22 ஜூலை, 2009

அரசூர் வம்சம்!

சதா சர்வகாலமும் கணநேர இடைவெளியுமின்றி சுழன்று கொண்டிருக்கும் பழக்காத்தட்டிலிருந்து ஒலித்துக்கொண்டிருக்கும் ஒப்பாரி சங்கீதம் ங்கொய்யென்று இன்னமும் ரீங்காரமிட சோம்பேறி ராஜா காலைக்கடமை சிக்கலுக்காக சமையல்காரனிடம் வல்லாரை லேகியத்தை அதட்டி கேட்டு வாங்கி கொண்டிருக்க குளத்தில் குளிக்கும் ராணியின் பெருத்த ஸ்தனங்களை புகையிலை பிராமண குடும்பத்தின் இளையவாரிசு சங்கரன் மொட்டை மாடியில் எட்டிப்பார்த்து சிலிர்த்து கொண்டிருக்க

குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ
பாதிமறைத்த ஸ்தனமும்
பாங்காய் இடுப்பில் ஒட்டியாணமும்
வாழைத் தொடையும்
வடிவான தோளுமாய்க்
குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ

சுப்பம்மா கிழவியின் வாயில் மூத்த பெண்டுகள் இன்றென்னவோ தமிழில் பாட நேற்று பாடிய தெலுங்குக் கீர்த்தனையே மேல் என்று அகஸ்மாத்தாக சிரமப் பரிகாரத்துக்கு கிரகத்துக்கு வந்த சுப்பிரமணியர் நினைத்து நொந்து கொண்டிருக்க அவரது மூத்த வாரிசு எந்த நூற்றாண்டிலோ துர்மரணம் சம்பவித்துக் கொண்ட குருக்கள் பெண்ணோடு சம்போகம் சுகிக்க சேடிப்பெண்ணிடம் வாயுபச்சாரம் செய்ய சொல்லி புஸ்திமீசை கிழவன் வற்புறுத்த சிநேகாம்பாளுக்கும் மன்னி காமாட்சிக்கும் ஏழாம் பொருத்தம் என்றாலும் எப்போதுமா ஒருவரையொருவர் கடங்காரிகள் தூஷித்து கொண்டிருப்பார்கள் என கிட்டாவய்யன் வெறுத்துபோக பிரின்ஸ் ஜீவல்லரி லைட் வெயிட் கலெக்சன் வளையல் மாதிரி வயசன் காற்றில் பறந்துகொண்டிருக்க வடையும் சுவியமும் நெய்யப்பமும் யாரோ சுட்டுக்கொண்டிருக்கும் வாசனை வந்துக் கொண்டிருக்க நொங்கம்பாக்கம் வீட்டில் வைத்திக்கு தட்டில் நாலு இட்லி வைத்து லோட்டா லோட்டாவாக சாம்பார் ஊற்றி கொண்டிருக்கும் கோமதிக்கு தன் கூடப்பிறந்தாளை சங்கரனுக்கு கட்டிவைக்க வேணுமாய் எண்ணம் வந்திருக்க கருத்த ராவுத்தன் வாழைமட்டையில் பொடி அடைத்துகொண்டிருக்க பிராமண அனுசார அனுஷ்டானம் அனுமதிக்கலேன்னாலும் மாசாமாசம் புகையிலை பொடி வகையறாவில் வர்ற தட்சணை அசூயையை சுப்பிரமணிய அய்யருக்கு போக்கிவிட குப்புசாமி அய்யன் நெருப்பு அனலில் வேக வரப்போகும் ஆம்படையானுக்காக பகவதி குட்டி கண்ணில் மைத்தீட்ட அய்யங்கார் ஜோசியன் தேவதைகளை யந்திரத்தில் பிரதிஷ்டை செய்ய கொட்டக்குடி தாசி வெத்தலை சுண்ணாம்பு போட்டு சிவந்த வாயால் முத்தம் தர கிராம்பு ஏலக்காய் வாசனை தூக்கலில் மெய்மறக்க துரைமார்களும் துரைசானிகளும் துரைபாஷை பேசி குரிசு சங்கிலியை தூக்கிக் காட்ட புகையிலை நாற்றமும் கப்பலும் கட்டைவண்டியுமாய் மாறிமாறி பயணிக்க என்னென்னவோ எங்கெங்கோ யார் யாராலோ எது எதுவோ நடந்துகொண்டிருக்க நான் பாட்டுக்கு எதையோ எழுதி கிறுக்கி கசக்கி கிழித்துபோடும் வேளையில் மூன் ட்ராவல் பண்ணனுமா வாத்தியாரே எங்ககிட்டே 3000 பிசி ஆடி மாடல் ஸ்பேஸ்கார் சகாய வெலைக்கு இருக்கு வாங்கிக்கிறீயா ஒன்லி பிப்டி தவுசண்ட் ருபீஸ் என்று நெட்டையுமாய் ஒருவன் குட்டையுமாய் இருக்கும் இன்னொருவனுமாக பனியன் சகோதரர்கள் வியாபாரம் பேசுகிறார்கள்.

* - * - * - * - * - * - * - * -



நூலின் பெயர் : அரசூர் வம்சம்!

நூல் ஆசிரியர் : இரா.முருகன்

விலை : ரூ.175

பக்கங்கள் : 464

வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701

நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

* - * - * - * - * - * - * - * -

சாதாரணமாக ஐநூறு பக்கப் புத்தகத்தை என்னால் இரண்டு நாட்களில் வாசித்து விட முடியும். வேலை வெட்டி எதுவுமில்லையென்றால் தூங்காமல் கொள்ளாமல் கசாப்புக்கடை ஆடுகளின் தலையை எண்ணாமல் வெட்டுவது மாதிரி ஒரே நாளில் ஆயிரம் பக்கங்களை கூட போட்டுத் தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்க முடியும். இரா.முருகனின் அரசூர் வம்சத்தை முடிக்க இருபது நாட்கள் ஆகிவிட்டது. முருகனின் மொழி மிக எளியது, இக்காலக்கட்டத்திற்கு புதியது அல்லது ரொம்பவும் பழையது என்றாலும் புதினத்தில் ஏற்றியிருக்கும் கனத்தின் மீதான புரிதலுக்காக ஒவ்வொரு பக்கத்தையும் இருமுறையாவது மீள்வாசிப்பு செய்ய தூண்டுகிறது. எத்தனை முறை வாசித்தாலும் சுவாரஸ்யம் இம்மியளவும் குறைவதில்லை என்பதால் முருகனுக்கு அரோகரா.

காலத்தை முன்னும் பின்னும் ஓட்டிச்செல்ல கால இயந்திரம் விஞ்ஞானிகளால் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் எழுத்தாளனுக்கு இது மாந்திரிக யதார்த்தவாதம் மூலமாக சாத்தியமாகியிருக்கிறது. ஆசிரியர் எடுத்துக்கொண்ட காலக்கட்டம் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்றாலும் பனியன் சகோதரர்கள் அவ்வப்போது முன்னும் பின்னுமாக வினோத நாலுசக்கர கருப்பு வண்டியில் போய்வருகிறார்கள்.

என்றோ மரித்துப்போன அழகுப் பெண்களை மந்திரத்தால் வரவழைத்து கதாபாத்திரங்களை கூட விடுவதும், சுகிக்க விடுவதும் எழுத்தாளனுக்கு ஆகாத காரியமல்ல. தொங்கிப்போன ராணியோடு வம்சவிருத்திக்காக மட்டுமே கூடும் ராஜா, செத்துப்போன புஷ்டிமீசைக் கிழவன் சேடிப்பெண்ணை வாய் உபச்சாரத்துக்கு வற்புறுத்துதல், குருக்கள் பெண்ணோடு சாமிநாதனின் சம்போகம், அம்பலப்பழை சகோதரர்கள் அர்த்த ராத்திரியில் தத்தம் மனைவிகளை சரியாக கண்டறிந்து எழுப்பி தனியறைக்கு அழைத்துச்சென்று புணர்தல், கப்பலில் துரைசானிகள் மதுமயக்கத்தில் சாமிநாதனை கூட்டாக வன்புணர்தல் என்று இந்நவீனம் முழுக்க ஊடே தொடர்ந்து பரவியிருக்கிறது புணர்ச்சி வாசனை.. புகையிலை வாசனையையும், ஏலம் கிராம்பு வாசனையையும் தாண்டி.

நினைவுகளோடே நிம்மதியாய் பயணிக்கும் வேளையில் நனவு யதார்த்தத்தையும், இருத்தலுக்கான சமரசங்களையும் கடமையாக சுட்டிக்காட்டுகிறது நாவல். இறந்த காலத்தின் எச்சமாய் நிகழ்காலம் இருப்பதுபோல நிகழ்காலத்தின் எச்சமாய் எதிர்காலம் அமையும். ‘அந்த காலம் மாதிரி வருமா?’ என்று எந்த நூற்றாண்டிலும் எவனாவது ஒரு கிழவன் முனகிக் கொண்டிருக்கத்தான் போகிறான்.

ஒன்றரை நூற்றாண்டுக்கு முந்தைய பிராமணர்களையும், அவர்களது அச்சுப்பிச்சு அசட்டு நடைமுறைகளையும் கேலியும், கிண்டலுமாக அணுகுகிறார் நூலாசிரியர். இருத்தலைக் காத்துக்கொள்ள செய்துகொண்ட சமரசங்களான புகையிலை வியாபாரம், மதம் மாறுதல் ஆகியவற்றை ஆசிரியர் ஆதரிக்கிறாரா, மறுதலிக்கிறாரா, கேலி செய்கிறாரா என்பதை அவரது தொனியில் அறிய கடினமாவும் இருக்கிறது.

இத்தனைக்கும் சங்கரனும், சாமிநாதனும் அவருடைய கொள்ளுத் தாத்தாக்களாக கூட இருக்கலாம் என்பதை அவரது முன்னுரையில் அறியமுடிகிறது. காரைக்குடிக்கு ரொம்ப பக்கம் என்பதாலும், நூலாசிரியர் கொடுக்கும் சுலப க்ளூக்கள் சிலவற்றாலும் சிவகங்கைச்சீமை தான் அரசூர் என்று சுலபமாக கணிக்க தோன்றுகிறது. சாமிநாதனை தீவைத்து யாராவது கொன்றார்களா (ராணியின் வேலையா) அல்லது யதேச்சையாக பிடித்த தீயா என்பதை வாசகர்களின் யூகத்துக்கு விட்டுவிடுகிறார் முருகன். ஆதித்த கரிகாலனை போட்டுத் தள்ளியது யாரென்றே இன்னமும் யூகிக்க சோம்பேறித்தனம் படும் என்னை மாதிரி வாசகர்களுக்கு இது பெருத்த சோதனை. கருடகர்வ பங்கம்.

இந்நூலை வாசித்தபிறகு தான் தன்னுடைய இடத்தை தமிழில் நிரப்பப் போகும் எழுத்தாளராக இரா.முருகனை சுஜாதா கணித்தாரா என்று சரியாகத் தெரியவில்லை. எதிர்காலத்தில் தமிழின் அதிமுக்கிய நாவல்கள் குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படுமேயானால், அப்பட்டியலில் இடம்பெறத் தகுதியானதே ‘அரசூர் வம்சம்’. தீவிரவாசிப்புக்கு பழக்கப்படாதவர்கள் மறுபேச்சின்றி இந்நூலை தவிர்த்து விடலாம். இந்நாவலின் கனமும், நடையும், லாஜிக்கும் புரிபடாதவர்களுக்கு இது மொக்கையாகவும் தோன்றக்கூடும்.

நாவல் முடியும்போது எல்லாம் சுபம் தான். ஆனாலும் எங்கோ ஏதோ நிரப்பப்படாமல் வெறுமை சூழ்கிறது. நாவலாசிரியர் தன் வாசகனுக்கு முன்வைக்க விரும்பியது இந்த வெறுமை தானென்றால் அரசூர் வம்சத்தின் மன்னனாக அவருக்கே க்ரீடம் சூட்டி விடலாம்.

அரசூர் வம்சம் - அமானுஷ்ய அனுபவம்!

6 கருத்துகள்:

  1. //... ஒரே நாளில் ஆயிரம் பக்கங்களை கூட போட்டுத் தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்க முடியும். இரா.முருகனின் அரசூர் வம்சத்தை முடிக்க இருபது நாட்கள் ஆகிவிட்டது//

    நித்யானந்தர் என்ற ஒருவர் 1000 பக்கப் புத்தகத்தைப் படிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் ஐந்து நிமிடமாமே? அவரிடம் ஆசி பெற்றால் இரண்டு அரசூரை ஐந்து நிமிடத்தில் படித்து முடித்திருக்கலாம். ;)

    பதிலளிநீக்கு
  2. ****
    தீவிரவாசிப்புக்கு பழக்கப்படாதவர்கள் மறுபேச்சின்றி இந்நூலை தவிர்த்து விடலாம்.
    ****

    இது தப்பு லக்கி. இந்த நாவல் ஒரு நல்ல ஆரம்பமா இருக்கும்ன்னு நினைக்கறேன். ஒவ்வொரு அத்தியாயமா படிக்கறது ஒன்னும் கஷ்டம் இல்லை. interesting தான்.

    ரெண்டாவது வாசிப்புல பிடிக்கவும் / பிடிபடவும் வாய்ப்புக்கள் இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. அரசூர் வம்சம் நாவலில்
    ஆசிரியர் இரா.முருகன் ஒரு புதிய அணுகுமுறையாக, இரண்டு மூன்று மொழிநடை கொடுத்திருக்கிறார்.

    தமிழ் பிராமண பாஷை, கேரள நம்பூதிரிகள் பயன் படுத்தும் மலையாள பிராமண மொழி, தமிழ்நாடு சிவகங்கை, மதுரை வட்டாரத் தமிழ். அனைத்தும் மிக அருமையாக குழப்பமே இல்லாமல் விருவிருப்பாக செல்கிறது.

    இந்த நாவல் ஒரு தொடராக www.thinnai.com ல் (சுமார் 52 அத்தியாயங்கள் (2003 ல்) வந்தது.

    முதல் சில அத்தியாயங்கள் மொக்கையாக தோன்றியதில் படிக்காமல் விட்டுவிட்டு மீண்டும் 2009 ல் முழுமூச்சாக படித்து முடித்தேன்.
    மறக்க முடியாத நாவல்.

    அத்தியாயம் 1 சுட்டி இங்கே
    http://www.thinnai.com/?module=displaystory&story_id=10304133&format=html

    தற்பொழுது இரண்டாம் பாகம்
    'விஸ்வரூபம்' www.thinnai.com ல் வந்து கொண்டிருக்கிறது.

    அதுவும் நாற்பத்து நான்கு அத்தியாயங்கள் தாண்டிவிட்டது
    விரைவில் 2ஆம் பாகமும் புத்தகமாக வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. //இருத்தலைக் காத்துக்கொள்ள செய்துகொண்ட சமரசங்களான புகையிலை வியாபாரம், மதம் மாறுதல் ஆகியவற்றை ஆசிரியர் ஆதரிக்கிறாரா, மறுதலிக்கிறாரா, கேலி செய்கிறாரா என்பதை அவரது தொனியில் அறிய கடினமாவும் இருக்கிறது.//

    இதில் எதுமே இல்லை, கதைமாந்தர்களை அவரவர் போக்கிலேயே போக விட்டிருக்கிறார். முன்னோர்களைப் பற்றிய கதையில் இது ஒரு வசதி. அவர்களது போக்கிலேயே கதையைக் கொண்டுசெல்லலாம். புலிநகக்கொன்றையிலும் இதே டெக்னிக் உண்டு.

    நாவலில் எனக்கு ரொம்ப பிடித்தவர்கள் பனியன் சகோதரர்கள். அவர்கள் இஷ்டத்திற்கும் முன்னும் பின்னுமாக பயணிப்பது - மாந்த்ரீக யதார்த்தத்தை மிக எளிமையாக கையாண்டுள்ளார் முருகர்.

    சுஜாதாவின் இடத்தை நிரப்புகிறாரோ இல்லையோ, கண்டிப்பாக தமிழ் வாசகர்களை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லும் திறன் முருகருக்கு இருக்கிறது.

    உங்களுக்கு இருபது நாள்கள் ஆச்சுன்னு சொல்றிங்க, நான் படிக்க ஆரம்பித்த பின் முடிக்காமல் வைக்க முடியலை. முருகனின் எழுத்துகள் கட்டிப் போடுது.

    //எதிர்காலத்தில் தமிழின் அதிமுக்கிய நாவல்கள் குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படுமேயானால், அப்பட்டியலில் இடம்பெறத் தகுதியானதே ‘அரசூர் வம்சம்’. //

    நிச்சயமாக...

    //தீவிரவாசிப்புக்கு பழக்கப்படாதவர்கள் மறுபேச்சின்றி இந்நூலை தவிர்த்து விடலாம்//

    இல்லை லக்கி. மணிகண்டனின் கருத்தோட ஒத்துப்போகிறேன் நானும். தீவிரவாசிப்பு செய்றேன்னு எடுத்ததுமே ஜெயமோகனின் விஷ்ணுபுரத்திலே போய் முட்டிக்கிட்டு ”தீவிரவாசிப்பா ச்சீ ச்சீ”ன்னு போறத விட அரசூர் வம்சத்தில் இருந்து வாசிப்பைத் தொடங்கலாம்.

    கொஞ்சம் பாரா ஸ்டைலில் இருந்தாலும் உங்க புத்தகப்பார்வை நல்லா இருக்கு (இதை பாராட்டாகவும் எடுத்துக்கலாம்)

    பதிலளிநீக்கு
  5. இரா.முருகன் ஒரு வகையில் தமிழில் புறக்கணிக்கப் பட்ட எழுத்தாளராகவே கருதுகிறேன்.அரசூர் வம்சத்தைப் பற்றி மிகச் சிறந்த பதிவு. அவரைப் பற்றி எனது வலைமனையிலும் பதிவிட்டு உள்ளேன். வந்து பாருங்கள்:
    http://oliyudayon.blogspot.com/2009/04/blog-post_11.html

    பதிலளிநீக்கு