26 ஜூலை, 2009

கீழைத்தீ - புதினத்தில் மலர்ந்த புரட்சித்தீ!

தோழர் பாட்டாளியின் எழுத்துளியால் செதுக்கப்பட்ட கீழைத்தீ புதினம் கம்பீரமான சிற்பமாக கருத்தை கவருகிறது. ஒரு புதினத்தில் இவ்வளவு கிளைக்கதைகளை, புரட்சிக்கருத்துக்களை, சந்தேகங்களுக்கு விடைகளை தரமுடியும் என்ற சாத்தியத்தை மெய்யாக்கியிருக்கிறார் தோழர். இப்புதினத்துக்கு பின்னால் இருக்கும் அவரது உழைப்பை, உழைப்பென்று சொல்லமுடியாது, தியாகம்.. தியாகத்தை தமிழர் யாவரும் கொண்டாட வேண்டியது அவசியம்.

புதினத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி எனக்கு புதியது. முதலிரண்டு அத்தியாயங்களை வாசிப்பதற்குள் திணறிவிட்டேன். அதன்பிறகு தஞ்சைத்தமிழ் நமக்கு பழகிவிடுகிறது. கீழ்வெண்மணி படுகொலைகளுக்கு பிறகான கீழ்த்தஞ்சையை களமாக எடுத்துக்கொண்டிருக்கிறார் பாட்டாளி.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வருவதை அப்பாவி விவசாய கூலித்தொழிலாளி கொண்டாடுவதும், வீட்டு விசேஷத்துக்கு மைக் செட்டை கூட சவுண்டாக வைக்கமுடியாத சாதி அவலமும், தச்சுத் தொழிலின் நுட்பமும், சன்னாசித் தாத்தாவின் கதைகளும், பார்ப்பனீய அசிங்கமும், போலிச்சாமியார்களின் பொய் வேஷமும், இடையே சாதிமறுப்பு காதலும், பண்ணையார்களின் அடாவடியும், பாட்டாளிகளின் போராட்டமும், நக்சல்பாரிகளின் எழுச்சியும், அழித்தொழிப்பும், கம்யூனிஸவாதிகளின் சுயவிமர்சனமும்.. அப்பப்பா.. எவ்வளவு விஷயங்களை அனாயசமாக தொட்டுச்செல்கிறார் தோழர். புதினத்தை வாசித்துமுடித்ததுமே அறுபதுகளில் கீழத்தஞ்சையில் பள்ளராகவோ, பறையராகவோ பிறந்து நக்சல்பாரி இயக்கத்தில் நாம் இயங்கியிருக்கக் கூடாதா என்ற ஏக்கம் வருகிறது.

நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரான கோபாலகிருஷ்ண நாயுடு அரைபடி நெல்லை கூலியாக உயர்த்திக் கேட்ட பாவத்துக்காக வெண்மணியில் 44 பேரை உயிரோடு கொளுத்தி, நீதிமன்றத்தில் சாட்சிகளை கலைத்து குற்றமற்றவர் என்ற தீர்ப்பை பணத்தால் வாங்குகிறார். நக்சல்பாரிகள் இயக்கம் கட்டமைத்து அந்த கொடுங்கோலனை அழித்தொழிப்பது தான் புதினத்தின் மையக்கரு.

கோபாலகிருஷ்ண நாயுடுவை சினிமா வில்லன் கணக்காக சித்தரிக்கிறார் தோழர். அவர் மீது வாசகனுக்கு வெறுப்பு ஏற்படவேண்டுமென்பதற்காக சில பக்கங்கள் வீணடிக்கப்பட்டதாக கருதுகிறேன். குறிப்பாக சவரத் தொழிலாளியை அழைத்து தனது அந்தரங்கப் பகுதியை சுத்தப்படுத்தச் சொல்வதும், பின்னர் அத்தொழிலாளியையே கைமைதுனம் செய்துதரச் சொல்வதையும், தன் பண்ணையில் வேலைபார்க்கும் கூலிப்பெண்களின் அங்கங்களை ஆபாசமாக அவன் வர்ணிப்பதையும் சொல்லலாம். இந்தளவுக்கு சித்தரித்தால் தான் அவன் மீது அறச்சீற்றம் வாசகனுக்கு எழும்பும் என்பதில்லை. கோபாலகிருஷ்ண நாயுடு என்ற பெயர் ஒன்றே போதும், கட்டற்ற வெறுப்பு வருவதற்கு.

வயதுக்கே வராத பெண் ஒருத்தியை கடத்தி கோபாலகிருஷ்ணநாயுடு பாலியல் வன்புணர்வு செய்வதாக சில காட்சிகள் வருகிறது. வெண்மணி சம்பவத்தை சித்தரித்து எழுதப்பட்ட குருதிப்புனல் என்ற புதினத்தில், கோபாலகிருஷ்ணநாயுடு ஆண்மையற்றவர் என்பதால் மனச்சிதைவு ஏற்பட்டு வெண்மணி கொலைகளை செய்தார், அது வர்க்கப் போராட்டமல்ல என்பதைப் போல எழுதியிருந்ததால், அதற்கு கவுண்டர் பாயிண்டாக கோபாலகிருஷ்ணநாயுடு ஒரு காமாந்தகன் என்பதாக பாட்டாளி சித்தரித்திருக்கலாம்.

பள்ளர் சாதியை சேர்ந்த ஜோதிக்கும், ஆச்சாரி சாதியை சேர்ந்த வெங்கிட்டுக்கும் மலரும் காதல் தீப்பிடித்து எரியும் மைதானத்துக்கு இடையே மலரும் ரோஜாப்பூ போல அழகும், சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கிறது. ஜோதியை பின் தொடர்ந்து ஆற்றங்கரைக்கு சென்று வெங்கிட்டு பேசுவது, திருவிழாவில் வளையலும், குஞ்சமும் வாங்கித்தந்து காதல்மொழி பேசுவதெல்லாம் செம அழகு. போலிச்சாமியாரின் முகமூடியை ஆசைத்தம்பி கிழித்தெறிவது, சன்னாசித் தாத்தாவின் ஈமக்கிரியைகளின் போது பார்ப்பனன் ஏமாற்றுவது எல்லாம் நகைச்சுவையோடு சொல்லப்பட்ட சமூக அவலங்கள்.

கோபாலகிருஷ்ணநாயுடுவை அழித்தொழித்த சிலகாலத்தில் நக்சல்பாரி இயக்கம் தனது வர்க்க எதிரி அழித்தொழிப்புப் பணிகளை இந்தியா முழுமைக்கும் நிறுத்திவிடுகிறது. எந்தச் சூழ்நிலையில் அந்த முடிவெடுக்கப்படுகிறது, ஏன் எடுக்கப்படுகிறது என்பது குறித்து விலாவரியாக இறுதியில் சொல்லப்படவில்லை. ஆனாலும் இதனால் நக்சல்பாரி இயக்கங்கள் குறித்த மேலதிகத் தகவல்களை வாசிக்க ஆர்வம் ஏற்படுகிறது. கம்யூனிஸ இயக்கங்களால் இந்தியாவில் ஏன் புரட்சியை ஏற்படுத்த இயலவில்லை என்பதை மிக எளியமொழியில் கதாபாத்திரங்களின் வசனங்கள் மூலமாக சொல்கிறார் பாட்டாளி.

தயவுதாட்சணியமில்லாத திராவிட மறுப்புத்தொனி நாவலில் பல இடங்களில் காணமுடிகிறது. வர்க்க எதிர்ப்பில் எப்படி தோழர்களின் பங்களிப்பை எவனும் மறுக்கமுடியாதோ, அதுபோல சமூகநீதிக்கான பங்களிப்பில் திராவிட இயக்கத்தாரின் பங்களிப்பையும் எவனும் மறுதலிக்கமுடியாது. வெங்கட்டு - ஜோதி கலப்புமணம் மூலமாக நக்சல்பாரிகள் சமூகநீதியையும் தொட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பதாக பாட்டாளி சித்தரித்திருக்கிறார்.

இப்படியெல்லாம் சித்தரித்து தான் நக்சல்பாரிகளின் பங்களிப்பை சொல்லவேண்டுமென்பதில்லை, தோழர்களின் தியாகம் எப்போதும் மறக்கப்படாதது, மறைக்கமுடியாதது. ஆனால் கலப்புமணப்புரட்சியை தமிழகத்தில் ஏற்படுத்திய திராவிட இயக்கத்தாரின் பங்களிப்பையும் நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டும். இவ்விஷயத்தில் திராவிட இயக்கத்தாரின் சிந்தனை மற்றும் செயலாக்கத்தை தோழர்கள் சொந்தம் கொண்டாடுவது தேவையில்லாத விஷயம். புதினத்தில் எனக்கு நெருடிய சில விஷயங்களில் இதுவும் ஒன்று.

நாவலை வாசித்து முடித்ததும் நாட்டின் இப்போதைய சூழல் நக்சல்பாரி பாணி புரட்சிக்கு நம்மை அழைத்துச் செல்கிறதோ என்ற எண்ணம் வருகிறது. அத்தியாவசியப் பொருட்களை கூட தன் குடிமக்களுக்கு ஒழுங்காக வழங்க வக்கில்லாத நிலையில், அமெரிக்காவுக்கு அடிவருடுவதையே தன் பிறப்பின் கடமையாக நினைப்பவர்கள் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்புக்கு கடந்த பதினேழு ஆண்டுகளாக வருவதும், அவர்களால் வெகுஜனமக்களின் வாழ்வாதாரம், கலாச்சாரம் பறிக்கப்படுவதையும் கண்டால் புரட்சி மலர்வதை யாராலும் தடுக்க இயலாது என்றே தோன்றுகிறது. அப்படி புரட்சி ஏற்படும் சூழலில் இயக்கப் பாகுபாடில்லாமல் பாட்டாளிகளோடு, படித்தவர்களும், அதிகாரத்தின் கீழ்மட்டத்தில் இருப்பவர்களும் இணைவார்கள் என்பதும் உறுதி.


நூல் : கீழைத்தீ

ஆசிரியர் : பாட்டாளி

வெளியீடு :
புதிய பயணம் வெளியீட்டகம்
எண், 6, 7வது வடக்கு சந்து,
சிம்மக்கல், மதுரை - 625 001.

விலை : ரூ.150/- (மக்கள் பதிப்பு)

1 கருத்து:

  1. எங்கு தேடியும் கீழைத்தீ கிடைக்க வில்லை .மேலே குறிப்பிட்ட முகவரிக்கு எழுதியும் பயனில்லை .அந்த நூலை பெற எதாவது வழி சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு