23 ஜூலை, 2009
மை சாஸ்ஸி கேர்ள்!
உங்கள் காதலி ரொம்ப கோபப்படுவாளா? எதற்கெடுத்தாலும்அடம் பிடிப்பாளா? காதலியிடம் முத்தம் கேட்டு செருப்பால் அடி வாங்கியிருக்கிறீர்களா? அவளின் இடுப்பை அவளுக்கு தெரியாமல் உணர்ச்சிவசப்பட்டு கிள்ளி கன்னத்தில் அறை பட்டிருக்கிறீர்களா? 'அடல்ட்ஸ் ஒன்லி' படத்துக்கு டிக்கெட் ரிசர்வ் செய்துவைத்து அவளை கூப்பிட்டு உங்களை எட்டி உதைத்திருக்கிறாளா? நீங்களே எதிர்பாராத நேரத்தில் பம்பர் பிரைஸாக உங்களை கட்டிப்பிடித்து உதட்டோடு உதடு முத்தம் கொடுத்திருக்கிறாளா? திடீர் திடீரென்று அழுதிருக்கிறாளா? பைத்தியம் போல பொது இடத்தில் பெருங்குரலில் சிரித்திருக்கிறாளா? அடிக்கடி ஓரக்கண்ணால் பார்த்திருக்கிறாளா? கண்ணுக்கு சந்திரமுகி மாதிரி பட்டையாக மை தீட்டிய சமயம் அவளை உங்களுக்கு பிடித்திருந்ததா? எல்லா கேள்விகளுக்கும் என்னைப் போலவே உங்களின் பதிலும் ‘ஆம்' என்றால் நீங்கள் சாஸ்ஸி கேர்ளை காதலிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.. ஏற்கனவே காதலியோ, மனைவியோ இருந்தாலும்..
2001ல் தென்கொரியாவில் கொரிய மொழியில் வெளிவந்த திரைப்படம் இது. கிம் ஹோ-சிக் என்பவரின் வாழ்வில் நடந்த உண்மைச்சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டது. தனது வாழ்வில் நடந்த சம்பவங்களை கிம் ஹோ-சிக் இண்டர்நெட்டில் ‘லவ் லெட்டர்ஸ்' என்ற பெயரில் தொடராக எழுதிவந்தார். பின்னர் இது நாவலாகவும் வெளிவந்தது.
”நான் சிறுவயதில் என் பெற்றோரால் ஒரு பெண்குழந்தை போலவே வளர்க்கப்பட்டேன். குழந்தையாக இருந்தபோது பெண்களின் பொது கழிவறைக்கு கூட செல்ல அனுமதிக்கப்பட்டேன். வயதாக ஆக எனது ஆண்குறி சுருங்கி பெண்ணுறுப்பாக மாறிவிடும் என்றுகூட அப்போதெல்லாம் நம்பினேன்” என்ற கதாநாயகனின் அதிரடி வாக்குமூலம் தான் கதாநாயகனின் எண்ட்ரியே.
படிப்பில் ரொம்ப சுமாரான பையன் பெண்களின் மீது இயல்பிலேயே ஈர்ப்பாக இருக்கிறான். ரயில் நிலையத்தில் குடித்துவிட்டு மப்பில் இருக்கும் ஒரு பேரழகியை கண்டவுடன் அவனது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை, அவனது மனோபாவத்தில் ஏற்படும் மாற்றங்களை இரண்டேகால் மணி நேர காதல் காவியமாக உருகி உருகி எடுத்திருக்கிறார் இயக்குனர் க்வாக் ஜேயோங்.
ஒரு மலையுச்சியில் நிற்கிறான் நாயகன் க்யான்-வூ. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அந்த மலையுச்சியில் இருக்கும் ஒரு மரத்தின் கீழ் டைம் கேப்சூல் என்று சொல்லக்கூடிய வஸ்துவை இருவருமாக சேர்ந்து புதைக்கிறார்கள். அந்த டைம் கேப்சூலில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் காதல்ரசம் சொட்ட பரிமாறிக்கொண்ட கடிதங்கள் இருக்கின்றன. இரண்டு ஆண்டுகள் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாது, இரு ஆண்டுகள் கழித்து இதே மலையுச்சிக்கு வந்து புதைத்து வைக்கப்பட்ட டைம் கேப்சூலை நாமிருவருமாக சேர்ந்து எடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் செய்துக் கொள்கிறார்கள். குறிப்பிட்ட காலத்தில் க்யான்-வூ மட்டுமே வருகிறான், அவளது காதலி வரவேயில்லை. அவள் வந்தாளா? இவர்களது காதல் என்ன ஆனது? அவர்களுக்குள் இருந்தது காதல்தானா என்பது தான் க்ளைமேக்ஸ்.
படம் முடிந்தபின்னரும் கூட கதாநாயகியின் பெயர் என்னவென்பது உங்களுக்கு தெரிந்திருக்காது. சொல்லப் போனால் கதாநாயகனுக்கே அப்பெண்ணின் பெயர் தெரியாது. பெயர் சொல்லாமலேயே அந்த பாத்திரத்தை அழுந்த நம் மனதில் பதியவைத்திருப்பதில் தான் இயக்குனரின் வெற்றியே அடங்கியிருக்கிறது. நாயகன், நாயகி, ரயிலில் வரும் விக் பெரியவர், மோட்டல் ரிசப்ஷன் ஊழியர், லாக்கப் ரவுடிக்கூட்டம், காதலில் தோல்வியுற்ற ஒரு வன்முறையாளன், நாயகனின் பெற்றோர், நாயகியின் பெற்றோர், நாயகனின் ஆண்ட்டி என்று பாத்திரங்கள் வாயிலாகவே சம்பவங்களை அழகாக நகர்த்திச் செல்லும் பாங்கு அற்புதம். இறுதிக்காட்சியில் அந்த மலையுச்சி மரத்தடியில் அமர்ந்திருக்கும் கிழவர் ஒரு சஸ்பென்ஸ் ஹைக்கூ.
படம் முழுக்க நகைச்சுவைத் தோரணம், சீரியஸாக சொல்லப்போனால் இது காதல் படமல்ல, நகைச்சுவைப்படம். படம் பார்த்துவிட்டுவாய்விட்டு சிரிக்கலாம், பிறர் பார்க்காமல் வாய்விட்டு அழவும் செய்யலாம். இந்தியனாக இருந்தாலென்ன? கொரியனாக இருந்தாலென்ன உலகமெங்கும் பரவலாக எல்லொருக்கும் புரியும் ஒரே மொழி காதல் மொழிதானே? காதலுக்காக வாழவும், சாகவும் தானே ஆணும், பெண்ணும் படைக்கப்பட்டிருக்கிறார்கள்? காதல் ஒருவனை எந்த அளவுக்கு வழிநடத்தும், வெற்றியடையச் செய்யும் என்பதை அழகாக காட்சிப் படுத்தியிருக்கிறார்கள்.
கோடம்பாக்கத்தின் நாளைய ஸ்ரீதர்களும், கே.எஸ்.ரவிக்குமார்களும் இப்படத்தின் டிவிடியை பஞ்சர் ஒட்ட உப்புக்காகிதம் தேய்க்கும் ரேஞ்சுக்கு ப்ளேயரில் தேய்த்து தேய்த்து சீன் உருவிக்கொண்டிருக்கிறார்கள் என்று கேள்வி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Already a Hollywood remake with the same name came Direct to DVD last year. A bollywood remake of it called Ugly Aur Pagli starring Mallkia Sherawat came last year. Then in Karthik - Anita Tamil film, i saw a scene which was resembling the train betting scene in thias movie.
பதிலளிநீக்குI saw this film recently..nice one..Kandippa namma aalunga suduvanga
பதிலளிநீக்குபிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு முதல் நம்ம லேட்டஸ்ட் சிவா மனசுல சக்தி இயக்குனர் வரை இதை அக்கு வேறு ஆணி வேறா உருவியாச்சு.. இனி உருவ சீன் பாக்கி இருக்கானு தெரியல .....
பதிலளிநீக்கு