்தன.  அறிஞர் அண்ணாவே கூட, “தம்பி, உனக்கு ‘நிதி’ என்று தந்தையும் தாயும் சும்மாவா பெயரிட்டார்கள்?” என்று விளையாட்டாக அவரைப் புகழ்ந்தார்.பத்து  லட்சம் தேர்தல் நிதியென்று நிர்ணயித்து, பதினோரு லட்சமாக சேர்த்துத் தந்த பொருளாளர் என்றால் சும்மாவா?ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டில்  உடல்நலக்குறைவு காரணமாக அறிஞர் அண்ணா திடீரென மறைவுற்றார். அப்போது முன்னணித் தலைவர்களையும் தாண்டி இயக்கத்தை நடத்தக்கூடிய  வலிமை கொண்டவராக கலைஞரை கட்சியினர் தேர்வு செய்து, அவரை முதல்வராகவும் ஆக்கினார்கள். நாற்பத்திஐந்து வயதிலேயே முதல்வராகி  கலைஞர், தமிழகத்துக்குச் செய்த சாதனைகள் அளப்பரியவை.

சாதனை நாயகன்

போக்குவரத்தை தேசிய மயமாக்கியது, அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம், குடிநீர் வடிகால் வாரியம், குடிசை மாற்று வாரியம், கண் சிகிச்சை  முகாம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம், கைரிக்‌ஷா ஒழிப்பு, இந்தியாவிலேயே முதன் முறையாக காவல்துறை ஆணையம், பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு தனித்துறை, விவசாயக் கல்லூரி, அரசு ஊழியர்கள் குடும்ப நலத் திட்டம், நிலவிற்பனை வரையறை, சிட்கோ மற்றும்  சிப்காட் தொழிற்பேட்டைகள், இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஆசியாவிலேயே முதன்முறையாக கால்நடை  மற்றும் விலங்குகள் பல்கலைக்கழகம், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்திட்டம், விதவைப் பெண்களுக்கு  மறுமண உதவித்திட்டம், பெண்கள் சுய உதவிக்குழு, கிராமந்தோறும் கான்கிரீட் சாலைகள், இந்தியாவின் தெற்கு எல்லையாக திருவள்ளுவர் சிலை,  தமிழுக்கு செம்மொழி மாநாடு, எல்லோருக்கும் கலர் டிவி, பல்கலைக்கழகங்கள்... என்று ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட கலைஞரின் எண்ணிலடங்கா  மக்கள் சேவைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆளுங்கட்சியாக இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தபோதும் சரி, அவரது இதயம் தமிழர்களுக்காகவே துடித்துக் கொண்டிருந்தது. ஒரு  தெருவுக்கோ, மேம்பாலத்துக்கோ பெயர் வைப்பதிலும்கூட அவருக்கு கட்சி மற்றும் மாநில நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கம்  இயல்பாகவே இருந்தது.கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக கலைஞரின் பெயர் இடம்பெறாத செய்தித்தாள்களே தமிழகத்தில் இல்லை எனலாம்.  இனி, தமிழக வரலாற்றை எழுதும் எவருமே கலைஞரின் பெயரைத் தவிர்க்கவே முடியாது என்பதுதான் அவரது சாதனைகளுக்கெல்லாம் மகுடம்.

(நன்றி : குங்குமம்)

9 ஆகஸ்ட், 2018

திரும்பிப் பார்க்காதே! முன்னால் பார்!!

சீனாவில் ஹூஹான் என்றொரு நகரம். இங்கே சீற்றத்துக்கு பேர் போன மஞ்சளாறு சுழித்துக்கொண்டு ஓடும். நம்மூரில் ஜல்லிக்கட்டு போல, ஆண்டுக்கு ஒருமுறை இந்த ஆற்றில் இளைஞர்கள் குதித்து ஆற்றின் போக்கை எதிர்த்து எதிர்நீச்சல் போடுவது வீர மரபாக அங்கே பின்பற்றப்பட்டு வருகிறது.ஜூலை 16, 1966.சீன மக்கள் குடியரசின் தலைவர் மாவோ, ஹூஹான் நகருக்கு வருகை தந்தார். அந்த எதிர்நீச்சல் திருவிழாவைத் தொடங்கி வைத்தவர், திடீரென தானும் ஆற்றில் குதித்தார். சீறிக்கொண்டு வந்த நீரோட்டத்தில் மாவோவும் எதிர்நீச்சல் போட ஆரம்பிக்க, வேறு வழியின்றி அவரது பாதுகாவலர்களும் நீரில் குதித்து, கரையேறச் சொல்லி அவரை வற்புறுத்தினார்கள்.ஆனால், மாவோவோ, மற்ற சீன இளைஞர்களுக்குப் போட்டியாக சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு நீந்தினார். அப்போது அவரது வயது 73 என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுக்க மாவோவின் இந்த எதிர்நீச்சல் பிரபலமானது. இந்த சாதனையை தன் அரசியலுக்கும் அவர் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. அப்போது அவர்மீது சுமத்தப்பட்டிருந்த பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த சாதனை எதிர்நீச்சலின் காரணமாகத் தவிடு பொடியானது. கடுமையான அரசியல் நெருக்கடி நேரத்தில் எல்லாம் ‘நீச்சல்’தான் மாவோவைக் கரையேற்றியது. “சிறுவயதிலேயே என்னுடைய அப்பா எனக்கு நீச்சல் கற்றுக் கொடுத்தார். நீந்தும்போதுதான் எப்படிப்பட்ட சிக்கல்களுக்கும் தீர்வு காணக்கூடிய சிந்தனைகள் எனக்கு ஏற்படுகிறது...” என்றார் மாவோ.

அவருடைய புரட்சிகர சிந்தனைகளில் பெரும் பகுதி, அவருடைய நீச்சலின்போது தோன்றியவையே. மாவோவின் இறுதிக் காலத்தில், “மாவோவின் அத்தியாயம் முடிந்தது. இனி அவரால் நடக்கக்கூட முடியாது...” என்று மேற்கத்திய ஊடகங்கள் எழுதிக் கொண்டிருந்தன.எழுந்து நடமாடியதோடு மட்டுமின்றி, அதே மஞ்சளாற்றை இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திக் கடந்து சீன மக்களுக்கு தன்னுடைய மன வலிமையைப் பறைசாற்றினார் மாவோ. 82 வயதில் இத்தகைய அரிய சாதனையைச் செய்தார்!உலகின் மகத்தான தலைவர்கள் அனைவருக்குமே இந்த ‘Never Ever Give Up’ என்கிற மனோபாவம் இருக்கும். எத்தகைய நெருக்கடியும் தங்களைச் சாய்த்து

விடாமல், வெற்றி தோல்வியைக் கருத்தில் கொள்ளாமல் எதிர்த்து நின்று போராடுவார்கள்.
மாவோவைப் போன்ற ஓர் எதிர்நீச்சல் நாயகன், நம்மூரிலும் உண்டு. மாவோவின் புகழ்பெற்ற அந்த 1966 நீச்சலுக்கு, முப்பதாண்டுகள் முன்னதாகவே தன்னுடைய டீன் ஏஜில் இப்படியொரு நீச்சல் சாதனை நிகழ்த்தியவர், வேறு யாருமல்ல,திமுக தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக வாழும் கலைஞர், காலம் முழுக்கவே ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஓயாமல் போராடிக் கொண்டிருப்பவர். அவருக்கு பிரியமான கலை, இலக்கியப் பணிகளில் அவரை முழுமையாக ஈடுபடவைக்க இடம் கொடுக்காமல், அரசியல் மற்றும் சமூகப் பணிகள் அவரது அசுர உழைப்பை கோரிக்கொண்டேதான் இருக்கின்றன.

ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் 100 சதவிகித உழைப்பை மக்களுக்குக் கொடுக்கிறார் என்றால், எதிர்க்கட்சி வரிசையில் அமரும் போதெல்லாம் 200 சதவிகித உழைப்பைக் கொடுத்தாக வேண்டிய நெருக்கடியை தனக்குத் தானே அவர் ஏற்படுத்திக் கொள்வார். தூங்கும்போதும் கூட அவரது மூளை கட்சி நலனையும், மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகளையும்தான் சிந்தித்துக் கொண்டிருக்கும்.

 கலைஞரை நோக்கி ஒரு முறை அவருக்கு நெருக்கமான பத்திரிகையாளர் கேட்டார்.‘ஓய்வு, ஒழிச்சல் இல்லாமல் தொடர்ச்சியாக இத்தனை ஆண்டுகளாக உழைத்துக்கொண்டே இருக்கிறீர்களே, இவற்றையெல்லாம் விட்டுவிட்டு உங்கள் மனசை மகிழ்ச்சிப்படுத்தக் கூடிய பணிகளில் ஈடுபடலாமே என்று எப்போதுமே தோன்றியதில்லையா?’அந்தப் பத்திரிகையாளருக்கு கலைஞர் சொன்ன பதில்தான், அவருடைய சிறுவயது எதிர்நீச்சல் கதை.

“பள்ளிப் பருவத்தில், நானும் என்னுடைய உயிர்த் தோழனுமான தென்னனும் எப்போதும் திருவாரூரின் மிகப்பெரிய கோயில் குளமான கமலாலயத்தில் நீந்திக் களித்துக் கொண்டிருப்போம்.ஒரு நாள் இருவருக்கும் அந்தக் குளத்தின் மைய மண்டபத்துக்கு நீந்திச்செல்ல வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. கோயில் குளங்களிலேயே மிகப்பெரியது கமலாலயம்தான். நீந்திக் கடக்க முடியுமா என்கிற சந்தேகம் இருந்தாலும், இருவரும் ஒரு வேகத்தில் நீந்த ஆரம்பித்து விட்டோம்.பாதி தூரத்துக்கும் மேலாக நீந்திவிட்டோம். இருவருக்கும் மூச்சு இரைக்கிறது. தென்னன், பயந்துப் போனான். நானும்தான். ‘திரும்பிவிடலாம் கருணாநிதி’ என்றான்.

மனசுக்குள் அச்சமிருந்தாலும், தென்னனுக்கு தைரியம் அளிக்கும் விதமாக நான் சொன்னேன். ‘தென்னா, இதுவரை முக்கால் பங்கு நீந்திவிட்டோம். மையத்துக்குச் செல்வதென்றால் இன்னும் கால் பங்குதான். திரும்புவதென்றால் இன்னும் அதிக தூரம் நீந்த வேண்டும். தெரிந்தோ, தெரியாமலோ ஓர் இலக்கை நிர்ணயித்து விட்டோம். அதை எட்டுவோம், வா’ என்று அழைத்தேன்.அதன்படியே மைய மண்டபத்தை அடைந்தோம். சில நிமிடங்கள் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் உற்சாகமாகக் கரைநோக்கி நீந்த ஆரம்பித்தோம். எங்கள் இலக்கை எட்டிய மகிழ்ச்சியின் காரணமாக, திரும்ப வரும்போது எங்களுக்கு அலுப்பே இல்லை.

அன்றைய சிறுவன் கருணாநிதிக்கு இருந்த அதே போர்க்குணம், இன்றும் எனக்கு இருக்கிறது. முன் வைத்த காலை நான் என்றுமே பின் வைக்க விரும்புவதில்லை. அரசியல் துறையை விரும்பித்தான் தேர்ந்தெடுத்தேன்.எல்லாப் பாதையிலுமே குளிர் சோலையும் இருக்கும், சுடும் பாலையும் இருக்கும். பாலையைக் கண்டு பயந்து திரும்புபவன் குளிர் சோலையின் இன்பத்தை எட்டுவதே இல்லை...” என்று சொன்னார் கலைஞர்.

கலைஞரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய அடிப்படைப் பண்பு இதுதான்.

“திரும்பிப் பார்க்காதே! முன்னால் பார்!!”
(நன்றி : குங்குமம்)