7 ஜனவரி, 2019

போதையேறிப் போச்சி…

வரலாற்றுக்கு நல்லவர், கெட்டவர் பாகுபாடெல்லாம் இல்லை. அந்தந்த காலக்கட்டத்து சம்பவங்களை அது தன்னியல்பாகவே, எதிர்காலங்களுக்கான வரலாற்றுப் பெட்டகமாக பதிவு செய்துக் கொள்கிறது. அச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்பதை காலம் முடிவு செய்துக் கொள்ளும்.

போதை உலகின் பேரரசனாக எண்பதுகளில் உலகை அச்சுறுத்திய பாப்லோ எஸ்கோபார், நல்லவனா, கெட்டவனா?

‘நாயகன்’ படத்தின் நாயகன் வேலுநாயக்கர் சொன்னதுமாதிரி, “தெரியலியேப்பா” என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

போதை கெட்டதுதான். மனிதகுலத்தை சிந்திக்க விடாமல் செயலிழக்கச் செய்வதுதான். குறைவான போதை, அதிகமான போதை என்றெல்லாம் இதில் பாகுபாடு பிரிப்பதெல்லாம் வெறும் சப்பைக்கட்டே.

சட்டவிரோதம் என்று அந்தக் காலத்தில் அமெரிக்கா சுட்டிக் காட்டிய எஸ்கோபாரின் செயல்பாடுகளை, பின்னாளில் அரசாங்கங்களே சட்டப்பூர்வமான வரையறைகளை செய்து நடத்திக் கொண்டிருக்கும் கூத்தை எங்கே போய் அடித்துக் கொள்வது?

அரசாங்கமே மது விற்கிற மாநிலத்தில் இருந்துக்கொண்டு, பாப்லோ எஸ்கோபாரை கெட்டவன் என்று கண்ணை மூடிக்கொண்டு முத்திரை குத்திட முடியவில்லை.

உலகப்போர்கள், மனிதக்குலத்தின் சாபக்கேடு. கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த முதல் உலகப்போரும் சரி, இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து நடந்த இரண்டாம் உலகப்போரும் சரி. இன்றுவரையில் அவற்றுக்கு தொடர்பே இல்லாத மனிதர்களிடம்கூட அவர்களே அறியாதவகையில் தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. இனிமேல் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கும்கூட அந்த தாக்கம் இருக்கத்தான் போகிறது.

குறிப்பாக இரண்டாம் உலகப்போரை சொல்லலாம். அந்தப் போரின் இறுதியில் பெரும்பாலும் அரசர்கள் இல்லாமல் போனார்கள். பல நாடுகளில் ஜனநாயகம் மலர்ந்தது. தங்களை யார் ஆட்சி செய்ய வேண்டுமென மக்களே முடிவெடுக்கக்கூடிய சுதந்திரம் கிடைத்தது என்றெல்லாம் ஆயிரத்துச் சொச்சம் நற்பலன்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

இதே அளவுக்கு எதிர்பலன்களும் உண்டு என்பதுதான் கொடுமை.

போதை என்பது மனிதன் தோன்றிய நாளிலிருந்தே இருந்துக்கொண்டுதான் இருந்தது. மறுக்கவில்லை.

ஆனால் –

அபரிதமான வளம் கொழிக்கும் போதைத்தொழில், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால்தான் கார்ப்பரேட் வழிமுறைக்கு வந்தது. உண்மையைச் சொல்லப்போனால் மற்றத் தொழில்கள் கார்ப்பரேட்மயமாவதற்கு ஒருவகையில் வழிகாட்டியதே போதைத்தொழில்தான். அதில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித்துறையை (R & D) எல்லாம் உருவாக்கி கச்சிதமாக தொழில் செய்தவர் பாப்லோ எஸ்கோபார்.

கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம். இதற்கெல்லாம் பின்னணியில் நிச்சயம் பெரிய தலைகள் இருப்பார்கள் என்பதை நாம் புதியதாக உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.

அமெரிக்காவும், ரஷ்யாவும் குடுமிப்பிடிச்சண்டை போட்ட பனிப்போர் காலக்கட்டத்தில் அரசியல் நிலையற்ற நாடுகளில் ஏராளமான புரட்சிகர குறுங்குழுக்கள் தோன்றின. இவை இந்த பெரும் வல்லரசுகளின் ஜால்ராவுக்கு ஏற்றமாதிரி தாளம் தட்டின.

ஒருக்கட்டத்தில் அமெரிக்காவும், ரஷ்யாவும் சில ஒப்பந்தங்களுக்கு உடன்படும் போதெல்லாம் அவர்கள் உருவாக்கிய குழுக்களை அப்படியே அனாதையாக விட்டன. இவர்களை நம்பி தொழிலுக்கு வந்தவர்கள், சொந்த அரசுகளை பகைத்துக்கொண்டு அமைப்பை தொடர்ந்து நடத்தமுடியாமல் கைவிட்டார்கள். அல்லது சட்டத்துக்கு விரோதமான தொழில்களில் இறங்கி, தங்கள் இலட்சியத் தாகத்தை கைவிட்டு சமூகவிரோதிகள் ஆனார்கள்.

அவ்வகையில் தென்னமெரிக்க நாடுகளில் கலகக்காரர்களில் கணிசமான பகுதியினர் பின்னாளில் போதைத்தொழில் செய்யத் தலைப்பட்டனர். அமெரிக்காவின் ஒரு தலைமுறையையே போதையால் சீரழித்தனர். ஒருகாலத்தில் தங்களுக்கு அல்லக்கையாக இருந்தவர்களே, தங்கள் நாட்டை சூறையாடத் தொடங்கிவிட்டனரே என்கிற கோபத்தில் அமெரிக்கா துப்பாக்கியை தூக்கியது. சிலர் அடங்கிப் போனார்கள். சிலர், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் மாவீரர்களாக தங்களை கட்டமைத்துக் கொண்டார்கள்.

இத்தகைய ஒரு பின்னணியில்தான் பாப்லோ எஸ்கோபாரை நாம் கவனிக்க வேண்டும். அவர், முக்கியத்துவம் பெறுவதும் இந்த வரலாற்றுக் காலக்கட்டத்தில் வாழ்ந்தவர் என்பதால்தான்.

தினகரன் குழுமத்தில் நான் பணிக்குச் சேர்ந்த சமயத்தில், வெவ்வேறு விதமான பணிகளை செய்ய என்னை பணிப்பார் எங்கள் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர். அவர்கள். இதையெல்லாம் நமக்கு ஏன் கொடுக்கிறார் என்று நான் குழம்பியதுண்டு. பின்னாளில் எனக்கு சில பெரிய பொறுப்புகளை கொடுப்பதற்கான பயிற்சியாகதான் அவற்றையெல்லாம் தந்திருக்கிறார். ஒரு பத்திரிகையாளன், எல்லாத்துறை குறித்த அறிவையும் பெற்றிருக்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு.

திடீரென ஒருநாள், “பாப்லோ எஸ்கோபார் பற்றி, ‘குங்குமம்’ வார இதழில் ஒரு தொடர் எழுது” என்று பணித்தார்.

“கொலம்பியா பற்றியோ, பாப்லோ எஸ்கோபார் பற்றியோ எனக்கு ஒன்றும் தெரியாதே?” என்று தயங்கினேன்.

“அதெல்லாம் தெரியாது. நீதான் எழுதுகிறாய்..” என்று சொல்லி பார்க்கவேண்டிய படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், வாசிக்க வேண்டிய நூல்கள் ஆகியவற்றை அவரே எடுத்துச் சொன்னார்.

தொடர் எழுதுவதற்கு நான் தயாராவதற்கு ஆறு மாதங்கள் அவகாசம் கொடுத்தார். அன்றிலிருந்து எஸ்கோபாருக்குள் மூழ்கினேன். stockholm syndrome என்பார்களே, அந்தப் பிரச்சினைக்கு உள்ளாகிவிட்டேன். அந்நாட்களில் பாப்லோ, எனக்கும் காட்ஃபாதர் ஆகிவிட்டார். அவருக்கு வெறித்தனமான ரசிகன் ஆகிப்போனேன். மூன்றே மாதங்களில் தயாராகி எம்.டி.யிடம், “ஆரம்பிக்கிறேன் சார்” என்றேன்.

பெரிய எழுத்தாளர்களுக்கு செய்வதைப் போல தமிழகமெங்கும் சினிமாப் படங்களுக்கு ஒட்டுவதை போல ‘காட்ஃபாதர் : போதை உலகின் பேரரசன்’ தொடரின் அறிவிப்புக்கு பிரும்மாண்டமான போஸ்டரெல்லாம் ஒட்டி, இந்த எளியப் பத்திரிகையாளனை கவுரவப் படுத்தினார் எங்கள் எம்.டி. அவருக்கு வெறுமனே நன்றி சொல்லியெல்லாம் நன்றிக்கடனை தீர்த்துவிட முடியாது.

ஏற்கனவே சில தொடர்களை பத்திரிகைகளில் எழுதியிருக்கிறேன்.

ஆனால் –

‘காட்ஃபாதர்’ ஸ்பெஷல். ஏனெனில் 70 வாரங்களுக்கு நீளக்கூடிய மெகாத்தொடரை என்னாலும் எழுதமுடியும் என்று என்னை நானே எனக்கு நிரூபித்துக்கொள்ளக் கூடிய வாய்ப்பை இது வழங்கியது.

தொடரின் முதல் அத்தியாயத்தில் தொடங்கி, கடைசி அத்தியாயம் வரை எனக்கு ஊக்கமும், தொடருக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதிலும் உற்றத்துணையாக இருந்தவர் ‘குங்குமம்’ வாரஇதழின் முதன்மை ஆசிரியர் கே.என்.சிவராமன். இத்தொடர் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவதற்கு எழுத்து மட்டுமல்ல, அண்ணன் அரஸ் அவர்களுடைய உயிரோட்டமான ஓவியங்களும் காரணம். பல வாரங்கள் அவருடைய ஓவியத்தை பார்த்துவிட்டுதான் அந்தந்த வாரத்துக்கான அத்தியாயங்களையே எழுதுவேன். அன்பான அண்ணன்கள் இருவருக்கும் நான் நன்றி சொல்லப்போவதில்லை. தம்பிக்கு அவர்கள் செய்ய வேண்டிய கடமை இது.

தொடராக வந்தபோது வாராவாரம் ‘குங்குமம்’ இதழில், அயல்நாட்டுப் பத்திரிகைத் தொடர்களுக்கு இணையாக அழகுசெய்த அண்ணன் வேதா அவர்களின் வடிவமைப்புக் குழுவினருக்கு நன்றி சொல்ல இதையொரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்கிறேன்.

‘குங்குமம்’ இதழில் வாராவாரம் வாசித்தவர்களுக்கு, ஒட்டுமொத்த நூலாக வாசிக்கும்போது வேறுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். முதன்முறையாக இப்போது நூலாகதான் வாசிக்கப் போகிறீர்கள் என்றால் ஜெட் வேக பயணத்துக்குத் தயாராகுங்கள்.

Happy reading!

இந்நூலை என்னுடைய காட்ஃபாதர், எழுத்தாளர் பா.ராகவன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

அன்புடன்
யுவகிருஷ்ணா

5 ஜனவரி, 2019

சினிமாவுக்கு கதை எழுதுவது எப்படி?

“ஒரு ஊருலே ஒரு நரி. அதோட கதை சரி”

உலகின் மிக சிறிய கதை இதுதான். இந்த கதையை கடந்து வராதவர்கள் யாருமே நம்மில் இருக்க முடியாது. இதை சினிமாவாக எடுக்க முடியுமா?

முடியும்.

‘ஈ’யை வைத்தே ராஜமவுலி எடுத்திருக்கிறார். நரியை வைத்து நாம் எடுக்க முடியாதா?

அந்த நரிக்கு ஒரு நண்பன், ஒரு குடும்பம், ஒரு காதலி, ஒரு வில்லன், ஒரு பிரச்சினை என்று கூட்டிக்கொண்டே போனோமானால் ஐந்து பாட்டு, நாலு ஃபைட்டு வைத்து சுவாரஸ்யமாக இரண்டரை மணி நேரத்தில் ஒரு கதை சொல்லிவிடலாம் இல்லையா?

சினிமாவுக்கு அது போதும்.

இதுமாதிரி கதையை எழுததான் இந்த நூலில் கற்றுக்கொள்ளப் போகிறோம். “இதை எழுதும் நீ எத்தனை படங்களுக்கு கதை எழுதியிருக்கிறாய், உன்னுடைய தகுதி என்ன?” என்கிற நியாயமான கேள்வியை வாசிக்கும் நீங்கள் கேட்கலாம். அதற்கான முழுத்தகுதியும், உரிமையும் உங்களுக்கு உண்டு.

இதுவரை எந்தப் படத்துக்கும் நான் கதை எழுதியதில்லை. அதே நேரம், நான் எழுதி எந்தப் படமும் படுதோல்வி அடைந்ததில்லை என்று பாசிட்டிவ்வாகவும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். எழுதத் தெரிந்ததால் எழுதுகிறேன். வாசிக்கத் தெரிந்ததால் வாசிக்கிறீர்கள். எழுத்தோ, வாசிப்போ ஒன்றில் மற்றொன்று உயர்ந்ததோ, தாழ்ந்ததோ கிடையாது. ‘சினிமாவுக்கு கதை எழுதுவது எப்படி?’ என்கிற சூத்திரத்தை நாம் இருவரும் இணைந்தேதான் கற்றுக்கொள்ளப் போகிறோம். வகுப்பறையில் உங்களோடு பெஞ்சில் அருகே அமர்ந்திருக்கும் மாணவன்தான் நானும்.

அப்படியெனில் ஆசிரியர்?

1906ல் வெளிவந்த உலகின் முதல் முழுநீளத் திரைப்படமான ‘தி ஸ்டோரி ஆஃப் த கெல்லி கேங்’கில் தொடங்கி, போன வெள்ளிக்கிழமை ரிலீஸான படங்களின் கதாசிரியர்கள் வரை நமக்கு லட்சக்கணக்கிலான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்துதான் நாம் சினிமாவுக்கு கதை எழுத கற்றுக் கொள்ளப் போகிறோம்.

உலகின் முதல் முழுநீளப் படத்தின் கதை ஏதேனும் சரித்திரக் கதையாகதான் இருக்குமென்று நீங்கள் கருதலாம். ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’ மாதிரி அதுவொரு போலிஸ் படமென்று சொன்னால் உங்களுக்கு கொஞ்சம் ஆச்சரியமாகதான் இருக்கும்.

1906ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியான அந்த திரைப்படம் சுமார் ஆயிரம் ஆஸ்திரேலிய பவுண்டுகளை பட்ஜெட்டாக கொண்டு எடுக்கப்பட்டு, இருபத்தையாயிரம் பவுண்டுகளை வசூலித்து ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக உருவெடுத்தது.

நெட்கெல்லி என்கிற கேங்ஸ்டர் அந்த நாட்களில் ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலம். அவனும் அவனுடைய குழுவினரும் செய்யாத அட்டூழியங்களே இல்லை. பிற்பாடு அவன் தூக்கில் தொங்கவிடப்பட்டான். அவனுடைய வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட நாடகமே, சினிமாவாக ‘தி ஸ்டோரி ஆஃப் த கெல்லி கேங்’ என்று எடுக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் ஓடக்கூடிய இந்தப் படத்தில் மொத்தமே ஆறு காட்சிகள்தான். வன்முறையாளர்களை ஒடுக்க போலிஸ் திட்டமிடும் காட்சியில் தொடங்கும் படம், கிளைமேக்ஸில் நெட்கெல்லியோடு சண்டை நடந்து அவனை காலில் சுட்டு கைது செய்வதோடு முடிவடைகிறது.

முதலில் ஆஸ்திரேலியாவில் திரையிடப்பட்ட இந்த மவுனப்படம், பின்னர் நியூஸிலாந்து, அயர்லாந்து, இங்கிலாந்து என்று நாடு விட்டு நாடு பயணித்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக ஓடிக்கொண்டே இருந்ததாம்.

இந்தப் படம் வெளிவரும் வரை சினிமா என்பது கதை சொல்லும் ஊடகமாக இருந்தது இல்லை. டிரெயின் ஓடுவது, குதிரைப் பந்தயம் மாதிரி துண்டுக் காட்சிகளையும் நியூஸ் ரீல்களையும் வைத்து அதுவரை ஒப்பேற்றிக் கொண்டிருந்தவர்கள், நாடகத்தை போலவே சினிமாவிலும் கதை சொல்லலாம். செமத்தியாக கல்லா கட்டலாம் என்பதை கண்டறிந்தார்கள். சினிமா பொழுதுபோக்கு ஊடகமாகவும் உருவெடுத்தது அப்போதுதான்.

அடுத்த ஏழு ஆண்டுகளிலேயே தாதாசாகேப் பால்கே தயாரித்து, இயக்கிய ‘ராஜா ஹரிச்சந்திரா’, இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படமாக வெளிவந்தது. இதிகாசங்கள், புராணங்கள் என்று பல நூற்றாண்டுகள் கதை சொல்லி, கதை கேட்டு வளர்ந்த இந்தியர்கள் வெகுவிரைவிலேயே சினிமாவுக்கு அடிமை ஆனதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இந்தியப் பாரம்பரியப் பெருமையை சினிமாவில் கதையாக சொல்லியே வெள்ளையர்களின் அடிமைத்தளையை உடைக்கவும் பயன்படுத்தினார்கள் என்பதெல்லாம் வரலாறு.

இந்த கதையை எல்லாம் ஏன் உங்களுக்கு மெனக்கெட்டு சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றால், இதுமாதிரி நாம் நிறைய கதைவிட கத்துக்கணும். சினிமாவில் கதை எழுத இந்த ‘கதைவிடுற’ பண்புதான் அடிப்படை தகுதியே.

- ‘சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்’ நூலின் முதல் அத்தியாயத்திலிருந்து...