27 ஜூலை, 2009

யோகா டீச்சர்!


’யோகா டீச்சர்!’ - மலையாளப் பிட்டு படத்தின் டைட்டில் மாதிரி இருக்குதில்லே?

நான்கைந்து வருஷங்களுக்கு முன்னால் நடிகர் நாகார்ஜூனனின் மகன் நாகசைதன்யாவுக்கு யோகா கற்றுக் கொடுக்க ஒரு டீச்சர் பெங்களூரில் இருந்து வந்தார். யோகா டீச்சர் என்றால் சந்நியாசினி மாதிரி மஞ்சள், காவி ட்ரெஸ்ஸில் அழுது வடிந்துகொண்டு இல்லாமல் ப்ரெஷ்ஷாக மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருந்தார். ஃபிகரும் சூப்பராக இருக்க ஸ்டூடண்டின் அப்பா ரொம்ப இம்ப்ரஸ் ஆகிவிட்டார். விளைவு அவர் நடித்த ‘சூப்பர்’ படத்தில் துண்டு வேடத்தில் துண்டு கட்டிக்கொண்டு அனுஷ்கா அறிமுகம் ஆனார்.

ஏனோ அனுஷ்காவின் கவர்ச்சி அப்போது யாரையும் கவரவில்லை. அடுத்து ஒரு படம் இழுத்துப் போர்த்துக் கொண்டு நடித்தார். நடிப்பு சுமாராக இருந்ததாக பேசிக்கொண்டார்கள். இதே நேரத்தில் மெகாஸ்டாரின் ஸ்டாலின் படத்தின் ஒரு சூப்பர் டபுக்கு டபான் டேன்ஸ் ஆட அனுஷ்காவுக்கு வாய்ப்பு வந்தது. அம்மணி சூப்பர்ஹிட் ஆனார். அடுத்து ரவிதேஜாவோடு நடித்த விக்ரமகடு அனுஷ்காவின் சதைக்காட்சிக்காகவே சக்கைப்போடு போட்டது.

தென்னிந்தியாவுக்கு வெற்றிகரமான க்ளாமர் குயின் ரெடி! இன்றைய தெலுங்கு பில்லா வரை அனுஷ்காவின் கவர்ச்சிக்கு எல்லோரும் அடிமை. மாதவனின் ‘ரெண்டு’ மூலமாக தமிழுக்கும் வந்தார். சிலுக்கு ஸ்மிதா, டிஸ்கோ சாந்திகளை மிஞ்சும் வகையில் அம்மணி ‘திறமை’ காட்டியும், அப்போது மாதவனுக்கு இருந்த ராசி படத்தை பப்படமாக்கி விட்டது. திரும்ப தமிழுக்கு வரக்கூடிய வாய்ப்பே அவருக்கு அதனால் அமையாமல் போய்விட்டது.

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக இரட்டை வேடத்தில் நடிக்க இவரை கோடிராமகிருஷ்ணா ஒப்பந்தம் செய்திருந்தார். “அந்தப் பொண்ணையா நடிக்க வெக்கிறீங்க? மூஞ்சியிலே ரியாக்‌ஷனே வராதே?” என்று இயக்குனரை பலரும் பயமுறுத்தினார்கள். மிகக்குறைந்த சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டு அனுஷ்கா நடித்தார். கிளாமர் குயினான அனுஷ்கா அப்படத்தில் விஜயசாந்தி கெத்துக்கு ஃபிட் ஆகும் கேரக்டரில் சிரமப்பட்டு நடிக்க வேண்டியதாயிற்று. நன்றாக வந்த டேக்குகளையே திரும்ப திரும்ப எடுக்கும் ராமகிருஷ்ணா அனுஷ்காவின் பெண்டினை நிமிர்த்தினார்.

பல தடைகளுக்குப் பிறகு வெளிவந்த ‘அருந்ததீ!’ இன்று தென்னிந்தியாவின் நெ.1 நடிகையாக அனுஷ்காவை மாற்றியிருக்கிறது. தெலுங்கு பட கலர்ஃபுல் வசூல் ரெகார்டுகளை அனாயசமாக ஒரு ஹீரோயின் ஓரியண்டட் படம் உடைத்து தெரித்திருக்கிறது. கால்ஷீட் டயரி அடுத்த ரெண்டு வருடத்துக்கு ஃபுல். தமிழில் டப் செய்யப்பட்டும் சக்கைப்போடு போட, இப்போது தமிழ், தெலுங்கு இருமொழிகளிலுமே இவர் தான் டாப். அம்மணியின் சம்பளம் இப்போது அருந்ததிக்கு வாங்கியதை விட இருபது மடங்கு என்று ஹைதராபாத்வாலாக்கள் கிசுகிசுக்கிறார்கள். அதாவது கிட்டத்தட்ட ஒன் சி.

அழகான ஹீரோயின்களுக்கு குரல் எப்போதுமே திருஷ்டி படிகாரம். ஆனால் அனுஷ்கா பேசினால் உண்மையிலேயே குயில் கூவுவது போல இருக்கும். சூப்பர் மற்றும் ரெண்டு படங்களில் சொந்தக்குரலில் பாடியிருக்கிறார் என்பது நிறைய பேருக்கு தெரியாது.

படப்பிடிப்பு இடைவேளைகளில் கொஞ்ச நேரம் கிடைத்ததுமே யோகா செய்ய கிளம்பிவிடுவார் இந்த யோகா டீச்சர். சும்மா இருக்கும் நேரங்களில் அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கு இன்னமும் யோகா சொல்லிக் கொடுக்கிறாராம். வித்தியாசமான ஹாபி ஒன்று இவருக்கு உண்டு. இயற்கை சீற்றங்கள் குறித்த படங்களையும், செய்தித் துண்டுகளையும் சேகரித்து ஆல்பம் உருவாக்குவது.

நிறையபேர் நினைப்பது போல இவர் மும்பை இறக்குமதியல்ல. கர்நாடகாவின் மங்களூரில் பிறந்தவர். துளு தாய்மொழி. முழுப்பெயர் அனுஷ்கா ஷெட்டி. பார்ப்பதற்கு ஸ்வீட்டாக இருப்பதால் இவருக்கு ஸ்வீட்டி என்று செல்லப்பெயர் உண்டு. வயசு என்ன இருக்கும் என்று யாராலேயாவது யூகிக்க முடிகிறதா? 1981ல் பிறந்தவர். கணக்குப் பண்ண தெரிந்தவர்கள் கணக்குப் பண்ணிக் கொள்ளுங்கள். இவருடைய யோகா குரு பரத் தாக்கூர், பூமிகாவின் ஹஸ்பெண்ட்.

அனுஷ்கா மாதிரி யோகாடீச்சர் சென்னையில் இருந்தால் சொல்லுங்கள். யோகாவும், மற்றவையும் கற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிறது!

26 ஜூலை, 2009

புதுப்பேட்டை!


செல்வராகவன் இயக்கிய படமல்ல. சென்னையின் டெட்ராய்ட். அண்ணாசாலையிலிருந்து தாராப்பூர் டவர்ஸ் அருகே லெஃப்ட் அடித்து நேராக போனால் சிந்தாதிரிப்பேட்டை. பாலத்தில் இடதுபக்கமாக திரும்பினால் புதுப்பேட்டை. இருசக்கர வாகன நட்டு போல்ட்டிலிருந்து மெர்சிடிஸ் பென்ஸ் காரின் ஸ்பேர் பார்ட்ஸ் வரை கிடைக்குமிடம்.

கிட்டத்தட்ட அறுபதாண்டுகள் பழமை வாய்ந்த மோட்டார் மார்க்கெட் இது என்கிறார்கள். ஆயிரம் கடைகள் இருக்கிறது. எல்லாக் கடைகளுமே இரும்புக் குப்பைகளால் நிரப்பப் பட்டிருக்கிறது. இந்த பகுதிக்கு ‘ஆட்டோ நகர்' என்று பெயர் வைக்க வேண்டுமென்பது இப்பகுதி வியாபாரிகளின் நீண்டநாள் கோரிக்கை. கடை வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் ‘பாய்'கள். ஆங்காங்கே ‘இன்ஷா அல்லா' அதிகமாக கேட்கமுடிகிறது.

பொதுவாக இந்த இரண்டு பத்திகளையும் வாசிப்பவர்களுக்கு விவகாரமாக எதுவும் தெரிந்திருக்காது. பொல்லாதவன் படத்தில் தனுஷின் பைக் தொலைந்துவிடும் அல்லவா? உடனே தனுஷ் போய் தேடும் இடம் புதுப்பேட்டை. மண்ணில் புதைக்கப்பட்ட பல்சர் ஒன்றை காட்டுவார்களே? அந்த இடம் தான் புதுப்பேட்டை. சென்னையிலும், புறநகரிலும் எந்த பைக் தொலைந்தாலும் எல்லோரும் ஓடிப்போய் தேடுவது புதுப்பேட்டையில் தான். தேடிய எவருக்குமே இதுவரை பைக் திரும்ப கிடைத்ததாக சரித்திரமில்லை. பத்தே நிமிடத்தில் ஒரு பைக்கை பார்ட் பார்ட்டாக பிரித்து போடக்கூடிய வல்லுநர்கள் நிறைந்த இடம் இது.

சீப்பாக காருக்கும், டூவீலருக்கும் ஸ்பேர் பார்ட்ஸ் ஏதாவது வேண்டுமென்றால் தாராளமாக புதுப்பேட்டைக்கு போகலாம். செகண்ட் ஹேண்டில் நீங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விலைக்கு எதுவேண்டுமானாலும் கிடைக்கும். அந்த காலத்து பேபி ஸ்கூட்டருக்கான ஸ்பேர் பார்ட்ஸ் கூட இன்னமும் இங்கே கிடைக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிற்கான கார் ஆடியோ செட்டை நம் நண்பர் ஒருவர் இங்கே இருபதாயிரத்துக்கு முடித்துக்கொண்டு வந்தார் என்றால் நம்ப கடினமாக தானிருக்கும்.

இங்கே ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொன்று ஸ்பெஷல். டூவீலர் ஸ்பேர் பார்ட்ஸ் வாங்க வெங்கடாச்சல நாயக்கன் தெரு. லைட், இண்டிகேட்டர், மீட்டர் போன்ற எலக்ட்ரிக்கல் சமாச்சாரங்களுக்கு வெங்கடாச்சல ஆசாரி தெரு. கார், வேன் ஸ்பேர்களுக்கு ஆதித்தனார் சாலை. ஒட்டுமொத்தமாக பாடியே (சேஸிங் வகையறாக்கள்) வேண்டுமானால் கூவம் சாலை.

புதுப்பேட்டைக்குள் நுழைந்ததுமே ‘இன்னா சார் வோணும்? சொல்லு சார். எதா இருந்தாலும் கொடுத்துடலாம்' என்று எதிர்படும் எல்லா கடைக்காரர்களுமே சொல்லி வைத்தாற்போல கேட்பார்கள். நான் போன அன்று இன் செய்த சட்டையை எடுத்து விட்டேன், தலையை கலைத்து விட்டுக் கொண்டேன். வாயில் ஒரு மாணிக்சந்த் போட்டு, இல்லாத கடுமையை ஒரு ‘கெத்'துக்காக முகத்தில் வைத்துக்கொண்டேன். மூஞ்சை பார்த்து ஏமாளி என்று முடிவுகட்டிவிடக்கூடாது இல்லையா?

“சிடி டான் டேங்க் வேணும்ணா. இருக்கா?”

”நேரா போய் ரெண்டாவது ரைட் அடி”

ரெண்டாவது ரைட்டு ரொம்ப குறுகலானது. டூவீலர் போவதே கடினம். இருபக்கமும் ஏராளமான வண்டிகள் கடைகள் முன்பாக நிறுத்தப்பட்டிருக்கும். தெரியாத்தனமாக ஒரு ஆட்டோக்காரர் உள்ளே நுழைந்துவிட்டாலும் போதும். செம்மொழியில் அர்ச்சனை கிடைக்கும். “த்தா.. பிஸ்னஸ் அவர்லே எவண்டா மயிரு மாதிரி வண்டியை உள்ளே எட்தாந்தது?” என்பார்கள்.

ரெண்டாவது ரைட்டு அடித்தால் இருபுறமும் பெட்ரோல் டேங்குகள் தோரணமாக கட்டிவிடப்பட்டிருந்தன. பல்சர், யூனிகார்ன் என்று லேட்டஸ்ட் ப்ரீமியர் பைக்குகளின் டேங்குகளும் கிடைக்கிறது. அப்படியே புத்தம்புதுசாக ஒரிஜினல் பெயிண்டின் கருக்குலையாமல். ஒவ்வொரு கடையாக ”டாங்க் இருக்கா?” என்று கேட்டால் “எண்ணாண்டே டான் டேங்க் இல்லை, ஆனா ஆறாவது கடையிலே இருக்கும்” என்று தன் சகப்போட்டியாளர்களுக்கே பிஸினஸ் பிடித்துக் கொடுக்கிறார்கள். ஆறாவது கடையில் ஒரு பாய் உட்கார்ந்திருந்தார்.

”சிடி டான் டேங்க் வேணும்னா. இருக்கா?”

“இருக்குண்ணா”

வண்டியை விட்டு இறங்கவே கொஞ்சம் பயமாகதானிருக்கிறது.

“டேங்கு காட்டுண்ணா”

“எறங்கி வாண்ணா. மேல இருக்கு. மாடிக்கு போ எடுத்து கொடுப்பாங்க”

வண்டியை ஓரமாக நிறுத்தி, சைட் லாக் போட்டால், ”சைட் லாக் போடாதே” என்கிறார். கொஞ்சம் தயங்கியதுமே புரிந்துகொண்டவராக “புதுப்பேட்டைலே மட்டும் எவன் வண்டியும் திருடுபோவாது!” என்றார்.

தயங்கியபடியே வண்டியை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே மாடிக்கு சென்றேன். தரையே தெரியாத அளவுக்கு வண்டிகளின் ஸ்பேர் பார்ட்ஸ். மேலேயும் ஒரு பாய்.

“சிடி டான் டேங்க் வேணும்னே”

“இன்னா கலரு”

“பிளாக்”

ஒரு பையனை அனுப்பி “சாருக்கு ஒரு டாங்க் எடுத்துக் கொடு!” என்றார்.

பையன் உள்ளே எங்கேயோ அழைத்துப் போனான். சில படிக்கட்டுகள் ஏறி, சில படிக்கட்டுகள் இறங்கி சந்து மாதிரி போய்க்கொண்டே இருக்கிறது. கீழே விட்ட வண்டி என்னாகுமோ என்ற பயம் வேறு. ஒரு அறைக்கதவை திறந்து லைட் போட்டான். உள்ளே குறைந்தபட்சம் நூறு, நூற்றி ஐம்பது பெட்ரோல் டேங்குகளாவது இருந்திருக்கும். கவரில் சுற்றிவைக்கப்பட்ட ஒரு டாங்கை கொடுத்து “போய் அண்ணன் கிட்டே ரேட் பேசிக்கோ!” என்றான் அந்தப் பையன்.

“என் வண்டிலே வயலட் ஸ்டிக்கரு. இது பிரவுனா இருக்கே?”

“இங்கல்லாம் அப்படித்தான். கிடைக்கிறதை (?) தான் கொடுக்க முடியும்”

வேறு வழியின்றி அண்ணனிடம் போய் ரேட் பேசினேன்.

“எவ்ளோண்ணா”

“கொடுக்குறதை கொடு”

“பரவால்லை ரேட்டு சொல்லிக்கொடுண்ணா” - வெளியே நின்ற வண்டி என்ன கதியோ?

“ரெண்டாயிரம் கொடு”

“புதுசே அவ்ளோ தாண்ணா”

“புதுசு மூவாயிரத்து இருநூறு இன்னிக்கு ரேட்டு. எங்களாண்டியேவா தம்பி?”

நான் ஐநூறில் ஆரம்பித்து ஆயிரத்து நூறுக்கு வந்தேன். அவர் நூறு, இருநூறாக குறைத்துக் கொண்டே வர நான் இருபத்தைந்து, ஐம்பதாக ஏறிக்கொண்டே வந்தேன். கடைசியாக ஆயிரத்து இருநூறில் முடிந்தது. அச்சு அசலாக புது டேங்க். ஷோருமில் வாங்கியிருந்தால் எனக்கு இரண்டாயிரம் ரூபாய் கூடுதல் ஆகியிருக்கும்.

டேங்கை எடுத்துக்கொண்டு வேகவேகமாக தாவிக்குதித்து என் வண்டிக்கு ஓடினால்.. நல்லவேளை எதுவும் ஆகவில்லை. கீழே கடையில் இருந்த பாய் புன்னகைத்தார்.

”வேறு எது வேணும்னாலும் வாங்க. ஊடு எங்கேருக்கு?”

“நந்தனம்னே, நன்றி. கெளம்புறேன்”

வண்டியை வெளியே எடுத்துக் கொண்டுவரும்போது தெருமுனையில் ஒரு புது ஸ்பெளண்டரை அக்கு அக்காக பிரித்துக் கொண்டிருந்தார்கள். எதிர்காலத்தில் எவருக்காவது ஸ்பெளண்டர் டேங்க் வேண்டுமென்றால் பாய் கடையில் சகாய விலைக்கு கிடைக்கும்.

கீழைத்தீ - புதினத்தில் மலர்ந்த புரட்சித்தீ!

தோழர் பாட்டாளியின் எழுத்துளியால் செதுக்கப்பட்ட கீழைத்தீ புதினம் கம்பீரமான சிற்பமாக கருத்தை கவருகிறது. ஒரு புதினத்தில் இவ்வளவு கிளைக்கதைகளை, புரட்சிக்கருத்துக்களை, சந்தேகங்களுக்கு விடைகளை தரமுடியும் என்ற சாத்தியத்தை மெய்யாக்கியிருக்கிறார் தோழர். இப்புதினத்துக்கு பின்னால் இருக்கும் அவரது உழைப்பை, உழைப்பென்று சொல்லமுடியாது, தியாகம்.. தியாகத்தை தமிழர் யாவரும் கொண்டாட வேண்டியது அவசியம்.

புதினத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி எனக்கு புதியது. முதலிரண்டு அத்தியாயங்களை வாசிப்பதற்குள் திணறிவிட்டேன். அதன்பிறகு தஞ்சைத்தமிழ் நமக்கு பழகிவிடுகிறது. கீழ்வெண்மணி படுகொலைகளுக்கு பிறகான கீழ்த்தஞ்சையை களமாக எடுத்துக்கொண்டிருக்கிறார் பாட்டாளி.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வருவதை அப்பாவி விவசாய கூலித்தொழிலாளி கொண்டாடுவதும், வீட்டு விசேஷத்துக்கு மைக் செட்டை கூட சவுண்டாக வைக்கமுடியாத சாதி அவலமும், தச்சுத் தொழிலின் நுட்பமும், சன்னாசித் தாத்தாவின் கதைகளும், பார்ப்பனீய அசிங்கமும், போலிச்சாமியார்களின் பொய் வேஷமும், இடையே சாதிமறுப்பு காதலும், பண்ணையார்களின் அடாவடியும், பாட்டாளிகளின் போராட்டமும், நக்சல்பாரிகளின் எழுச்சியும், அழித்தொழிப்பும், கம்யூனிஸவாதிகளின் சுயவிமர்சனமும்.. அப்பப்பா.. எவ்வளவு விஷயங்களை அனாயசமாக தொட்டுச்செல்கிறார் தோழர். புதினத்தை வாசித்துமுடித்ததுமே அறுபதுகளில் கீழத்தஞ்சையில் பள்ளராகவோ, பறையராகவோ பிறந்து நக்சல்பாரி இயக்கத்தில் நாம் இயங்கியிருக்கக் கூடாதா என்ற ஏக்கம் வருகிறது.

நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரான கோபாலகிருஷ்ண நாயுடு அரைபடி நெல்லை கூலியாக உயர்த்திக் கேட்ட பாவத்துக்காக வெண்மணியில் 44 பேரை உயிரோடு கொளுத்தி, நீதிமன்றத்தில் சாட்சிகளை கலைத்து குற்றமற்றவர் என்ற தீர்ப்பை பணத்தால் வாங்குகிறார். நக்சல்பாரிகள் இயக்கம் கட்டமைத்து அந்த கொடுங்கோலனை அழித்தொழிப்பது தான் புதினத்தின் மையக்கரு.

கோபாலகிருஷ்ண நாயுடுவை சினிமா வில்லன் கணக்காக சித்தரிக்கிறார் தோழர். அவர் மீது வாசகனுக்கு வெறுப்பு ஏற்படவேண்டுமென்பதற்காக சில பக்கங்கள் வீணடிக்கப்பட்டதாக கருதுகிறேன். குறிப்பாக சவரத் தொழிலாளியை அழைத்து தனது அந்தரங்கப் பகுதியை சுத்தப்படுத்தச் சொல்வதும், பின்னர் அத்தொழிலாளியையே கைமைதுனம் செய்துதரச் சொல்வதையும், தன் பண்ணையில் வேலைபார்க்கும் கூலிப்பெண்களின் அங்கங்களை ஆபாசமாக அவன் வர்ணிப்பதையும் சொல்லலாம். இந்தளவுக்கு சித்தரித்தால் தான் அவன் மீது அறச்சீற்றம் வாசகனுக்கு எழும்பும் என்பதில்லை. கோபாலகிருஷ்ண நாயுடு என்ற பெயர் ஒன்றே போதும், கட்டற்ற வெறுப்பு வருவதற்கு.

வயதுக்கே வராத பெண் ஒருத்தியை கடத்தி கோபாலகிருஷ்ணநாயுடு பாலியல் வன்புணர்வு செய்வதாக சில காட்சிகள் வருகிறது. வெண்மணி சம்பவத்தை சித்தரித்து எழுதப்பட்ட குருதிப்புனல் என்ற புதினத்தில், கோபாலகிருஷ்ணநாயுடு ஆண்மையற்றவர் என்பதால் மனச்சிதைவு ஏற்பட்டு வெண்மணி கொலைகளை செய்தார், அது வர்க்கப் போராட்டமல்ல என்பதைப் போல எழுதியிருந்ததால், அதற்கு கவுண்டர் பாயிண்டாக கோபாலகிருஷ்ணநாயுடு ஒரு காமாந்தகன் என்பதாக பாட்டாளி சித்தரித்திருக்கலாம்.

பள்ளர் சாதியை சேர்ந்த ஜோதிக்கும், ஆச்சாரி சாதியை சேர்ந்த வெங்கிட்டுக்கும் மலரும் காதல் தீப்பிடித்து எரியும் மைதானத்துக்கு இடையே மலரும் ரோஜாப்பூ போல அழகும், சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கிறது. ஜோதியை பின் தொடர்ந்து ஆற்றங்கரைக்கு சென்று வெங்கிட்டு பேசுவது, திருவிழாவில் வளையலும், குஞ்சமும் வாங்கித்தந்து காதல்மொழி பேசுவதெல்லாம் செம அழகு. போலிச்சாமியாரின் முகமூடியை ஆசைத்தம்பி கிழித்தெறிவது, சன்னாசித் தாத்தாவின் ஈமக்கிரியைகளின் போது பார்ப்பனன் ஏமாற்றுவது எல்லாம் நகைச்சுவையோடு சொல்லப்பட்ட சமூக அவலங்கள்.

கோபாலகிருஷ்ணநாயுடுவை அழித்தொழித்த சிலகாலத்தில் நக்சல்பாரி இயக்கம் தனது வர்க்க எதிரி அழித்தொழிப்புப் பணிகளை இந்தியா முழுமைக்கும் நிறுத்திவிடுகிறது. எந்தச் சூழ்நிலையில் அந்த முடிவெடுக்கப்படுகிறது, ஏன் எடுக்கப்படுகிறது என்பது குறித்து விலாவரியாக இறுதியில் சொல்லப்படவில்லை. ஆனாலும் இதனால் நக்சல்பாரி இயக்கங்கள் குறித்த மேலதிகத் தகவல்களை வாசிக்க ஆர்வம் ஏற்படுகிறது. கம்யூனிஸ இயக்கங்களால் இந்தியாவில் ஏன் புரட்சியை ஏற்படுத்த இயலவில்லை என்பதை மிக எளியமொழியில் கதாபாத்திரங்களின் வசனங்கள் மூலமாக சொல்கிறார் பாட்டாளி.

தயவுதாட்சணியமில்லாத திராவிட மறுப்புத்தொனி நாவலில் பல இடங்களில் காணமுடிகிறது. வர்க்க எதிர்ப்பில் எப்படி தோழர்களின் பங்களிப்பை எவனும் மறுக்கமுடியாதோ, அதுபோல சமூகநீதிக்கான பங்களிப்பில் திராவிட இயக்கத்தாரின் பங்களிப்பையும் எவனும் மறுதலிக்கமுடியாது. வெங்கட்டு - ஜோதி கலப்புமணம் மூலமாக நக்சல்பாரிகள் சமூகநீதியையும் தொட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பதாக பாட்டாளி சித்தரித்திருக்கிறார்.

இப்படியெல்லாம் சித்தரித்து தான் நக்சல்பாரிகளின் பங்களிப்பை சொல்லவேண்டுமென்பதில்லை, தோழர்களின் தியாகம் எப்போதும் மறக்கப்படாதது, மறைக்கமுடியாதது. ஆனால் கலப்புமணப்புரட்சியை தமிழகத்தில் ஏற்படுத்திய திராவிட இயக்கத்தாரின் பங்களிப்பையும் நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டும். இவ்விஷயத்தில் திராவிட இயக்கத்தாரின் சிந்தனை மற்றும் செயலாக்கத்தை தோழர்கள் சொந்தம் கொண்டாடுவது தேவையில்லாத விஷயம். புதினத்தில் எனக்கு நெருடிய சில விஷயங்களில் இதுவும் ஒன்று.

நாவலை வாசித்து முடித்ததும் நாட்டின் இப்போதைய சூழல் நக்சல்பாரி பாணி புரட்சிக்கு நம்மை அழைத்துச் செல்கிறதோ என்ற எண்ணம் வருகிறது. அத்தியாவசியப் பொருட்களை கூட தன் குடிமக்களுக்கு ஒழுங்காக வழங்க வக்கில்லாத நிலையில், அமெரிக்காவுக்கு அடிவருடுவதையே தன் பிறப்பின் கடமையாக நினைப்பவர்கள் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்புக்கு கடந்த பதினேழு ஆண்டுகளாக வருவதும், அவர்களால் வெகுஜனமக்களின் வாழ்வாதாரம், கலாச்சாரம் பறிக்கப்படுவதையும் கண்டால் புரட்சி மலர்வதை யாராலும் தடுக்க இயலாது என்றே தோன்றுகிறது. அப்படி புரட்சி ஏற்படும் சூழலில் இயக்கப் பாகுபாடில்லாமல் பாட்டாளிகளோடு, படித்தவர்களும், அதிகாரத்தின் கீழ்மட்டத்தில் இருப்பவர்களும் இணைவார்கள் என்பதும் உறுதி.


நூல் : கீழைத்தீ

ஆசிரியர் : பாட்டாளி

வெளியீடு :
புதிய பயணம் வெளியீட்டகம்
எண், 6, 7வது வடக்கு சந்து,
சிம்மக்கல், மதுரை - 625 001.

விலை : ரூ.150/- (மக்கள் பதிப்பு)

25 ஜூலை, 2009

ஷகீலா


மன்மதப்புயல் ஷகீலா என்றாலே முகம் சுளிப்பவர்கள் கூட சனிக்கிழமை இரவுகளில் ரகசியமாக முக்காடு போட்டுக் கொண்டு 'சூர்யா டிவி' பார்ப்பதை கண்டிருக்கிறேன். ஷகீலா மிகவும் வெள்ளந்தியானவர், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் எதிலுமே ‘வெளிப்படையாக' இருப்பவர் என்று சமீபத்தில் அவரை பேட்டி எடுக்க முயற்சித்த நமது பத்திரிகை நண்பர் ஒருவர் சொன்னார். சினிமா இண்டஸ்ட்ரியில் 'ஷகீலா' போன்ற நல்ல குணநலன்களோடு இப்போதும் ஒரு நடிகை இருப்பது ஆச்சரியமானது என்றும் அந்த நண்பர் சொன்னார்.

* ஷகீலா தனது பதினைந்தாம் வயதில் துணைநடிகையாக நடிக்கத் தொடங்கினார். அவர் நடித்த முதல் படம் ‘ப்ளே கேர்ள்ஸ்'. சில்க் ஸ்மிதா கதாநாயகியாக நடித்த திரைப்படம் இது.

* ஷகீலாவின் குடும்பம் பொருளாதாரரீதியாக ரொம்பவும் மோசமான நிலையில் இருந்த காலக்கட்டம் அது. பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே “ச்சீய்” ரக படங்களில் அதன்பின்னர் நடிக்க ஆரம்பித்தார்.

* ”மறுமலர்ச்சி” என்ற மம்முட்டி நடித்த படத்தை பார்த்திருக்கிறீர்களா? அந்தப் படத்தில் விவேக்குக்கு ஜோடியாக ஷகீலா நடித்திருப்பார்.

* ஷகீலா நடித்த ‘கிணரத்தும்பிகள்' படம் மெகாஹிட்.

* ஒரு கட்டத்தில் தொடர்ந்து ஆண்டுக்கு ஆறுபடங்களாவது ஷகீலா நடித்து, அவை செம ஹிட் ஆக மலையாள திரையுலகமே அதிர்ந்தது. மம்முட்டி, மோகன்லால் படங்களின் வசூல் ஷகிலாவால் பாதித்தது. ஷகிலா படங்கள் வெளியாகிறதென்றால் மற்ற படங்களின் வெளியீட்டுத் தேதியை அப்போதெல்லாம் தள்ளி வைத்து விடுவார்களாம். ஷகிலா படங்களை முடக்க மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களும், தயாரிப்பாளர்களும் முயன்றார்கள் என்று பேசப்பட்டது.

* ஷகீலா “ச்சீய்” ரக படங்களில் நடித்தாலும் அவருக்கு பாசில் போன்ற இயக்குனர்களின் இயக்கத்தில் மம்முட்டி, மோகன்லால் போன்ற நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக காமெடி வேடங்களில் நடிப்பதில் அவருக்கு அலாதிப்பிரியம்.

* ஷகீலா மன்மதப் புயலாக அறியப்பட்ட பிறகு தமிழில் ஜெயம், தூள், அழகிய தமிழ்மகன் போன்ற படங்களில் தலையைக் காட்டினார்.

* சினிமா இண்டஸ்ட்ரியில் "Cyclone" "லேடி லால்” போன்ற பெயர்களால் ஷகீலாவை குறிப்பிடுகிறார்கள்.

* 'வில்ஸ் பில்டர்' சிகரெட்டை விரும்பி புகைப்பாராம்.

* ஷகீலா நடித்த சூப்பர்ஹிட் திரைப்படங்களில் சில : 'ஆலில தோணி', 'மிஸ் சாலு', 'ஸ்நேகா', ‘சாகரா', 'அக்னிபுத்ரி', 'சவுந்தர்யலஹரி', 'பெண்மனசு', 'வீண்டும் துலாபாரம்' போன்றவை. இப்படங்களையே அடிக்கடி பெயர் மாற்றி, சில பிட்டுகளை சேர்த்து புதியப் படங்கள் போல ஆங்காங்கே திரையிடுவது வழக்கம்.

* மலையாளத் திரைப்படங்களில் இப்போது அவ்வளவாக ஷகீலா ஆர்வம் காட்டுவதில்லை. மற்ற மொழித் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ‘மோனலிசா' திரைப்படம் மூலமாக (இப்படத்தில் ஷகீலாவை விட சதா அதிகமாக காட்டியிருப்பார்) கன்னடத்திலும் கரைகடந்திருக்கிறது இந்தப் புயல்.

* இயக்குனர் தரணியின் படங்களில் ஷகீலாவுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. தரணி தெலுங்கில் இயக்கிய 'பங்காரம்' திரைப்படம் மூலமாக தெலுங்கிலும் ஒரு ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஷகீலா.

* தமிழில் டப் செய்யப்படும் ஷகீலாவின் திரைப்படங்களுக்கான ப்ரீமியர் காட்சி பரங்கிமலை ஜோதியில் தவறாது காட்டப்படுகிறது.

லக் - மரணவிளையாட்டு!

ஒரிஜினல்!

டூப்ளிகேட்!

பிரெஞ்ச் படமான ட்ஸாமெடியை (Tzameti) யாருக்கும் தெரியாமல் நைசாக இயக்குனர் சோஹம்ஷா உருவிவிட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் புகைந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் வந்த ஹாலிவுட் மொக்கையான டெத்ரேஸ் (Death race 2008) படத்தின் பாதிப்பும் நிறைய உண்டு இந்த லக்கில்.

லக்கியான ஆட்களைப் பற்றிய படமிது. சஞ்சய்தத் ஒரு லக்கியான ஆள். கரப்பான் பூச்சி மாதிரி. காலில் போட்டு நசுக்கினாலும் ஏதோ லக்கால் உயிர்பிழைத்துக் கொள்வார். உலகம் முழுவதுமிருந்து அவரை மாதிரி லக்கிகளை பிடித்து வந்து யாருக்கு அதிர்ஷ்டம் அதிகமென்று பெட் கட்டி விளையாடுகிறார். இண்டர்நெட்டில் கோடி கோடியாக பெட் கட்டுகிறார்கள். சஞ்சய்தத் மொழியில் சொன்னால் Its purely business. விளையாட்டு என்றால் சாதாரண விளையாட்டு இல்லை. தோற்றவர்களுக்கு உடலில் உயிர் இருக்காது. மரணவிளையாட்டு. செத்து செத்து விளையாடுவதுதான் இந்தப் படமே.

கலந்துகொள்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. எல்லோருக்கும் உயிரைவிட அதிகபட்சத் தேவையாக இருப்பது பணம் என்பது மட்டுமே ஒற்றுமை. தொடர்ந்து நடக்கும் தொடர் மரண விளையாட்டுகளும், மில்லியன் மில்லியனாக குவியும் பணமும்தான் மீதி கதை. ஒவ்வொரு காட்சியும், விளையாட்டும் இதயத்தை பலமாக பதம் பார்க்கும் வேகத்தோடு படமாக்கப்பட்டிருக்கிறது. நாடோடிகள் ‘சம்போ சிவ சம்போ’ ரேஞ்சில் ஹை-டெம்போவுக்கு ஒரு அதிரடி தீம் பாடலும் உண்டு.

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் அறிமுகமாகும் படம் என்பதால் தமிழகத்திலும் எதிர்ப்பார்ப்பு அதிகம். ஸ்ருதி ஹாலிவுட் நடிகைகளுக்கு சவால் விடும் கவர்ச்சி காட்டுகிறார். நீச்சல்குளத்தில் இருந்து எழுந்துவரும் காட்சியில் விண்ணதிர விசில் பறக்கிறது. அப்பாவை மாதிரியே அச்சு அசலாக முகம், குறிப்பாக அந்த முண்டக்கண்கள். தாராளமாக பாஸ் மார்க் போடலாம். ஹீரோ இம்ரான்கான் அபிஷேக் பாதி, ஹ்ருத்திக் பாதி கலந்து செய்த கலவை.

துப்பாக்கியில் ஒருவருக்கு ஒருவர் சுட்டுக் கொள்வது, பாராசூட்டில் குதிப்பது, சுறாமீன்களிடம் கடலில் தப்பிப்பது என்று விதம்விதமான விளையாட்டுகளை காட்டி எதிர்ப்பார்ப்புகளை எகிறவைத்து விடுகிறார் இயக்குனர். ஆனால் க்ளைமேக்ஸில் அரதப்பழசான ட்ரெயின் விளையாட்டு காட்டுவது கொடுமையிலும் கொடுமை. மெஷின் கன் வைத்து ஹீரோவை பத்து அடி தூரத்தில் இருந்து சுட்டால் கூட ஒரு குண்டு கூட அவர் மீது படுவதில்லை. லக்கோ லக்! மொத்தமாக வெடித்துச் சிதறிய பெட்டியில் இருந்து மேஜர் மிதுன் சக்ரபோர்த்தி எழுந்து வருவதன் மூலமாக டன் கணக்கில் காதில் பூ சுற்றுகிறார்கள்.

கேமிரா, ஸ்டண்ட், பிண்ணனி இசை, தடதடவென்று ஓடும் திரைக்கதை என்று பல தளங்களிலும் தரம் அபாரம். படம் நல்ல டைம் பாஸ். தயாரிப்பாளருக்கு லக் அதிகம். பணம் வானத்தைப் பிளந்துகொண்டு கொட்டோ கொட்டுவென்று கொட்டப்போகிறது!

லக் - இரண்டரை மணி நேர பக்.. பக்..