18 ஜூலை, 2009

வேலுபிரபாகரனின் காமக்கதை!


காதல் என்ற சொல்லுக்கு எந்த பொருளுமில்லை. பெண்ணின் உடல் மீதான ஈர்ப்பும், காமமுமே நம் சமூகத்தில் காதல் என்று சொல்லப்படுகிறது. இந்த காதல் என்ற கருமாந்திரம் இல்லாவிட்டால் இந்தியர்கள் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு முன்பே பல்பை கண்டுபிடித்து ஆட்டு ஆட்டுவென்று ஆட்டியிருப்பார்கள் என்ற சிந்தனையை உரக்கச் சொல்லவே காதல் கதை என்ற செல்லுலாய்டு குப்பையை கொட்டியிருக்கிறார் வேலுபிரபாகரன்.

சென்சார் இப்படத்தைப் போட்டுக் குதறியதில் எந்த தப்புமேயில்லை. பாடாவதி படத்தை திரும்ப திரும்ப சோர்வடையாமல் போட்டுப் பார்த்து வெட்டித்தள்ளிய சென்சார் அதிகாரிகளுக்கு கலாச்சார அமைச்சகம் சம்பள உயர்வு கொடுக்கலாம். பாடல் காட்சிகளிலும், ஏனைய காட்சிகளிலும் தாராளமாக செமி நியூட். படத்தில் நடித்த நடிகைகளுக்கு மார்பகம் குறித்த பிரக்ஞையே சற்றும் இல்லை என்பதால் தமிழ் சினிமா ஹாலிவுட் அளவுக்கு சைஸில் பெருத்து விட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.

காதல் மற்றும் காமம் குறித்த வேலுபிரபாகரனின் உளறல்களுக்கு இடையே பகுத்தறிவுப் பிரச்சாரக் கொடுமை. ஒரு காட்சியில் வேலுபிரபாகரன் பெரியார் வேடத்தில் தோன்றிப் படுத்துகிறார். பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கிறது? கொஞ்சமும் சரக்கில்லாத மூன்றாந்தர இந்த பிட்டுப் படத்தை எடுத்துவிட்டு இத்தனை நாளாக ஊடகங்களில் வேலு பிலிம் காட்டிக் கொண்டிருந்தது ரொம்பவும் ஓவர். ரஜினிகாந்த் இப்படத்துக்கு பொருளாதார ரீதியாக உதவியிருந்தால் அதைவிட நகைச்சுவை வேறெதுவுமில்லை.

ஹீரோயின் ஷெர்லினின் கண்கள் மட்டும் ஆறுதல். முதல் படமென்றாலும் திறந்த மனதோடே கேமிராவை அணுகியிருக்கிறார். பாபிலோனா உள்ளிட்ட மற்ற கட்டைகளும் தங்கள் திறமையை சிறப்பாகவே வெளிக்காட்டியிருக்கிறார்கள். இவர்களின் இடுப்புக்கும், மார்புக்கும் ஸ்பெஷல் லைட்டிங் அமைப்பதிலேயே கேமிராமேனின் மொத்தக் கவனமும் இருந்திருக்கிறது.

பெண் உடல் மீதான கிளர்ச்சி இளைஞர்களுக்கு இருப்பதாலேயே நாட்டில் நடைபெறுகிற குற்றங்களில் எண்பது சதவிகிதம் பாலியல் குற்றமாக இருக்கிறது என்று முதல் காட்சியிலேயே பாடம் போதிக்கும் வேலுபிரபாகரன் இப்படம் மூலமாக தீர்வு எதையும் முன்வைக்கவில்லை. மாறாக மேலும் பாலியல் குற்றங்கள் முன்பைவிட தீர்க்கமாக நடைபெற உந்துசக்தியாக இப்படத்தின் காட்சிகளை அமைத்திருக்கிறார். வரைமுறையற்ற காமத்துக்கு சுதந்திரம் கோருகிறார். இந்த கண்ணறாவியைப் பார்த்துவிட்டு எந்த மாதிரியான விவாதம் சமூகத்தில் கிளம்பும் என்று அவர் எதிர்பார்க்கிறாரோ புரியவில்லை.

பிரபல கவர்ச்சி நடிகையை வேலுபிரபாகரன் திருமணம் செய்துகொண்டு சில நாட்கள் வாழ்ந்திருக்கிறார். அவர் மீது கொண்டது காதலல்ல, வெறும் காமம் என்றுணர்ந்து விலகியிருக்கிறார். பிறகு வேறொரு பெண்ணிடம் காதல்வசப்பட்டு.. மன்னிக்கவும் காமவசப்பட்டு, பின்னர் ஏமாற்றப்பட்டிருக்கிறார். எனவே காதல் என்பது பொய், காமம் என்பதே மெய் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். இப்படியாக சொந்தவாழ்வில் ஏற்பட்ட சில காம, காதல் குளறுபடிகளால் மனம் குழம்பி ‘வேலுபிரபாகரனின் காதல் கதை' என்று படமெடுத்து மக்களையும் குழப்ப கிளம்பியிருக்கிறார்.

ஆர்ட் டைரக்‌ஷன் தவிர்த்து தொழில்நுட்பரீதியாகவும், உள்ளடக்க ரீதியாகவும் மகா மகா மட்டமான படைப்பு இது. ஒரு மேட்டர் படத்துக்கு எப்படி இசையமைக்க வேண்டுமோ, அப்படியே கச்சிதமாக இசையமைத்திருக்கிறார் இசைஞானி. தியேட்டரில் எக்ஸ்ட்ரா பிட் ஓட்டாதது ஒன்றுதான் பாக்கி. மற்றபடி முழுநீல வண்ணப்படம். அரங்கு நிறைந்து ஓடுகிறது. இதுபோதாதா வேலுபிரபாகரனுக்கு?

16 ஜூலை, 2009

மோகன் அண்ணா!


எனக்கு சிறுவயதாக இருந்தபோது மடிப்பாக்கத்தில் முடிவெட்டும் கடை எல்லாம் இருந்ததாக நினைவில்லை. கன்னியப்பன் ஒவ்வொருத்தர் வீடாக வந்து முடிவெட்டி விட்டு செல்வார். ஞாயிற்றுக்கிழமைகளில் அவருக்கு வேலை அதிகம். பெருசுகள் எல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் முடிவெட்டிக் கொள்ளும் என்பதால் வாரநாட்களில் தான் பையன்களுக்கு முடிவெட்டுவார். அதுவும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எந்த பையனும் தலைநீட்ட வீடுகளில் அனுமதிக்கப்படாது என்பதால் மற்றக்கிழமைகளில் வந்து வெட்டிவிட்டு ரெண்டு ரூபாயோ, மூன்று ரூபாயோ வாங்கிச் செல்வார்.

எனக்கு முடிவெட்டும் போது தலையை அசைத்துக்கொண்டே இருப்பேன். அவருக்கு வாகாக தலையை காட்டமாட்டேன். “சாவுற காலத்துலே சங்கரா, சங்காரான்னு கெடக்க வேண்டிய வயசுலே இவங்கிட்டே அவஸ்தைப் படுறேன்!” என்று புலம்பிக்கொண்டே வெட்டுவார். முடிவெட்டி முடித்ததும் கண்ணாடியைப் பார்த்து நொந்துவிடுவேன். அம்மா “ஷாட்டா வெட்டுங்க” என்று தான் கன்னியப்பனிடம் சொல்லியிருப்பார். கன்னியப்பனோ கிட்டத்தட்ட மொட்டையே அடித்துவிடுவார். மீண்டும் முடி வளர்ந்து ஒரு நிலைக்கு வர கிட்டத்தட்ட ஆறுமாதமாகிவிடும். ஒருநாள் திடீரென்று அந்த கன்னியப்பன் இறந்துப் போனார். கன்னியப்பனுக்கு நான்கு மகன்கள் என்பதாக நினைவு. கன்னியப்பனின் இரண்டாவது மகன் தான் மோகன் அண்ணா. மற்ற மகன்கள் வேறு வேறு தொழில்களுக்கு மாறிவிட மோகன் அண்ணா மட்டும் அப்பாவின் தொழிலை தொடர்ந்தார்.

கன்னியப்பன் வீடு வீடாக சென்று நாவிதம் செய்து பெரியதாக சொத்து எதுவும் சேர்த்துவிடவில்லை. சம்பாதித்த கொஞ்ச நஞ்ச பணத்தையும் குடித்தே அழித்தார். மோகன் அண்ணா இளைஞராக இருந்ததால் கொஞ்சம் புத்திக் கூர்மையோடு செயல்பட்டார். கூட்ரோடில் ஒரு கடை வாடகைக்கு பிடித்து சுழலும் நாற்காலி போட்டார். கண்ணாடிக்கதவு போட்டு பச்சைக்கலர் ட்யூப் லைட்டை பொருத்தி நவீன மோஸ்தரில் ஒரு கடையை உருவாக்கினார். கன்னியப்பன் போல ரெண்டு ரூபாய், மூன்று ரூபாய்க்கெல்லாம் முடிவெட்டாமல் ஒரு வரையறுக்கப்பட்ட தொகையை தன் வேலைக்கு கூலியாக வாங்கினார் மோகன். ஊர் முக்கியஸ்தர்களுக்கு மட்டும் அவரவர் வீட்டுக்கே சென்று முடிவெட்டி விட்டு வருவார். மடிப்பாக்கத்தில் முதன்முதலாக சலூன்கடை வைத்தது மோகன் அண்ணா தான் என்று நினைக்கிறேன்.

சலூன்கடை வைத்திருந்தது மட்டுமல்லாமல் மோகன் அண்ணாவுக்கு வேறு பணிகளும் இருந்தது. ஊரில் யார் இறந்தாலும் மரண அறிவிப்பினை ஊர்முழுக்க சொல்வது மோகன் அண்ணாவுக்கு சாதிரீதியாக கொடுக்கப்பட்ட பணி. அவர் தந்தை செய்துவந்த இந்தப் பணியை மோகன் அண்ணாவும் எந்த முகசுளிப்புமின்றி தொடர்ந்து செய்துவந்தார். கூடுதல் வருமானம் இதில் கிடைத்ததும் கூட அவர் இந்த பணியை விரும்பி செய்ய காரணமாக இருந்திருக்கலாம்.

இழவு விழுந்த வீட்டில் செய்யவேண்டிய கருமாந்திரப் பணிகள் அனைத்தையும் மோகன் அண்ணா செய்யவேண்டியிருந்தது. தாசரி அழைத்துவருவதிலிருந்து பாடை கட்டுபவன், பறைமோளம் அடிப்பவன், பல்லாக்கு அலங்காரம் செய்பவன் என எல்லோரையும் ஒருங்கிணைத்து சுடுகாட்டில் பிணம் எரியும்வரை மோகன் அண்ணாவின் கடமைகள் தொடரும். பதினாறாவது நாள் காரியத்துக்கான ஏற்பாடுகளும் கூட மோகன் அண்ணாவின் மேற்பார்வையில் தான் நடக்கும். காரியத்துக்கு என்றிருக்கும் அய்யரை கூட்டிவருவதிலிருந்து குளத்தங்கரை மண்டபத்தை புக் செய்வது எல்லாமே மோகன் அண்ணாவே செய்வார்.

யார் வீட்டுப் பக்கமாவது மோகன் அண்ணாவை பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம், எங்கேயோ எழவு விழுந்திருக்கிறது என்று. அய்யர் வீடுகளின் மரணம் ஏற்பட்டால் மோகன் அண்ணாவின் சாங்கியரீதியான வேலைகள் எதுவும் தேவைப்படாது என்றாலும் இறந்தவர் கொஞ்சம் ஊரில் பிரபலமான அய்யராக இருந்தால் எல்லோருக்கும் போய் துக்கச்செய்தி சொல்லுவார். இதற்காக அவர் காசு எதுவும் அய்யர் வீடுகளில் வாங்கமாட்டார். அவரவர் விருப்பப்பட்டு குவார்ட்டரோ, ஹாஃபோ வாங்கிக் கொடுத்தால் அது போதுமானது.

சுபகாரியங்களின் போதும் மோகன் அண்ணாவின் தேவை மடிப்பாக்கம் வாசிகளுக்கு தேவைப்பட்டது. அதிகாலையில் மணமகனுக்கு எண்ணெய் நலங்கு வைப்பது போன்ற சடங்குகள் எல்லாம் மோகன் அண்ணாவுக்கு தான் எப்படி முறைப்படி செய்வது என்று தெரியும். கல்யாணத்தில் வண்ணாத்திக்கு துணி கொடுப்பது போன்ற சடங்குகள் கூட உண்டு. மடிப்பாக்கத்தில் யாருக்கு வண்ணான் - வண்ணாத்தியை எல்லாம் தெரியும்? மோகன் அண்ணா தான் எங்கேயோ போய், யாரையோ கூட்டி வருவார்.

ஊரில் மக்கள்தொகை பெருக்கம் ஏற்பட்டு மரணவிகிதம் அதிகரிக்க அதிகரிக்க அவரால் அவர் தொடங்கிய சலூன் கடையில் அதிகமாக கவனம் செலுத்த முடியவில்லை. எப்போதும் கடையை மூடிவிட்டு சாவு செய்தி சொல்லும் வேலையில் பிஸியாக இருப்பார். வாடிக்கையாளர்கள் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட மற்ற முடிவெட்டும் நிலையங்களுக்கு செல்ல ஆரம்பித்தார்கள். அதே நேரத்தில் மோகன் அண்ணாவுக்கு குடிப்பழக்கமும் உச்சநிலைக்கு போயிருந்ததால் தொழில்நேரத்தில் குடித்துவிட்டு சொதப்பவும் ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் அவரால் சலூன் தொழிலை தொடர்ந்து செய்யமுடியவில்லை. கடையை இழுத்து மூடிவிட்டு தெரிந்தவர்களுக்கு மட்டும் அவரது அப்பாவைப் போல வீட்டுக்கு போய் சவரம் செய்ய ஆரம்பித்தார். நல்லவேளையாக அந்த இடைப்பட்ட காலத்தில் அவர் சம்பாதித்த பணத்தில் ஒரு சொந்தவீடு வாங்கியிருந்தார். இதன்பிறகு முழுக்க முழுக்க எங்காவது எழவு விழுந்தால் மட்டுமே சம்பாதிக்க முடிந்தது, சுபகாரியங்களில் வருமானம் ரொம்ப கம்மி. எப்போதாவது ரியல் எஸ்டேட் ப்ரோக்கர்களுக்கு தெரிந்த இடங்களை காட்டிவிட்டு மிகக்குறைவான கமிஷன் வாங்குவார்.

குடிக்க கையில் காசில்லாத நேரத்தில் அவரது தொழில்பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு டிவிஎஸ்50யில் ஊரை ரவுண்டடிப்பார். “என்ன நாயக்கரய்யா தாடி விட்டிருக்கீங்க? திருப்பதி போறீங்களா?” என்று எதிர்படுபவரை கேட்பார். “அட அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா. நேரமில்லே” என்று சொன்னால் உடனே கிடைக்கும் இடத்தில் உட்காரவைத்து ஷேவிங் செய்துவிடுவார். கொடுக்கும் காசை வாங்கிக் கொள்வார். ஒரு ‘கட்டிங்'குக்கு தேவையான துட்டு கிடைத்ததும் நேராக மதுக்கடைக்கு வண்டியை விடுவது அவர் வழக்கமாக இருந்தது. மோகன் அண்ணாவுக்கு அதிர்ஷ்டவசமாக பிறந்தது ரெண்டுமே பையன்கள். பையன்கள் சுமாராக படித்து, வளர்ந்து ஏதோ வேலை, வெட்டிக்கு போய் சம்பாதிக்கிறார்கள். அப்பா, தாத்தா செய்த தொழிலை தொடர அவர்களுக்கு விருப்பமில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மோகன் அண்ணா செத்துப் போய் விட்டார். யார்யாரோ செத்தப் போதெல்லாம் ஊருக்கே செய்தி சொன்ன அவர் செத்துப் போனதை அக்கம்பக்கத்துக்கு சொல்லக்கூட ஆளில்லை. எதேச்சையாக அவர் வீட்டுப் பக்கமாக போனபோது தான் எனக்கே தெரிந்தது. மோகன் அண்ணாவுக்கு நாற்பத்தி ஐந்திலிருந்து ஐம்பதுக்குள் வயதிருக்கலாம். கொஞ்சம் ஒல்லியாக இருப்பார். எவ்வளவு தண்ணி அடித்திருந்தாலும் அண்ணன் சுறுசுறுப்பாக கில்லி மாதிரி சுழன்று சுழன்று வேலை பார்ப்பார். எனக்குத் தெரிந்து அவர் வாழ்நாளில் ஒரு லட்சம் லிட்டராவது மது அருந்தியிருப்பார் என்று நினைக்கிறேன். “இவ்ளோ தண்ணியடிக்கிறீங்களே? ஒடம்புக்கு ஏதாவது ஆயிடாது?” என்று கேட்டால் “தண்ணியால நான் சாவமாட்டேன்டா” என்பார். இப்போது கூட அவர் செத்ததற்கு மஞ்சக்காமாலையை தான் காரணமாக சொல்கிறார்கள்.

மோகன் அண்ணா மரித்துப் போனதற்காக ஊரே வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது, “இனிமே யாராவது செத்தா இழவு வேலையை எல்லாம் யாரு பார்க்குறது?” என்று.

23 ஜூன், 2009

’அவள்!’


விக்கித்துப் போயிருந்தான்.

அப்படிப்பட்ட வார்த்தைகளை அவன் எதிர்ப்பார்க்கவேயில்லை.

“நீ மட்டும் யோக்கியமா?”

யோக்கியம், அயோக்கியம் வேறுபாடுகள் பார்க்கும் நிலையிலா அப்போதிருந்தான்?

ப்ளாஷ்பேக் ஸ்டார்ட்ஸ்...


வார்த்தைகளுக்கு வாய்ப்பின்றி காலைக் கட்டிக் கொண்டு அழுத மாமா.

”நீங்கதான் எங்க குடும்ப தெய்வம்” - அழுதுகொண்டே அரற்றிய அத்தை.

“மாமா நீங்க இந்த நேரத்துலே உதவலேன்னா குடும்பத்தோடு தூக்குப் போட்டுக்கிட்டு செத்துடுவோம்” - மாமா மகன்.

தன்னை வளர்த்தெடுத்த குடும்பம் ஒப்பாரி வைத்து அழுவதைப் பார்த்து அவனும் அழுதான்.

மூலையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தாள் ‘அவள்’


லகமே மகிழ்ச்சியைக் கொண்டாடிய அந்த புத்தாண்டு இரவு அவளுக்கு மட்டும் துயர் தந்ததாய் இருந்தது.

“உங்க மாமா குடும்ப கவுரவம் உங்களுக்கு முக்கியமானதா இருக்கலாம். அதுக்காக நான்?”

“.................”

இரண்டு நாட்களுக்கு முன்பாக மட்டுமே அவளுக்கு திருவேற்காட்டில் ரகசியத் தாலி காட்டியிருந்தான். இரண்டாண்டு தெய்வீகக் காதல். இன்னும் திருமணமானது ரெண்டு வீட்டுக்கும் தெரியாது.

அழுதான். திரும்ப திரும்ப அழுதான். அழுகையைத் தவிர்த்து அவனிடம் வேறு ஆயுதமில்லை. ஆண் அழுவது அசிங்கம். அதைவிட அசிங்கம் வேறெதுவுமில்லை.

அழுத அவனை வெறுத்தாள். வெறித்தாள், ’போய்த்தொலை’ என்ற மனோபாவத்தோடு.


ழகான ஆண்குழந்தை.

“அப்பனை உரிச்சு வெச்சிருக்கு” சொன்னபோது திடுக்கிடலாய் நிமிர்ந்தாள் ’அவள்’. அவனும் கூட.

அவனுக்கும், அவளுக்கும், அவள் குடும்பத்துக்கும் மட்டும்தானே தெரியும் அப்பன் யாரென்பது.

அவனுக்கு குழந்தை பிறந்தது என்று சுற்றம் கொண்டாடியது. யாரோ ஒருவனின் குழந்தைக்கு இனிஷியல் மட்டுமே தரவேண்டிய தன் விதியை நினைத்து மீண்டும் அழுதான். தனிமையில் அழுதான்.


குடும்பத்தோடு திருவேற்காடு போயிருந்தான். இனிஷியல் மகனை தோளில் சாய்த்திருந்தான்.

ஆயிரம் கல்யாணம் நடத்திவைத்த அர்ச்சகருக்கு இவன் முகம் மட்டும் நினைவில் இருந்து தொலைக்க வேண்டுமா?

“இதுதான் உன் ஆம்படையான்னா, அன்னைக்கு தாலி கட்டினியே? அந்தப் பொண்ணு யாருவோய்?”

உண்மை விளங்கி திரும்பவும் மாமா அழுதார்.

“உன் வாழ்க்கையையும் வீணடிச்சிட்டேனே?” தலையில் அடித்துக் கொண்டு அழுதார். சந்நிதியில் அழுதார். சுற்றி வேடிக்கைப் பார்ப்பவர்கள் குறித்த பிரக்ஞ்சை இன்றி அழுதார்.

ச்சே. இந்த ஆளுக்கு அழமட்டும் தான் தெரியும்.

’அவள்’ இம்முறை பார்த்தாள். வெறுப்போடு பார்த்தாள். கண்களில் தீக்கங்குகளை வைத்துப் பார்த்தாள்.


“யாரு போனுலே?”

“யாரா இருந்தா உனக்கென்ன?” அவள்.

பேருக்கு கணவன் - மனைவியாக இருப்பவர்கள் பேசிக்கொள்வது இப்படித்தானே இருக்கும்? உடலைப் பகிர்ந்துகொள்ள முடியாதவர்களால் உள்ளத்தை மட்டுமா பகிர்ந்துகொள்ள முடியும்?

அடிக்கடி அவளுக்கு போன் வந்தது. குழந்தை அழுவதைக் கூட சட்டை செய்யாமல் போனில் பேசினாள். சிரித்து சிரித்துப் பேசினாள். ஒருவேளை தான் இனிஷியல் கொடுத்த குழந்தையின் உண்மை அப்பனோ?


நேரங்கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வந்தாள்.

குழந்தையை க்ரெச்சில் சேர்த்திருந்தாள். எதையும் அவன் கேட்டதில்லை.

ஒருநாள் பொறுக்கமாட்டாமல் கேட்டான்.

”எங்கே போயிட்டு வர்றே?”

லேசான வார்த்தைகளில் தொடங்கிய உரையாடல் சூடுபிடித்து உச்சத்தை அடைந்தது.

அப்போதுதான் கேட்டாள் அவள்.

“நீ மட்டும் யோக்கியமா?”

முதல் பத்தியில் தொடங்கிய பிளாஷ்பேக் முடிவுக்கு வந்தது.


விடிந்த பொழுது மோசமான பொழுது.

அவள் ஓடிவிட்டிருந்தால் குழந்தையோடும், கட்டியச் சேலையோடும்.

குழந்தைக்கு உண்மையான இனிஷியல் ஒருவேளை கிடைத்திருக்கக் கூடும்.

மாமா திரும்ப அழுதார். அவர் குடும்பமே சேர்ந்து அழுதது. அழுமூஞ்சிக் குடும்பம்.

ஊரை காலி செய்தான். வீட்டை விற்றான். பணிமாற்றல் வாங்கினான்.

“இன்னொரு கல்யாணத்துக்கு பொண்ணும் வேணும்னா பார்க்கட்டா?” விசும்பியபடியே கேட்ட மாமாவை முறைத்தான்.


டல் வேட்கையோடு அங்கே போனவனுக்கு உள்ளம் வெடித்தது. சுக்கு நூறாய். சுக்கு ஆயிரமாய். சுக்கு லட்சமாய்.

மூன்றாவது பத்தியில் பார்த்த ‘அவள்’ இவள்.

சினிமா ஆசையில் ஓடிவரும் இளம்பெண்களுக்கும், குடும்பத்தை மறந்து திருட்டு காதல் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் சிலருக்கும் ஏற்படும் அதே கதி.

பாவத்தை மறைக்க, மறுக்க என்ன செய்வதென்று புரியவில்லை.. தான் தோன்றித்தனமாக நடந்துகொண்டான்.

அவளின் நகைகளை இவளுக்கு போட்டு அழகு பார்த்தான்.

“இனிமே நீயே வெச்சுக்கோ” அவனுக்கே கேட்காமல் முணுமுணுத்தான்.

அதன்பின் ஒருவரியும் பேசவில்லை இருவரும். முன்பு மனதால் இணைந்தவர்கள் இன்று உடலாலும் இணைந்தார்கள்.

அவள் முகம் பார்த்தான்.

அழுதான். திரும்ப திரும்ப அழுதான். அழுகையைத் தவிர்த்து அவனிடம் வேறு ஆயுதமில்லை. ஆண் அழுவது அசிங்கம். அதைவிட அசிங்கம் வேறெதுவுமில்லை.

அழுத அவனை வெறுத்தாள். வெறித்தாள், இப்போதும் ’போய்த்தொலை’ என்ற மனோபாவத்தோடு.

உயிரோடை சிறுகதைப் போட்டிக்கு எழுதிய கதை!

22 ஜூன், 2009

தமிழ் வலையுலகம் - கார்ட்டூன்கள்!

படங்களில் காணும் வாசகங்களை படிக்கமுடியாத அளவுக்கு கண்ணு டொக்கு ஆகிவிட்டிருந்தால் படங்களை அழுத்தி பெரிதாக்கி படிக்கவும்!




19 ஜூன், 2009

மென்பொருள் கூலிகளின் அவலம்!

நம் தெருவில் நம்மை மாதிரியே சாமானியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பம் ஒன்றிருக்கும். அந்த வீட்டு பசங்களும் நம்மை மாதிரியே கேரம்போர்டுக்கும், உட்டன் செஸ்போர்டுக்கும் ஏங்கும் பயல்களாக இருந்திருக்கலாம். திடீரென்று அந்த குடும்பத்தில் யாருக்கோ நல்லவேலை கிடைத்து நிறைய பணம் மரத்தில் காய்க்க ஆரம்பித்து விட்டால் என்ன நடக்கும்?

தெருவில் கோலியும், பம்பரமும் விளையாடிக் கொண்டிருந்த பயல்கள் விதம் விதமான விளையாட்டுப் பொருட்களோடு தெருப்பயல்களுக்கு போங்கு காட்டுவார்கள் இல்லையா? மற்ற பயல்கள் அவர்களை அதற்குப் பிறகு எப்படிப் பார்ப்பார்கள்? என்னமாதிரியாக மதிப்பிடுவார்கள்? இதே உதாரணம் உளவியல்ரீதியாக மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்களையும், மற்ற தொழில்களில் அற்பசம்பளம் வாங்குபவர்களையும் ஒப்பிடும்போதும் பொருந்தும். பரம்பரை பணக்காரர்களை (வேறு வழியின்றி) சகித்துக் கொள்ளுபவர்கள், புதுப்பணக்காரர்களை உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை.

மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்கள் மீது மற்றவர்களுக்கு என்ன பொறாமை? பெரியளவிலான உடலுழைப்பின்றி தகுதிக்கு அதிகமாக சம்பளம் வாங்குகிறார்கள். சைக்கிளுக்கே லாட்டரி அடித்தவர்கள் காரில் பறக்கிறார்கள். ஃபிளாட் வாங்குகிறார்கள். விலைவாசியை ஏற்றுகிறார்கள். வாடகை இவர்களால் உயர்ந்துவிட்டது. ஆட்டோக்காரன் கூட இப்போதெல்லாம் நூறு ரூபாய்க்கு சில்லறை தரமாட்டேன் என்கிறான். பூமியில் கால்படாவண்ணம் ஒரு அடி அந்தரத்திலேயே நிற்கிறார்கள். அர்த்தராத்திரியிலும் வெய்யிலுக்கு குடைபிடிக்கிறார்கள். கிட்டத்தட்ட என் நினைப்பும் இதேதான், இரா.முருகனின் ‘மூன்று விரல்’ வாசிக்கும் வரை.

பிரச்சினை பொறாமைக்கார சமுதாயத்தின் மீது மட்டுமல்ல. மென்பொருள் அலுவலர்களிடமும் உண்டு. சமூகத்தை விட்டு அவர்கள் பொதுவாக விலகிச்செல்வது மாதிரியான தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஐ.டி.யில் வேலை பார்ப்பவன் பிராமணன் மாதிரி நாலுபேர் மத்தியில் தனித்து தெரிகிறான். இங்கிலாந்திலோ, அமெரிக்காவிலோ பிறந்த பரம்பரை மாதிரி ஃபிலிம் காட்டுகிறான். தன்னுடைய நியாயங்களை நிதானமாக புரியவைப்பதை தவிர்த்து தங்கள் மீதான சமூகத்தாக்குதலை மூர்க்கத்தனமாக எதிர்கொள்ளுகிறான். மென்பொருள் அலுவலர்களை குஷிப்படுத்துவதாக நினைத்து கடந்தவாரம் ஆனந்தவிகடனில் செல்வேந்திரன் எழுதிய கவிதை போன்ற தோற்றத்தில் இருந்த ஒரு விஷயம் கூட நிறையப்பேரை எரிச்சல் தான் படுத்தியிருக்கிறது. ”இவனுங்களுக்கு மட்டும் என்ன கொம்பா முளைச்சிருக்கு?” என்பதே மற்றவர்களின் மனோபாவம்.

இவர்களைப் போல இல்லாமல் இரா.முருகன் நயமாக மென்பொருள்துறைக்கு வக்காலத்து வாங்குகிறார். ’மென்பொருள் துறை சார்ந்து தமிழில் வெளிவரும் முதல்நாவல்’ என்ற அடைமொழியோடு, ஐடியில் வேலை பார்ப்பவனும் சாதாரண மனிதன் தான். எல்லோரையும் மாதிரி பிறந்தவன் தான். அவனுக்கும் காதல் உண்டு, காமம் உண்டு, பசியுண்டு, ஆசை ஆசாபாசங்கள் உண்டு, பிளேடால் கிழித்தால் அவனுக்கும் சிகப்பு கலரில் தான் இரத்தம் வழியும், அழுதால் உப்புச்சுவையோடு தான் கண்ணீர் வரும் என்றெல்லாம் பொறுமையாக பாடமெடுக்கிறார். புரியவைக்கிறார். மென்பொருள் பணியாளர்கள் தங்கள் மீது பொறாமைப்படும் சமூகத்தை எதிர்கொள்ளும் சரியான வழிமுறை இந்நாவல். நாவலாசிரியரும் ஒரு மூத்த தலைமுறை மென்பொருளாளர் என்றே தெரிகிறது.

சுதர்ஸன் மாயூரத்தில் பிறந்த அய்யங்கார் பையன். பணிநிமித்தமாக இங்கிலாந்துக்குப் போனாலும், தாய்லாந்துக்குப் போனாலும் வத்தக்குழம்பும், சுட்ட அப்பளமும் கிடைக்காதா என்று ஏங்குபவன். பணிச்சூழல் அவனை அவன் பிறந்த சமூகத்திடமிருந்து தள்ளிவைக்கிறது. காலம் காலமாக அவனது பரம்பரை அனுபவித்த இனிய விஷயங்களை அவனிடமிருந்து தட்டிப் பறிக்கிறது. அவனோடு படித்த மிளகாய் மண்டி ராஜேந்திரன் இரண்டு குழந்தை பெற்றுவிட்டான். இவனுக்கோ கல்யாணம் கூட பகல்கனவு. அம்மா மருத்துவமனையில் உயிருக்குப் போராடும்போதும், பொய்க்கேஸில் அப்பா லாக்கப்பில் தவிக்கும்போதும் எங்கோ தூரதேசத்தில் இருந்து அல்லல்படுகிறான்.

பணிக்கு வந்த தேசத்தில் விசா காலவதியாக கூட பணிபுரியும் நண்பன் ஜெயிலுக்குப் போகும் நிலை வரும்போது மூன்றாம்பிறை கமல்ஹாசன் மாதிரி மனம் பேதலித்துப் போகிறான். கழுத்தை இறுக்கும் டெட்லைன். கிட்டத்தட்ட ‘டெட்’ ஆகி, மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறான். பிறந்த கலாச்சாரத்தை மறக்க முடியாமல், பணிச்சூழலால் வாழும் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாய் வாழுகிறான்.

சுவாரஸ்யமான சம்பவங்களோடு கதை இவ்வாறே விரிவடைகிறது. 90களில் ஏற்பட்ட ஐ.டி மறுமலர்ச்சி, செப்.11 சம்பவத்துக்குப் பிறகான ஐ.டி. வீழ்ச்சி என்று கதையின் களமும், தளமும் அபாரம். குடிபோதையில் எவளோ ஒருவளை சம்போகித்துவிட்டு சுதர்சன் பிதற்றும் அத்தியாயங்களில் வாசகனுக்கும் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்கிறது. மிளகாய் மண்டி ராஜேந்திரன், இங்கிலாந்து ஜெஃப்ரி, மென்பொருள் காதலி சந்தியா, தாய்லாந்து அழகி னாய், சுபர்ணா, பாஸ்போர்ட் தொலைத்த ராவ் என்று கதாபாத்திரங்கள் கூர்மையான உளியால் செதுக்கப்பட்டவை.

ஒவ்வொரு விஷயத்தையும் விலாவரியாக எளிமையான மொழியில் கதை சொல்லிக்கொண்டே போகும் இரா.முருகன் சுஜாதாவின் இரண்டாவது வெர்ஷன். விகடன், குமுதம் மாதிரி வெகுஜன இதழ்கள் இவரொரு தீவிர இலக்கிய கும்மி என்று நினைத்து ஒதுங்கிப் போய்விட்டார்களோ என்னவோ தெரியவில்லை. முருகனின் எழுத்து நடுத்தர வர்க்கத்தை கச்சிதமாக டார்கெட் செய்து அடிக்கிறது.

சுவாரஸ்யமாக, விலாவரியான சம்பவங்கள் மற்றும் வசனங்களோடு ஜோராய் கிண்டி குதிரை மாதிரி ஓடிக்கொண்டிருந்த நாவல் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது போல தோன்றுகிறது. 2001 செப்.11க்குப் பிறகு வெகுவேகமாக எடிட்டப்பட்டு நாவல் நாடகத்தனமாய் ஓடுகிறது. க்ளைமேக்ஸ் வலிந்து திணிக்கப்பட்ட அநியாய சோகம். சுதர்ஸனை சாம்பார் வாளியெல்லாம் தூக்க வைத்திருக்க வேண்டியதில்லை.

மூன்று விரல் - மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்கள் வாசித்து, மற்றவர்களுக்கு கட்டாயம் பரிந்துரைக்க வேண்டிய புத்தகம். இந்நாவலுக்கு ஏன் இந்த தலைப்பு என்று இந்த நிமிடம் வரை புரியாமல் குழம்பிப் போயிருக்கிறேன்.


நூலின் பெயர் : மூன்று விரல்

ஆசிரியர் : இரா.முருகன்

பக்கங்கள் : 368

விலை : ரூ. 150/-

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்,
எண் 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701
மின்னஞ்சல் : support@nhm.in
இணையம் : www.nhm.in
ஆன்லைனில் வாங்க : http://nhm.in/shop/978-81-8368-073-8.html