22 ஜூலை, 2009

ஒன்பது - ஒன்பது - ஒன்பது

“என்னடா முனீஸு அருவாளும், ஆடுமா எங்கே ஊர்வலம்?”

“போட்டுத் தள்ளிட்டு பிரியாணி செஞ்சி தின்ன வேண்டியதுதான்!”

“அடப்பாவி. புள்ளை மாதிரி வளர்த்த ஆட்டை ஏண்டா போட்டுத்தள்ளுறே?”

“ஒனக்கு விஷயமே தெரியாதா சேகரு? இன்னைக்கு தேதி 09.09.09. நைட்டு சரியா 09.09 மணிக்கு ஒலகம் அழிஞ்சிப்பூடுமாம். நம்மோட சேர்ந்து அழியப்போற ஆடுதானே? சாவறதுக்கு முன்னாடியாவது சந்தோஷமா சாப்புட்டுப்புட்டு சாவலாம் இல்லையா?” வேதனையோடு சொன்னான் முனீஸ்வரன்.

தனசேகருக்கு பக்கென்றிருந்தது. வாழ்க்கையில் இன்னமும் எதையுமே அனுபவிக்கவில்லையே? அதற்குள் உலகம் அழியப்போகிறதா? முணுக்கென்று கண்ணில் நீர் எட்டிப்பார்த்தது.

“நெஜமாவா சொல்றே முன்ஸூ”

“ஆமாம்டா. ஒன்பது சாமிக்கு ஆவாத நம்பராம். இன்னைக்கு எல்லாமே ஒன்பது ஒன்பதா வர்றதுனால உலகம் அழிஞ்சிடுமாம். எல்லாமே சாவப்போறோம். என்னென்ன ஆசை இருக்குதோ எல்லாத்தையும் நிறைவேத்திக்க வேண்டியது தான்”

‘ம்ம்ம்.. முன்ஸு சொல்றதிலேயும் மேட்டர் இருக்கு. கூட்டுதொகை ஒன்பதுன்னு வர்றமாதிரி லாரி வாங்கிதானே நம்ப அப்பனும் ஆக்ஸிடெண்டுலே செத்தான். நமக்கு இன்னும் கல்யாணம் கூட ஆவலை. நிறைவேறாத ஆசைகளோடு சாவப்போறேனா?' தனசேகர் மனதுக்குள் சுயபச்சாதாபம் எழுந்தது. யோசித்தவாறே நடந்தான். உயிர்வாழப்போகும் கடைசி நாள். ஆசைப்பட்டதை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். ‘ம்ம்ம்.. நெலைமையை சொல்லி பக்கத்து வீட்டு மிலிட்டரிகாரன் பொண்டாட்டியை மாந்தோப்புக்கு தள்ளிக்கிட்டு போயிட வேண்டியது தான்! இந்த ஆசை ஒண்ணாவது நிறைவேறட்டும்' இப்போது கொஞ்சம் தெம்பு வந்தது தனசேகருக்கு.


து ஒரு சிற்றூர். இன்னமும் நகரவாடை கொஞ்சம் கூட வீசவில்லை. எல்லாருமே வெள்ளந்தி மக்கள். உலகின் கடைசி நாள் என்று அறிவிக்கப் பட்டிருந்ததால் பரபரப்புக்கு ஆளாகியிருந்தது. ஊரில் இருந்த ஒரே ஒரு அம்மன் கோயிலில் பயங்கர கூட்டம். மிச்சமிருந்த நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்திக் கொண்டிருந்தார்கள். அர்ச்சனைத் தட்டில் போடப்பட்ட சில்லறைகள் குறித்து பூசாரிக்கு எந்த ஆர்வமும் இல்லை.

எல்லா வீட்டு சமையலிலும் உயர்தர அசைவ மசாலா வாசனை. சாகப்போகிற நாளிலாவது நல்ல சாப்பாடு சாப்பிடலாமே?

வாழாவெட்டிகளாக துரத்தி அடித்திருந்த மனைவிகளை தேடிப்போனார்கள் குடிக்கார கணவர்கள். கடைசி நாளிலாவது ஒற்றுமையாக வாழ்ந்து சாவோம் என்று முடிவெடுத்திருந்தார்கள். குடும்பம், குழந்தை, குட்டியென்று இந்த ஒருநாளை மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருந்தார்கள்.

பள்ளி மூடப்பட்டிருந்தது. குழந்தைகள் உல்லாசமாக ஆடிப்பாடினார்கள். பெரியவர்களும் குழந்தைகளுக்கு இணையாக கில்லி, நொண்டி, கண்ணாமூச்சி, கபடியெல்லாம் விளையாடினார்கள். குழந்தைகள் கேட்ட அனைத்துமே வழங்கப்பட்டது. மக்கள் எல்லோருமே தங்களுடைய சின்ன சின்ன ஆசைகளையெல்லாம் கூட நிறைவேற்றி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். இப்பவோ, அப்பவோ என்று இழுத்துக்கொண்டிருந்த ராமம்மா ஆயா கூட குச்சி ஐஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

முதலாளி, தொழிலாளி வர்க்க வேறுபாடில்லாத உண்மையான கம்யூனிஸம் மலர்ந்திருந்தது. இதுவரை தன் பண்ணையில் பணியாற்றிய விவசாயக் கூலிகளிடம் தன்னுடைய கடுமைக்கு மன்னிப்பு கேட்டார் நிலக்கிழார் சுந்தரம். நிலங்களைப் பிரித்து உழுதவர்களுக்கே உரிமையாக்கி எழுதி கொடுத்தார்.

காதலித்த காதலர்கள் எல்லோருக்குமே அவசர அவசரமாக சாதி, மதம் பாராமல் திருமணம் செய்துவைக்கப்பட்டது. முதல் இரவுக்கு நேரமிருக்காது என்பதால் முதல் பகலுக்கே நல்ல நேரம், எமகண்டம் பார்க்காமல் உடனடி அனுமதி வழங்கப்பட்டது. ஆலமரத்தடி சாமியார் தன்னுடைய சன்னியாசத்தையும், தாடியையும் துறந்து இல்வாழ்க்கைக்கு தயாரானார். மழ மழவென ஷேவிங் செய்துகொண்ட அவருக்கும் ஒரு இணை அவசர அவசரமாக ‘ஏற்பாடு' செய்யப்பட்டது.

மகாக்கஞ்சனான ஊர்த்தலைவர் தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் போவோர் வருவோருக்கு கொடுத்துக் கொண்டிருந்தார். போகிற வழிக்கு புண்ணியம். ஊர் பணக்காரர்களும் வாழும் கடைசி நாளான இன்று தான தருமத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அடுத்த தலைமுறையும் தங்களோடே அழியப் போவதால் சொத்திருந்து என்ன பயன்? என்று நினைத்தார்கள்.

சாராயக் கடைகளிலும் நல்ல கூட்டம். ஓசியிலேயே சாராயம் ஊத்தி, ஊத்தி வழங்கப்பட்டது. மளிகைக்கடை உள்ளிட்ட இதர வியாபார இடங்களிலும் அனைத்தும் மக்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டது.

உலகின் கடைசிநாள் என்பதால் பாலியல் சுதந்திரமும் தலைவிரித்தாடியது. மாந்தோப்பு சலசலத்துக் கொண்டேயிருந்தது. ஆத்தங்கரை புதர்கள் அவசர அவசரமாக ஆக்கிரமித்துக் கொள்ளப் பட்டன. ரொம்ப நாளாக தனசேகருக்கு மடியாத மிலிட்டரிக்காரன் பொண்டாட்டி அன்று ரொம்ப தாராளமாக நடந்துகொண்டாள். கண்காணாத ஊரிலிருக்கும் அவளது கணவன் நினைவே அன்று அவளுக்கு வரவில்லை.

எல்லோருமே புத்தாடை அணிந்திருந்தார்கள். சாகப்போகிறோம் என்ற பயம் அவர்களை விட்டு விலகி வாழ்வதற்கு இருக்கும் இந்த ஒரே ஒரு நாளை முழுமையாக அனுபவித்து வாழும் வெறி இருந்தது. சாதி, மத வேறுபாடுகள் அப்போது யார் மனதிலும் இல்லை. கொண்டாட்டம் ஒன்றே குறிக்கோளாக சாகும் வரை சந்தோஷம் மட்டுமே அப்போதைய ஒரே லட்சியம்.


ருக்கு ஒதுக்குப் புறமான அந்த பாழடைந்த வீட்டில் கிருஷ்ணன் துளசியோடு இருந்தான். ‘எல்லாம்' முடிந்துவிட்டிருந்தது. துளசி தாவணியை சரி செய்துக் கொண்டிருந்தாள். இருள் கவிழத் தொடங்கியிருந்ததால் ஊருக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு முத்தம் கூட கொடுக்காமல், 'கல்யாணத்துக்கு அப்புறம், கல்யாணத்துக்கு அப்புறம்' என்று சிணுங்கிக் கொண்டிருந்தவள் துளசி. ஒரு முத்தமாவது வாங்கிவிட வேண்டும் என்ற ஆவலில் ”நாளைக்கு உலகம் அழியப்போவுது. அதுக்குள்ளே ஒரு முத்தம் கூட கொடுக்கமாட்டியா?” என்று நேற்று விளையாட்டுக்கு அவளிடம் கேட்டது ஊருக்குள் தீயாகப் பரவி அமளி, துமளிப்பட்டுக் கொண்டிருப்பது இந்த நிமிடம் வரை கிருஷ்ணனுக்கு தெரியாது.

4 கருத்துகள்:

  1. அன்பின் மோகன கிருஷ்ண குமார் alias லக்கிலுக் alias யுவகிருஷ்ணா alias ?? ?? ?? !!! ;-)

    இது மீள் பதிவாக இருந்தாலும் இன்றைய சூழ்நிலைக்கு மிக பொருத்தமான இடுகை. இன்று இதைப்போல் எங்கேயாவது நிகழ்ந்து யாராவது சூல்நிலை அடைந்தால் அது அடுத்த ஒன்பது மாதத்தில் தான் தெரியவரும். ;-) மூன்று மாதத்திலும் தெரிந்துவிடும். ஆனால் DNA டெஸ்ட் செய்ய இயலாதே?


    09.09.09 அட, இந்த ஐடியாவை இன்னும் இரண்டு மாதம் கழித்து 'நம்புங்கள் நாராயணன்' செயல்படுத்த வாயப்புகள் மிக அதிகம். ஆகவே இதற்கு நீங்கள் காப்பிரைட் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ;-)

    அதற்கிடையில் நாங்கள் இந்த 'நம்புங்கள் நாராயணனுக்கு' ஒரு பெரிய ஆப்பு தயார் செய்து அதை பொறுப்பாக அடித்துவிட்டு வருகிறோம். அது வரை வணக்கம் கூறி விடைபெறுவது,

    with care & love,

    Muhammad Ismail .H, PHD,
    gnuismail.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. நான் இரத்த கதைகளுள் ஒன்று... முன்பு போட்ட பின்னூட்டம் எல்லாம் அழிஞ்சி போச்சா?

    பதிலளிநீக்கு
  3. நேத்தே சொல்லியிருந்தால்.... மிலிடரி பொண்டாட்டிய நான் கரெக்ட் பண்ணியிருப்பேனே......

    பதிலளிநீக்கு
  4. //ஊருக்கு ஒதுக்குப் புறமான அந்த பாழடைந்த வீட்டில் கிருஷ்ணன் துளசியோடு இருந்தான். ‘எல்லாம்' முடிந்துவிட்டிருந்தது.//


    ஜெகஜ்ஜால கிருஷ்ணன்....

    //எல்லா வீட்டு சமையலிலும் உயர்தர அசைவ மசாலா வாசனை. //

    ஐயர் வீட்டிலேயுமா....

    பதிலளிநீக்கு