5 ஜனவரி, 2019

சினிமாவுக்கு கதை எழுதுவது எப்படி?

“ஒரு ஊருலே ஒரு நரி. அதோட கதை சரி”

உலகின் மிக சிறிய கதை இதுதான். இந்த கதையை கடந்து வராதவர்கள் யாருமே நம்மில் இருக்க முடியாது. இதை சினிமாவாக எடுக்க முடியுமா?

முடியும்.

‘ஈ’யை வைத்தே ராஜமவுலி எடுத்திருக்கிறார். நரியை வைத்து நாம் எடுக்க முடியாதா?

அந்த நரிக்கு ஒரு நண்பன், ஒரு குடும்பம், ஒரு காதலி, ஒரு வில்லன், ஒரு பிரச்சினை என்று கூட்டிக்கொண்டே போனோமானால் ஐந்து பாட்டு, நாலு ஃபைட்டு வைத்து சுவாரஸ்யமாக இரண்டரை மணி நேரத்தில் ஒரு கதை சொல்லிவிடலாம் இல்லையா?

சினிமாவுக்கு அது போதும்.

இதுமாதிரி கதையை எழுததான் இந்த நூலில் கற்றுக்கொள்ளப் போகிறோம். “இதை எழுதும் நீ எத்தனை படங்களுக்கு கதை எழுதியிருக்கிறாய், உன்னுடைய தகுதி என்ன?” என்கிற நியாயமான கேள்வியை வாசிக்கும் நீங்கள் கேட்கலாம். அதற்கான முழுத்தகுதியும், உரிமையும் உங்களுக்கு உண்டு.

இதுவரை எந்தப் படத்துக்கும் நான் கதை எழுதியதில்லை. அதே நேரம், நான் எழுதி எந்தப் படமும் படுதோல்வி அடைந்ததில்லை என்று பாசிட்டிவ்வாகவும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். எழுதத் தெரிந்ததால் எழுதுகிறேன். வாசிக்கத் தெரிந்ததால் வாசிக்கிறீர்கள். எழுத்தோ, வாசிப்போ ஒன்றில் மற்றொன்று உயர்ந்ததோ, தாழ்ந்ததோ கிடையாது. ‘சினிமாவுக்கு கதை எழுதுவது எப்படி?’ என்கிற சூத்திரத்தை நாம் இருவரும் இணைந்தேதான் கற்றுக்கொள்ளப் போகிறோம். வகுப்பறையில் உங்களோடு பெஞ்சில் அருகே அமர்ந்திருக்கும் மாணவன்தான் நானும்.

அப்படியெனில் ஆசிரியர்?

1906ல் வெளிவந்த உலகின் முதல் முழுநீளத் திரைப்படமான ‘தி ஸ்டோரி ஆஃப் த கெல்லி கேங்’கில் தொடங்கி, போன வெள்ளிக்கிழமை ரிலீஸான படங்களின் கதாசிரியர்கள் வரை நமக்கு லட்சக்கணக்கிலான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்துதான் நாம் சினிமாவுக்கு கதை எழுத கற்றுக் கொள்ளப் போகிறோம்.

உலகின் முதல் முழுநீளப் படத்தின் கதை ஏதேனும் சரித்திரக் கதையாகதான் இருக்குமென்று நீங்கள் கருதலாம். ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’ மாதிரி அதுவொரு போலிஸ் படமென்று சொன்னால் உங்களுக்கு கொஞ்சம் ஆச்சரியமாகதான் இருக்கும்.

1906ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியான அந்த திரைப்படம் சுமார் ஆயிரம் ஆஸ்திரேலிய பவுண்டுகளை பட்ஜெட்டாக கொண்டு எடுக்கப்பட்டு, இருபத்தையாயிரம் பவுண்டுகளை வசூலித்து ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக உருவெடுத்தது.

நெட்கெல்லி என்கிற கேங்ஸ்டர் அந்த நாட்களில் ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலம். அவனும் அவனுடைய குழுவினரும் செய்யாத அட்டூழியங்களே இல்லை. பிற்பாடு அவன் தூக்கில் தொங்கவிடப்பட்டான். அவனுடைய வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட நாடகமே, சினிமாவாக ‘தி ஸ்டோரி ஆஃப் த கெல்லி கேங்’ என்று எடுக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் ஓடக்கூடிய இந்தப் படத்தில் மொத்தமே ஆறு காட்சிகள்தான். வன்முறையாளர்களை ஒடுக்க போலிஸ் திட்டமிடும் காட்சியில் தொடங்கும் படம், கிளைமேக்ஸில் நெட்கெல்லியோடு சண்டை நடந்து அவனை காலில் சுட்டு கைது செய்வதோடு முடிவடைகிறது.

முதலில் ஆஸ்திரேலியாவில் திரையிடப்பட்ட இந்த மவுனப்படம், பின்னர் நியூஸிலாந்து, அயர்லாந்து, இங்கிலாந்து என்று நாடு விட்டு நாடு பயணித்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக ஓடிக்கொண்டே இருந்ததாம்.

இந்தப் படம் வெளிவரும் வரை சினிமா என்பது கதை சொல்லும் ஊடகமாக இருந்தது இல்லை. டிரெயின் ஓடுவது, குதிரைப் பந்தயம் மாதிரி துண்டுக் காட்சிகளையும் நியூஸ் ரீல்களையும் வைத்து அதுவரை ஒப்பேற்றிக் கொண்டிருந்தவர்கள், நாடகத்தை போலவே சினிமாவிலும் கதை சொல்லலாம். செமத்தியாக கல்லா கட்டலாம் என்பதை கண்டறிந்தார்கள். சினிமா பொழுதுபோக்கு ஊடகமாகவும் உருவெடுத்தது அப்போதுதான்.

அடுத்த ஏழு ஆண்டுகளிலேயே தாதாசாகேப் பால்கே தயாரித்து, இயக்கிய ‘ராஜா ஹரிச்சந்திரா’, இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படமாக வெளிவந்தது. இதிகாசங்கள், புராணங்கள் என்று பல நூற்றாண்டுகள் கதை சொல்லி, கதை கேட்டு வளர்ந்த இந்தியர்கள் வெகுவிரைவிலேயே சினிமாவுக்கு அடிமை ஆனதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இந்தியப் பாரம்பரியப் பெருமையை சினிமாவில் கதையாக சொல்லியே வெள்ளையர்களின் அடிமைத்தளையை உடைக்கவும் பயன்படுத்தினார்கள் என்பதெல்லாம் வரலாறு.

இந்த கதையை எல்லாம் ஏன் உங்களுக்கு மெனக்கெட்டு சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றால், இதுமாதிரி நாம் நிறைய கதைவிட கத்துக்கணும். சினிமாவில் கதை எழுத இந்த ‘கதைவிடுற’ பண்புதான் அடிப்படை தகுதியே.

- ‘சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்’ நூலின் முதல் அத்தியாயத்திலிருந்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக